பெண் இனம் போற்றும் பெருந்தலைவர்
எம்.ஜி.ஆர் (தொடர் - 22)
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர். படங்களின் கனவுக் காட்சிகள் (கடந்த வார தொடர்ச்சி......)
ராஜா ராணி கனவுக் காட்சிகள்
கதாநாயகி
தனது கனவில் ராஜா ராணியாக எம் ஜி ஆரையும் தன்னையும் கற்பனை செய்து ஆடி
பாடுவதாக அமைந்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சாரட் வண்டியில்
பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணியை போல உடை உடுத்தி பவனி வரும் போது
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்,
பொன் மாலை மயக்கம், பொன் மாலை மயக்கம்
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை அழகோ'
என்ற பாடல் காட்சி இடம்பெற்றது. இப்பாடல் காட்சி தூண்டுதல் ஒரு பிரெஞ்சு
படத்திலிருந்து ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு கிடைத்தது. அந்த
படக்காட்சியை இயக்குனரிடம் விவரித்த செட்டியார் அதுபோல அன்பே வா
படத்தில் ஒரு பாடல் காட்சி அமைக்கும் படி தெரிவித்தார். அதன்படியே
இப்பாடலில் அவர்கள் சாரட் வண்டியில் பயணிக்கும்போது பின்புலத்தில்
அழகான வண்ண நிறங்களும் சில அசைவுகளும் தோன்றும் இவை ஒருவித மயக்க
உலகத்தில் அவர்கள் பயணிப்பது போன்ற பிரம்மையை தரும்.
எம்.ஜி.ஆரின் கனவுப் பாடல்களில் இன்றுவரை மிகப்பெரிய அளவில்
ரசிக்கப்படும் பாடல்களில் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல்'
முக்கியமானதாகும். சரோஜாதேவி ஒரு பேட்டியின்போது இப்பாடல் காட்சிக்காகத்
தனக்கு தைக்கப்பட்ட உடையும் கிரீடமும் பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியின்
உடை மற்றும் கிரீடத்தை பார்த்து தயாரிக்கப்பட்டவை என்று தெரிவித்தார்.
காவல்காரன் படத்தில்,
'நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்'
என்ற பாடல் காட்சி ஒரு கனவு காட்சியாகும். இப்பாடலில் ஆண்டனி,
கிளியோபாட்ரா போல எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தோன்றுவார்கள் கிரேக்க
மன்னன் தோற்றத்தில் எம்.ஜி.ஆர். உடையும் மகுடமும் ஆடை அணிமணிகளும் வெகு
பொருத்தமாக இருக்கும். அதுபோல ஜெயலலிதாவுக்கும் ஆடை அணிமணிகள் மிக
அழகாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பொருத்தமாக வழங்கப்பட்டிருக்கும்.
அவர் ஒரு சிறிய பாம்பு குட்டி போன்ற நெற்றிச்சுட்டி அணிந்து இருப்பது
வேடிக்கையாக இருக்கும்இ ஏனென்றால் கிளியோபாட்ரா இறுதியில் தான் வளர்த்த
பாம்பையே தன்னைக் கொத்த விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். எனவே
அவருடைய அலங்காரத்தில் பாம்புகள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பாடல்
காட்சியின் பின்புலத்தில் பிரமிடுகள் அழகாக காட்சியளித்தன.
எம்.ஜி.ஆர்., எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு
பிறகு பங்கேற்ற முதல் படப்பிடிப்பு 'நினைத்தேன் வந்தாய்' பாடல்
காட்சியாகும். மேக்கப்புடன் படப்பிடிப்பு நிலையத்துக்கு வந்த எம் ஜி ஆரை
இயக்குனர் நீலகண்டன் பெரிய மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது 'நினைத்தேன்
வந்தாய் நூறு வயது; கேட்டேன் தந்தாய் ஆசை மனது' என்ற பாடலை ஒலிக்கச்
செய்தனர். எம்.ஜி.ஆர். பிழைத்து வந்து விட்டார்இ இனி அவருக்கு நூறு வயது
தான் என்று அங்கிருந்தவர்கள் அவரை வாழ்த்தினர். அங்கு வந்திருந்த கவிஞர்
வாலியைப் பார்த்து எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் நீங்கள் சொன்ன சொல்
பலித்துவிட்டது நான் பிழைத்து வந்து விட்டேன் எனக்கு நூறு வயது தான்
என்று தெரிவித்தார்.
