ஆசாரக்கோவை நவிலும் உணவுப்பழக்கம்
முனைவர் நா.அமுதாதேவி
முகவுரை:
மனிதனின் சிறந்த வாழ்வியல் முறைக்கு ஒழுக்கம் மூலகாரணியாக அமைகின்றது.
நம் முன்னோர்கள் ஒழுக்கத்தினைத் தம் உயிராகக் காத்துவந்துள்ளனர்.
இத்தகைய வாழ்வியல் ஒழுக்கங்களை இலக்கியங்கள் பலவாறாக வகைப்படுத்திக்
காட்டியுள்ளன. மனிதவாழ்விற்குத் தேவையான, மனிதன் அவசியம் கடைபிடிக்க
வேண்டிய ஒழுக்கமுறைகளை ஆசாரக்கோவை என்னும் இந்நூல்
சுட்டிக்காட்டியுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இந்நூல்
கருதப்படுகிறது. இந்நூலினை நீதிநூல்களின் வரிசையில் வைத்துப்
போற்றியுள்ளனர். ஆசாரக்கோவை என்னும் இந்நூல் மனிதன் உணவு உண்ணும்
முறையினை எடுத்துரைத்;த பாங்கினை வெளிப்படுத்தும் விதமாக இக்கட்டுரையின்
பொருண்மை அமைகிறது.
பெருவாயின் முள்ளியார்:
வண்கயத்தூரைச் சார்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இந்நூலை
இயற்றியுள்ளார். இந்நூல் 100 பாடல்களை உள்ளடக்கியதாகும். பல்வேறு
வகையான பாக்களில் இந்நூலின் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வகையான வாழ்வியல் ஒழுக்க முறைகளைப்
பகுத்துள்ளனர். முள்ளியார் என்பது இவரின் இயற்பெயர். பெருவாய் என்பது
இவரது தற்தையின் பெயராக இருக்கலாம். கயத்தூரின் ஒருபகுதியாகிய
பெருவாயில் என்ற இடத்தில் வாழ்ந்தவர் எனவும் எண்ணலாம். இவர் வாழ்ந்த
ஊரினைத் 'திருவாயில் ஆயதிறல் வண கயத்தூர்'
என்று சிறப்புப்பாயிரப்பாடல் சுட்டிக்காட்டியுள்ளது. இப்பாடல் வரிகளின்
மூலம் செல்வம்,திறன்,வண்மை போன்றவற்றினால் இவ்வூர் சிறப்புடையனவாக
இருந்தது என்பதனை அறியமுடிகின்றது. 'ஆர் எயில்
மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்ற வரியின் மூலம் சைவ
சமயத்தினைப் பின்பற்றி வாழ்ந்துள்ளார் எனவும் அறியலாம்.
ஆசாரக்கோவை விளக்கம்:
ஆசாரங்களினது கோவை எனவும் ஆசாரங்களைத் தொடுத்த கோவை எனவும்
விளக்கியுரைக்கலாம.; பல்வேறு வகையான ஒழுக்கங்களின் தொகுதியை விளக்கும்
நூல் எனவம் பொருள் உரைக்கலாம். 'ஆசாரவித்து'
என்ற பாடலில் தொடங்கி 'ஆசாரம் வீடு
பெற்றார்' என்ற பாடலில் இந்நூல் நிறைவுபெறுகிறது.
'ஆரிடத்துத் தான் அறிந்த
மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறன் ஆய
மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்'
என்ற இந்நூலின் சிறப்புப்பாயிரம் மூலம் வடமொழிக் கருத்துக்களைப்
பின்பற்றி இந்நூல் எழுதப்பட்டது என்பதனையும், ஆசாரங்களைத் தொகுத்து
உரைத்துள்ள திறனையும் அறியமுடிகின்றது. துனிமனிதன் வாழ்வில்
பின்பற்றக்கூடிய வாழ்வியல் ஒழுக்கத்தினைக் கூறுவது இந்நூலின்
சிறப்பாகும். ஊணவே மருந்து எனவும் மருந்தே உணவு என்றும் வாழ்ந்த
சமுதாயம் நம் தமிழ்ச் சமுதாயம். இத்தகைய சிறப்பினை உடைய உணவுப் பொருளைப்
பல்வேறு ரகங்களில் விதை நெல்லாக விளைவித்து உழவுக்கு மேன்மை செய்து
வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு நம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத
உணவுப்பொருளை எவ்வாறு உண்ண வேண்டும் எனவும் சான்றோர்கள் எப்படி உண்டனர்
எனவும் முள்ளியார் சுட்டியுள்ளார். 'ஒன்றுடத்து உண்ணார் என்ற வரியின்
மூலம் சான்றோர்கள் ஒர் ஆடையை மட்டும் அணிந்து கொண்டு உணவு உண்ணமாட்டார்
என்பது புலப்படுகின்றது.
