பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 20)

முனைவர் செ.இராஜேஸ்வரி

அனைத்து வகைப் பெண்களிடமும் அன்பு காட்டிய எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் பெண்களை மிக மிக உயர்வாக மதித்த காரணத்தால் அவர்களிடம் மிகுந்த கண்ணியத்தோடும் அன்போடும் பண்போடும் பழகினார். அவர்களுக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுத்தார். பெண்களைப் பாதுகாக்க வேண்டியது ஆண்களின் கடமை என்பதை சிறுவயது முதற்கொண்டு உணர்ந்திருந்ததால் அவரோடு வெளிப்புற படப்பிடிப்புக்கு வரும் நடிகையர்களையும் அவருடைய பொதுக்கூட்டத்துக்கு வரும் பெண்களையும் அவருடைய திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகைகளையும் பாதுகாப்பாக திரும்ப அனுப்பி வைப்பதை தமது முதன்மையான கடமையாக கொண்டிருந்தார். ஆதரவற்ற பெண்களுக்கு தன்னால் ஆன உதவிகளை உடனே செய்தார் கொடிகாத்த குமரன்இ முன்னாள் அமைச்சர் கக்கன்இ நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் போன்றோரின் மனைவிமார் எம்ஜிஆரை தன் பிள்ளை என்று போற்றி பாராட்டும்படி அவர்களிடம் அன்பாக நடந்து கொண்டார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை குடியிருக்க வீடுஇஇ உதவித்தொகைஇ வைத்திய வசதி ஆகியவற்றைச் செய்து கொடுத்தார்.

முந்தானையில் ஆட்டோகிராப்

எம்ஜிஆர் இளம் பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு உரியவர்கள் என்பதால் அவர்களை பாதுகாத்து விதைநெல் போல போற்ற வேண்டும் என்பதில் கவனமும் அக்கறையும் கொண்டிருந்தார். தன ரசிகைகளுக்கு தன்னால் தனது சினிமாவால் எவ்வித துன்பமும் வந்துவிடக்கூடாது என்பதில் அக்கறை காட்டிய எம்ஜிஆர் இளம் பெண்களிடம் மிகவும் கவனமாக நடந்து கொண்டார். பொது இடங்களில் படப்பிடிப்புத் தளங்களில் இளம் நடிகைகள் பிறருடைய கவனத்தை கவரும் வகையில் சத்தமாகப் பேசவோ சிரிக்கவோ கூடாது என்பதில் கண்டிப்போடு இருந்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும்போது ஒரு இளம் நடிகை குடித்துவிட்டு இருப்பதை பார்த்து அவரை கண்டித்து புலியூர் சரோஜாவிடம் ஒப்படைத்து இங்கிருந்து திரும்பி போகும் வரை நீ இவளை கவனமாகப் பார்த்துக் கொள் என்று கூறினார். ''நம்முடைய தொழில் நடிப்புதானே; நடிகைகள் எப்படி இருந்தால் நமக்கென்ன' என்று விட்டேற்றியாக இருக்கும் குணம் எம்ஜிஆரிடம் கிடையாது. தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தன்னுடைய குடும்பத்தாரை போலக் கருதி அன்பு செலுத்தும் நல்ல அன்புள்ளம் கொண்டவர் எம்ஜிஆர்.

பரிசு படப்பிடிப்புக்காக கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சொந்தமான ஒரு மாளிகையில் எம்ஜிஆர் தங்கி இருந்தார். அப்போது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கல்லூரி தோழிகள் இருவரை அழைத்து வந்தார். எல்லோரும் எம்ஜிஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது தோழிகளில் ஒருவர் தன்னுடைய முந்தானையை நீட்டி அதில் ஆட்டோகிராப் போட்டு தருமாறு எம்ஜிஆரிடம் வேண்டினார். எம்ஜிஆர் மறுத்துவிட்டார். ''உன் முந்தானை உன் கணவனுக்கு சொந்தம்; அதை நீ என்னிடம் கொடுக்கக்கூடாது'' என்று கண்டித்து அவளிடம் இருந்த ஒரு நோட்டை வாங்கி அதில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். இச்சூழ்நிலையில் வேறு எந்த நடிகர் இருந்திருந்தாலும் அல்லது வேறு ஆண்கள் இருந்திருந்தால் அவர்களில் பலர் முந்தானையில் கையெழுத்துப் போட்டு கொடுத்து இருப்பார்கள். வெகு சிலர் தான் எம்ஜிஆர் போல முந்தானையின் மகத்துவத்தை நினைத்துப் பார்த்து மறுத்துக் கூறியிருப்பார்கள்.

