நவீன பெண் கவிதைகளில் பெண்ணியமும் ஆளுமையும்
முனைவர் பூ.மு.அன்புசிவா
நவீன கவிதை அல்லது
இன்றைய கவிதை என்னும்போது, நவீன கவிதையின் அரை நூற்றாண்டுக்கும் மேலான
பின்புலத்தைத் தொட்டுச் செல்கிறது என்பதை என்னால் உணர முடிகின்றன. எழுத
ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு
எழுதப்படாத விதியாய் இருக்கிறது.நான் பல உரைநடை, சிறுகதை, நாவல் எழுதும்
பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'நான் முதலில் எழுதியது,
கவிதை', என்று. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். என்றாலும் அவை
எல்லாமும் ஒரே அடித்தளத்தில் சமைந்த பலமாடிக் கட்டிடமாகவோ, ஒரு மரத்தின்
பல வேறு கிளைகளும், அதன் இலைகளும், பூக்களும் கனிகளுமாகவே இருக்கின்றன.
ஒரு இலக்கிய வாசகனுக்கு அவனது தாய்மொழியில் அமைந்த கவிதைகளே மிகப்
பெரிய சொத்து எனலாம். அதிலும் தமிழ் போல, நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு
செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு இது மாபெரும் வரம். தினசரி
வாழ்வில் கூட நாம் சாதாரணமாய், ஒரு நல்ல உரைநடை வரியைப் படிக்க
நேரிட்டால், பொதுப்புத்தி சார்ந்து பலரும், 'ஆகா இது கவிதை' என்று
சொல்வதை நாம் கேட்கிறோம். அந்த அளவுக்கு கவிதை ஆதியானதும் ஒரு உன்னதம்
மிக்கதுமாக இருக்கிறது. காலையில் பரபரப்புடன் இயங்கும் ஹாஸ்டல அல்லது
மேன்ஷனின் பாத்ரூம்கள், நடுப்பகலில் அமைதியுடன் இருப்பது போல,
இயக்கமின்றி, வெற்று அரட்டையை நாடி நிற்கும், சோர்ந்து இருக்கும்
மூளையில் திடீரெனத் தோன்றுகிறது எனலாம். வாசிப்பவனுக்கு உடனடி உரையை
தருதலும் அதை கொண்டு அவனாலும் அதன் தொடர்ச்சியாய் கவிதை நெய்யும் ஆற்றலை
பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும்
புதுக்கவிதைகள்தான்.
நவீனத்துவம் விளக்கம்
நவீனத்துவம் என்ற கலைச்சொல்லில் பழைமை, தொன்மை என்பவற்றிற்கு 'மாறானது'
என்ற பொருள், காணப்படுகிறது. மிக நீண்ட காலமாக இருந்துவந்த சமூக -
பொருளாதார நிலைமைகளிலிருந்து அறிவியல் தொழில் நுணுக்கப் புரட்சி
காரணமாகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. முதலாளித்துவம் பெரும் சக்தியாக,
19-ஆம் நூற்றாண்டில் வளர்கிறது. இதனோடு, அல்லது இதன் விளைவாக, அன்றைய
சமூக- பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிற விதத்தில்
நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் என்பது வெறுமனே ஒரு கலை இலக்கியக்
கொள்கை மட்டும் அல்ல் அது ஒரு வாழ்க்கை முறை; ஒரு மனநிலை; ஒரு பண்பாட்டு
வடிவம். பழைமை, மரபு என்பது நீண்ட காலமாக ஒரே மாதிரியான பாதையில், ஒரே
மாதியான போக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை மறுத்து, அதற்கு
வித்தியாசமாகப் புதிய பாதைகளையும் புதிய தடங்களையும் தேடுவதாக
நவீனத்துவம் அமைகிறது. உதாரணமாக, செய்யுள் வடிவம் என்பது இலக்கியத்
துறையில் தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வடிவமாகும். அதனை
மறுத்து, உரைநடை என்பது புதிய சமூக இருப்புகளையும் வௌ;வேறு
நிகழ்வுகளையும் சொல்லுவதற்கு உரிய ஒரு வடிவமாக ஆகிறது; பல்வேறு
துறைகளிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாகப் புதிய புதிய
இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. நவீனத்துவம் ஒரு புதிய பண்பாட்டு
நிலைமையின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியத் தளத்தில் அமைகிறது.
பெண்ணியம்
இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்தே பெண்ணுரிமை, பெண் விடுதலை
பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்திலேயே அது முதன்மைபடுத்தப் பெற்றது
எனலாம். பெண்ணியச் சிந்தனையும் பெண் சமத்துவமும் முக்கியமாய் கவிதைகளில்
கையாளப்பட்டன.
