எம் ஜிஆரின் படப்பாடல்களில்
தர்ம சிந்தனை
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர்.
என்றாலே ஈகை என்று பொருள் படும் படி அவரைப் பற்றிய ஒரு பிம்பம்
எல்லோருடைய மனதிலும் பதிந்து விட்டது. தன்னிடம் வந்து கேட்டவருக்கு
மட்டுமல்லாது தன்னை அணுகாமல் தள்ளி நிற்கும் பலருக்கும் கூட எம்.ஜி.ஆர்.
அவரவர் தேவைக்கு அதிகமாகவே எண்ணற்ற முறை உதவிகள் செய்திருக்கிறார்
என்பதை பலரது பேட்டிகள் வாயிலாகவும் அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்
பதிவுகள் வாயிலாகவும் அறிகின்றோம். அவரது தர்ம சிந்தை அவரது
தனிப்பாடல்களில் பாடலாசிரியர்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மமாக கொடுக்கும் தொகைக்குக் கூட வரி கேட்கிறார்கள் என்று ஒரு முறை
எம்.ஜி.ஆர். தனது பேட்டியில் தெரிவித்தார். இந்த பதில் எம்.ஜி.ஆர்.
விளம்பரத்துக்காகவும் வரி ஏய்ப்புக்காகவும் தர்மம் செய்கிறார் என்ற
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எம்.ஜி.ஆர். கொடுத்த தர்மத்
தொகைக்கும் அவர் வரி செலுத்தி இருக்கிறார். ஆக அவர் வரி ஏய்ப்புக்காக
தர்மம் செய்ய வில்லை. உள்ளார்ந்த அன்பின் காரணமாக அவர் தொடர்ந்து பல
தர்ம காரியங்களைச் செய்து வந்துள்ளார். தன்னைப்பற்றிய நல்ல விஷயங்களைப்
பாடலாசிரியர்கள் எழுதித் தரும் போது அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்
கொள்கிறார். அந்தப் பாடல்கள் அவை எழுதப்பட்ட காலகட்டத்திற்கும்
பொருத்தமாக இருந்தன. பிற்காலத்தில் அவை பொருத்தமாக இருந்ததையும் வரலாறு
நமக்கு மெய்ப்பிக்கின்றது.
கலியுகத்தில் தர்மம் காப்பாற்றும்
அக்கிரமங்களும் அட்டூழியங்களும் பல்கிப் பெருகி பேயாட்டம் ஆடும்போது
அவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றக்கூடியது அவரவர் தத்தம் சக்திக்கு
ஏற்றவாறு செய்யும் தர்மமே ஆகும் என்பது முன்னோர் மொழிந்த கருத்தாகும்.
எனவே, ‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள்
தாரீர்’ என்று பாரதியார் பாடியது போல மக்கள் தத்தம் சக்திக்கு ஏற்றவாறு
தர்மம் செய்தால் அவர்களுக்கு இக்கலியுகத்தில் ஏற்படும் தொல்லைகள்
விலகும். இக்கருத்தைத் தம் வாழ்க்கை நெடுகிலும் பின்பற்றியவர் எம் ஜி
ஆர் .
எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு அலைந்து கொண்டிருந்த
நாட்களிலும் கூட தன் கையில் இருக்கும் பணம் நாலணா எட்டணாவாக இருந்தாலும்
தன்னைவிட நலிந்த கலைஞரை பார்க்கும்போது அவர்களுக்கு அதை கொடுப்பது
வழக்கமாம். என் தங்கை படத்தில் பசியினால் செத்துக் கொண்டிருக்கும்
தங்கச்சிக்கு இட்லி வாங்கிக் கொண்டுச் செல்லும் போது வழியில் ஒரு
பிச்சைக்காரர் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிவிட்டது பிச்சை போடுங்கள்
என்று கையேந்துவார். அவரிடம் ‘உனக்கு தர முடியாது என் தங்கைக்கு கொண்டு
போகிறேன்’ என்று சொல்ல மனம் வராமல் அவர் கையில் எம்.ஜி.ஆர். கொடுத்து
விடுவார். இது கதைக்கு எடுக்கப்பட்ட காட்சி என்றாலும் அவரது இளம்
வாழ்வில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக அறிகின்றோம்.
