திருக்குறளில் வெளிப்படும் மேலாண்மைச்
சிந்தனைகள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
மனித
வாழ்வோட்டத்திற்கு 'பொருள்' இன்றியமையாததும் தவிர்க்கமுடியாததுமான
ஒன்றாகும். வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். ஒவ்வொரு
தனி மனிதனையும் வலுப்படுத்தி மனத்தில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது
பொருள் மட்டுமே ஆகும். திருக்குறள் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கான
வாழ்வியல் நெறிகளை வகுத்துரைத்துள்ளது. குறிப்பாக மனிதன் பொருளீட்டி
எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
திருக்குறளில் பொருளின் தன்மையும் பொருளீட்டும் முறைகளும் அவற்றைத்
திட்டமிட்டுச் செலவு செய்யும் முறைகளும் எடுத்துரைக்கபட்டுள்ளது.
திருக்குறளில் பொருளியல் கருத்துகள் பெரும்பாலும் பொருட்பாலில் இடம்
பெறுகின்றன. இக் கருத்துகள் இருபத்தோர் அதிகாரங்களில் பரவிக்
கிடக்கின்றன. (தவமணி தேவி,அ,'பொருளியல்', திருக்குறளில் அறிவுத் துறைகள்,
ப.120) பொருளீட்டல் தொடர்பான முன்னையோர்கள் சிந்தனைகள் தற்கால
சமூகத்திற்கு இன்றியமையாதவை. இன்றைய சமுதாயம் பொருளினாலும் பொருளீட்டல்
முறைகளினாலும் மனிதநேயம் இழந்த நிலையில் தங்களுக்குள் முரண்பாடுகளை
வளர்த்துக் கொண்ட மக்கள் கூட்டத்தை கொண்டிருக்கின்றது. பொருள்
மனிதனுக்கு தேவையான ஒன்றே. இருப்பினும் அதனை ஈட்டுவதற்கும்
பிரயோகிப்பதற்கும் நியமங்கள் உள்ளன. அத்தகைய நியமங்களை இன்றை
சமூதாயத்திற்கு எடுத்துக் கூறும் இலக்கியமாக திருக்குறள் உள்ளது.
திருக்குறள் காட்டிய வழியல் பொருளை ஈட்டி, அதனைப் பாதுகாத்து, வரவறிந்து
செலவு செய்து, நாட்டையும் வீட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச்
செல்ல வேண்டும். குறளின் பொருளியல் சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்தும்
பொருளியல் சட்டமாக அமைந்திருக்கின்றது.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என்னும் மூன்று
பால் பகுப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது. திருக்குறள் நீதிகருத்து
எனும் கருத்து பதிவுப் பெற்றாலும், இந்நூலினுள் பல்வேறு சிந்தனைகள்
தரக்கூடிய கருத்தாளுமைக் காணப்படுவதை உணரலாம். அவ்வகையில் திருக்குறளில்
காணப்படும் மேலாண்மைச் சிந்தனைகள் என்னும் நெறியில் இக்கட்டுரை
அமைகின்றது.
மேலாண்மை விளக்கம்
ஆளுமையின் மேம்பட்ட கூறுகள் ஒன்றினைந்து மேலாண்மை ஆகினஎனலாம்.
அவ்வகையில் மேலாண்மை என்பது எதனையும் மிகச்சரியான முறையில் கையாளுதல்
ஆகும். அதாவது, மேல்10ஆளுமை–மேலாண்மை என்பர். மேலும், 'ஆண்மைஎன்னும்
சொல் ஆளுமையைக் குறிக்கும். ஆளும் தன்மையே ஆண்மையாகிறது. பொருளை, நாட்டை,
பெண்னை ஆளும் தன்மையினைப் பெற்றவர்களாய் விளங்கியதால் ஆண்களின்
தன்மையாய் கருதுவது சமூகத்தின் வழக்கமாயிற்று' எனலாம். அதாவது, ஒருவரது
ஆளுமைப்பண்பு என்பது அவரது பாரம்பரியம், சூழல், இவற்றைப் பொறுத்தே
அமைகிறது. மரபு,சூழல் இரண்டும் ஆளுமை வளர்ச்சியின் தூண்கள் என்றும்,
மேலும், மனிதனின் ஆளுமைப் பண்பில் அறிவாற்றல் மனத்திண்மை ஆகியவற்றோடு
நிறைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பண்பாட்டு வளமேலாண்மை
என்பது கலை மற்றும் மரபுசார்ந்த வளங்களை மேலாண்மை செய்யும் நடைமுறை
எனலாம். திருக்குறள் மேலாண்மைச் செய்திகளை விரிவாகக் கூறுவதைக் காணலாம்.
