நீதியை வலியுறுத்தும்
எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்கள்
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆரின்
படங்கள் 1947 முதல் இன்று வரை எழுபது ஆண்டுகளாக திரையரங்கில் தொடர்ந்து
வெற்றிகரமாக ஒடி நல்ல இலாபம் ஈட்டி தருகின்றன. புது படங்களில்
கிடைக்காத இலாபம் எம் ஜி ஆர் படங்களில் கிடைப்பதால் நகரத்தில் ஓரிரு
திரையரங்குகளில் எப்போதும் எம் ஜி ஆர் படங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
அவரது படங்களில் பாடல்கள் வரும்போது ரசிகர்கள் இன்றும் எழுந்து நின்று
ஆடி பாடி கைதட்டி விசிலடித்து கொண்டாடுகின்றனர். ஏனெனில் அவர் பாடல்
கருத்துக்கள் காலம் கடந்தனவாக நின்று நிலைபெற்றுள்ளன. அவர் பாடல்களின்
கருத்துக்கள் காலத்தால் அழியாத கருப்பொருளை கொண்டுள்ளன. உலகளாவிய
கருப்பொருட்களைத் தனது பாடலில் அமைத்து அன்று அவர் பாடலாசிரியரிடம்
எழுதி வாங்கி இசையமைக்கச் செய்து பாடி ஆடி நடித்துள்ளார். எம் .ஜி.ஆரின்
தத்துவப் பாடல்கள் எனப் புகழப்படும் அவரது தனிப் பாடல்கள் அல்லது சமூகச்
சிந்தனை பாடல்களில் உலகப் பொது கருத்தான நீதியின் வெற்றி நீதிக்கான
போராட்டம் குறித்தும் பாடியுள்ளன. எம் ஜி ஆர் பாடல்களில் உள்ள
நீதி சார்ந்த கருத்துக்களை மட்டுமே இக்கட்டுரையில் காண்போம்.
நீதி பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இவர் பாடல்களில் காணப்படுகின்றன.
ஒன்று நீதி சில காலத்துக்கு மறைந்திருந்தாலும் அல்லது சிலருக்கு
தற்காலிகமாக கிடைக்காமல் இருந்தாலும், பின்னர் அது தன்னை வெளிப்படுத்தி
நல்லவர்களை காக்கும். இரண்டு, நீதி கிடைக்கும் என்று ஒருவர் சும்மா
இருந்து விடக்கூடாது. நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
இப்போராட்டம் நல்லவருக்கு வெற்றியை தருவது உறுதி.
தளரா முயற்சி
நீதி சார்ந்த இரண்டு கருத்துக்களையும் எம்.ஜி.ஆரின் தனிப் பாடல்கள்
பலவற்றில் நாம் காண்கிறோம். பாடலுக்கான காட்சி, பின்னணி பெரும்பாலும்
எம்.ஜி.ஆரின் குற்றமற்றவராக இருந்து அவர் மீது குற்றம் சுமத்தப்படும்
போது நீதி ஒருநாள் வெல்லும் தனக்கு நீதி கிடைக்கும் நீதிக்கான
போராட்டத்தை தான் தொடர்ந்து நடத்துவதில் அதில் தளர்ச்சியடைய மாட்டேன்.
அனைவரும் நீதிக்குத் , தலை வணங்கித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணங்களை
கொண்டு அவர் பாடுவதாக பல பாடல்கள் அவர் படங்களில் இடம் பெற்றுள்ளன.
இதே சூழ்நிலையில் ஒரு சாமான்யன் இருந்தால் ‘அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்’ என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி நீதி கிடைக்கும்
கவலைப்படாதே என்று பெரியவர்கள் நம்பிக்கை அளிப்பது உண்டு. அதுபோல
எம்.ஜி.ஆரும் அநீதி அநியாயம் என்பதெல்லாம் தற்காலிகமானதுதான்; முடிவில்
நீதியே வெல்லும் என்ற நம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்தக்
கருத்துக்களைத் தன் பாடல்களில் வைத்துள்ளார்.
