எம்.ஜி.ஆர். படப் பாடல்களில்
தமிழ்ப்பற்று மற்றும் தமிழ் நாட்டுப் பற்று
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர்.
195௦களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்து பின்பு
அதன் பொருளாளர் ஆகி கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, அதன் பின்னர்
1977இல் அண்ணா திமுக என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.
இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று பின்னர் சட்டமன்றத்
தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தார்.
இந்த அரசியல் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாய் இருந்தவற்றில் ஒன்று
அவரது படப்பாடல்களின் பாடுபொருளை அவர் வரையறுத்துக் கொடுத்தது எனலாம்.
அவரது படப்பாடல்கல் அவரது ரசிகர்களின் மனதில் கல் மேல் எழுத்துப் போல
பதிந்தன.
1947இல்,
ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவர்
1977
இல் அவர் முதலமைச்சர் ஆகும்வரை
30
ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.
1950
முதல் அவர் படங்கள் பெற்ற வெற்றி அவரைத் திரையுலகின் முடிசூடா மன்னனாக
மாற்றியது. அதன்பின்னர் அவருடைய படங்களில் அவர் தன்னைப் பற்றியும் தான்
சார்ந்திருந்த திமுக மற்றும் தான் தோற்றுவித்த அண்ணா திமுக ஆகிய
கட்சிகளின் கொள்கைகளைப் பற்றியும் பாடலாசிரியர்களிடம் சொல்லி எழுத
வைத்து அவற்றைத் தனிப்பாடல்களாக அமைத்து தன் படங்களில்
சேர்த்துக்கொண்டார்.
மேலும் காதல் பாடல்களிலும்,
சோகப் பாடல்களிலும் கூட தன்னுடைய கொள்கை சார்ந்த கருத்துக்கள்
இடம்பெறும்படி செய்தார்.
இவற்றில் எம்.ஜி.ஆருக்கு
இருந்த தமிழ் மொழி பற்றும் தமிழ் நாட்டின் மீது இருந்த பற்றும்
வெளிப்படுத்தப்பட்ட முறை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
எம்.ஜி.ஆர்.
பிறப்பால் மலையாளியாக அறியப்பட்டாலும் அவருடைய முன்னோர்கள் மன்றாடியார்
வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இஸ்லாமிய சமயத்திற்கு கட்டாய
மதமாற்றம் நடைபெற்றபோது உயிர்பிழைத்து வாழ்வதற்காக பாலக்காட்டுக்கு
இடம்பெயர்ந்தவர்கள் என்பதும் வரலாறு காட்டும் தகவல்கள் ஆகும்.
எனினும் அவருடைய பெற்றோரும் பாட்டனார் குடும்பங்களும் மலையாள மொழி
பேசிய வந்ததனால் இவருடைய தாயார் வீட்டில் தன மருமகள் மற்றும் சம்பந்தி
குடும்பத்தாருடன் அவர்களுக்குத் தெரிந்த மலையாள மொழியில் பேசினார்கள்.
மகன்களுடன் மலையாளத்தில் பேசவில்லை எம்.ஜி.சக்கரபாணிக்கும்
எம்.ஜி.ஆருக்கும்
திருமணம் செய்துவைத்த போது அப்பெண்களை சத்யபாமா அம்மையார் கேரளாவில்
இருந்து மலையாளம் பேசும் குடும்பங்களிலிருந்து தான் கொண்டு வந்தார்.
அப்பெண்கள் இங்கு வரும்போது தமிழ் பேசத் தெரியாதவர்களாக இருந்து
பின்னர் மெல்ல மெல்ல தமிழ் பேசக் கற்றுக் கொண்டனர்.
எனினும் வீட்டில் சக்கரபாணி அவர்களின் மனைவியும் அவர்களின் உறவினர்கள்
எம்.ஜி.ஆரின்
மனைவி பார்கவி மற்றும் பார்கவி மறைவுக்குப் பிறகு திருமணம் செய்து
கொண்ட சதானந்தவதி ஆகியோர் தன் உறவினர்கள் மலையாளத்தில் பேசும் போது
மலையாளத்தில் தான் பேசினர். ஆனால் எம்.ஜி.ஆர். இரண்டு வயதிலேயே
தமிழகம் வந்து விட்டதால் அவருக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தமிழ்
மொழியில் பேசியும் தமிழ்மொழி பேசுவதைக் கேட்டும் வளர்ந்து வந்ததால்
அவர் தன்னைப் பொறுத்த வரை தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு பெருமிதத்தோடு
வாழ்ந்து வந்தார். இதனை அவர் ஒரு பேட்டியிலும் எடுத்துக் கூறியுள்ளார்.
