நல்வழி காட்டும் ஈகைத்திறன்
முனைவர் நா.அமுதாதேவி
முன்னுரை:
அறநூல்களைச்
சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் போற்றுவது தமிழரின் மரபு.
இலக்கியம் என்பது மானிட அனுபவங்களை உரைப்பதாக இருக்கவேண்டும். வெறும்
அனுபவங்களை மட்டும் எடுத்துரைப்பது இலக்கியப்பணி அல்ல. இதைவிட
வேறுமுறையில் சொல்லவே இயலாது என்ற நிலையில் மொழியைத் தனித்தன்மையோடு
கையாண்டு சுருங்கச் சொல்லுதல் இலக்கியத்தின் உயரிய மாண்பாகும். பொன்மொழி
போன்று என்றும் நினைவில் கொள்ளுமாறும்இ சுவைபட எளிய சொற்களைக்
கையாள்வதும் இலக்கியத்தின் சிறப்பாகும்.
தமிழ் இலக்கிய வரலாறு சங்கம் மருவிய காலத்தினை நீதிநூல்களின் காலம் என
வரையறுத்துள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து நீதிநூல்கள்
தோற்றம் பெறத்துவங்கின. மக்கள் நல்ல வழியில் நடப்பதற்கு உதவும்
அறக்கருத்துக்களைக் கூறும் நூலாக இருப்பதனால் இந்நூலுக்கு நல்வழி
என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நூல் கடவுள்வாழ்த்துப்பாடல் உட்பட
41 வெண்பாக்களை உள்ளடக்கியதாகும். சான்றோர்கள் தம் மனக்கருத்துக்களை
இளையோருக்குக் கூறும் வகையில் அமைந்த அறிவுரைநூல் இது எனலாம். நல்வழி
என்னும் இந்நூல் நமக்குச்சுட்டிக்காட்டியுள்ள ஈகைத்திறனை இக்கட்டுரையின்
வாயிலாகக் காணலாம்.
அவ்வையார்
தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்கள் பலருள் புகழ் பெற்றவர் அவ்வையார்
என்னும் பெண்பால்புலவர் ஆவார். இவர் சிறுவர்கள் மனதில் அறக்கருத்துக்கள்
எளிதில் பதியும் வகையில் எளிமையாகப் பாடும் திறம் கொண்டவர். இவர்
ஆத்திச்சூடிஇ கொன்றை வேந்தன்இ மூதுரைஇ நல்வழி போன்ற பல நூல்களை
இயற்றியுள்ளார். அழகு தமிழில் எளிய சொற்களில் மனிதர்களின் நல்வாழ்க்கை
வழிகாட்டியாகப் பல நீதிநூல்களைப் படைத்தவர். உயிர் எழுத்துக்களும்
மெய்எழுத்துக்களும் சிறுவர்களின் மனதில் எளிதில் பதியும் வகையில்
வகையில் தமிழ்மொழியின் எழுத்துருவை மாணவர்கள் மனதில் பதித்த
சிறப்பிற்குரியவர்.
அவ்வையார் என்னும் பெயரில் தமிழகத்தில் ஓரு பெண்பால் புலவர்
வாழ்ந்துள்ளார் என்பது உண்மை. ஆனால் வௌ;வேறு காலகட்டங்களில் நான்கு
புலவர்கள் வாழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் பலரும் கருத்துரைத்துள்ளனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டைநாட்டு மன்னன்
அதியமானின் நண்பர். இரண்டாமவர் பக்தி இலக்கிய காலத்தின் இறுதியில்
வாழ்ந்தவர். விநாயகர் அகவல்பாடியவர் இக்காலத்தினைச்சார்ந்தவர்.
மூன்றாமவர் ஆத்திச்சூட, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற பல
நூல்களை இயற்றியவர். நான்காமவர் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர்.
கொடைத்திறம்
வள்ளல்கள் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பொருள் இல்லாதவர்களுக்கு
வாரி வழங்குவார்கள். இவ்வாறு பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களிடம்
உள்ள செல்வம் குறைந்தாலும் அவர்களை நாடிப்பொருள் வேண்டி
வருகின்றவர்களுக்குத் தம்மால் இயன்ற பொருளை எந்நிலையிலும் இல்லை என்று
கூறாமல் வழங்கும் சிறப்பினை உடையவர்களாக விளங்குவர்.
