தொல்காப்பியத்தின் அறிவியற் கூறுகள்
கனி விமலநாதன்
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற அறிவுடை அழகுக் குறளுடன் எனது
பார்வையைத் தொடங்குகின்றேன். முதலில் என்குறித்த சிறு அறிமுகம்.
விஞ்ஞானமாணியான எனக்கு எதனையும் விஞ்ஞானத்தனமாகவே பார்க்கின்ற பழக்கம்,
சிறு வயதில் இருந்தே உள்ளது. இருப்பினும் தமிழின்பால் உள்ள ஈடுபாடும்
விருப்பும் என்னைத் தமிழ் இலக்கணத்தின் பக்கமும் ஈர்த்துக் கொண்டன.
குறிப்பாகத் தொல்காப்பியம் அதனது பெயரின் காரணமாகவோ என்னவோ, இன்னதுதான்
எனத் தெரிந்திராத வயதிலேயே, மிகவும் வியப்புடனும் விருப்புடனும்,
பெருமையாக நினைத்துக் கொள்ள வைத்து விட்டது. இவ்வியல்பினை ஊட்டியது எனது
தாயார் என்பதை, என்னை நான் பார்த்தவேளையில் அறிந்து கொண்டேன். தமிழரதும்,
தமிழினதும் எண்ணற்ற பெருமைகளை, வனப்புகளை நான் சிறுவனாக இருக்கையிலேயே
என்னுள் ஊட்டி வளர்த்தவர் எனது தாயார், சித்திரம். எனது பாடசாலைக்
கற்கைநெறி, தமிழின் வழியில் நின்றும் விலத்திய பாதையிற் கொண்டு சென்ற
போதிலும் எனது தனிப்பட்ட தேடல்களின் வாயிலாகத் தமிழைச் சுவைத்துக்
கொள்வதைத் தவற விட்டு விடவில்லை. அவ்வேளையில் என்னுள் ஆச்சரிய விதைகளைத்
தூவி மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் 'தொல்காப்பியம்.'
தொல்காப்பியம்:
தமிழர்களின் முதல் இலக்கண நூல் எனத் தமிழறிஞர்களினால் பெருமையாகக்
கூறப்படுகிறது. இன்னமும், இதனையே உலகின் முதலாவது இலக்கண நூலெனக் கூறும்
அறிஞர்களும் உள்ளனர். இவ்விலக்கண நூலில் நான் கண்ட ஆச்சரியமான அறிவியல்
வெளிப்பாடுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இலக்கணத்
தனமில்லாத எனது பார்வை உங்களையும் சிலாகிக்க வைக்கும் என்ற
நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.
குமரிக்கண்டமும் கடற்கோள்களும்:
மும்மையிற் பெருமை கண்ட தமிழர் வாழ்வியற் தொடர்ச்சியில் முச்சங்கங்கள்
என்பதும் ஒன்று. முப்பெரும் கடல்கோள்களினால் அவை அழிவுற்ற போதிலும்
அவற்றின் எச்சங்களின் உயிர்த் துடிப்புகளினால் வாழுகின்ற நாம், அவற்றினை
எண்ணிப் பார்ப்பதுமுண்டு. பதின்மூவாயிரம் ஆண்டு முன்னராக முடிவுற்ற
கடைசிப் பனிக்காலத்தின் பின்னராக உருகிய பனியின் விளைவாகப் பின்வந்த
பத்தாயிரம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று தடவைகள் கடல்நீர் மட்டமானது
மொத்தம் 500 அடிகளுக்கும் மேலாக உயர்ந்து கொண்டது என்ற உண்மை
ஆய்வாளர்களினால் கூறப்படுகிறது. இவ்வுயர்ச்சிகளின் விளைவாக வந்த
கடல்கோள்களினால் தமிழர்களின் பெரும்பகுதியை கடல் கொண்டுவிட்டது என்பதை
எங்களின் இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விடத்தில் ஒரு விளக்கம்
தேவைப்படுகிறது.