எளிய வாழ்விலும் பகிர்ந்து உண்ணல்
கோவையில் நடந்த ஆரம்பகாலப் படப்பிடிப்புகளின்போது எம்ஜிஆர் தன்னுடன்
இருக்கும் நடிகர்களில் சமைக்கத் தெரிந்தவரை அழைத்து கோவைக்கு அருகில்
உள்ள மேட்டூர் அணையில் போய் ஐந்து ரூபாய்க்கு மீன் வாங்கி வரச்சொல்லி
அங்கே இருக்கும் நண்பர்களுக்கு எல்லோருக்கும் சேர்த்து நிறைய சமைக்கச்
சொல்லி பகிர்ந்து உண்பது வழக்கம். கோவையில் அவர் தங்கி இருக்கும் போது
நடந்த இச்சம்பவம் பற்றி நாம் வாசித்து அறிகிறோம். அவருக்கு மட்டும் மீன்
வாங்கி வரச்சொல்லி அவர் சமைத்து சாப்பிட்டு இருக்கலாம், மற்றவராக
இருந்தால் அதைத்தான் செய்து இருப்பர். ஆனால் நிறைய மீன் வாங்கி வந்து
நிறைய பேருக்கு பகிர்ந்து கொடுத்து சுவையான உணவை பலரோடு சேர்ந்து
உண்ணும் மகிழ்ச்சியை அவர் அடைந்திருக்கிறார். இதைத்தான் அவரது ஆரம்ப
காலத்திலிருந்து அந்திம காலம் வரை ‘ஈத்துவக்கும் இன்பம்’ பெற்றவராகவே
இருந்தார் என்ற முடிவுக்கு வருகிறோம்.
ஈத்துவக்கும் இன்பம்
ஈகையினால் அவருக்கு இன்பம் கிடைத்தது. பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்த
குணம் அவருடையது.
தண்டாமால் ஈவது ஈகை
தண்டி அடுத்தக்கால் ஈவது வன்மை;- அடுத்தடுத்து
பின் சென்றால் ஈவது காற்கூலி
பின் சென்றும் ஈயானை எச்சம் போல அறு
என்றார் அவ்வையார். பிறர் கேட்காமல் கொடுக்கும் குணம் எம்.ஜி.ஆருக்கு
எப்போதும் இருந்து வந்தது. பிறர் கண்ணீர் விடுகிறார் என்பதை தெரிந்த
உடனேயே அவர் அந்த இடத்திற்கு வந்து அவரது கண்ணீரை துடைப்பது வழக்கம்.
ஒருமுறை எம்.ஜி.ஆர். காரில் வந்து கொண்டிருந்த போது தொலைவில் ஒரு ஆணின்
அழுகுரல் கேட்கிறது. உடனே காரை நிறுத்தி தன உதவியாளை அனுப்பி போய்
பார்த்துவிட்டு வரச்சொல்கிறார். அங்கு ஒரு குதிரை வண்டிக்காரர் தனது
குதிரை இறந்து விட்டது என்று அழுது கொண்டிருக்கிறார். சுற்றிலும் அவர்
குடும்பத்தினரும் உட்கார்ந்திருக்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர் அவரை
அழைத்து குதிரை வாங்குவதற்கும் பணம் கொடுத்து குதிரை வாங்கி வந்து
வண்டியில் பூட்டி ஓட்டும் வரை அவர் குடும்பத்தினரின் சாப்பாட்டுச்
செலவுக்கும் பணம் தருகிறார். குதிரைக்காரர் குதிரை வண்டியை தயார்
செய்ததும் தோட்டத்துக்கு வந்து எம்.ஜி.ஆரை பார்த்து நன்றி
சொல்லிவிட்டுப் போகிறார். இது போன்ற உதவிகள் சாதாரணமாக எவரும்
செய்யக்கூடியது அல்ல. சாலையில் போகும் போது கேட்கும் கண்ணீருக்கெல்லாம்
காரணம் கேட்டு அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று எவரும் நினைப்பது
கிடையாது.
எம் ஜி ஆர் தாமே முன்வந்து உதவும் சம்பவங்களைக் கேள்விப்படும்
பாடலாசிரியர்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அதனை அவரது
திரைப்படப் பாடலின் பாடுபொருளாக்குகின்றனர். கொடுப்பதால் இன்பமும்
பாராட்டுவதால் மற்றொரு இன்பமும் அடையும் எம்.ஜி.ஆர். இதனால் பலர்
நம்மிடம் வந்து உதவி கேட்பார்களின் மேலும் மேலும் எண்ணிக்கை
அதிகரிக்கும் என்ற கவலை இன்றி தொடர்ந்து பிறருக்கு கொடுத்து மகிழ்வதில்
இன்பம் காண்கிறார். மனநிறைவு பெறுகிறார்.
எம்.ஜி.ஆருடைய மனைவி ஜானகி அம்மையாரும் தனது கணவருடைய கொடைப்பண்புக்குக்
குந்தகம் விளைவித்தது இல்லை. பொதுவாக வீடுகளில் ஆண்கள் சற்று தாராளமாக
செலவு செய்யும் போது பெண்கள் அவர்களின் செயல்பாடுகளைக் கண்டிப்பதும்
அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் வழக்கம். ஆனால் எம்.ஜி.ஆரின் கொடைப்
பண்புக்கு ஜானகி அம்மையார் எப்போது முட்டுக்கட்டை போட்டது கிடையாது.
ஜானகி அம்மையாரால் ஒரு தர்ம காரியம் நின்றுபோனது என்று ஒரு தகவல் கூட
இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. எனவே காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு
பட்டதே இன்பம் என்ற அவ்வையின் வாக்கின்படி இருவரும் காதலாலும்
கொடையாலும் ஒருமித்த கருத்துடையவர்களாக வாழ்ந்ததால் மட்டுமே எம்.ஜி.ஆர்.
