நத்தத்தனார் போற்றும் ‘கடையேழு வள்ளல்கள்’
எனும் மரபு
பேராசிரியர் இரா.மோகன்
‘மூத்தோர்கள்
பாடியருள் பாட்டும் தொகையும்’ எனத் ‘தமிழ் விடு தூது’ சங்க
இலக்கியத்தைச் சிறப்பித்துப் பேசும். இவற்றுள் ‘தொகை’ என்பது எட்டுத்
தொகை நூல்களைக் குறிக்கும்; ‘பாட்டு’ என்பது சிற்றளவாக 103 அடிகளையும்
(முல்லைப்பாட்டு), பேரளவாக 782 அடிகளையும் (மதுரைக் காஞ்சி) கொண்ட பத்து
நீண்ட பாட்டுக்களின் தொகுப்பு ஆகும். பத்துப்பாட்டில் செம்பாதியாக
ஆற்றுப்படை நூல்கள் அமைந்துள்ளன. ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் ஒன்றாக
இடம்பெற்றிருப்பதே சிறுபாண் ஆற்றுப்படை இது ஓய்மான் நாட்டு நல்லியக்
கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் குறிப்பிடுவது போல், “தமிழ்கெழு
மூவர் நிலங்களே இப்படிப் பாழ்பட்டுக் கிடக்க, கடையேழு வள்ளல்கள் எனப்
புகழப்பட்ட வேளிர் எழுவர், சிற்றரசர்களாய் இருந்தவர்கள் கொடைக் கடன்
பூண்டு உலகைக் காத்தனர். ‘கடையேழு வள்ளல்கள்’ என்ற மரபு இங்கே
பேசப்படுகின்றது ஓரறிவுப் பெருளாகிய முல்லைக்கு அது படர்ந்து வளரப்
பெருந்தேர் நல்கினான் பறம்பின் கோமான் பாரி. ஐயறிவுடைய கான மஞ்ஞை
மழையில் நடுங்குவதைக் கண்டு தன்னுடைய கலிங்கத்தை நல்கினான் பெருங்கல்
நாடன் பேகன். ஆறறிவு படைத்த மக்களில் இரவலர்க்கு ஈந்தவன்
காரி. நீண்ட
நாகம் ஒன்று தனக்குத் தந்த கலிங்கத்தை மக்கள் தொழும் ஆலமர் செல்வர்க்கு
அன்புடன் கொடுத்தான் ஆய். சாகாது வாழ வைக்கும் அழிந்து விளை நெல்லிக்
கனியைப் புரவலரினும் சிறந்தவர் புரவலர் எனக் கருதி
அதியன் ஔவைக்கு
ஈந்தான். ‘கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது’ கொடுத்தான்
நள்ளி. இப்படியல்லாமல் குறும்பொறை நன்னாட்டையே கோடியர்க்கு ஈந்தான்
ஓரிக் குதிரை ஓரி. மூவர் நாடு வறிதாய பின் ஈகைச் செந்நுகத்தை இப்படி
எழுவர் பூண்டனர்” (தெ.பொ.மீ. களஞ்சியம் V: சங்கத் தமிழ், பக்.71-72).
இனி, நத்தத்தனார் வாய்மொழி வழி நின்று கடையெழு வள்ளல்களின் சீர்மையினை
நிரலே காண்போம்.
1. பேகன்: ஆவியர் குடியில் தோன்றியவன்; ‘வையாவிக் கோப்பெரும் பேகன்’
எனவும் அழைக்கப் பெற்றவன்; அரிய ஆற்றலும் அழகும் பொருந்தியவன்; மழை வளம்
வாய்ந்த மலைநாட்டுக்குச் சொந்தக்காரன். ஒரு முறை மலைப்பக்கத்தில்
திரிந்த மயில் அகவியது’. அம் மயில் குளிரால் வருந்திக் கூவுவதாகக் கருதி
மயிலின் குளிரைப் போக்கத் தனது போர்வையைத் தந்தான். “மயில் போர்வையைப்
பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? என்னும் பகுத்தறிவைக் கீழ்ப்படுத்தி,
அருளுணர்ச்சி அவனகத்தே கடல் போற் பெருகி நிற்றலால் இத்தகைய செயல் செய்ய
நேர்ந்தது. இத்தகைய நிகழ்ச்சியினைக் கொடை மடம்
என்று சான்றோர் போற்றிக்
கூறுப” (பத்துப்பாட்டு மூலமும் உரையும், தொகுதி I, சிறுபாணாற்றுப்படை,
ப.24) என்னும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் உரை விளக்கம்
ஈண்டு மனங்கொளத்தக்கதாகும்.
