களவு ஒழுக்கத்தில் திருமணம் முடிவதற்குத் துணைநிற்கும் தோழி

பேராசிரியர் இரா.மோகன்


ங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பதினெட்டு நூல்களைத் தன்னகத்தே கொண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை கலிப்பாக்களால் ஆன அகப்பொருள் நூல். இதில் இடம்பெற்றுள்ள குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களைப் பாடியவர் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளர்’ என்றும், ‘பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்’ என்றும், ‘செறுத்த செய்யுள்செய் செந்நா உடைய கபிலன்’ என்றும் சான்றோர்களால் சிறப்பிக்கப் பெற்ற கபிலர் ஆவார்.

குறிஞ்சிக் கலியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல். ‘இரவுக் குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி அவனை வரைவு கடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது’ என்பது இதன் துறைக் குறிப்பு. வரைவு கடாவல் – திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல். வரைவு மலிதல் – திருமணச் செய்தியால் மனம் மகிழ்தல்.

இரவுக் குறியில் வந்து தலைவியைச் சந்தித்துச் செல்வதையே வாடிக்கையாகக் கொண்ட தலைவனுக்குத் ‘தலைவியை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற கருத்தினை உணர்த்த வேண்டும், அதே நேரத்தில் அவன் மனம் புண்படாத வண்ணமும், ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நயத்தக்க நாகரிகமான முறையில் அதனைப் புலப்படுத்த வேண்டும். இதற்குக் கூரிய மதி நலமும் செவ்விய சொல்வன்மையும் வேண்டும். இவ்விரு திறன்களும் ஒருங்கே கைவரப் பெற்றவனாகத் தோழி விளங்குகின்றாள். இதமாகவும் இங்கிதமாகவும் தலைவியின் நிலையை எடுத்துக்கூறி, தலைவனின் மனத்தினை மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெற்று விடுகிறாள் தோழி. அவளது கருத்தினை ஏற்றுக் கொண்ட தலைவன், தலைவியை மணம் பேச வருகின்றான். இம் மகிழ்வான செய்தியைத் தோழிக்குக் கூறுகிறாள் தோழி:

“இமயமலையை வில்லாக வளைத்த – கங்கையைத் தலையில் அணிந்த சிவபெருமான், உமையம்மையோடு கயிலை மலையில் வீற்றிருக்க, அரக்கர் வேந்தன் ஆகிய பத்துத் தலைகளை உடைய இராவணன், தனது பெரிய கைகளை அம் மலையின் அடியில் நுழைத்துத் தூக்க முயன்று, அதைப் பெயர்க்கவோ கீழ் நுழைத்த தன் கைகளை எடுக்கவோ முடியாமல் வருந்தி அலறியது போல், முழுவதும் மலர்ந்து ஒரு புலியைப் போலத் தோன்றிய வேங்கை மரத்தைப் புலி என்று எண்ணி, அதன் அடிப்புறத்தில் தந்தத்தால் குத்திய ஒரு மதயானை, அதை உருவிக் கொள்ள முடியாமல் வேதனைப் பட்டு, மலையின் குகை எல்லாம் எதிரொலிக்குமாறு பிளிறும் மலை நாடனே! யான் கூறுவனவற்றைக் கேள்:

உன் அருள் பெறாமல் நீர் இன்றிப் பயிர் வாடுவது போலப் பொலிவு இழந்திருந்த தலைவி, நீ இரவில் வழியின் அருமைப்பாட்டைப் பொருட்-படுத்தாமல், அங்குத் திரியும் பாம்புக்கும் அஞ்சாமல் வந்து தன்னைக் கண்டு சென்றமையால், மறுநாள் விடியற்காலையில் மழையினைப் பெற்ற பயிர் போல் அழகு பெறுவாள். அந்த அழகு அவளை விட்டு நீங்காமல் காக்கும் வழி இருக்குமானால் அதைக் கூறுவாயாக!

