இலக்கியங்களில் தனிமனிதத் தூய்மை
முனைவர் நா.அமுதாதேவி
முகவுரை:
இலக்கியம்
என்பது அக்கால மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி ஆகும்.
பண்டையத்தமிழர்களுடைய வாழ்வியலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எவ்வாறு பண்பட்ட நிலையில் இருந்தது என்பதனை இலக்கியங்கள்
எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் தனிமனிதன் தன் தூய்மைக்குக் கொடுத்துள்ள
முக்கியத்துவத்தினையும் தான் சார்ந்திருக்கின்ற சுற்றுச்சூழலையும்
மாசுபடாத வகையில் எவ்வாறு பேணிக்காத்துள்ளான் என்பதனை இலக்கியங்களின்
வாயிலாக அறியமுற்படுவதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.
தூய்மை:
தூய்மை என்பது மாசற்ற நிலையைக்குறிப்பதாகும். தனிமனிதத்தூய்மை
எனும்பொழுது ஓவ்வொரு மனிதனும் தன்னைத்தானே தூய்மையுடன்
வைத்துக்கொள்வதுடன் தன்னைச்சுற்றியுள்ள சூழலையும் தூய்மை கெடாத வகையில்
பாதுகாப்பாக வைத்துக் கொள்வதனைக் குறிப்பிடலாம்.
நீர்த்தூய்மை:
தனிமனிதநிலையில் தூய்மை என்பது பெரும்பாலும் நீரினால்
பாதுகாக்கப்படுகிறது. வள்ளுவரும் இதனைப்
'புறத்தூய்மை நீரினால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப்படும்'(குறள் - 298)
என்ற குறளின் மூலம் புறத்தூய்மையினை நீருடன் தொடர்புபடுத்திக்
கூறியுள்ளார். உணவுயின்றி மனிதனால் பல நாட்கள் உயிர் வாழமுடியும். ஆனால்
நீர் இன்றி உயிர்வாழ இயலாது. இத்தகைய இன்றியமையாத நீரினைப் பேணிப்
பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும். இன்று அரசு சுகாதாரமற்ற நீரினால்
ஏற்படும் பல விளைவுகளை நம்மிடம் எடுத்துரைத்து, தீய விளைவுகளால்
ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும்
பலவகைகளில் உரைத்து வருகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த நம் சங்கச்சான்றோர்கள் நீர்ப்பாதுகாப்பு முறைகளில்
விழிப்புணர்வு பெற்றவர்களாக வாழ்ந்தமையை இலக்கியங்களில் காணமுடிகின்றது.
தனது இல்லத்திற்கு வந்த பாணனிடம் முற்றத்தில் உள்ள சாடியில் சிறிதளவு
நீர் இருப்பினும் அது மாசற்ற நிலையில் இருப்பதால் அந்நீரை அருந்தலாம்
எனத் தலைவி கூறுகின்றாள். இதனைப் புறப்பாடல்
'முன்றில் இருந்த முதுவாய்ச்சாடி
யாம் கஃடு உண்டென வறிது மாசின்று' (புறம் - 319 -3-4 )
என்ற இப்பாடலடிகளில் உணர்த்திச்சென்றுள்ளது. இக்காலத்தில்
நீரைத்தூய்மைப் படுத்துவதற்கு மக்கள் பல்வேறுபட்ட முறைகளைக் கையாண்டு
வருகின்றனர். ஆனால் அக்காலத்திய மக்கள் வேதிப்பொருள்களின் வளர்ச்சி
நிலையை எட்டாத காலத்தில் நீரினைத் தற்காத்து வந்துள்ளனர். அன்றைய
சூழலில் மக்கள்தொகை குறைவு, தொழில்சாலைகளின் பெருக்கம் இன்மை போன்ற
காரணங்களினால் நிலமும் நீரும் மாசுபடாதவகையில் பாதுகாப்புடன் இருந்தது.
