திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 17)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
கவியரசர்
தன்னை பெண்ணை, நாட்டை பாட்டை, இயற்கையை இதயங்களை, சமத்துவத்தை சமயங்களை,
மனிதத்தை மானுடக் குற்றங்களை, அகிலத்தை அண்டத்தை வியந்து வியந்து,
மகிழ்ந்து மகிழ்ந்து, உருகி உருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து அழகுறப்
பாடியவர்!
அவருக்கு ஆரம்பத்தில் ஆசை,மாளிகை வாழ்வில் மன மகிழ்ச்சி,அரசியல்
மேடைகளில் புது எழுச்சி,திரையுலகில் உல்லாசம்,குடும்பத்தைப்
பார்க்கும்போது மட்டும் இனிய பாசம் என்று பல்வேறு கோணங்களில் அவர்
இயல்புகள் மிளிர்கின்றன.
ஜனனம் தொடங்கித் தன்வழி நடந்து
கோடை, வசந்தம், மழை பல கடந்து
ஆடைகள் திருத்தி ஆசைகள் மாற்றி
கோடி நினைத்துக் குறையவே முடித்து
உண்ணல் உறங்கல் ஊடல் கூடல்
எண்ணல் எழுதல் இவைதான் வாழ்வென
பாதிவழி வரைப் பயணம் முடிந்தது
மீதி வழியோ வியப்பும் திகைப்பும்.
தன் வாழ்க்கை வண்டி இப்படித்தான் பயணித்தது என்பதை கவித்துவத்துடன்
சொன்னவர்.
அத்தான்..என்னத்தான்:
இராமச்சந்திரக் கவிராயர் தன் வறுமையை இப்படி நகைச்சுவையாகக்
குறிப்பிட்டார்.
கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா?
இதனைப் படித்ததும் கவிஞர் டான் டானென்று தான் தான் என்று பாடலை
எழுதினார். பாடல் முழுவதும் தான் தான், தான்! பாவமன்னிப்பு படத்தில்
இடம் பெற்ற பாடலிது. அவரின் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
அத்தான்...என்னத்தான்..-அவர்
என்னைத்தான் ..எப்படிச் சொல்வேனடி.-அவர்
கையைத்தான் கொண்டு மெல்லத்தான் –வந்து
கண்ணைத்தான் ...எப்படிச் சொல்வேனடி?
மொட்டுத்தான் கன்னி சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி..?
கலவியின் உச்சத்தை, மிச்சம் வைக்காமல் சொல்லிவைத்தார்.
மானனீகை:
பெருங்கதை என்னும் இலக்கியத்தில் உதயணன் மனைவியாகிய மானனீகையின் கண்ணழகு
வியக்கத்தக்கது. கண்கள் தம்முள் களிப்புற்றன.வேல்போன்று
விளங்கின.செம்மீன் என மிளிர்ந்தன.கூற்றுவனைப் போல காண்போரை வருத்தின.
நன்கு மலர்ந்தன. கூம்பின; செவிகாறும் சென்று மீண்டன. மற்றவரோடு பேசுவன
போன்று தோன்றின. செங்கழுநீர் நீர், மலரையும் நீரில் வாழும் கயல்
மீனையும் ஒத்தன.
கம்பன் கோசல நாட்டு மங்கையரின் கண்கள் புறம் செலாக் கண்கள் என்று
பெருமிதம் பேசுவார்.
ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்ணும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம்.
இவ்வாறாக பெருங்கதையில் கொங்கு வேளிர் வருணித்த கண்ணழகையும் கம்பன்
கூறிய நெறிபிறழாக் கண்களையும் கண்ணதாசன் அவர்கள்.
முத்துக்களோ கண்கள்.....(நெஞ்சிருக்கும் வரை)
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே (மதுரை வீரன்.)
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ? (மன்னாதி மன்னன்)
பொன்னென்ன பூவென்ன கண்ணே (அலைகள்)
அழகிய கண்ணே உறவுகள் நீயே (உதிரிப்பூக்கள் )
என்பார்.
திரிசடை:
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதைக்கு, உற்ற அன்பு செய்பவளாக
விபீடணனின் மகளான திரிசடை விளங்கினாள். “அன்பில் தாயினும் இனியள்”
என்கிறார் கம்பன். ஒருநாள், காவல் அரக்கியர் அனைவரும் கள்ளுண்டு
கண்ணயர்ந்தபோது, சீதை தன் புருவமும் கண்ணும் இடது பக்கம் துடிப்பதாகக்
கூறி “ஏன் இப்படி?” என்று வினவுகிறாள்.திரிசடை சீதைக்கு ஆறுதல் மொழிகளை
மங்கல வாழ்த்தாகக் கூறி,உன் துணைக் கணவன் உறுதல் உண்மையால் உன் இடது கண்
துடிக்கிறது.நல்ல செய்தியோடு ஒரு தூதுவன் வருவான் என்கிறாள்.
ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம் என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள்.
கம்பனின் வரிகளுக்கு ஈடாக கவியரசரின் நாயகிக்கும் இடது கண் துடிப்பதாக
குமரிக்கோட்டம் என்ற படத்தில் இந்தப் பாடலை எழுதினார்.
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என்று
காதல் தேவதை சொன்னாள்.-என்
இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்!
தொடரும்.....
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|