திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 12)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
அழகே வா:
பெண்மையில் பிறங்கும் அழகை, வருணித்துப் பாடுவதில் கவியரசருக்கு நிகர்
அவரே தான்; பாருங்களேன்! ஆண்டவன் கட்டளை
ங்கிற படத்துல அழகே வா, ..ன்னு ஒரு பாடல். காதலில் தவிக்கும் ஒரு காதலி
தன் எண்ணத்தை,ஏக்கத்தைச் சொல்லும் ஒரு பாடல். இப்பாடலில் தலைவியின்
ஏக்கத்தை இலைமறைவு காய்மறைவாய் ஆபாசம் துளியுமின்றி அழகுபட அள்ளித்
தந்திருக்கிறார்.
தலைவி ஒரு சுனையில் நீராடிக்கொண்டிருக்கிறாள். பருவ மேனியில்
நீர்த்திவலைகள் தவழுகின்றன. இந்த வேளையில் தலைவனும் அங்கு வருகிறான்.
அவளின் வாளிப்பான வனப்பைக் கண்ட தலைவனின் உள்ளம் சற்றே தடுமாறுகிறது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல், அந்த நேரத்தில் தலைவியின்
விரகக் குரல் ஒலிக்கிறது.
அழகே வா,...அருகே வா....அலையே வா.... தலைவா வா,
ஆலயக் கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே.
எனினும்,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி வாழிய நிலனே
என்ற ஒளவையாரின் புறநானுற்றுப் பாடல் நினைவுக்கு வர அவன் சஞ்சலத்துடன்
தவிக்கிறான்.மீண்டும் அவளின் மோகக் குரல் மெல்ல காற்றில் கரைகிறது.
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்,
அந்த ஓடத்தில் உலகம் கூடிவரும்,
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை,
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை.
அவளின் தாபக் குரல் அவனது உறுதியைக் குலைக்கப் பார்க்கிறது.தலைவியின்
அழைப்பைத் தட்டவும் முடியவில்லை. இன்னும் சொல்கிறாள் அவள்.
ஒரு மொழியறியாத பறவைகளும் இன்ப வழியறியும்
இந்த உறவறியும்;
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு
வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்?
கூட்டுக்கு வந்த பறவைகளெல்லாம் தத்தம் துணையினுக்கு முத்தமிட்டு தமது
வருகையை அறிவிக்கின்றன. ஆனால் நீ மட்டும் ஏனோ தயங்குகிறாய். பறவைக்கோ
மொழி தெரியாது, ஆனால் இன்பம் பெறும் வழி தெரியும்; கூடும் சுகம் அறியும்;
உனக்கோ என்னை ரசிக்கும் விழிகள் இருக்கின்றன. என்னை மயக்கும் காதல்
மொழிகள் உன்னிடம் உள்ளன. இன்பம் பெற என் வடிவில் வழியும் இருக்கிறது,
இருந்தும் ஏன் தயங்குகிறாய்? என்று மோகக் கணைகளைத் தொடுக்கிறாள்;
கவியரசர் இந்தப் பாடலில் மொழியைச் சொன்னார்,விழியைச் சொன்னார்,வழியையும்
சொன்னார்.அதுதான் கண்ணதாசன்!
நாலும் நவின்றார்:
எத்தனையோ திரைப்படப் பாடல்கள்! அத்தனையிலும் இல்லாத ஒரு திறனாய்வு
இந்தப் பாடலில் இருப்பதைக் காண்கிறேன். பொய் சொல்லாதே என்ற ஒரு
படத்துல,காதலுக்கு நாலு பக்கம்,கால்களுக்கு நாலு நடை,மாதருக்கு நாலு
குணம்,மைவிழிக்கு நாலு மொழி என்று வகுத்துக் கொடுத்திருப்பார். அது
என்ன,நாலு நாலு என்று முழுப் பாடலிலே விளக்கம் தருகிறார்.
காதலுக்கு நாலு பக்கம்:
• கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்.
• கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்.
• எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்.
• இன்பமதைப் பெறுவதே நான்காம் பக்கம்.
கால்களுக்கு நாலு நடை:
• ஆசை மிதக்கையிலே அன்ன நடை போடும்.
• அருகினில் வா என்றால் சின்ன நடை போடும்.
• கட்டிலுக்குச் செல்கையில் கன்னி நடை போடும்.
• காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும்?
மாதருக்கு நாலு குணம்:
• காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம்.
• கைகளுக்குள் இருக்கையிலே கண்மறைக்கும் மறு குணம்.
