"தமிழர் பண்பாட்டுமரபின் இயங்குநிலை":  மருவும் பழமைகள்

கலாநிதி சு.சிவநாயகமூர்த்தி
 

ன்று தமிழர்களின் பழமைகள் யாவும் மருவியே காணப் படுகின்றன என்றால் மிகையாகாது. இன்றைய தமிழர்களின் மொழி, சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு, கல்வி, தொழில்கள், பிரயாணம் என்பன எல்லாமே தனித்துப் பழமையானவையாக மட்டுமேகாணப்படாது பல வேற்று நாட்டு மொழி,சமயம் கலை கலாச்சாரம்,பண்பாடுகள் ,கல்வி,தொழில் நுட்பம்எனபவற்றுடன் பெரிய அளவிலோ .சிறிய அளவிலோ மருவியே காணப் படுகின்றன.மருவுதல் என்றால் கலத்தல் என்பது பொருளாகும். இவற்றுக்குக் காரணம் அந்நியர் ஆட்சிகள்,மக்களின் இடப்பெயர்வு, உள்நாட்டு யுத்தம், விஞ்ஞானம், தொழில் நுட்ப வளர்ச்சி என்பவற்றைக் கூறலாம்.

1. முதலில் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் எட்டுக் கோடி தமிழர்கள்; வாழுகின்ற தமிழகமாகவிருந்தாலென்ன, நம் தாயகமான இலங்கையில் வாழும் தமிழர்களாக விருந்தாலென்ன அவர்களின் நாளாந்த வாழ்க்கையில் ஓரளவேனும் வேற்றுநாட்டு மக்களின் மொழியான ஆங்கில மொழிச் சொற்களையோ அன்றேல் வேற்றுமொழிகளையோ,அன்றேல் வேற்று நாட்டு மொழிச் சொற்கள் சிலவற்றையேனும் கலந்தே பேசி வருவதையும்; நாம் காண்கிறோம். தொழில்நுட்பச் சொற்களையோ அன்றேல் விஞ்ஞானச் சொற்களையோ பேச்சு வழக்கில் பாவித்தே வருகிறார்கள். இவற்று க்கான ஏற்ற தமிழ் மொழிச் சொற்களில்லாமையாலும், உரிய தமிழ்ச் சொற்களை அறியாமையாலும் அவற்றைக் கலந்தே பேசவேண்டியும் உள்ளது. அத்துடன்சரியான தமிழ்ச் சொற்களிருந்தும் முன்னையகாலங்களில் பாவித்து வரப்பட்ட தனித் தமிழ்ச் சொற்களைச் சிலபெற்றோர், இளைஞர்கள், யுவதிகள், அவற்றைத்தமது பேச்சு வழக்கில் தவிர்த்து உறவு முறைகளுக்குக்கூட ஆங்கிலச் சொற்களையே தமிழ் மொழியுடன் கலந்து பேசுகின்றனர். தமிழ் மக்களுடன் கதைக்கும் பொழுது கூட உதாரணத்திற்கு வணக்கம் என்று சொல்வதற்குப் பதிலாக 'காய்'; என்றும், தாய் தந்தையரை மம்மி,டடி அல்லது எனது பாதர்,மதர் என்றும்,மாமா,மாமியரை அங்கிள்,ஆன்ற், அன்ரிஎன்றும் ,மச்சான் மச்சாளை கசின் என்றும் உறவு முறைகளை ஆங்கிலத்திலேலேயே கூறுகிறார்கள்.அதுமட்டுமன்றி பொதுவாகப் பெரும்பாலானோர் இன்று நன்றி என்னும் தமிழ்ச் சொல் இருந்த போதும் 'தாங்யு' என்னும் ஆங்கிலச் சொல்லையே தங்கள் நன்றி கூறலுக்காகப் பாவிப்பதையும் காணலாம்.

பழைய காலத்திலே குழந்தைகள் பிறந்தால் பஞ்சாங்கம் பார்த்து அதில் பிள்ளைகளின் பெயர் முதலெழுத்து என்ன வென்று கண்டு அதற்கேற்ப அழகான தமிழ்ப் பெயர்களையோ சமயகுரவர்கள் கடவுள்களின் பெயர்களையோ தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இன்றோ சில பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயரின் பெயர்களையும்,எந்தக் கருத்துமற்ற லூசான், டாசான் டோசான்,டோசி,மேசி போன்ற பெயர்களையும் சூட்டுகிறார்கள்.தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகின்ற தமிழ்நாட்டிலேயே அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கையிலும் சரி,வர்த்தகம் சினிமாக்களிலும் சரி ஆங்கில மொழிச் சொற்கள் கலப்பில்லாத தமிழைக் காணுவதே அரிதாகக் காணப்படுகிறது. இவ்வாறே புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தமிழர்கள் தமது பேச்சிலே அந்தந்த நாட்டின் தேசீய மொழிச் சொற்கள் சிலவற்றையேனும் கலந்து பேசுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.தமிழ் மொழியின்பேச்சு வழக்கிலுள்ள உச்சரிப்புக்களிலும் பல வேறுபாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் பேச்சுக்களிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ,விளம்பரங்களிலும் ஆங்கில மொழிச் சொற்களின் கலப்புக்களையும் காணக் கூடியதாகவுள்ளது. தமிழகத்திலே வாழும் சில தமிழ் அறிஞர்கள் ,கலைஞர்கள் யாவருமே தமது பேச்சிலும் சரி,தமது படைப்புக்களிலும் சரி ஒரு சில ஆங்கிலச் சொற்களையாவது பயன் படுத்தப் படாமலிருப்பது அரிதாகவேயுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆங்கிலச் சொற்களையும் கலந்தே பேசிவருகிறார்கள். இன்று சிறுவர்களுக்கு ஏடு துவக்கும் பொழுது கூட தமிழ் மொழியுடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டுமொழிகளின் அகர வரிசைகளையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தமிழ்மொழி இன்று மருவியே காணப் படுகிறதென்பதைக் காட்டுகின்றன.

