பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 18)

முனைவர் செ.இராஜேஸ்வரி
 

“கடவுள் இல்லவே இல்லை,
கடவுளை நம்புகிறவன் முட்டாள்,
கடவுளை வழிபடுகிறவன் காட்டுமிராண்டி”


என்று பெரியார் பிரச்சாரம் செய்தது நெருப்பாகப் பரவி வந்த தமிழகத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாது என்று பிரச்சாரம் செய்து வந்தனர். அப்போது இளைஞர்கள் குறிப்பாக இந்துக்கள் தங்களுடைய புராணங்களை மற்றும் இதிகாசங்களைப் பற்றி வெளியில் பேசுவதற்கு கூச்சப்பட்டனர். இறை நம்பிக்கை, இறைவழிபாடு, சமயச் சடங்குகள் ஆகியவை மூடநம்பிக்கை சார்ந்தனவாகும். பகுத்தறிவு உடையவன் நன்மை எது தீமை எது என்று இனம் பிரித்து அறிய தெரிந்தவன் இறை நம்பிக்கை உள்ளவனாக இருக்க மாட்டான் என்றும் கட்சிகள் பிரச்சாரம் செய்து வந்தன. இவ்வாறான இறை மறுப்பு கருத்துக்களும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும் வேகமாக பரவி வந்த காலகட்டத்தில் நெற்றியில் விபூதி பூசுவது , திருமண் இடுவது ஆகியன கேலிக்கூத்தாக பார்க்கப்பட்டன.

1967 திமுக ஆட்சிக்கு வந்ததும் அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனதும் இறைமறுப்பு கொள்கைகளும் குறிப்பாக இந்து மத சம்பிரதாயங்களை எதிர்த்து பேசுவதும் எள்ளி நகையாடுவதும் மிகுந்த செல்வாக்குப் பெற்றன. இந்துக்களே தங்களை பத்தாம்பசலிகள் என்றும் மூட நம்பிக்கை உடையவர்கள் என்றும் நம்பிக்கொண்டு இருந்தனர். 1965இல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நடிக்க ஆரம்பித்த பிறகு நம் நாடு [7-11-1969] , என் அண்ணன் [12-5-1970], போன்ற படங்களில் இருவரும் கோயிலில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக என் அண்ணன் படத்தில் ‘நீ சாமியிடம் என்ன வேண்டிக்கிட்ட?’ என்று எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிடம் கேட்டபோது அவர் தங்களுடைய திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக சொல்வார். அடுத்து ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் அதே கேள்வியைக் கேட்பார், அப்போது எம்.ஜி.ஆர். தன் தங்கையின் திருமணத்திற்காக வேண்டி கொண்டதாகச் சொல்வார். இறைவேண்டல் என்பதில் உள்ள நம்பிக்கை இந்த வசனத்தின் மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்தது.

எம் ஜி ஆரின் 1௦௦ஆவது படமான ஒளி விளக்கு [29-9-1968] படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு தீ விபத்தில் இருந்து சிறுமி ஒருத்தியை காப்பாற்றிய பிறகு தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பகுதியை சார்ந்த மக்கள் அதுவரை அவரை திருடன் என்று ஏளனமாகப் பேசி வந்தவர்கள் எம் ஜி ஆர் தன உயிரைப் பொருட்படுத்தாமல் ஒரு சிறுமியை காப்பாற்றிய காரணத்தினால் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக தத்தம் கடவுளரை வேண்டிக்கொள்வார்கள்.

தனிப்பட்ட வாழ்வில் காளி, முருகன், இயேசு கிறிஸ்து ஆகியோரை எம்.ஜி.ஆர். வணங்குவார் என்று அறிகிறோம். ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆரை நம்பி அவருடன் ஒரே வீட்டில் வாழும் இளம் விதவையான சவுகார் ஜானகி எம்.ஜி.ஆர். உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு, தலைவா உன் பாதங்களில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடலைப் பாடி முருகனிடம் வேண்டுவார். அப்போது சுற்றியுள்ள கிறிஸ்தவர், முஸ்லீம், சீக்கியர், பிராமணர் போன்றோர் தத்தம் கடவுளரை வணங்கும் காட்சிகள் காட்டப்படும். அனைத்து மதத்தினரும் ஜாதி மத பேதமின்றி எம்.ஜி.ஆருக்காக இறைவனை வேண்டுகின்ற காட்சி படம் வந்த காலத்தில் பெரிதாக பேசப்படாவிட்டாலும் அவர் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற போது தமிழகமெங்கும் இந்த பாடல் ஒலிக்காத டீக்கடை திரையரங்குகள் கிடையாது. மக்கள் அனைவரும் இந்தப் பாட்டை ஒரு தெய்வ கீதமாகக் கொண்டு பக்திப் பாடலாகக் கருதி தினமும் திரும்பத் திரும்ப கேட்டு தங்களுடைய தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