2004ல் ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிப்பேரலையைக் கடற்கோள் எனப் பலரும்
தவறாகக் கருதுகின்றார்கள். அது அப்படியல்ல என்பது ஒரு சின்ன
விளக்கத்தோடு தெளிவடையலாம். ஆழிப்பேரலை எந்தவொரு தரைப்பகுதியையும்
கபளிகரம் செய்ததாக இல்லை. ஆழிப்பேரலை மாலைதீவுகளைக் கடந்து சென்றதே
தவிர, அதனால் கடல் மாலைதீவினைத் தன்னுள் கொள்ளவில்லை. ஆனால் மூன்று
கடல்கோள்களின் விளைவாக பெரும் நிலப்பரப்பினைக் கொண்ட குமரிக்கண்டத்தையே
கடல் கொண்டதான இலக்கிய வரலாறு எங்களிடம் உண்டு. இப்படியாக ஆழிப்பேரலை
என்ற சுனாமியை கடல்கோள் எனக் கூறுவது போன்ற தவறான கருத்துகள் பிந்நாளில்
பெரும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வந்துவிடும். காலகாலமாக யப்பானைத்
தாக்கி வரும் சுனாமிகள் யப்பானின் எவ்வளவு பகுதியைக் காவு கொண்டன எனப்
பார்ப்பவர்கள், கடற்கோளினை நாங்கள் ஆழிப்பேரலை எனக் கூறிக்
கொண்டோமேயானால், குமரிக்கண்டம் என்ற ஒன்றினை எப்படி ஆழிப்பேரலை
விழுங்கியிருக்கும் எனக் கூறுவர். இப்பவே குமரிக்கண்டம் இருந்ததற்கான
சான்றுகள் கேட்பவர்கள், இலக்கியக் கருத்து வடிவில் மட்டுமே உள்ள
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே
கூறிவிடுவார்கள். இப்படியான தப்பான, ஆபத்துக்கு வழிகோலும் வகையிலான
மொழிபெயர்ப்புகள் இருக்கக் கூடாது.
தொல்காப்பியத்தின் தோற்றம்:
இது
இப்படியே நிறக, பதின்மூவாயிரம் ஆண்டு முன்னராக ஏற்பட்ட முதலாவது பெருங்
கடற்கோள் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியைக் கடலுட் கொண்டு செல்ல,
தப்பியவர்கள், தம்மை நிலைப்படுத்தியதுடன் தமது தொன்மையைக் காத்திட
வேண்டும் என்று எண்ணுகையில்தான் தொல்காப்பியரினால் தொல்காப்பியம்
படைக்கப்படுகிறது. எப்படியெனில் 1.8 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு
முன்னராகக் கூர்ப்பு வழியிற் தோன்றிய கோமோ இரெக்ரசஸ் என்ற
ஆதிமனிதர்களில் இருந்து, இருநூறாயிரம் ஆண்டு முன்னர் கோமோ சேப்பின்கள்
என்கிற நாங்கள் தோன்றுகிறோம். மேலும் 65 ஆயிரம் ஆண்டு முன்னராக கோமோ
சேப்பியன்களாகிய எங்களில் 'மூளைவிகாரம்' ஏற்பட, அறிவியல்
மேம்பாடடைகிறோம். இம்மேம்பாடுதான் இன்று எங்களை இவ்வுயர் அறிவியல்
நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்கிறார்கள், வல்லுனர்கள்.
மூளை விகாரத்தின் பின்னர், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டு காலம்;
அமைந்த அறிவியல் மேம்பாட்டு நீட்சி, குமரிக்கண்ட மக்களை அறிவியல்
செழிப்புள்ளவர்களாக்கி அதன் தெறிப்புக்களைக் காட்டக் கூடியவர்களாக
ஆக்கியிருந்தது. அவற்றில் முக்கியமானவைகளாகிய மொழி, எழுத்துகள் என்பவை
இருந்திட, மனிதர் தாம் கண்டவற்றை, அறிந்தவற்றை, பெற்றவற்றை, இன்னமும்
தாம் கற்றவற்றை எல்லாம் இலக்கியங்களாகக் குறித்து வைக்கத் தொடங்கினர்.
சங்கம் அமைத்து பலவழிகளிலும் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில்தான் பதின்மூவாயிரம் ஆண்டு முன்னராக, முதலாவது கடல்கோள்
வந்து குமரிக்கண்டத்தின் வாழ்விடங்கள் முதலாகப் பலவற்றை அழித்து,
மறைத்து விடுகின்றது. தப்பிப் பிழைத்தவர்கள், மீண்டும் தளைத்துக்
கொள்கிறார்கள். இரண்டாம் சங்கம் அமைகின்றது. இந்நிலையில் மேலும் பல
இடர்களும் வந்திடத் தமது தொன்மையினைக் காத்திட வேண்டிய அவசியம்
ஏற்படுகின்றது. அந்நிலையில், எழுந்ததுதான் தொல்காப்பியம்.
இலக்கியங்களில் உள்ளவற்றை, அவ்விலக்கியங்களின் செழுமைகளைக் கூறும்
இலக்கணங்களை, வாழ்வியல் இலக்கணங்களை, தமது மொழியின் வளத்தினை எல்லாம்
கூறும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் அமைந்;து விடுகின்றது.
இரண்டாம், மூன்றாம் கடல்கோள்களின் அழிவுகள் உட்படப் பல்வகை அழிவுகளின்
விளைவால் சேதமுற்ற தமிழினமும், தமிழும் அழிந்துவிடும் நிலையில்
தொல்காப்பியம் மீண்டெழுந்து தமிழினது, தமிழர்களது பழமை பெருமைகளை
பறைசாற்றத் தொடங்கியுள்ளது. தொல்காப்பியத்தின் தொன்மையை, அதன் செழுமையை,
அது கொண்டுள்ள அறிவியற் தனித்துவங்களை எல்லாம் ஊறுபடுத்துபவர்கள்
மத்தியில் இன்னமும் வீறுகொண்டு தமிழையும், தமிழர்களின் உயர்வினையும்
எடுத்தியம்பிய வண்ணம் தொல்காப்பியம் மிளிர்கின்றது.