உரிமைக்குரல் படத்தில் சோகக் காட்சிக்கு என எழுதப்பட்டிருந்த ஒரு பாடலை
எம்.ஜி.ஆர். கனவு காட்சியாக மாற்றி பட வெளியீட்டுக்கு அதிக நாள் இல்லை
என்பதனால் சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் அதி வேகமாக செட் அமைத்து
மினியேச்சர் உத்தி முறையில் மிகச்சிறிய உருவங்களை வைத்து அத்துடன்
இவரும் லதாவும் ஆடிப்பாடும் காட்சிகளை இணைக்க செய்து பல விதமான உடைகளை
அணிந்து வந்து அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இப்பாடல் காட்சியை
அமைத்துவிட்டார்,
'விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் காற்றே
உனக்காகவே நான் வாழ்கிறேன்'
என்ற சோகப்பாடல் ஒரு அழகான கனவு பாடலாக உரு மாற்றப்பட்டது.
கனவுப் பாடலில் சர்வ சமய சமரச நெறி
இப்பாடல் காட்சியில் சிவபெருமான், பார்வதியை போல ஒரு காட்சியில்
எம்.ஜி.ஆரும்இ லதாவும் தோன்றுவார்கள். அப்போது எம்.ஜி.ஆர். புலித்தோல்
உடை அணிந்து தலையில் ஜடாமுடி தரித்து காட்சியளிப்பார். கையில் சூலம்
மட்டும் இருக்காது. அடுத்த வரிகளைப் பாடும் போது இருவரும் கிறிஸ்தவ
மதத்தைச் சேர்ந்த தேவதூதர்கள் போல முதுகுக்குப் பின்னே இரண்டு இறக்கைகளை
வைத்துக்கொண்டு ஒரு படிக்கட்டில் குதித்து இறங்கி வருவார்கள்இ பிறகு
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் போல உடையணிந்து பிறை நிலவின் நடுவே
காட்சி அளிப்பார்கள். இவ்வாறு மூன்று மதத்தினரையும் திருப்திப்படுத்தும்
வகையில் அவர்களுக்கு ஏற்ற உடைகளை அணிந்து பாடலைப்பாடி அவர்கள் ரசிக்கும்
வகையில் அவர்களின் உள்ளம் கவரும் வகையில் படக்காட்சியை அமைப்பதில்
எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார்.
மினியேச்சர் உத்தி முறை
விழியே கதை எழுது என்ற கனவுப் பாடல் காட்சியில் சிறிய மண்டபம் போலவும்
சங்கின் மீது வைக்கப்பட்டுள்ள பூங்கொத்து கூடிய ஒரு பூச்செடிகளும் பூ
ஜாடிகளில் இவர்கள் ஆடும் போது இரண்டு பக்கங்களிலும்
வைக்கப்பட்டிருக்கும். இதை மினியேச்சர் உத்திமுறை என்பர். செட்
அமைப்பதற்கு கால தாமதமாகும் என்பதால் இவ்வாறு சிறிய பொம்மைகளைக் கொண்டு
இந்த காட்சியை அழகுறத் தயாரிக்கப்பட்டது.
இரவு காட்சி கனவுகள்
இரவில் கற்பனையும் கனவும் தோன்றும் போது இருளும் நிலவும் குளிர்ச்சியும்
சேரும் வகையில் எம்.ஜி.ஆரின் கனவு காட்சிகள் உருவாக்கப்பட்டன.
மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்கார வேலனைக் காதலிக்கும் வக்கீல்
மகளான ஜெயலலிதா கனவு காண்பதாக ஒரு பாடல் உண்டு. இரவு நேரத்தில் மிக
அழகான உடையில் சுற்றிலும் வண்ண ஒளி விளக்குகள் ஒளிர அப்பாடல் காட்சி
படம் பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். தங்க நிறத்தில் சபாரி சூட்டும்,
ஜெயலலிதா வெள்ளை நிற புடவையில் வயலட் நிற 'சம்கி'யால் அலங்கரிக்கப்பட்ட
முந்தானை உடைய சேலையை அணிந்து இப்பாடல் காட்சியில் ஆடிப் பாடுவார்கள்,
'தொட்டுக் கொள்ள வா நெஞ்சில் தொடுத்து கொள்ள வா
பட்டுகொள்ள வா மெல்ல பழகிக் கொள்ள வா
கட்டிக்கொள்ள வா உன்னை கலந்துக் கொள்ளவா
கட்டிக்கொள்ள வா வா வா மெள்ள தழுவிக் கொள்ள வா'
என்ற பாடல் தொடங்கும். அப்போது அவர்களின் பின்புலத்தில் உதயசூரியன்இ
தாமரை மற்றும் இதயத்திற்குள் புகுந்த காதல் அம்பு ஆகியவை ஒளி விளக்கு
அலங்காரத்தில் ஜொலிக்கும். காதல் காட்சியிலும் தன்னுடைய கட்சி சின்னத்தை
காண்பிப்பது எம்.ஜி.ஆரின் கொள்கைப் பிரச்சார உத்தி ஆகும்.
இந்தப் பாடல் காட்சி மதுரை அருகே உள்ள வைகை அணைக்கட்டு பகுதியில்
எடுக்கப்பட்டது. படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டம் இரவு
10 மணி ஆகியும் வீட்டுக்கு திரும்பி போகும் எண்ணம் இல்லாமல்
உட்கார்ந்தபடியே இருந்ததால் எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் மெகாஃபோனை
வைத்துப் பேசினார். ''எல்லோரும் வீட்டுக்குப் போங்கள் இத்துடன் நாங்கள்
படப்பிடிப்பை முடித்துக் கொள்கிறோம், இனியும் நீங்கள் இங்கு இருந்தால்
உங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும் உங்களுக்கு இனி
பேருந்துகள் இருக்காது. நீங்கள் வீடு போய் சேர முடியாது. எனவே, இப்போதே
புறப்பட்டுப் போங்கள்'' என்று அன்புக்கட்டளை இட்டார். அனைவரும் களைந்து
சென்றனர்.
எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு நடப்பதாக அறிந்ததும் சுற்றியுள்ள
கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து வைகை
அணைக்கட்டுப் பகுதியில் குவிந்துவிட்டனர். அவர்களைச் சுற்றி
அமைந்திருக்க படப்பிடிப்புக்கு கேமரா கோணங்களை வைக்கும்போது கேமராவை
சரியான இடத்தில் வைத்துவிட்டு ஒளிப்பதிவாளர் வந்து எம்.ஜி.ஆரிடம்
தெரிவிப்பார். உடனே எம்.ஜி.ஆர். அந்த கேமரா முன் போய் நின்று
கூட்டத்தைப் பார்த்து இரண்டு பக்கமும் கையை விரித்து காட்டுவார் கூட்டம்
மெல்ல மெல்ல அவர்கள் கை குறிக்கும் இடம் வரை விலகிச் சென்று கொண்டே
இருக்கும். அந்தப் பகுதியில் மனிதர்களின் தலையே தெரியாத அளவுக்கு
கூட்டம் ஒதுங்கிவிடும். அதன்பிறகு அந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்.
இவ்வாறு எம்.ஜி.ஆரின் கை அசைவுக்கு கட்டுப்பட்டு ரசிகர்களின் கூட்டம்
முழு ஒத்துழைப்பு கொடுத்து அங்கிருந்து இந்த படப்பிடிப்பை முடிக்க
உதவியது. வைகை அணைக்கட்டு பகுதியில் 'பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா'
எனத் தொடங்கும் பாடலும்இ 'தொட்டுக்கொள்ள வா' என்ற பாடல் காட்சியும்
எடுக்கப்பட்டது.
தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவின் கனவுக் காட்சியாக ஓர் யாவு
பாடல் காட்சி அமைந்திருந்தது.
'மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவது என்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோற்றம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோற்றம் தானோ'
என்ற பாடல் 'நைட் எஃபெக்ட்' உள்ள பாடலாகும். இதுவும் ஒரு அணைக்கட்டில்
எடுக்கப்பட்டதுதான்இ இவர்களின் இடம்பெறும் காட்சி முழுக்க ஒளி வசதி
செய்யப்பட்டிருந்தது. அதாவது 'புல் பிரேம் லைட்டிங்'
செய்யப்பட்டிருந்தது. இப்பாட்டு காட்சிக்கு எம்.ஜி.ஆர். மன்னர்
உடையிலும் ஜெயலலிதா மேக்ஸி போன்ற நீண்ட ஜிகு ஜிகு உடையிலும்
காட்சியளித்தார். இதுவும் ராஜா ராணி உடை போலவே இருந்தது. இப்பாடலும்
இரவில் மின்னொளியில் இருவரும் பாடுவதாக அமைந்த ஒரு கனவு பாடல் காட்சி
ஆகும்.
முருகனாகத் தோன்றிய கனவுப்பாடல்
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய போது அதன் தலைவரான அறிஞர் அண்ணா 'நாங்கள்
பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க
மாட்டோம்' என்றார். அதாவது கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை,
இருக்கிறார் என்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரு பொதுவான கருத்தை
முன் வைத்தார். இதனால் எம்.ஜி.ஆர். தன் படங்களில் தெய்வத்தை
நிந்திப்பதும் இல்லை, போற்றுவதும் இல்லை. கோயிலுக்கு செல்வது போல
காட்சிகளில் நடிப்பது இல்லை.
எம்.ஜி.ஆரின் உற்ற நண்பரான சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரிடம் வேண்டி
விரும்பி கேட்டுக் கொண்டதன் பேரில் தேவரின் வழிபடு தெய்வமாக முருகனாக
நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். தேவர் எடுத்த தனிப்பிறவி படத்தில்
ஜெயலலிதாவின் கனவு காட்சியில் எம்.ஜி.ஆர். முருகனாகவும், ஜெயலலிதா வள்ளி
மற்றும் தெய்வானை என இரண்டாகவும் தன்னை கற்பனை செய்து பாடுவதாகப் பாடல்
காட்சி அமைக்கப்பட்டது.
'எதிர் பாராமல் நடந்தடி
முகம் கண்ணுக்குள் விழுந்தடி
புதிய சுகம் ஒன்று புகுந்ததடி
அது பொழுதுக்கு பொழுது வளருதடி'
என்ற பாடலில் இவர்கள் இருவரும் முருகன் வள்ளி தெய்வானையாக
நடித்திருந்தனர். அப்போது எம்.ஜி.ஆர். அந்த காட்சியில் நடிக்க மிகவும்
யோசித்ததாகவும் பிறகு சம்மதித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
முருகனாக தோன்றும்போது எம்.ஜி.ஆர். முகத்தில் அதீத சாந்தம்
குடிகொண்டிருந்தது. இதற்காக அவருக்கு புதிய அணிமணிகள் செய்தார்கள்,
தேவர் மற்றவர்கள் பயன்படுத்திய கம்பெனி நகைகளை எம்.ஜி.ஆருக்குப்
பயன்படுத்த விரும்பவில்லை. 30 கிலோ எடையில் வேல் ஒன்று செய்யப்பட்டது.
இந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் அந்த வெள்ளி வேலை தேவர்
எம்.ஜி.ஆருக்குப் பரிசாக அளித்து விட்டார். எம்.ஜி.ஆர். அதை தன்
பெற்றோர்கள் படம் இருக்கும் அறையில் வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆருக்கும் முருகன் மீது தனி பக்தி உண்டு என்பதனால் அவர் இந்த
வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். மருதமலை முருகன் கோயிலுக்கு ஏறும்
படிக்கட்டுகளுக்கு தேவர் விளக்கு வசதி செய்து கொடுத்த போது, கோவைக்கு
விவசாயி படத்தின் படப்பிடிப்புக்கு வந்திருந்த எம்.ஜி.ஆரை அழைத்துவந்து
அந்த விளக்குகளுக்கான 'ஸ்விட்சை ஆன்' செய்து தரும்படி வேண்டிக்கொண்டார்.