2. அடுத்து தமிழர்களின் பழமையான சைவ சமயத்தை எடுத்துக் கொண்டால் இன்று சைவ சமயமும் அதன் வழிபாடுகளும் மருவிவருவதையே காண்கிறோம். எமது சைவசமயத்தின் பழமையான வழிபடு தெய்வங்களாகச் சிவன்,பார்வதி,விநாயகர் முருகன் போன்ற தெய்வங்களேயிருந்து வந்திருக்கின்றன. பின்னர் அந்நியர் ஆட்சிக் காலங்களில் தமிழர் மத்தியிலும் கத்தோலிக்க ,கிறீஸ்தவ வழிபாடுகள் தோன்றின.இதற்குக் காரணம் அவர்களால் மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் கட்டாயமாகவும் மக்களுக்குச் சில சலுகைகளை வழங்கியும் தங்கள் மதங்களான கத்தோலிக்க ,கிறீஸ்தவ மதங்களுக்கு மாற்றியும் மாறச் செய்தும் வந்தனர். ,இலங்கை போன்ற நாடுகள் சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழ் மக்களிற் சிலர் கல்விக்காகவும்,.சிலர் உத்தியோகங்களுக்காகவும், சிலர் வாழ்வாதாரச் சலுகைகளுக்காகவும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களுக்கு மாறியுள்ளனர். இவற்றின் காரணமாக இலங்கையிலும் இந்தியாவிலும்; ஒரு சில தொகையான தமிழ்மக்கள் கத்தோலிக்கர்களாகவும் கிறீஸ்தவர்களாகவும் மாறினர.; இதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கத்தோலிக்க கிறீஸ்தவ தெய்வ வழிபாடுகள் தோன்றின.இவை மட்டுமன்றிப் பிற்காலங்களில், சைவ சமயக் கடவுள்களுடன் விஸ்ணு, அனுமார் போன்ற தெய்வங்களுக்கான வழிபாடுகளும் சைவசமயத்துடன் மருவியேகாணப்படுகிறது. இவை மட்டுமன்றி இன்று சாயிபாபா, சீரடி பாவா, அம்மா பகவான், மருவத்தூர் அம்மா போன்றோரின் வழிபாடுகளும், யோகர்சுவாமி போன்ற ஞானிகளின் வழிபாடுகளும் சைவ சமயத்துடன் மருவியே காணப்படுகின்றன.இவைமட்டுமன்றி ஆலய வழிபாட்டு முறைகளிலும் சைவமக்கள் எல்லோரும் ஒரே விதமான சம்பிரதாயங்களைப் பின்பற்றி வருவதிலும் பலமாறுதல்கள் காணப் படுகின்றன. இவை தாயகத்தில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாகவும், இடப்பெயர்வுகள்,புலப் பெயர்வுகள் காரணமாகவும் வழிபாட்டுமுறைகளிலும் மருவுதல் காணப்படுகிறது. ஆலய வழிபாடுகளிலும் எல்லா மக்களும் ஓரே விதமான பழைய சம்பிரதாயங்களைக் கருத்தில் கொள்ளாது தமக்கு வசதியான முறைகளிலும் வழிபட்டு வருகின்றனர். சிலர் ஆலயங்களுக்கே செல்லாது வீடுகளிலிருந்து கொண்டே வழிபாடுகளைச் செய்து கொண்டும் வருகின்றனர்.முற்;காலங்களிலே ஆலயங்களுக்குச் செல்லும் மக்கள் அங்கே பக்திபூர்வமாகவும் ஆலயங்களுக்கான ஒழுங்கு விதிகளைக்கடைப்பிடித்தும் வழிபாடுகளைச் செய்தனர் .இன்றோ ஆலயங்களுக்குச் செல்லும் மக்கள் எல்லோரும் பழைய சம்பிரதாயங்களுக்கேற்ப பக்தியுடனும், ஒழுங்குமுறைகளுக்கேற்பவும் வழிபடுவதில் கருத்துடையவர்களாக இருப்பதாகக் காணப் படுவதில்லை.வழிபாட்டுமுறைகளிலும் சில வடநாட்டு வழிபாட்டு முறைகளும சிலரிடம் காணப்படு கிறது.தெய்வங்களுக்கு அருச்சினை செய்யும் முறைகளிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதையும் காணலாம்.மறு;காலங்களில் அருச்சினை செய்வதற்குச் செல்லும் மக்கள் ஒரு அழகான தட்டிலே பழம்,பாக்கு வெற்றிலை ,தேங்காய் என்பவற்றை வைத்து அருச்சினைக்குரிய தர்ச்சனையையும் வைத்து குருக்களிடம் கொடுத்து அர்சனை செய்விப்பார்கள். இன்றோ அந்த நிலை பெரும்பாலும் மாறி கரியாலயத்திலே காசைச் செலுத்திப் பற்றுச்சீட்டை வாங்கி தமது பெயர் நட்சத்திரங்களை எழுதி ஐயரிடம் கொடுத்தால் போதும் அவர் அருச்சனை செய்து விடுவார்.

ஆலயங்கள் தாயகத்திலும் சரி தமிழகத்திலும் சரி , புலம் பெயர்ந்த நாடுகளிலும்; சரி தமிழ்மக்களால் அதிகமாக அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் எல்லாமக்களும் ஆலயவழிபாட்டை முக்கியமாகக் கருதி ஆலயங்களுக்குச் செல்கிறார்களென்றும் சொல்ல முடியாமலேயிருக்கின்றது. எல்லாநாடுகளிலும் வாழும் சைவமக்களில்பெரும்பான்மையோர்ஆலயங்களுக்குச் சென்றாலும் அவர்களிலும் சிலர் ஆலயங்களில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகவும், சுற்றுலாக்களுக்காகவுமே செல்கின்றனர்.புலம் பெயர்ந்த நாடுகளிலும் மக்கள் திருவிழாக் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் ஆலயங்களுக்கு அதிகமாகச் செல்வதில்லை .அதுமட்டுமன்றி அந்தந்த நாடுகளிலுள்ள சைவமக்களின் தொகைகளில் ஒருபிரிவினரே எல்லா ஆலயங்களுக்கும் செல்வதையும் காணலாம். இதற்குக் காரணம் சில மக்களிடம் குறைந்துள்ள சமய நம்பிகைகளும்,அந்தந்த நாடுகளில் காணப்படும் கால நிலைகள் வேலைப்பழுக்கள்,ஆலயங்களுக்குச் செல்வதற்கான ஆர்வமின்மை என்பனவற்றைக் கூறலாம்.அத்துடன் இளைய சமுதாயத்தினரின் ஆலயதரிசன விருப்பமற்ற போக்கும் ஒரு காரணமாகக் காணப்படுகிறது. சிலர் ஆலயங்களுக்குச் சென்றாலும் பக்தியான மனோ பாவங்களையோ,ஒழுங்கு முறைகளையோ கடைப் பிடிக்காது ஏனோ தானோ என்ற மனோ பாவத்துடன் வழிபடுவதையும் காணலாம். ஆலயங்களுக்குச் செல்லும்போது ,தமிழகத்திலும் சரி,தாயகத்திலும் சரி பெண்கள் சேலையுடுத்தி கொண்டை முடிந்து செல்வார்கள்.சிறுமிகள் அழகான பாவாடைசட்டைகள் அணிந்து செல்வர்.ஆண்களோ வேட்டிசால்வை யணிந்து செல்வர். இன்று அவையெல்லாம் திருவிழாக்காலங்களில் சிலரால் பின்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் ஏனையநாட்களில் அவை பெரிதாகப் பின்பற்றப்படுவதில்லை. மேல் நாட்டு உடைகளையே பெரும்பாலும் அணிந்து செல்கிறார்கள்.இவையெல்லாம்வேற்றுநாட்டுக் கலாச்சாரங்களினதும், சமயங்களினதும் மருவுதல்களினாலே ஏற்பட்டனவாகும்.இன்று. தமிழ் மக்களின் உடைகளிலும் பல மேலை நாட்டுக் கலாச்சாரமும் பண்புகளுமே காணப்படுகின்றன. ஆண்களுக்கான வேட்டி,சால்வை, பெண்களுக்கான சேலை, சட்டை என்பவற்றிலும் பிற நாட்டுநாரீகங்களுக்கேற்ப வௌ;வேறு வடிவங்களில் தைத்தும் அணிகிறார் கள்.அத்துடன் வைத்திய சாலைகளில் கடமையாற்றும் பணியாளர்கள்.தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள்,பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் மேலை நாட்டு நாகரீகத்திற்கேற்பவே தைத்தும் அணிகிறார்கள்.

