பெண் இனம் போற்றும் பெருந்தலைவர்
எம்.ஜி.ஆர் (தொடர் - 17)
முனைவர் செ.இராஜேஸ்வரி
காதலியை காப்பாற்ற காதல் நாடகமாடிய எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். படங்களில் அவர் தன்னை நம்பியவர்களை நட்டாற்றில் விடுவதில்லை.
நிஜ வாழ்க்கையிலும் திரை பிம்பத்திலும் அவருடைய நிலைப்பாடு இதுவாகவே
இருந்தது. நாடோடி மன்னன் படத்தில் ‘என்னை நம்பி கெட்டவர் இதுவரை யாரும்
இல்லை’ என்று சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது படங்களில் அவர்
தன்னை நம்பி வாழும் அனைவரையும் நல்ல முறையில் காப்பாற்றி மேன்மையான
இடத்துக்கு கொண்டு வந்ததாகவே படங்கள் எடுக்கப்பட்டன. நிஜவாழ்விலும் அவர்
தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி
அவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் வாழ்க்கை தரத்தில் உயர்த்தியது
வரலாறு கூறும் உண்மையாகும்.
வில்லனிடம் இருந்து காதலியை மீட்டல்
எம்.ஜி.ஆர். படங்களில் அவரது காதலி வில்லனிடம் சிக்கிக் கொள்வதும்,
பிறகு அவர் போய் காப்பாற்றி மீட்டுக் கொண்டு வருவதும் உண்டு. வில்லனை
எதிர்க்க வேண்டிய சூழலில் அவர் பலவகையான சண்டை காட்சிகளை அமைத்து
படத்துக்குப் படம் வேறுபாடு காட்டி இளைஞர்களை கவரும் வகையில் வீரதீர
செயல்களில் ஈடுபட்டு காதலியை மீட்டுக் கொண்டு வருவது வழக்கம். சில
படங்களில் இந்த முறை பின்பற்றப்படாமல் வேறொரு முறை பின்பற்றப்பட்டுள்ளது.
அதிகாரம் படைத்த பெண்ணிடம் இருந்து காதலியை மீட்டல்
அடிமைப்பெண் படம் மற்றும் கலையரசி படங்களில் அவர் ஒரு பெண்ணை மீட்க
இன்னொரு பெண்ணை காதலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு
படங்களில் கலையரசி படத்தில் அவர் காதலிப்பதாக நடிக்கும் சந்திர
மண்டலத்து இளவரசி ராஜஸ்ரீ ஒரு அப்பாவி பெண். அடிமைப்பெண் படத்தில் அவர்
காதலிப்பதாக நடிக்கும் பவளவல்லி ஜெயலலிதா சுயநலத்துக்காக எதையும்
கெடுக்க தயாராக இருக்கும் கொடூர சிந்தை படைத்தவள். ஆனால் இந்த இரு
பெண்களின் அதிகாரத்துக்குரிய ஆட்சியில் சிக்கியிருக்கும் தன் காதலியை
மீட்டுக் கொண்டு போவதில் எம்.ஜி.ஆருக்கு இந்த பெண்களை போலியாக காதலிக்க
வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, இவர்களை காதலிப்பது போல
நடித்து உண்மையை அறிந்து கொண்டு தன் காதலியை மீட்டுக் கொண்டு தன் நாடு
சேர்கிறார், கலையரசி படத்தில் சந்திர மண்டலத்தில் இருந்து இந்த
உலகத்துக்கே வந்து சேர்கிறார்.