கொடைப்பண்பு மிக்கவராக புகழ் பெற முடிந்தது.
ஈகையும் இரக்கமும் பிறவிக்குணம்
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எம்பதி
கொஷன்ட் [empathy quotient] ஐ உருவாக்கியது. மரபியல் நிறுவனமான 23 and
Me என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவில் நாற்பதாயிரம் பேரிடம் ஓர் ஆய்வை
நடத்தியது. அந்த ஆய்வில் பிறரிடம் இறக்கம் காட்டுவதும் அவர்களுக்கு
உதவுவதும் மரபியல் கூறுகளில் ஒன்று என்பது கண்டறியப்பட்டது. empathy
எனப்படும் பண்பு பலருக்கு வெறும் அறிதல் [cognitive] நிலையில் மட்டுமே
இருக்கும் ; சிலரிடம் மட்டுமே இப்பண்பு பயன் தரும் [effective] நிலையில்
காணப்படும். இவர்களின் மரபணுவில் ஈகையும் இரக்கமும் இணைந்து காணப்படும்.
[The Times of India, 13-3-18, p.11]. இதைத்தான் அவ்வையார் பிறவிக்குணம்
என்றார்.
எம்.ஜி.ஆர் பாடல்களில் பதிவான அவரது தர்ம சிந்தை
எம்.ஜி.ஆரின் பாடல்களில் இவருடைய கொடைப்பண்பு தனிப்பாடல்களிலும் காதல்
பாடல்களிலும் விளக்கப்பட்டுள்ளது. தர்மம் தலைகாக்கும் படத்தில்
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியின் அப்பா எம் ஆர் ராதாவிடம் தான் ஒரு
மருத்துவர் என்றும் ஒரு தர்ம ஆஸ்பத்திரி வைத்து நடத்துவதாகவும்
பேசிக்கொண்டே இருக்கிறார். அப்போது அவர் தலைக்கு மேல் இருந்த ஒரு
சரவிளக்கை எலி கடித்து கொண்டிருந்ததைப் பார்த்த சரோஜாதேவி எம்.ஜி.ஆரை
இழுத்து கீழே உருட்டி விடுகிறார். சரவிளக்கு அவர் உட்கார்ந்திருந்த
இடத்தில் விழுந்து உடைந்து சிதறுகிறது. அவர் எழுந்து அவர்களிடம்
விடைபெற்றுக்கொண்டு தன் காரில் ஏறி பயணத்தை தொடர்கிறார். அப்போது
“தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்”என்ற பாட்டை பாடிய
படி செல்கிறார்.
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
எனத் தொடங்கும் பாடலில் .
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது
நான்குமறை தீர்ப்பு
என்றும்
மலை போலே வரும் துயரங்கள் யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
என்று பாடும் வரிகள் மிகவும் கருத்து பொதிந்தவையாகும். பிறருக்கு உதவி
செய்வதால் உதவியைப் பெறுவோர் மட்டுமல்லாமல் உதவியை அளிப்பவரின் மனமும்
மகிழ்ச்சி அடைகின்றது என்ற கருத்தும், பிறருக்கு உதவி செய்து
வாழ்பவர்கள் வாழ்க்கையில் மலைபோல் வரும் துயரங்கள் கூட பனிபோல் நீங்கி
விடும் என்ற கருத்தும் எதிரிகள் கூட நம்மிடம் சரணடைந்து விடுவார்கள்
என்ற கருத்தும் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பின்னர் உண்மையாகவே
நடந்துவிட்டன.
இப் பாட்டு வரிகள் இப்படத்துக்காக எழுதப்பட்ட போது படத்துக்கு மிகவும்
பொருத்தமாக இருந்தது என்றாலும் அவரது வாழ்க்கையிலும் அவை மிகவும்
பொருத்தமாக இருந்தன. எம்.ஜி.ஆரை., எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட
போது அவர் பின்கழுத்தில் காதுக்குப் பின்னால் பாய்ந்த குண்டு அவருக்கு
உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் அங்கேயே தங்கியிருந்து பின்னர் ஒருநாள்
இருமும் போது வெளியே வந்துவிட்டது. அந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பின்பு
எம்.ஜி.ஆரால் பேச முடியாது சினிமாவில் நடிக்க முடியாது என்று எதிரிகள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த போது எவ்வித சேதாரமும் இல்லாமல் எம்.ஜி.ஆர்
.உயிர் பிழைத்து மீண்டும் சினிமாவில் நடித்து முன்பைக் காட்டிலும்
அதிகப் புகழும் பணமும் பெற்றார்.
தர்மம் தலைகாக்கும் என்ற வரி அவருடைய வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்து
விட்டது. இதனைக் கவனித்த ரசிகர்கள் அவரை ஒரு அவதார புருஷனாக ஒரு தெய்வ
பண்புடையவராகவே கருதி மகிழ்ந்தனர்.