அதாவது, திட்டமிட்டுச் ஆளுமைச் செய்தல், இனிமையாகப் பழகும் ஆளுமை,
பிறர்கருத்தை ஏற்றுக் கொள்ளும் ஆளுமை, ஒருங்கமைத்தல் ஆளுமை,
நடுநிலைஆளுமை, காலம் தொடர்பான ஆளுமை செய்திகளைச் சிறப்பாகத்
தரப்பட்டுள்ளன.
திட்டமிட்டுஆளுமைச் செய்தல்
திட்டமிடுதல் என்பதற்குக் கவிதாசன், 'திட்டமில்லாதவனுடைய வாழ்க்கை
கரையில்லாத ஆற்றைப் போல வீணாகும். காட்டாற்றில் வரும் வெள்ளத்தை அணை
மூலம் தேக்கி பின்னால் உரிய வாய்க்கால்கள் மூலமாகப் பாசனத்திற்குப்
பயன்படுத்தி நெல்லும் கரும்பும் வாழையும் விளைவிப்பதைப் போல நம்முள்
இருக்கும் ஆற்றலைத் தேக்கி,ஒரு முகப்படுத்தி முறையான திட்டத்தின்
மூலமாக நமது இலட்சியத்தை அடைய முயற்சிக்கவேண்டும். இலட்சியம் என்ற
அழகிய கோபுரத்திற்குத் திட்டமிடுதல் அடித்தளமாகும்.' என்கிறார். அதாவது,
தேவை, சிந்தனை, முயற்சி, உழைப்பு, உற்பத்திஎன்னும் படிநிலைகளில்
இயற்கையாகவும் செயற்கையாகவும் மனிதன் உருவாக்கும் பொருள்கள் வெறும்
பணடமாக மட்டுமல்லாமல் மனித ஆற்றல் வளமாகவும் அமைகின்றன. முனித சக்தியை
மேலும், மேலும் உயர்த்திக் கொள்ள நெறிப்படுத்திக் கொள்ள தற்காலத்தில்
திட்டமிடுதல் முக்கியமான பணியாகும். மேலும், இலக்கியத்தின் சக்தியையும்
குரலையையும் மக்களின் வர்க்கப் பேதங்களையும் வருண பேதங்களையும்
அகற்றுவதற்குத் திட்டமிட்டு ஆளுமைச் செலுத்தவேண்டும்.
ஓரு மனிதன் ஒரு செயலைச் செய்யும் போது பலநிலைகளில் திட்டமிடுதல்
வேண்டும். திட்டமிட்ட பிறகு தன்னுடைய ஆளுமையால் சரிசெய்து காட்டவேண்டும்.
அப்போது தான் மனிதன் பிறமனிதர்களை விட சிறந்த தன்மையில் அமைவான்
என்பதையும், வள்ளுவப் பெருந்தகை,
'அருமைஉடைத்தென்றுஅசாவாமைவேண்டும்
பெருமைமுயற்சிதரும்' (குறள்.611)
என்ற நூற்பாவின் வாயிலாக ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் இச்செயல்
செய்வதற்குக் கடுமையானது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருத்தல் வேண்டும்.
அச்செயலுக்கான முயற்ச pபெருமையைக் கொடுக்கும் என்றும் கூறுவதைஅறியலாம்.
ஆக திட்டமிட்ட பிறகு ஆளுமையை மாற்றுவது மிகவும் துன்பம் பயப்பது எனலாம்.
அதாவது,
'எண்ணித் துணிககருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு' (குறள்.467)
என்ற நூற்பா மூலம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்முன் அதனை முடிக்கும்
உபாயத்தை நன்றாக எண்ணித் தொடங்குதல் வேண்டும். அதாவது, தொடங்கியபின்
எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமான செயலாகும் என்று கூறுவது
குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு செயலைச் செய்வோமெனச் சொல்லுதல்
எவருக்கும் எளிது. ஆனால், சொன்னது போலச் செய்வது அரியதாகும். இதனை,
'சொல்லுதல் யார்க்கும் எளியஅரியவாம்
சொல்லில் வண்ணம் செயல்' (குறள்.664)
என்பதின் வாயிலாக உணர்ந்து கொள்ளமுடிகிறது. மேலும், தமது கடமை இதுவென்று
அறிந்து நற்குணங்களை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு நல்லசெயலாக அமைவதை,
'கடன்என்பநல்லவைஎல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மைமேற் கொள்பவர்க்கு.' (குறள்.981)
என்னும் பாடலடிகளால் தெளியலாம்.