கலையரசி காட்டும் அறிவியல்
கலையரசி படம் ஒரு அறிவியல் புனைவு சித்திரமாகும். பூலோகத்தில் இருக்கும்
வீணை கலைஞர் வாணி என்ற பானுமதியை சந்திரமண்டலத்தில் இருக்கும் ஒருவன்
பறக்கும் தட்டில் வந்து கடத்திச் செல்கிறான். இளவரசிக்கு இசை
கற்பிப்பதற்காக இவ்வாறு பானுமதி கடத்திச் செல்லப்படுகிறார். பறக்கும்
தட்டு வந்து இறங்கிப்போனதை பார்த்த மக்கள் கலைவாணி காணாமல் போனதையும்
கண்டு பரிதவிக்கும் போது, அவளை மீட்டு வர வேண்டும் என்ற கடமை உணர்வோடு
எம்.ஜி.ஆர். சந்திர மண்டலத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு போனால்
வில்லன் நம்பியார் பானுமதியையும், இளவரசி ராஜஸ்ரீயும் எம்.ஜி.ஆரையும்
காதலிக்கின்றனர். இவர்களிடமிருந்து இருவரும் மீண்டு வருவது தான் கதை
கலையரசி படம் 19-4-1963 அன்று வெளிவந்தது. இப்படம் அன்று மிகப்பெரிய
வெற்றியைப் பெறவில்லை என்பதற்கு மக்கள் அந்த சந்திரமண்டல கதையை நம்ப
வில்லை என்பதுதான் காரணம். ஆனாலும் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம்
ஏற்படுத்தாத வகையில் அவருக்கு கணிசமான லாபத்தை கொடுத்தது. சரோடி
பிலிம்ஸ் என்று தன கிராமத்தின் பெயரில் படம் எடுத்த தயாரிப்பாளர் இந்தப்
படத்தில் கிடைத்த லாபத்தால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில்
எம்.ஜி.ஆர். நிலையம் என்ற பெயரில் ஒரு வீடு கட்டினார். தயாரிப்பாளர்
தன்னுடைய வீட்டுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டுவதன் மூலமாக தன் நன்றி
கடனை தீர்த்துக் கொண்டார். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது
தயாரிப்பு செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவித்ததை பார்த்து அவருடைய
சரோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு ஆளுக்கு கொஞ்சம் பணம்
கொடுத்து உதவினர். கிராமமே பணம் போட்டு எடுத்த படம் என்பதால்
கிராமத்தின் பெயரே படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயராயிற்று. கலையரசி
படம் அதிக லாபம் பெற்றுத் தராவிட்டாலும் தயாரிப்பாளருக்கு தனது
மாநிலத்தின் தலைநகரில் சொந்த வீடு கட்ட உதவிய அளவுக்கு லாபம் ஈட்டித்
தந்த படம் ஆகும்.
பூலோகத்தில் இருக்கும் போது பானுமதியும் எம்.ஜி.ஆரும் காதலிக்கும் போது
பாடிய பாட்டை, சந்திர லோகத்தில் எம்.ஜி.ஆர் ராஜஸ்ரீ யிடம் பாடுவார். ஆண்
குரல் வரிகளை மட்டும் அவர் பாடிவிட்டு நிறுத்திவிடுவார். அப்போது
ராஜஸ்ரீ இன்னும் பாடுங்கள் என்று சொல்லுவார். எம்.ஜி.ஆர். இந்த பாட்டு
வரிகள் இனி வாணிக்கு தான் தெரியும் என்று பானுமதியை நோக்கி கை காட்டவும்
பானுமதி பெண் குரல் வரிகளைப் பாடுவார். இவ்வாறாக இருவரும் மாறி மாறி
ராஜஸ்ரீயின் முன்பு பாடுவார்கள். ராஜஸ்ரீ இவர்கள் மீது எவ்வித
சந்தேகமும் இல்லாமல் எம்.ஜி.ஆரிடம் தன் அன்பை பரிமாறிக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். தனது நிலையை எடுத்துக் கூற முடியாமலும், ராஜஸ்ரீயின் காதலை
ஏற்றுக்கொள்ள முடியாமலும் திணறுவார். இவ்வாறாக சிரமப்பட்டு தன் காதலியை
வில்லனிடம் இருந்து காப்பாற்றி, சந்திர லோகத்திலிருந்து மீட்டு தாம்
வாழும் பூலோகத்திற்கு அழைத்துச் செல்லும் இரண்டு கடமைகளில்
சிக்கியிருந்த எம்.ஜி.ஆர். வேறுவழியின்றி அவர் இளவரசியை காதலிப்பதாக
நடிக்க வேண்டி இருந்தது. அவரும் அதனை செய்து தன்னை நம்பிய காதலியை
மீட்டு நம்பிக்கையோடிருந்த கிராம மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தார்.
