எம்ஜிஆர் திரைப்படப் பாடல்களில் அரசியல் பின்னணி

முனைவர் செ.இராஜேஸ்வரி

ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ்ப் படமான மலைக்கள்ளனில்,

“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி”


என்ற பாடல் எம்ஜிஆர் படுவதாக இடம்பெற்றது. இதுவே அவர் படத்தில் இடம்பெற்ற முதல் அரசியல் பின்னணி உள்ள பாடலாகும். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எம் ஜி ஆர் இந்தப் பாட்டை அப்படத்தில் சேர்த்தார். இப்பாட்டை எம்ஜிஆருக்காக முதன் முதலில் பாடிய டி எம் சௌந்தரராஜன் இதற்குப் பிறகு அவருடைய ஆஸ்தான பாடகர் ஆனார். பாட்டைக் கேட்ட பொதுமக்கள் பாட்டின் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்கு வந்தனர். இதன் விளைவால் பிறகு வந்த தேர்தலில் திமுக முன்பிருந்ததை விட அதிக இடங்களைப் பெற்றது. திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக எம்ஜிஆர் படத்தின் அரசியல் பின்னணி உள்ள தத்துவப் பாடல்கள் அல்லது தனிப் பாடல்கள் அமைந்தன.

எம் ஜி ஆரின் சொந்தப் படத்தில் அரசியல் சிந்தனை


1958இல் எம்ஜிஆர் இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் படம் வெளிவந்த போது அப்படத்தில் நான்கு பாடல்கள் அரசியல் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் பாடல்களாக இடம் பெற்றன.

‘செந்தமிழே வணக்கம்’,
“செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே”


‘உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’,

“உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவர் உண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா
காண்பதில் தான் இன்பம் என் தோழா”


‘தூங்காதே தம்பி தூங்காதே’,

“தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்”


‘வருக வருக வேந்தே’

“வருக வருக வேந்தே எங்கள்
தலையான கலை ஞானம் தழைத்தோங்க
தலைவா நீ வருக வருக வேந்தே
வீரம் உறங்காத தென்னாடு தனை ஆளும் வேந்தே நீ
வருக வருகவே
பார் புகழும் உதய சூரியனே
பதி ஏந்தி புகழ் காக்கும் பார்த்திபனே
வருக வருகவே”


என்ற பாடலும் ஆக நான்கு பாடல்கள் திமுக கட்சியின் கொள்கைகளை .இத்திரைப்படத்தின் மூலமாக காட்சி பிம்பங்களோடு எடுத்துரைத்தன..

திராவிட முன்னேற்ற கழகம் திராவிடம் என்பது தமிழ் தெலுங்கு மலையாளம் துளு ஆகிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற இடமாகும். திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஆரியப் பார்ப்பனரின் கைப்பாவையாக இருப்பதில் இருந்து விடுதலை பெற வேண்டும். அவர்களின் மூடநம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களை திராவிடர்கள் பின்பற்றக்கூடாது. மக்கள் பகுத்தறிவு உடையவர்களாக

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க வாழ் வேண்டும், என்பது பிரச்சாரம் செய்யப்பட்டது.. திருக்குறள் தமிழர்களின் மறை நூலாகப் போற்றப்பட்டது. எம் ஜி ஆர் தன் படங்களில் திருக்குறளை காண்பித்தார். வள்ளுவனைப் புகழ்ந்தார்.