மந்திரிகுமாரி படப்பிடிப்பில்

மந்திரிகுமாரி படம் எம்ஜிஆரும் ஜீ சகுந்தலாவும் இணைந்து நடித்த படம் ஆகும். இப்படத்தில் நாடக நடிகையாக இருந்து திரைப்படத்திற்கு நடிக்க வந்திருக்கும் சகுந்தலாவுக்கு எம்ஜிஆர் அவ்வப்போது நடிப்பை சொல்லிக் கொடுத்து 'மார்க்' போட்ட இடத்தில் நின்று வசனம் பேச வேண்டும்; எப்போது கேமராவை பார்த்து பேச வேண்டும்; எப்போது சக நடிகரை பார்த்து பேச வேண்டும்? என்று சில பல விவரங்களை சகுந்தலாவுக்கு அவ்வப்போது சொல்லிக் கொடுத்தார். கண்டிப்புக்கு பேர்போன மாடர்ன் தியேட்டர்சின் உரிமையாளரிடம் இவர்கள் இருவரும் அடிக்கடி பேசுவதைப் பார்த்து சிலர் தவறாக கருதியதால் 'வத்தி' வைத்துவிட்டனர். விஷயம் அறிந்த சுந்தரம் இவ்விருவரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு எம்ஜிஆரை பார்த்து 'ராமச்சந்திரா நீயும் சகுந்தலாவும் என்னை வந்து பார்த்து விட்டுப் போங்கள்' என்றார். எம்ஜிஆருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. ஜி சகுந்தலாவுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. தன் பெயர் கெட்டுப் போகும் படி முதல் படத்திலேயே யாரோ தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று அவர் கண்களில் கண்ணீர் மளமளவென்று வழிந்தது. அழாதே என்று சொல்லிவிட்டு சகுந்தலாவை அழைத்துக்கொண்டு சுந்தரத்தின் அறைக்கு போன எம்ஜிஆர் ''முதலாளி நீங்க என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். சகுந்தலாவை அனுப்பி விடுங்கள்' பாவம் அவள் சிறு பெண்'' என்றார். உடனே சுந்தரம் சகுந்தலாவை திரும்பி பார்த்து 'போ' எனத் தலையசைத்தார். சகுந்தலா தன் அறைக்குப் போய்விட்டார். பிறகு எம்ஜிஆர் இயக்குனர் சுந்தரத்தை பார்த்து 'முதலாளி சகுந்தலாவுக்கு நாடகத்தில் நடித்து நல்ல பயிற்சி உண்டு. சினிமாவில் கேமராவை பார்த்து நடிப்பது அவளுக்கு புது அனுபவம். எனவே அவளுக்கு நான் என்னுடன் நாடகத்தில் நடித்த நடிகை என்ற உரிமையில் நான் அவளை நாடகத்தில் இயக்கி இருக்கிறேன் என்ற பழக்கத்தில் அவளுக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவ்வப்போது சொல்லிக் கொடுப்பேன். அவள் என் அண்ணனின் மகள் வயது உடையவள். எனவே எங்களைப் பற்றி நீங்கள் தவறாகக் கருதாதீர்கள். நீங்கள் என்னிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு நன்றி' என்றார். சுந்தரம் எம்ஜிஆரை பார்த்து தலையசைத்து 'போய் வா' என்று சொல்லிவிட்டார்.