ஆயிரம் நிலவே வா
அடிமைப்பெண்
படம் எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பாகும். இப்படம் 1969ஆம் ஆண்டு மே மாதம்
முதல் நாள் உழைப்பாளர் தினத்தன்று வெளியானது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்
படம்; மாபெரும் வெற்றிப் படம் ஆகும். சொர்ணம் வசனம் எழுத, கே சங்கர்
இப்படத்தை இயக்கினார். இசை கே.வி. மகாதேவன். பாடல்களை வழக்கம் போல
T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் பாடியிருந்தனர்.
முக்கியமான ஆயிரம் நிலவே வா பாடலை மட்டும் எஸ். பி. பாலசுப்பரமணியம்
பாடியிருந்தார்.
அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா ஜீவா, பவளவள்ளி என்று இரண்டு வேடங்களை
ஏற்று இருந்தார். எம்.ஜி.ஆரை காதலிக்கும் ஜீவாவை ஒழித்துவிட்டு அவரை
தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பவளவல்லி ஜெயலலிதாவின்
திட்டமாகும். இத்திட்டத்தை முறியடிக்கவே எம்.ஜி.ஆர். போலியாக ஒரு காதல்
நாடகம் ஆட வேண்டிய நிர்ப்பந்தம் இப்படத்தில் ஏற்பட்டது.
பாலைவனத்தில் வழி தவறிப்போன ஜீவா ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் பவளவல்லி
ஜெயலலிதாவின் தளபதியான ஆர்.எஸ். மனோகரிடம் சிக்குகின்றனர்.
ஆர்.எஸ்.மனோகர், எம்.ஜி.ஆரை. மட்டும் அரசியான பவளவல்லியிடம்
ஒப்படைத்துவிட்டு ஜீவாவை ஒளித்து வைத்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் உடல்
உறுதி மன உறுதி ஆகியவற்றில் தன் மனதை பறிகொடுத்த பவளவல்லி அவரை
தன்னுடைய தளபதியாக்கி திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார். ஆனால்
எம்.ஜி.ஆர். அவளைப்பார்த்து ஜீவா ஜீவா என்று அழைத்துப் பேசுகிறார்.
அப்போதுதான் பவளவல்லிக்கு தன்னைப் போன்ற உருவத்தில் ஜீவா என்ற ஒரு பெண்
இருக்கிறாள், அவளை இந்த தளபதி காதலிக்கிறார் என்பது தெரிகிறது. உடனே
ஒளித்து வைத்திருக்கும் அந்தப் பெண்ணை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்து
விடு என்று தளபதி மனோகரிடம் சொல்கிறாள். இந்த உண்மையை சோவின் மூலம்
அறியும் எம்.ஜி.ஆர். இப்போது பவளவல்லியிடமிருந்து மட்டுமே உண்மையை பெற
முடியும் என்பதனால் ஜீவாவை காப்பாற்றும் நோக்கத்தில் சோ வின் அறிவுரையை
ஏற்று விருப்பமில்லாமல் பவளவல்லியை காதலிப்பது போல நடிக்கிறார். அப்போது
பாடப்பட்ட பாடல் ஆயிரம் நிலவே வா என்ற மிக நீண்ட பாடலாகும். படம் வந்த
காலத்தில் இப் பாட்டு ஒலித்தட்டின் [ரெக்கார்டின்] இருபுறமும்
பதியப்பட்டிருக்கும்.
“ஆயிரம் நிலவே வா” பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரை காதலோடு அணுகும்
பவளவல்லி அவளைக் கோபத்தோடும் வெறுப்போடும் பார்க்கும் எம்.ஜி.ஆர்
வித்தியாசமான முகபாவங்களை காட்டி மிகத்தெளிவாக நடித்திருப்பார்.
எம்.ஜி.ஆர் இப்பாட்டில் தனது முக பாவத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.
