திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 14)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
“கொடி பூத்துக்கொண்டே இருக்கிறது.
மரம் பழுத்துக்கொண்டே இருக்கிறது.
நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!”
என்று தன் எழுத்தாற்றலின் ஆளுமையைக் கவிதை வரிகளில் வெளிப்படுத்தினார்
கவியரசர். “என்றுமுள தென்தமிழ்”என்ற ஆன்றோர் வாக்கினை மெய்பிக்க வந்த
இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்.அவர் தன்னை ஓர் இலக்கியவாதியாகச்
சொல்லிக் கொள்வதில் தான் பெருமை அடைந்தார்.
வண்ணம் வண்ணம்:
கம்பனுடைய ஒரு செய்யுளை மேற்கோளாகக் கொண்டு கவியரசர் படைத்த ஒரு பாடல்
“பாசம்”என்ற படத்தில் இடம் பெற்றது. இப் பாடலைக் கேட்டதும் தான் என்
போன்ற சிலருக்கு, ஓடிச்சென்று தேடிச்சென்று கம்பனின் வரிகளைப் படிக்க
நேரிட்டது.
இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த வுலகுக்கெல்லாம்
உய்வண்ண மன்றி வேறோர் துயர் வண்ண முறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே யுன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்!
இந்த இலக்கிய வரிகளுக்கு இணையாக வண்ணம் வண்ணம் என்று இத் திரைப் பாடலை
எழுதினார்.
ஆண்:
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்....
பெண்:
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கண்டு
வாடுகிறேன்.....
நல்லதொரு குடும்பம்:
‘காலமெனும் ஆழியிலும் காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு”
என்பார் நம் கவிஞர். கம்பனில் நல்ல தோய்வு இருந்ததனால் தான்
நால்வராக இருந்த உடன்பிறப்புக்களை எழுவராக மாற்றியதோடு மனிதநேய எல்லைகளை
விரிவு படுத்தி, இறவாது இன்றும் நிலைத்திருக்கும் இராமாயண மாந்தர்கள்
கவிஞரைப் பெரிதும் ஈர்த்துள் ளனர். அதனால் நானும் உன்னோடு சகோதரனாக
உறவாக வேண்டும் என்ற விழைவை வைக்கின்றார்.
பனை போலுயர்த்திப் பால்போ லிருத்திப்
பரிவா யணைக்க வரலாமா?
படகோடு கங்கை குகனாக வேண்டும்
பணிவான ஆசை ரகுராமா !
குடும்ப உறவுகள் இணக்கமுற இருந்தால்தான் சமுதாயம் சிறக்குமெனக் கருதிய
கவியரசர் அவ்வுறவுகள் எப்படியிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார்.
அயர்வற்ற உழைப்பும் அரசியல் நெறியறிவும் அன்பைப் பேணும் மனமும் கொண்ட
தசரதனைப் போன்று தந்தை இருக்கவேண்டும்; கலை,ஞானம்,கல்வி,புகழ்,
அறம்,முதலியவற்றை ஒருங்கே கற்றுத் தேர்ந்ததோடு, தந்தை சொல் தவறாத
விவேகத்தையும் கொண்ட இராமனைப் போன்று மகன் இருக்க வேண்டும் என்கிறார்.
இவற்றை மனதில் கொண்டுதான், நம்ம வீட்டு லட்சுமி
ங்கிற படத்துல இப்படியொரு பாடலை எழுதினார் போலும்!
நல்ல மனைவி நல்ல பிள்ள
நல்ல குடும்பம் தெய்வீகம்
தெய்வீகம் அது தெய்வீகம்!
தன்னை இழந்து கடமை மறந்து
தவறும் இல்லம் அலங்கோலம்!
கள்ளிப்பூவில் முல்லை மணத்தை
காணத் திரியும் ஒரு பிள்ளை!
கானல் நீரில் தாகம் தீர்க்க
ஓடித்திரியும் ஒரு பிள்ளை !
உள்ள வரையில் ஆடிப் பார்த்து
உறங்கத் துடிக்கும் ஒரு பிள்ளை!
உறவை மறந்து உரிமை மறந்து
பிள்ளை போல ஒரு அன்னை !
கம்பன் காட்டிய வழியில் குடும்பம் அமையாமல், வம்பர்களாகத் திரியும் ஒரு
குடும்பத்தை நம் கண்முன்னே காட்டியுள்ளார் கண்ணதாசன்.
தேன்... தேன்!
கோசல நாட்டு நிலவளம் குறித்து கம்பனது பாடலொன்று:
ஆலைவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலைவீழ் கனியின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும்
வரம்பிகழ்ந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு
மீனெல்லாம் களிக்கு மாதோ !
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|