வழிவழியாகப் பிறருக்குப் பொருளை வழங்கும் நல்ல குடியில் பிறந்தவர்களை
வள்ளல் குடியினர் என்று புகழ்ந்து பேசுவர். இக்குடியில் பிறந்தவர்கள்
வறுமைநிலையை அடைந்தாலும் தம்மை நாடி யாசித்து வருகின்றவர்களுக்கு இல்லை
என்று பதிலைக் கூற அவர்களின் உள்ளம் ஒருபோதும் விரும்பாது. இந்நிலையை
அவ்வையார் தக்க சான்றுடன் விளக்கியுள்ளார்.
'ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந் நாளும் மவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல் கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.' (நல்வழி -9)
ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை ஊர் மக்கள்
பயன்படுத்துவார்கள். அந்த ஆற்றிலே நீர்வற்றிப் போன கோடைக்காலத்திலே அதன்
அருகில் தோண்டப்பட்ட ஊற்றுக்களின் மூலம் அவ்வூர் மக்கள் பயன்பெறுவர்.
எந்நிலையாயினும் தன்னுடைய கொடைப் பண்பில் இருந்து வழுவாமல் பிறருக்கு
உதவுவது போல வள்ளல் தன்மை உடையவர்கள் பிறருக்கு உதவுவர் என்பதனை எளிய
நடைமுறைச் சான்றின் மூலம் விளக்கியுரைக்கிறார்.
செல்வம் சேரும்
நம்மிடம் செல்வம் இருக்கும் போது அச்செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து
வாழவேண்டும். அவ்வாறு நாம் பிறருக்கு வழங்குவது அறச்செயலாகும். இந்த
அறச்செயலைச் செய்கின்றவர்களுக்கு செல்வம் வந்து சேரும்;. இவ்வாறு
செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளாத நபர்களிடம் செல்வம் மேலும் வந்து சேராது
என்பதனை
'செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் -வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்' (நல்வழி -17)
என்ற இப்பாடல் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து பல தீய
செயல்களைச் செய்துவிட்டுக் கடவுளை வணங்கினால் மட்டும் நமக்குப் பெரும்
செல்வம் சேராது. அவ்வாறு செல்வம் சேரவில்லையே என்று கடவுளை நினைத்து
வருந்துவதாலும் எவ்விதப் பயனும் கிடையாது. நாம் செய்த தீயசெயல்களால்
ஏற்பட்ட பாவம் நீங்கவேண்டும் என்றால் செல்வம் இல்லாதவர்களுக்குச்
செல்வம் வழங்கி உதவிடல் வேண்டும். இவ்வாறு பிறருக்கு உதவும் பொழுது நாம்
செய்த பாவம் நீங்குவதோடு நமக்கும் புண்ணியம் வந்து சேரும். இதனை விளக்க
'வெறும் பானை பொங்குமோ மேல்' என்ற எளிய சான்றினைக்
காட்டியுள்ளார்.
பானையில் எதுவும் போடாமல் நெருப்பு மூட்டினால் அந்தப் பானையில் இருந்து
எதுவும் பொங்கி மேலே வராது. அது போல பாவம் நீங்கும் படி புண்ணியம்
செய்யவில்லை எனில் நம்மிடம் செல்வம் வந்து சேராது என்பதனைச்
சுட்டிக்காட்டியுள்ளார்.
தீயோரும் வழங்குவர்
நாம் முயன்று சேர்த்த பொருளைப் பிறருக்கு வழங்குவதற்கு நல்ல குணம்
வேண்டும். அந்த நல்ல குணம் இல்லாதவர்களும் சில வேளைகளில் பிறருக்குப்
பொருளை வழங்குவர். எப்பொழுது என்பதனை
'பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டா – மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலும் தாம்' (நல்வழி – 18)
என்ற இப்பாடலடிகளில் புலப்படுத்தியுள்ளார். பெற்ற தாயும் தந்தையும்
உடன்பிறந்தவர்களும் தன் நாட்டைச் சார்ந்தவர்களும் உறவினர்களும்
நண்பர்களும் கெஞ்சிக் கேட்டாலும் வள்ளல் குணம் இல்லாதவர்கள் பிறருக்கு
சிறிது பொருளைக் கூடத் தானமாக வழங்க மாட்டார்கள். ஆனால் தமக்கு
எவ்வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள் தன்னை மிரட்டித் துன்புறுத்திப்
பொருள் கேட்கும் பொழுது அவர்களுக்குப் பணிந்து தன்னிடம் பொருள்கேட்கும்
பொழுது அவர்களுக்குப் பணிந்து தன்னிடம் உள்ள பொருளைக்
கொடுத்துவிடுவார்கள். இவ்வாறாயினும் இவர்கள் ஈகைக்குணம் உடையவர்களாக
மாறிவிடுகின்றனர். யாருக்கும் பொருள் வழங்காமல் பொருளைச் சேமித்து
வைக்கும் பொழுது கருமிகளிடம் செல்வம் சேர்ந்துவிடுகிறது. மிகுதியான
பொருள் இவர்களிடம் இருப்பதினால் இப்பொருளைச் சேர்த்து வைப்பதில்
அவர்களுக்கு ஓருவித அச்சவுணர்வு தோன்றுகிறது. மேலும் தன்
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நல்ல உறவு நிலை இன்மையால் மிரட்டலுக்கு
அஞ்சிப் பணிந்நு பொருள் வழங்கும் சூழல் ஏற்படுகின்றது.