நாடோடி மன்னன் படத்தில் தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி தன் பொறுப்புகளில் இருந்து நழுவி தட்டிக் கழிக்கிறது என்பதை உணர்த்தும் வகையில்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா என்ற வரிகளைக் கொண்டு மக்களிடம் அக்கட்சியின் மீது வெறுப்பைத் தூண்டியது. அடுத்து,

உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

என்ற பாடல் உழைப்பாளிகளின் வாழ்க்கையில் அவர்கள் அடிமைகளாக இருப்பதையும் அவர்களுக்கு முழு உரிமைகள் தரப்படவில்லை என்பதையும் அந்த உரிமைகளை திமுக தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதையும் உணர்த்துகின்ற வகையில் அமை ந்தத எம் ஜி ஆர் என்றால் திமுக எம்ஜிஆர் திமுகவின் பிரதிநிதியாக சமூகச் சிந்தனை சார்ந்த பாடல்களைப் பாடுகிறார் என்று மக்கள் கருதினர்,

`செந்தமிழே வணக்கம்;
திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்


என்ற பாடல் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தது. மக்கள் த்தாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொண்டனர். எம் ஜி ஆரின் படப் பாடல்களும் வசனங்களும் திராவிடர்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ திமுகவை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் ஆரிய பார்ப்பனர்களின் கைப்பிடியில் சிக்கி தவிக்கிறது; என்ற எண்ணத்தை வலியுறுத்தின. எம்ஜிஆர் தன் பாடல்களின் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பையும் திமுக ஆதரவையும் திரட்டி வந்தார். இப்பாடல்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தன்னுடைய படங்களில் தொடர்ந்து சமூக சிந்தனையுள்ள கொள்கைப் பிரச்சாரம் செய்கின்ற பாடல்களை அமைத்தார்.

196௦இல் வந்த மன்னாதி மன்னன் படத்தில் நாடோடி மன்னனை போலவே முதல் பாடலாக பெயர் பட்டியல் வெளியிடும் போதே திராவிடர்களின் சிறப்பை உணர்த்தும்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே


என்ற பாடலை அமைத்திருந்தார். இது கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதிய படம் ஆகும். இப்பாடல் தமிழரின் பெருமையை பறை சாற்றியது. கனக விசயரின் முடித்தலை நெறித்து இமயத்திலிருந்து கல்லெடுத்து கொண்டு வந்து கண்ணகிக்கு கோயில் கட்டிய செங்குட்டுவனின் வீரத்தை எடுத்துரைத்தது. இமய வரம்பில் புலிக்கொடி பொறித்த சோழனின் புகழ் பாடியது.
தமிழர்களின் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் இப்பாடல்கள் எம்ஜிஆர் படத்தில் அமைந்த போது மக்கள் தங்களுக்குள் தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொண்டவர்களாக மாறினர். எம்ஜிஆர் உடைய பாடல்கள் எதிர்மறைக் கருத்துக்களயோ, நம்பிக்கை வறட்சியையோ சொல்வனவாக அமைக்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டுபவையாகவும் இருந்தது கிடையாது. சோகப்பாடல்கள் கூட தத்துவப் பாடல்கள் ஆகவே விளங்கின. எனவே எம்ஜிஆர் படம் பார்க்கும் ரசிகர்களை அவரது தத்துவப் பாடல்கள் வாழ்வில் நம்பிக்கை இழக்கச் செய்யவில்லை.

கருப்பு சட்டைக்காரர்


எம் ஜி ஆர் திமுகவை பிரதிபலிக்கும் வகையில் தமது படத்தில் பாடல்களை எழுதி வாங்கி பாடச் சொல்லி தன கட்சியின் கொள்கைகளுக்கே ஏற்ப காட்சிகளை அமைத்தார். அவருடைய கொள்கைக்கு புறம்பாக எதுவும் அவர் படத்தில் இடம்பெறவில்லை. அவர் பாடல்கள் பார்ப்பவருக்குத் துணிச்சலையும் வாழ்க்கையில் எதையும் சந்திக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும் வழங்கின. உடைகள், அணிமணி, நெற்றியில் வரையும் பொட்டு, கதாபாத்திரத்தின் பெயர், ஒப்பனை தோற்றம் என அனைத்தும் தன கட்சி பிரச்சாரத்துக்கு ஆதரவாக இருக்கும்படி கவனித்துக்கொண்டார்.

