தமிழ் இலக்கண மரபில் கவிப்பேரரசு வைரமுத்து
ஜெ.மதிவேந்தன்
தமிழ்ப் படைப்புலகம்
ஈராயிரம் ஆண்டுகளைத் தாண்டி, நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. சங்கப்
பாடல்கள் தொடங்கி, சமகாலம் வரை பல்வேறு பரிமாணங்களைக் பெற்றுள்ளது.
இவற்றுள் ஏராளமானப் படைப்புகள் – படைப்பாளிகள் உருப்பெற்றுள்ளனர்.
அந்தவகையில், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் படைப்பாளிகளுள் மரபு,
நவீனம் ஆகிய இரண்டிலும் தடம் பதித்து, உச்சம் தொட்டவர் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் – திரைப்படப் பாடலாசிரியர்என இருவேறு கரைகளைக்கொண்டு, இன்றும்
வற்றாத நதியாகச் செழுமையோடு, தமிழ்ப் படைப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும்
தாயாறு கவிப்பேரரசு. இவர், நவீனக் கவிதைக்கும் திரைப்பாடலுக்கும்
மட்டுமே சொந்தக்காரர் என்னும் மனப்போக்குப் பெரும்பாலும் காணப்படுகிறது.
இது தவறான மதிப்பீடாகும். இக்கூற்றினைக் களையும் நோக்கில்தான்
இக்கட்டுரை அமைகிறது. அதாவது, கவிப்பேரரசுக்கு மரபிலக்கணம் எனப்படும்
யாப்பிலக்கண அறிவும் அதில், ஆழாங்கால்பட்ட புலமையும் உண்டு என நிறுவும்
விதமாகக் கட்டுரையின் மையப்பொருள் அமைகிறது.
கவிப்பேரரசு வைரமுத்து தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்து, சென்னை
நோக்கி அடியெடுத்து வைத்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில், இன்று
தன்னைத் தமிழுலகம் தவிர்க்க முடியாதபடி தகவமைத்துக்கொண்டவர். இதற்கு
அடிப்படைக் காரணம், வைரமுத்துவின் கடும்உழைப்பும் இடைவிடாத முயற்சியுமே.
இதனை, அவர்தம் படைப்புகளிலும் உரைகளிலும் கண்டுரணலாம்.
தமிழ் இலக்கணம் - வரன்முறைகள்
தமிழ் மரபிலக்கணம் என்பது பொதுவாக, ஐந்திலக்கண அடிப்படையினை உடையது.
பிற்காலங்களில், பல்வேறு கிளைகளைப் பரப்பிக்கொண்டது. எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி என்ற பரப்புகளில் ‘யாப்பு’ என்னும் வகைப்பாட்டினை
மட்டும் இங்கு கவனப்படுத்தப்படுகிறது. தமிழின் யாப்பினை,
ஆசிரியம், வஞ்சி, வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே (தொல்: நூ.
1365).
என்று நான்கு வகையாகத் தொல்காப்பியர் சுட்டிச் சென்றுள்ளார். இதில்,
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பா வடிவங்கள் சிறப்புற்று, செழுத்தோங்கி
வந்துள்ளதைக் காணலாம். அந்தவகையில், ஒவ்வொரு பாவும் தங்களுக்கான
எல்லைக்கோட்டினை வரையறைச் செய்துள்ளன. அதனை, ‘வாய்பாடு’ என்னும்
கட்டுக்குள் காண நேர்கிறது. இதுதான், இலக்கண நியதியாகவும் உள்ளது.
இதனைக் கைவரப் பெற்றவர்கள்மரபிலும் நவீனத்திலும் உச்சம் தொட்டவர்களாக
உள்ளனர். குறிப்பாக, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சுட்டலாம்.
இவருடைய, இலக்கணப் புலமைக்குப் பல்வேறு சான்றுகளை எடுத்துக்காட்டிடலாம்.
