அறிவியல் நாவல்கள்
கனி விமலநாதன்
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.'
புதினங்கள்
எனப்படும் நாவல்கள் பொதுவாகவே இந்நாட்களில் மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றிருக்கும் ஓர் ஊடகமாகும். இதில் அறிவியல் நாவல்கள்
என்பவையும் ஒருவகையாகும். பொதுவிலே அறிவியல் எனத் தமிழில்
கூறப்பட்டாலும் சயன்ஸ் பிக்சன் அல்லது சை - பை (Science Fichion
or Sci - Fi) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விஞ்ஞான நாவல்கள்
பற்றியே இங்கு பார்க்கப் போகிறோம். விஞ்ஞானத்தை அறியாதவர்கள்,
விரும்பாதவர்கள் கூட ஆச்சரியத்துடன் பார்க்கும் நாவல்கள்தான் விஞ்ஞான
நாவல்கள்.
விஞ்ஞான நாவல்கள் எழுத்தாளன் ஒருவனின் சிந்தனையில் எழும்,
எதிர்காலத்தின் விஞ்ஞான மேம்பாடுகளைக் காட்டும் ஜோன்றா (Genre)
என்கிறார்கள். இதனால் விஞ்ஞான நாவல்களுக்குக் கருத்துக்களின் இலக்கியம்
(Literature of ideas) என்றொரு பெயரும் உண்டு. பத்திரிகைகள்,
கதைப்புத்தகங்கள், சிறுவர்களுக்கான இலக்கியங்கள், சித்திரக்கதைகள்,
இன்னும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்ற, மக்களிடையே சில
கருத்துக்களைக் கொண்டு செல்பவற்றைப் பிரான்சிய மொழியில் ஜோன்றா
என்கிறார்கள். ஒரு புதினமொன்றில் ஒன்றிற்கு மேற்பட்ட ஜோன்றாக்களும்
இருக்கலாம்.
விஞ்ஞானச் சங்கதிகளைக் கொண்ட நாவல்கள் எல்லாவற்றையும் சை-பை என்கிற
விஞ்ஞான நாவல்கள் எனக் கூறுவதில்லை. நடைமுறையில் உள்ள, ஆனால்
எங்களுக்குத் தெரியாத விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைக் காட்டுகின்ற
நாவல்கள் விஞ்ஞான நாவல்கள் எனப்படுவதில்லை. அவற்றினைப் புதினங்கள்
வரிசையில்தான் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களது தமிழிற் கூறுவதெனில்
அறிவியல் நாவல்கள் எனலாம்.
இயற்பியல் விதிகளை மீறாமல், அவற்றின் வரைவுகளை விரிவுபடுத்தி எதிர்கால
உலகின் தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவு என்பவற்றினால் ஏற்படக் கூடிய
மாற்றங்களைக் காட்டும் விஞ்ஞான நாவல்களுக்குப் பொதுமையான வரைவிலக்கணம்
இல்லை. அதனால் நாவல் ஒன்றினை இது விஞ்ஞான நாவல்தான் எனக் கூறுவதில்
சிரமம் உள்ளது. விஞ்ஞானப் பொறிமுறைகளின் வரைவுக்குள், புதுப்புது
உலகங்களைக் கண்டறியும் விண்வெளிப் பயணங்கள், காலப் பயணங்கள், ஒளியை
விடவும் வேகமான பயண முறைகள், சமாந்தரப் பேரண்டகளுக்கான பயணங்கள்,
வேற்றுக் கிரக மனிதர்கள் அல்லது உயிரினங்கள் தொடர்பான கதைகள் எனப்
பல்வேறு வகைகளில் விஞ்ஞான நாவல்கள் வருகின்றன. இன்னமும் மனிதப் பரிணாம,
பேரண்டப் பரிமாண மாற்றங்களை மனதிற் கொண்டும் இந்நாவல்கள்
எழுதப்படுகின்றன.
பொதுவாக எதிர்காலத்தின் சாதாரண நிகழ்வுகள்தான்; கதைகளின் மையக்கருவாக
இருக்கும். எதிர்காலத்தின் நடவடிக்கைகள் இன்று வாசிக்கும்
வாசகர்களுக்குப் பிரமிப்பாக இருப்பதுடன், விஞ்ஞான விடயங்களில் ஒருவித
ஆர்வத்தையும் ஏற்படுத்தும். ஏன், எப்படி, எங்கே போன்ற தத்துவங்களின்;
அடிப்படையில், விஞ்ஞானச் செறிவுகளுடன் கதைகளை நகர்த்தி வாசகர்கள்
மனங்களில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற வினாவைக் கேட்கச் செய்யும்
விதத்தில் ஆசிரியர் கதையை அமைப்பதால் விஞ்ஞான நாவல்கள் பெரும்பாலும்
வெற்றி பெற்றனவாகவே இருக்கின்றன. இங்கு வாகசர்கள் நாவலை வாசிக்கத்
தொடங்க வேண்டும் என்றவொரு நிலை இருந்தாலும், தனியவே விஞ்ஞான நாவல்களை
மாத்திரம் வாசிக்கும் பலர் இன்று மேற்கு நாடுகளில் உள்ளனர்.