பவளவல்லி நேருக்கு நேர் பார்க்கும்போது முகத்தில் புன்னகையை
வரவழைப்பதும், அவளின் முகம் வேறு திசையில் திரும்பியதும் சட்டென்று
எம்.ஜி.ஆரின் முகம் இறுகிவிடுவதும் காணலாம். சிலநேரங்களில் பாட்டின்
கருத்துக்கேற்ப ‘அப்படியா’ என்பது போலவும் தலை அசைப்பார். இதுபோன்ற
மாறிவரும் பாவங்கள் அவருடைய காதல் வெறும் நடிப்பு, போலி என்பதை
ரசிகர்களுக்கு உணர்த்துகின்றன. இதனால் ரசிகர்கள் இவர் ஜீவாவை
காப்பாற்றுவதற்காகத்தான் பவளவல்லியோடு டூயட் பாடுவதாக நடிக்கிறார்
என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எம்ஜிஆர் மீது கோபப்பட
மாட்டார்கள்.
போலி காதலின் தர்ம நியாயம்
கொல்ல வந்த பசுவை கொல்லலாம் என்பது உலக நியதி. எனவே ஒரு பெண் பசுவைப்
போன்றவளாக இருந்தாலும் அவள் சில தர்ம நியாயங்களை கொல்லும்போது
அவளுக்கான தர்ம நியாயங்கள் கொல்லப்படும் என்பதைத்தான் இந்தப் போலி காதல்
காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. அடிமைப்பெண், கலையரசி படங்களில் தன்
காதலியை மீட்டுக் கொண்டு போவதற்காக அதிகாரம் படைத்த அவர்களை கட்டிப்
போட்டு வைத்திருக்கும் இளவரசிகளை காதலிப்பதாக நடித்த எம்.ஜி.ஆர்.
இன்னொரு படத்தில் வேறு ஒரு காரணத்துக்காக இது போன்ற போலி காதலன் வேடம்
ஏற்றிருப்பார்.
நாட்டு மக்களின் தாகம் தீர்க்க
பாக்தாத்
திருடன் கதை ஆயிரத்தொரு அரபு கதைகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
இந்த படத்தில் எம் ஜி ஆரும் வைஜெயந்தி மாலாவும் ஜோடியாக
நடித்திருப்பார்கள். இதில் தன் நாட்டு மக்களின் தாகத்தை தீர்க்க ஒரு
இளவரசியை காதலிப்பதாக நடிப்பார். நாட்டை எம் ஜி ஆரின் தந்தையிடம்
இருந்து நயவஞ்சகமாகப் பெற்ற டி எஸ் பாலையா ஊர் மக்கள் அரண்மனையிலிருந்து
குடி தண்ணீர் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை
பிறப்பித்து விட்டு ஊரில் உள்ள குடிநீர் குளங்களில் எல்லாம் விஷத்தை
கலந்து விடும் படி கட்டளையிடுவார். மக்களிடம் இருந்து குடி நீருக்கு
காசு வசூல் செய்வார். பாலையாவின் ரகசிய கட்டளையினால் மனிதர்கள் யாரும்
ஊருணிகளில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியவில்லை. எல்லோரும் காசு
கொடுத்து அரண்மனையிலிருந்து நல்ல தண்ணீரை வாங்கிச் செல்ல வேண்டும். பணம்
இல்லாதவர்கள் நோயாளிகள் குடிக்க சமைக்க குளிக்க தண்ணீர் இன்றி
தவிக்கின்றனர்.
ஊர்களில், கிராமங்களில் குளங்களில் கலக்கப்பட்டுள்ள விஷத்தை
முறிப்பதற்கான மாற்று மருந்து அரண்மனையில் இரகசியமான ஒரு இடத்தில்
பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு வந்தால் மட்டுமே ஜனங்களின்
தாகத்தை தீர்க்க முடியும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னை
ஒருதலையாக காதலிக்கும் இளவரசி எம்.என்.ராஜத்தின் உதவியை மட்டுமே
எம்.ஜி.ஆர். நாடிப் பெற முடியும். மன்னரை எதிர்த்து அந்த சூழ்நிலையில்
எதுவும் செய்ய இயலாது. எனவே, இரவில் ரகசியமாக இளவரசியின் அரண்மனைக்குள்
குதித்து அவரைத்தான் காண வந்தது போல அவரிடம் காதல் மொழிகள் பேசுவார்.