எனினும், வெண்பா என்னும் பாவகையை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
அதில், வைரமுத்துவின் தனித்திறன்களையும் சிறப்புகளையும்
சுட்டிக்காட்டும் நோக்கோடு இக்கட்டுரை தொடர்கிறது.
தமிழ் யாப்பியல்
தமிழ் யாப்பியல் வரலாற்றில், ‘வெண்பா’ எனும் பா வகைக்குத் தனித்த
சிறப்பிடமுண்டு. அது, தொல்காப்பியர் காலம் தொட்டு, சமகாலம் வரை வளர்ச்சி
பெற்று, பலப்பல படைப்புகளைப் பெற்றுள்ளது. தமிழ் யாப்பு வடிவங்களுள்
முதன்மையானதாகும். இதன் சிறப்புகளை உணர்ந்து முதற்பா, வன்பா,
பத்தினிப்பா, அந்தணர் பா எனக் குறிப்பிட்டுள்ளனர். வெண்பா இயற்றுவதின்
சிறப்புக் கருதி,
காசியினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்;
பேசும் உலாவில் பொதும்பைபுலி – ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாம்மற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி.
என்ற ஒளவையாரின் தனிப்பாடல் சுட்டுகிறது. வெண்பாப் பாடல்களை இலக்கண
அமைதியுடன் இயற்றுவதன் அருமை கருதியே, ‘வெண்பாப் புலி’ என்னும் தொடர்
கையாளப்பட்டுள்ளது. வெண்பா யாப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில்
வல்லவராகக் குறிப்பிடப்படுபவர் புகழேந்திப் புலவர். அவர், நளன் கதையை
மையமிட்டு எழுதிய, ‘நளவெண்பா’ பாடல்களின் அடிப்படையில் ‘வெண்பாவிற்கோர்
புகழேந்தி’ என்னும் சிறப்பினைப் பெற்றார்.
வெண்பா யாப்பு பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை குறள் வெண்பா ( 2 -அடி
), சிந்தியல் வெண்பா ( 3 -அடிகள் ), நேரிசை – இன்னிசை வெண்பா ( 4 -
அடிகள் ), பஃறொடை வெண்பா ( 5 - அடிகளுக்கு மேல் ), கலிவெண்பா ( கலியும்
வெண்பாவும் மருவியது) எனவாகும். நேரிசை வெண்பா தனிச்சொல் பெற்றும்
இன்னிசை வெண்பா தனிச்சொல் பெறாதும் வரும். பிற்காலத்தே சவலை வெண்பா,
முடுகு வெண்பா (முன்,பின்) என விரிவுகள் உண்டாயின.
வெண்பாவின் இலக்கணமாகச் சில விதிமுறைகள் உள்ளன. அவை ஈற்றடி மூச்சீராய்,
ஏனைய அடிகள் நாற்சீராகவும் இயற்சீர், வெண்சீர் வெண்டளைகளைப் பெற்றும்
கனிச்சீர்கள் பெறாதும் நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாட்டு
அமைதியினைக் கொண்டும் அடிதோறும் மோனை, எதுகைகளைப் பெற்றமையும் தன்மைகளை
உடையதே வெண்பா எனபர். இவ்வாறு, பொதுவரையறை பெற்று வெண்பா இலக்கணம்
அமைந்துள்ளது. இனி, கவிஞர் வைரமுத்து அவர்களின் சிந்தனையில் யாப்புப்
புலமையோடு உதித்த வெண்பாப் பாக்களைப் பற்றி மட்டும் காணலாம்.
தமிழ் இலக்கணமும் – வைரமுத்துவும்
கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் இலக்கணம் என்னும் பகுப்பினை எவ்வாறெல்லாம்
கண்டுணர்ந்துள்ளார் என்பதினைப் பின்வரும் அவரின் கூற்றுகள்
விளக்குகின்றன. அவை, இருவேறு கருத்துநிலைகளுடன் அமைந்துள்ளது. ஒன்று
மரபினைப் போற்றுதல், மற்றொன்று மரபினைத் தூற்றி, நவீனத்தை
முன்னிலைப்படுத்துதல் என்பதாகும்.