“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்”
2. பாரி:
பறம்பு மலைக்குத் தலைவன். அவனது மலை, அருவிகள் பல விழும் வளம்
பொருந்தியது; சுரபுன்னையும் முல்லைக் கொடிகளும் உடையது. ஆங்கே வண்டுகள்
உண்ணும்படி தேன் பிலிற்றுகின்ற சிறிய மலர்களை உடைய முல்லைக் கொடி
கொழுகொம்பு இன்றிப் படரத் தவித்தது. தனது பெரிய தேரினையே அக்கொடி படரக்
கொடுத்தான் பாரி.
“ . . . . . . . . . சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி விழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்”
3. காரி: இவன் ‘மலையமான்’ எனவும் ‘மலையமான் திருமுடிக்காரி’ எனவும்
அழைக்கப் பெற்றவன்; வீரக் கழலும் தொடியும் அணிந்த பெரிய கைகளை உடையவன்;
நெருப்புப் போன்ற சினத்தினைக் கொண்டவன்; பகைவர் அஞ்சும் வண்ணம் நீண்ட
வேலைத் தன் வசம் வைத்திருப்பவன். ஒலிக்கும் மணியையும் வெண்மையான பிடரி
மயிரினையும் உடைய குதிரையுடன் தனது நாட்டையும் ‘இங்ஙனம் வழங்குவோரும்
உளரோ?’ என இவ்வுலகத்தினர் வியக்கும் படி, அருள் பொருந்திய இனிய
நன்மொழிகளைப் பேசி, இரவலர்க்குக் கொடுத்து அருளியவன்.
“ . . . . . . . . . கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும்”
4. ஆய்: ஆய் குடியில் தோன்றிய இவன் ‘வேள் ஆய்’ என்றும் ‘ஆய் அண்டிரன்’
என்றும் அழைக்கப் பெற்றவன்; வில்லை ஏந்திய சந்தனம் பூசிய திண்மையான
தோள்களை உடையவன்; ஆர்வம் மிக்க மொழிகளைப் பேசுபவன்; ஆலின் கீழ் இருந்த
சிவபெருமானுக்கு, தனக்கு நாகம் கொடுத்த ஒளி விளங்கும் நீல மணியையும்
ஆடையையும் விருப்பத்தோடு வழங்கியவன்.
“ . . . . . . . . . நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்”
5. அதிகன்: அதிகர் குடியில் பிறந்த இவன் ‘அஞ்சி’, ‘அதியன்’, ‘அதியமான்
நெடுமான் அஞ்சி’, ‘அதிகன்’, ‘அதிகமான்’ என்ற பெயர்களைக் கொண்டவன்;
கொற்றவையின் சினம் திகழும் ஒளி பொருந்திய நீண்ட வேலினை உடையவன்; ஆரவாரம்
மிக்க கடல் போன்ற படையைப் பெற்றிருந்தவன். தனது பெருமை மிக்க, மலர்களின்
மணம் கமழும் பக்க மலையில் நின்று அழகு பெற்ற, அமிழ்து போன்ற சுவையான,
நீண்ட நாள் வாழும் தகைமையை நல்க வல்ல நெல்லிக் கனியைத் தான் உண்டு
நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நினைக்காது, ஔவைக்குக் கொடுத்தவன்.
“ . . . . . . . . . மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்”
ஔவைப் பிராட்டியாரும் நெல்லிக் கனி பெற்ற போது பாடிய தம் புறநானூற்றுப்
பாடல் ஒன்றில் (91), ‘பெருமலை விடர்அகத்து அருமிசைக் கொண்ட, சிறியிலை
நெல்லித் தீங்கனி குறிவாது, ஆதல்நின் அகத்து அடக்கி, சாதல் நீங்க எமக்கு
ஈத்தனையே” என உளமார வாழ்த்திப் பாடி இருப்பது கருத்தில்
கொள்ளத்தக்கதாகும்.
6. நள்ளி: இவன் குளிச்சி பொருந்திய தோட்டி மலைக்குத் தலைவன். பருவம்
தவறாது மழை பொழிகின்ற, உயர்ச்சியால் காற்றுத் தங்கும் நெடிய கொடுமுடிகளை
உடையது இவனது மலை. போர் முனையில் தன் ஆற்றல் விளங்கும் பெருமை
பொருந்திய கைகளை உடையவன்; தன் மனத்து நிகழ்கின்றவற்றை மறையாமல் கூறி
நட்புச் செய்தோர் மனம் மகிழும்படி அவர்கள் இல்லறம் நடத்துவதற்கு
வேண்டிய பொருள்களைக் குறிப்பறிந்து நாள்தோறும் நல்கியவன்.
“ . . . . . . . . . கரவாது
நட்டோர் உவப்ப, நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைக்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்”
‘வலக்கையால் வழங்குவதனை இடக்கை அறியாதே வழங்குவாயாக!’ என மொழிகுவர்
இயேசு பெருமான். கடையெழு வள்ளல்களுள் ஒருவனான நள்ளியின்பால் இத்தகைய
பண்புநலன் விளங்குவதைப் போற்றும் வகையில், “எந்நாடோ என நாடும் சொல்லான்,
யாரீரோ எனப் பெயரும் சொல்லான்” எனச் சங்கச் சான்றோர் வன்பரணர் அழகுற
எடுத்துரைப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. ‘முனைவிளங்கு தடக்கை’
என்னும் தொடர் நள்ளியின் வெற்றிச் சிறப்பினையும் கொடைச் சிறப்பினையும்
ஒருசேரப் புலப்படுத்தி நிற்பது நோக்கத்தக்கது ‘முட்டாது கொடுத்தல்’
என்றது, தன்னை அடைந்தோர் பின்னர் வறுமையால் நலியாதவாறும், வேறொருவர்
இடத்துச் சென்று இரவா வண்ணமும் நிரம்ப நல்குதல் ஆகும்.
7. ஓரி: இவன் ‘வல்வில் ஓரி’ என்றும் ‘ஆதன் ஓரி’ என்றும் அழைக்கப்
பெற்றவன்; கொல்லி மலையின் தலைவன். இவனது மலை சுரபுன்னை மரங்களை
மிகுதியாக உடையது. நெருங்கிய கிளைகளில் மணம் மிகுந்த மலர்கள்
நெருக்கமாக அச்சுரபுன்னை மரங்களில் பூத்திருந்தன. அவன் பல சிறு மலைகளை
உடைய தனது நல்ல, வளமான நாட்டைக் கூத்தாடுவோர்க்கு வழங்கியவன்; ஓரி
என்னும் குதிரைக்குச் சொந்தக்காரனான அவன், காரி என்னும் குதிரையை உடைய
மலையமான் திருமுடிக்-காரியுடன் போரிட்டவன்.
“ . . . . . . . . . நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும்…”
இங்ஙனம் சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
இருபத்தெட்டு அடிகளில் (84-111) பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த கடையெழு
வள்ளல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளைச் சுருங்கச் சொல்லி விளங்க
வைத்துள்ள திறம் பயில்வோர் நெஞ்சை அள்ளுவதாகும். நத்தத்தனாரைப் போன்றே
பெருஞ்சித்திரனாரும் குமண வள்ளலைப் பாடுமுகத்தானே இவ் வள்ளற் பெருமக்கள்
எழுவரையும் ஒருங்கே தொகுத்துக் கூறியுள்ள புறுநானூற்றுப் பாடல் (158)
ஈண்டு ஒப்புநோக்கி இன்புறத்-தக்கதாகும்.
‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|