3.அடுத்து தமிழரின் பாரம் பரியக் கலைகளான பரதநாட்டியம்.சங்கீதம்,ஓவியம் என்பவற்றை எடுத்துக் கொண்டால் அவற்றிலும் பிற இனத்தவரின் பாடல்களும் நடனங்களும்,ஓவியங்களும்,இசைக் கருவிகளும் மருவியே காணப்படுகின்றன.இன்று சில தமிழர்களால் நடாத்தப்படும் இசைக்கச்சேரிகளென்றால் என்ன. பரதநாட்டிய நிகழ்வுகளென்றால் என்ன அங்கெல்லாம் வேறு இனத்தவரின் குத்துப் பாடல்களும், பைலா நடனங்களும், இடம்பெறுவதையும் காணலாம்.அதே போன்றே ஓவியம். சிற்பம் என்பவற்றிலும் பிற இனத்தவரின் அல்லது பிற நாட்டினரின் சிற்பங்களும்,ஓவியங்களும் கலந்து காணப்படுவதையும் பார்க்கலாம். இவ்வாறு தமிழரின் பழமையான கலைகளிலெல்லாம் பிற நாட்டுக் கலைகளும் இடை இடையிடையே மருவிக்; காணப் படுவதையும் காணலாம்.இன்றைய ஆலயங்களின் சிற்ப வடிவுகளிலும் பழமையான சிற்பக் கலைகளுடன் புதய சிலவேற்று நாட்டு மக்களின் சிற்பக் கலை வடிவங்களும் மருவிக் காணப்படுவதையும் காணலாம்.

4. அடுத்து தமிழரின் கலாச்சாரப் பண்புகளை எடுத்துக் கொண்டால் அவற்றிலும் பல வேற்று நாட்டுக் கலாச்சாரங்களும் பண்புகளும் மருவியே காணப்படுகின்றன.முற்காலங்களில் திருமணம்.விழாக்கள என்பவற்றில் வாழையிலைகளில் சைவ உணவுகளே பரிமாறப்பட்டன. இன்று அந்நிலையில் சில மேல்நாட்டு முறையிலான உணவுப் பரிமாறலும் சிலர் அசைவ உணவுகளையும் வழங்குவதோடு பீங்கான் கப் போன்ற பாத்திரங்களையே பாவிக்கின்றனர். முற்காலங்களில் திருமணவிழாக்களை வீடடின் முற்றத்திலேயே பந்தல்களை அமைத்து அலங்கரித்து அவற்றினுள்ளேயே திருமணங்கள்,பூப்புனிதநீராட்டு போன்ற நிகழ்வுகளை நடாத்தினர். இன்றோ அவற்றுக்கென மேல்நாட்டுப் பாணியில் அமைக்கப்பட்ட மண்டபங்களைப் பணம் கட்டிப் பெற்று நடாத்துகின்றனர். உணவுகள் பரிமாறும் பொழுதும் மக்கள் உணவைக் கைகளால் உண்ணாது முள்ளுக் கரண்டி,கரண்டி என்பவற்றைப் பாவித்தே உண்ணுகிற பழக்கத்தையும் கைக் கொண்டு வருகிறார்கள்.மண்டபங்களிலும் சிறிய மேசைகளைச் சுற்றி வட்டம் வட்டமாகக் கதிரைகள் போட்டே உணவுகள் உண்பதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளதோடு உணவுகளைத் தாமே எடுத்து வருவதற்காக நீண்ட வரிசைகளில் காத்து நின்றுசெல்ல வேண்டியும் உள்ளது. அது மட்டுமன்றித் திருமணமண்டபங்களில் வரவேற்பு என்ற பெயரில் மணமகன் மணமகள் சேர்ந்து ஆடுவதும்.மேல்நாட்டுக்குடிவகைகள் பரிமாறப்படுவதும் பின்னர் சிலர் ஆடுவதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக இடம் பெறுவதையும் காணலாம். அத்துடன் வரவேற்பு வைபவங்களில் கலந்து கொள் வோர் மணமகன் மணமகள் உட்பட வருகை தரும் ஆண்களும்; பெண்களும் பெரும்பாலும் ஆங்கிலேய உடைகளை அணிந்து வருவதும் காணக்கூடியதாகவிருக்கும். அத்துடன் பைலா நடனங்களும் இடம் பெறும்: இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகக் கலப்புகளின் மருவுதலால் ஏற்பட்டவையே. பெற்றோரைப் பேணுதல், பெரியோரை மதித்தல் போன்ற குணாதிசயங்களிலும் மேலைநாட்டுப்பண்புகளே சிலரிடம் காணப்படுகிறது.குடும்பமுறைகளிலும் பல மாறுதல்கள் மேலைநாட்டுப் பண்புகளோடு மருவியே காணப்படுகின்றன.. இவ்வாறு பல மேல்நாட்டுப் பண்புகளும் பழக்க வழக்கங்களும் தமிழர்களின் பழமையோடு மருவியே காணப்படுகின்றது.

5. அடுத்து தமிழரின் மரபுவிழாக்களைப் பார்ப்போமானால் அவற்றிலும் பல மருவுதல்களையே காணக்கூடியதாகவுள்ளது.உதாரணமாகத் தைப் பொங்கலை எடுத்துக் கொண்டால் எல்லாத்தமிழ் மக்களாலும் பழைய பொங்கலுக்கான பழமையான சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்க முடியாமலுள்ளது.தாயகததிலும் சரி,புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி, தமிழர்கள் மத்தியில் இன்று பொங்கல் விழாவின் பல சம்பிரதாயங்கள் மருவியே காணப்படுகின்றன. இதற்குத் தாயகத்திலே ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமும் உயிரிழப்புக்களும் புலம் பெயர்ந்தோர் நாடுகளிலுள்ள கால நிலை,மக்களின் வேலைப்பழு, விடுமுறைகளற்ற நிலமைகளும் காரணமாகவுள்ளன. பொங்கலுக்காக முற்றத்தைச் சாணி கொண்டு மெழுகிக் ,களிமண்ணால் ஆக்கப்பட்ட அடுப்புக்களை வைத்து அவற்றின்மேல் புதுப் பானையை நீர் நிரப்பி வைத்துப் பாலும்விட்டு தீ மூட்டிக் கொதிக்க வைத்து நுரை பொங்கும்போது சிறுவர்கள் வெடி கொழுத்தி ஆரவாரிக்க, நுரை வெளியில் சரியும் பொழுது சூரியனைவணங்கி அப்பா அல்லது அம்மா பானையை மூன்று தரம் சுற்றி பானையில் ஏற்கனவே தயார் செய்துவைக்கப்பட்ட சர்கரை,கசூ.பிளம்ஸ் கலந்த பச்சை அரிசியைப் போடுவார்கள். பின்னர் அம்மா விறகுகளின் வேகத்தைத் தணித்து சாதத்தை வேக வைப்பார். சாதம் வெந்ததும் மெழுகிய முற்றத்திலே வாழையிலை போட்டு குத்து விளக்கேற்றி பொங்கிய சாதத்தை வாழையிலையில் போட்டு பலகாரங்களையும், வெற்றிலை பாக்குப்;,பழங்களையும் வைத்துச் சூரிய பகவானுக்குப் படைத்து சூரிய பகவானை குடும்பத்தினர் எல்லோரும் வழிபடுவர். பின்னர் படைத்த உணவுப் பண்டங்களை எல்லோரும் பகிர்ந்துண்டு மகிழ்வர். பின்னர் உறவினர் வீடுகளுக்குச் செல்வதோடு ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவர். இந்தச் சம்பிரதாயங்கள் பல இன்று மருவியுள்ளதையும் காண்கிறோம். பழைய காலங்களில் பழைய சம்பிரதாயங்களுக்கு ஏற்பவே தைப் பொங்கல் இடம் பெற்று வந்தது. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் கால நிலை மாற்றங்களாலும் வேலைப்பழுக்களாலும் முற்றங்கள் இன்மையாலும் பலர் வீடுகளுக்குள்ளேயே 'மின்சார' அல்லது 'காஸ்'; அடுப்புக்களிலேயே வசதியான நேரங்களில் பொங்குகின்றனர். சிலர் பொங்குவதற்கான நேரங்களின் மையால் பொங்காமலும் விட்டு விடுகின்றனர். இதே போன்று தான் தீபாவளித் திருநாளிலும் முன்னைய காலங்களைப் போன்று தாயகம், தமிழகம், புலம் பெயர் நாடுகளில்வாழும் எல்லாமக்களும் தீபாவளித் திருநாளில் புத்தாடை அணிந்து கொண்டாடுவதில்லை. முற்காலங்களில் தாயகம் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் எவ்வளவு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்தாலும் தீபாவளித் திருநாளில் புதிய ஆடைகளைத் தமது தகுதிக்கேற்ப வாங்கி அணியாது விடமாட்டார்கள். இன்று அந்த நிலை பெரிதாகக் கருதப் படாது எல்லோரும் புத்தாடைகள் அணிந்து கொண்டாடும் நிலையும் மாறியுள்ளதைக் காணலாம். இதே போன்றே சித்திரைப் பொங்கலின் சில சம்பிரதாயங்களும் எல்லாமக்களாலும் கைக் கொள்ளப் படுவதில்லை. ஊதாரணத்திற்கு எல்லாத் தமிழரும் மருத்து நீர் வாங்கித் தலையில் வைத்துத் தோய்வதோ அன்றேல் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வதோ இல்லை எனவும் கூறலாம். இன்று எமது மரபு வழிவந்த பழமையான சம்பிரதாயங்களோடு வேறுசில சம்பிரதாயங்களும் மருவி வௌ;வேறு முறைகளிலும் கொண்டாடப் பட்டு வருகின்றன..