மரபினைப் போற்றுதல்
தமிழ் யாப்பிலக்கணம் கற்ற கவிஞர் வைரமுத்து. யாப்பியல் விதிகளை என்றும்
மறவாதவர். இதற்குச் சான்று பல. ‘எனது பார்வையில் கண்ணதாசன்’ எனும்
கட்டுரையில் கவிஞர் கண்ணதாசனோடு வைரமுத்து உரையாடிய நிகழ்வினைத் தமிழ்
யாப்புப் புலமைக்குச் சான்றாகும். அது, கண்ணதாசன் எழுதிய வெண்பாப் பாடல்
ஒன்றின் ஈற்றுச்சீர் ‘சென்றாள்’ என்று முடிந்துள்ளது. இதனை,
யாப்பிலக்கண அறிவோடு அணுகிய வைரமுத்து இது தவறானது – பிழையானது எனக்
கண்ணதாசன் அவர்களிடமே சுட்டிக்காட்டி, அதற்குச் சரியான சொல் – ‘சென்று’
அல்லது ‘செல்’ என்றே முடிந்திருக்க வேண்டும் என்று
எடுத்துக்கூறியுள்ளார். அதற்குக் கண்ணதாசன், ‘கவிதையின் அழுகுக்காக
விட்டு விட்டேன்’ எனப் பதில் தந்துள்ளார். இப்பதிவிலிருந்து பெறும்
செய்தி, வைரமுத்து அவர்களின் தமிழ் இலக்கணப் புலமையும் மிகப்பெரும்/
போற்றத்தகுந்த இடத்திலிருந்த கவிஞர் கண்ணதாசனிடம் வைரமுத்து அணுகிய
இலக்கண வீரமும் சுட்டிக்காட்டும் பாங்கும் கவனிக்கத்தக்கது.
‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ எனும்
நூலில், ‘என் தமிழாசிரியருக்கு’ என்ற
கவிதையில்,
இலக்கணம் பாகற்காய் தான்
உங்களால் தானே
பாகற்காயில்
பஞ்சாமிர்தம் செய்ய
ஆசையே வந்தது அய்யா! (ப. 66).
என்று தமிழாசிரியரின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்கையில்,
இலக்கணம் குறித்த தம் மனப்பதிவினையும் சுட்டுகிறார். தமிழ் உலகில்
அல்லது தமிழ் படிக்கும் மாணவ – மாணவியர் இடையேயும் இலக்கணம் என்பது
பாகற்காயை விடக் கசப்பானது என்கிற மனப்போக்கு இன்றும் இருந்து வருவதை
அறியமுடிகிறது. இது வருந்தத்தக்கச் செயல்பாடாகும். இந்நிலை மாற/மாற்றப்பட
வேண்டும். அதற்கு இலக்கணம் குறித்த சரியான புரிதலினையும் தெளிவினையும்
தமிழர்க்கும் தமிழ் மாணவர்களுக்கும் உண்டாக்க வேண்டும். அது
தமிழுலகுக்குச் செய்யும் பெரும்கடப்பாடாகும். இவ்வாறான போக்குடன்,
இலக்கணம் கற்றுத்தெளிந்தவர். நவீனத்தில் பல சிகரங்களைத் தொட்டவர், தமிழ்
இலக்கணத்திலும் தொட்டுச் செல்கிறார் மேற்கண்ட நூலில்,
‘அதாவது எதிரிகளே’ என்னும் கவிதைத் தலைப்பினுள் பலவற்றைப்
பட்டியலிடுகிறார். அதில் தம் இலக்கணப் புலமையினையும் முன்வைக்கின்றார்.
அது,
உயிர்வரின் உக்குறள்/ மெய்விட்டோடும்/ உள்ளுறை உவமம், இறைச்சி/
ரியலிசம்/ சர்ரியலிசம்/ கட்டளைக் கலித்துறை/ காளமேகம் சிலேடை/
இப்படியாக எதிரிகளே/
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்/ எனக்குத் தெரியாது.
(பக். 176-178).