1965, 1966 களில் அதிக எண்ணிக்கையில் எம்ஜிஆர் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அப்போது நிறைய பாடல்கள் தனிப்பாடல்களாக தத்துவ பாடல்கள் ஆக சமூக சிந்தனையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரமும் கொண்டவையாக எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்றன. மேலும் இத்தகைய பாடல்களை பாடும்போது இவர் கருப்புச் சட்டைக்காரர் என்பதை உணர்த்தும் வகையில் கலர் படங்களிலும் கூட கறுப்புச் சட்டை அணிந்து பாடினார். கம்யூனிஸ்டுகளை சிவப்பு சட்டைக்காரர் என்று அழைத்ததைப் போல அக்காலத்தில் திமுகவினரை கருப்புச் சட்டைக்காரர்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அதனை அப்படியே பின்பற்றிய எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் சமூக சிந்தனை சார்ந்த கொள்கைப் பிரச்சார பாடல்கள் வரும் போது கருப்புச்சட்டை அணிந்து நடித்தார் .

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் நம்பியாரை சவுக்கால் அடித்துவிட்டு மறுநாள் பணியாளர்களுடன் சேர்ந்து ஏளையோடு ஏழையாக

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
ஏழைகள் வேதனை படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர்
கண்ணீர் கடலிலே விழமாட்டார் அவர்
கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்


என்ற பாடலைப் பாடும்போது படம் கலர் படம் என்றாலும் அவர் கருப்பு சட்டை அணிந்து தன்னை திமுக காரனாக காட்டியிருப்பார்.

சந்திரோதயம் படத்தில் மலையில் இருக்க இடம் தேடி ஏழை மக்களை அழைத்துக்கொண்டு வரும் காட்சியில்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக


என்ற பாடலிலும் கருப்பு சட்டையே அணிந்திருப்பார். மழைவெள்ளத்தில் குடிசைகள் மூழ்கி விட்டதனால் ஆதரவின்றி நிற்கும் மக்களை அவர்களின் சிறு குழந்தைகளோடு அழைத்துக் கொண்டு புகலிடம் தேடி வரும்போது எம்ஜிஆர் கருப்புச்சட்டை அணிந்து தான் பாடி வருவார்.

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்


என்று வரிகள் மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளித்தன. இத்தகைய பாடல்களில் வரும் குளோஸ் அப் காட்சிகள் இவராலேயே நமக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அழைத்தன.

ஆசை முகம் படத்தில் மூன்று பாடல்கள் தத்துவப் பாடல்களாக அமைந்தன. இப்படம் பிளாஸ்டிக் சர்ஜரியால் முக மாற்று அறுவை சிகிச்சை செய்வதை பற்றிய முதல் அறிவியல் தமிழ்ப்படம் ஆகும் அதன்பிறகு தான் ரேவதி நடித்த புதிய முகம் வந்தது. இப்படத்தில்,

எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு


என்ற பாடல் பெரிய மனிதர் என்ற போர்வையில் உலா வரும் காங்கிரஸ்காரர்களைத் தாக்கியது.

மேலும் அவர்கள் வேடதாரிகள் என்பதை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பெயர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் போ் உள்ளமல்ல
என்று தொடங்கும் பாடல் வெளிப்படுத்தியது.
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு இலாபம்
பகையில் துணையாய் பசியில் உணவாய்
இருந்தால் ஊருக்கு இலாபம்


என்ற வரிகள் எம் ஜி ஆர் இவ்வாறு ஏழை மக்களுக்குத் ஆபத் பாந்தவனாக அனாத ரட்சகனாக துணையிருப்பார் என்ற நம்பிக்கையை அளித்தது.