ஒளிவிளக்கு படம் வந்தபோது திமூக ஆட்சியின் சிறப்புகளை எடுத்துரைத்த “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க” என்ற பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்ற போது அவர் அமெரிக்காவில் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தபோது இறைவா உன் மாளிகையில் என்ற சோகப் பாட்டு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று அதிக எண்ணிக்கையில் இந்த ஒலித்தட்டு விற்கப்பட்டு சாதனை படைத்தது.

எம் ஜி ஆர் மீண்டும் பழைய ஆரோக்கியத்துடன் தாய்நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய ரசிகர்கள், பெரியவர்கள், பெண்கள் ஆகியோர் பகிரங்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் அதுவரை பரப்பி வந்த இறை வழிபாடு, இந்து மத வழிபாடு ஒரு மூடநம்பிக்கை என்ற கருத்தினை உடைத்தெறிந்து விட்டு கோயில்களுக்கு வந்து கூட்டம் கூட்டமாக வழிபாடுகள் நடத்தினர். பால்குடம் எடுப்பது, மொட்டை போடுவது, அலகு குத்தி தேர் இழுப்பது என பல சடங்குகளைப் பகிரங்கமாக செய்தனர். மற்ற மதத்தினரும் தங்கள் தேவாலயங்களிலும் வணக்க ஸ்தலங்களிலும் தத்தம் கடவுளரை வழிபட்டனர். இதனை நாம் இதற்கு முந்தைய நூல்களிலும் கட்டுரைகளிலும் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிகப் புரட்சி என்று குறிப்பிட்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆருக்காக இறை வழிபாடு நடத்துவதற்கு ஒளி விளக்கு படத்தில் காரணமாக இருந்தது ஒரு தீ விபத்து எம்.ஜி.ஆர். இதனை வெறும் படத்துக்காக மட்டும் ஒரு காட்சியாக அமைக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் எங்கு மக்கள் இயற்கை பேரிடரால் தீவிபத்தால் இழப்புக்களை சந்தித்தால் உடனே அந்த இடத்தில்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உதவும் முதல் கரம் எம்.ஜி.ஆர். உடைய கரங்களாக இருந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் எம்ஜி ஆரின் உடனடி உதவியை நன்றியுடன் இன்றும் நினைவுகூர்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த வீடிழந்த பண்ட பாத்திரங்களை இழந்த துணிமணிகள் கருகிப் போய் மாற்று துணிக்குக் கூட வழியின்றி திகைத்த பெண்கள் அந்த வேளையில் எம் ஜி ஆர் கொடுத்த சில நுறு ருபாய் நோட்டுக்களால் தங்கள் துயரத்தை தீர்த்து கொண்டனர். அவர்களால் உடனடியாக ஒரு குடிசை போட முடிந்தது. ஒரு மாற்று க்துணிக்கு வலி கிடைத்தது. சில சட்டி பாத்திரங்கள் வாங்கி சோறாக்க வழி பிறந்தது. தங்கள் பிள்ளைகளின் பசியாற்றவும் பனி மழை வெயிலில் இருந்து பாதுக்காக்கவும் முடிந்தது. எனவே இப்பெண்கள் தங்கள் குல தெய்வமாக கருதி எம் ஜி ஆரை இன்று வரை பரம்பரை பரம்பரையாக ஆதரித்து வருகின்றனர்.