எனத் தன்னடக்கப் பாணியில் தமிழின் அடிப்படை இலக்கண விதிகளை
எடுத்தியம்புகிறார். தமிழ் இலக்கண மரபினைப் போற்றிடும் விதமாக,
இலக்கணத்தின் சிறப்புகளைத் தனித்தன்மைகளை வெளிக்கொணரும் நோக்கில், தம்
படைப்புகளைப் படைத்துள்ளார். இது வைரமுத்துவின் தமிழ்ப்படைப்பு பரப்பில்
இலக்கண மரபிற்கும் தனித்த இடமுண்டு என்பதினை நிருபிக்கும் விதமாக
மேற்கண்ட கூற்றுகள் அமைகின்றன.
நவீனத்தை முன்னிலைப்படுத்துதல்
ஒன்று கேட்கிறேன்
உறைக்குள் இருந்தால் தான்
அதற்கு
வாள் என்று பெயரா? (தி.எ.தீ; ப. 9).
என்ற வினாக் கணைகளோடு, மரபினை மீறி, நவீனக் கவிதையினைப் போற்றுகிறார்.
மரபார்ந்த இலக்கணக் கட்டுக்கோப்புகளுக்குக் கட்டுப்பட்டு, உறையுள்
சிக்குண்ட வாளாக இருக்கும் மரபு பாக்களை உடைத்தெறியும் பாங்கோடு
நவீனத்தை ஆரத் தழுவிக்கொள்ளும் பான்மை வைரமுத்துவின் மற்றொரு
பரிணாமத்தைக் காட்டுகிறது. தமிழ் இலக்கணங்களைத் தங்களின் ‘குடும்பச்
சொத்தாகப்’ பாவிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் நவீனத்தை மறுதலிக்கும்
பழமைவாதிகளுக்கும் பேரிடியாக, இவ்வினாக் கணைகள் அமைந்துள்ளன. அதுபோலவே,
தமிழ் யாப்பு மரபு குறித்துக் குறிப்பிடுகையில்,
யாப்பு என்னும் குதிருக்குள்/ இலக்கணம் போட்ட
உத்திரவுக்குப் பயந்து உறங்கும்/ சோம்பேறிச் சொற்களுக்கா/ நீங்கள்/
கவிதை என்று கட்டியங் கூறுவீர். (மேலது; ப. 9).
யாப்பின் அரியாசனத்தில்/ கொலுவிருப்பதால் மட்டுமே/
செத்த வார்த்தைகளுக்கு/ வெண்சாமரங்கள்/
வீச முடியாது. (மேலது; ப. 11).
தமிழ் யாப்பிலக்கண விதிகளைக் கவிப்பேரரசு வைரமுத்து கடுமையான
வார்த்தைகளால் விமர்சிக்கின்றார். யாப்பறிவு மட்டுமே பெரிதென
நினைக்கும்‘அறிவுக்களஞ்சியங்களைச்’ சாட்டைச் சொற்கள் கொண்டு, தம்
புதுக்கவிதைகளால் விளாசுகிறார். யாப்பிலக்கண அறிவோடு, தமிழ் யாப்பியலை
விமர்சிக்கும் நவீனக் கவிதைக்காரர் வைரமுத்து. ஆதலால், இவற்றில் சரி –
தவறுஎன்ற பாகுபாட்டுக் கருத்தியலை எவ்வாறு அணுகுவது என்பது சற்றுச்
சிக்கலான ஒன்றுதான். எனினும், ஒன்றைச் சாடி, பிரிதொன்றைப் புகழ்வது
அல்லது இழிவுக்குள்ளாக்குவது என்பதும் தமிழர்க்கும் – தமிழ்ப்
படைப்புலகிற்கும் என்றுமே ஏற்ற அறமாகாது என்பது மட்டும் திண்ணம்.