வழிகாட்டிப் பாடல்கள்
‘இருப்பவன் வீட்டு கோழி முட்டை இல்லாதவன் வீட்டு அம்மிக்கல்லையும்
உடைக்கும்’ என்பது பழமொழி. பணம் இருப்பவனின் அதிகாரம் சிறிதாக
இருந்தாலும் பணம் இல்லாதவனை அது பெரிதாகப் பாதிக்கும் என்பது
நடைமுறையில் காணப்படும் செயல் என்பதால் ஏழை மக்கள் தமக்கு நீதி
கிடைக்காத போது அல்லது அநியாயங்கள் நடக்கும் போது அதிகார
வர்க்கத்தினருடன் எதிர்த்து நிற்க இயலாது என்று மனம் சோர்ந்து போய்
விடுகின்றனர். அச்சமயங்களில் அவர்கள் பொழுதுபோக்குக்காக தன் மனக் கவலை
தீர்வதற்காக ஆடல் பாடல் காட்சிகளை கொண்ட திரைப்படங்களைப் பார்க்க
வரும்போது வருகின்றனர். இப்படங்களில் எம்.ஜி.ஆர். படம் மட்டும்
மனச்சோர்வு அடைய வேண்டாம் நீதி கிடைக்கும் கொஞ்சம் பொறுத்திருங்கள்;
நீதி கிடைக்கும்வரை ; சலிப்படையதீர்கள் என்று அவர்களை நேர்வழியில்
முடுக்கிவிட்டு அவர்கள் செல்ல வேண்டிய பாதை எதுவென க் காட்டுகின்றன.
எனவே எம் ஜி ஆர் பாடல்கள் நீதியின் மீது நம்பிக்கை கொள்ளத் தூண்டுவதில்
மக்களுக்கு அவை வழிகாட்டிப் பாடல்களாக அமைகின்றன.
நீதி கருத்துக்களை உள்ளடக்கிய எம் ஜி ஆரின் தனிப் பாடல்கள், பணக்காரனின்
அநியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஏழைகள் வாய்மூடி மௌனிகளாக இருக்க
வேண்டாம். நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் நம்
பக்கம் இருக்கும் நியாயமும் நேர்மையும் நமக்கு நீதியைப் பெற்று தரும்
என்று நம்பிக்கை ஊட்டும் வகையில் செயல்பட்டு மக்களைப் புரட்சிப்
பாதையில் போராட்டப்பாதையில் செல்லும்படி அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்து வருகின்றன.
நீதியின் நிச்சயமான வருகை
ஆனந்த ஜோதி படத்தில் எம்.ஜி.ஆர். குற்றவாளி ஆக்கப்பட்டு அவர் ஒளிந்து
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது நல்லவன் துன்பப்படுவதற்கான காரணம்
என்ன? கடவுள் ஏன் இவ்வாறு நல்லவர்களுக்கு துன்பம் அளிக்கிறார்? என்ற
கேள்வியை தனக்குள்ளாகக் கேட்டுக் கொண்டு தானும் தன் மனசாட்சியும் ஆக
இரண்டு உருவங்கள் ஆகி கருத்துக்களைப் பாடி வருவதாக ஒரு பாடல் காட்சி
உண்டு. . இக்காட்சியில் ஒருவன் தான் படும் துன்பங்களை எல்லாம் சொல்லிக்
கொண்டு வரும் பொழுது இறுதியில் அவனுடைய மனசாட்சி இந்தத் துன்பங்களைப்
போக்குகின்ற வழி என்ன என்பதைச் சொல்லி அந்த துன்பங்களுக்கான தீர்வை
காட்டுகின்றது.
“தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் விற்காது
சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது”
என்ற வரிகள் நீதியைத் தேடி நீதிமன்றத்துக்கு போக வேண்டுமே தவிர தெருவில்
இருப்போரிடம் புலம்பி தீர்ப்பதால் பயனில்லை. என்ற கருத்து
உணர்த்தப்படுகிறது.
