திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 13)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


கவியரசர், பெண்மைக்கு முக்கியத்துவமும் மதிப்பும் தரும் வகையில் தம் பாடல்களைப் புனைவார். பெற்றவர்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர்கள் பெண்களே என்பதுபோல கரு அமைத்து எழுதுவார்.
பெண்மையை அவர் ஏன் போற்றினார் என்பதற்கு ஒரு இலக்கியச் சான்று.

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் -வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்!


தாயைப்போல அன்பும் கருணையும், பணிப்பெண் போல பணிவிடை செய்தலும், கணவன் விரும்பும் வண்ணம் தன்னை அழகு படுத்திக் கொண்டும், தன்னை அகழ்வாரையும் தாங்கி நிற்கும் நிலம் போன்ற பொறுமையுடையளவாகவும், படுக்கையில், தான் சுகம் பெற்றும் கணவனுக்கு இன்பமளித்தும் அமையும் பெண்ணை சிறந்தவள் என்று இலக்கியம் சொல்கிறது.

இந்த இலக்கியத்தைப் படித்த கவிஞர், அதன் சாரத்தை அப்படியே திரையிசையில் “ராமன் தேடிய சீதை” எனும் படத்தில் கொண்டுவந்தார். “திருவளச்செல்வியே” என்று ஆரம்பிக்கும் இப்பாடலின் இடையே,

ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை –அது
யாரோ எவரோ ராமன் தேடிய சீதை.
பஞ்சணை மேலே நெஞ்சினிலாடும் தோகை-என்
பார்வையறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவலிருந்து மணவாளன் ஆசையறிந்து
உறவோடு ஊடல் புரிந்து நிலவோடு தேடும் விருந்து
எல்லாம் உன்னோடு தானோ.


பெண்மையின் குணங்கள் பெருமைக்குரியன என்பதை இலக்கிய ஒப்புமையோடு நமக்குத் தந்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை:

நாட்டு நலனிலும் ஒருமைப்பாட்டிலும் அசைக்கமுடியாத உறுதி கொண்டவர் கண்ணதாசன். “நாலு நாள் வளர்ந்த கோழிக்குக் கூட தான் வளர்ந்த வீடு எது என்று தெரிகிறது. ஆனால், நாட்டுச் சொத்தை நாற்பது வருடம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே”என்று வருந்துவார்.

மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, குழந்தைக்காக ங்கிற படத்துல,

ராமன் என்பது கங்கை நதி,
அல்லா என்பது சிந்து நதி,
யேசு என்பது பொன்னி நதி,
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்.
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்

என்று தேசிய ஒருமைப்பாட்டை தெற்றெனச் சொல்லி வைத்தார். இதிலுள்ள சிறப்பு என்னவெனில், மதத்தை வருணிக்க காவிரி, வைகை போன்று வருடத்தில் பல நாட்கள் வறண்டு காயும் நதிகளை உவமையாகக் கொள்ளாமல், கங்கை சிந்து என்று வற்றாத ஜீவநதிகளைக் உவமையாகக் காட்டுகிறார். அனைத்து மதங்களும் போதிப்பது, பரம்பொருளை அடைவது எப்படி என்பது பற்றிதான். அதனால் தான் நதிகள் இறுதியில் கலக்குமிடம் கடலாகும் என்று குறிப்பிடுகிறார்.

வடக்கே ஒருவன் இருமினால் தெற்கிலிருந்து ஒருவன் தண்ணீரோடு ஓடிவருவான். அவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நம் இந்திய நாடு. இன்றும் மொழி, இனம், நிறம் என்ற பாகுபாடு ஏதும் இல்லாமல் வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் எவ்வித அனுமதியுமின்றி பயணிக்கிறோம். அங்குள்ள மனிதர்களோடு உறவாடி மகிழ்கிறோம்.

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும்
சிந்தனை ஒன்றுடையாள்
என்பது பாரதியின் வாக்கு.

கறுப்புப் பணம் படத்துல தானே நடித்து, தன் பாடல் ஒன்றின் வழியாக பொதுவுடமைக் கருத்துக்களை நமக்குப் புலப்படுத்துவார். பாடல் முழுவதுமே நெற்றிப்பொட்டில் அறைவது போல் சத்தியத்தைச் சொல்கின்றன.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை .


இருட்டில் மறைந்துகொள்ள விளக்கணைப்பார் –சிலர்
கிணற்றில் இருந்துகொண்டு உலகளப்பார்.
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்-அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்?

பாலென அழுவோர்க்கு பால் தருவோம்-பசுங்
கூழெனத் துடிப்போர்க்குச் சோறிடுவோம்.
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் –யாவும்
தனக்கென நினைப்போரைச் சிறையிடுவோம்!


தவமாம் தவம் செய்த தையல்:

அழகை வருணிப்பதில் கம்பனுக்கு இணையாக கண்ணதாசனைச் சொல்லலாம். பொதுவாகவே அழகானவர்கள் பெண்கள். எனினும் அழகாக்கப் படுவதுமுண்டு. ஆனால், இன்னொருத்தி அழகானவள் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் எந்தப் பெண்ணும் ஒத்துக்கொள்வதில்லை; கம்பநாடன் ஒரு பெண்ணை வைத்தே இன்னொரு பெண்ணின் அழகை வருணிக்கச் செய்தார்.சூர்ப்பனகையின் கூற்றாக சீதையின் எழிலை “தவமாம் தவம் செய்த தையல்” என்று கம்பர் வருணிக்கிறார்.

மஞ்சொக்கும் அளக ஓதி: மழையொக்கும் வடித்த கூந்தல்;
பஞ்சொக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள்-ஐய
அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்ட
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்.


கருமேகக் கூட்டங்களையும் மழையையும் ஒத்த கூந்தல் உடையவளாகவும், கடலைவிடப் பெரிய கண்களை உடையவளாகவும் ஒரு பெண்ணை நான் கண்டேன் அவள் ஜனகனின் மகளாகிய சீதை எனும் பெயருடையாள் என்று சூர்ப்பனகை இராவணனிடம் கூறி அவனது ஆவலைத் தூண்டுகிறாள்.

கம்பனின் வருணனைக்கு ஈடாக, அபூர்வ ராகங்கள் என்ற படத்தில்

பின்னிய கூந்தல் கருநிற மேகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்-அந்த தேவதை
கிடைத்தால் அது என் யோகம்.

 

 

                                                                                                                                                தொடரும்............

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்