எம்.ஜி.ஆர். ஜாதி மத பேதம் அற்றவர்
எம்.ஜி.ஆருடைய ரசிகர்கள் அனைத்து மதத்தையும் சாதியையும் சேர்ந்தவர்களாக
இருந்தனர். தன்னை வாழ வைத்த, தான் வசதியாகவும் புகழோடும் வாழ உதவிய
ரசிகர்களை அவர் மிகவும் நேசித்தார் அவரிடம் ஜாதி மத துவேஷம்
காணப்படவில்லை. இதனை அறிந்த பாடலாசிரியர்கள் இக்கருத்தையும் சேர்த்து
பல பாடல்களில் பதிய வைத்தனர்.
‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி’
என்று அவ்வையார் பாடிய கருத்தை பாடலாசிரியர் எம்.ஜி.ஆரின் வாய்மொழியாக
ஒரு படத்தில் தன்னுடைய பாட்டில் பதிய வைத்தார்.
“கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி,
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப் போன இந்த பூமியிலே”
என்று நாடோடி படத்தில்
“கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ – இந்த
மனிதன் கொண்ட கோலம்
எனத் தொடங்கும் பாடலில் ஒரு சரணம் அமைந்துள்ளது.
எம் ஜி ஆரின் பாடல் வரிகள் பிறருக்குக் கொடுப்பவனுக்கு இந்த சமூகத்தில்
மிகப் பெரிய அந்தஸ்து இருப்பதை உணர்த்துகின்றது. கொடுப்பதனால் மட்டுமே
ஒருவன் பெரியவனாக சமூகத்தில் மதிக்கப் படுகின்றான். பிறருக்கு தன்னால்
ஆன உதவிகளை பணமாகவோ பொருளாகவோ செயலாகவோ செய்ய இயலாதவன் கீழ்த்தரமானவன்
என்ற கருத்தை பாடலாசிரியர்கள் இங்கு பதிவு செய்வது எம்.ஜி.ஆரின் புகழை
பரப்பும் ஒரே நோக்கத்தினால் ஆகும்.
பாதுகாப்பு அளித்தல்
உதவி என்பது பணமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை என கருத்தில்
நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே
வேறு பல உதவிகளையும் செய்து இருக்கிறார். கே ஆர் விஜயா ஒரு பேட்டியில்
எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடும் போது அவர் இருந்தால் எங்களுக்கு
பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இது அவர் மட்டும்
தெரிவித்தது அல்ல வேறு பல நடிகையரும் தங்களது பேட்டியில் எம்.ஜி.ஆர்.
படப்பிடிப்பு என்றால் நாங்கள் பாதுகாப்பாக உணர்வோம். எங்களுக்கு பயம்
என்பதே கிடையாது. அவர் எங்களை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வார் என்று
சச்சு, லக்ஷ்மி, லதா போன்றோரின் பேட்டிகளிலும் நாம் அறிகின்றோம்.
கலைமாமணி விருது
வாங்கிய விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர். விஜயாவிடம் ‘நீ எப்படி போகப்
போகிறாய்’ என்று கேட்கிறார். விஜயா ‘நான் என்னுடைய காரில் வந்து
இருக்கிறேன் காரில் போவேன்’ என்று சொல்லவும், எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்
உன்னுடைய காரில் இப்போது போய் ஏறினால் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீ
நசுங்கி விடுவாய். நீ என்னோடு வேனில் வா’ என்று வேறு ஒரு வேனில்
ரசிகர்கள் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆர்., கே ஆர் விஜயா மற்றும்
விழாவில் பங்கேற்ற நடிகர்களும் நடிகைகளும் அந்த இடத்தை விட்டு வெளியேறி
விடுகின்றனர். விஜயாவின் டிரைவரிடம் கடற்கரைச் சாலையில் ஒரு இடத்தைக்
குறிப்பிட்டு அங்கு காரை கொண்டு வந்து விடும்படி தன்னுடைய ஆட்களிடம் எம்
ஜி ஆர் சொல்லிவிடுகிறார். அவர்கள் போய் விஜயாவின் டிரைவரிடம் சொன்னதும்
விஜயாவின் டிரைவர் காரைக் கொண்டு வந்து எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட
இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார். அங்கு வந்ததும் எம்.ஜி.ஆர். அது
விஜயாவின் கார் தானா என்பதை கேட்டு தெளிவு பெற்ற பிறகு விஜயாவை இறங்கி
அந்தக் காரில் ஏறிப் போகும்படி செய்கிறார். அந்த கார் பத்திரமாகக்
கிளம்பிப் போன பிறகு தன்னுடைய வேனில் இவர் கிளம்பிப் போகிறார். இதை
விஜயா குறிப்பிட்டுச் சொல்லி எம்.ஜி.ஆருடன் இருந்தால், எம்.ஜி.ஆருடன்
ஒரு விழாவிலோ படப்பிடிப்பிலோ பங்கேற்றால் நாங்கள் எவ்வித ஆபத்துமின்றி
பத்திரமாக பாதுகாப்பாக இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதுவும் அவருடைய ஈகைப் பண்புகளில் ஒன்று தான். இதை மனிதநேய பண்பு என்று
நாம் கருதினாலும் கூட செயலால் செய்யும் ஈகை என்று பொருள் கொள்ள வேண்டும்.
