தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு

செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா-அவுஸ்திரேலியா

தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் இது தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த வழக்கமல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளில் இதுவுமொன்று.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல்
14 ஆம் திகதி இந்து, சிங்கள புதவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிருஷ;ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடபபடுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால், இந்த
60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும், 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வருமே!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தில் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால், அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும், ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக, 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள், செந்தமிழ்ப் புலவர்கள், தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே கூடியிருக்கிறார்கள்.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள்.
500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்தமுடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி, திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்பனவாகும். புதனும், சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன், காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன்
31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை
1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும், பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும், 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது.

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே 'தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்' என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பேராளர்களின் முன்னிலையில், 'தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு' என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் பண்டைத் தமிழகத்திலே இருந்ததொன்றல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. இடைக்காலத்திலே தமிழர்களிடையே ஏற்பட்டுவிட்ட பழக்கம் அது.

சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன், தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள்.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல, அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்கிறார் மூதறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும், தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும், பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று, பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்


என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.

கடந்த வருடம் அடைந்த துயரெல்லாம் கனவாக மறந்து,
நடந்த வாழ்வில் மகிழ்ந்ததை யெல்லாம் நினைவோடு சுமந்து
புலர்ந்து வருகின்ற தைமுதல் நாளிலே புத்தூக்கமடைந்து
காலையில் எழுந்து, கதிரவனை வணங்கிப் புத்தாடை அணிந்து
புத்தாண்டை வரவேற்பது பண்டைத் தமிழர் பண்பாடு.


காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். தமிழருக்கு அது பெருநாள்.

வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும், பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள். அது வருடத்தில் ஒருநாள். தமிழர்க்குப் பெருநாள். புத்தாண்டின் முதல் நாள்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்று வோம். எப்போதும் அதனைப் பின்பற்றுவோம். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிப்போம்.

தைத்திருநாள் தமிழரின் திருநாள்
தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை
தைப்பிறப்பே தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு
தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாள்
வாழ்க தமிழ் வணக்கம்




srisuppiah@hotmail.com