இனிமையாகப் பழகும் ஆளுமை
மனிதன் வளருவதற்கு அடிப்படையான ஆளுமை இனிமையாகப் பழகுவது ஆகும். ஒரு ஆனோ
அல்லது பெண்ணோ பிறரிடம் இனிமையாகவும், புன்சிரிப்பாகவும் ஆளுமைச்
செலுத்துவது மேலாண்மை எனலாம். இதனை பெர்சனாலிட்டி மேனேஜ் என்றும்
கூறலாம்.
வள்ளுவப் பெருந்தகை,
'இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்' (குறள்.91)
என்ற குறளின் மூலமாக ஒருவன் பிறரிடம் வஞ்சனைகள் இல்லாமலும், அன்பு எனும்
பண்பைச் செலுத்தியும், இனியசொற்கள் பேசி உண்மையாக உணர்ந்தவரின் ஆளுமை
சிறந்த மேலாண்மை எனலாம் என்கிறார். மேலும், ஆளுமையில் மனம் மகிழ்ந்து
ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பதை இன்முகத்தோடும், இன்சொல்லோடும் பேசுவது
முக்கியத்துவம் பெறுவதாகும். அதாவது,
'அகனமர்ந்துஈதலின் நன்றேமுகனமர்ந்து
இன்சொலனாகப் பெறின்.' (குறள்.92)
என்பதின் மூலமாகஅறியலாம்.
பிறர் கருத்தினைஏற்றுக் கொள்ளும் ஆளுமை
ஓருவன் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடங்குவதங்கு முன்னர் அனுபவம்
கொண்டவரிடம் கருத்தினைக் கேட்டு ஏற்றுக் கொள்ளுதல் மேலாண்மைச் செயல்பாடு
எனலாம். அதாவது, ' ஓருவன் எந்தவொரு செயலையும் செய்யும் முன்பாக
அனுபவப்பட்ட அல்லது இச்செயலை அறிந்த ஒருவரிடம் கேட்டு அதன்வழி நடப்பதே
இயைபாக்கல்'என்பர். அதாவது, பிறர் கருத்தைக் கேட்பது அவசியம் என்பதனை
உணர்த்துகிறது.
இதனை,
'செய்வினைசெய்வான் செயல்முறைஅவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்' (குறள்.677)
என்பதின் மூலமாகச் செயலைச் செய்யத் தொடங்கியவன், அச்செயலின் தன்மைகளை
அறிந்த தனது கருத்தை அறிந்து அதனைச் செய்தல் வேண்டும் என்றும் கூறுவதை
உணரமுடிகிறது. அதாவது இதனைப் பரிமாற்றம் எனலாம். கருத்து பரிமாற்றம்
என்பது எப்போதும் இரு வழிப் பாதையாகவே இருக்கவேண்டும். நமது கருத்தைத்
தெளிவாக வெளியிடும் திறனோடு பிறர்கூறும் கருத்தைக் கவனிப்பதிலும் நமது
திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது கருத்தைத் தெரிந்து கொள்வதில்
அக்கறைக் காட்டவேண்டும் என்கிறார். கவிதாசன். இவ்வாறு பிறரிடம்
கருத்துக் கேட்பது சிறந்த மேலாண்மை எனலாம்.
ஒருங்கமைத்தல் ஆளுமை
மனிதர்கள் வளம் அடைவதற்காக நாட்டை ஆளுகின்ற தலைவன் ஒருங்கமைத்தல்
ஆளுமையைக் கையாளுதல் சிறந்த மேலாண்மை எனலாம். ஒருங்கமைத்தல் என்பது
மக்களின் வலிமையை ஆராய்ந்து செய்யவேண்டும் என்றும், எந்;தச் செயல்
மக்களுக்குத் தேவைப்படுகிறதோ அச்செயலை நிறைவேற்றினால் தான் மக்கள்
வளமாக வாழமுடியும் என்பதனை,
'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.' (குறள்.471)
என்றகுறள் மூலம் தெளியலாம். மேலும்,
பாரதி கூறும் போது,
'ஒன்றுபட்டால் உண்டுவாழ்வுநம்மில்
ஒற்றுமைநீங்கின் அனைவருக்கும் தாழ்வு.'
என்னும் கவிதை வரிகள் வாயிலாக ஒருங்கமைத்தல் ஆளுமையைச்
சுட்டிக்காட்டியுள்ளார்.