இலக்கணம் கற்றவர்கள் ஏதோ தங்களுக்கு மட்டும் மூளையின் எடையளவு அல்லது
அடர்த்திக் கூடியதாக நினைத்துக்கொண்டு,(சிலர் விதிவிலக்கு)
தலைக்கனத்துடன் செயல்படுகின்றனர். இப்போக்கினை விமர்சிக்கும்
கவிப்பேரரசு,
கம்பராமயாணத்தில் ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களைத் தேடிக்கொண்டிருக்கிற
இலக்கணப் புலிகள். (இ.ச; ப. 71).
சூரியன் கூட/ கிழக்கு மேற்கென்னும்/ யாப்பிற்குக் கட்டுப்பட்டே/
தன்/ கிரணக் கவிதைகளைக்/ கிறுக்கி வருகிறது.
(தி.எ.தீ; ப. 13).
மேற்கண்டவாறு, தமிழ் ஆய்வுலகின் அவலங்களையும் இலக்கண மரபின்
நோக்கங்களையும் பொதுவெளிக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். வாய்பாடும்
சீரும் தளையும் கொண்ட மனன விதிகளினுடாக அமையும் தமிழிலக்கணக் கல்வி
முறையின் அடிப்படைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
பரிசுகளும் பாராட்டுகளும் ‘இலக்கணப் புலி’களுக்கு மட்டுமே
கொடுக்கப்படுகிறது என்பதினைப் பகடி செய்கிறார். தமிழுலகில் விருதுகளும்
பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுத் தருவது அரசியல் செல்வாக்கும், பண
பலமும், பதவியும் தான் என இனங்காண்கிறார். தமிழ் இலக்கணத்தில் ஏற்பட்ட/
ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலங்களைக் கடுமையாகத் தொனிக்க
விமர்சிக்கின்றார்.
ஜமீன் தார்களின்/ வெற்றிலை எச்சில் பற்றி/
வெண்பாக்கள். (தி.எ.தீ; ப. 42).
அலுத்துப்போன கருத்துக்களுக்கும்,
புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.
(இ.ச; ப. 33).
வெண்பா, விருத்தம் போன்ற வடிவங்களில் ‘வெற்று’ புகழாரமான வார்த்தைகளை
இட்டு நிரப்பி, யாப்பிலக்கணக் கட்டுப்பாட்டுடன் அமைக்கும் பாக்கள்
தமிழ்மொழியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். தங்களின் சுயநலன்களுக்காகப்,
போலியான பட்டங்கள், புகழாரங்கள், உயரிய விருதுகள் போன்றவற்றை ஆடையாக
அணிந்துகொள்ளும், ‘மனநோயாளிகள்’ மாற வேண்டும். அப்பொழுதுதான், தமிழ்
இலக்கணப் பாக்கள் மீண்டும் உச்சாணி கிளைக்கே செல்லும் காலம் வரும்.
இலக்கணத்திற்காகக் கவலைப்படும் தமிழ் ‘இலக்கணப் புலிகள்’ சமூகத்தின்
பிரச்சனைகளில் சிறிதும் அக்கறையற்று வாழும் போக்கினையும் வெகுவாகக்
கண்டிக்கிறார்.
இலக்கணக் குறிப்புகளுக்காகவே/ நாம்/ கவிதை வரிகளைக் கற்றது போதும்/
சமூகத்தின் தளைகளை விடவும்/ நாம்/ கவிதையின் தளைகளுக்கே/
கவலைப்பட்டது அதிகம். (தி.எ.தீ; ப. 12).
இலக்கணக்குறிப்புப் பற்றியும் தளை தட்டுகிறதா? தட்டவில்லையா? எனப்
பூதக்கண்ணாடி கொண்டு இலக்கணத்தை ஆராயும் பெருமக்கள், சமூகத்தில் நிகழும்
அவலங்களையும் தங்களின் கண்ணால் காணவேண்டும் என்று வாதிடுகிறார்.
இறுதியாக, மரபுக்கவிதைகள், நவீனக் கவிதைகள் குறித்துத் தம் கருத்தினைப்
பதிவு செய்துள்ளார். அது,
மரபுக்கவிதைகள்/ ஜாதகங்கள்
புதுக்கவிதைகள்/ முகவரிகள் (தி.எ.தீ; ப. 10).