உன்னைக் காண முடியாததால் செல்வம் இல்லாத ஓர் இளைஞனைப் போல அழகு இழந்திருந்த தலைவி, நீ இருள் செறிந்த இரவு என்று எண்ணி அஞ்சாமல் வந்து தன்னைக் கண்டு சென்றமையால், மறுநாள் விடியற் காலையில் கருணை உள்ளம் கொண்டவன் துன்புற்றோர்க்குத் தன் செல்வத்தை ஈவதால் அச்செல்வம் அழகு பெறுவது போல் அழகு பெறுவாள். அந்த அழகினைப் புறங்கூறும் மாக்களிடம் இருந்து காப்பதற்கு உரிய ஒரு வழி இருக்குமானால் அதனைத் தெரிவிப்பாயாக!.

உன்னைக் காண முடியாமையால் அறநெறியைப் பின்பற்றி வாழாதவன் முதுமையில் மறுமைச் செல்வத்தையும் இழந்து சீரழிவது போல் பொலிவு இழந்திருந்த தலைவி, வீரத்தை நன்னெறியில் பயன்படுத்தாத வழிப்பறிக் கள்வர் திரியும் இடம் என்று கருதாமல், நீ மலைவழியில் வந்து தன்னைக் கண்டு சென்றமையால், மறுநாள் வைகறையில் செயல் திறமை உடைய ஒருவனிடம் செல்வம் நிரம்புவது போல் மிகவும் பொலிவுற்று விளங்குகின்றாள். அந்த அழகைப் பற்றி ஊரார் அலர் கூறாமல் தடுப்பதற்கு வழி இருக்குமானால் அதனைக் கூறுவாயாக! என்று அவன் பிரிவால் நீ அடையும் மிகுதியான துன்பத்தை யான் அவனிடம் கூறினேன்.

தோழி! யான் கூறியதைக் கேட்ட நல்ல மலை நாடன் ஆகிய தலைவன், வேங்கை மரங்கள் மலர்கின்ற இளவேனிற் காலத்தில் உன்னை மணந்து கொள்வதற்காக வருகின்றான். ஆகவே, இனி உன் வருத்தம் ஒழிவதாக!”

தோழியின் இக்கூற்றினைத் தன்னகத்தே கொண்ட ‘கற்றறிந்தார் ஏத்தும்’ அக் குறிஞ்சிக் கலிப்பாடல் வருமாறு:

தரவு

“ இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக,
ஐஇரு தலையின் அரக்கர் கோமான்,
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து, அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,
உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண்டு அதன்முதல் குத்திய மதயானை,
நீடுஇரு விடரகம் சிலம்பக் கூஉய்த்தன்
கோடுபுய்க் கல்லாது உழக்கும் நாட! கேள்.

தாழிசை

ஆரிடை என்னாய் நீ, அரவுஅஞ்சாய் வந்தக்கால்,
நீர்அற்ற புலமேபோல் புல்லென்றாள், வைகறை
கார்பெற்ற புலமேபோல் கவின்பெறும்; அக்கவின்
தீராமல் காப்பதோர் திறன்உண்டேல், உரைத்தைக் காண்:

இருளிடை என்னாய்நீ, இரவுஅஞ்சாய் வந்தக்கால்,
பொருள்இல்லான் இளமைபோல் புல்லென்றாள், வைகறை
அருள்வல்லான் ஆக்கம்போல் அணிபெறும்; அவ்அணி
தெருளாமல் காப்பதோர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்;
மறம்திருந்தார் என்னாய்நீ, மலையிடை வந்தக்கால்,
அறஞ்சாரான் மூப்பேபோல் அழிதக்காள், வைகறை
திறம்சேர்ந்தான் ஆக்கம்போல் திருத்தகும்; அத்திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருள் உண்டேல் உரைத்தைக்காண்!
எனவாங்கு,

சுரிதகம்

நின்உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே தோழி: நன்மலை நாடன்,
வேங்கை விரிவிடம் நோக்கி,
வீங்குஇறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே”.