எம்.ஜி.ஆரும் தேவரின் விருப்பத்திற்கு இணங்க அங்கு வந்து அந்த 'ஸ்விட்சை
ஆன் 'செய்தார். அந்த இடத்தில் இதைக் குறிக்கும் ஒரு கல்வெட்டும்
வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு விருப்பமான தெய்வங்கள் என்று அவரது
தாயார் வணங்கி வந்த காளி, தேவர் வணங்கி வந்த முருகன் மற்றும் இயேசு
கிறிஸ்து என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
கதையைக் காட்டும் கனவு
எம்.ஜி.ஆர். படங்களில் ஒரே ஒரு கனவு பாட்டு மட்டும் அந்தப் படத்தின்
கதையின் போக்கு மாறி அதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.
அப்பாடல் நான் ஆணையிட்டால் படத்தில் வரும்
'நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்துக் கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அழைத்துக் கொண்டேன்'
என்ற பாடலாகும்.
எம்.ஜி.ஆர். தான் காதலித்த சரோஜாதேவியை விட்டுவிட்டு தன் மாமன் மகளான
கே ஆர் விஜயா மணக்க வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகியிருப்பார்.
இந்த நெருக்கடியிலிருந்து எப்படி தன்னை விடுவித்துக் கொள்வது என்று அவர்
அல்லும் பகலும் ஆலோசித்து வரும் வேளையில் கே ஆர் விஜயா அவரிடம் வந்து
தான் செழியன் என்ற இன்ஸ்பெக்டரை காதலிப்பதாகவும் அதை எம்.ஜி.ஆர். தான்
அப்பாவிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார். உடனே
எம்.ஜி.ஆர். தான் அந்த சிக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டது உணர்ந்து
மகிழ்ந்து கண்டிப்பாக உனது திருமணத்தை நானே முடித்து வைக்கிறேன் என்று
விஜயாவுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு ஓடோடி வந்து சரோஜா தேவியிடம்
இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்வதாக அமைக்கப்பட்ட பாடல்இ 'நல்ல வேளை
நான் பிழைத்துக் கொண்டேன்' என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்' என
தொடங்கும் பாடல் ஆகும்.
பாடல் காட்சியின் இடையே எமது அடுத்த தயாரிப்பு அடிமைப்பெண் என்று
விளக்கொளியில் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு அறிவிப்பு பலகை காட்டப்படும்.
நான் ஆணையிட்டால் படம் ஆர் எம் வீரப்பன் தயாரித்த சத்யா மூவிஸ் ஆகும்.
ஆர் எம் வீரப்பன் எம்.ஜி.ஆரிடம் பணிபுரியும் மானேஜர் ஆவார். அடிமைப்பெண்
படம் எம்.ஜி.ஆர். பிக்சர்சாரின் சொந்த தயாரிப்பாகும். அடிமைப்பெண் படம்
1960களிலேயே திட்டமிடப்பட்ட போது பானுமதியும்இ அஞ்சலிதேவியும் நடித்தனர்.
அது நின்று போய், அதன்பிறகு சரோஜாதேவி, கே ஆர் விஜயா ஜெயலலிதா ஆகியோரை
கொண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது ஜெயலிதா அடிமைப்பட்ட பெண்ணாக
நடித்திருந்தார். சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பு
நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்போதும் படம்
நின்றுபோய்விட்டது. கடைசியில் 1969இல் ஜெயலலிதா மட்டும் இரண்டு
வேடங்களில் நடித்து வெளியாயிற்று. ராஜஸ்ரீ மட்டும் ஒரு சிறிய வேடத்தில்
நடித்திருந்தார். கதையும் முற்றிலும் மாற்றி அமைக்கப் பட்டிருந்தது.
இந்த படத்திற்கான விளம்பரம் தான் 'நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்'
என்ற பாடல் காட்சியின் இடையே காட்டப்பட்டது. இது கதையோடு கூடிய பாடலாக
அமைந்ததால் கதையின் முக்கிய திருப்பத்தை இந்த பாடலின் முதல் வரி
உணர்த்தியது.