தேவையறிந்து உதவுதல்
ஒருவருக்கு உதவும் போது அதற்கான தேவை என்ன என்பதை அறிந்து உதவ வேண்டும்
என்பார் வள்ளுவர். நம்மிடம் இருக்கிறது என்று அதிகமாக கொடுப்பதோ
நம்மிடம் இல்லை என்று குறைவாக கொடுப்பதோ கூடாது அவருக்கு எது தேவையோ
அவருக்குப் பயன்படும் வகையில் அவருடைய தேவைகள் நிறைவேறும் வகையில்
கொடுத்து மகிழ வேண்டும். இந்தப் பண்பு சிலரிடம் உண்டு; சிலரிடம்
இருக்காது. எனவே சந்திரோதயம் படத்தில் இச்சிறப்புப் பண்பு எம்.ஜி.ஆரிடம்
இருக்கின்றது மற்ற பணக்காரர்களிடம் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில்
பாடலாசிரியர் சில வரிகளை எழுதி இருந்தார் .
“பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளது எல்லாம்
இறைவனும் தந்ததில்லை”
என்ற வரிகள் பணம் இருப்பவனிடம் மனமிருப்பதில்லை; மனமிருக்கும் ஒருவனிடம்
பணம் இருப்பதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றன. மேலும் ‘உன்னை
அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ என்ற தனிப்பாடலில் ,
“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா”
என்ற வரி எம்.ஜி.ஆர். பிறருடைய தேவையை அறிந்து கணக்குப் பார்க்காமல்
நிறையக் கொடுக்கும் பண்புடையவர் என்பதால் அவர் தெய்வத்தின் பிள்ளை ஆவார்;;
தேவகுமாரனுக்கு நிகரானவர். அவர் ஒரு தெய்வ மைந்தன் என்று பாடலாசிரியர்
குறிப்பிட்டுள்ளார். தேவ மைந்தன் அல்லது தெய்வத்தின் பிள்ளை என்று
சொல்லும் சொற்கள் அவரை தெய்வத்திற்கு நிகராக புகழ் பெற வைக்கின்றன.
ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் நூறாவது படமான ஒளிவிளக்கு அவரது வாழ்வில் மறக்க முடியாத
படமாகும். படத்தில் அவர் ஒரு சிறுமியை காப்பாற்றப்போய் தீ விபத்தில்
சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் போது பல மதத்தைச் சேர்ந்த அண்டை
அயலார் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று அனைத்து கடவுளரையும் தத்தம்
கடவுளரை வேண்டிக்கொள்வர். பின்பு அவர் தெய்வத்தின் கருணையால் உயிர்
பிழைத்து விடுவார். இது படத்தில் அமைந்த இக்காட்சியில் சவுகார் ஜானகி
எம்.ஜி.ஆரை அண்டிப் பிழைக்கும் இளம் அனாதைப். பெண். கொழுந்தனின் கொடூர
காமக்கரங்களுக்குள் சிக்காமல் பாதுகாப்பாக எம்.ஜி.ஆரின் நிழலில்
வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பெண், எம்.ஜி.ஆர். இறந்துவிட்டால் தன்னுடைய
வாழ்க்கை சிதைந்து போய் விடுமே என்ற நிலையில் எம்.ஜி.ஆர். உயிர்
பிழைக்க வேண்டும் என்று முருகனிடம் அழுது மன்றாடுவார். பாட்டில்
“ஆண்டவனே உன் பாதங்களை - நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
முருகையா...
பன்னிரண்டு கண்களிலே,
ஒன்றிரண்டு மலர்ந்தாலும்,
என்னிரண்டு கண்களிலும்,
இன்ப ஒளி உண்டாகும்,
உள்ளமது உள்ளவரை,
அள்ளித் தரும் நல்லவரை,
விண்ணுலகம் வாவென்றால்,
மண்ணுலகம் என்னாகும்..”
என்று பாடும்போது உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை என்ற வரிகள்
வருவதற்கு முன்பே ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்வர். இப்பாடல் சோகப்
பாடல் என்றாலும் எம் ஜி ஆர் பிழைத்துக்கொள்வார் என்பது ரசிகர்களுக்குத்
தெரியும் என்பதால் கைதட்டுவார்கள்.
இப்பாடல் உண்மையான காலகட்டம் ஒன்று தமிழக அரசியல் வரலார்றில் வந்தது.
