திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 11)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
கவியரசர்,
சங்க இலக்கியக் காட்சிகளை பாடலாக்கி பாமரற்கும் கொண்டு
செல்லவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தார்.ஏனெனில், சங்க இலக்கியச்
செய்யுள்கள் இலக்கியப் பயிற்சியுள்ளவர்களுக்கே எளிதில் விளங்கக்கூடியது.
அதனை எளிமையாக்கி தன் பாடல்களில் கடைக்கோடி இரசிகனுக்கும் சென்றடையச்
செய்தார்.
இதயக்கமலம்:
கம்பராமாயணத்தில் இராமனின் தோளழகைச் சொல்லவந்த கம்பர்,
தோள்கண்டார் தோளே கண்டார்,
தொடுகழல் கமல மன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் என்பார்.
பெண்கள் இராமனைக் காண நேரிட்டால்,தோளழகைப் பார்த்து ஆவல் மீதூர அவன்
தோளிலிருந்து பார்வையை விலக்கமாட்டார்களாம். அதுமட்டுமல்லாமல்
காலழகையும் அவ்வாறே கருதுவார்களாம்.
கம்பனின் கற்பனைக்கு உருவம் கொடுக்கும் வண்ணம்
இதயக்கமலம் படத்தில் ஒரு பாடலைத் தந்தார்.
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்.
அவர் ஒரு ஆணின் அழகை வருணித்தார், இவர் ஒரு பருவ மங்கையின் அழகைச்
சொல்ல கம்பனின் இலக்கிய வரிகளைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் தான்
பெண்களின் கண்களை வாள் என்கிறார். போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தும்
ஆயுதம் வாள்; மங்கையரின் விழிகள் எனும் வாள் கலவிக் களத்தில் ஆடவனை
வீழ்த்தும் தானே!
பட்டினத்தார்:
பட்டினத்தார் பாடல்கள் தத்துவார்த்தமானவை.
மாதா உடல் சலித்தாள்
வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கால் சலித்து ஓய்ந்தாள்
இருப்பையூர் வாழும் சிவனே
மறுபடியும் என்னை கருப்பையூர் விழாமல் கா.
இந்த வரிகளை மையமாகக் கொண்டு கவிஞர் பாடல் இயற்றினார். அப் பாடல்
சரஸ்வதி சபதம் படத்தில் ,
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா-இங்கு
நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா –ன்னு ஆரம்பிச்சு பட்டினத்தார்
வரிகளை நோக்கிப் போகும்.
பெற்றவள் உடல் சலித்தாள்
பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா –பாவி
மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா.
மறுபடியும் கருப்பையூர் விழாமல் கா என்ற வரிகளுக்கு ஒப்புவமையாக
மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா என்று எழுதி முடித்தார்.
அத்தான்....என்னத்தான் :
பாட்டு எழுதுவது ஒரு சுகமான அனுபவம்.ஆர்மோனியத்துக்கு எதிரே உட்கார்ந்து
அந்தச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே அதற்கேற்ப வார்த்தைகளை அள்ளிப்போடுவது
ஒரு இன்பகரமான விளையாட்டு. பாடல் எழுதும்போது எனக்கு மெய் சிலிர்க்கும்;
ஒருவரி அடுத்த வரியை முந்திக் கொள்ளும் என்பார் கண்ணதாசன்.
பாவமன்னிப்பு படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் இயற்றப்பட்டது ஒரு கண
நேர உந்துதலில் தான். ஆம். பேரறிஞர் அண்ணாவும் அவரும் ஒரு சமயம்
வெளியூருக்குச் செல்லும்போது, உணவுப் பொட்டலம் மீது
கல்லைத் தான் மண்ணைத் தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா?
எழுதபட்டிருந்தது.இதைப் படித்த கவிஞருக்கு அப்போதே பாடல் வரிகள்
கருவாகிவிட்டது.அதைத்தான்,
அத்தான்..என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி? என்று எழுதினார்.
ஒரு பெண் அவள் தாயானாலும் தாரமானாலும் தான் அடைந்த தாம்பத்ய சுகத்தை
பிறரிடம்(மகளேயானாலும்) விண்டுரைக்க மாட்டாள். அந்த நுண்ணிய உணர்வுகளைக்
கவிஞர்,எப்படிச் சொல்வேனடி? என்ற வரிகளில் பொதிந்து
வைத்திருக்கிறார்.என்றால் அது மிகையில்லை.
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|