திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 20)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


கற்பனை கடந்த...

ற்பனை கவிதையின் மூச்சாகக் கருதப்படுகிறது. இல்லாததைச் சொல்வதும் உள்ளதை உயர்த்திச் சொல்வதும், ஒன்றை மற்றொன்றில் ஏற்றிச் சொல்வதும் கற்பனை ஆகும். கவியாற்றலோடு கற்பனையாற்றலும் கொண்ட கவியரசர், தன் கவிதைகளில் ,பாடல்களில் பல்வேறு நிலைகளில் கற்பனையாற்றலை அழகாக வெளிப்படுத்தியவர்.

நீலநிறக் கடலையும், கரியமேகத்தையும், வாசமுள்ள மலரையும் கண்ட கவிஞர் நீலக்கடலோடு விழியையும்,மேகத்தோடு கூந்தலையும் வாசமலரோடு கூந்தல் மணத்தையும் தன் கற்பனைக் கைவரிசையைக் காட்டுகிறார் என் அண்ணன் திரைப்படத்தில்,

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்-
காரணம் ஏன் கண்ணே, உன் கண்ணோ?
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ?
உந்தன் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ?
கோவிலின் சிலைகளே -உன் கோலம் பார்த்த பின் படைப்போ?
கோபுரக் கலசமே –என் உருவில் வந்ததாய் நினைப்போ?
அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா?


கந்தல் துணி:

மனித வாழ்க்கை ஒரு கந்தல் துணி என்கிறார் கவியரசர். அதன் பிறப்பும் மனிதப் பிறப்பும் ஒத்து வருகின்றது. பருத்தி துணியானது; துணி ஆடையானது; அந்தத் துணி கிழிந்து அடுப்பங்கரைக்கு வந்தது. அவ்வாறு வந்த துணி,

சலவை செய்து வாசம்போட்டுத்
தங்கம் போல எடுத்து –பின்
அங்கம் பொலிய உடுத்து –தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்துச் சென்றார்
நீண்ட கதை முடித்து !


மனித வாழ்க்கையும் இதைப் போலத்தானே! துணி புதிதாக இருக்கும் போது அதனை எவ்வாறு பாதுகாப்போம்; எவ்வாறு வைத்துக் கொள்வோம்; அது கிழிந்து விட்டால் அதனை நாம் கையாள்கின்ற முறையே வேறல்லவா?அது போல மனிதன் நன்றாக வளமுடன் இருக்கும் பொது அவனை அனைவரும் மதித்து வருவர்.பொருள் வளம் வீட்டில் குன்றுமாயின் அனைவரும் அவனை விட்டுச் செல்வர். இதுவே உலக இயல்பு.

சுட்ட சோற்றுப் பானை சட்டி
தூக்கி இறக்க வந்தேன் –என்
தூய உடலைத் தந்தேன்;- நிலை
கெட்டுப்போன செல்வர் போல
கேள்வியின்றி நின்றேன்;-இன்று
கேலி வாழ்க்கை கண்டேன்!


இந்த விரக்தியின் உச்சத்தில் தான் இப்படியொரு பாடல் பிறந்தது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே,
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே.
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா-கை
வரண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா.
பணத்தின் மீது தான் பக்திஎன்றபின் பந்த பாசமே ஏதடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.        
(படம்-பழநி)

கவிதையும் பாடலும் ஒரே கருத்தைப் “பளிச்” செனப் பகர்கிறது.

பொண்ணா இல்லை பூவா?


சங்கப் புலவர் நல்லந்துவனார். இவர் மலருக்குரிய பண்புகளெல்லாம் மங்கையருக்கும் இருக்கிறது என்பதை,

பைஞ்சுனைப் பாஅய் ஏழு பாவையர்
ஆயிதழ் உண்கண் அலர்முகத் தாமரை
தாள் தாமரைத் தோள் தமனியக் கய மலர்
நங்கைப் பதுமம், கொங்கைக் கயமுகை
செவ்வாய் ஆம்பல் செல்நீர்த் தாமரை
புனல் தாமரையோடு புலம் வேறு பாடுறா.


சுனை நீரில் குடைந்து குடைந்து நீராடும் பெண்களின் மையுண்ட கருங்கண்கள் செந்தாமரை இதழ்களைப் போல சிவப்பை ஏற்றன. அவர்களின் முகமோ தாமரையை ஒத்தது.பாதங்களும் அப்படியே. அவர்களுடைய மார்பகங்கள் தாமரை மொட்டுகளை ஒத்தன. செவ்வாய் ஆம்பல் மலர்.

பூவைப் போல் பெண்ணென்றே
பூவை இவள் என்றுரைத்தார்.
பாவைத்த பாவனையால்
பாவை இவள் எனப் பகன்றார்
என்று பாடுவார் கவியரசர்.

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன், 
  (படம்-சிவகாமி)

நல்லந்துவனாரின் கருத்தை நினைவூட்டும் வண்ணம் இந்தப் பாடலை கவியரசர் புனைந்துள்ளார்.மேலும்,

தாயைக் காத்த தனயன் படத்தில்,


கற்பின் குறியீடாக விளங்கும் முல்லைப்பூவை தன் தலைவியின் அடையாளமாகப் படைக்கிறார் கவிஞர்.

காலையில் மலரும் தாமரைப் பூ-அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ
இரவில் மலரும் அல்லிப் பூ
என்றும் மணக்கும் முல்லைப் பூ.

கவிஞர் காட்டுகிற தலைவி வெறும் மலர்களின் வாசத்தோடு மாத்திரம் திகழவில்லை.கற்புமணம் வீசிக் கமழ்ந்தாள் என்கிறார்.

பாலிருக்கும் ..பழமிருக்கும்:


தலைவனால் நேரிட்ட தாங்க முடியாத தலைவியின் மன ஏக்கத்தை நற்றிணை இப்படி சித்திரிக்கிறது.

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கிருப்ப
நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய் ;
பண்மான் செக்கைப் பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை

தலைவிக்குத் தரப்பட்ட பால், பிரிவு தந்த துயரால் உண்ணப்படாமலேயே இருக்கிறது.உணவை வெறுத்து, உடல் மெலிந்து நடப்பதற்கும் வலிமையற்றவளாய் மாறிவிட்டாள்; படுக்கையைப் பகையாகக் கருதவும் தொடங்கிவிட்டாள்.தலைவனின் மயக்கத்திலேயே ஆழ்ந்திருக்கிறாளாம்.
நற்றிணையின் செய்யுளுக்கு தன் சொற்றுணையால், பாடல் வடிக்கிறார்.

பாலிருக்கும் ...பழமிருக்கும் ..பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது.
நாலு வகைக் குணமிருக்கும் ஆசை விடாது.
நடக்கவரும் கால்களுக்குத் துணிவிருக்காது.
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்- கொண்ட
பள்ளியறை பெண்மனதில் போர்க்களமாகும்.


                                                                                                (படம் –பாவமன்னிப்பு)

அமர்க்களமாக இருக்க வேண்டிய பள்ளியறை போர்க்களமாகிவிட்டது என்ற தலைவியின் தாளாத ஏக்கத்தை இப் பாடலில் கவியரசர் வடித்திருந்தார்.
 

                                                                                                                                                தொடரும்............


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்