எம் ஜி ஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் மூளையில் இருந்த
ரத்தக் கட்டி கரைவதற்காகவும் அமெரிக்காவில் புருக்லின் ஸ்டேட்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அனைத்துத்
திரையரங்குகளிலும் யார் படம் நடந்தாலும் இடைவெளியின் போதும் படம்
முடிந்த பிறகும் இப்பாடல் இறை வேண்டல் பாடலாக ஒலித்தது. மக்கள் அழுது
கடவுளிடம் வேண்டினர். எம் ஜி ஆர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்தது.
இப்பாடல் முடிந்தது படத்தில் ஒரு பாட்டி செத்துவிடுவார் எம் ஜி ஆர்
பிழைத்து விடுவார். அது போல அந்தக் காலகட்டத்தில் மூத்த அரசியல்வாதியான
இந்திரா காந்தி அவரது பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டார். எம் ஜி
ஆர் உயிர் பிழைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவே திரும்பி
வந்தார். இப்பாட்டில் வருவது போல அனைத்து மதக் கோவில்களிலும் சிறப்பு
வழிபாடுகள் நடைபெற்றன. மக்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செய்து எம்
ஜி ஆர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்ட்டிக் கொண்டனர். ஏனெனில்
அதற்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட
அறிஞர் அண்ணா, கண்ணதாசன், கிருபானந்த வாரியார் ஆகியோர் இறந்து போய்
பிணமாகத்தான் திரும்பி கொண்டு வரப்பட்டனர். எம் ஜி ஆர் ஒருவர் மட்டுமே
முதல்வராக போய் முதல்வராகவே திரும்பி வந்தார். சிகிச்சை பலன் அளித்து
ஆரோக்கியத்துடன் வந்தார். எனவே உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும் என்ற பாடல் வரிகள் அவரது
கொடைப் பண்பினால் அவர் உயிரை மற்றும் ஒரு முறை காத்துத் தந்தது.
காதல் பாடல்களில் தர்மம்
பாடலாசிரியர்கள் எம் ஜி ஆர். படத்தில் தனிப் பாடல்களில் அவரது தர்ம
சிந்தனை பற்றிய கருத்துக்களை இடம்பெறச் செய்தது போல காதல் பாடல்களிலும்
காதலிகள் அவரை வர்ணித்து பாடும் போதுஇடம்பெறச் செய்தனர். . எம்.ஜி.ஆர்.
படத்தின் காதல் பாடல்களில் பெண்கள் அவரை வர்ணித்து நலம்
புனைந்துரைத்துப் பாடுகின்ற தன்மை இடம்பெற்றது. காதலிகள் படங்களில்
அவருடைய அழகையும் அன்பையும் வர்ணித்துப் பாடும் போது அவருடைய பொன் நிறம்,
இளமை கட்டுடல், தர்ம குணம் ஆகியவை தவறாமல் இடம்பெறுகின்றன.
பொன்னின் நிறம்; பிள்ளை மனம்; வள்ளல் குணம்
உலகம்
சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்து நடிகை மேதா ரூங் ராத் என்ற நடிகை
எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருந்தார். அவரும் எம்.ஜி.ஆரும் பாடுகின்ற
ஜோடி பாடல் ஒன்றில் எம்.ஜி.ஆர் தன காதலியை
“பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?
என வருணித்துப் பாடியதற்குப் பதிலாகக் காதலி பாடும்போது
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ” என்கிறார். இவ்வரிகளில் எம்.ஜி.ஆரின் வள்ளல்
குணமும் அவர் தேவன் மகன் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்கிறோம்.
எம்.ஜி.ஆரைப் பற்றி ஜெயலலிதா அரசகட்டளை படத்தில் பாடும் தனிப்பாடலில்
அவருடைய அழகும் பண்பும் கொடையும் போற்றப்படுகின்றது.
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி
என்றும்
நல்ல கலைஞருக்கு எல்லாம் வள்ளல்
என்றும் இப்பாடலில் அவரது வள்ளல் குணம் பாராட்டப்படுகின்றது. எம் ஜி ஆரை
நடைமுறையில் எட்டாவது வள்ளல் என்றும் பாராட்டப்படுவது போலவே காதல் பாடல்
வரிகளிலும் பாராட்டப்பட்டார். இப்பாடல் வாலி அவர்கள் படத்தின்
கதாநாயகனுக்காக என்றில்லாமல் எம்.ஜி.ஆருக்காக எம்.ஜி.ஆரை நினைத்து
எழுதியதாகத் தெரிவித்தார்.
“என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன் கோவில் இல்லாத இறைவன்”
என்று வாலி எம்.ஜி.ஆரை நினைத்து அவரைப்பற்றி பாராட்டியே எழுதி இருந்தார்.
இந்த வரிகளிலும் எம் ஜி ஆரை இறைவன் என்று பாராட்டியிருப்பதை காணலாம்.