விசாரணையின் போது எம்ஜிஆர் சகுந்தலாவையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தாமல் அந்த பெண்ணை அனுப்பி விடுங்கள் என்று கூறியது தான் பெண்ணின்பால் அவர் கொண்டுள்ள அன்பும் பாசமும் இரக்கமும் ஆகும். ஒரு இளம்பெண்ணைஇ அதுவும் திரையுலகுக்கு முதன்முதலாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணைஇ எடுத்த எடுப்பிலேயே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி சந்தேகப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துவது அவளை மேலும் வளரவிடாமல் தடுக்கும் முயற்சியாகும். மேலும் இது போன்ற விசாரணை பெண்களுக்கு மிகப்பெரிய அவமான உணர்ச்சியை ஏற்படுத்தி தீவிர மன உளைச்சலுக்கு கொண்டு போய் விட்டுவிடும். இதைத்தான் ஆங்கிலத்தில் character assassination  என்கின்றனர். எனவே ஒரு பெண்ணை அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் எம்ஜிஆர் சகுந்தலாவை அனுப்பி விடுங்கள் என்று சொல்லி அவரை அனுப்பிய பின்னர் சகுந்தலாவுக்காகப் பரிந்து பேசி உண்மை நிலவரம் என்ன என்பதை எடுத்துச் சொல்லி சுந்தரத்தை அமைதிப்படுத்தினார்.

எம்ஜிஆரின் வசியப் பேச்சுக்கு கட்டுப்படாதவர் எவரும் இருக்க இயலாது என்றாலும் ஜி சகுந்தலாவை விசாரணைக்கு உட்படுத்துவது அவர் மனம் ஒப்புக் கொள்ளாத செயலாக இருந்தது. தன்னால் தான் நடிப்புச் சொல்லிக் கொடுத்த காரணத்தால் அந்தப் பெண்ணுக்கு ஒரு பிரச்சனை வந்து விட்டதே என்று அவர் வருந்தி தன்னுடைய விளக்கத்தை முதலாளியிடம் தெரிவித்து விட்டார். அந்தப் பெண்ணை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி அனுப்பி வைத்துவிட்டார். இதுபோன்ற சூழ்நிலைகளில் எம்ஜிஆர் பெண்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் மிகவும் உயர்வாக மதித்தார்.

தெருவில் நின்ற தாயும் சேயும்

எம்ஜிஆர் ரசிகர்கள் பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் ஆய்வுக்காக பல பெண்களை திரையரங்குகளில் சந்தித்து பேசி அனுபவம் எனக்கு உண்டு. அப்போது ஒரு பெண் நன்றியோடும் கண்ணீரோடும் சொன்ன சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் எங்களிடம் இருபது வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ஒருநாள் அந்தப் பெண் தன் கணவரிடம் கோபித்து கொண்டு சென்னையில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றார். பேருந்தை விட்டு இறங்கி எப்படி விசாரித்து செல்வது என்று தெரியாமல் ஒரு டீக்கடை வாசலில் பிள்ளைகளுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது இரவு எட்டு எட்டரை மணி இருக்கும். அவர் சொன்ன விவரங்களைக் கொண்டு அந்த டீக்கடையில் நின்று இருந்த எவருக்கும் அவரது அண்ணனின் விலாசத்தை விவரமாக கண்டுபிடித்துச் சொல்ல தெரியவில்லை. மணி ஆகிவிட்டது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபடி இடுப்பில் ஒரு குழந்தையும் கையில் ஒரு குழந்தையும் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் மனதில் அச்சம் சூழ்ந்தது.