விஞ்ஞான நாவல்களில் முக்கிய பாத்திரங்களாகச் சாதாரண மனிதர்களே
இருப்பார்கள். ஆனால் அவர்களது மூளைவலு மற்றவர்களைவிடப் பெரியதாக
இருக்கும். அதனால் அவர்கள் செய்யும் காரியங்கள் புத்திசாலித்தனமானதாக
அமையும். இது வாசகரை ஆச்சரியப்பட வைத்துவிடும். சில நாவல்களில் வருகிற
பாத்திரங்கள் புராண, இதிகாச நாயகர்களைக் கூட நினைவுக்குக் கொண்டு
வந்துவிடும். ஆனால், விஞ்ஞான நாவல்களின் நாயகர்கள் புராண, இதிகாச
நாயகர்களுக்கு மறுதலையாக, அபூர்வசக்தி ஏதுமில்லாத சாதாரண மனிதர்களாகவே
காட்டப்படுவதினால் வாசகர்கள் கதையை வாசிக்கையில் அப்பாத்திரங்களாகவே
மாறிட, வாசகர்களுக்கு நாவலில் சுவை ஏற்படுகிறது .
விஞ்ஞான நாவல்கள் கிட்டத்தட்ட கி.பி 2ம் நூற்றாண்டளவிலேயே ஆரம்பமாகி
விட்டன என்கிறார்கள். (உதவி: விக்கிப்பீடியா) அக்காலத்திலேதான்
எதிர்காலம் எப்படி எல்லாம் அமையும் என்ற எண்ணம் எழுத்தாளர்களிடையே
எழுந்து எதிர்கால மனிதர்களின் நடவடிக்கைகளைக் கதைகளாக எழுதத்
தொடங்கினார்கள். இந்த வரிசையில் பிந்நாட்களில்; வந்தவைதான், சில
Arabian Night Tales கதைகளும் 10ம் நூற்றாண்டில் வந்த The tale
of the bamboo cutter போன்றவைகளும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.
இவற்றில் பெருமளவில் கற்பனை வளங்கள்தான் இருந்தனவே தவிர, விஞ்ஞான
உத்திகள் அதிகம் இல்லை என்றே கூறவேண்டும். ஆனாலும் விஞ்ஞானச்
சிந்தனைகளுடன் கூடிய கதைகளுக்கான ஆரம்ப இடமாக சில ஆய்வாளர்கள் இவற்றைக்
கருதுகிறார்கள். மேலும் விஞ்ஞானம் என்ற பதமே அக்காலத்தில் இருக்கவில்லை.
16ம், 17ம் நூற்றாண்டுகளில் கலிலியோ கலிலி அறிவியல் உலகில் விஞ்ஞான
முறையினைக் கொண்டு வந்ததின் பின்னர்தான் விஞ்ஞானம் என்ற பதமும் அதன்
செல்வாக்கும் அறிவியலாளர்களிடையே வந்திட, அவரின் காலத்தின் பின்னராக
வந்த நாவல்களில் விஞ்ஞானத்தின் செல்வாக்கு மெதுமெதுவாகப் பரவத்
தொடங்கியது. கலிலியோ எழுதிய Concept of two Great World System என்ற
புத்தகத்தினை விஞ்ஞான நாவல் எனக் கூறினாலும் தகும் என்பது எனது
பார்வையாகும். அன்றிருந்த புவிமையக் கருத்தினை எதிர்த்து, கதிரவமையக்
கொள்கையைச் சரியானதாகக் காட்டும், மூவரது கருத்துப் பரிமாறலாகக்
கலிலியோவினால் எழுதப்பட்டிருந்த அக்கதையை, அக்கால அறிவியல் உலகில்,
எதிர்காலத்தில் உலகினர் ஏற்றுக் கொள்ளப் போகும் விஞ்ஞான உண்மையைக்
கூறும் நாவல் என்றே கூறலாம். இதே காலப்பகுதியில் வந்த கெப்பிளரின் 'சொம்னியம்'
(somnium) என்ற நாவலும் விஞ்ஞான நாவல்களின் வரிசையில் வைத்துப்
பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். 1620 களில், சந்திரனுக்குச் சென்ற ஒரு
தாயாரும், அவரது மகனும் புவியின் இயக்கத்தை விபரிக்கும் அற்புதமான நாவல்.