தொல்காப்பியம், அறிவியற் பெட்டகம்:
இலக்கண நூல் எனப் பெயர் பெற்ற தொல்காப்பியத்தின் 'எழுத்து, சொல், பொருள்'
என்ற அதிகாரங்களின் பகுப்பே எளிமையாக அதனை அறிவியற் பெட்டகம் எனக்
காட்டுகின்றது. இதன் மூன்று அதிகாரங்களையும் மெதுமையாகவோ அன்றேல்
ஆழமாகவோ பார்க்கும் எவர்க்கும் இவ்வுண்மை தெரிந்துவிடும். எனவே 'தொல்காப்பியத்தில்
உள்ள அறிவியற் கூறுகள்' எனக் கூறுவது பொருத்தமானது இல்லை. இருப்பினும்
தொல்காப்பியத்தினைப் புரிந்து கொள்வதன் ஆரம்பப் புள்ளியாக இப்படியும்
கூறிக் கொள்ளலாம். வாழ்க்கைக்கான இலக்கணம், இலக்கியத்திற்கான இலக்கணம்
என்றெல்லாம் கூறப்படும் பொருளதிகாரத்தில் இருந்து, வழமையை விடச் சற்று
மாறுபட்ட கோணத்தில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்து மூலகக் கொள்கை:
அறிவியலின் ஆரம்பம் கிரேக்கம் எனக் கூறுபவர்கள், கி.மு. ஐந்தாம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி அரிஸ்ரோற்ரலையே அறிவியலின்
தந்தையாகக் கூறிப் பெருமை கொள்வர். இவர் உலகமும் அதன் உடமைகளும் நிலம்,
தீ, நீர், வளி என்ற நான்கு மூலகங்களினால்; ஆனது என்று கூறினார்.
மேல்நாட்டின் அறிஞர்கள் அரிஸ்ரோற்ரலின் அவ்விளக்கத்தினை 'நான்கு மூலகக்
கொள்கை' எனக் கூறிப் பெருமைப்படுத்திக் கொண்டனர்.
இந்த நான்கு மூலகக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டு இவர்களின் அறிவியல்
மேதைகள் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாகத் தமது அறிவியற் தேடல்களைச்
செய்து கொண்டு வந்தார்கள். 1803 ஆம் ஆண்டு டால்ரன் அணுக் கொள்கையைக்
கூறும் வரைக்கும் 2300 ஆண்டு காலம் நான்கு மூலகக் கொள்கை
செல்வாக்குடையதாகவே இருந்தது. அரிஸ்ரோற்ரலின் காலத்திலேயே டிமோக்கிரஸ்
என்பவர் அணுவைப் பற்றிய தெளிவுகளைக் கூறிய போதிலும் அவை ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.
மேலை நாட்டவர்களின் வாழ்வியலில் தத்துவப் பார்வைகளில் இன்னமும் இந்த
நான்கு மூலகக் கொள்கை செல்வாக்குக் காட்டிக் கொண்டு வருவதைக் காணலாம்.
காட்டாக, சில வருடங்களின் முன்னராக எதிர்காலத்தில் நடக்கின்ற கதை
ஒன்றினைக் கூறும் 'ஐந்தாம் மூலகம்'
(The Fifth Element) என்ற
ஆங்கிலத் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள். அத்திரைப்படத்தில் நிலம்,
தீ, நீர், வளி என்ற இந்த நான்கு மூலகங்களையும் மையப்படுத்தியதுடன் காதலை
(Love) ஐந்தாவது மூலகமாகக் காட்டி இருந்தார்கள். பெரும் வரவேற்பைப்
பெற்ற இந்தத் திரைப்படம் 2500 ஆண்டு முன்னராக அரிஸ்ரோற்ரல் கூறிய நான்கு
மூலகக் கொள்கை, இந்நாட்களின் அறிவியல் நிலையில் முழுமையானதாக இல்லாத
போதிலும் மேலை நாட்டவர்களிடையே எவ்வளவு செல்வாக்கினைப் பெற்றுள்ளது
என்பதனைக் காட்டுகிறது.