சங்க காலத்தில் வாழ்ந்த மன்னனும் புலவனுமான பூதபாண்டியன் தேவி
பெருங்கோப்பெண்டு சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல்
புறநானூறு 246 எண்ணுள்ள பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவன் மாண்டபோது, பெருங்கோப்பெண்டு அவனது உடல் எரியும் தீயில் தானும்
விழுந்து உயிர் துறந்தாள். இப்படித் தீயில் விழப்போகும்போது பாடிய
பாட்டுதான் இது. இதில் இவர் சொல்லும் செய்திகள் அக்காலத்தில்
நிலவிய பெண்ணடிமைத்தனத்தை அறியத் தருகிறது. 'வெள்ளை-எள் சாந்தம்
சேர்த்து, புளி ஊற்றி வெந்தச் சோற்றை மட்டும் உண்டு கொண்டும், பரப்பிய
பரல் கற்களைப் பாயாக்கி படுத்துக்கொண்டும் வாழும் உயவல் பெண்டிர் (உய்ய-வல்ல
பெண்டிர் ) நான் இல்லை.' என்கிறார். இவ்வாறு கைம்மை நோன்பு என்பது
எத்தகைய கொடுமையானது என்பதை அப்பாடலில் விளக்கியிருக்கிறார்.
இவரைப்போலவே தாயங்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புலவர்
தாயங்கண்ணனாரின் மனைவி இவர். புறநானூறு 250 எண்ணுள்ள பாடல் இவருடையது.
கணவன் இறந்த பின் அவனது மனைவி இருக்கும் கைம்மை நிலை குறித்து பேசுகிறது
இப்பாடல். அவன் மனைவி கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் இருப்பதையும் அவளது
கைகளில் வளையல்கள் கழற்றி எறியப்பட்டுவிட்டதையும் குறிப்பிடுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆணாதிக்கம் சமூகத்தின் ஆணிவேராய் படிந்த
காலங்களில், பெண்களின் இலக்கிய நிலைபாடு வெளிச்சமிட்டு காட்டும்படியாய்
இல்லை. நவீன இலக்கியம் தோன்றிய பிறகே பெண்களின் விழிப்புணர்வும் பெண்
விடுதலை வேட்கை குறித்த எழுத்துகளும் அதிகமாய் தோன்றின. எண்பதுகள் –
தொண்ணூறுகளில் கவிதைகளின் போக்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில்
ஒன்றாய் பெண்களின் பங்களிப்பைக் காணலாம். முன்பெப்போதையும் விட இந்த
காலகட்டத்திலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதத் தொடங்கினர்.
இரா மீனாட்சி, பூரணி, திரிசடை போன்ற பெண் படைப்பாளிகள் தொண்ணூறுகளுக்கு
முன்பே நவீன கவிதைப் படைப்புகளில் பங்களிப்பு செய்திருந்தாலும்,
தொண்ணூறுகளுக்கு பின் வந்த பெண் படைப்பாளிகளால் தான் பெண்ணிய சிந்தனைகள்
மேலோங்கி வளரத் தொடங்கின.
மூத்த பெண் கவிஞர்களில் ஒருவராகிய, இரா மீனாட்சிக்கு நவீனப்பெண்ணிய
இலக்கியத்தில் இருக்கும் பங்கு முதன்மையானது. எழுபதுகளில் பெண்ணியத்தை
அழுத்தமாய் கவிதை வழியாய் பதித்த அவர் வழியாகத்தான் பெண் கவித்துவம்
எழுச்சி கண்டது எனலாம்.
'சுடு பூக்கள்' கவிதையில்,
'அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.
பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?'
என்னும் கவிதையில் பெண்ணின் அக விடுதலை வேட்கையானது, வேலிகளைக் கண்டு
துவண்டு விழுவதும் அதன் உணர்வுகளை பெண் தானே எழுப்ப முயல்வதுமாய்
அற்புதமாய் கவிதை கோர்த்திருக்கும் வலிமை மீனாட்சி அவர்களுடையது.
மதுரை நாயகியே என்னும் மற்றுமொன்றில்,
'மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?'
என்று கேட்கிறார். இன்றும் இந்த கவிதை பொருந்துவது நமது சமூகத்தின்
அழுக்கான முகமதை கண்ணாடியிட்டு காட்டுகிறது.