பூதமொன்று சந்திரத்தரைக்கு இவர்களைக் கொண்டு செல்வதாகக் கெப்பிளரால் கதை
எழுதப்பட்டதினால் மந்திர தந்திரத் தன்மைகள் கதையிற் கலந்திருந்தது.
ஆயினும் விஞ்ஞான விளக்கங்களை, உண்மைகளைக் கூறுவதற்காக எழுதப்பட்ட கதை
என்பதனால் இதனை விஞ்ஞான நாவல் என்றும் பார்க்க முடியும்.
இதன் பின்னராக வந்த இந்தவகை நாவல்களில் விஞ்ஞானம் இருந்தாலும்,
வாசகர்களைக் கவரும் விதத்திலான Fantacy என்ற பிரமிப்பூட்டுகின்ற மந்திர
தந்திரங்கள் அதிகம் கலந்திருந்தன. இதனால் அவை முழுமையான விஞ்ஞான
நாவல்கள் என்ற பெயருக்குள் வரமுடியாது போயின. 19ம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில், இன்றும் வாசகர்கள் அதிசயத்துடன் வாசிக்கும்
பிரங்கென்ஸ்ரைன் (Frankenstein) என்ற நாவல் வந்தது. திகில், மர்மம்,
பயங்கரம் என்பவை கலந்த, விறுவிறுப்பான நாவலாக மேரி செலிஸ் வெளியிட்ட
இந்த நாவலைத்தான் உலகின் முதலாவது விஞ்ஞான நாவலாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
19ம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி மின்னியல், தந்திப் பரிவர்த்தனை
போன்ற வௌ;வேறு பரிமாணங்களில் விரிவுபட்டு வேகம் பிடிக்க,
எழுத்தாளர்களும் தங்கள் சிந்தனைகளை வௌ;வேறு வடிவங்களில் அமைக்கப்
புதுப்புது வடிவுகளில் விஞ்ஞான நாவல்கள் வரத் தொடங்கின. காதல்,
கண்டுபிடிப்புகள், சாகசங்கள், பயங்கரங்கள், விஞ்ஞானச் சறுக்கல்கள்,
தில்லுமுல்லுக்கள் போன்ற விடயங்களில், விஞ்ஞான அறிவுடைய எழுத்தாளர்கள்
நாவல்களை மக்களுக்கு வழங்க, விஞ்ஞான நாவல்கள் தனியொரு பிரிவாக வீறுநடை
போடத் தொடங்கின. 1898ல், A.G.Wells எழுதிய The War of the worlds
நாவல் மிகவும் பிரபலமாகி, ஏலியன்கள் பற்றிய கருத்தினை வலிமையாக
உலகினருக்கு ஊட்டியது என்றால் அது மிகையாகாது.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முற்பகுதியிலும் இயற்பியலில்
அற்புதமான சார்பியலும், குவாண்டவியலும் புதிதாக முளைத்திட,
எதிர்காலத்திற்கான விஞ்ஞான எதிர்பார்ப்புகள் அதிக அளவில் வரத் தொடங்கின.
மிகவும் எளிய வடிவங்களில் சுவாரசியமான பல விஞ்ஞான நாவல்கள் வெளிவந்து
மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. அயன்ஸ்ரைன், நீல்ஸ் போர், கைசன்பேர்க்
ஆகியோரின் சிக்கலான சமன்பாடுகளின் தீர்வுகளின் வெளிப்பாடான, எளிய
விளைவுகளின் முடிவுகளைக் கொண்ட நாவல்களினால், விஞ்ஞான எழுத்தாளர்களின்
கற்பனைகளின் ஊடான வெளிப்பாடுகள் கதைகளாக வந்து பெரும் வரவேற்புகளைப்;
பெற்றன. அயன்ஸ்ரைனின் 'கடவுட் சமன்பாட்டின்' தீர்வுகள் இயற்கையின்
பெரும் இரகசியங்களை விளக்க, அவற்றினை உலகினருக்குப் பெருமளவிற் காட்டிக்
கொடுத்தவையும் இந்த விஞ்ஞான நாவல்கள்தான்.
இக்காலத்தில்
'பக் றோயஸ்', 'ஆர்மககெட்டோன் 2419', 'பிளாஸ் கோடன்' போன்ற நாவல்கள்
வந்து அபரிமிதமான வரவேற்பைப் பெற, அவற்றின் தொடர்;ச்சியான பல பாகங்கள்
வெளிவந்தன. அத்துடன் சித்திரக் கதைகளிலும் விஞ்ஞான நாவல்களின்
செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. பிளாஸ்கோடன், சுப்பமான், ஸ்பைடமான்
போன்ற சிறுவர் சித்திரக் கதைகளில் விஞ்ஞான நாவல்களின் வாசனை அதிகமாகவே
இருக்க, சிறுவர்களுக்கும் மெதுமையான விஞ்ஞான அறிவு சென்றடைந்தது.