இத்திரைப்படத்தைப் பல தடவைகள் நானும் பார்த்திருந்தேன். படத்தின்
காட்சியமைப்பு, கதையின் விறுவிறுப்பான தொடர்ச்சித் தன்மை, எதிர்கால
விஞ்ஞான விபரிப்புகள், விண்வெளி அதிசயங்கள் என்பவை அத்திரைப்படத்தை அழகு
செய்து கொண்டிருந்தன. ஆயினும், அவற்றின் மேலாக, இற்றைக்கு ஏழாயிரம்
ஆண்டு முன்னராகத் தொல்காப்பியர் கூறியிருந்த 'ஐந்து மூலகக் கொள்கை'
என்பதனைத் தலைப்பாகக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப் படுத்தியதுடன்
ஒருவிதமாய் உறுத்திக் கொண்டும் இருந்தது. படத்தில் வந்த ஐந்தாவது
மூலகமான காதல் என்பதற்குப் பதிலாக தொல்காப்பிர் தந்த 'விசும்பு' என்னுள்
வந்து கொண்டே இருந்தது.
'நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகு' (தொல் - பொருள் - 635)
ஏழாயிரம் ஆண்டு முன்னராகவே தொல்காப்பியம் கூறியிருந்த இவ்வுயர் அறிவியல்
கருத்தினை தொல்காப்பியரின் காலத்திற்கும் 4500 வருடங்களின் பின்னர்
வாழ்ந்திருந்த அரிஸ்ரோற்ரிலும் அறிந்திருக்கவில்லை, மேலை
நாட்டறிஞர்களும் தெரிந்திருக்கவில்லை. அரிஸ்ரோற்ரலின் நான்கு மூலகக்
கொள்கையை முழுமைப்படுத்தக் கூடியதான தொல்காப்பியரின் இச்சூத்திரம் உலகு
பற்றித் தமிழர் அந்நாளிற் கொண்டிருந்த உயர்ந்த அறிவியற் கருத்தினை
எடுத்துக் காட்டுகிறது. எதுவித மதச்சார்புக் கொள்கையுமின்றி உலகம்
எவ்விதம் தோன்றியது என்பதனைக் கூறாது, நிலம் தீ நீர் வளி, விசும்பு (ஆகாயம்)
ஆகிய ஐந்து மூலகங்களின் சேர்க்கையினால் ஆனது உலகு என்பதுடன், அது
அமைந்துள்ள, அல்லது கொண்டுள்ள ஐந்து மூலகங்களையும் எளிமையாகவே கூறும்
இப்பா ஆச்சரியமானதே. இவற்றினை ஐம்பூதங்கள் என்பர், தமிழறிஞர்.
இந்த ஐந்து மூலகக் கொள்கையின் தொடர்ச்சியோ என்னவோ, தொல்காப்பியரின்
காலத்தின் வெகு பின்னராக இருந்த வள்ளுவர் காலத்தில் 'அணு' என்ற பதம்
தமிழர்களிடையே பரவலாக இருந்துள்ளது என்பதை அறியக் கூடியதாக உள்ளது.
காட்டாக, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'
என்றொரு பதத்தினை ஒளவையார், குறளின் கருத்து வலிமையைக் கூறுவதற்காக
எடுத்தியம்பிய சொற்றொடர் என்கிறார்கள். இப்படியிருக்க, கிரேக்கத்திற்கு
அணு என்ற பதத்தினைக் கூறும் 'அரொமஸ்' என்பது தமிழர்களிடம் இருந்துதான்
சென்றது என்ற கருத்தும் ஒன்று உண்டு. தமிழர்களின் ஆய்வுக்குள்ளாக்கப்பட
வேண்டிய கருத்துக்களில் இதுவும் ஒன்று.
முந்து நூல் கண்டு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் என்பது
நம்மவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இப்படியான அறிவியல் விடயங்கள்
தொல்காப்பியர் காலத்து இலக்கியங்களில் அல்லது அதற்கும் முன்னராக எழுந்த
இலக்கியங்களில் விரவிக் கிடந்துள்ளன. காட்டாக, பட்டினப்பாலையில் வரும்
காட்சியொன்றினைக் காட்டுகிறார்கள். விருந்திற்கு வரும் ஒருவனுக்கு உணவு
பரிமாறப்படுகிறது. நடுவில் சோற்றினை இட்டு, அதனைச் சுற்றி பல்வகைக்
கறிகளையும் வைத்து உணவுண்ண அழைக்கிறார்கள். உணவைப் பார்த்த விருந்தாளியோ
முதலில் உணவை உண்ணாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவு உள்ள பாங்கினைப்
பார்த்து வியக்கிறான். 'வானிலே நடுவிற் பெரிய வான் பொருள் (கதிரவன்)
ஒன்றிருக்கச் சுற்றிலும் அதன் கோள்கள் இருப்பது போல உள்ளதே இவ்வுணவுப்
பொருட்கள்' என வியந்து கூறிய பின்னர் உணவுண்பதாக அப்பாடல் கூறுகின்றது
என்கிறார், இளங்குமரன் என்ற அறிஞர். இப்படியாக, இலக்கியங்களில் அறிவுச்
செல்வங்கள் நன்கே விரவிக் கிடந்தன என்பதை நாம் கூற முடியும்.
