பெண்களின் முன்னேற்றம்

முனைவர் நா.அமுதாதேவி

முகவுரை:

ட்டின் விடுதலைக்காக மட்டும் அல்லாமல் பெண்களின் விடுதலைக்காகவும் தன் கவிதைகளைப் படைத்தவர் மகாகவி பாரதியார் அவர்கள். பெண்களின் பெருமையையும் சிறப்பினையும் உரிமையையும் ஆண் என்ற நிலைப்பாட்டில் இருந்து தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்தவர் பாரதி. காட்சிக்கு எளியவனான பாரதி தான் கண்ட புதுமைப்பெண்னைப் பல சக்தியாக பல ஆளுமையாக வகைப்படுத்தி நோக்கியுள்ளான். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்று பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் பாரதி. பெண்மையின் ஒவ்வொரு வடிவத்தையும் தன் பாக்களில் பதிவு செய்த பாரதியின் கனவு இன்று பலவும் நிறைவேறியுள்ளது. இன்றைய சமுகச் சூழலில் பெண் தன் உணர்வுகளையும் உயர்வுகளையும் உயர்த்திக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அன்று பாரதி கொடுத்த குரல் இன்று வானளாவ உயர்ந்து வெற்றிகொண்டமையை இக் கட்டுரையின் வாயிலாகக் காணலாம்.

பெண்மை போற்றுதலுக்குரியது:


பாரதி நிவேதிதையை முதன் முதலாகச் சந்தித்த பொழுது தான் பெண்மையைத் தான் எதிர்நோக்கும் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டார். பாரதிக்கு ஞானகுருவாக இருந்து பெண்ணுக்கு உயர்வுநிலையைத் தரவேண்டும் என்ற உரத்த சிந்தனையை விதைத்தவர் நிவேதிதை. பெண்மையின் மேண்மையையும் உயர்வினையும் பலவாறு சிந்தித்து தன் படைப்பின் வாயிலாகப் புதுமையைப் புகுத்தியவன் பாரதி. பெண்மை வாழ்க என்றும் பெண்மை வெல்க என்றும் கூத்திட்டவர். தனது புதிய ஆத்திச்சூடியில் தையலை உயர்வு செய் என்று தன் கருத்தினைப் புகுத்தியவர். அதனால் தான் இன்று பல உயரிய பதவியில் உள்ள பெண்களின் மதிநுட்பத்தினை நாம் வியந்து போற்றி வருகிறோம்.

தாயையும் தாரத்தையும் சம நிலையில் வைத்துப் போற்றக்கூடியவர்கள் உயர்ந்தவர்கள் என்கிறார். இன்று பல குடும்பங்களில் இத்தகைய நிலையைக் காணமுடிகின்றது. 'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா' என்றும் 'மானம் சேர்க்கும் மனைவியின் வார்தைகள் என்றும் பெண்மையைப் போற்றியவன் வார்த்தைகள் இன்று மெய்ப்பித்துக் கொண்டுவருகின்றது.

கற்பு நிலை:


கற்பு என்ற நிலைப்பாட்டில் தன் கருத்தினை ஆழமாகப்பதிவிட்டவன் பாரதி. பெண்ணின் கற்பு போற்றப்படவேண்டும் எனவும் பெண் தன் கற்பு நிலையைப் புலப்படுத்துவது போல ஆணும் தன் கற்புநிலையில் தெளிவுடையவனாக இருக்க வேண்டும் என்கிறார். கற்பு என்பதனை இருவருக்கும் பொதுநிலையில் வைத்தவன் பாரதி. ஆண் தன் கற்பு நிலையில் தவறு செய்யும் பொழுது பெண்ணின் கற்பும் பிழைபடும் என ஆணுக்குப் பெண் எல்லாவகையிலும் சரிநிகர் சமம் என்பதனை வழியுறுத்தியவன் கூற்று இன்று மெய்ப்பித்து வருகின்றது.

'ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
அப்பொழுது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ?
நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச்சுட்டால்
நலமான கூரையும் தான் எரிந்திடாதோ?
    ( பாரதியார் கவிதை – 66-)

என்ற இக்கவிதையின் வழி ஆண் சமுதாயத்தில் சரியான பாதையில் பயணிக்கும் பொழுது அவனைப் பின்தொடரும் பெண்ணும் சரியான பாதையில் பயனிப்பாள் என்பதனை இவ்வரிகள் இன்றைய நிலைப்பாட்டினைப் பதிவுசெய்கிறது.