இப்போது எம் என் ராஜம் தன்னை திருமணம் செய்து கொள்வதில் எம்.ஜி.ஆருக்கு
என்ன தடை என்று கேட்பார். அதற்கு எம்.ஜி.ஆர். ‘ஓர் இளவரசியை திருமணம்
செய்ய வேண்டும் என்றால் ஒன்று அரச குடும்பத்தில் பிறந்து இருக்க
வேண்டும் அல்லது மக்களின் ஆதரவு பெற்றவனாக இருக்க வேண்டும்’ என்பார்.
‘நான் அரச குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை. மக்கள் ஆதரவு பெற்றவனும் இல்லை.
மக்கள் இன்று குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து போய் இருக்கின்றனர்,
இந்நிலையில் அவர்களின் ஆதரவு எனக்கு எப்படி கிடைக்கும்’ என்று
சொல்லும்போது ‘நான் மாற்று மருந்து தருகிறேன். அதை கொண்டு போய்
நீர்நிலைகளில் கலந்து விடுங்கள் மக்கள் உங்களை போற்றுவார்கள். மக்களின்
ஆதரவைப் பெற்ற நீங்கள் என்னை திருமணம் செய்துகொண்டு மன்னர் ஆகிவிடலாம்’
என்று இளவரசி எம். என். ராஜம் ஒரு யோசனை கூறுவார். இதை எதிர்பார்த்து
வந்த எம்.ஜி.ஆர். உடனே சரி என்று சொல்லி எம் என் ராஜம் கொடுத்த மாற்று
மருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
மருந்தை கொடுத்து தண்ணீர்ல் கலந்ததால் நீர்நிலைகளில் கலக்கப்பட்ட விஷம்
முறிந்துவிடும். மக்கள் நல்ல தண்ணீர் குடிக்க கிடைத்து மகிழ்ச்சியாக
இருப்பார்கள். இந்தக் கதையில் ஒரு பொது காரியத்துக்காக பொது நலம் வேண்டி
மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்க எம்.ஜி.ஆர். இந்த காதல் நாடகத்தை
நடத்த வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இந்தக் கதை ஆயிரத்தோரு
அரபு கதைகளில் ஒன்றாக இருப்பதனால் இதிலுள்ள நிகழ்ச்சிகளை அதிக அளவில்
மாற்றவும் இயலாது.
ரசிகர், ரசிகையர்கள் ஏற்பு
தன்னை நம்பி வாழப் போகும் காதலியை காப்பாற்றவும் பிறருடைய
நன்மைக்காகவும் மட்டுமே எம்.ஜி.ஆர். போலியாக காதலிப்பது போல நடித்ததால்
அதுவும் இந்த படங்களில் மட்டும் நடித்ததால் ரசிகையர் மத்தியில் அவர்
மீது வெறுப்பு காணப்படவில்லை. அடிமைப்பெண் படத்தில் பெண்கள் பவளவல்லியை
வெறுத்தனர், ஜீவாவை ஆதரித்தனர். பெண்கள் எம் ஜி ஆர் நடத்திய இந்த போலி
காதல் நாடகத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டனர். மேலும் தன்னை
நம்பியுள்ள பெண்ணையும் தன்னை நம்பியிருக்கும் மக்களையும்
காப்பாற்றவேண்டிய உயர்ந்த கடமையும் பொறுப்பும் தனக்கு இருப்பதனால் அவர்
கடமைக்கும் போருப்புனற்சிக்கும் அளித்து, முக்கியத்துவம் கொடுத்து அதை
நிறைவேற்றும் வழிகளை ஆராய்ந்து அதன்படி நடந்து கொண்டார்.
காதலியைப் பிரிந்ததுண்டு. பின் சேர்ந்ததுண்டு
எம்.ஜி.ஆர்.