உயிரினப் பகுப்பும் கூர்ப்புச் சிந்தனையும்:
தொல்காப்பியம் எழுந்ததின் நோக்கம், தொன்மையைக் காத்திட என்பது தெளிவாக
உள்ளது. அதில் அக்கால அறிவியலின் பதிவுகள் உள்ளன என்பதனை நாங்கள்
நினைவிற் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் தனது ஆய்வுகளின் தொகுப்பாக
மட்டும் தொல்காப்பியத்தை எழுதவில்லை என்பதை 'என்மனார் புலவர்', என்ப,
மொழிப போன்ற சொற்களாற் காட்டியுள்ளார். ஆயினும் அவற்றினைச் சுருங்கக்
கூறும் முறை அவரை அறிவில் உயர்ந்தவராக் காட்டித் தருகிறது. குறிப்பாக
அவர் தந்துள்ள உயிரினப் பகுப்பு முறை என்பது மிகவும் அறிவியல்
மேம்பாட்டு வெளிப்பாடாகும். இது தொடர்பாக தொல்காப்பியர் தந்துள்ள சில
சூத்திரங்களைப் பார்ப்போம்.
'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' (தொல் - பொருள் - 571)
தொல்காப்பியர், தமது காலத்தறிஞர் உலகின் உயிர்களைப் பகுத்து,
வகைப்படுத்தி இருந்தததைத் தெளிவுபடுத்துகிறார். மேலெழுந்தவாறு
பார்த்தால் இதுவெறும் உயிரினப் பகுப்பாகவே தென்படும். ஆனால் 1857ம்
ஆண்டில் டார்வின் கூறிய கூர்ப்பின் அடிப்படையில் இப்பகுப்பு
அமைந்துள்ளது ஒரு ஆச்சரியமான விடயம்தான். பொதுவாகவே தொல்காப்பியத்தை
படிப்பவர்கள், ஆய்பவர்கள் (எல்லோரும்) தமிழறிஞர்களாக அல்லது மொழி
வல்லுனர்களாகவே இருப்பதனால் இங்கு கூறப்பட்டுள்ள கூர்ப்பின்
தார்ப்பரியங்கள் தமிழரிடையே சென்றடையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
உயிரியல் வழி அறிஞர்கள் இது கூர்ப்பினைத்தான் குறிப்பிடுகின்றது என்பதனை
இதனைப் பார்த்தவுடனேயே கூறிடுவர். அவர்களது கூற்றுக்கு வலுச் சேர்ப்பது
போல் உள்ளன, அடுத்து வரும் ஆறு சூத்திரங்களும். அவற்றில் மூன்றினை கீழே
தருகிறேன்.
'புல்லும் மரனும் ஓரறி வினமே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' (தொல் - பொருள்- 572)
'மாவும் புள்ளும் ஐயறி வினமே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல் - பொருள் - 576)
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல் - பொருள் - 577)
இச்சூத்திரங்களில் 'பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என்ற தொடர் எனது
சிந்தனையைத் தூண்டியது, இது வெறுமனே உயிரிற் பகுப்பல்ல, கூர்ப்பின்
படிநிலைகளை பகுத்துக் கூறுகின்றது என்ற உண்மையை உணர வைத்தது. மனிதக்
கூர்ப்புப் பாதையை உயிரியல் அறிஞர்கள் படமாக வரைந்து காட்டுவார்கள்
ஒவ்வொரு கூர்ப்பு நிலையும் கிளைகள் பிரிந்து பல உயிரிகள் தோன்றுவதை,
தோன்றியதைக் காட்டும். அவ்வண்ணமே ஒவ்வொரு இனப்பகுப்பிற்குமான
சூத்திரத்தில் எனது சிந்தனையைத் தூண்டிய தொடர் இருப்பதைக் கவனியுங்கள்.
தொல்காப்பியருக்கு தமது கால அறிவியல் விபரங்களைத் தக்க வைக்க வேண்டும்
என்ற கடப்பாடு இருந்ததோடு தொல்காப்பியம் ஓரிலக்கண நூலாக இருந்ததால்
கூர்ப்பினைப் பற்றி விளக்கம் அதிகம் தேவையில்லாததாக இருந்திருக்கலாம்.
அல்லாமலும் அக்கால அறிவியல் நிலையில் கூர்ப்பு என்பது கூடச் சாதாரண
விடயமாக இருந்திருக்கலாம்.
தொல்காப்பியத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞான அறிவியலாளர்கள் இல்லையெனக்
கூறும் அளவிற்கு மிகவும் குறைவு. 2016ம் ஆண்டில் உலகத் தொல்காப்பிய
மன்றம் -கனடாக் கிளை வெளியிட்ட தொல்காப்பிய ஆய்வுக் கட்டுரைகள் விழா
மலரில் கலாநிதி பால. சிவகடாட்சம் அவர்கள் தொல்காப்பியத்தின் இந்தச்
சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அரிஸ்டோட்டலினதும் தொல்காப்பியரினதும்
உயிரியற் பகுப்புப் பற்றிய ஆய்வினைச் செய்திருந்தார். அவரையும் நான்
கூறிய சொற்தொடர் கவர்ந்ததுவோ என்ற எண்ணம் அதனை வாசிக்கையில் என்னுள்
எழுந்தது. அவரது கட்டுரையும் என்னுள் இதனைக் குறிப்பிடக் கூடிய
துணிச்சலைத் தந்தது.