1. இராவணன், சிவபெருமான் உமையம்மையோடு வீற்றிருக்கும் கயிலை மலையைத் தனது கைகளால் பெயர்க்க முயன்று முடியாமல் வருந்திய புராண மரபுச் செய்தி இப் பாடலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2. ‘நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை கார்பெற்ற புலமே போல் கவின்பெறும்’; ‘பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்’; ‘அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை திறன் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்’ என இப் பாடலில் கபிலர் பெருமான் இரண்டு இரண்டாகக் கையாண்டிருக்கும் ஆறு உவமைகள் அவரது புலமைத் திறத்திற்குக் கட்டியம் கூறுவன ஆகும். ‘நீர் அற்ற புலம்’, ‘கார் பெற்ற புலம்’. ‘பொருள் இல்லான் இளமை’, ‘அருள் வல்லான் ஆக்கம்’, ‘அறம் சாரான் மூப்பு’, ‘திறன் சேர்ந்தான் ஆக்கம்’ என விழுமிய நோக்கிலும் அழகியல் உணர்விலும் இவ்வுவமைகள் சிறந்து விளங்குவதும் நோக்கத்தக்கது.

3. ‘வேங்கை மரம் பூக்கும் இளவேனிற் பருவத்தில் குறிஞ்சி நில மக்கள் திருமணம் நடத்தினர்’ என்பது இப் பாடலால் பெறப்படும் சிறப்புக் குறிப்பு ஆகும்.

4. “‘கொடிய புலியைப் போல வேங்கை மலர்ந்தது’ என்பது தோழி தலைவனை வரைவு கடாவிய செயல், அவன் தலைவியிடம் பெறும் களவின்பத்தை மாற்றுவதால் கொடியது போல் தோன்றினாலும், இல்லறம் நடத்தி வாழும் கற்பு மணத்தைத் தருவதால் இனியது என்ற குறிப்புப் பொருள் தருகின்றது. ‘வேங்கையைப் பகையாகக் கருதிய யானை, அதனொடு பொருதது’ என்பது தலைவன் தோழி வரைவு கடாவிக் கூறியதை ஒப்புக்கொள்ளாமல், இரவு நேரத்தில் தலைவியைக் காண வருதலைக் குறிப்பாக உணர்த்துகின்றது. ‘குகைகளில் எதிரொலி உண்டாகுமாறு யானை பிளிறிற்று’ என்பது, அவ்வாறு அவன் வரும் செயலுக்குத் தடையுண்டாகி, வருந்திக் கூறியதைக் குறிப்பால் உணர்த்துகின்றது யானை தந்தத்தை உருவிக் கொள்ள முடியாமல் வருந்துவது, தோழி வரைவு கடாவியதைத் தனக்கு மாறாகக் கருதிய நெஞ்சத்தை, அதன் எண்ணத்தை மாற்ற முடியாமல் தலைவன் வருந்துவதைக் குறிப்பாக உணர்த்துகின்றது” (கலித்தொகை: மக்கள் பதிப்பு, ப.130) எனப் பேராசிரியர் சுப.அண்ணாமலை இப் பாடலில் காணும் குறிப்புப் பொருள்கள் ஈண்டு மனங்கொளத்தக்கன ஆகும்.

5. “களவியலை நெடிது இயக்குபவள் தோழி. களவு வரைவாக முடிதற்கு அவள் துணை வேண்டும். ஆதலின் கபிலர் பாட்டுக்களில் தோழி கொள்ளும் பங்கு பெரிது. 124 செய்யுட்கள் அவள் கூற்றாக உள்ளன” (தமிழ்க் காதல், பக்.381-382) என்னும் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கருத்தும் ஈண்டு நினைவுகூரத் தக்கது ஆகும்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்