விதவிதமான வண்ண உடைகள்
அண்ணா திமுக ஆரம்பித்த பின்பு எடுக்கப்பட்ட படங்களில் இடம்பெற்ற
காட்சிகளில் ஒரு பாட்டுக்கு எம்.ஜி.ஆர். ஏழெட்டு உடை அணிந்து வந்தார்.
இரண்டு வரிகளுக்கு ஒரு உடை பின்னணி இசைக்கு ஒரு உடை என்று நிறைய உடைகளை
அணிந்து விதவிதமான வண்ண வண்ணமாக அலங்காரமாக காட்சியளித்தார். குறிப்பாக
'சிரித்து வாழ வேண்டும்' படத்தில் லதாவின் கனவில் வரும் பாடல் ,
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ, அந்த பார்வை எந்தன் மீதோ
என அவரும்
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்று
அந்த பார்வை எந்தன் மீதோஇ அந்த பார்வை எந்தன் மீதோ
என லதாவும் பாடுவதாக அமைந்த கனவுப் பாடலில் எம்.ஜி.ஆர். விதவிதமான
பேண்ட் ஷர்ட் கழுத்தில், இடுப்பில் கட்டும் பெல்ட் காலில் அணியும் ஷு,
கையில் பிரேஸ்லெட் என ஒவ்வொன்றும் உடைக்கு தக்கபடி மாறிக்கொண்டே
இருக்கும். பின்னணி இசை வரும் இடத்தில் கூட புதிய உடை அணிந்து வருவார்.
இதில் கழுத்தில் கட்டியிருக்கும் 'டை' கூட வித்தியாசமாக இருக்கும்.
டான்ஸ் மாஸ்டர் சலீம் நளினமான நடன அசைவுகளை கொண்டு இப்பாடலை வடிவமைத்து
இருந்தார்.
'இன்று போல் என்றும் வாழ்க' படத்தில் இடம்பெற்ற
'என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது
உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது.'
என்ற பாட்டிலும் எம்.ஜி.ஆர். விதவிதமான உடையில் பல வண்ண நிறங்களில்
பலவிதமான பின்புலத்தில் விதவிதமான துணிமணிகளுடன்
accessories எனப்படும்
பிரேஸ்லெட்
(bracelet)
பெல்ட்,
கழுத்தணி, காலணி போன்றவை மற்றும் முடியலங்காரம் ஆகிய அனைத்தும்
நிமிடத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டிருக்கும். கழுத்தில் பாசிகள் கூட
அணிந்திருப்பார். இவ்வாறாக காட்சிகளை காணும் போது ரசிகர்கள் மிகவும்
மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர். இப்படம் ஒரு கொடியே பத்து இலட்சம்
வசூலித்த படம் ஆகும்.
கனவுக் காட்சியில் ஒரு முத்தக் காட்சி
எம்.ஜி.ஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில்
லதாவுக்கும் பத்மப்ரியாவுக்கு இரண்டு கனவு பாடல்கள் உண்டு .
'தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழைக்கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திர லோகம்
அந்தி மாலையில் அந்த மாரனின் கனையில் ஏன் இந்த வேகம்'
என தொடங்கும் பாடல் லதாவின் கனவாக அமைந்தது. தான் காதலிக்கும்
பைந்தமிழ்குமரன் தான் பாண்டிய நாட்டு இளவரசன் சுந்தரபாண்டியன் என்பதை
அறிந்ததும் தான் பாண்டிய நாட்டு அரசியாகப் போகிறோம் என்ற கனவில் ஒரு
அரண்மனையில் அரசனும் அரசியுமாகத் தாங்கள் வாழப் போவதை நினைத்து கனவு
காண்பார். இந்தக் காட்சி ஜெய்ப்பூர் அரண்மனையில் எடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு மிக அழகான கிரீடம் நகைகள் உடை என்று தரப்பட்டிருந்தது.