ஒருவரது பிறப்பு அடிப்படையில் கணிக்கப்படும் அழியாத/நிரந்தரமான
அடையாளமாகக் கருதப்படும் ஜாதகம் (மதநம்பிக்கை உடையோருக்கு) உள்ளது.
அதுபோலத்தான், மரபுக்கவிதைகள் அமைகின்றன எனவும் சூழ்நிலைக்கும் வசதி,
வாய்ப்பிற்கும் ஏற்ப முகவரிகள் என்பவை மாறுபடும் தன்மைகள் உடையனவாகும்.
இத்தன்மையிலானவையே புதுக்கவிதைகள் எனப் பாகுபடுத்திக் காட்டுகிறார்.
கவிப்பேரரசு வைரமுத்து – வெண்பா முத்துக்கள்
தொடக்கக் காலங்களில் தமிழின் யாப்பு வடிவங்களில் பாடல்களைப் படைத்தவர்
கவிப்பேரரசு வைரமுத்து. அது ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
போன்றவற்றிலும் இசைப்பாக்களான சிந்து, கண்ணி, கும்மி வடிவிலும்
சிற்சிலப் பாடல்களை யாப்பிலக்கணக் கட்டுக்கோப்புடன் படைத்துள்ளார்.
வெண்பாவின் முக்கியத்துவம் குறித்து, பேராசிரியர் ய. மணிகண்டன்
கூறுகையில்,
ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு
தமிழ்க்கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை.
(2006; ப. 145).
என்கிறார். அதன்வழியில் கவிஞர் வைரமுத்துவும் வெண்பாவை அணுகுகிறார்.
தமிழில் வெண்பா யாப்பில் கரை கண்டவர் பலர். அவர்களுள் வைரமுத்துவும்
ஒருவர். தமிழ்ச் சமூகத்தில் ‘திரைப்படப் பாடலாசிரியர்’ என்ற
அடையாளத்துடன் இனங்காணப்படும் வைரமுத்து அவர்களுக்கு மற்றொரு முகமும்
உண்டு. இதனை, அவருடைய வெண்பாப் பாடல்களின் வழி சிறிதளவேனும் கண்டு
தெளியலாம்.
வெண்பாவின் இலக்கணம் மட்டும் எந்த விதிகளோடும் சமரசம் செய்து
கொள்வதில்லை. (கல்; ப. 47).
என்னும் கருத்தியல் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து தம் நவீனக்கவிதை
படைப்புகளினூடாகவும் தனியான மரபுப் பாக்கள் தொகுப்பினூடாகவும்(வைகறை
மேகங்கள், என் பழைய பனை ஓலைகள், இரத்த தானம்.) வெண்பா யாப்பில்
பாடல்களைப் படைத்து வெற்றி கண்டுள்ளார். அவை, சமுதாயத்தில் நிகழும்
அவலங்களையும் மாறுதல்களையும் முரண்பாடுகளையும் சமூகச் சிக்கல்களையும்
மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
தத்திவரும் முத்துமொழித் தத்தையென முத்தமிடும்
சித்திரம்போல் பூஞ்சிவப்புச் சிந்திநின்ற – அத்தைமகள்
பூப்பெய்தி விட்டாளாம்! பூமகளின் காலடியில்
பூப்பெய்தேன் என்னவியப் பு! (ய.
மணிகண்டன்; 2006: 145).
இப்பாடல் பருவ வந்த பெண்ணின் அழகியலை வருணிக்கும் தன்மையோடு
அமைந்துள்ளது. அதோடு, இதில் வரும் வல்லின ஓசை எழுத்துக்கள் நேரிசை
வெண்பா யாப்புப் பாடலை மேலும் மெருகூட்டுகிறது. இப்பாடல் இருவிகற்ப
அமைப்புடன் காணப்படுகிறது. தமிழ் மரபில் ஒரு சொல்லை இருவேறுவிதமாகக்
கையாளுவது என்பது தனித்திறன். அத்திறன் கைவரப்பெற்றவர் வைரமுத்து.