புதுமைப்பெண்:


பாரதி தான் காணவிருக்கும் புதுமைப்பெண் குறித்த தனது கனவுகளையும் கற்பனைகளையும் குறிக்கோளையும் பல கவிதைகளில் உரமிட்டு வார்த்துள்ளமையைக் காணமுடிகின்றது. தொல்காப்பியர் தம் நூலில் சுட்டிக்காட்டியுள்ள அச்சம், மடம், நாணம் என்ற வகைமையைக் கடந்து 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்'; என்று வாழ்வியல் முறையில் புதுமையைப்புகுத்தியவா.;

'நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்....'


ஏனப் பெண் தன் இயல்பு நிலையில் இருந்து மாறாமல் தன் ஆளுமைத் தன்மையை இப்புவியில் வெளிப்படுத்திடல் வேண்டும் என்று சிந்தித்தவர்.

இன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆடைகளாலும் அணிகலன்களாலும் தன் புதுமையைப்புகுத்தினாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண் பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையை வெளிப்படுத்தி நாட்டினை முன்னேற்ற வேண்டும் என்று பாடியவர் பாரதி.

'இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவும் சென்று புதுமை கொணர்ந்து இங்கே
திலக வாணுதலார் தங்கள் பாரத தேசம்
ஓங்க உழைத்திடல் வேண்டும்'

என்று புதுமைப்பெண்னைப் படைத்துக்காட்டியவன் பாரதி.

பெண்கல்வி:

பெண்கள் கல்வி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் பெண்னை விட்டிற்குள் பூட்டிவைத்து வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வதுமாக இருந்த விந்தையான மனிதர்கள் இன்று இல்லை . இன்று பெண் நாடு கடந்து கடல் கடந்து சென்று உலகலாவிய அளவில் தன் எண்ணங்களையும் சிந்தனையையும் செயல்படுத்தி வரும் நிர்வாகத்திறன் ஓன்றினையே நாம் இந்நிகழ்விற்குச் சான்றாகக் கூறலாம். பாரதி கண்ட புதுமைப்பெண் போல இன்று பல உயரிய பட்டங்களைப் பெற்று கல்விநிலையிலும் தொழில் நிலையிலும் தன் ஆற்றலைக் காட்டிக்கொண்டு இருப்பவள் பெண். பாரதியின் கனவு நிறைவேறிக் கொண்டு வருவதனை இதனை விட வேறு எவ்வழியிலும் கூறிவிடமுடியாது.

பாஞ்சாலியும் பெண்மையும்:


பாஞ்சாலிசபதம் என்னும் நூலின் வாயிலாகத் தான் கற்பனை செய்த பெண் தன் ஆற்றலை உணர்ந்து சமுதாய அவலங்களைப் பதிவுசெய்துவிட வேண்டும் என்பதனையும் சமுக அவலங்களுக்கு எதிராகத் தன் குரலைப் பதிவிட வேண்டும் என்றும் சிந்தித்தவர். தேர்ப்பாகன் திரௌபதியிடம் தங்களை அழைத்து வருமாறு துரியோதனன் கூறினான் என்பதனைக் கூறுகிறான் அதற்குத் திரௌபதி அவனிடம்

'நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை – புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன
சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்?

எனப் புரட்சிப்பெண்ணாக அன்றே புதுமைப்பெண்னைத் தவறுக்கு எதிராகக்குரல் கொடுக்கத்தூண்டியவர். எனவே தான் அவையில் தன் தரப்பில் உள்ள கேள்விகளைத் தயங்காமல் அவையில் முன்வைக்கிறாள்.

முடிவுரை:


பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உரிமை பெறுவதும் இல்லை முன்னேற்றம் அடைவதும் இல்லை. பெண்ணுக்குச் சமஉரிமையும் மதிப்பும் கொடுக்கின்ற போது அந்நாடு வளர்ச்சி நிலையை எய்தும். பெண் தன்னைச் சமுதாயத்தில் உயர்த்திக் கொள்ள தான் கல்விபெறுவதே ஒருவழி ஆகும். ஒரு பெண் கல்வி பெறும் பொழுது தன்னைச் சார்ந்துள்ள குடும்ப நபர்கள் அனைவரும் பயன்பெறுவர் என்பது உறுதி. அவ்வாறு தான் பெற்ற கல்விச் செல்வத்தைக் கொண்டு தன் அறிவினை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். பாரதியின் புதுமைச்சிந்தனையில் உதித்த கருத்துக்களை தன் சிந்தனையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் வளம் பெறவேண்டும்.

 


முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21


 







 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்