யாரும் இல்லை என்று சொல்லிவிட்டால் வாடுவான்
ஆர் ஆர் பிக்சர்ஸ் எடுத்த பாசம் என்ற படம் எம்.ஜி.ஆரைத் திருடனாக படம்
முழுக்க காட்டியிருந்தது. மேலும் நல்ல தோற்றப் பொலிவு , நல்ல
பழக்கவழக்கங்கள் இன்றி அவர் எப்போதும் இடது கை பெருவிரல் நகத்தை
எந்நேரமும் கடித்து கொண்டிருப்பவராக இப்படத்தில் நடித்திருந்த
எம்.ஜி.ஆர். இறுதியில் தன் தாயின் மரணத்துக்கு தானே காரணமாகி விட்டோம்
என்பதை அறிந்து உயிரை விடுவதாக படம் முடிவடையும். இப்படம் எடுக்கும்போது
இயக்குனர் ஆர் ராமண்ணாவிடம் எம்.ஜி.ஆர். நான் படத்தில் இறந்து போவதாக
காட்டினால் படம் ஓடாது; என்னுடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
என்றார். ஆனால் இராமன்னா ‘இந்த கதைக்கு இப்படி முடிவு இருந்தால் தான்
சிறப்பாக இருக்கும்’ என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னார். எம்.ஜி.ஆரும் ‘’சரி
இவர் சொல்லி கேட்பவர் அல்ல;அனுபவப்பட்டு தெரிந்து கொள்பவர்’ என்று
விட்டுவிட்டார். முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் ஆரவாரம்
செய்து திரையரங்கின் திரைகளை கிழிக்கத் தொடங்கிவிட்டனர். அதன்பின்பு
அப்படத்தைத் திரையிட முடியாமல் போய்விட்டது.
பாசம்
படத்தில் திருடனாக நடித்திருந்த எம்.ஜி.ஆர். இரக்கமுள்ள குணம் உடையவர்
என்பதை அவரை காதலிக்கும் நாட்டியப் பெண் அவரை வர்ணித்து பாடி வரும்
பாடலில் குறிப்பிட்டிருப்பார்.
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்;
யாரும் இல்லை என்று சொல்லி விட்டால் வாடுவான்
பொன் பொருளை அவர்க்குத் தந்து போற்றுவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
போன்ற வரிகள் அவன் திருடனாக இருந்தாலும் ஏழைகளின் பால் இரக்கமுள்ளவன்;
மேலும் யாரும் தன்னிடம் வாழ்க்கைக்குத் தேவையான பணம் இல்லை என்று சொல்லி
விட்டால் தன்னிடம் இருக்கும் பொன் பொருளைக் கொடுத்து அவர்களை சாலை வரை
பாதுகாப்பாகக் கொண்டு வந்துவ் விடுவான் என்ற வரிகள் எம்.ஜி.ஆர்
ஏழைகளிடம் இரக்கம் காட்டும் நல்ல சுபாவம் படைத்தவர் என்று பாராட்டி
எழுதப்பட்ட வரிகள் ஆகும்.
இதயக்கனியில் அறிமுகப் பாடல்
எம்.ஜி.ஆர்.நடித்து
1975இல் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடிய மிகப்பெரிய
வெற்றிப்படம் இதயக்கனி. ‘இந்த கனி யார் மடியில் விழும் என்று அனைவரும்
காத்துக் கொண்டிருந்த போது அது என் மடியில் விழுந்தது அதை எடுத்து என்
இதயத்தில் வைத்துக் கொண்டேன்’ என்று அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆரை தனது
இதயக்கனி என்று மேடையில் பாராட்டியிருந்தார். அந்தப் பாராட்டுதலை
நினைவிற்கொண்டு இப்படத்திற்கு இதயக்கனி என்று எம்.ஜி.ஆர். பெயர்
சூட்டினார். படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக்காட்சியில்,
“தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப் பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
என்ற பாடல் அவருடைய சத்யா காப்பித் தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு
பாராட்டு விழா நடத்தி பாடும் பாடலாக அமைந்தது.
இப்பாடலில் வள்ளலே எங்கள் வாழ்வே என்று
எம் ஜி ஆர் அழைக்கப்படுகிறார். மேலும் கருணையால்
எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேச வந்த கண்மணி என
போற்றப்படுகிறார். எம் ஜி ஆரை மக்கள் எங்க வீட்டுப் பிள்ளை என அன்றும்
கருதினர். இன்றும் கருதுகின்றனர். இதே கருத்தை இப்பாடலிலும்
பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணி என
பாடலாசிரியர் குறித்துள்ளார். எம் ஜி ஆர் மக்களின் இதயங்களில்
வாழ்கிறார். கட்சியினர் அவரை இதய தெய்வம் எம் ஜி ஆர் என்றே
போற்றுகின்றனர். எனவே இதயக் கனி படமும் இப்பாட்டு இன்றைக்கும் மக்களால்
பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.
உங்களை நினைவில் வைத்திருப்பார்களா?