ஊண்ணும் திசை:
நாம் உண்ணும் உணவினை எப்படி உண்ணவேண்டும் எத்திசையில் அமர்ந்து
உண்ணவேண்டும் எனவும் முள்ளியார் குறிப்பி;ட்டுள்ளார்.
'உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கு இரிஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு
உண்க உகாஅமை நன்கு' (ஆசா.கோ.20)
என்ற இவ்வரிகளின் மூலம் நாம் உணவு உண்ணும் பொழுது கிழக்குத்திசையை
நோக்கியவாறு அமர்ந்து கொண்டு உண்ணத் தொடங்குதல் வேண்டும் எனவும். உணவு
உண்ணும் பொழுது தூங்கி விழாமலும் ஆடாமலும் அசையாமலும் நன்கு பொருந்திய
நிலையில் சமதளத்தில் அமர்ந்து உண்ணுதல் வேண்டும். அது மட்டும் அல்லாமல்
உண்ணும் பொழுது அக்கம் பக்கம் சுற்றி வேடிக்கை பார்க்காமல் வீணாகப்
பேசிக் கொண்டு உண்ணக் கூடாது. இவ்வாறு உணவு உண்ணும் பொழுது அவ்வுணவினைத்
தெய்வமாக எண்ணித் தொழுதபின் உண்ணுதல் வேண்டும். இவ்வாறு கவனம் இல்லாமல்
உணவு உண்ணும் பொழுது எதனை உண்கிறோம் அப்பொருளின் சுவையாது என்பதனை
அறியஇயலாத சூழல் ஏற்படுகிறது. ஏனவே உணவிற்கு மதிப்பளித்து உண்ணுதல்
வேண்டும்.
உண்ணச்செய்து உண்க:
'விருந்தினர் முத்தோர் பசு சிறை பிள்ளை
இவர்க்கு ஊன் கொடத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒமுக்கம் பிழையாதவர்'. (ஆசா.கோ. 21)
என்ற இவ்வரிகளின் மூலம் நம் இல்லம் தேடி வருகை புரிந்துள்ள
விருந்தினர்கள், வயதில் மூத்தவர்கள், பசு,காகம் உள்ளிட்ட பறவை
இனங்களுக்கு உணவினைக் கொடுத்த பின்பே நாம் உண்ணவேண்டும். இச்செயலை
மேற்கொள்கின்றவர்களை ஒழுக்கம் தவறாதவர்கள் என்றும் உயர்ந்த முடியில்
பிறந்த சான்றோர்கள் எனவும் இவ்வுலகம் குறிப்பிடும் என்பதனை அறியலாம்.
இருக்கும் இடம் சுகமே:
கிழக்குத் திசை நோக்கி உணவு அருந்த வேண்டும் என்று முறை வகுத்தவர்கள்
அதற்கு மாற்றாக நாம் வாழும் இடம் ஏற்றதாக இல்லாமலும் இடவசதியில்லாமலும்
இருப்பின் என்ன செய்ய வேண்டும் என அதற்கான தீர்வையும் முன்மொழிகிறார்.
கிழக்குத் திசையில் அமர்ந்து உணவு உண்பது நல்லது. அவ்வாறு செய்ய இயலாத
போது எல்லாத்திசைகளும் நல்ல திசையே எனக் கருதிக் கொண்டு நாம் வசிக்கும்
இருப்பிடத்திற்கு ஏற்ப ஒரு திசையை நோக்கியவாறு உண்ணுதல் வேண்டும்.