அவர் தமது கட்டுரையில் 'நியாண்டதல்'களையும் மனிதர்களின் கிளைகளோ எனக்
கேள்வியினைப் போலக் கூறியிருந்தார். நியாண்டதல்கள், டெனிசோவன்கள்
என்பவையும் கோமோ இரெச்ரசுக்களில் இருந்து கோமோ சேப்பியன்களாகிய எங்கள்
கிளைகள் போலத்தான் தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் நியாண்டதல்கள்
மனிதர்களாகிய எங்களின் கிளைகள் எனக் கொள்ளலாம் என்பதில் எனக்குச்
சிக்கல் உள்ளது. ஏனெனில் இரண்டு உயிரிகளுக்குமான நிறமூர்;த்தங்களின்
எண்ணிக்கை வேறுபாடு. நியாண்டதல்கள் 48 நிறமூர்த்தங்கள் கொண்டவை. கோமோ
சேப்பியன்களாகிய எங்களுக்கு 46 நிறமூர்த்தங்கள். இந்த 46
நிறமூர்த்தங்களின் விளைவே, மனிதர்களாகிய எங்களுக்கு ;மனம்' என்ற
அறிவினைத் தந்ததோ என்ற எண்ணமும் என்னுள் உள்ளது. இருப்பினும் கோமோ
இரெக்ரசுக்களில் இருந்து வந்த அடுத்த உயிரிகளாக இவை மூன்றும் இருப்பதால்,
கிளைகளாகவும் கொள்ளலாம். நண்பர் கலாநிதி பால சிவகடாட்சம் போன்ற துறைசார்
அறிஞர்கள்களின் தொல்காப்பிய ஆய்வுகள் எங்களின் சிந்தனை வளத்தினை
மேம்படுத்தும் என்பது வலிமையான உண்மை.
முதற்பொருள்:
'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே' (தொல் - பொருள் - 4)
இச் சூத்திரத்தை முதன்முதலில் நான் கேட்ட போது, நானடைந்த
ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. தமிழிலக்கணப் பின்னனி ஏதுமில்லாத, விஞ்ஞான
அறிவுடையவனாக இருந்த நான் 'ஏழாயிரமாண்டு முன்னராக இப்படியான அதியுயர்
அறிவியல் வெளிப்பாடு ஒன்று எங்களிடம் இருந்ததைத் தெரியாமல் இருந்து
விட்டேனே!' என்று அப்போது ஆதங்கப்பட்டேன். அவ்வேளையில் இவ்விபரம்
நம்மவர்களுக்கு ஏன் வெளிப்படவில்லை என்ற வினாவும் கூடவே எழுந்தது.
இதன்படி, நிலத்தினதும் பொழுதினதும் இயல்பினைக்
கொண்ட ஒன்றே முதல் ஆக இருந்தது என இச்சுத்திரம் கூறுகிறதென்று
என்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இங்கு பொழுது என்பதை
நேரமாகக் காணலாம், நிலம் என்பதை இடமாக, வெளியாகப் பொருள் கொள்ளலாம்.
மயங்கா மரபுத் தொல்காப்பியம் என்பதாலோ என்னவோ, நிலமாகிய வெளியினையும்;
பொழுதாகிய நேரத்தையும் ஒன்றாகக் கொண்ட ஒன்றே முதலில் இருந்தது எனப்
பொருள்படக் கூடியதாக இருந்தது. இடத்தையும் பொழுதையும் (அதாவது
வெளியையும் நேரத்தையும்) தனித் தனியாக 'இரண்டு முதல்கள்' என என்னால்
பொருள் காண முடியவில்லை. எந்தவொரு இயற்பியல்வாதியும் இப்படியாகத்தான்
இச்சூத்திரத்தை விளக்கிக் கொள்வார்.