மெதுமையான விஞ்ஞான நாவல்களின் மறுபுறமாக, யூலிஸ் வேர்ன், ஆதர் சி.
கிளார்க் போன்றவர்களின் 20 thousand leagues under the sea, 2001 space
odyssey போன்ற பிரபலமான கடுமையான விஞ்ஞான நாவல்களும் ஏராளமாக வரத்
தொடங்கி யாருமே எதிர்பாராத வரவேற்பைப் பெறத் தொடங்கின. இதிலிருந்துதான்
(1930) விஞ்ஞான நாவல்களின் பொற்காலம் ஆரம்பம் என்கிறார்கள். star wars,
star trek போன்ற கடுமையான நாவல்களின் வரவும் விஞ்ஞான நாவல்களின் மதிப்பை
உயர்வாக்கின. சாதாரண மக்களின் மனங்களில் தோன்றியிராத நவீன கருவிகள்,
விண்வெளிப் பயணங்களின் உத்திகள், வைத்திய தொழில் நுட்பங்கள் என்பன
விஞ்ஞான நாவல்களில் எழுதப்பட்டன, கற்பனையில். star wars பின்னராகத்தான்
விஞ்ஞான நாவல்கள் என்ற பதம் பெருமளவில் மக்களிடையே செல்லத் தொடங்கியது
என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாகும்.
இந்த
விஞ்ஞான நாவல்கள் திரைப்படங்களாக வெளிவரத் தொடங்கியதும் அவற்றிக்கு
இருந்த மவுசு ஏகப்பட்டதாகியது. star wars, star trek, terminator,
alien, predictor, sign, x-men போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்ததுடன்
விஞ்ஞான நாவல்கள் மக்களிடையே மேலும் பிரபலமடையத் தொடங்கின. அவற்றிக்குக்
கிடைத்த பெரும் வெற்றிகள் அவற்றினைத் தொடராக எழுதும் தைரியத்தைக்
கொடுக்க. மளமளவென தொடர் நவீனங்கள் வரத் தொடங்கின, அவற்றின் ஆசிரியர்கள்
பிரபலம் பெறத் தொடங்கியதுடன் பெரிய பணக்காரர்களாகவும் மாறிவிட்டனர்.
நாவலாசிரியர்களின் பேட்டிகள், அவர்கள் நாவல்களிற் பாவித்த விஞ்ஞானக்
கருத்துக்களுக்கான தெளிவுகள், பாவிக்கப்பட்ட தொழில் நுட்பங்களுக்கான
விளக்கங்கள், உத்திகள் என்பனவும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்
என்பவற்றில் வரத் தொடங்கின. நேரான, எதிரான விமர்சனங்களும் வெளிவந்தன.
இவையெல்லாம் விஞ்ஞான நாவல்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது
விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன. இதனால் மேலை
நாடுகளில் விஞ்ஞான நாவல்கள் தற்கால, எதிர்கால உலகிற்கு அவசியம் தேவை
என்றாகி விட்டது.
தமிழிலும் M.G.R இன் கலையரசி என்ற விஞ்ஞானப்படம் 1963ல் வெளிவந்தது.
நிறைவான விஞ்ஞான நாவலின் வெளிப்பாடுதான் கலையரசி. அழகாக, அந்நியர்களின்
ஆக்கிரமிப்பு (alien inversion) என்ற அடிப்படையில் வந்த விஞ்ஞானத்
திரைப்படம் அது. ஆனால் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. இதன்
பின்னர் சில காலங்களுக்கு எந்தத் தயாரிப்பாளரும் விஞ்ஞான நாவல்களையோ,
கதைகளையோ திரைப்படமாக்க முயலவில்லை. ஆனால் காலத்தின் அவசியம் கருதியோ
அல்லது இரசிகர்களின் ஆவல்களை அறிந்தோ என்னவோ அண்மைக் காலங்களில் அம்புலி,
இராட்சதன், ஏழாம் அறிவு, எந்திரன், மாற்றான், ஈ போன்ற ஒரு சில விஞ்ஞானத்
திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றிற் சில நல்ல வரவேற்புகளையும் பெற்றன.