மூத்த கவிஞரான பூரணியின் மரபில் தொடங்கிய கவிப்பயணம் நவீனத்திலும்
தொடர்கிறது. இவரின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனை, பெண் விடுதலை
குறித்த கவனமும் தூக்கலாகவே உள்ளது. ஆணாதிக்கம் என்பது ஆண்டவனிடமும்
உள்ளதை சுட்டுகிறார்.
தன்னுடைய 'ஆண் குணம்' என்னும் கவிதையில் இராமன் என்னும் ஓர் அவதாரத்தையே
தோலுரிக்கிறார்.
'கணவனால் காடடைந்து
கயவனால் சிறை புகுந்து
தலையினை குனித்து வந்த
மனைவியாம் சீதை தன்னை
மறுபடி வனம் துரத்தும்
மணமுடை இராமன் தன்னை
கடவுளாய்ப் பார்க்க எந்தன்
உளமது இசைவதில்லை'
என்கிறார் அவர்.
எண்பதுகளில் அறிமுகமாகி தொண்ணூறுகளில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களாக
வளர்ந்த வாசுகி, உமா மகேஸ்வரி, ப.கல்பனா, கனிமொழி ஆகியோரும்
தொன்னூறுகளில் அறிமுகமாகி முக்கியமானவர்களாக விளங்கிய சல்மா,
குட்டிரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோரும் பெண்ணியம், தலித்
பெண்ணியம், உடல் அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கினர். இவர்கள்
தங்களின் உடல் சார்ந்த அனுபவங்களை நவீன கவிதைகளில் புதிய கோணத்தில்
வெளிப்படுத்தியுள்ளனர். அழகியலையும் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அழகியல்
சுகிர்தராணியின் கவிதைகள் உடல் மொழியிலும் அழகியலை பேசுகின்றன. 'புனைவுகள்'
என்னும் தலைப்பின் கீழ் அவரின் கவிதை,
'ஒரு மாயக்காரனின் கையுயர்த்தலில்
சடக்கென முகிழ்க்கும் மஞ்சரியாய்
நரம்புகள் புடைத்தயென் கைகளில் குவிகின்றன
என்னைப் பற்றிய புனைக்கதைகள்
தீ அசையும் ஓசையில்
அசாதாரணமாய் புரட்டிப் பார்க்கிறேன்
நீர்த்தாவரங்கள் மல்கிய குளத்தின்
குறுக்கலையென
புனைவுகளில் பரவுகிறதென் பிம்பம்
பருவ திரவத்தில் தோயாத என்னுடல்
அரும்பி அரும்பிப் பின் பூத்திருந்தது
உடல்கள் கிடத்தப்பட்டிருந்த அறையில்
உறக்கத்தைக் கலைத்த கூடலோசையில்
வேர்விட்டுக் கிளைத்தயென் ரகசிய இரவுகள்
சொல்லப்பட்டிருந்தன
இருளின் அரங்கத்தில்
தானே புணரும் சாகச நிகழ்வு
ஒற்றைக்காலில் நிறுத்தப்பட்டிருந்தது
காமவாசனை வீசும் தோழியின் தேகத்தில்
இலவம் பஞ்சடைத்த படுக்கையின் வளைவுகளென
புதைந்திருந்தது கட்டப்பட்டது
புனைவுகள் எப்போதும்
உப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன
அவைதான் வாழ்க்கையை மலர்த்துகின்றன
இந்த கவிதையையும்'
குடும்ப வன்முறை, பெண்ணடிமை
பொருளாதாரத்தில் பலமிழந்து நிற்கும் பெண்கள் ஆண்களையே எல்லாவற்றிற்கும்
நம்பி இருக்கின்றனர். உழைக்கும் பெண்களும் தன உழைப்பின் பெரும்பகுதியை
குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்றனர். குடும்ப
வன்முறை, ஆணாதிக்கம் போன்றவை பெண்களின் நித்தமுமான பிரச்சனைகள். இதை
பெண் கவிஞர்கள் பலரும் பலமாய் எடுத்துரைக்கின்றனர்.
மாலதி மைத்ரி 'வீடுகளால் ஆன இனம்' என்ற கவிதையில் பெண்கள் எதிர்கொள்ளும்
இந்த குடும்ப வன்முறை குறித்து சொல்லியிருப்பார்..
'ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக
கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது'
கவிஞர் மு சத்யா தன் கவிதையில் குடும்பத்துள் இயங்கும் ஆணின் வலிமையை
வடிக்கிறார்.