6.அடுத்து தமிழ்மக்களின் கல்விப் பாரம் பரியங்களையும் தற்போதைய கல்வி நிலைகளையும் எடுத்துக் கொண்டால் தமிழரின் கல்விநிலைகளிலும் பல மருவியே காணப்படுகின்றன.முற்காலத்திலேயிருந்த தமிழர்களின் கல்வி நிலைக்கும் இன்றைய கல்வி நிலைகளுக்குமிடையே பெரிய மருவுதல்களையே காணக்கூடியதாகவுள்ளது. விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் என்பவற்றின் வளர்ச்சி காரணமாக மாணவர்களின்று பலதுறைகளிலும் கல்விகற்று வருகின்றனர். விஞ்ஞாம் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகாரணமாக அவற்றின் பிரதிபலிப்புக்கள் தமிழர்களின் பாரம்பரிய கல்விமுறைகளுடன் மருவிப் பல மாணவர்களைப் பொறியிலாளர்களாகவும், வைத்தியக்கலாநிதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் ,ஆராட்சியாளரகளாகவும், சிறந்த ஆசிரியர்களாகவும்,  தொழில்நுட்பவியலாளர்களாகவும் கல்வியில் திகழ வாய்ப்பளித் துள்ளது. முன்பு பெரும்பாலும் ஆசிரியர்களாகவும் அரச பணியாளர்களாகவுமே பணியாற்றுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவதற்கே அப்போதைய கல்விமுறை துணை செய்தது. இன்று தொழில்நுட்பவளர்ச்சியால் சிறந்த பல்துறை விற்பன்னர்களாகவும்; .கலைஞர்களாகவும், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குகிறார்கள். இத் தொழில் நுட்ப வளர்சியால் மாணவர்கள் இலகுவில் பல விடயங்களைப் பெற்றுக் கொள்ளவும் இலகுவில் விளங்கிக் கொள்ளவும் வாய்புக்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.இன்று மாணவர்களின்; கல்வி வளர்ச்சியில் கணனிகள் ,தொலைக்காட்சிகள்,வானொலி, கைத் தொலை பேசிகள், என்பனவும் உதவுகின்றன.அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்புகளும்,ஆசிரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டும் வரப் படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கல்வித் தகமைகள் மேம்படவும் மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறவும் வாய்புக்கள் எறுபட்டுள்ளன.இவையாவும் எமது பழமையான கல்விகளில் ஏற்பட்டுள்ள மருவுதலேயாகும்.

7.பிரயாண வசதிகள். முற்காலங்களில் மக்கள் துவிச்சக்கர வண்டிகளிலும்,குதிரை வண்டி,மாட்டுவண்டிகளிலுமே பிரயாணஞ் செய்தனர். இன்று மேலை நாடுகளில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொழில் உபகரணங்கள் மட்டுமன்றிப் போக்கு வரவு சாதனங்களிலும் அதிக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் குதிரைவண்டில், மாட்டு வண்டில் எனப் பிரயாணம் செய்து வந்த தமிழ்மக்களும் இன்று மேலை நாடுகளில்; கண்டு பிடிக்கப் பட்ட மோட்டார் கார்களையும், பேருந்து.தொடருந்து போன்ற தரைமார்க்கமான வாகனங்களிலும், கடல்மார்கமாகப் பிரயாணம் செய்வதற்கான இயந்திரப் படகுகளிலும், வௌ;வேறு நாடுகளுக்குச் செல்லக்கூடிய கப்பல்களிலும்,ஆகாய மார்கமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடியதுமான விமானங்களிலும் இன்று வசதியாகவும், விரைவாகவும் செல்லக் கூடியதுமான பிரயாணங்களைச் செய்து வருகின்றனர். வெளி நாடுகளின் விஞ்ஞான ,தொழில்நுட்ப மருவுதல்களாலேயே இன்று தமிழ் மக்களும்; பல நன்மைகளைப் பெற்றுள்ளார்க ளென்பதையும் நாம் பார்க்கிறோம்.