செல்வம் நிலையாமை
செல்வம் எப்போதும் ஒருவரிடமே நிலைத்து இருப்பது இல்லை. அது அடிக்கடி
பிறரிடம் செல்லும் ஆற்றலை உடையது ஆகும். எனவே தான் இதற்குச் செல்வம்
என்று பெயர் சூட்டினர் போலும். ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப
மேடு பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப் போல செல்வமும் ஒருவரிடம்
மட்டுமே நிலைத்து இருக்காது. ஒருவரிடம் மிகுதியாகவும் ஒருசாரருக்குத்
தேவையை விடக் குறைவாகவும் சேரும். இத்தகைய நிலைப்புத் தன்மை இல்லாத
தன்மையை உடைய செல்வத்தினை முறையான வழியைப் பயன்படுத்தி பல
அறச்செயல்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நம் உள்ளம்
மகிழ்ச்சி அடைகிறது. இதனை அவ்வையார்
'ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து' (நல்வழி -32)
என்ற பாடலடிகளின் மூலம் வெளிக்காட்டியுள்ளார்.
செல்வத்தை மறைக்காமல் இருத்தல்
நாம் அரும்பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பிறருக்குப் பயன்படாத வகையில்
மறைத்து வைத்தல் கூடாது. இவ்வாறு தேடிய செல்வத்தைத் தாமும்
பயன்படுத்தாமல் பிறருக்கும் பயன்படாத வகையில் மண்ணிலே புதைத்து வைக்கும்
பாவிகளே உங்கள் மறைவிற்குப் பின்பு அப்பணத்தினை யார் அனுபவிப்பது.
மறைவாக இருக்கும் அப்பணம் யாருக்கும் பயன்படாமல் மண்ணுக்குள்ளே மறைந்து
போவதால் என்ன பயன் எனப் பொருளை மறைக்கும் குணம் கொண்டவர்களைச்
சாடுகிறார்.
'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்' (நல்வழி -22)
என்ற வரிகளால் அவ்வையார் வசை பாடியுள்ளமை மக்களின் கீழ்மைச் சிந்தனையைப்
புலப்படுத்துகிறது.
வரவறிந்து செலவு செய்க
பிறருக்குப் பொருளை வழங்குவது அறம் என்பதனால் நம் வரவிற்கு அதிகமாகச்
செலவிடல் கூடாது. தம் வாழ்விற்கான பொருளைச் சேமித்தது போக எஞ்சியுள்ள
பொருளைப் பிறருக்கு வழங்குதல் வேண்டும். என்பதனை
'ஆன முதலில் அதிகம் செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லாhக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லாhக்கும் பொல்லனாம் நாடு' ( நல்வழி- 25)
என்ற பாடலடிகள் வரவினை அறிந்து செலவு செய்யாத போது ஏற்படும் விளைவுகளை
வகைப்படுத்தியுள்ளார். ஒருவன் தன் வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால்
பிறரிடம் கடன் வாங்கித் தன் மானத்தை இழந்துஇ சொந்த புத்தியை இழந்து
செயல்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய குணம் உடையவன் செல்லும்
திசை எல்லாம் அவனைப் பலரும் திருடனைப் போல எண்ணி அவனிடம் நட்பு
பாராட்டாமல் விலகிச் செல்வர். இக்குணம் கொண்டவன் ஏழு பிறப்புக்கும்
தீயவனாகவும்இ நல்லவர்களுக்கு ஆகாதவனாகவும் மாறிவிடுகிறான். ஆதலால்
ஒருவன் தன் வருவாய்க்கு அதிகமாகச் செலவு செய்யக் கூடாது என்பதனை நல்வழி
புலப்படுத்தியுள்ளது.