அச்சத்தோடு நிற்கும் பெண்ணின் அருகே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கி வந்து 'என்னம்மா இங்கு நிற்கிறீர்கள் என்ன விவரம்' என்று கேட்டார். அப்போது இவர் தன் அண்ணனின் முகவரியைச் சொல்லி 'என் அண்ணன் என் வீட்டுக்கு போக வேண்டும்' என்றார் இவர் சொன்ன முகவரி தெளிவாக இல்லை. சரி கொஞ்சம் நில்லுங்கள் நான் கேட்டு விட்டு வருகிறேன் என்று அந்த காருக்கு அருகில் சென்று கேட்டு விட்டு வந்தவர் 'அம்மா நீங்க உடனே உங்கள் ஊருக்கு போய் விடுங்கள்; இங்கு இருக்காதீர்கள். இந்த முகவரியை கண்டுபிடிப்பது கடினம். இது தெளிவாக இல்லை; உங்கள் போக்குவரத்துக்கு வேண்டிய பணத்தை எம்ஜிஆர் தருவார். பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார். உடனே அந்தப் பெண் திகைத்துப் போய் அந்த காரை பார்த்தார். காருக்குள் இருந்து எம்ஜிஆர் வணக்கம் சொன்னார். இந்தப் பெண்ணும் இரு கையையும் எடுத்து வணக்கம் சொல்லிவிட்டு வேகமாக அந்த கார் அருகில் சென்று எம்ஜிஆரிடம் அழுதார். தன் கணவனுடன் கோபித்துக் கொண்டு வந்துவிட்டதாக சொல்லவும் எம்ஜிஆர் 'உடனே நீங்கள் ஊருக்கு போங்கள்; நான் உங்கள் கணவரிடம் பேசி உங்களிடம் அன்பாக இருக்க சொல்கிறேன். நீங்கள் எது நடந்தாலும் வீட்டைவிட்டு வெளியே வந்தது தவறு; நீங்கள் இனி வரவே கூடாது. உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும்' என்று தெரிவித்துவிட்டு அருகில் இருந்த ஒருவரிடம் 'இவர்களை சாப்பிட வைத்து அனுப்பி விட்டு வா' என்று சொன்னார்.

எம்ஜிஆரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்த பெண் மதுரைக்குத் திரும்பிவிட்டார். இங்கு அவர் வருவதற்குள் அவர் கணவர் அவரை சமாதானமாக அழைத்து வருவதற்கு பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார். இரவோடு இரவாக எம்ஜிஆர் அங்குள்ள தன் ரசிகர் மன்ற ஆட்களிடம் பேசி அந்த மனிதரிடம் இனி மனைவியை அன்பாக வைத்துக்கொள்ள வேண்டும்; எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு அடித்து துரத்த கூடாது என்று அறிவுரை சொல்லும்படி சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் மூலமாக அறிவுரை வந்ததும் அந்த மனிதர் பயந்துபோய் பேருந்தில் வரும் தன் மனைவியைத் தேடி பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார் அந்தப் பெண் இந்த சம்பவத்தை எங்களிடம் சொல்லும் பொழுது 'கூடப் பிறந்தவன் கூட அப்படி செய்ய மாட்டன்மா. அன்றைக்கு மட்டும் அந்த புண்ணியவானை நான் பார்க்காமல் இருந்திருந்தால் நானும் என் பிள்ளைகளும் இந்நேரம் என்ன கதிக்கு ஆளாகி இருப்போமோ தெரியவில்லை. மெட்ராசை பற்றி கேள்விப்படும் ஒவ்வொரு விஷயமும் பயமாகத்தான் இருக்கிறது'' என்று கண்ணீரோடு விவரித்தார்.

சாலையில் நிற்கும் ஒரு பெண்ணுக்கு அவள் முகத்தை பார்த்து கவனித்து இந்தப் பெண் வெளியூர்காரர் போலத் தெரிகிறார்இ ஏதோ பிரச்சனையில் இருக்கிறார்இ இவரை இப்படியே விட்டு விட்டு போனால் யாரேனும் இவரை தவறான வழிக்கு இட்டுச் சென்று விடுவார்கள். அதற்குப் பின்பு இவரை காப்பாற்றிக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் உடனே வண்டியை நிறுத்திவிட்டு விசாரித்து அந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னுடைய ரசிகர் மன்ற ஆட்களிடம் பேசி அந்த பெண்ணின் கணவருக்கு அறிவுரை சொல்ல செய்து அந்த குடும்பத்தை சேர்த்து வைத்தார். இன்று வரை அந்த குடும்பத்தினர் எம்ஜிஆரை தன் குல தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர். இந்த கதையை கேட்ட எங்களுடன் படம் பார்க்க வந்திருந்த மற்ற பெண்களும் எம்ஜிஆரை நினைத்து கை எடுத்து தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டனர்.