தங்களுக்குத் தேவையான குடிநீரைத் தேக்கிவைத்துக்கொள்ளும் நிலை
ஏற்படவில்லை. மாறாக ஒடும் நீர்நிலைகளில் இருந்து நீரை எடுத்துப்
பயன்படுத்தி வந்துள்ளமையை
'நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி'( புறம் -150 – 15-16)
என்ற புறப்பாடலின் வாயிலாக அறியலாம். இதில் நறுந்தண்சாரல் எனும் சொல்
அருவிநீரின் தூய்மையைக் குறிப்பிடுகின்றது. ஓடும் நீர்நிலைக்கு அருகில்
வாழாத மக்கள் சுனைநீரைப் பயன்படுத்தி வந்துள்ளமையைக் குறுந்தொகையின்
'பாரி பறம்பின் பனிச்சுனைத்அ தெண்ணிர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்'(குறு-196-3-4)
என்ற இவ்வரிகள் வெளிப்படுத்தியுள்ளது. குடிநீர் கலங்கல் இன்றித்
தெளிவான நிலையில் இருக்கவேண்டும் என்பதனைத் தெண்ணிர் என்ற சொல்
சுட்டிக்காட்டியுள்ளது. உணவு சமைப்பதற்கும் சோறு சமைப்பதற்குத் தேவையான
உலைநீரினை வைப்பதற்கும் சுனை நீரினைப் பயன்படுத்தி வந்துள்ளமையை
'சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக்கூட்டும்'
(அகம்-196-7) என்ற அகநானூற்றுப்பாடல் வரி இதனைத்
தெளிவுபடுத்தியுள்ளது.
கலங்கிய நீர்:
இன்றைக்கும் பல கிராமங்களில் மக்கள் தூய்மையற்ற நீர் கிடைக்கும் பொழுது
தேற்றாங்கொட்டையினைக் கல்லில் உரசி அதனைத் தூய்மைப்படுத்திய பின்பு
நீரில் இட்டு கலந்துவைப்பர். பின்பு அந்நீர் தூய்மையடைந்துவிடும்.
இம்முறையைக் கலித்தொகைப் பாடல்
'கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்' (கலி – 142- 64-65)
எனப் பதிவு செய்துள்ளது. கலங்கிய நீரை மனிதர்கள் மட்டும் அல்லாது
மாக்களும் புறக்கணிக்கும் செயலை இலக்கியங்களில் காணமுடிகின்றது.
'வறுமை கூறிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்' (அகம் -121-4-5)
என்ற இப்பாடலின் மூலம் சிறிய குழியில் கலங்கிய நிலையில் உள்ள நீரை
விலங்கினங்களும் புறக்கணித்துள்ளமையை அறியமுடிகின்றது. குடிநீருக்கு என
சில நீர்நிலைகளை அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டமையைப் புறப்பாடல்
தெளிவுபடுத்திக்காட்டுகின்றன. இதன் வாயிலாக அக்காலத்திய மக்கள் நீர்
பாதுகாப்பு முறைகளுக்குக் கொடுத்துள்ள இன்றியமையாமையை அறியலாம்.
உணவும் தூய்மையும்:
மனிதன் உயிர்வாழ்வதற்கும் உடலைப்பாதுகாப்பதற்கும் அடிப்படையானது
உணவாகும். மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருக்கும் உணவினை மிகவும்
தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். வறுமையில்
தமக்குக் குப்பையில் கிடைத்த கீரையை வேகவைத்துத் தூய்மைப்படுத்தி உணவாக
உட்கொண்டுள்ளனர். காய், கிழங்கு போன்ற உணவுப்பொருள்களை வேகவைத்து
உட்கொண்டுள்ளமையைப் புறப்பாடல்(399) சான்றுகாட்டியுரைக்கிறது.
அளவான உணவு:
மனிதன் உடல் அளவிலும் உள்ளத்து அளவிலும் நிறைவாக உணர்வது உணவில் மட்டுமே.
அத்தகைய உணவு எத்தகைய சுவையடையதாக இருப்பினும் தூய்மையாகச்
சமைக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அளவுடன் அவ்வுணவினை உண்ணவேண்டும்
என்பதனை வள்ளுவன்
'அற்றல் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்குமாறு'(குறள் -943)
என்ற குறளின் மூலம் அளவறிந்து உண்பதால் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன்
வாழலாம் என்பதனைத் தெரிவித்துள்ளார். சங்கச் சான்றோர்கள் அளவறிந்து
உண்டமையை
'பாலில் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவு கலந்து மெல்லிது பருகி (புறம்-381-2-3)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் மூலம் அறியலாம்.