அப்படியாக இருப்பின், தொல்காப்பியர் கூறிய முதல் என்பது, இருபதாம்
நூற்றாண்டின் அதியுயர் விஞ்ஞானிகளாகிய ஜோர்ஜ் ளெமற்றே, அல்பேட்
அயன்ஸ்ரைன், ஸ்ரீபன் கௌகிங் ஆகியோர் குறிப்பிட்ட 'பிக்பாங்
சிங்குலாரிற்ரி'தான் என்பதில் ஐயமே இல்லை. இந்த பிக்பாங் சிங்குலாரிற்ரி
பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
20 நூற்றாண்டில் இயற்பியலில் புதியதாக சார்பியலும் குவாண்ரவியலும்
புகுந்து கொள்கின்றன. இவற்றில் சார்பியலின் பொதுச்சார்புத் தத்துவம்
நேரமும் வெளியும் தனித்தனியானவையாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று
பின்னியவையாக, ஒன்றில் ஒன்று சார்ந்து இருப்பவை என்று கூறியது. அத்துடன்
13.7 பில்லியன் ஆண்டு முன்னராக எங்களது பேரண்டம் ஒரு சின்னஞ் சிறிய,
புள்ளியின் புள்ளி அளவான பொருள் ஒன்றில் இருந்து வெளிப்பட்டு, விரிந்து
கொண்டு செல்கின்றது எனவும் சார்புத் தத்துவம் காட்டிக் கொண்டது.
அவ்வாரம்பப் பொருளை சிங்குலாரிற்ரி எனக் கூறிய ளெமற்றே, அந்தச்
சிங்குலாரிற்ரிதான் பேரண்டத்தின் எல்லாவற்றிக்கும் முதலானது எனக்
கூறினார். இச் சிங்குலாரிற்ரியை நான் 'ஒருமம்' என்கிறேன். இந்த ஒருமம்
என்பதில் இருந்து எங்களின் பேரண்டம் வெளிப்பட்ட நிகழ்வினைத்தான் அவர் 'பிக்பாங்'
என வர்ணித்திருந்தார். இன்னமும் நேரமும் வெளியும் இந்த ஒருமத்தில்
இருந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து ஆரம்பமாகின என்பதனையும் ளெமற்றே
காட்டியிருந்தார். ஆக, இந்த ஒருமம் என்பதை நேரம் வெளி இரண்டும் ஒன்றாகக்
கலந்த ஆரம்பப் பொருள் எனக் கூறலாம். ளமற்றேயின் இந்தக் கணிப்பும்,
முடிவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டு, இன்று விஞ்ஞானிகளால் ஏற்றுக்
கொள்ளப்பட்டு விட்டன.
விஞ்ஞானப் பின்னனியில்லாத தமிழிலக்கண உரையாசிரியர்கள்,
இச்சூத்திரத்திற்கு தமக்கு ஒத்ததான, பொருத்தமான அறிவியல் விளக்கத்தைக்
கொடுத்திருந்தாலும், அதன் உண்மை விளக்கம் இதுவாக இருக்குமோ என்றுதான்
எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் குமரித் தமிழரின் அறிவியல் மேம்பாடுகள்
முற்றாகத் தெரிந்திராத நிலையில் மெதுமையான விளக்கங்களே தரப்பட்டுள்ளன
என ஐயுறவும் இடமுண்டு.
1990களின் ஆரம்பத்தில் இந்த சிங்குலாரிற்ரிக்கான தமிழ் பதத்தினைக்
அறிந்திட முயன்று முடியாது போய் கிட்டத்தட்ட 6 மாத மூளை உழைப்பின்
பின்னர் ஒருமம் எனப் பொருத்தமாகப் பெயர்
கொண்டேன். ஒருவேளை அப்பொழுதில் இச்சூத்திரத்தை அறிந்திருப்பேனாயின்
சிங்குலாரிற்ரியை 'முதல்' என்றும் கூட அழைக்கத் தலைப்பட்டிருப்பேன்.
அகர வடிவ எழுத்துகள்:
'எழுத்தெனப் படுப அகரமுதல்
ன கர இறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.' (தொல் - எழுத்து. – 1)
தமிழின் எழுத்துகள் பற்றிய உண்மைத் தன்மையை எடுத்துக் கூறும்
தொல்காப்பியத்தின் முதலாவது சூத்திரம் இதுவாகும். இதன்படி, தமிழில்
உள்ள எழுத்துக்கள் முப்பஃது (முப்பது) என்றாகிறது. இவ்வெழுத்துக்களை
இப்போது முதலெழுத்துக்கள் என்பர். இன்னமும்,
'ஒளகார இறுவாய்ப்
பன்னீ ரெழுதத்தும் உயிரென மொழிப.' (தொல். – எழுத்து. – 8)
மேலும்,
'னகார இறுவாய்ப்
புதினெண் எழுத்தும் மெய்யென மொழிப' (தொல். – எழுத்து. – 9)
என்னுமிரு சூத்திரங்களால் அந்த முப்பது எழுத்துக்களையும் உயிர், மெய்
என்கிற இரண்டு வகைக்குள் அடக்குகின்றார், தொல்காப்பியர், மொழிப என்ற
குறிப்போடு, தன் முன்னர் இவற்றைக் கூறிய புலவர்கள் வழியிலே.