சட்டத்தை வளைத்தல்
அதிகாரம் படைத்தவர்கள் சாட்டையால் அடித்து உதைத்ததாலும் ஏழைகளுக்கு
கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் போகாது. அவர்களால் சட்டத்தை வளைக்க
முடியும் என்றாலும் இறுதியில் நீதி தான் வெல்லும் என்பதை உணர்த்தும்
வகையில் சில பாடல் வரிகள் அமைந்துள்ளன. ரிக்க்ஷாக்காரன் படத்தில் அசோகன்
ஒரு கொலையை செய்துவிட்டு அதை சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் உதவியுடன்
மறைத்துவிட்டு அதற்கு உதவிய வழக்கறிஞரோடு விருந்து களியாட்டங்களில்
ஈடுபட்டிருப்பார். அங்கு சிரிக்கும் சத்தத்தையும் அசோகனின் செயலால்
அனாதையாகி போன ஒரு சிறு குழந்தையின் புன்சிரிப்பையும் ஒப்பிட்டு
எழுதப்பட்ட பாடல் ஒன்றில்,
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
என்ற வரிகளும்
தோட்டம் காக்கப் போட்ட வேலி
பயிரைத் தின்பதோ அதைக் கேள்வி கேட்க
ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
என்று எம்.ஜி.ஆர். பாடும் வரிகள் படம் பார்ப்பவருக்கும் நமக்காக வாதாட
நமக்காக போராட எம்.ஜி.ஆர். இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையை
ஏற்படுத்தியது.
சொந்தக் கருத்து சேர்த்து கொடுத்த சொத்து
எம் ஜி ஆர் தம்மைக் காப்பாற்ற வருவார் என்ற நம்பிக்கையே பிற்காலத்தில்
அவரது புதிய கட்சிக்கு அவர்கள் மனப்பூர்வமாக ஆதரவளிக்கவும் உதவின. எம்
ஜி ஆர் படத்தில் பாடல் வரிகள் என்பது பாடலாசிரியர் எழுதி பின்னணி பாடகர்
பாடி எம்.ஜி.ஆர். வாயசைத்து கையசைத்து நடித்து பதிவு செய்யப்பட்டது
அல்ல. மற்றவர்களின் படங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். ஆனால்
எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பாடலாசிரியர் பாடல் எழுதி முடித்ததும் அவர்
அந்தப் பாடலை வாங்கி படித்துப் பார்த்து அந்தக் காட்சிக்கு அந்தப்
பாடலில் உள்ள வரிகளும் வார்த்தைகளும் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை
ஆராய்ந்து பொருத்தமாக இல்லை என்று உணர்ந்தால் உடனே அவற்றை மாற்றும்படி
கூறுவார். பாடல் எழுதுவது இன்னொருவருடைய பணி; அதில் அவர் மேதமை பெற்றவர்;
அவருடைய பணியில் நாம் தலையிடக்கூடாது என்று எம்.ஜி.ஆர். எப்போதும்
நினைத்தது கிடையாது. இது எம்.ஜி.ஆர். படம். இப்படத்தின் வெற்றிக்கு
அனைத்து கூறுகளும் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும். இது வாலி
பாட்டு, இது கண்ணதாசன் பாட்டு என்று இப்பாட்டுக்குப் பெயர்
வரப்போவதில்லை. இது எம்.ஜி.ஆர். பாட்டு என்றுதான் காலங்காலமாக
நிற்கப்போகிறது. எனவே எம்.ஜி.ஆர். பாடுகிறார் என்று தான் மக்கள்
கருதுவார்களே தவிர இன்னொருவர் எழுதி கொடுத்ததற்கு எம்.ஜி.ஆர்.
வாயசைக்கிறார் என்று ஒருபோதும் ரசிகர்கள் கருதுவது கிடையாது.
எம் ஜி ஆர் வாக்கு தெய்வ வாக்கு
எம்.ஜி.ஆருடைய வார்த்தைகளைத் தெய்வ வாக்காகக் கருதிய ஏழை மக்களுக்கு
நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் பாடல்களின் மூலம் சொல்லி அவர்களை
ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி நன்னெறியில் வாழும்படி செய்ய வேண்டும்
என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். அதனால் அவருக்கு மனம் ஒப்பாத ஒரு
சொல்லைக் கூட தன் பாடலில் இடம் பெற விடமாட்டார். இந்த காட்சிக்குத்
தேவையான கருத்து இது என்று அவர் விரும்பும் கருத்தை வெளிப்படுத்தும்
வகையில் மிகச் சிறப்பாக அந்த பாடல் வரிகள் இருந்தால் மட்டுமே அந்த பாடலை
ஏற்றுக்கொள்வார். இல்லை என்றால் வேறு ஒரு கவிஞரிடம் கொடுத்து பாடல்
எழுதி வாங்க தயங்கவே மாட்டார். அவரிடம் கொடுத்தால் இவர் கோபித்துக்
கொள்வாரே இவர் என்ன நினைப்பாரோ என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல்
தன்னுடைய படம் சிறப்பாக வரவேண்டும் என்பதில் மட்டுமே கருத்துச்
செலுத்துவார்.