படங்களில் தன் காதலியைப் பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து
கொள்வது கிடையாது. பரிசு, பணம் படைத்தவன் போன்ற ஓரிரு படங்களில்
இத்தகைய சூழ்நிலை ஏற்பட்ட போதும் கூட பிரிவுக்குப் பின் இணைந்து விடுவர்.
பெரிய இடத்துப் பெண் அவர் தன் அத்தை மகளை காதலித்ததாக எங்கும் எந்த
காட்சியும் இடம்பெறவில்லை. தில்லை, வள்ளி ஆகிய இரண்டு பேர் மீதும் அவர்
சமமான அன்பு கொண்டுள்ளார். ஆனால் தில்லைக்கு தான் அவரை திருமணம் செய்து
வைக்கப் போகிறார்கள் என்று வள்ளி கேலிசெய்து பேசுவதால், தில்லை
எம்.ஜி.ஆர். மீது ஈர்ப்பு கொண்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள்
கிராமங்களில் சகஜம் என்பதனால் இதனை மிகப் பெரிய அளவில் எடுத்துக்கொள்ள
இயலவில்லை. மேலும் எம்.ஜி.ஆருக்கு மயக்க மருந்து கொடுத்து
சிலம்புப்போட்டியில் தோற்கடித்துவிட்டு அசோகன் தில்லையை திருமணம் செய்து
கொள்வார். அதனால் பட்டணத்துக்குப் போய் படித்து பெரியாளாகி
பிரபலமானவராகி அசோகனின் தங்கையையே காதலித்து மணப்பார். இந்த கதையிலும்
அவர் தில்லையை காதலித்து ஏமாற்றியதாக கொள்ள இயலாது.
பரிசு, பணம் படைத்தவன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். காதலித்த பெண்ணை
திருமணம் செய்ய இயலாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்தாலும் கதையின்
முடிவில் இடையில் வந்த மனைவி இறந்து போக அவர் தான் காதலித்த பெண்ணுடன்
இணைந்து வாழ்வார். . ஆக எம்.ஜி.ஆர். தன் காதலியை எந்தச் சூழ்நிலையிலும்
கைவிட்டது கிடையாது. தன் காதலிக்காக வேறு ஒருவரை போலியாக காதலித்துக்
கூட தன் காதலை காப்பாற்றி விடுவார். இந்த கதை சிக்கலில் காதலை,
காதலியைக் காப்பாற்றுவதே அவரது கடமையாகி விடுகிறது. அந்தக் கடமையை அவர்
செவ்வனே நிறைவேற்றி பெண்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
எல்லாம் சரியே !
எம் ஜி ஆர் தவறு செய்ய மாட்டார். அப்படியே அவர் ஒரு தவறு செய்தாலும்
அவர் அதை தனக்காக செய்திருக்க மாட்டார் வேறு ஒருவரின் நன்மைக்காகவே
செய்திருப்பார் என்று ரசிக ரசிகையர் நம்பும்படி காரணத்தை படத்தில்
சரியாக அமைத்திருப்பார். எம் ஜி ஆர் எது செய்தாலும் சரியாகக் செய்வார்
என்ற எண்ணமும் நம்பிக்கையும் அவர் ரசிகர்கள் மண்களில் ஆழமாகப்
பதிந்துவிட்டது. இந்த நம்பிக்கையை அவர் வாழ்வும் படங்களும் இன்று வரை
காப்பாற்றி வருகின்றன. சினிமாவிலும் அரசியலிலும் மக்களின் முழு
நம்பிக்கையைப் பெற்ற எம் ஜி ஆர் இன்றைக்கும் மகளிரின் மனம் கவர்ந்தவராக
இருந்து வருகிறார். அவர் முதலமைச்சர் ஆனா பின்பும் அவர் சத்துணவு
திட்டம், இலவசச் சீருடை திட்டம் மூலமாக பெண்களின் குழந்தைகளின் உள்ளம்
கவர்ந்தவராகி தன்னை நம்பிய பெண்ணை கைவிடாத உத்தமர் என்ற நற்பெயரை
பெண்களிடம் பெற்று விட்டார்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|