அதனைப் பின்வரும் இரு இருவிகற்ப நேரிசை வெண்பா பாடல்களிலும் காணலாம்.
அத் – தானை வெல்லவரும் அம்புவிழி
வாளென்னும்
அத்தானை கொண்டுதினம் ஆடவைப்பாள் –
முத்துப்போல்
செல்ல விளையாட்டுச் செய்தவளின் கன்னிமுகம்
மெல்லச் சிவக்கும் மிளிர்ந்து.
என்றன் படத்தை இமைக்காமல் பார்த்தணைத்துத்
தென்றல் விழிக்குள்ளே தேங்கிவரும் - அன்பொழுக
என்னத்தான் வேண்டும் இனியென்பாள்; நானவளை
எண்ணத்தான் வேண்டும் இனி.
(மேலது)
முதற்பாடலில் ‘அத் -தானை’ என்று படை என்னும் பொருளிலும் இரண்டாம்
அடியில் ‘அத்தனை’ என உறவுடைப் பெயரிலும் கையாண்டு வெண்பா படைத்துள்ளார்.
அதேபோன்று, இரண்டாவது பாடலிலும் ‘என்னத்தான் வேண்டும்’ என்று
பெண்ணொருத்தி வினா எழுப்புவது போன்றும் இரண்டாமடியில் ‘எண்ணத்தான்
வேண்டும்’ என ஆண்ணொருவன் எண்ணிக்கை குறித்துக் குறிப்பிடுவது போலவும்
பாடலை அமைத்துள்ளார். இவ்வாறு, நுட்பமாகச் சொல்லைக் கையாண்டு வெண்பாப்
படைப்பதில் வைரமுத்து தேர்ந்தவராகக் காணப்படுகிறார்.
தமிழ்ச் சமூகம் பல்வேறு இன்னல்களுக்குக் காலந்தோறு ஆட்பட்டு
வந்திருக்கின்றது. அது பல்வேறு மோசமான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது.
பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளும் செயல்களைத் தாண்டி, செய்யும் எந்தவிதமான
செயல்பாடும் அழிவினை நோக்கியே அழைத்துச் செல்லும். அவை, சமூக விரோதச்
செயல்கள் எனப்படுகிறது. அதோடு, நோய் போன்ற இயற்கை/செயற்கை
இடர்ப்பாடுகளையும்பெண்கள் குறித்த மதிப்பீட்டையும் கவனத்தில் கொள்வது
அவசியம். இதனை, கவிப்பேரரசு கவனப்படுத்தியுள்ளார். அதன்விளைவு பின்வரும்
மூன்று வெண்பாப் பாடல்கள் ஆகும். இவை, வைரமுத்துவின் படைப்புக்கும்
சமூக அக்கறைக்கும் சிறு சான்று மட்டுமே.
போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் – காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய். (மேலது; 151).
ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் – பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ. (மேலது; 152).
பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை – இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி. (மேலது; 153).
‘எயிட்ஸ்’ என்னும் உயிர்க்கொல்லி நோய் பற்றியும் அதன் பின்விளைவுகள்
குறித்தும் ஓரினச் சேர்க்கை குறித்த சமூக முரண்களையும் பெண்களின் உடல்
உறுப்புகள் குறித்து, தமிழ் இதழ்கள் அணுகும் பான்மையினையும் கடுமையாக
விமர்சனம் செய்கின்றார். இக்கருத்துகளை விரிவாகவும் அழுத்தமாகவும்
அழமாகவும் வெண்பா யாப்பில் பதிவு செய்துள்ள வைரமுத்து அவர்களின்
அணுகுமுறை என்பது சிறப்பான ஒன்றாகும்.
தமிழ்த்தாயினை வாழ்த்திப் பாடுவதிலும் அவரின் தமிழ்ப்பற்றுக் குறித்த
அக்கறையினையும் பின்வரும் பதிவினூடாகக் காணலாம்.
