ஔவையார்: ஆத்திசூடி இயக்கத்தின் முன்னோடி

பேராசிரியர் இரா.மோகன்


‘ஆத்திசூடி’ அகர வரிசையில் ஔவையார் படைத்துள்ள ஓர் அற நூல். அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் விழுமியங்களை 108 எளிய, இரு சீர் ஓரடிச் சூத்திரங்களால் உணர்த்தும் உயரிய நூல் இது. மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் குறிப்பிடுவது போல், “கலம்பகம், தூது, பிள்ளைத் தமிழ், உலா, கோவை போல ஆத்திசூடி என்பதும் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாகவும் குழந்தை இலக்கிய வரலாற்றுத் தோற்றுவாயாகவும் பெருமை பெற்றுள்ளது. பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’ எழுதினார். பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார். இங்ஙனம் ஆத்திசூடி இயக்கம் பரவிவரக் காணலாம்”. இனி, ஔவையார் ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இன்றி-யமையாத வாழ்வியல் விழுமியங்கள் பத்தினைக் குறித்துக் காண்போம்.

1. அறச்செயல் செய்ய ஆசைப்படு!

எவ் வகையான அறத்தைச் செய்வதற்கும் முதலில் தேவைப்படுவது உள்ளார்ந்த விருப்பமே ஆகும். இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஔவையார் தம் ஆத்திசூடியினை, “அறஞ்செய விரும்பு” எனத் தொடங்கி-யுள்ளார். ‘அறத்தைச் செய்’ எனப் பொதுப்படக் கூறாமல், ‘அறச்செயல் செய்ய ஆசைப்படு’ என அவர் கூறியிருப்பது அடிக்கோடு இட வேண்டிய அடிப்படையான செய்தி ஆகும்.

2. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்!

அவசரப்படுவதாலோ பதறுவதாலோ ஒரு செயலில் நமக்கு வெற்றி வசப்பட்டு விடாது. செய்யும் செயல்களைச் செம்மையாக – எண்ணித் துணிந்து, திட்டமிட்டு, தொலைநோக்குடன் – செய்தல் வேண்டும். அப்போது தான் வாழ்வில் வெற்றி வாகை சூட முடியும், இதனை உணர்த்தும் ‘செய்வன திருந்தச் செய்’ என்னும் ஆத்திசூடி, இன்றைய மேலாண்மை இயலில் வலியுறுத்தப் பெறும் பால பாடம் ஆகும்.

3. மன வலிமையைக் கைவிடாதே!

வாழ்வில் தடம் பதிக்க விரும்புவோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய ஒரு பொன்னான விதி உண்டு. அது, எந் நிலையிலும் ஊக்கத்தினை – மன வலிமையை – கைவிட்டு விடாமை ஆகும். இக் கருத்தினை உணர்த்தும் ஆத்திசூடியே, ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதாகும்.

4. எதற்கும் கலக்கம் அடையாதே!

வாழ்வில் எதற்கும் கலக்கம் அடையகூடாது. ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!’ என்ற படி, எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; நம்மைத் தாக்க வரும் துன்பத்திற்கும் துன்பம் தரும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ‘மனந் தடுமாறேல்’ என்னும் ஔவைப் பிராட்டியின் ஆத்திசூடி இவ் வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது.

5. துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே!

வாழ்வில் துன்பம் வரத்தான் செய்யும்; அதன் வருகையைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால், துன்பம் நம்மைத் தாக்காமல் – அதற்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் – வாழக் கற்றுக் கொண்டால் போதும், துன்பத்தை வெற்றி கொண்டு விடலாம். இக் கருத்தினை உணர்த்துவதே, “துன்பத்திற்கு இடங்கொடேல்” என்னும் ஆத்திசூடி ஆகும். முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி நாம் அதனை விட்டுவிடல் ஆகாது. ‘முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று தானே வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்?

6. ‘ங’ எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு!

‘ஙப்போல் வளை’ என்பது சுற்றம் தழுவி வாழ வேண்டியதன் சீர்மையை உணர்த்தும் ஓர் அரிய ஆத்திசூடி. “‘ங’ எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு. ‘ங’ என்னும் எழுத்தானது தான் பயனுடையதாய் இருந்து பயன் இல்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாய் இருந்து, உன் இனத்தார் பயன் இல்லாதவர் ஆயினும் அவரைத் தழுவிக் கொள்” என்பது இச் சூடியின் மெய்ப்பொருள் ஆகும். “ஒரு மனிதன் உயர வேண்டும். உயர்ந்த அத்தனை பேரிடமும் பழகி, அனுபவங்களைக் கற்றுக் கற்று, ஆழமாகக் கீழே இறங்கி, பணிந்து, குனிந்து, உனக்குக் கீழே உள்ளவர்களையும் சேர்த்து உயரக் கொண்டு வர வேண்டும். அது தான் ‘ங’. அந்த ‘ங’ப் போல வளர வேண்டும்” என இச் சூடிக்குப் பொருள் காண்போரும் உளர்.