இவ்வெழுத்துகள் பிறக்கின்ற உயரறிவியல் தன்மையையும், இரண்டு வகுப்புள்
அவற்றைப் பிரித்துக் காட்டிய இயல்புகளையும் இங்கு நான் விபரிக்கத்
தேவையில்லை. ஆனால், தமிழின் செல்வாக்கு மற்ற மொழிகளின் எழுத்துகளுக்கு
அடித்தளமாக இருந்திருக்கும் என்பதனைக் காட்டுபவையாக இவற்னைக் காண்கிறேன்.
அது மாத்திரமல்லாது, இன்னமும் பல புதிர்களுக்கான விடைகளையும் இவை காட்டி
நிற்பதை என்னாற் காண முடிகிறது.
இன்று உலகெங்கிலும் காணப்படுகின்ற மொழிகளின் வரிவடிவ அகரங்களின்
பிறப்பிடமாக, அசீரியர்களின் அரமைக்கைக் கூறுகின்றார்கள்.
இம்மொழியினைத்தான் இயேசுக் கிறிஸ்துவும் பேசினாரென்று அசீரியர்கள்
இன்றும் பெருமையாகக் கூறிக் கொள்வார்கள். அசீரியர்கள் கி.மு.1500களில்
மெசப்பதேமியாப் பகுதியிற் செழிப்புடன் வாழ்ந்தவர்கள். அசீரியர்கள்,
சுமேரியர்களின் ஆப்பு எழுத்துகளிலும் (இவையும் சித்திர எழுத்துகள்தான்),
எகிப்தியரினது சித்திர எழுத்துக்களில் இருந்தும் தமது எழுத்துக்களின்
வரிவடிவத்தை அமைத்தார்கள் என்கிறார்கள். பீனிசியர்களின் செல்வாக்கும்
இவர்களிடம் காணப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றார்கள்.
இவ்விடத்தில் ஆய்வாளர்களைப் பெரும் புதிருக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்
ஒரு விடயத்தினையும் கூற விரும்புகின்றேன்.
அசீரியர்கள் வாழ்ந்த பகுதிகளின் அகழ்வுகளிற் பல களிமண் தகடுகளைக்
கண்டெடுத்தார்கள். அவற்றில் இருந்த சொற்கள் 200 எழுத்துகளின்
அடிப்படையில் இருந்ததை ஆய்வாளர்கள் அவதானித்தார்கள். இன்னமும் ஆழமான
ஆய்வுகள் உண்மையிலே அச்சொற்கள் எல்லாம், பன்னிரண்டு எழுத்துகளும்
பதினெட்டு எழுத்துகளும் கொண்ட இரண்டு எழுத்துத் தொகுதிகளின் முப்பது
எழுத்துகளின் அடிப்படையில் இருந்ததைத தெரிந்து கொண்டார்கள்.
இவ்வமைப்பினை இன்றுள்ள வழக்கு மொழிகளின் மூலங்களுடன் ஆய்வு செய்த மொழி
வல்லுனர்கள், எந்தவொரு மொழியின் இயல்புகளுடனும் அவை ஒத்திருக்கவில்லை
எனக் கூறுகின்றார்கள். (இவ்விபரங்களை கூகுளிற்குச் சென்று, அகர
வரிசையின் தோற்றம் பற்றிய தேடலில் அறிந்திடலாம்.)
இவ்வேளையில்தான் தொல்காப்பியர் தந்த எழுத்ததிகாரத்தின், நான் கூறிய
மூன்று சூத்திரங்களும் எனக்கு நினைவில் வந்தன. பன்னிரண்டு, பதினெட்டு,
முப்பது. என்னவொரு அதிசயமான ஒற்றுமை பாருங்கள். ஒருவேளை, இந்திய மொழிகள்
எல்லாம் சமஸ்கிருதத்தின் வழிவந்த மொழிகள் என்ற கருத்தியலால் அம்மொழி
வலலுனர்கள் தமது ஆய்வுகளில் தமிழைக் கருதாது விட்டு விட்டனரோ என எண்ணத்
தோன்றுகிறது. குமரிக்கண்டம், சுமேரியம், எகிப்து என்பவற்றிக்கிடையேயான
தொடர்பு பற்றிய சலசலப்புகள் இருப்பதும் எங்களுக்குத் தெரியும். அவை
பற்றிய நேர்மையான ஆய்வுகளும் உலக வரலாற்றுக்கு தேவையானதாக இருக்கும்.
முடிவாக:
பொதுவிலே இலக்கண நூலெனக் கருதப்படும் தொல்காப்பியம் உண்மையில் எங்கள்
தமிழின், தமிழரின் உயரறிவியல் நிலையினை எடுத்தியம்பும் நூலாகும்.
தமிழரின் பல்துறை அறிஞதுகளும் இதனை ஆய்வு செய்து, அதிலுள்ள அறிவியல்
விடயங்களை உலகினருக்கு, அதிலும் குறிப்பாக எம்மவர்களுக்கு காட்ட
வேண்டும்.
பார்வையைச் சிறிதளவில் விரித்தவர்: கனி விமலநாதன்.
நன்றி: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் (29 -
12 - 2018)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|