8. தொழில்வளங்கள்: தமிழ் மக்களின் பாரம்பரிய தொழில் வளங்களை எடுத்து நோக்குவோமானால் தமிழர்களின் பாரம் பரிய தொழில்களான விவசாயம், மீன்பிடி, மந்தை வளர்த்தல் ஆகிய தொழில்களில் விஞ்ஞான வளர்ச்சியால் பலமருவுதல்கள் இத்தொழில்களிலும் ஏற்பட்டுள்ளன.விவசாய நிலங்களைப் பண்படுத்துவதற்காக முற்காலங்களில் மாடு பூட்டிக் கலப்பை கொண்டே உழுதார்கள்.மண்ணைக் கொத்துவதற்காக மண் வெட்டி பாவித்தார்கள். நீரிறைப்பதற்காக பட்டை துலா என்பவற்றையே உபயோகித்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பெரும்பாலும் விவசாயிகள் நிலங்களை உழுவதற்கும் பண்படுத்துவதற்கும் உழவு இயந்திரங்களையும். நீரிறைப்பதற்காக நீரிறைக்கும் இயந்திரங்களையுமே பாவித்து வருகிறார்கள். இவற்றின்மூலம் பெரும் வயல் நிலப் பரப்புக்களை விரைவாகப் பண்படுத்தவும் விரைவாக பெரும் நிலப்பரப்புக் கொண்ட வயல்களுக்கு நீரிறைக்கவும் முடிகிறது. அது மட்டுமன்றி சூடு மிதிக்க முற்காலத்தில் மாடுகளைக் கொண்டே சூடு மிதித்தனர்.இன்றோ இயந்திரங்களின் உதவியுடனேயே சூடு மிதித்தல், பதரையும் நெல்லையும் வேறாக்கல் போன்ற வேலைகளும் இடம் பெறுகின்றன. இவ்வியந்திரங்களின் உதவியுடன் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட மரக்கறி,பழத் தோட்டங்களையும் செய்யக்கூடிய வாய்புக்களையும் விவசாயிகள் பெற்றுள்ளனர.;அத்துடன் பயிர்களுக்கான இரசாயனப் பசளைகளும் வந்துள்ளதால் மக்கள் அவற்றைப்பாவித்து அதிக விளைச்சலையும் பெறுகிறார்கள். அவை மட்டுமன்றிப் பயிர்களை நோய்கள் தாக்காதவாறு பல விதமான கிருமி நாசினிகளும் வந்துள்ளன. இவற்றின் காரணமாக விவவசாயத் தொழிலிலும் ஒரு பெரிய மருவுதல் இடம் பெற்றுள்ளமையை நாம் காண்கிறோம்.
அடுத்து மீன்பிடித் தொழிலை எடுத்துக் கொண்டால் முற்காலங்களில் கட்டு மரங்களிலும்,சிறிய பாய் வள்ளங்களிலும் ஆழ்கடலுக்குச் செல்லாமல்,பழமையான மீன்பிடி உபகரணங்களைப் பாவித்தே மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டனர். இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பெரிய இயந்திர வள்ளங்களிலும் பெரிய மீன்பிடிப் படகுகளிலும்; ஆழ்கடல்களுக்குச் சென்று நவீன மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அதிக மீன்களைப் பிடிக்கக் கூடியதாகவும் அவர்களின் வாழ்வாதாரம் முன்னைய விட மேம்பாடுடையதாகக் கூடியதாகவும் உள்ளது. இவையெல்லாம் மேல்நாட்டு மீன்பிடி முறைகளின் மருவுதலாலேயே ஏற்பட்டுள்ளன.

அடுத்து மந்தை வளர்த்தலை எடுத்துக் கொண்டால் இன்று பழமையான மந்தை வளர்ப்பு முறைகளில் சில மேல்நாட்டு மந்தைவளர்ப்பு முறைகளும் மருவியே காணப்படுகின்;றன.நவீன விஞ்ஞான முறைகளில் அவற்றுக்கான வளர்ப்பு முறைகளும் உணவுகளும் தமிழ்மக்களின் மந்தை வளர்ப்புக்களிலும் கையாளப் பட்டு வருவதையும் காணலாம்.பெரும்பாலும் கூடுதலான மந்தைகளை வளர்ப்போர் அம்முறைகளையே கையாண்டு வருகின்றனர்.இதனால் மந்தைவளர்ப்போர் விரைவாகவும் இலகுவாகவும் மந்தைகளை வளர்க்க உதவியாகவிருப்பதோடு அவற்றின் பயன்களை அதிக அளவில் பெறவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. விஞ்ஞான முறைகளைக் கையாண்டு மந்தைகளைச் சினைப்படுத்தவும் இனமாற்றம் செய்து நல்லினங்களைப் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே போன்று கோழி வளர்ப்பிலும் நல்லினக் கோழிகளை விருத்தி செய்யவும், இறைச்சிக்கான கோழிகளைக் குறுகிய காலத்தில் வளரச் செய்யவும் அதிக முட்டைகளைப் பெறுவதற்கும் வாய்புக்கள் ஏற்பட்டுள்ளன. கோழிகளுக்கான 'மாய்ஸ்' போன்ற உணவுகளும் விஞ்ஞான ரீதியில் தயாரிக்கப் பட்டு கடைகளில்விற்கப் படுகின்றன. இவ்வாறு மந்தை வளர்ப்பிலும் பல விடயங்கள் மேல்நாட்டு மந்தைவளர்ப்புடன் மருவியே காணப்படுகின்றன. விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்பவற்றின் வளர்ச்சியால் பல துறைகளிலும் மக்களுக்குப் பல விதமான அரசுசார் உத்தியோகங்களும், பல்துறை சார் கூலி வேலைகளும் ஆங்காங்கே அதிகமாகப் பெறக்கூடியதாகவும் உள்ளது. இதனால் மக்கள் தங்கள் சீவனோபாயத்தை சிறப்பாகக் கொண்டு செல்லக் கூடியதாகவு முள்ளது.முற்காலங்களில் பெரும்பாலும் ஆண்களே வேலைகளுக்குச் செல்வார்கள். பெண்கள் வீடுகளிலிருந்து வீட்டு நிர்வாகங்களிலும், பிள்ளைகளை வளர்ப்பதிலும்,உணவு தயாரிப்பதிலுமே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். இன்றோ அந்நிலை மாறிப் பெண்களும் ஆண்களுடன் சரி சமானமாகக் கல்விகற்று அரசாங்க உத்தியோகங்களையும், தொழில் சார் வேலைகளையும் செய்து வருவதோடு இன்று விமான ஓட்டுனர்களாகவும், பேருந்து, தொடருந்து ஓட்டுனர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் பணியாற்றி வருவதோடு அரசியலிலும் அதி உயர் பதவிகளைப் பெற்றும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் பாரம்பரிய தொழில் வளங்களிலும் பல மருவுதல்கள் ஏற்பட்டுள்ளமையைக் காணலாம்.

9. எமது மக்களின் வர்த்தகத்தை எடுத்துப் பார்ப்போமானால் பழைய காலங்களில் பண்டமாற்று வியாபாரமே கூடுதலாக இடம்பெற்று வந்துள்ளது. இன்று அந்நிலமை மாறிப் பணமூலமான வியாபாரமே உள்நாட்டிலும் சரி.சர்வதேச ரீதியிலும் சரி நடை பெற்று வருவதைக் காணலாம். எல்லாநாடுகளிலும் இன்று பல சந்தைகளும் பெரிய வியாபார நிலையங்களும் நிறுவப் பட்டு பணமூலமாகவே பொருட்களின் கொள்வனவும் விற்பனைகளும் இடம் பெற்றும் வருகின்றன. பணமாற்றுக்காக எல்லாநாடுகளிலும் வங்கிகள் நிறுவப் பட்டு வாடிக்கையாளர்களின் கொடுக்கல் வாங்கல்களும் சுலபமாகச் செய்யக் கூடிய வழிமுறைகளும் கையாளப்பட்டு வருகின்றன. இதற்குத் தமிழ் மக்களும் விலக்கானவர்கள் அல்ல. இன்று வியாபாரம் சம்பந்தமான பெரிய ஒப்பந்தங்களும் நாடுகளுக்கிடையே உள்ள அரசாங்கங்களாலும் செய்து வரப்படுகின்றன. முன்னைய காலங்களைப் போலல்லாது இன்று பொருட்களுக்கான விளம்பரங்களும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களான கணனி, தொலைக்காட்சி, வானொலி,கைத் தொலைபேசி போன்றவற்றின் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் செய்து வரப் படுகிறது. அத்துடன் பொருட்களை ஓரிடத்தி லிருந்து,இன்னோர் இடத்திற்கோ அல்லது ஒரு நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கோ விரைவாகக் கொண்டுசெல்லக்கூடிய தரைமார்க்கமான இயந்திர வாகனங்களும் கடல்மார்க்கமான கப்பல்களும், ஆகாயமார்க்கமான , சரக்கு விமானங்களும் உதவுகின்றன. இவையாவும் எமது மக்களின் வர்த்தக முறைகளில் வெளிநாட்டு முறைகளும் மருவியுள்ளதன் பயனாக ஏற்பட்டனவாகும். இவற்றின் பயனாக இன்று எமது மக்களினதும்,எமதுநாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிகளில் அதிக பயனைப் பெறக்கூடியதாகவுள்ளதென்பதை மறுக்கமுடியாது.