அவருடைய மார்பில் அணிந்திருந்த சிவப்பு கல் மாலை தனிப்பெரும் கற்களாக
இணைக்கப்பட்டு ஜொலித்தது. அவருடைய தங்க கிரீடத்தில் ஒரு நீண்ட இறகு
சொருகப்பட்டு இருந்ததுஇ புதுமையாகக் காட்சியளித்தது. இந்தப் பாடல்
காட்சியில் ஒரு மயில் சிலையின் அருகில் நின்று இருவரும் பாடும்போது லதா
அந்த மயிலுக்கு பின்னால் சென்று மறைவார். அப்போது அங்கு ஒரு முத்தக்
காட்சி இடம் பெறுகிறது என்பதை சூட்சுமமாக விளக்கும் வகையில் அந்த மயில்
தன் முகத்தை நாணத்தோடு திருப்பிக் கொள்வதாக கேமரா மூலமாக அந்த காட்சி
விளக்கப்பட்டிருந்தது. கனவுக் காட்சிகளில் அமைந்த ஒரு நயமான
முத்தக்காட்சி ஆகும்.
எம்.ஜி.ஆர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதிலும் மகிழ்ச்சி
படுத்துவதிலும் தனக்கு நிகர் தானே என்ற வகையில் அழகான மகிழ்ச்சியான
காட்சிகளை எடுப்பதில் வல்லவர். ஏழைகளின் துன்பம் தீரும் வகையில்
அவர்களின் கனவுகளில் கற்பனையில் ராஜா ராணியாக மகிழ்ச்சியாக பலவித உடைகளை
உடுத்தி பலவித ஆபரணங்களைக் அணிந்து கொண்டு இன்பமாக ஆடிப்பாடி மகிழும்
வகையில் இந்தக் கனவுக் காட்சிகளை எம்.ஜி.ஆர். அமைத்தார். காட்சிகளைப்
பார்க்கும்போது ரசிகர்களின் மனம் அந்த காட்சியில் ஈடுபட்டு தானும் அந்த
இடத்திலிருந்து அந்த மகிழ்ச்சியைப் பெறுவதாக ஒரு நிறைவை பெறுகிறது.
ரசிகர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும்வகையில் ஒவ்வொரு படத்துக்கும்
வெவ்வேறு வகையில் கனவு காட்சிகளை அமைத்தார்.
பாடலாசிரியருக்கு வாய்ப்பு
மீனவ நண்பன் படத்தில் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் எழுத வாய்ப்பு
தரவில்லை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை அழைத்து அவருக்கு ஒரு பாடல்
எழுத வாய்ப்பு கொடுங்கள் என்றார். ஸ்ரீதர் படத்தில் பாடலுக்குரிய
காட்சிகள் எல்லாம் முடிந்து போயிற்று. இனி ஒரு காட்சியும் இல்லையே
என்றார். ஒரு கனவுக் காட்சி வைத்து அவரை எழுதச் சொல்லுங்கள் என்று
சொல்லிவிட்டார். அவ்வாறு எழுதப்பட்டதுதான்
'தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ
மாலை நேர பொன்மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ'
எனத் தொடங்கும் பாடல். எம் ஜி ஆருக்குத் தன் படங்களில் கனவு காட்சிகள்
இடம் பெற்றால் அதை ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை
இருந்ததனால் இயக்குனரின் கருத்தையும் மீறி அவரால் கனவு காட்சிகளை தன்
படங்களில் புகுத்த முடிந்தது. பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கும்
நல்வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கும் இப்பாடல் நல்ல வரவேற்பு பெற்று
வருகிறது.
தன் ரசிகர்களின் கனவு என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து உணர்ந்து
எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் காட்சிகளை
அமைத்தார். தனக்கு ஏற்ற வகையில் விதவிதமான உடைகளை அணிந்து நடிக்கவும்,
இந்த கனவு காட்சிகளை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய முகவசீகரமும்
மேனி வண்ணமும் இதுபோன்ற காட்சிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது தான்
இயற்கை அவருக்கு அளித்த கொடை.