உணவுப்பாதுகாப்பு:
இன்று பல நாட்கள் சமைத்த பொருட்களைப் பாதுகாப்பதற்கும் துரிதஉணவாக பல
உணவுகள் பசியைப் போக்கவும் பயன்பட்டுவரும் நிலையில் அக்காலத்திய மக்கள்
உண்ணும் உணவுப் பொருட்களையும் சமையல் கலங்களையும் பாதுகாப்பாகக்
கையாண்டுள்ளனர். சமைத்த உணவினை மூடியிட்டும் கைபடாமல் உணவினைப்
பறிமாறியமையையும் புறப்பாடல்(396) பதிவுசெய்துள்ளது. தாம் உட்கொள்ளும்
உணவு கெடாமல் பாதுகாப்பதற்காக ஒரு பக்கம் அடைக்கப்பட்ட மூங்கில்
குழாய்களைப் பயன்படுத்தி வந்தனர். இதனை
'அம்தூம்பு அகல் அமைக் கமஞ் செலப் பெய்த
தூறுகாழ் வல்சியர் தொழு அறை வெளவி' (அகம் -253 -15-16)
என்ற பாடலடிகளின் வழி அறியலாம்.
ஆடைத்தூய்மை:
குளித்து உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டதுடன் உடுத்தும் உடைகளும்
அக்கால மக்களால் நன்றாகத் துவைத்து அழுக்கு நீக்கப்பட்டு உடுத்தப்பட்டு
வந்தன. ஆடை மட்டும் இன்றிப் படுக்கைவிரிப்புகளும் நன்றாகத் துவைத்துத்
தூய்மையுடன் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமையை நெடுநல்வாடை (134-135)
பதிவுசெய்துள்ளது. ஆடைகளின் அழுக்கை நீக்குவதற்கு உவர்மண்
பயன்படுத்தப்பட்டமையையும் கற்களில் நன்றாக அடித்துத் துவைத்து ஆடைகளைப்
பயன்படுத்தியமையையும் 'கல் தோய்த்து உடுத்த
படிவப் பார்ப்பான்' (முல்.பா -37) என்ற வரி இதனைத்
தெளிவுபடுத்துகிறது.
தூய்மைக்கேடு:
கல்வியறிவு இன்மை, வறுமை, அறிவீனம், சூழ்உரை போன்ற காரணங்களினால்
தூய்மையற்ற நிலையைக் காணமுடிகின்றது. பயற்றங் கொடி படர்ந்த நிலத்தில்
ஆக்கள் மேய்ந்ததன் காரணமாக அன்னிமிஞிலி என்ற பெண்ணின் தந்தையின்
கண்களைக் கோசர்கள் பறித்துவிடுகின்றனர். இதன் காரணமாக அக்கோசர்களைப்
பழிவாங்கும் வரை தான் கலத்தில் இட்டு உண்ணாமலும் நல்ல தூய்மையான ஆடைகளை
அணியாமலும் இருப்பேன் என்று சூள் உரைக்கிறாள். பின்பு அப்பெண் திதியன்
என்பவனிடம் இத்தகவலைக் கூற அவன் கோசர்களை வெல்கிறான். பின் இப்பெண் தான்
கொண்ட விரதத்தினைக் கைவிடுகிறாள். அகநானூறு இதனை
'ஊர்முது கோசர் நவைத்த சிறமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறான்'(அகம்-262-6-8)
என்ற வரிகளினால் உணர்த்தி நிற்கிறது.
வறுமைநிலை:
மக்களின் தூய்மைக்கேட்டிற்கு வறுமைநிலையும் ஒரு காரணமாக
அமைந்துவிடுகிறது. வறுமை காரணமாக உணவின்றி உடல் இளைத்துக் காணப்படும்
ஒருவன் ஒரே ஆடையை அணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அவ்வாடையிலும் ஈரும்
பேணும் பல்கிப் பெருகியுள்ள நிலையை
'இழை வலந்த பஃறுன்னத்து
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த
உண்ணாமையின் ஊன் வாடி'(புறம் - 136 -2-6)
என்ற புறப்பாடல் சுட்டிக்காட்டிக்காட்டிள்ளது.