சென்னையில் அந்தக் காலங்களில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் சிலவற்றை இங்கு எடுத்துக்காட்டலாம். ஒரு இடம் இரண்டு இடம் என்று இல்லாமல் எங்கு தீ விபத்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உணவு மற்றும் நிதி உதவி அளித்து விடுவார். அரசு ஆலோசனை கூட்டம் நடத்தி உதவி செய்ய முன் வருவதற்குள் எம் ஜி ஆரின் உதவியாளர்கள் அந்த பகுதி எம் ஜி ஆர் ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர்கள் மூலமாக உதவிகளை அளித்துவிடுவர். எம் ஜி ஆர் தான் செய்யும் உதவிகளை ஏனோ தானோ என்று செய்யாமல் அன்போடும் அக்கறையோடும் உடனடியாக செய்யும் மனம் கொண்டவர். அதை புரிந்து கொண்ட அவரது உதவியாளர்களும் எம் ஜி ஆர் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களும் விரைவாகவும் விவேகத்துடனும் பணியாற்றுவர். இந்தக் கட்டுரையில் நாம் காண்பது எம் ஜி ஆர் தனிக் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு திமுகவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர் செய்த உதவிகள் ஆகும். அப்போது இவர் செய்த உதவிகள் திமுகவுக்கு வாக்குகளாகக் குவிந்தன.

1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் புளியந்தோப்பு என்ற பகுதியில் ஏழை எளிய மக்கள் சிறு குடிசைகள் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அந்த குடிசைகளில் தீவிபத்து ஏற்பட்டு எல்லாம் கருகிப் போயின. உடனே எம்.ஜி.ஆர். அப்பகுதியில் வாழும் மக்கள் மீண்டும் குடிசை அமைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். அவர்கள் இப்போது ஓரளவுக்கு நல்ல குடிசைகளாக கட்டிக்கொண்டனர்.

196௦ ஆம் வருடத்தில் சென்னை ஹாமில்ட்டன் பாலத்தின் அருகில் குடிசை போட்டு குடியிருந்த ஏழை எளிய ஜனங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரம் ஏற்பட்டது. யார் வீட்டிலோ சோறாக்க பற்ற வைத்த அடுப்பிலிருந்து ஒரு பொறி பறந்தது, சுவரில்லாத அந்த குடிசையில் பட்டு தீ குடிசைக்கு குடிசை பரவி அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. திருடன் புகுந்த வீட்டில் ஏதாவது மிஞ்சும், ஆனால் தீ புகுந்த வீட்டில் எதுவும் மிஞ்சாது என்ற பழமொழிக்கிணங்க அனைவரும் உடுத்திய துணியுடன் நெருப்பு காயங்களுடன் அனாதையாக நின்ற போது எம்ஜிஆர் தன் சொந்தப் பொறுப்பில் தன் சொந்தப் பணத்தில் இருந்து அவர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.

1961 ஆம் ஆண்டு சென்னையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள மௌபரிஸ் சாலையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 75 குடிசைகள் தீக்கிரையாயின. அந்த குடிசைகளில் வாழ்ந்து வந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் வீடு இழந்து அனாதையாகத் தவித்தனர். அங்கிருந்த எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தினர் முலமாக எம்.ஜி.ஆர் இத்தகவலை அறிந்ததும் உடனே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் போய்ச் சந்தித்து அவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கு மூன்று மூட்டை அரிசி வழங்கினார். பின்பு அங்கு சொந்த இடத்தில் வீடு கட்டி இருந்தவர்களுக்கு புது வீடு கட்டுவதற்கு ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் வழங்கினார். 300 ரூபாயில் அந்தக் காலத்தில் நல்ல மண் சுவர் வைத்து, உயரமான வாசல் வைத்து குடிசை போட்டுக் கொள்ளலாம். இது போன்ற பகுதிகளில் குடிசை போட்டு இருப்பவர்கள் சுவர் இல்லாமல் வீடு கட்டி இருப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். 300 ரூபாய் கொடுத்ததும் அவர்கள் வசதியாகத் தங்கள் வீடுகளை கட்டிக்கொண்டனர்.