10..இன்று எமது தமிழ்மக்கள் மத்தியிலேகாணப்படும் உடல் நலத்திற்கான நோய்த் தடுப்பு மருந்துகளும் நோய்களுக்கான பழமையான சுதேச வைத்தியத்திற்கான மருந்துகளும், வைத்தியமுறைகளும், மருவியே காணப்படுகின்றன. இன்று ஆங்கில வைத்தியமுறைகளும் மருந்துகளுமே தமிழ்மக்கள் மத்தியிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.ஆங்கில வைத்தியத்திற்கான பல வைத்தியசாலைகளும் அதற்கெனப் பயிற்சிபெற்ற வைத்தியக் கலாநிதிகளும்,பயிற்றப் பட்ட தாதிமார்களும்.பயிற்சி பெற்ற வைத்தியம் சார்ந்த பராமரிப்பு ஊழியர்களும் நியமிக்கப்பட்டு வைத்திய சாலைகளில் கடமையாற்றுகிறார்கள்.அத்துடன் எல்லா நோய்களுக்குமான வைத்திய முறையில் தயாரிக்கப் பட்ட குழிசைகளும்,குறிப்பிட்ட சில பெரிய வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கேற்ற விசேடபயிற்சி பெற்ற வைத்திய நிபுணர்களும் கடமை யாற்றுகிறார்கள்.அவற்றுக்குத் தேவையான பல விசேட உபகரணங்களும் அந்தந்த வைத்திய சாலைகளில கையாளப்பட்டும் வருகின்றன.இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் சுதேச வைத்திய சாலைகள் இயங்கிக் கொண்டு இருந்தாலும் எமது மக்கள் இன்று அதிக வைத்திய சேவைகளை மேல்நாட்டு முறையிலான ஆங்கில வைத்திய சாலைகளிலேயே பெற்று வருகின்றனர். இவையெல்லாம் எமது சுதேச வைத்தியங்களுடன் ஆங்கில வைத்திய முறைகளும் மருவிச் செல்லும் ஓர் நிலையையே காட்டுகிறது.

11. தமிழ் மக்களின் தேசீய விளையாட்டுக்களை எடுத்துக் கொண்டால், முன்னைய காலங்களில் தமிழ்மக்களின் தேசீய விளையாட்டுக்கள் அனேகமிருந்துள்ளன. உதாரணமாகச் சொல்லப்போனால் வார் ;ஓடுதல், கிட்டியடித்தல், கிளித்தட்டுமறித்தல்,கபடி,சல்லிக்கட்டு,தாச்சி விளையாடுதல், மாட்டுவண்டில்சவாரி, போர்த்தேங்காய் அடித்தல், காளை மறித்துப் பிடித்தல், கோழிச் சண்டை போன்ற பல விளையாட்டுக்கள் இருந்துள்ளன.ஆனால் அவை இன்று சில இடங்களில் மக்களால் விளையாடப்பட்டு வருகின்றபோதிலும் பல இடங்களில் இவ்விளையாட்டுக்கள், மேலை நாட்டுவிளையாட்டுக்களுடன் மருவியே காணப்படுகின்றன. கால்பந்து, வலைப்பந்தாட்டம், துடுப்பாட்டம்,கரப்பந்தாட்டம்,கூடைப் பந்தாட்டம்; எனப் பல மேல்நாட்டு விளையாட்டுக்களே தமிழர்களாலும் இன்று அதிகமாக விளையாடப்பட்டுவருவதைக் காணலாம்.

12.தமிழ் மக்களின் உணவுகளிலும் உணவுப்பழக்கவழக்கங்களிலும் இன்று பல பழமைகள் மருவியே காணப்படுகின்றன. முற்காலங்களில் மக்களின் பிரதான உணவாகவிருந்த அரிசி .தானிய வகைகள் இன்று மேலைநாட்டுக் கோதுமைசார்ந்த உணவுப் பண்டங்களும் அவைசார்ந்த பிட்டு இடியப்பம் பலகாரங்களென தமிழ் மக்களின் உணவுகளுடன் மருவியே காணப்படுகிறது. பெரும்பாலும் கோதுமைமா சார்ந்த பாண,; கேக் போன்ற பல உணவுப் பண்டங்களும் திழரின் உணவுகளில் காணப்படுகின்றன.இன்று இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி வாழுகின்ற இளைஞர்,யுவதிகள் சிறார் மத்தியில் கூடுதலாக விரும்பும் உணவுகளாக பிட்சா,பிறெஞ் றைஸ்,நூடில்ஸ்,புறியாணி,மபின் எனப் பல மேல்நாட்டுஉணவுகள் காணப்படுகின்றன. உணவுப் பழக்க வழக்கங்களும் மருவியுள்ளன. தமிழ் மக்கள் சிலரின் வீடுகளிலும் வீழாக்கள் நடைபெறும் இடங்களிலும் உணவுகள் வழங்கப் படும் பொழுது வாழையிலைகளுக்குப் பதிலாகப் பீங்கான் கோப்பைகளும், கரண்டிகளும், முள்ளுக் கரண்டிகளும், கப்ஸ்களுமே பாவிக்கப் படுகின்றன. முற்காலங்களில் நிலத்திலே பாய்போட்டுக் கீழே அமர்ந்திருந்து உணவுகளை உண்ட மக்கள் மேல் நாட்டு நாகரீகக் கலப்பால் மேசை கதிரைகளிலிருந்தே உணவை உண்கிறார்கள். முற்காலங்களில் திருமணம், பூப்புனிதநீராட்டு விழாக்களுக்கு வருவோருக்கு அவர்களைக் கீழே நிலத்தில் பாய் விரித்து அமரச் செய்து வழையிலை போட்டு உணவுகளைப்; பரிமாறினார்கள். முற்காலங்களில் நீண்ட வரிசைகளில் சென்று தனித்தனியாகப் பெறுவதில்லை .இன்றோ அந்நிலமைகளெல்லாம் மேல் நாட்டு முறைகளுடன் மருவியே காணப்படுகின்றன.