எல்லோரும் உறவினர்
மரத்தில் கனிகள் பழுத்திருக்கும் பொழுது பறவைகளை உண்ண அழைக்க வேண்டியது
இல்லை. அது தானே அம்மரம் நாடிச் செல்லும். கன்றுக்குத் தாய்ப்பசு பாலைத்
தானே சுரந்து வழங்குவது போலத் தம்மிடம் உள்ள செல்வத்தை மறைக்காமல்
பிறருக்குக் கொடுக்கும் பொழுது அவர்களைத் தேடி உலகத்தவர் பலரும்
உறவினர்களாக அமைவர் என்பது திண்ணம். இக்கருத்தினை
'மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை- சுரந்து அமுதமும்
கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர். '(நல்வழி-29)
என்ற இப்பாடலின் வழியாக கொடையாளருக்கு எல்லோரும் உறவினராகக்
கூடியிருக்கும் நிலையை அவ்வையார் பதிவிட்டுள்ளார்.
ஈதலின் சிறப்பு
நம்மிடம் இருக்கும் பொருளைக் காலம் தாழ்த்தாமல் தானமாக கொடுக்கும்
பொழுது ஏற்படும் நன்மைகளை அவ்வையார் பின்வருமாறு சுட்டியுரைக்கிறார்.
நிலையில்லாத இவ்வுலகில் நிலையில்லாத பல பொருள்கள் மீதும்இ உடலின் மீதும்
பற்று கொண்ட மனிதன் நிலையாமையை உணர்ந்து பிறருக்கு உதவும் வகையில் தன்
வாழ்வினை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். வறியவர்களுக்கு விரைந்து
காலம் தாழ்த்தாமல் பொருள் வழங்குதல் வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது
சொர்க்கத்தின் வாசல் கதவுகள் என்றும் திறந்திருக்கும் என்பதனை
'இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென்றிராதே - இடுங்கடுக
உண்டாரைக் கொண்டாடும் வீடு' (நல்வழி -3)
எனச் சுட்டியுரைக்கிறார்.
கொடுப்பவன் உயர்ந்தவன்
இவ்வுலகியல் நெறிப்படிக் கூறுவதாக இருப்பின் உலகில் பிறந்த மனிதர்களில்
இரண்டு வகைச்சாதியினர் உள்ளனர். ஒருவர் பிறருக்குக் கொடுத்து உதவும்
நல்ல குணம் படைத்த உயர்ந்தவர்கள். மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றைப்
பிறருக்குக் கொடுத்து உதவாத கீழானவர். இவ்வுலகில் பிறருக்குக்
கொடுப்பவர் உயர்ந்தவர். பொருள் படைத்தவனாக இருப்பினும் பிறருக்குக்
கொடுக்காதவன் தாழ்ந்தவன் என இருவகைச் சாதி மட்டுமே உண்டு. இதனை
அவ்வையார்
'மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. '(நல்வழி – 2)
நிறைவுரை:
செல்வத்தின் பயன் ஈதல் என்பர். அரிதாக நம்மிடம் கிடைத்த செல்வத்தைத்
தன்னலம் கருதி நாம் மட்டும் பயன்படுத்தாமல் பிறரும் பயன்படும் வகையில்
பொருளை வழங்குதல் வேண்டும். அவ்வாறு வழங்கும்பொழுது அச்செல்வம்
பன்மடங்காக உயரும். நற்குடியில் பிறந்த அனைவரும் இத்தகைய ஈகைத்திறனுடன்
வாழ்ந்துள்ளனர். நம் வாழ்வினை நல்வழிப்படுத்துவதற்கு அவ்வையார் நல்வழி
என்னும் நூலைப் படைத்துக்கொடுத்துள்ளார். இந்நூல் கருத்துக்களை மேலும்
எளிமையாக மக்களிடம் கொண்டு சோர்க்கும் வகையில் அன்றாடம் நாம்
சந்திக்கும் வாழ்வியல் நிகழ்வுகளைச் சான்றுகளாகக் காட்டியுள்ளார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்பான் வள்ளுவன் இக்கருத்தினை மெய்பிக்கும்
வகையில் அக்காலப் பெண்கவிகள் பலரும் தன் கவித்திறமையினால் தன்னை
நிலைநிறுத்தி இன்றளவும் பார் போற்றும் வகையில் உலவிக்கொண்டிருக்கும்
உயிரோட்டமான வரிகளைக் கொடுத்த அவ்வையாhரின் சொல்திறனை என்னவென்று கூறி
வியப்பது.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|