தமிழகத்தின் தாளாளர் எம் ஜி ஆர்.

முன்பின் தெரியாத ஒரு பெண்ணை காப்பாற்றியது ஒரு சிறு சம்பவமாக தோன்றினாலும் காரில் போகும்போது கூட சாலைகளில் சாலையோரம் நிற்பவர்களை முகங்களை கண்டு அவர்களின் முகக் குறிப்பறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்யும் அருங்குணம் எம்ஜிஆருக்கு இருந்ததை அறிகின்றோம்.இந்த அரும்பண்பை தமிழ்ப் பெரியோர் 'தண்டாமல் ஈவது தாளாண்மை' என்றனர். ஒருவர் கேட்காமலே அவருக்கு வேண்டியவற்றைச் செய்து தருவது தாளாண்மை எனப்படும். அந்த வகையில் எம் ஜி ஆர் தமிழகத்தின் தாளாளர். இதுபோல படப்பிடிப்பு தளங்களிலும் முகம் வாடி இருக்கும் இருந்த புகைப்படகாரர் சங்கர் ராவ்இ டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் போன்றோர் தங்களை எம்ஜிஆர் அழைத்து தங்கள் முகவாட்டத்திற்கான காரணத்தை கேட்டு உடனடியாக அதை போக்கிவிட்டார் என்று பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். மனவேதனையோடு இருக்கும் ஒருவரின் முகக் குறிப்பு அறிந்து உதவுகின்ற நற்குணம் எம்ஜிஆரின் தனிப்பண்பு ஆகும்.

கோழி குழம்பு கொண்டு வந்த பாட்டி

அண்ணா திமுக ஆரம்பித்த காலத்தில் எம்ஜிஆருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த திமுக தொண்டர்களும் திமுகவின் ஏவல் துறையாகிவிட்ட காவல்துறையும் முனைப்பாக இருந்தனர். அப்போது எம்ஜிஆருக்கு சில ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்ததால் அவர் காரிலிருந்து இறங்கி வேறு மார்க்கத்தில் பயணப்பட்டார். இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் புத்தனாம்பட்டி என்ற கிராமத்தில் தென்னந்தோப்புக்குள் போய் போர்வையை விரித்து அவரும் அவருடன் வந்தவர்களும் உறங்கிவிட்டனர். அப்போது எம்ஜிஆரை யாரோ எழுப்புவது போல் தோன்றியது. கண்விழித்துப் பார்த்தால் ஒரு ஏழை பாட்டி இரண்டு தூக்குவாளியை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். 'எந்திரிப்பா நீங்க தங்கி இருக்கிறதா என் பேரன் சொன்னான். அதனால உனக்கு சோறும் வெடக்கோழி அடிச்சு குழம்பு வைத்துக் கொண்டு வந்து இருக்கேன்'' என்றார். அந்த பாட்டி நாம் இங்கு தங்கி இருப்பது தெரிந்திருக்கிறதென்றால் ஊர் மக்களுக்கு தெரிந்து இருக்கும். அப்படி என்றால் ஆபத்து தொடர்ந்து வருமே என்று யோசித்த எம்ஜிஆர் ''சரி பாட்டி நான் சாப்டுட்டு உங்களுக்கு பாத்திரத்தைக் கொண்டு வந்து தருகிறேன்'' என்று சொல்லி விட்டு உடனிருந்தவர்களை எழுப்பி வண்டியில் புறப்பட்டு விட்டார்.