சென்னையில் எங்கு விபத்து ஏற்பட்டாலும் எம்.ஜி.ஆர். உடனடியாக அவ்விடத்திற்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்யும்போது அங்கு அனைத்தையும் இழந்து குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக மாறிவிடுவது தவிர்க்க இயலாதது. அவர்கள் எம்.ஜி.ஆரின் உதவிக்கு நன்றி காட்டும் வகையிலும் அத்தருணத்தில் எம்.ஜி.ஆரின் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவர் சொல்லும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன உறுதிக்கு உள்ளாகின்றனர். அந்தக் காலத்தில் எம் ஜி ஆரின் பிரச்சாரத்தை கேட்டு திமுகவுக்கு வாக்களித்த்ட இவர்கள் பின்னர் எம் ஜி ஆர் அண்ணா திமுக ஆரம்பித்ததும் அந்தக் கட்சியின் வாக்காளர்களாக மாறி விட்டதில் வியப்பேதும் இல்லை. ஆபத்பாந்தவனாக அனாதை இரட்சகனாக எம்.ஜி.ஆர். அவர்களின் கண்களுக்கு தெரிந்ததால் அவர் தனி கட்சி தொடங்கும் முன்பே அவருக்கு அதிகளவில் ஆதரவு இருந்தது. எம் ஜி ஆர் விரல் நீட்டும் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருந்தனர். அவர் இருக்கும் கட்சியையே தங்களின் கட்சியாகக் கருதினர்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது தீ விபத்துக்கள் ஏற்பட்ட பகுதியில் ஓடிப்போய் உதவி செய்த எம்.ஜி.ஆர் பின்னர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்ததும் மாஸ்கோவிற்கு திரைப்பட விழாவிற்கு சிறப்பு அழைப்பின் பேரில் சென்றிருந்தார் அங்கு அவர் நடித்த இதயக்கனி படம் வெளியிடப்பட்டது. ரஷ்ய அரசு அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அவரிடம் “உங்களது சமூக அக்கறை மற்றும் சமூக பொறுப்புணர்ச்சியை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம், உங்கள் சமுதாயத்திற்கு நாங்களும் உதவி செய்ய விரும்புகின்றோம் எங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். எங்கள் ஊரில் பல குடிசைகளில் கூரை தென்னை ஓலையில் இருப்பதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு எரிந்துவிடுகின்றன. அங்கு வாழும் ஏழை மக்கள் குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர் நீங்கள் எங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடக்கூடிய உதவியை செய்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகளில் வசிக்க முடியும் என்று கேட்டார். உடனே ருஷ்ய அரசு இரண்டு கோடி ரூபாய் அவருக்கு வழங்கியது. அந்தப்பணம் ஏழைகளின் குடிசைகளை மாற்றி ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடுவதற்கு உதவியது. தன்னால் முடிந்தவரை, ஏழை மக்களுக்கு தீ விபத்து ஏற்படும்போது அவர்களுக்கு உதவிய எம்.ஜி.ஆர்., அயல்நாடுகளுக்கு போகும்போது கூட நம்முடைய மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் எந்த வகையில் இந்த பயணத்தை நாம் நம்முடைய மக்களின் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயல்பட்டு அங்கிருந்து இரண்டு கோடி ரூபாயை பெற்று ஏழை மக்களுக்கு தீப்பிடிக்காத கூரைவேய்ந்து கொடுத்தார்.

எம் ஜி ஆரின் உதவியினால் கூரை குடிசைகளில் வாழ்ந்த குடும்பங்கள் எம்.ஜி.ஆருக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டதாக உணர்ந்தன. இவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருக்கின்ற வகையில் அவருடைய கட்சிக்கு வாக்களிப்பது தம்முடைய கடமையாகும் எனக் கருதுகின்றனர். ஏழைப் பங்காளனாக எம்.ஜி.ஆர். வாழ்ந்ததைத் தெரிந்து கொண்டதால் பெண்களின் ஆதரவு இன்றைக்கும் அமோகமாக இருக்கிறது.

ஒரு முறை ஒரு பத்திரிகை பேட்டியில் உங்களுக்கு மட்டும் மக்களை ஆதரவு அமோகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது எம் ஜி ஆர், ‘’என்னுடைய சினிமா நடிப்பு வேறு, என் நிஜ வாழ்க்கை வேறு என நான் அமைத்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் காட்டுவதையே என் வாழக்கையிலும் பின்பற்றுகிறேன் அதனால் மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருகின்றனர்’’என்றார். இதுவே எம் ஜி ஆர் மகளிர் போற்றும் மக்கள் தலைவராக இருப்பதன் மாபெரும் வெற்றி ரகசியம் ஆகும்.


 

                                                                                                          

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்