இக்கால விஞ்ஞான உலகின் காலப் பயணங்களின் அடிப்படையில் கூட 'இன்று நேற்று
நாளை', 24 போன்ற படங்களும் வந்து விஞ்ஞானச் சிந்தனைகளின்
வெளிப்பாடுகளைத் தமிழிலும் காட்டின. இவை இன்னமும் கொஞ்சம் அழகுபடுத்தப்
பட்டிருக்கலாம். சங்கரின் அந்நியன், கந்தசாமி, ஐ போன்ற பிரபலமான படங்கள்
கூட விஞ்ஞானத் தனங்கள் கொண்டவைதான். இத்திரைப்படங்களில் விஞ்ஞான
நாவல்களில் உள்ள விறுவிறுப்பு, சாகசங்கள், புத்திசாலித்தனமான
நடவடிக்கைகள், பிரமிக்கவைக்கும் நிகழ்ச்சி மாற்றங்கள் என்பன அவற்றின்
கதைப் போக்கில் உள்ளன. கதையை இழுத்துச் செல்லும் நகைச்சுவைப்
பாங்குகளும் நன்றாகவே உள்ளன.
இப்படியான தமிழ் விஞ்ஞானப் படங்களின் கதைகளின் தோற்றத்திற்குக் காரணமாக
சுஜாதாவின் நாவல்களைக் கூறலாம். அவரது விஞ்ஞானக் கதைகள், நாவல்கள்
திரைப்படங்களாக வரவில்லை. இருப்பினும் தமிழர்கள் மத்தியில் இன்று
விஞ்ஞான நாவல்கள் என்றால்; சுஜாதாதான்; முதலில் நினைவுக்கு வருவார்.
1986ல் வெளிவந்த அவரது 'என் இனிய இயந்திரா', அதைத் தொடர்ந்து வந்த 'மீண்டும்
ஜீனோ' போன்ற நாவல்கள் ஏற்படுத்திய சலசலப்பின் ஆரவாரம் இன்னமும் தமிழ்
விஞ்ஞான நாவலுலகில் ஓயவில்லை என்றே கூறவேண்டும். சிபியும், நிலாவும்,
ஜீனோவும்; அந்நாவல்களை வாசித்தவர்களின் நினைவுகளில் வந்து, வந்து போய்க்
கொண்டேதான் இருப்பார்கள். மிக அற்புதமாக விஞ்ஞான விளைவுகளை
விஞ்ஞானத்தனம் வெளியே தெரியாதவாறு, நகைச்சுவை கலந்த பிரமிப்புக்களுடன்
மிக அழகாகக் கதைகளை நகர்த்தியிருந்தார். கதாபாத்திரங்களின் படைப்பு,
தொகுப்பு என்பன மிகவும் அற்புதம். இக்கதைகளில் வந்தவை போன்ற
இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் அமைந்த, எதிர்காலத்தில் அமையக்
கூடியதான உலகினைக் கற்பனையில் படைத்த பல சித்திரக் கதைகள் ஆங்கிலம்
உட்படப் பல ஐரோப்பிய மொழிகளிலும் யப்பானிய மொழியிலும் ஏற்கனவே
வந்திருந்தாலும் இவற்றினைத் தமிழ் விஞ்ஞான நாவல்களின் திருப்புமுனை
என்றேதான் கூற வேண்டும்.
இவற்றிக்கு முன்னராக 1981ல் சுஜாதா எழுதிய 'கொலையுதிர் காலம்' என்ற
விஞ்ஞான நாவலைத்தான் சுஜாதாவின் படைப்புகளில் உயர்வானதாக நான்
கருதுகிறேன். இக்கதையில் விஞ்ஞான நாவல்களில் வரும் பாத்திரங்களின்
தெறிப்பை என்னாற் பார்க்கக் கூடியதாக இருந்தது. சாதாரண மனிதர்களான லாயர்
கணேசும் அவரது ஜூனியரான வசந்தும் அறிவியல் உலக விற்பன்னர் ஒருவரின்
தப்புக்களையும் குற்றங்களையும் கண்டறியும் கதையைக் கூறும் நாவல்.
Fantacyயோ என்று எண்ணும்படியாக ஹோலோகிராம் என்கிற விஞ்ஞான உருத்தோற்றக்
காட்சிகளின் அடிப்படையில் மாயாஜாலத் தோற்றங்கள் நிறைந்த அறிவியற்
தெறிப்புகள் கொண்ட இந்த நாவலையே இவரின் படைப்புகளின் உச்சம் என்பேன்.
இதற்குக் கூடச் சுஜாதா சில சமயோசித நடவடிக்கைகளை எடுத்தாரோ என எண்ண
வேண்டியுள்ளது. தனது முதலாவது துப்பறியும் நாவலான 'நைலோன் கயிறு' ஊடாக
லாயர் கணேசையும் அவரின் ஜூனியர் வசந்தையும் கட்டி இழுத்து வந்து, தமிழ்
வாசகர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, தனது சமுதாயச் சீர்திருத்தப்
பார்வையையும் காட்டி, தொடர்ந்து தமிழ் வாசகர்களிடையே தனது
எழுத்துக்களின் ஊடாக அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே கொலையுதிர் காலத்தைத்
தந்தார். அதன் பின்னரே மற்ற விஞ்ஞான நாவல்களுக்குள் நுழைந்தார்.