இன்னொரு படத்தில் நீதி சில காலம் மறைந்திருக்கும் உரிய காலத்தில் தன்னை
வெளிப்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் ,
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்று பல்லவியை ஆரம்பிக்கும்போது தன்னுடைய தலைவனான அறிஞர் அண்ணாவையும்
அவருடைய வழியில் செயல்படுகின்ற திமுகவையும் அதன் தொண்டர்களையும்
சேர்த்தே இப்பாடலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்,. ஒரு தலைவன்
இருக்கிறான் மயங்காதே என்ற வரி அண்ணா இருக்கும்போது தொண்டர்கள்
கவலைப்படவேண்டிய தேவையில்லை. அவர் தன தம்பிகளைப் பாசத்தோடு கவனித்து
அவர்களின் துன்பத்தை பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற மறைமுகமான ஒரு
நற்செய்தியையும் ரசிகர்களுக்குத் தந்துவிடுகிறார். நீதி சில காலம்
மறைந்தாலும் தன்னாலே வெளிவரும் என்ற நம்பிக்கையைத் தன ரசிகர்களுக்கு
அளிக்கிறார்.
என் அண்ணன் படத்தில் நிரபராதியான எம்.ஜி.ஆர். சிறையில் அடைபட்டுக்
கிடக்கும் போது நல்லவர்கள் சிறையிலும், குற்றம் செய்தவர்கள் வெளியிலும்
இருக்கும் நிலையைப் பற்றி கடவுள் ஏன் கல்லானார் எனத் தொடங்கும் பாடலில்
தெரிவிக்கின்றார் .
சதிச்செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக் கொண்டு இருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன் இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
என்று கடவுளை நொந்து கொண்டவர்.
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
என்று நீதிமன்றத்துக்கு அவன் சாட்சி வராது என்று பாடுவார். இப்பாட்டில்
அவரவர் தனது மனசாட்சி படி நடந்தால் அங்கு நீதி தேவன் அரசாட்சி நடப்பதாக
அர்த்தம் என்று பாடுவது மக்களை நேர்வழியில் பயணிக்க தூண்டுகிறது.
மனசாட்சிக்கு புறம்பாக நடக்க கூடாது என்ற கருத்தையும் இவ்வரிகள்
தெளிவாக்குகின்றன..
2. நீதிக்கான போராட்டம்
நீதி கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிய எம்.ஜி.ஆரின்
பாடல்கள் நீதிக்கான போராட்டம் பற்றியும் ஆங்காங்கே எடுத்துரைக்கின்றன.
அவருடைய பாடல்களில் இரண்டாவது முக்கிய கருத்தாக அமைவது நீதிக்கான
போராட்டம் ஆகும். நீதிக்காக மனிதன் சலிப்பின்றி போராட வேண்டும் என்பதை
அவரது பாடல் வரிகள் வலியுறுத்துகின்றன. . அண்ணா திமுக கட்சி ஆரம்பித்த
பின்பு வந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அரசியலே கிடையாது
என்றாலும் கூட பெயர் போடும்போது வருகின்ற பின்னணிப் பாடல் [டைட்டில்
சாங்] அக்காலகட்டத்தின் அரசியலை தெள்ளத் தெளிவாக படம் பார்த்தவர்களுக்கு
விளக்கியது. அப்போது அண்ணா திமுக கட்சியின் தோற்றமும் அதற்கான காரணமும்
நீதிக்கான போராட்டமே என்பதை விளக்குகிறது.
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்
என்று தன கட்சியின் கொள்கையே நீதிக்கான போராட்டம் என்பதை
குறிப்பிடுகிறார்.
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத உலகம்
இல்லாமல் மாறும் ஒரு தேதி
என்ற வரிகள் நீதி நிச்சயம் வெல்லும்; பொருளாதாரச் சுரண்டல் ஓய்ந்து
விடும் என்ற ஒரு நம்பிக்கையான நற்செய்தியை இப்பாடல் படம்
பார்த்தவர்களுக்கு கொடுப்பதால் அண்ணா திமுக கட்சிக்கு ஆதரவு பெருகியது.
உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்த 20 நாட்களில் நடைபெற்ற திண்டுக்கல்
இடைத்தேர்தலில் அண்ணா திமுக முதன் முதலாக களம் இறங்கி இருந்தது. அப்போது
அந்த தேர்தலில் தமிழகத்தின் ஐந்து மிகப் பெரிய கட்சிகளான ஸ்தாபன
காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிட்டன.
ஐந்துமுனை போட்டியாக திண்டுக்கல் இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் அண்ணா
திமுக மட்டுமே 52 சதவீத வாக்குகளைப் பெற்று மக்களிடையே தான்
பெற்றிருந்த பேராதரவை உறுதி செய்தது. ஜனநாயக நாட்டில் அரசியல் களத்தில்
முதல் தேர்தலில் 52 சதவீத வாக்குகளைப் பெறுவது என்பது இதுவரை நடந்திராத
ஒரு அதிசயமாகும். எம் ஜி ஆரின் நீதிக்கான போராட்டத்தை நிச்சயமா உலகம்
பாராட்டியது என்பதை இத்தேர்தல் முடிவுகள் அரசியல் உலகுக்கு தெளிவாக்கின.
நீதியின் தீபம் ஏந்திய பயணம்
அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு எடுக்கப்பட்ட படங்களில் கலைஞர் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான சட்ட நிவாரணங்களை தேடி அவர்
அரசியல் பணிகளை தொடர்ந்தார். அதே வேளையில் தன்னுடைய நீதிக்கான
போராட்டத்தை அரசியல் பயணத்தை தன் படங்களில் பாடல்கள் மூலமாகவும் கதை
வசனம் காட்சிகள் மூலமாகவும் உறுதி செய்து கொண்டே வந்தார். மீனவ நண்பன்
படத்தில் ஏழையாக வந்து பணக்கார மாமனாருடன் மோதுகின்ற காட்சிகளில்
ஏழையின் உரிமைக் குரலை உயர்த்தினார். பணக்காரனை, அநியாயக்காரனை
எதிர்க்கும் நேர்மையான ஒரு ஏழையின் குரலாக அப்படத்தில் இவரது பாட்டு
ஒலித்தது. பாட்டின் வரிகள் சில அண்ணா திமுக வின் உள்ள ஒரு சாதாரண
தொண்டனின் உரிமைக்குரல் ஆகவும் கொள்கை முழக்கமாகவும் அமைந்தன.
நீதியின் தீபங்கள் ஏந்திய கைகளில்
லட்சிய பயணம் இது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயம் இது
நல்லவன் லட்சியம்
வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அது தான் சத்தியம்
மற்றும்,
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் போற்றலாம்
போன்ற வரிகள் அண்ணா திமுக நீதிக்கான பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள
தனது கட்சி இந்த போராட்டத்தில் கண்டிப்பாக அண்ணாவின் வழியில் வந்த
தம்பிகளான அண்ணா திமுகவினருக்கு வெற்றியை அழிப்பது உறுதி என்ற
நம்பிக்கையை அளித்தது. எம்.ஜி.ஆர். தன் ரசிகர்களுக்கும், தன்
தொண்டர்களுக்கும் பாடல் வரிகள் மூலமாக நீதியின்பால் நம்பிக்கை.
ஊட்டினார். இந்த நம்பிக்கை அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில்
உறுதியாகிவிட்டது. அவர் காலம் வரை அடுத்தடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில்
நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற வரிகளை உண்மையாக்கி கொண்டே
வந்தனர்.
நீதியின் வெற்றி
ஆரம்ப காலத்தில் இருந்து தன்னுடைய படங்களில் நீதி வெற்றி பெற வேண்டும்.