1947 முதல் எழுபது வருடங்களுக்கும் மேலாக மக்களின் மனதில் இதய தெய்வமாக
இருந்து செங்கோலோச்சி வரும் எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை பத்திரிகையாளர்கள்
உங்களை உங்கள் ரசிகர்கள் எவ்வளவு நாள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று
கேட்ட போது எம்.ஜி.ஆர். ‘என் படத்தின் நெகட்டிவ் இருக்கும் வரை என்னை
மறக்க மாட்டார்கள்’ என்றார். அவருடைய அந்த கணிப்பும் கருத்தும்
உண்மையாயிற்று. எம்.ஜி.ஆரின் பல படங்கள் இன்று டிஜிட்டல் மயமாகி விட்டன.
அனைவரும் தங்கள் கைபேசிகளில் நினைத்த நேரத்தில் எம்.ஜி.ஆர். படங்களையும்
பாடல்களையும் பார்க்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. எனவே
நினைத்த போதெல்லாம் எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து மக்கள் தங்களுடைய
ரசிப்பை நிலைநிறுத்திக் கொண்டனர். எம்.ஜி.ஆரின் வளர்ந்து வரும் ரசனையை
கண்ட மற்றவர்களும் இளைய தலைமுறையினரும் இப்போது எம் ஜி.ஆர். பாடல்களைப்
பார்க்கவும், கேட்கவும் படங்களைப் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் எம்.ஜி.ஆருடைய ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து பெருகிக்
கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை.
காலத்தால் நிலைத்து நிற்கும் பாடுபொருள்
விஞ்ஞானமும் வளர்கிறது எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் அதிகரிக்கின்றனர்.
இந்த இரண்டிற்கும் ஒத்துப்போவதாக அமைந்திருப்பது அவருடைய படங்களின்
பாடுபொருளும் கருத்துக்களும் ஆகும். எம்.ஜி.ஆருடைய படங்களில்
இருக்கக்கூடிய உலகளாவிய பாடுபொருள் அல்லது உலகில் எந்தப் பகுதியில்
வாழும் மனிதனும் சரி என்று ஏற்றுக் கொள்ளும் கருத்துக்கள் அவரது
படங்களும் பாட்டிலும் இருப்பதால் இன்னும் அவை காலத்தால் அழியாத
கருத்துகளாக இருக்கின்றன. அடுத்த தலிமுரையினராலும் எம் ஜி ஆர் பாடல்களை
ரசிக்க முடிகின்றது. அவரது தர்ம குணத்தை ஆதரிக்க முடிக்கின்றது; அவரை
வியந்து பார்க்கின்றனர்.
எம் ஜி ஆர் ரசிகர் மன்றங்களின் கொடைப் பண்பு
Charity begins at home என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
பிறருக்குக் கொடுத்து மகிழ வேண்டும் என்ற பழக்கத்தை நாம் நம்
பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். வீட்டில் இருந்துதான் தர்ம சிந்தனை
பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட்டு பின்பு அது வெளியே சமூகத்தில்
நடைமுறைப்படுத்தப்படும்.. எம்.ஜி.ஆர். படங்களைப் பார்ப்பவர்கள்
சிறுபிள்ளை பருவத்திலிருந்தே எம்.ஜி.ஆருடைய தர்மசிந்தனையால்
ஈர்க்கப்பட்டு பின்னர் பெரியவராகி வரும்போது அவரவரால் இயன்ற அளவுக்கு
பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையுடன் வளர்ந்து வருகின்றனர். இதனால்
இன்றைக்கும் இருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் ஒரு வருடத்தில்
இரண்டு மூன்று முறையாவது தங்களால் ஆன தர்ம காரியங்களைச் செய்து
வருகின்றனர். பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவது
பள்ளிக்கூட பை வழங்குவது; ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சேலை, ஆண்களுக்கு
வேட்டி வழங்குவது, அன்னதானங்கள் செய்விப்பது; வெயில் காலத்தில் நீர்
மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் வைத்து அவ்வழியில் நடந்து
போவோருக்கு தண்ணீர் வழங்குவது என எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவர்களாலான
தர்ம காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். எம் ஜி ஆர் தனது
ரசிகர்களுக்கு இன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.
நிறைவு :
கலியை
எதிர்ப்பதற்கு தர்மம் ஒன்றே வழி என்பதைப் படித்தவர்கள் புத்தகங்களில்
படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இத்தகைய புத்தகங்களைப் படிக்க
வாய்ப்பு இல்லாதவர்கள் எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்து தர்மம் ஒன்றே
நமக்கு வாழ்வில் கலியின் துன்பங்களிலிருந்து உய்விக்கும் ஒரே வழி என்பதை
புரிந்து கொண்டு அறச் செயல்களில் தர்ம காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வகையில் எம் ஜி ஆர் ஓர் ஆன்மிக குரு போல செயல்படுகிறார். அவரது
படங்களும் பாடல்களும் வழிகாட்டிப் பெட்டகங்களாக திகழ்கின்றன.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|