இம்முறையே இன்றைய நடைமுறைப் பழக்கத்திற்கு ஏற்புடைய முறையாகும். வாயில்
படியில் அமர்ந்து கொண்டு உணவு உண்பது தவறு என்பர். நம்முடைய இடவசதிக்கு
ஏற்ப நல்லவைகளையும் அல்லவைகளையும் பகுத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள்ள
வேண்டும். இக்கருத்தினை
'ஒழித்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழி ஊன் புகழ்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு'. (ஆசா. கோ.22)
என்ற வரிகள் புலப்படுத்திநிற்கிறது.
உணவு உண்ணும் முறை :
படுக்கையில் இருந்தபடியோ, நின்றபடியோ வெட்ட வெளியிலோ, அளவுக்கு
அதிகமாகவோ உணவு உட்கொள்ளக் கூடாது. நல்ல வாழ்வியல் ஒழுக்கத்தை உணர்ந்த
சான்றோர்கள் இம்முறையை ஒருபொழுதும் மேற்கொள்ளார். உண்ணும் முறை தவறியும்
உண்ணக் கூடாத பொருள்களையம் நாம் உண்ணக் கூடாது. இவ்வாறு முறை தவறிய
உணவுப் பழக்கத்தினால் நம் உடல் நலன் விரைவில் கெடும் என்பது திண்ணம்.
இதனைக்
'கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்தது மிக உண்ணார் கட்டில் மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று'. (ஆசா.கோ 23)
என்ற இப்பாடலின் மூலம் தெரிவிக்கிறார்.
பெரியோர்களுடன் உணவு உண்ணும் முறை:
சான்றோர்களுடன் உணவு உண்ணும் பொழுது நாம் எம்முறையைப் பின்பற்ற வேண்டும்
என்று முள்ளியார் சுட்டியுள்ளார். தம்மைக்காட்டிலும் வயதில் மூத்த
சான்றோர்களுடன் உணவு உண்ணும் பொழுது அவர்கள் உண்ணத் தொடங்கும் வரை
காத்திருந்து பின்பு நாம் உண்ண வேண்டும். அவர்கள் உணவு உண்டு முடிந்து
எழுந்திருக்கும் வரை காத்திருந்து பின்பு நாம் பந்தியில் இருந்து
எழுந்து செல்ல வேண்டும். சான்றோர்களுடன் மிகநெருக்கமாகவும் இடித்துக்
கொண்டும் உட்காரக்கூடாது. எவ்வளவு சுவையான உணவுவகைகள் பந்தியில்
படைக்கப்பட்டு இருந்தாலும் பெரியர்களின் வலதுபக்கமாக அமர்ந்து
உண்ணக்கூடாது. இதனை
'முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊனின் கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மில்
பெரியார் தம் பால் இருந்தக் கால்'
(ஆசா.கோ.24)
என்ற பாடலடிகள் உணர்த்தி நிற்கிறது.
எதை உண்பது:
பல வகையான உணவுப் பொருள்கள் உண்பதற்குப் படைக்கப்பட்டிருந்தாலும்
அவற்றினை உண்ணத்தொடங்கும் முன்பாக கசப்புச்சுவை உடைய உணவுப்பொருளை
கடைசியாக உண்ண வேண்டும். இனிப்புச்சுவை உடைய பொருள்களை முதலில் உண்ண
வேண்டும். புpற சுவையடைய உணவுப்பொருள்களை உணவின் இடையில் உண்ணுதல்
வேண்டும். இவ்வாறு உண்பதே சிறந்த முறையாகும். இதனைக்
'கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையில் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊன்'. (ஆசா.கோ.25)
என்ற வரிகளால் அறியலாம்.
உண்பதற்கான கலம்:
சான்றோர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு தான் மட்டும் சுவையான உணவினை
உண்ணக்கூடாது. உணவு உண்பதற்கு பல்வேறு வகையான கலங்கள் இருப்பினும்
தூய்மையான சிறிய பாத்திரத்தினைத் தேர்வுசெய்து அவற்றில் அன்புடன்
உணவுபரிமாறுதல் வேண்டும் என்பதனை
'முதியவரைப் பக்கத்து வையார் விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.'(ஆசா.கோ.26)
என்ற இப்பாடலடிகள் விளக்கியுரைக்கிறது.