திரையரங்கில் அதிக வரவேற்பு பெற்ற பாடல்


எங்க வீட்டு பிள்ளை படம் நாகிரெட்டி சக்கரபாணி நண்பர்கள் தங்கள் விஜயா வாகினி பட நிறுவனத்தில் ஒரு வண்ணப்படம் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தவுடன் எம் ஜி ஆரை தான் நாடினர். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெமினி, தேவர், ஏ வி எம் , ஜி என் வேலுமணி எனப் பல தயாரிப்பாளர்கள் வண்ணப்படம் எடுக்க முடிவு செய்த போது எம் ஜி ஆரை வைத்து தான் முதல் தயாரிப்பை வெளியிட்டனர். அனைத்தும் வெற்றிப் படங்களாகி வசூலை அள்ளி குவித்தன.

எங்க வீட்டு பிள்ளை வெளிவந்த போது இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியத் திரையரங்கில் மிகுந்த வரவேற்பையும் ஆரவாரத்தையும் பெற்ற பாடல் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது நான் ஆணையிட்டால் பாட்டு இந்தியாவில் திரையரங்கில் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற பாடல் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

எம் ஜி ஆர் நான் ஆணையிட்டால் என்று பாடுவது திமுக ஆட்சிக்கு வந்து ஆணையிட்டால் என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தியது மேலும்

ஒரு தலைவன் உண்டு. அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்


என்று எம்ஜிஆர் பாடுகின்ற வரிகள் திமுகவின் தலைவரான அறிஞர் அண்ணாவின் வழியைப் பின்பற்றி திமுகவின் கொள்கைகளைக் காத்திருப்பேன் என்று அவர் பாடுவதாக மக்கள் புரிந்து கொண்டனர். மேலும் காங்கிரஸாரின் அட்டூழியங்களைக் குறிக்கும் வகையில் அவர்

காலம் வரும் என் கடமை வரும் இந்தக்
காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புது பாதையிலே வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்


என்று பாடிய வரிகளில் ‘காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்’ என்ற வரியைத் தணிக்கை குழுவினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால் இப்பாடல் முதலிலேயே வெளிவந்துவிட்டதால் சிலோன் ரேடியோவில் இந்த வரிகள் காணப்பட்டன. ஆனால் தணிக்கை குழு அந்த வரியை மாற்றச் சொல்லியதால் ‘’இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’’ என்று அவ் வரி இந்தியாவில் மாற்றப்பட்டது. தமிழகத்தில் இப்பாடல் இக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

காங்கிரசாரை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை ஒழித்து விட்டு திமுகவின் ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று எம்ஜிஆர் பாடுவதாக அமைந்த இப்பாடல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதில் வியப்பொன்றுமில்லை. மேலும் தவறு செய்பவரை சாட்டையால் அடித்து திருத்துவதாகவும் கதையில் இபாடல் காட்சி இடம்பெறும். அப்பாவியாக இருந்த எம் ஜி ஆரை ஏமாற்றி அவரது சொத்துக்களை அனுபவித்த வந்த வில்லன் அனம்பியாரை சாட்டையால் அடித்த பொது மக்கள் தங்களை சுரண்டிய ஒரு கொளுத்த பணக்காரனை அடித்து உதைப்பதாககவே எண்ணி ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்தனர். மறுநாள் கெட்டவர்கள் திருந்தி நல்லவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சூழ்நிலையில் இப்பாடல் இடம்பெற்றதால் மக்கள் இதனை வெகுவாக ரசித்தனர்.

திருக்குறளும் தமிழ்ப்பற்றும்


நான் ஆணையிட்டால் படத்தில் திருடர் கூட்டத்தை திருத்த நினைக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்கு திருக்குறளைக் காட்டி தாய் மீது ஆணையாக அவர்களைத் திருத்துவேன் என்கிறார். தமிழ், திருக்குறள் என்பன திமுகவின் பிரச்சாரக் கருத்துக்களில் முக்கிய இடம் பெற்றனவாகும்.

தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணைத் திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வி இல்லை


என்று அவர் திருக்குறள் நூலை வைத்துக் கொண்டு பாடும் பாடல் தீமைகளை தடுத்து நன்மைகளை உருவாக்கும் வகையில் என்னுடைய வாழ்வும் திரைப்படங்களும் அமையும் என்று சொல்வதாக நம்பப்பட்டதால் அவரை ஒரு நற்செய்தி கொண்டு வந்த தேவ தூதனாக மக்கள் கருதத் தொடங்கினர்.
 
நற்செய்தி கொண்டு வந்த தேவ தூதன்.


விரைவில் திமுக ஆட்சி மலரப் போகிறது; மக்கள் வாழ்வு செழிக்கப் போகிறது என்ற நற்செய்தியை இவருடைய பாடல்கள் அவ்வப்போது மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன. இதனால் இவர் ஒரு மேசியாவாக கருதப்பட்டார். எம் ஜி ஆர் காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அக்கட்சியின் ஆட்சி மாற்றப்பட வேண்டும்; பகுத்தறிவு பாதையில் வளர்ந்துவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மலர வேண்டும் என்று என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எளிய சொற்களையும் இனிய இசையையும் கொண்ட பாடல்களின் மூலம் வலியுறுத்தினார்.

வெற்றிக்கான உத்திகள்


எம் ஜி ஆரின் பாடல்கள் எளிமையாக இருந்ததால் அதிக படிப்பறிவு இல்லாதவருக்கும் புரிந்தது. எளிய இசையில் அமைந்ததால் எல்லோராலும் விரும்பி பாடப்பட்டது. கடினமான சொற்களோ சிக்கலான் இசையமைப்போ இவரது பாடல்களில் இல்லை. நான்கு அல்லது ஐந்து சொற்கள் மட்டுமே ஒரு வரியில் இருந்தன. பல்லவி இரண்டு வரியில் அமைந்தது. முக்கியமான வரிகளை திருப்பி திருப்பிப் பாடியதால் கருத்துக்கள் கேட்போர் மனதில ஆழமாகப் பதிந்தன. இவ்வாறான உத்திகளை எம் ஜி ஆர் பின்பற்றியதால் மூன்று வயது சிறுவர் முதல் என்பது வயது கிழவர் அவரை எம் ஜி ஆர் பாடலை ரசித்தனர். பாடினர்.

எம் ஜி ஆர் பாடலாசிரியர்களிடம் இன்னின்ன கருத்துக்கள் வர வேண்டும் என்று சொல்லி எழுதி வாங்கினார். சில கருத்துக்கள் சொற்கள் தன கொள்கைக்கு முரண்பாடாக இருந்தபோது அவற்றை மாற்றும்படி தெரிவித்தார். தனக்கு மன நிறைவைத் தராத பாடல்கள் பெரிய கவிஞரால் எழுதப்பத்தாக இருந்தாலும் அதனை நிர்த்தாட்சண்யமாக புறக்கணித்தார். வேறொருவரை விட்டு எழுதும்படி செய்தார். பாடல் நன்றாக எழுதப்பட்டு வந்ததும் பாடலாசிரியருக்கு தாரளமாக சன்மானம் வழங்கினார். வழங்கும்படி செய்தார். பாடல் வெற்றி பெறும்போது பாடலாசிரியருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. .

எம் ஜி ஆர் தன பாடல்களில் நாடு மொழி சுய மரியாதை அண்ணா உழைப்பின் மேன்மை அன்பு இரக்கம் பாசம் பொதுநலம் போன்ற மையக் கருக்களை வைத்துப் பாடல்களை உருவாக்கி வாங்கினார். தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல்களை அமைத்தார். தமிழன் என்ற இனத்தின் பெருமையை உணர்த்தும் பாடல்கள் அமைத்தார் உயர்தனிச் செம்மொழி பேசும் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையவர்கள் என்ற எண்ணம் மக்களின் தன்னம்பிக்கையை வளர்த்தது.

 

                                                                                                         

முனைவர் செ.இராஜேஸ்வரி
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்