நானினைக்கு முன்னே நலம்பாடி வந்தென்றன்
ஊனிணைந்த தாயே! உயிர்த்தமிழே! – தேனின்
அடைக்கட்டி போன்ற அறமகளே! ஈதுன்
கடைக்குட்டி செய்த கவி. (ஓலை; ப. 27).
பூக்காடாய் நெஞ்சில் புதுமணத்தைத் தந்தெனக்குப்
பாக்காடாய் மாறிவிட்ட பைந்தமிழே! – சாக்காடு
போனாலும் அங்குமுனைப் பொன்மகளே! என்நெஞ்சம்
தேனாகப் பாடும் தினம். (ஓலை; ப. 28).
ஊன் அணைந்த தாயே, உயிர்த்தமிழே என்று விளிக்கும் பாங்கும் தமிழ் மீது
வைரமுத்து கொண்ட காதலினைக் காட்டுகிறது. தமிழோடும் தமிழரோடும்
ஒன்றிணைந்த வைரமுத்து தம் கருத்தியலைத் தமிழ் சார்ந்த ஈடுபாட்டுடன்
வெண்பாவில் சுட்டியுள்ளார். இதில் அமைந்துள்ள கருத்துகள் தமிழின்
மேன்மையையும் வைரமுத்துவின் தமிழார்வத்தையும் முன்னிறுத்துகிறது.
வைரமுத்து - வெண்பா பாவகையைக் கையாண்டஇடங்கள்
கவிஞர் வைரமுத்து பல்வேறு பாவகைகளைப் பயன்படுத்தியுள்ளார். அதில் தம்
கருத்துக்கு ஏற்ற இடங்களில் வெண்பா பாவகையைச் கவியமைப்புடன் கூடிய
செய்திகளாகப் படைத்துள்ளார். அது, பெரும்பாலும் விருத்தப்
பாடல்களில்தான் காணமுடிகிறது. அப்பதிவுகள் பின்வருமாறு,
வெண்பாவில் கனிச்சீர் போல்
விலகிச்சென்றாய். (ஓலை; ப. 81).
முடியாத ‘வெண்பா’
நீ என்றன் மூச்சை
முச்சீராய்க் கொண்டே நீ முடிவாய் என்பேன். (மேலது;
ப. 82).
இப்படியாக, தமிழ் யாப்பு மரபில் வைரமுத்து மற்றைய பாக்களை விட வெண்பா
பா மீது தீராக்காதல் கொண்டுள்ளார். வெண்பாவில் கருத்துகளைச் சுருங்கச்
சொல்லியும் அழுத்தமாகப் பதிவு செய்யவும் ஏற்ற களமாக, வெண்பா அமைவதினை
அவரே சுட்டியுள்ளதை அறியமுடிகிறது. மேலும் கவிப்பேரரசுவின் இலக்கண
மரபுப் பாடல்களை விரிவாக ஆராயக் களம் உள்ளது. தமிழ் ஆய்வுலகம் கவனம்
செலுத்துமாயின், பல அரிய செய்திகளை வெளிக்கொணர முடியும்.
பயன்பட்ட நூல்கள்:
-
வைரமுத்து., இதனால்
சகலமானவர்களுக்கும், சூர்யா வெளியீடு, சென்னை, 1993.
-
மேலது, என் பழைய பனை
ஓலைகள், சூர்யா வெளியீடு, சென்னை, 2011
-
மேலது,
கல்வெட்டுக்கள், சூர்யா வெளியீடு, சென்னை, 2008
-
மேலது,திருத்தி
எழுதிய தீர்ப்புகள், சூர்யா வெளியீடு, சென்னை, 2008.
-
மேலது, இந்த பூக்கள்
விற்பனைக்கல்ல, சூர்யா வெளியீடு, சென்னை, 2013.
-
ய.மணிகண்டன்.,(ப.ஆ.)
நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்,(தொகுப்பு நூல்), பொன்னி
வெளியீடு, சென்னை, 2006.
-
தொல்காப்பியர்,
தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம்,
சென்னை, 2011.
ஜெ.மதிவேந்தன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை - 600 005.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|