பொதுவாகத் தமிழில் விஞ்ஞான நாவலாசிரியர்கள் அதிகம் இல்லை என்ற கருத்தே
நிலவுகின்றது. ஆனால் ஆர்வமுடன் நல்ல தரமான பல விஞ்ஞான நாவல்களைத்
தந்தவர்கள், தருபவர்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக கிரைம் நாவல்
மன்னன் எனப் போற்றப்படும் ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டைப் பிரபாகர், சுபா
இரட்டையர்கள் போன்றவர்களும்; பல விஞ்ஞான நாவல்களை எழுதியுள்ளார்கள்.
அவையெல்லாம் வெறுமனே துப்பறியும் நாவல்கள் என்றே பார்க்கப்படுவதால்,
துப்பறியும் நாவல் வாகசர்களே அந்நாவல்களைச் சுவைத்தார்கள். இவர்களை
விடவும் ஏராளமானோர் விஞ்ஞான நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார்கள்.
தமிழ்மகன் என்ற நாவலாசிரியர் 'ஆப்பரேசன் நோவா' என்ற அருமையான விஞ்ஞான
நாவலை எழுதியிருந்தார். மிகவும் சுடச்சுட வந்த விஞ்ஞான விடயமான,
கெப்பிளர் விண்கலம் கண்டு பிடித்த, புவியினை ஒத்த கிரகம் ஒன்றுக்குப்
புலம்பெயரும் முயற்சியை மையப்படுத்திய வண்ணமாக, மிகவும் ஆச்சரியப்படும்
விதத்தில் ஆனந்தவிகடனில் தொடராக அக்கதை வந்திருந்தது. உயிரின அமைப்பு
மூலகங்களின் வேறுபாடுகளில் இருக்கும் (இருக்கக் கூடிய) வேற்று
உயிரினங்களையும் இணைத்து விறுவிறுப்பாக அமைந்த அந்நாவலை உங்களிற்
சிலரும் வாசித்திருக்கலாம். இது மென்மையும் கடினமும் கலந்து எழுதப்பட்ட
நாவல்.
க.சுதாகரின் '6174' என்ற நாவல் மிகவும் அருமையானது. தமிழர் பெருமைகளைக்
கூறும் விதத்தில் கணித, விஞ்ஞான தார்ப்பரியங்களை உள்ளடக்கிய நாவல். ஒரே
தடவையில் வாசித்து முழுவதையும் அறிந்திட முடியாத, ஒரு கடுமையான விஞ்ஞான
நாவல். இலக்கியத்தனமும் விஞ்ஞானமும் கூடவே கணித வலைவேலைப்பாடும்,
தமிழர்களின் பழக்க வழக்கங்களும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்நாவலைப்
போல் இன்னொன்றை சுதாகர் கூட இனிப் படைப்பாரோ என்று தெரியவில்லை.
விஞ்ஞானத்திற்குத் தமிழ் இலக்கிய உலகில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்ற
காரணியோடு, நேரம் என்ற காரணியும் சேர விஞ்ஞான நாவல்கள் கண்டு
கொள்ளப்படாமற் போயின என்றேதான் கூற வேண்டும். தமிழ் இலக்கிய உலகிற்
திறனாய்வில் மிகவும் புகழ் பெற்றவராகிய கலாநிதி; கைலாசபதியும் தனது,
நாவல்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளில் விஞ்ஞான நாவல்கள் பக்கம்
திரும்பிப் பார்க்கவே இல்லை. விஞ்ஞான நாவல்களின் வரவிற்குக் காரணமாக
இருந்த மர்ம நாவல்களை அவர் வெறும் 'பரபரப்பு' நாவல்கள் என்றே
பார்த்திருக்கிறார். இன்னமும் ஒருபடிமேலே போய், இந்தப் பரபரப்பு
நாவல்கள் தமிழ் நாவல் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த, 20ம்
நூற்றாண்டின் மூன்று தசாப்தங்களையும் நாவல் உலகின் 'இருண்ட காலம்'
அல்லது 'களப்பிளர் காலம்' எனக் குறிப்பிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட
இக்காலப் பகுதியைத்தான் ஆங்கிலேய நாவல் உலகினர், விஞ்ஞான நாவல்களின்
பொற்காலம் (Golden Age) என்கிறார்கள். என்ன ஒற்றுமை பாருங்கள்.(?).