• அள்ளி வரும் நினைவுகளை அடக்கிவைக்கும் ஒரு குணம்.
• அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறு குணம்.
மைவிழிக்கு நாலு மொழி:
• தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று.
• தலைமகன் கண்களுக்குள் அனுப்பும் மொழி ஒன்று.
• ஆசைமலர் பூத்தது போல் வீசும் மொழி ஒன்று.
• அடுத்தவருக்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று.
எத்தனை ஆழங்கால் பட்ட ஆய்வு; பிரமிக்கிறேன்!
பொன்னும் கண்ணும்:
பொன்னுக்கும் கண்ணுக்கும் பொருத்தம் காட்டுகிறார் கவியரசர்.
பொன்
கண்
இதனைத் திரையிசையில் இப்படிக்கொண்டுவந்தார்.போலீஸ்காரன்
மகள் என்ற படத்தில்,
ஆண்:
பொன்னென்பேன் - சிறு பூவென்பேன்-காணும்
கண்என்பேன் –வேறு என்னென்பேன்.
பெண்:
என்னென்பேன்-கலை ஏடென்பேன் –கண்கள்
நானென்றால் பார்வை நீயென்பேன்.
ஒத்த அன்புடைய இணையர் ஒருவருக்குள் ஒருவரை நெய்திருப்பர்.பிரித்தெடுக்க
முடியாத பிணைப்பில் மூழ்கிடுவர். இந்த வரிகள் என்னமாய்ச் சொல்கிறது?
பெண்:
சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வதுபோல் நான் தவழ்ந்திருப்பேன்
ஆண்:
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்.
பெண்:
உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்.
ஆண் :
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்.
கடை திறப்பு:
குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானின் வெற்றியைப்
புகழ்ந்து பாடியதே கலிங்கத்துப் பரணி. வெற்றி வீரர்களாகத் திரும்பிய
சோழ வீரர்கள்,கதவுகளைத் தட்டி தங்கள் மங்கையரை விளித்துச் சொன்னதாக
அமைந்த பாடல்களே இந்தக் கடைதிறப்புப் பாடல்கள். அதில் ஒன்று ,கவியரசரின்
சிந்தனைக்குள் சிறகடித்தது.
வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்கத்
தோயக் கலவி அமுதமளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.
இவ்வளவு நேரம் காக்க வைத்த காரிகைகளே! நாங்கள் உள்ளே வந்தால் எண்ண
செய்வோம் தெரியுமா?—தவறு--நீங்கள் என்ன செய்வீர்கள் தெரியுமா?எங்கள்
இதழ்களைச் சுவைக்கின்ற சுவையில் உங்கள் வாய்ச் சிவப்பு அழிந்து, இதழ்கள்
வெளுக்கும் ; வெள்ளை மலர்க்கண் சிவக்கும். அதாவது கண்ணின் வெண்மை
வாய்க்கு வரும்; வாயின் சிவப்பு கண்ணுக்கு வரும்; இதழும் கண்ணும் தங்கள்
நிறங்களைப் பரிமாறிக் கொள்ளும்படி, அவ்வளவு நீண்ட நேரக் கலவியில்
ஆழ்த்தும் நேரிழையீர்! கலவிக் கதவை நாங்கள் திறப்பதற்கு,இந்த வீட்டுக்
கதவைத் திறக்க மாட்டீர்களா?
இந்தப் பரணி இலக்கியத்திற்கு தரணி போற்றும் நம் கவிஞர் திரைப்பாடலை
எப்படி எழுதினார் தெரியுமா?
அன்னை இல்லம் படத்துல,
மடிமீது தலை
வைத்து விடியும் வரை
தூங்குவோம்; மறுநாள் எழுந்து பார்ப்போம் என்ற பாடலின் இடையே
“வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே” ன்னு
எழுதியிருப்பார்.
பரணி இலக்கிய வரிகளை அப்படியே பயன்கொண்டார்.நமக்கும் இலக்கியச் சுவை
தந்தார்.
அதுமட்டுமல்ல,கலவி மயக்கத்தில் இன்னொரு பொருளும் இடம் மாறுகிறதாம்;
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே,மல்லிகை மலர்கள் மண்ணிலே;
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே.
அவளின் நெற்றிக் குங்குமம் அவனின் நெஞ்சிலே, அவளது கூந்தல் மலர்கள்
வருடிய காலை மண்ணில் விழுந்தனவாம்.இதயம் இடம் மாறினால் போதுமா?இவைகளும்
இடம் மாறினால் தானே இல்லறம் சிறக்கும்.
தொடரும்............

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|