13. திருமணபந்தம் பழையகாலங்களிலே எவ்வாறிருந்தன என்பதையும் இன்று எவ்வாறு உள்ள தென்பதை யும் நோக்குவோமானால் இன்று பழைய திருமணவாழ்க்கை முறையோடு பல மேல்நாட்டுத் திருமண முறைகளும் மருவியே காணப்படுகின்றன.முற்காலங்களில் திருமணம் என்பது ஒரு புனிதமான விழாவாகவும் ஒரு ஆணினதோ, பெண்ணினதோ வாழ்க்கையில் திருமணம் தான் அரம்பநிகழ்வாகவும் கருதப் பட்டது அதனால் தான் அதற்கு அந்தக்காலங்களில் 'வாழ்க்கைப் படுதல்' என்று அதை அழைத்தார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையில் இறுதிவரை பிள்ளைகளைப் பெற்று மகிழ்வாக வாழ்ந்தனர். இன்றோ அந்நிலை மாறி வெளிநாட்டு முறையில் சில திருமணங்கள் குறுகியகாலத்தில் முறிவடைவதைக் காண்கிறோம். குடும்பங்களுக்குள் மனவேறுபாடுகளும் ,புரிந்துணர்வுகளில்லாத தன்மையும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத தன்மைகளும், நான் பெரிது நீ பெரிது என்ற தன்மைகளும் மணமுறிவுகளுக்குக் காரணமாத் திகழ்கின்றன. இவை மட்டுமன்றி மேல்நாட்டுவாழ்க்கையின் பிரதி பலிப்புக்களும்,வெளி நாட:;டுக் கொடுப்பனவுகள் காரணமாகவும் அமைகிறது. இன்று இலங்கையிலும் சரி தமிழகத்திலும் சரி வாழுகின்ற சில தமிழர்கள் மத்தியிலே பல திருட்டுக் கலியாணங்களும் இரண்டாவது மனைவி,மூன்றாவது கணவர் என பல குடும்பச் சீரழிவுகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் மேல் நாட்டு நாகரீக மருவுதல்களாலேயே இன்று அதிகரித்துச் செல்வதைக் காணுகிறோம். முற்காலங்களில் தமிழர் சமதாயம் இவற்றையெல்லாம் கண்டித்து இவை நடைபெறாது அவதானமாகவிருந்தது. இன்று இவற்றுக்கு உதாரணமாக இலங்கையைச் சேர்ந்த ஒரு கல்வி பெண் அதிகாரி மலேசியாவில் நடை பெற்ற நிர்வாகப் பட்டறையில் கலந்து கொள்ளச் சென்ற பொழுது அங்கு அந்தப் பட்றையில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு மேல்நாட்டுப் பெண்மணி அவருடன் கலந்துரையாடும் போது கேட்டாரம்' உங்களுக்குத் திருமணமாகி விட்டதா. என்று அதற்கு இவர் ஆம் என்று பதிலளித்ததும் அவர் கேட்ட அடுத்த கேள்வி இப் பொழுது நீங்கள் எத்;தனையாவது கணவருடன் வாழுகின்றீர்;களென்று கேட்டாராம்.அதற்கு இவர் நாங்கள் திருமணஞ் செய்தால் இறக்குமட்டும் அவருடனேயே வாழ்வோம், அதுதான் எங்கள் பண்பாடு என்று கூறினாராம்.இதைக்கேட்ட அம் மேல்நாட்டுப் பெண்மணி ஆச்சரியப்பட்டாராம். அதுமட்டுமன்றி தான் இப்பொழுது நான்காவது கணவருடன் வாழ்வதாகக் கூறினாராம். இது தங்களின் காலாச்சாரத்திற்கு விரோதமானதல்ல வென்றும் கூறினாராம். இதை நான் கூறுவதற்குக் காரணம் இவ்வாறான மேல் நாட்டுக் கலாச்சாரம் தமிழ் மக்கள் மத்தியிலும் மருவியுள்ளதென்பதை எடுத்துக் காட்டுவதற்காகும்.

14.
அடுத்து தமிழ் மக்களின் பிள்ளை வளர்ப்பு முறைகளிலும் இன்று மேல்நாட்டுப் பிள்ளை வளர்ப்புமுறைகள் மருவியுள்ளதையும் காணலாம் முன்னையகாலங்களில் பெற்றோர் பிள்ளைகளுடன் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்தனர். இதனால்பிள்ளைகளை வீட்டில் வைத்தே வளர்ப்பதற்கான பேரன்,பேத்தி உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் பிள்ளைகளுக்கு அதிகம் கிடைத்தது.இதனால் பிள்ளை களிடத்திலே பேரன்பேத்தி உறவினர் களுடன் பாசமும் நேசமும் வளர்ந்தே காணப்பட்டது. தாய்மாரும் பெரும்பாலும் பிள்ளைகளுடனேயே இருந்து அவர்களை நன்கு கவனத்துடன் வளர்க்கவும் முடிந்தது. இன்று கூட்டுக்குடும்ப முறைகள் குறைந்து போனதாலும், இன்று பெற்றோர் வேலைகளுக்குச் செல்வதாலும் பிள்ளைகளை இரண்டு மூன்று வயதுகளிலேயே காப்பகங்களிலும்,நாளாந்த பராமரிப்பு நிலையங்களிலும் விட்டுச் செல்கின்றனர். இவையெல்லாம் மேலை நாட்டு பிள்ளை வளர்ப்புக்களை மருவியவையாகும். இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அதிகமாக இவை இடம் பெறுவதைக் காணலாம். புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களிடம் மட்டுமன்றி தமிழகத்திலும் இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இம்முறைகள் இன்று காணப்படுகின்றன.முன்னைய காலங்களில் குழந்தைகள் பிறந்தால் அவை பெற்றோருடனேயே வாழ்ந்து வந்தனர். இன்றோ அந்நிலையில் வெளிநாட்டுப் பிள்ளை வளர்ப்புமுறைகள் தமிழ்மக்கள் மத்தியிலும் மருவியுள்ளன. இவ்வாறு பிள்ளைகள் சிறு வயதுகளிலேயே காப்பகங்களிலும்,நாளாந்த பராமரிப்பு நிலையங்களிலும் விடுவதனால் பிள்ளைகளுக்குப் பெற்றோரிடமுள்ள பாசங்களும் நெருக்கமான தொடர்புகளும் குறைந்து கொண்டே செல்வதற்கும் இவை ஏதுவாகலாம்.குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் முறைகளிலும் பல மேலை நாட்டு முறைகளே சில தாய்மார்களால் கையாளப்பட்டு வருகிறது. சில தாய்மார்கள் தங்களிடமுள்ள தாய்ப்பால் பிள்ளை களுக்குப் போதாமையாலும், சிலதாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால கொடுப்பதால் தங்கள் அழகு கெட்டு விடும் என்பதற்காகவும் தாய்பாலை நிறுத்தி விட்டு மாப்பாலைக் கொடுப்பதும் அறியக் கூடியதாவுள்ளது. இவையெல்லாம் மேல்நாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தனவாகும். இன்று பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும் பாது காப்பற்றதன்மைகளே காணப்படுகின்றன. பிள்ளைகளைக் கடத்தல்.பாலியல் வன்மறைகளுக்குள்ளாக்குதல் போன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் சரி,தாயத்திலும் சரி ஆங்காங்கே நடை பெறும் செயல்களாக மாறியுள்ளன. பழைய காலங்களிலே இவ்வாறான நிகழ்வுகள் கேள்விப் படாதவையாகவேயிருந்தன. இன்று இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகக் கலப்பால் சாதாரணமான நிகழ்வுகளாக நடந்தும் வருகின்றன.இன்று குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் முறைகளிலும் பல வேறுபாடுககை; காணலாம். முன்னைய காலங்களில் பஞ்சாங்கம் பார்த்து பிள்ளைகள பிறந்த இராசிகளுக்கேற்றபடி பெயருக்கான முதலெழுத்துக்களின் வரிகளைத் தெரிந்து அவற்றுக்கேற்ப நல்ல அழகான தமிழ்ப் பெயர்களையோ,நாயன் மார்களின் பெயர்களையோ அன்றேல் கடவுள்களின் பெயர்களையோ குழந்தைகளுக்குச் சூட்டினார்கள். இன்றோ அவற்றையெல்லாம் தவிர்த்துச் சில பெற்றோர் பிறநாட்டினரின் கலாச்சாரத்திற்கேற்ப ஆங்கிலத்தில் எந்தக் கருத்துமற்ற பெர்களைச் சூட்டுவதையும் காண்கிறோம்.