'என்றைக்கேணும் ஒரு நாள்
நான் காணாமல் போய்விட்டால்
அடுப்படியின் பரணிலோ
சிலிண்டரின் மறைவிலோதான்
முதலில் தேடுவார்கள் போலும்'
என்னும் சொல்லாடல்கள் பெண்ணின் வலியை எடுத்துரைக்கின்றன. எத்தனைதான்
பெண் பொருளாதார சமத்துவம் பெற்றாலும், சமையலறை என்பதை பெண்ணுக்கானது
என்னும் போக்கில் மாற்றம் பெரிதுமில்லை.
'ஒரு நாளேனும்
வாழ வேண்டும்
நான் நானாக'
என்கிறார் இன்னொரு கவிதையில். இவ்வரிகள் பெண்ணை சுயமாய் வாழ வேண்டுகிறது.
பெண் விடுதலையை வலியுறுத்துகிறது.
கவிஞர் தேன்மொழி தன் கவிதை 'மழைக்கால மௌனத்தில் ' சிறு பெண்ணாய் மாற
ஏங்கும் நிலையை இயம்புகிறார்.
மனவோட்டங்கள்
ஆண்களைவிட பெண்கள் அதிகமாய் உணர்வுடையவர்கள். சிறு சம்பவங்களைக்கூட
முக்கியமாக நினைப்பவர்கள். கவிஞர் சுகந்தி சுப்பிரமணியன் தன் கவிதைகளில்
வீட்டில் இருக்கும் பெண்ணின் உணர்வுகளை சுதந்திர உடையதாய் காட்ட
விளைகிறார். சுகந்தி அவர்களின் கவிதைகள் பெண்ணின் சுயவிருப்பங்களை
தெளிவாய் எடுத்தியம்புவன. பெண்ணியம் பேசிய முன்னோடி கவிஞர் இவர்.
மாதவிலக்கு சமயத்தில் பெண் படும் துயரம் இக்கவிதையில்,
'மூன்றோ ஐந்தோ என இம்சைப்படும்
தினங்களில்
நடந்து விடாதே
உன் தனியிடம் தவிர
இன்னொரு மூலைக்குச் கூட.
இந்த நாட்களில்
நீ கிடைத்த நேரமெல்லாம்
தூங்குகிறாய்
அல்லது துன்பப்படுகிறாய்.
குறைந்தபட்சம் ஒரு குட்டிப்பிச்சைக்காரி
ஆகி விடுகிறாய்
நிவாரணமில்லாத வயிற்றுவலி எப்போதும்.
கால் குடைச்சல் என்றாலும்
மரியாதைக்கு பயந்து
மாமியாருக்கு எழுந்து நிற்க வேண்டும்.
நடக்கப்பழகும் குழந்தைக்கு
கை கொடுத்து கால் ஆகணும்.
ஆனால்
உதவி செய்ய ஆளில்லாமல்
மாதாந்திர தொல்லைகளில்
சமைக்கும் சமையல்
தேவையானது எல்லோருக்கும்.
இன்னொரு முறை தள்ளிப்போவது தெரிந்தால்
சந்தோக்ஷம் கொள்ள முகமிருக்குமா?
முகம் கறுத்து
'போதும் கலைத்து விடு'
என்று சொல்லப் பக்கத்து வீட்டில் கூட
ஆட்கள் இருக்கக் கூடும்
நானோ சமைத்த பின்
தனியிடம் செல்வேன்.
அவர்களெதிரே டி.வி.யில்
விளம்பரத்திற்காய் ளவயல கசநந யுடன்
நடக்கும் சிரிக்கும்
இளம்பெண் '
என்கிறார்.
'வேலை முடிந்து
வந்த களைப்பில்
கவனமின்றியே
உடை களைகிறேன்;
அனிச்சையாகக்
கூர்மையாயின புலன்கள்!
எதிரில் என் தாயும்
நான் வளர்த்(ந்)த குழந்தையும்...
வெகு கவனமாய்
உடை திருத்துகிறேன்
அவன் இளமை
மனதில் அறைய!'
அகிலா தன் கவிதையில், தன் குடும்ப கடமைகள் எல்லாம் முடிந்து, பெண்ணின்
அபிலாஷைகள் தொடங்கும் வயதில், என்னவாகிறது என்பதை சொல்கிறார்.
சமூகம்
வர்க்க ரீதியான சமூக ஏற்ற தாழ்வுகளை வெளிப்படுத்தும் தலித் பெண்ணியம்
குறித்தும் பெண் கவிஞர்கள் அதிகமாய் கவிதைகளில் பேசியிருக்கிறார்கள்.
மாலதி மைத்ரி தன 'படுகளம்' கவிதையில்,
'தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
'அம்மா அன்னம் போடுங்க'
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்'
இன்னொரு கவிதையில்,
'ஏகாலி வந்திருக்காம்மா...