நடுநிலைமேலாண்மை
இன்றைய சமூகத்தில் சாதி, மதம், இனம் பார்த்து பழகுவதை இன்றைய
நடைமுறையில் காணப்படும் ஒரு தீயசெயலாக அமைகிறது. மேலே சொல்லப்பட்ட
செய்திகளைக் கடந்து நடுநிலை பண்பாடு கொண்ட மேலாண்மைச் செய்பவர்கள்
மிகக்குறைவு. அவ்வாறு செய்யும் செயல்பாடுகளை நிகழ்த்தியவர்கள்
தலைசிறந்த மேலான தகுதி என்பதை,
'தகுதிஎனவொன்றுநன்றேபகுதியால்
பாற்பட்டுஒழுகப் பெறின்.' (குறள்.111)
என்னும் குறளின் வாயிலாகப் பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி
எல்லோரிடத்தும் முறைமை தவறாது நடந்தால் அந்நடுநிலைமை எனும் ஓர் அறத்தை
வெளிப்படுத்தும் மேலாண்மை எனலாம். மேலும், அடக்கம் எனும் குணத்தை
உறுதிப் பொருளாகக் கொண்டு காபாற்றவேண்டும். அடக்கம் எனும் மேலாண்மை
இருந்தால் இவ்வுலக்தையே ஆட்கொள்ளலாம் என்பதை,
'காக்கபொருளாஅடக்கத்தைஆக்கம்
அதனினூஉங் கில்லைஉயிர்க்கு.'(குறள்.122)
என்னும் குறளின் வாயிலாக உணர்த்துவதை அறியலாம்
காலம்தொடர்பானஆளுமை
இன்றையகாலம் அறிவியல் வளர்ச்சியின் உச்சநிலையினைக் கொண்டது. ஆகவே மனிதன்
வெற்றிபெறுவதற்குக் காலம் முக்கியமானதாகும். வள்ளுவப் பெருந்தகை காலத்தை
சரியானமுறையில் கையாளவேண்டும் என்பதனை,
'பருவத்தோடுஒட்டஒழுகல் திருவினைத்
தீராமைஆர்க்கும் கயிறு.' (குறள்.482)
என்ற குறளின் மூலமாகக் காலத்துக்கு ஏற்ற முயற்சியைச் செய்தல்,
தன்னைவிட்டுச் செல்வம் நீங்காமல் கட்டிக்காக்கும் தன்மை என்று
கூறுவதைஉணரலாம்.
இதனை,
'அருவினைஎன்பஉளவோகருவியான்
காலம் அறிந்துசெயின்' (குறள்.483)
என்றகுறளின் மூலமாகக் காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்த தானே ஆளக்
கருதலாம் எனக் கூறுவதைக் காணமுடிகின்றது.
தொகுப்புரை:
-
மனிதனுடைய வாழ்க்கை சிறப்படைவதற்கு
பல் வேறு இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், உலகில்
திருக்குறளுக்கு ஈடாகவேறெந்த நூலும் நீதியோடு வாழ்க்கை முறையினைப்
பிரதிபலித்துக் காட்டவில்லை எனலாம்.
-
அந்தளவிற்குத் திருக்குறள்
சிறப்புபெற்று விளங்குகிறது. திருக்குறளில் காணப்படும் மேலாண்மைச்
சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்கும் போது தலைசிறந்த
தலைவனாக உருவாகமுடியும் என்பதில் ஐயப்பாடு இல்லை எனலாம்.
-
சான்றாக, திட்டமிட்டு செயல்படுத்தல்,
பிறரிடம் இனிமையாகப் பழகுதல், பிறரின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல்,
பொதுநிலையில் செயல்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டால் வாழ்க்கை
செம்மையாகச் வெற்றியடைய முடியும் என்பதை அறியமுடிகிறது.
துணைநின்றநூல்கள்:
1. கவிதாசன், தன்னம்பிக்கையேவெற்றி, குமரன் பதிப்பகம், சென்னை– 17
2. மாணிக்கம்.அ, திருக்குறள் தெளிவுரை, தென்றல் நிலையம், சிதம்பரம்.—01
3. சந்திரசேகரன்.இரா, (ப.ஆ) சங்க இலக்கியங்களில் நேரம் மற்றும்
மனஅழுத்த மேலாண்மைக்
கோட்பாடுகள், இளங்கோபதிப்பகம், கோவை.—22.
முனைவர்
பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|