விஞ்ஞான நாவல்கள் தமிழில் அதிக வரவேற்புகளைப் பெறாதிருப்பதற்கு, நேரம்,
செல்வாக்கு என்பவற்றோடு பணமும் முக்கிய காரணிகளாக உள்ளன. முழுநேர
எழுத்தாளர்கள், வரவேற்பதிகம் இல்லாத விஞ்ஞான நாவல்கள் பக்கம்
பார்ப்பதேயில்லை. தமிழில் பேர்பெற்ற விஞ்ஞானிகளுக்கும் இலக்கியத்தில்
விஞ்ஞானம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஒருவேளை சுஜாதா இதற்கு
விதிவிலக்காக இருந்தாலும் மற்றவர்கள் தமது திருப்திக்காக ஒன்றோ அல்லது
இரண்டோ விஞ்ஞான நாவல்களை மட்டும் எழுதிவிட்டு இருந்து விடுவார்கள்
அல்லது ஏதாவது அழகியற் கவிதைகள் எழுதுவார்கள். ஜே.ஆர்.ரங்கராஜூ என்ற
முழுநேரத் துப்பறியும் எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். 'துப்பறியும்
கோவிந்தன்' என்ற கதாபாத்திரத்துடன் பல துப்பறியும் நாவல்களைத் தந்த இவர்,
1909ம் ஆண்டில் 'ஒன்றுமில்லை' என்ற அருமையான விஞ்ஞான நாவலை
எழுதியிருந்தார். அது ஒன்றுதான் அவர் எழுதிய விஞ்ஞான நாவல். 'ஓன்றுமில்லை'
தமிழ் வாசகரிடையே எவ்வளவு வரவேற்பைப் பெற்றதோ தெரியவில்லை. ஆனால் இதன்
ஆங்கிலப் பதிப்பு சாதாரண ஆங்கில வாசகர்களிடையே மிகவும் பரபரப்பாக
அக்காலத்தில் பேசப்பட்டது. இதன் பின்னர்தான் 'A Princess of Mars'
போன்ற பிரபலமான ஆங்கிலத் தொடர் நாவல்கள் வெளிவந்தன என்பதும்
குறிப்பிடத்தக்கது. பாரதியைக் கூட விஞ்ஞான நாவல்கள் ஆரம்பமாவதற்குக்
காரணராக இருந்திருப்பாரோ என ஐயம் கொண்ட சுஜாதா, கல்கி (மோகினித் தீவு)
புதுமைப்பித்தன் (கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்) இருவரையும்தான் தமிழ்
விஞ்ஞான நாவல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் எனக் கூறியிருந்தாலும்,
தமிழில் முதன் முதலில் விஞ்ஞான நாவலைத் தந்தவர் ரங்கராஜூதான்.
எனது அனுபவத்தைக் கூறுவதும் இங்கு பொருந்தும். விளம்பரம் பத்திரிகையில்
'இன்னொரு...' என்ற தலைப்பில் வந்த எனது ''விந்தைமிகு விண்வெளி விபத்து''
என்ற நாவலை வாங்கியவர்களில் எத்தனை பேர் அதனை வாசித்தார்களோ தெரியாது.
ஆனாலும் அதனை வாசித்தவர்கள் பாராட்டச் செய்தார்கள். 'கனி இதுபோன்ற
நாவல்களை நீங்கள் அவசியம் எழுதத்தான் வேண்டும்' என்று உரிமையோடும்
கேட்டுக் கொண்டார்கள். அந்த நாவலின் ஈர்ப்பினால் அதனைப் பற்றிய தரமான
விமர்சனங்களை 'அகணி' சுரேஸ் அவர்களும், 'சோக்கல்லோ' சண்முகம் அவர்களும்
பத்திரிகைளில் எழுதியிருந்தார்கள். அவ்விமர்சனங்களைப் பார்த்துவிட்டு,
தொலைபேசியிலும், நேரிலுமாக என்னைப் பாராட்டியவர் பலர் இருக்கின்றார்கள்.
என்னைப் போலவே வேறும் சில இலங்கையின் விஞ்ஞான நாவலாசிரியர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களையும் பெரிதாக மக்கள் அறிந்து
கொள்ளவில்லை. வீரகேசரி வெளியீடாக வந்த சில நாவல்கள் மர்மம் கலந்த
விஞ்ஞான நாவல்கள். குரு அரவிந்தனின் பல நாவல்களில் விஞ்ஞானத்தின்
தெறிப்புகள் உள்ளன. விஞ்ஞான மேம்பாடுகளைக் கொண்ட குடும்பப் பாங்கான
நாவல்களைத் தந்து தனது வாசகர்களுக்கு விஞ்ஞானத்தின் செழிப்பினைக்
காட்டித்தர அவரெடுத்த, எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுதலுக்குரியன.