அம்பட்டவன் வந்திருக்காம்மா...
தோட்டி வந்திருக்காம்மா...
சக்கிலி வந்திருக்காம்மா...
குடிப்புள்ள வந்திருக்காம்மா...'
என்று சாதி விளிப்புகள் தான் சிறுமியாய் இருந்த காலத்தில் தன
கிராமத்தில் இருந்ததாய் சொல்கிறார். வர்க்க வேறுபாடுகள் சிறு வயதில்
இருந்தே நம் வாழ்நிலங்களில் பதிக்கப்படுகின்றன என்பதே பரிதாபம்.
'உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்
எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது'
என்றும் வருந்துகிறார். கூனி குறுகிய உடலே பிச்சை பாத்திரமாகி போகிறது
என்பதை சொல்கிறார்.
கவிதைகள் வழி பெண்ணியம் பேசிய, கவிஞர் பாலபாரதி,
'எவரிருத்தலையும் உணராது
எல்லார் முன்னிலையிலும்
மேல் சட்டை கழற்றி
பனியனை உதறி
கைகளுக்குள் புகுந்து
தொப்பை தடவி
கால் மீது கால் போட்டமர்ந்து
உரக்க பேசி சிரிக்கும்
ஆண்களின் பயணம்
தொடர்கிறது.
அப்போதெல்லாம்
தலை குனிந்து
நகம் கடித்து
புத்தகம் தேடுவது போல்
பாவனை செய்து
பார்வையை வெளியேற்றி
சமூக அடிமையாய்
ஒடுங்கச் செய்கிறது
பெண் பயணிகளை'
தான் ஆண் என்னும் கர்வத்தில் வெட்கமற்று செய்யும் செயல்கள் பெண்ணை
எவ்வாறு ஒடுங்கச் செய்கின்றன என்பதை சொல்கிறது இக்கவிதை. ஒரு முறை ரயில்
பயணத்தின்போது, ஈரோடு நிலையத்தில் ஒரு காட்சி. ஒரு தொடர் வண்டியில்
கோவிலுக்கு போவதற்காய் மாலை அணிந்திருந்த ஆண் பக்தர்கள், தாங்கள் வந்த
வண்டி நிற்கும், தண்டவாளத்தின் மீது இருக்கும் தொடர் வண்டி கழுவ
உபயோகப்படுத்தும் தண்ணீர் குழாய் கொண்டு அரைகுறை ஆடையுடன் நின்று
குளிக்கும் காட்சிதான் அது. பொது வெளியில் எத்தனை பெண்களுக்கு இக்காட்சி
சங்கடத்தை உண்டு செய்திருக்கும் என்பதை இக்கவிதை சொல்லும் கருத்தில்
புரிகிறது.
தொகுப்புரை:
-
பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணின் உடல் மீதான ஆக்கிரமிப்பு,
கர்ப்பங்கள், மாதவிடாய், பெண்ணின் அறிவு, பெண் சுதந்திரம் பேசும்
பெண் கவிஞர்களின் பல கவிதைகளில் அடிமை விலங்கின் அவலங்களும் அதை
உடைத்தெறிய வேண்டிய வேட்கையும் வெளிப்படுகிறது.
-
பல கவிதைகளில் அதற்கான தீர்வுகள் தரப்படவில்லை. மீண்டு வருவதும்
சொல்லப்படுவதில்லை. போராடும் வலிகள் மட்டுமே
காட்டப்பட்டிருக்கின்றன.. இருந்தும் அவை பெண்ணியம் பேசுகின்றன. பெண்
குறித்து ஆராய்கின்றன. தீர்வுகள் தேவையில்லை என்பது என் கருத்து.
ஆணாதிக்க சமூகத்தை இப்படிதான் நீ நடந்துக்கொள்ள வேண்டும் என்று
ஆணையிட அவசியமில்லை. பெண்ணின் வலிகளை யதார்த்த நிலையை
எடுத்தியம்பும் போதே ஆணாதிக்க சமூகம் யோசிக்க தொடங்குகிறது. மாற்றம்
செய்துக்கொள்ள நினைக்கிறது. மாறும் என்பதாய் ஆன பாவனைகளுடன் பரல்கள்
இட்ட சாலையை சீரமைக்கத் தொடங்குகிறது.
-
நிச்சயம் தன் வலிகள் தீரும்வரை வார்த்தை கொண்டு வலிமை சேர்க்கும்
இந்த பெண்ணினம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
-
பெண்ணியம் வேண்டுவோம் ! பெண்ணியம் போற்றுவோம் !
முனைவர்
பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|