செருப்பணிதல்:
எல்லா நிலமக்களும் காலில் செருப்பணித்திருந்தமையை இலக்கியங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன. வேடர்கள் செருப்பணிந்திருந்தமையைத்
'தொடுதோல் காணவன் சூடுறுவியன்புனம் (அகம்-368-1)
எனவும் குறிஞ்சிநிலத்தில் உள்ள இடையர்கள் செருப்பணிந்து
வாழ்ந்தமையை 'தொடு தோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி'(பெரு.பாண்.169) என்ற
பெரும்பாணாற்றுப்படையின் வரியிலும், மறவர்கள் செருப்பணிந்தமையை
'தொடு தொல் அடியவர் துடிபடக்கழீஇ'(பட்.பா.265)
என்ற பட்டினப்பாலையின் வரிகளால் உப்பு வணிகர்கள் செருப்பணிந்த
நிகழ்வினைக் காணமுடிகின்றது.
'தோல்புதை சிற்றடி கோலுடை உமணர்
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி'(அகம்-191-4-5)
என்ற வரிகளால் எல்லா நில மக்களும் தங்கள் பாதங்களைப் பாதுகாத்துக்
கொண்டமையை அறியமுடிகின்றது.
மனைத்தூய்மை:
நாம் வாழும் வீடும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக்
கொள்ளுதல் அவசியம் ஆகும். திருமணம் முடிந்த பின்பு தன் இல்லத்திற்கு
வரும் மகளை வரவேற்பதற்காகத் தாய் தன் இல்லத்தினைத் தூய்மைப்படுத்திப்
புதுமணல்பரப்பி தோரணங்களைக் கட்டி வீட்டைத் தூய்மை செய்த நிகழ்வினை
அகநானூறு (195- 3-4) பதிவுசெய்துள்ளது. திருமணம் போன்ற சுபநிகழ்வுகள்
வீட்டில் நடைபெறும்போது தூய்மைப்பணியினை மேற்கொள்ளுதல் புதுப்பித்தல்
நிகழ்வாகவேத் தென்படுகிறது. சாணம் கொண்டு வீட்டின் முன்
தூய்மைப்படுத்திய செயலிiபை; 'பைஞ்சோறு மெழுகிய
படிவ நல் நகர்'(பெரு.பா.298) என்ற பெரும்பாணாற்றுப்படை வரியின்
மூலம் உணர்த்தியுள்ளார். பசுவினை வீட்டின் செல்வமாகவும் தெய்வமாகவும்
மக்கள் கருதி வந்தனர். பசுவின் சாணம் சிறந்த கிருமி நாசினியாகச்
செயல்படக்கூடியதனை நன்கு உணர்ந்தவர்கள் நம் முன்னோர். வீட்டின்
முற்றங்களில் மணல் பரப்பப்பட்டு இருந்தமையைப் பல இலக்கியங்கள்
(நற்-40-2,அகம்-81-21) சான்றுகாட்டி விளக்கியுள்ளன. ஆற்றுநீரினால்
அடித்துவரப்பட்ட மணலானது தூய்மையாக இருப்பதனை
'திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து'(நெடு-89-90)
என்ற வரிகள் உணர்த்தி நிற்கிறது. காவிரியால் தூய்மையாகக் கொணர்ந்து
ஒதுக்கப்பட்ட மணலானது அக்காவிரியில் மிதந்து வரும் பல்வேறு பூக்களால்
மணல் நிரம்பியதாகவும் திகழ்கிறது. இதனை
'மாஅ காவிரி மணம் கூட்டும்
தூ எக்கர்த் துயில் மடிந்து'(பட்.பா-116-117)
என்ற பாடலடிகளிலால் தெளிவுபடுத்தியுள்ளார்.
நிறைவுரை:
தூய்மை என்பது தனிமனிதனின் போற்றுதலுக்கு உரியது. தூய்மை நிலை
சூழலுக்கும் தனிமனிதனுக்கும் அவசியமான ஒன்றாகும். வரலாற்றுக் காலம்
தொடங்கி இன்று வரை பல்வேறு இலக்கியங்களும் தூய்மைநிலையினைப் பறைசாற்றிக்
கொண்டிருக்கின்றதனை அறியமுடிகின்றனது. நீர் பாதுகாப்பு முறையிலும் தான்
வாழும் வீட்டினைத்தூய்மையாக வைத்துக்கொள்வதிலும் பல்வேறு உக்திகளை
அக்காலத்திய மக்கள் கையாண்டுவந்துள்ளார் என்பதனை இலக்கியங்கள்
நமக்குச்சுட்டிக்காட்டியுள்ளன.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|