இரவில் பசியோடு தன் மகன் உறங்குவான் என்ற தாயுள்ளம் கொண்ட அந்த பாட்டிஇ உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையை எழுப்பி உண்ண வைப்பது போல தூங்கிக் கொண்டிருக்கும் எம்ஜிஆருக்கு தன் வீட்டிலிருந்த கோழி அடித்து குழம்பு வைத்து கொண்டு கொடுத்தார். இவரது அன்புக்கு அடிபணிந்த எம்ஜிஆர் திரும்பி வரும்போது அந்த இடத்தில் இறங்கி உள்ளே நடந்து போகிறார். தோப்பை கடந்ததும் ஒரு சிறு குடிசை இருந்தது. வெளியே திண்ணையில் பாட்டி ஒரு பழைய சேலையை போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் அவர் அருகில் போய் ஒரு விலையுயர்ந்த சால்வையை அவருக்கு போர்த்தி விட்டுஇ அவர் தலைமாட்டில் ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு அமைதியாக அவர் உறங்கட்டும் என்று திரும்பி வந்து விட்டார்.எம்ஜிஆரிடம் வயதான பெண்கள் தாயன்பு செலுத்துவதும் அவர் அந்தத் தாய்மாரிடம் மகனைப் போல பாசம் காட்டுவதும் சகஜமான விஷயமாக அந்நாளில் இருந்திருக்கிறது. இதற்கு ஏராளமான சான்றுகள் இருந்தாலும் இந்த வெடக்கோழி குழம்பு சம்பவம் பலராலும் பல நூல்களிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நாட்குறிப்போடு காணாமல் போன சான்றிதழ்கள்

முதல்முறை எம்ஜிஆர் முதலமைச்சரான போது திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனக்கு வேலை வேண்டும் என்று மனு எழுதி கொண்டு வந்து எம்ஜிஆரிடம் கொடுத்தார். எம்ஜிஆர் கைநீட்டி கேட்டபோது இவர் டைரிக்குள் இருந்த மனுவை எடுத்துக் கொடுக்க டைரியை நீட்டினார் எம்ஜிஆரும் டைரியோடு வாங்கிக்கொண்டார். ஒருவாரம் கழித்த பிறகுதான் அந்தப் பெண்ணுக்கு டைரியோடு தான் வைத்திருந்த சான்றிதழ்களும் சேர்ந்து போய்விட்டன என்பது தெரிந்தது. திரும்பவும் அவர் சென்னைக்கு வந்து எம்ஜிஆரை பார்த்து தனது சான்றிதழ்களையும் டைரியையும் திரும்பப் பெறுவதற்குள் எம்ஜிஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் அந்த பெண் எம்ஜிஆரை வந்து சந்தித்தார். அப்போது எம்ஜிஆர் 'நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன்; வந்தவுடன் உனக்கு வேலை கிடைக்கும்; இப்போது உன்னுடைய சான்றிதழை பெற்றுக் கொண்டு ஊருக்கு போ' என்று சொல்லி விட்டார்.

எம் ஜி ஆரிடம் முன்பு பணியாற்றிய அதிகாரிகளிடம் சொல்லி அந்த மனுக்கள் வாங்கி தொகுக்கப்பட்டு வைத்த நாளை குறிப்பிட்டு அந்த நாளில் வாங்கப்பட்ட மனுக்கள் இருக்கும் இடத்தை தேடிப்பிடித்து அதில் இருந்து இந்த பெண்ணின் டைரியையும் அதற்குள் இருந்த சான்றிதழ்களையும் அந்தப் பெண்ணிடம் திரும்ப ஒப்படைக்கும்படி எம்ஜிஆர் தெரிவித்தார். அந்தப் பெண்ணும் அந்த சான்றிதழ்களை வாங்கி கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார். மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆகிறார். இப்போது அந்தப் பெண் திரும்பவும் எம்ஜிஆரை பார்க்க கோட்டைக்கு வந்தார். அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட எம்ஜிஆர் சிரித்தபடியே அருகில் அழைத்து 'உனக்கு வேலை தானே வேண்டும்இ கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொள் என்று சொல்லி அவருக்கு ஒரு வேலையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

நாடோடி மன்னன் படத்தில் என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு; ஆனால் நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை என்று ஒரு வசனம் பேசுவார். அது வெறும் திரைப்பட வசனம் மட்டுமல்ல; அவருடைய சொந்த வாழ்க்கையின் வாசகமும் தத்துவமூமாகும். இந்தப் பெண் எம்ஜிஆரை நம்பினார்; அவருக்கு வேலை கிடைத்தது. எம் ஜி ஆரை நம்பி கெட்டவர் எவருமில்லை என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாகும்.



                                                                                                          

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்