உண்டபின் செய்ய வேண்டியது:
தம் மனம் விரும்பிய உணவுகளை அளவுடன் முறையான வழியில் உண்டு முடிந்த
பின்பு நன்கு நீரினால் வாயினைக் கொப்பளிக்க வேண்டும். உண்ட பொருளின்
எச்சில் நீங்கும் வகையில் நன்கு வாயினைத் துடைக்க வேண்டும். பின்பு தன்
உள்ளங்கையில் நீர் ஊற்றிச் சிந்தாமல் மூன்று முறை நீர் பருக வேண்டும்.
கண்,காது,மூக்கு ஆகியவற்றைத் தன் விரல்களால் தூய்மைப்படுத்திடல்
வேண்டும். இதுவே உணவு உண்ட பின்பு நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் எனச்
சுட்டியுள்ளார். சான்றோர்கள் தம் வாழ்வினை வகைப்படுத்தி வாழ்ந்துள்ளமையை
'இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குதெ;துத் துடைத்து முகத்துறப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி. '(ஆசா.கோ. 27)
என்ற இவ்வரிகள் வெளிப்படுத்தி நிற்கிறது.
படைத்து உண்க:
சான்றோர்கள் தான் மட்டும் உண்பதற்கு என்று அடுப்பில் உலைவைத்து உணவு
சமைக்க மாட்டார்கள். உயிர்க்கொலை புரிந்து புலால் உணவினைச் சான்றோர்கள்
உண்ணமாட்டார்கள். தமக்கு உயிர்தரும் உணவினைச் சமைக்கும் சமையல்கூடத்தை
ஒருபொழுதும் அசுத்தப்படுத்த மாட்டார்கள். தும் வீட்டில் தம்முடன்
தெய்வமாக வாழ்ந்து மறைந்தவர்களுக்கும்,இறைவனுக்கும் உணவினைப் படையலாக
இட்ட பின்பே தனக்கான உணவினை உண்பர். இக்கருத்தினை முள்ளியார்
'தம்கென்று உலை ஏற்றார் தம் பொருட்டு
ஊன் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டு உண்க ஊண். '(ஆசா.கோ.39)
என்ற இவ்வரிகளில் உணர்த்தியுள்ளார்.
சான்றோன்செயல்:
பெரியவர்களுடன் இளையவர்கள் உணவு அருந்த வேண்டிய சூழல் ஏற்பட்டால்
அவர்களை விட உயரம் குறைவான ஆசனத்தில் அமர்ந்து உணவு உட்கொள்ள வேண்டும்.
இளையவர்கள் அவர்களிடம் மனம் வருந்தும் வகையில் ஏதெனும் தவறு
செய்துவிட்டால் அதற்காக அவர்கள் மனம் வருத்தம் அடையமாட்டார்கள்.
இக்கருத்தினை
'உயர்ந்ததின் மேல் இரார் உள் அழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணும் இடத்து.
'(ஆசா.கோ.40)
என்ற பாடலடிகளின் வாயிலாக இக்கருத்தினைப் பதிவிட்டுள்ளார்.
நிறைவுரை:
சமுதாயத்தில் பல மனிதர்கள் முறை தவறி தமது வாழ்க்கையை வாழ்ந்து
வருகின்றனர். இத்தகைய மனிதர்களுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்று
வாழ்க்கைச் சூழலை வகைப்படுத்திக்காட்ட வேண்டியது சான்றோர்களின்
கடமையாகும். குற்றங்களைத் தவிர்க்கவும் தனிமனித வாழ்வியலை
செழுமைப்படுத்தவும் ஆன்றோர்களின் வாழ்வும் நூல் கருத்துக்களும் அவசியம்
தேவைப்படுகின்றது. அவ்வகையில் பல அரிய கருத்துக்களைக் கொண்ட நூலாக
ஆசாரக்கோவை திகழ்கிறது. புசித்துப்புசி என்பது பழமொழி. அவ்வாறு பசித்து
உண்ணும் பொழுது எப்படி முறையாக உண்பது எனவும் ஆன்றோர்கள் கூடியுள்ள
அவையில் எவ்வாறு உண்ண வேண்டும் என்பது போன்ற நல்ல உணவுப்பழக்கங்களை
நமக்குக் கற்றுத்தரும் நூலாக ஆசாரக்கோவை திகழ்கிறது.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|