கனவு நனவானது
எம்.ஜி.ஆர். ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தன் படத்தை பார்த்த ரசிகர்களின்
கனவுகள் நனவாகும் வகையில் பல புதிய திட்டங்களை தீட்டி அவர்களுக்கு பல
நன்மைகளைச் செய்தார். தமிழகத்தின் வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக இருக்க
சத்துணவுத்திட்டமும, அறிவோடு வளர பள்ளிகளில் இலவசப் புத்தகம் இலவசச்
சீருடை, இலவசக் காலணி என நிறைவேற்றியதும் அவர் மக்கள் மீது கொண்டிருந்த
அன்புக்கு சான்றாக நிற்பனவாகும். இன்றும் இந்தியாவில் தமிழகம் குழந்தை
நலம்இ தாய்-சேய் நலம், சுகாதாரம் ஆகிய துறைகளில் முதலிடத்தை
பெற்றிருப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அன்று ஆரம்பித்து வைத்த அறிவு
மற்றும் ஆரோக்கியத்துக்கு வழிவகுத்த சத்துணவு திட்டம் ஆகும்.
தமிழகத்தில் பட்டதாரிகள் அதிகம் இருப்பதற்கு காரணம் அன்றைக்கு பிள்ளைகள்
பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளிலேயே பாடப்புத்தகம்இ உணவுஇ சீருடை
ஆகிய மூன்றையும் பெற்றுக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்த எம்.ஜி.ஆர்.
தீட்டி செயல்படுத்திய திட்டங்களே ஆகும்.
ஜோடியாக சைக்கிள் சவாரி
நிறைவாக எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த சமயத்தில் தன்னுடைய
கட்சிக்காரர்களை அழைத்து வருங்கால திட்டம் குறித்து பேசிக்
கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து நின்று 'அண்ணன் டபுள்ஸ் போனா போலீஸ்
பிடிக்குது . வீட்டம்மாவைக் கூட்டிக்கிட்டு ஒரு படத்துக்கு கூட போக
முடியல' என்றார். எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே தலையாட்டினார். இது
போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளை கூட அந்தக் கூட்டத்தில் தொண்டர்கள்
எடுத்துக் கூறினர். அதிமுக கட்சி உட்கட்சி ஜனநாயகத்துக்கு உதாரணமாக
அமைந்த கட்சி ஆகும். அங்குக் கூட்டத்தில் சாதாரணத் தொண்டன் பேசுவதையும்
எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிப்பார். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதும்
சைக்கிளில் டபுள்ஸ் போகலாம் என்று அனுமதி வழங்கினார். அதன் பின்னர்
எம்.ஜி.ஆர். ஒரு சந்திப்பின்போது இந்த குறிப்பிட்ட தொண்டரை பார்த்து 'என்ன
சந்தோஷமா' என்று கேட்டார். அந்த தொண்டரோ மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்
போனார்இ கட்சி ஆரம்பித்த காலத்தில் என்றோ ஒருநாள் நான் சொன்னதை மனதில்
வைத்திருந்து இன்றைக்கு டபுள்ஸ் போக அனுமதி கொடுத்துவிட்டார். இவரல்லவோ
தலைவர் என்று மகிழ்ந்து புளங்காகிதம் அடைந்தார். மனைவியோடு இணைந்து
கணவர் சைக்கிளில் செல்வது அக்காலத்தில் தனி சுகம் என்பதை எம்.ஜி.ஆர்.
உணர்ந்திருந்ததால் அதற்கு முன்னுரிமை கொடுத்தார். ஆண் பெண்ணின் எண்ணம்,
எதிர்பார்ப்பு ஆகியவற்றை எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்.
தன் ரசிகர்களின் தொண்டர்களின் வேண்டுகோள் சிறியதாக இருந்தாலும்
பெரியதாக இருந்தாலும் அதை தன் மனதில் வைத்து அதற்குரிய காலம் வரும்போது
அதை நிறைவேற்றி தருபவர்தான் எம்.ஜி.ஆர். இந்த ஒரு அருங்குணம் அவரை
மக்களோடு இறுக இணைத்து வைத்திருந்தது. ஆக படங்களில் மட்டுமல்ல
நிஜத்திலும் எம்.ஜி.ஆருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அவர்கள் கண்ட
கனவுகள் நிறைவேறின.
எம்.ஜி.ஆர். என்றேனும் ஒருநாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச்
செயல்படுவாரே-யானால்இ அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது
தெளிவு.
- அறிஞர் அண்ணா.
முற்றும்.
பிரிதொரு தொடரில் சந்திப்போம்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|