நீதி கிடைப்பதற்கான முயற்சியில் தளர்ச்சி அடையக் கூடாது என்றார்
கருத்துக்களைப் புகட்டிய எம் ஜி ஆர் நீதிக்கு பின் பாசம், நீதிக்கு
தலைவணங்கு போன்ற கருத்துக்களை எல்லாம் தன் படத்தின் பெயர்களாகவும்,
பாடல்களாகவும் பாடல்களின் வரிகள் ஆகவும் ஆக்கி மக்களுக்கு எடுத்துச்
சொல்லிய படியே வந்தார். தானே ஒரு குற்றம் செய்திருந்தாலும் சட்டத்தின்
கைகளில் தன்னை ஒப்படைக்கவேண்டும். நீதிதேவதையின் தீர்ப்புக்கு
கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில்
அவர் நீதிக்கு தலைவணங்கு என்ற படத்தில் நடித்திருந்தார். நீதிக்குப்
பின் பாசம் என்ற படத்திலும் அப்பா அம்மா அண்ணன் தம்பி ஆகிய நால்வருக்கு
இடையிலும் நடக்கும் போராட்டத்தில் பாசத்துக்கு இடமில்லை நீதிக்கு தான்
முதலிடம் என்ற ஒப்பற்ற கருத்தை உணர்த்தும் வகையில் கதைப்பின்னலும்
வசனமும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
நீதி மாலையோடு தேடி வரும்
என்
அண்ணன் படத்தில் முதல் காட்சியில் அவர் குதிரை வண்டிக்காரனாக
அறிமுகமாகும்போது முதலில் குதிரை வண்டியின் சக்கரம் பின்பு குதிரையின்
பாதங்கள் பிறகு அதன் முழு கால், அதன் பிறகு அதன் முகம், எம்.ஜி.ஆரின் ,
எம்.ஜி.ஆரின் உடல் நிறைவாக அவருடைய முகம் என்று மெல்ல மெல்ல
படிப்படியாக காட்டிக் கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முகம் வந்ததும் ஹே என்ற
உற்சாக ஒலியுடன்,
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
என்ற பல்லவியுடன் ஒரு உற்சாகமான பாடல் தொடங்கும் இப்பாடலின் கடைசி
சரணத்தில் அதில் நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து என்று முடியும்.
நீதி வெற்றியை அழைக்கும் பொது தனது பாராட்டுக்களையும் கொண்டு வரும்
என்ற மகிழ்ச்சியான தகவலை இங்கு தருகிறார்.
முதலில் இப்பாடல் வரி அதில் நீதி வரவில்லை என்றால் வாளை நிமிர்த்து
என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை குழுவினர் இப்பாடல் நீதிக்காக
வன்முறையில் இறங்கலாம் என்ற கருத்தை சொல்வதாக இருப்பதால் இவ்வாறு
ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர்.
நீதிக்காகவும் கூட வன்முறை கூடாது என்று கூறியதால் பின்னர் அவ்வரி
மாற்றப்பட்டு நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து என்று பாசிட்டிவான
சிந்தனையுடன் திருத்தப்பட்டது. ஆனால் படத்தில் இக்காட்சியில் எம் ஜி ஆர்
வாளை நிமிர்த்து என்ற வரிகளுக்கு கையசைத்து பாடுவதாகவே
எடுக்கப்பட்டிருந்தது.. அது அப்படியே இன்றும் படத்தில் இக்காட்சியில்
காணப்படுகின்றது இக்காட்சியைக் காணும் போது மாலை தொடுத்து என்பதற்கும்
இவருடைய கையசைக்கும் தொடர்பு இல்லையே என்று தோன்றலாம் பாடல் வரி பின்னர்
நிறுத்தப்பட்டதால் பாடலில் மட்டுமே அத்திருத்தம் இடம் பெற்றுள்ளது.
நிறைவு:
நீதியே இறுதியில் வெற்றி பெறும் . நீதிக்கு சோதனை வந்தாலும் அது
சோர்ந்து விடாது நீதி தன் இருப்பை உறுதிப்படுத்தும்; நிலைநிறுத்தும்
என்ற ஒரு நம்பிக்கை ஏழைக்கு இருந்தால் அவன் வாழ்வில் சோர்வடைய மாட்டான்.
என்றும் நீதிக்காக போராடும் துணிச்சல் உடையவனாக இருப்பான். இவ்வுலகில்
நிறைய நன்மைகள் உண்டு நல்லவர்கள் உள்ளனர். நல்லதுக்கு காலம் உண்டு என்ற
ஆக்கப்பூர்வமான [பாசிட்டிவான ] சிந்தனை அவன் வாழ்க்கைக்கு உற்சாகத்தைத்
தரும்; ஊக்கம் அளிக்கும். இதைத்தான் எம்.ஜி.ஆர். தன பாடல்களை படங்களில்
செய்து வந்தார்.
MGR is an uplifting person; if you are with him for five minutes you
will feel great and happy என்று ஓர் அயல்நாட்டு நண்பர் எம் ஜிஆரைச்
சந்தித்த பின்பு தெரிவித்தார்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|