சிலரது பார்வையில் அவை விஞ்ஞான நாவல்களாக இருக்கின்றன. ஆனாலும் அவரது
கதைகளின் மையக்கரு குடும்பச் சிக்கல்களுக்குள் அமைவதால் அவற்றினை
முழுமையான விஞ்ஞான நாவல்கள் எனக் கூறமுடியுமோ என்றொரு கேள்வியும்
எழுகின்றது. எதிர்காலத்தில் ஒருவேளை குளோனிங் முறை மனிதர்கள் மத்தியில்
ஏற்படுமோ? அதனால் என்ன சிக்கல்கள் ஏற்படலாம்? என்ற கருவில் அமைந்த குரு
அரவிந்தனின் உன்னைப் போல ஒருத்தி பல ஜோன்றாக்களைக் கொண்ட நாவல். இதனை
ஒரு மென்மையான விஞ்ஞான நாவாலாகத்தான் நான் பார்க்கிறேன். குரு
அரவிந்தனின் 'நீர்மூழ்கி.. நீரில்மூழ்கி' சுவாரசியமான விஞ்ஞான
விபரங்களைத் தரும் நாவல். இதனை எங்களின் அறிவியல் நாவலாகத்தான் பார்க்க
முடிகிறதே தவிர விஞ்ஞான நாவலின் பகுதிக்குள் எடுத்துக் கொள்ள
முடியவில்லை.
தமிழில் விஞ்ஞானக் கதைகள் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று
கூறுவதிற்கில்லை. அப்படியாக இருந்தால் எங்களிடம் பெயர் சொல்வதற்குக்
கூட ஒரு விஞ்ஞான நாவல்களும் இல்லாதிருந்திருக்கும். ஏன் விஞ்ஞான
நாவல்கள் குறைவாக உள்ளன என்பதற்கான காரணங்கள் எனது எழுத்துக்களில்
ஆங்காங்கே தெறித்து நின்றாலும் இன்னொரு முக்கிய காரணியையும் என்னாற்
கண்டு கொள்ள முடிகிறது. விஞ்ஞானப் படிப்பும், எளிமையான விஞ்ஞான
நூல்களும், தமிழிலே போதிய அளவில் இல்லை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியும்
எம்மிடையே சிறப்பாக இல்லை. அத்துடன் தமிழ்மொழியின் ஊடான புதியபுதிய
கண்டு பிடிப்புகளும் இல்லை. அதனால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளுக்கு
உத்வேகம் கொடுக்கக் கூடியதாக விஞ்ஞானிகளோ அல்லது அது தொடர்பான துறையைச்
சார்ந்தவர்களோ தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டத் தேவையில்லை, புரட்டவும்
மாட்டார்கள். ஆதர் சி. கிளார்க் ஒருவேளை தமிழிற் தனது 2001 ஸ்பேஸ்
ஓடீசியை எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அவரின் கனவுகள்
வெளியுலகினருக்கு அப்போது தெரியவந்திராது, 'ஸ்ரார் ரக்'கில் அதன்
எழுத்தாளரின் ஏற்றுக் கொள்ளக் கூடியதான தொடர்பு சாதனங்கள் இன்று
பாவனையில் எல்லோரிடமும் இருந்தாலும் தனியவே தமிழில் வந்திருந்தால்?
பதிலை நீங்களே கூறுங்கள்.
விஞ்ஞான நாவல்களை வாசிப்பதுடன் அவற்றில், கற்பனையில் எழுந்த,
உண்மையாக்கப்படக் கூடிய விஞ்ஞானக் கருவிகளை நடைமுறையிலும்
பாவிப்பதற்கான கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடியதான அறிவியல் நிலையினை
எம்மவர் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய வசதிகளை நம்மவர் ஏற்படுத்தும்
வரையில் எம்மொழியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விஞ்ஞான நாவல்கள்
உள்ளன என்ற நிலைதான் இருக்கும். இந்நிலை என்று மாறுமோ அன்றிலிருந்து
தமிழ் விஞ்ஞான நாவல்களும் கணிசமான அளவிலும், மற்ற மொழிகளுக்கு ஈடாகவும்
இவ்வுலகில் ஒளிர்வு பெறும் என்பதென் கருத்தாகும்.
எழுத்துகள், சொற்கள், வசன அமைப்புகள் போன்றவற்றினை ஒழுங்கு படுத்துவதில்
உதவிய எனது மனைவி மீராவுடன் இணைந்து, ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தினருக்கு
கூறுகிறேன், நன்றி,
'கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு.'
அன்புடன்,
கனி விமலநாதன்.
நன்றி: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|