15. முதியோரைப் பேணல்:- எமது முதியோர்களின் பராமரிப்பு நிலைமைகளை எடுத்துக் கொண்டால் அவற்றிலும் பல மருவுதல்களையே காணுகின்றோம். முன்னைய காலங்களில் முதியவர்கள் ஒரு குடும்பத்தின் முதுபெரும் சொத்துக்களாகவும் நல் ஆலோசகர்களாகவும் கருதிப் பிள்ளைகளாலும் இளையவர்களாலும் மதிக்கப் பட்டனர். குடும்பங்களில் நடக்கும் எல்லாநிகழ்வுகளிலும் முதியோருக்கு முதலிடமும் மதிப்பும் வழங்கப்பட்டது. பெற்றோர் வயதான காலத்தில் அவர்களைப் பராமரிப்பதும் பேணிப் பாதுகாப்பதும் பிள்ளைகளின் தலையாய கடனாகவிருந்துவந்தது.. இன்றோ பெற்றோருக்குரிய மதிப்போ உரிமையோ எல்லாக் குடும்பங்களிலும் பிள்ளைகளால் கொடுக்கப்பட்டு வருவதாகச் சொல்ல முடியாது. இன்று தாயகத்திலும் சரி தமிழகத்திலும் சரி, புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி முதியோர்களுக்கான மதிப்போ மரியாiதையோ குறைந்தே காணப்படுகிறது. இன்று முதியோரைச் சிலபிள்ளைகள் பெரிசு,பழசு,முதிசு எனக் கேலி செய்வதையும், அவர்களின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காததன்மையையும் பார்க்கிறோம். இன்று தாயகத்திலும் சரி, புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி வயதான பெற்றோர்களை பெரும்பாலும்,பராமரிப்பு நிலையங்களிலும்,முதியோர் இல்லங்களிலும் விட்டு விடுகிறார்கள். சிலர் வீடுகளில் வைத்துப் பெற்றோரைப் பராமரிக்கக் கூடிய நிலைகளிருந்தும் அவர்களின் இயலாமை காரணமாகவோ அன்றேல் வேலைப்பழுக்கள் காரணமாகவோ, பராமரிப்பு இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் விட்டு விடுகிறார்கள்.முதியோர்கள் பிள்ளைகளின் மாபெரும் சொத்து என்ற நிலைமாறி முதியோர்கள் தமக்கொரு சுமை என நினைத்தும் சில பிள்ளைகள் விட்டு விடுகிறார்கள். இவையெல்லாம் மேல்நாட்டு நாகரீகக் கலப்பால் ஏற்பட்டவையாகும். குடும்ப பாரம்பரியங்கள் எவ்வளவோ வௌ;வேறுபட்ட கலப்பு முறைகளுடன் கலந்து விட்டன.கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள் இன்று மகனோ,மகளோ திருமணஞ் செய்ததும் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். இதனால் முதியவர்களான பெற்றோர் சிலர் தனிமையிலும் வாடுகின்றனர்.சில பிள்ளைகளின் மத்தியில் பெற்றோர்களின் சொத்துக்களை வைத்தும், புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அரச நிதி உதவிகளினாலும் சகோதரங்களுக் கிடையிலும் முதியோர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுகின்றன .இதனால் சில குடும்பங்களில் பிள்ளைகளுக்கிடையே ஒற்றுமையீனங்களும் பிரச்சனைகளும் உண்டாகின்றன.இவற்றால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயுள்ள உறவிலும் விரிசல் ஏற்படுகிறது.இன்று புலப் பெயர்வுகள் காரணமாக ஒருநாட்டில் வாழும் சகோதரங்களின் பிள்ளைகளையே வேறுநாட்டில் உள்ள சகோதரங்களுக்குத் தெரியாமலே வாழவேண்டிய நிலையும் உள்ளது. இவ்வாறு இடப் பெயர்வுகளாலும், வேற்று நாட்டுக் கலாச்சார மருவுதல்களாலும் முதியோர்களைப் பேணுவதிலும் பல மருவுதல்கள் ஏற்பட்டுள்ளன.

16. சமூக உறவுகளிலும் இன்று புலம்பெயர்நாடுகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இன்று புலம் பெயர்நாடுகளில் வாழும் மக்களிடம் மட்டுமன்றி தாயகத்திலும் இடப் பெயர்வுகளால் பக்கங்களில் வசி;க்கும் மக்களையே தெரியாத நிலையில் தான் மக்கள் வசிக்கிறார்கள்.முந்தின காலங்களிலே உறவினர்களாகவோ அயலானவர்களோ எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாகவும்,ஒருவருக் கொருவர் உதவியாகவும் வாழ்ந்தார்கள.; கிராமங்களில் நல்ல நிகழ்வுகளோ துன்பமான நிகழ்வுகளோ நடந்தால் அந்தக் கிராமமக்கள் எல்லோரும் ஒற்றுமையாகத் தமது வீட்டு நிகழ்வுகள்போலவே கருதி ஒற்றுமையாக வாழ்ந்தனர்;. கிராமங்களிலே வீடு மேய்தலோ, வேலியடைத்தலோ அன்றேல் விவசாய. மீன்பிடித் தொழில்களிலோ ஈடுபட்டவர்கள் எல்லோரும் ஒருவர்க் கொருவர் உதவியாகவும் ஒற்றுமையாகவுமே வாழ்ந்தனர். இன்று அந்நிலைமாறித் தத் தமது கருமங்களைமட்டும் கவனிப்பவர்களாக மாறிவிட்டனர். இவையாவும் வெளிநாட்டுக் கலாச்சாரங்களாலும் .இடப்பெயர்வுகள்,புலப் பெயர்வுகள் என்பவற்றாலும் ஏற்பட்ட மருவுதல் செயற்பாடுகளாகும்;.இன்று வெளிநாட்டுக் கலாச்சாரங்களால் தமிழ் மக்களிடத்தே சில தீய பழக்க வழக்கங்கள் காணப்பட்டாலும், மேல்நாட்டு விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிபோன்றவற்;றின் மருவுதலால் தமிழ் மக்கள் அதிக நன்மைகளையும் பெற்றுள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது.


நன்றி: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
 

                                                                                                                                             
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்