7.பொருளைப் போற்றி வாழ்வாயாக!

பண்டைத் தமிழர் பொருளின் அருமையினையும் தேவையினையும் நன்கு உணர்ந்திருந்தனர். அறம் பொருள் இன்பம் என்னும் விழுமியங்களின் வரிசை முறையில் பொருளுக்குத் தரப் பெற்றிருக்கும் நடு இடமும் இதனை உறுதி செய்யும். பொருள் இருந்தால் தான் ஒருவர் அறச் செயல்களை ஆற்ற முடியும்; இன்பம் நுகர்வதற்கும் பொருள் வேண்டும். ஆனால், ஒன்று: பொருள் வரும் வழி தீது இல்லாததாக இருத்தல் வேண்டும். ‘பொருள் செயல் வகை’ என்னும் தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ள வள்ளுவர்,

“அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்து
தீதின்றி வந்த பொருள்”

என மொழிவது குறிப்பிடத்தக்கது. வள்ளுவரை அடியொற்றி ஔவைப் பெருமாட்டியும், “பொருள்தனைப் போற்றி வாழ்” என ஓர் ஆத்திசூடி எழுதியுள்ளார். ‘வீண் செலவு செய்யாமல் பொருளைக் காத்துப் பெருக்கி வாழ்வாயாக!” என்பது இச் சூடியின் கருத்து ஆகும்.

8. மென்துயில் புரிக!

‘இலவம் பஞ்சின் துயில்’ என்னும் ஆத்திசூடிக்கு ‘இலவம் பஞ்சினால் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு’ எனப் பொருள் காண்பதில் இருந்து வேறுபட்டு, மகாவித்துவான் இரா.இராகவையங்கார் இச்சூடிக்கு வரைந்துள்ள பொருள் விளக்கம் மிகவும் நுட்பமானது; சிறப்பானது. ‘இலவம் பஞ்சு போல மெல்லத் தூங்குக’ என்பதே ஔவையார் இங்கே உணர்த்த விரும்பும் உண்மைப் பொருள். ‘இன்’ என்பது ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை உருபு; சிறுகாற்று வீசினாலும் பஞ்சு அசைவது போலச் சிறு ஒலி கேட்டாலும் விழித்துக் கொள்ளும் மென்துயில் – சிறுதுயில் – புரிய வேண்டும்; கும்பகர்ணனைப் போல் நெடுந்துயில் கொள்ளக் கூடாது.

9. ‘மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே!’

‘தையல் சொல் கேளேல்’ என்பது மிகுந்த கருத்து வேறுபாட்டிற்கு இடம் தரும் ஓர் ஆத்திசூடி. ‘பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க’ என்றோ, ‘தையல் உன் சொல்லைக் கேட்குமாறு செய்’ என்றோ இச் சூடிக்குப் பொருள் கூறுவது பொருத்தமாக இருக்குமா? இச் சூடியின் சரியான பொருள் இது தானா? ஒரு பெண்பாற் புலவராக இருந்து கொண்டு ஔவையார் இப்படிப் பாடி இருப்பாரா? ‘மனைவி சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடவாதே, ஆராயாமல் நடவாதே’ என்று ஆண்மகனுக்கு அடிப்படையான, இன்றி-யமையாத ஒரு வாழ்வியல் அறத்தினை உணர்த்தும் நோக்கிலேயே ஔவையார் ‘தையல் சொல் கேளேல்’ என்று பாடி இருப்பார். இங்ஙனம் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகின்றது.

“பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்றுமிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு” எனத் ‘தையலை உயர்வு செய்’ எனப் ‘புதிய ஆத்திசூடி’யில் பாடிய பாரதியாரே தம் கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

10. எக்காலத்தும் படித்துக் கொண்டே இரு!

உலக வரலாற்றில் சாதனை படைத்த வெற்றியாளர்கள் யாவருமே புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்-களாகவே இருந்து வந்துள்ளனர். ‘ஓதுவது ஒழியேல்’ என்னும் ஆத்திசூடியே அவர்கள் எந்நாளும், எப்போதும், எந்நிலையிலும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள முதன்மையான தாரக மந்திரம் ஆகும்.

ஔவைப் பிராட்டியார் ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இத்தகைய உயரிய விழுமியங்களை மனம் கலந்து, கருத்தூன்றிப் பயில்வோம்; அவற்றின் வழி வாழ்வில் நடப்போம்; இம் மண்ணிலேயே விண்ணைக் காண்போம்; பாரதி போற்றும் ‘தெய்வ வாழ்க்கை’யை வாழ்வோம்; ‘அமர நிலை’யை அடைவோம்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்