கேரள நாட்டிற்கு ஒரு விழாவிற்குச் சென்ற போது அங்கிருந்தவர்கள்
மலையாளத்தில் பேசுங்கள் என்று கத்தினர். அதற்கு எம்.ஜி.ஆர். ‘எனக்கு
மலையாளம் பேச வராது. நான் தமிழில் தான் பேசுவேன். விருப்பமிருப்பவர்கள்
இருந்து கேட்கலாம் இல்லையென்றால் போய்விடலாம்’ என்று மேடையில் கோபமாகத்
தெரிவித்து விட்டார். எம்.ஜி.ஆர். தமிழை நேசித்த அளவுக்கு வேறு எந்தத்
தலைவரும் தமிழை நேசிக்கவில்லை என்று கூறும்படியான பல
சீர்திருத்தங்களையும் திட்டங்களையும் அவர் தமிழுக்காக செய்துள்ளார்.
அறிஞர்களைப் போல தானும் படிக்கவில்லையே அவர்களைப் போல அடுக்கு
திரைப்படங்களில் அவர் போலியாக தமிழ் ஆர்வத்தை காட்டவில்லை. அவருக்கு
மற்ற அறிஞர்களைப் போல தமிழ் மொழியில் தன்னால் பேச இயலவில்லையே என்ற
ஏக்கத்துடன் இருந்தார். ‘இன்னொரு பிறப்பு என்று எனக்கிருந்தால் நான்
நிறையப் படித்து பெரிய அறிஞராக வாழவேண்டும்’ என்று அரூர் தாஸ்
அவர்களிடம் ஓர் உரையாடலின் போது சொல்லியிருக்கிறார். அவர் அடி மனதின்
ஆழத்தில் இருந்த தமிழ் ஆர்வத்தையே அவர் தன்னுடைய பாடல் ஆசிரியரிடம்
எடுத்துக் கூறி அக்கருத்துக்களை அழகுற புனைந்து எழுதச் சொல்லி அதனை ஆடி
பாடி நடித்து காட்டினார்.
தமிழன் என்றொரு இனமுண்டு
1954இல் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய மைலைக்கல்லன்
நாவலை பட்சிராஜா ஸ்டுடியோஸ் அதிபர் ஸ்ரீ ராமுலு நாயுடு படமாக எடுத்த
பொது அதில் பெயர்ப் பட்டியல் வெளியிடும் வேளையில் அவர் இயற்றிய
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அதற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்”
எனத் தொடங்கும் பாடல் பின்னணியில் ஒலித்தது. இப்படத்தில் எம் ஜி ஆரின்
நடிப்பு மிகச் சிறப்பாக அமிந்திருதது. படம் தமிழ் திரையுலகின் முதல்
ஜனாதிபதி விருதை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம்
என ஆறு மொழிகளில் வெளிவந்தது. எனினும் மற்ற படங்களில் எவரும்
எம்.ஜி.ஆர். அளவுக்கு சிறப்பாக நடிக்கவில்லை என்பதும் அக்காலத்தில்
பேசப்பட்டது. அவர் ஐந்து வேடங்களில் நடித்திருந்தார். குரலிலும் மாற்றி
மாற்றிப் பேசி தன நடிப்பை வெளிப் படுத்தியிருந்தார். இப்படத்தின்
வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் உச்ச
நட்சத்திரமாகி எவராலும் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றார். தமிழ்த்
திரையுலகில் தமிழினக் காவலனாகப் போற்றப்பட்டார். இவ்வாறு படத்தின்
ஆரம்பத்திலேயே தமிழின் பெருமையை திமல்னின் சிறப்பை பாடலாக அமைத்தால்
அது ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்ற உத்தியைப் புரிந்து
கொண்ட எம்.ஜி.ஆர். அடுத்து வந்த தனது படங்களில் இம்முறையை
பின்பற்றினார்.
நாடோடி மன்னனில் ‘செந்தமிழே வணக்கம்’
எம்.ஜி.ஆர். தன் சொந்தப் படம் தயாரித்து அதை
1958இல்
வெளிவந்த நாடோடி மன்னன் என்ற பெயரில் வெளியிட்ட போது பெயர்ப்
பட்டியலுடன் செந்தமிழே வணக்கம் என்ற பாடலை [title song] தமிழ்த்தாய்
வணக்கமாக அமைத்திருந்தார்.
“செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்”
“ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய்”
என்ற வரிகள் தமிழின் பெருமையை எடுத்துரைத்தன. இப்பாடல் தற்போது மதிமுக
கட்சியின் இறை வணக்கப் பாடலாக கட்சி கூட்டங்களில் முதலில் பாடப்பட்டு
வருகிறது. மேலும் இதே படத்தில் மன்னன் மார்த்தாண்ட னுக்கு வரவேற்பு
அளிக்கும் வருக வருக வேந்தே என்ற பாடலில் பிற திராவிட
மொழிகளில் இருந்தும் வாழ்த்துப் பாடல்களையும் இணைத்திருந்தார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கவிஞர்களை வைத்துப்
பாடல் எழுதி அவற்றையும் இணைத்து அதற்கு அந்தந்த மாநில உடைகளை அணிந்து
பெண்கள் ஆடிப் பாடுவதாகக் காட்சியும் அமைத்திருந்தார்.
திராவிட நாடு என்பது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய
மொழி பேசும் மக்களை உள்ளடக்கியதாகும். திமுக திராவிட நாடு பற்றிய
கருத்தாக்கத்தைப் பல இடங்களிலும் வலியுறுத்திப் பேசி வந்ததாலும்
எம்ஜிஆருக்கும் தீவிர ரசிகர்கலள் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் அதிக
அளவில் இருந்ததாலும் அந்த ரசிகர்களுக்காகவும் எம்.ஜி.ஆர். அவர்களையும்
தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்கள் ஆக கருதி நேசித்து வந்ததால் இப்பாடல்களை
அவர் தன் படத்தில் அமைத்திருந்தார். எம்ஜிஆரிடம் மதம் மொழி பேதங்கள்
இல்லாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அவருக்கு எல்லா சாதியிலும்
ரசிகர்கள் இருந்ததும் பிற மொழியினரும் மதத்தினரும் அவரை நேசித்ததும்
ஆகும்.
வழிநடைப் பாடல்கள்
மலைக்கள்ளன், நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது மற்ற படங்கள்
பலவற்றிலும் முதல் பாட்டு அல்லது அவரது அறிமுகப்பாட்டு தமிழ் அல்லது
தமிழ்நாட்டைப் போற்றி பாடும் பாடலாக அமைந்தது; அல்லது கதாநாயகனும்
தோழனும் பயணம் செய்யும்போது பாடும் வழிநடைப் பாடல்களும் இக்கருத்துள்ள
பாடலகளாக அமைந்தன.
1960
இல் வந்த மன்னாதி மன்னன் படத்திற்கு கண்ணதாசன் கதை வசனம் எழுதினார்.
இப்படத்திலும் [டைட்டில் சாங்] பெயர்கள் தோன்றும் போது முதல் பாடலாக
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா”
எனத் தொடங்கும் பாடல் அமைந்திருந்தது.
பெரும்பாலும் எம்.ஜி.ஆர்.
உடைய தத்துவப் பாடல்கள் அல்லது சமூக சிந்தனைப் பாடல்கள் வண்டிப்
பாடல்களாகவே அமைந்திருப்பதைப் பார்க்கிறோம்.
அவர் கார், குதிரை, கட்டை வண்டி, ரதம், மாட்டு வண்டி போன்றவற்றில்
தனியாகவோ வேறு ஒருவருடனோ பயணிக்கும் போது பாடுகின்ற பாடலாக இத்தகைய
தத்துவ பாடல்கள் அமைந்துள்ளன.
இதே முறையில் மன்னாதி மன்னன் படத்திலும் குலதெய்வம் ராஜகோபாலுடன்
செல்லும் எம்.ஜி.ஆர்
ஒற்றைக் குதிரை பூட்டிய ரதத்தில் அச்சம் என்பது மடமையடா பாட்டை
பாடியபடி செல்வதாக அக்காட்சி அமைந்திருந்தது.
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கனகவிசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே”
இப்பாட்டில் தமிழின மன்னர்களான சேரன் மற்றும் பாண்டியனின் சிறப்புகள்
எடுத்துரைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்
படங்களில் அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் கேரளா சேரன் ஆட்சி
செய்த நாடு என்பதாலும் சேர நாட்டின் சிறப்பு அவர் பாடல்களில்
இடம்பெற்றன. அவர் தமிழகத்தில் தமிழ் மக்களின் அன்பில் திளைத்து
இருப்பதால் அவர்களின் இதய சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி செலுத்துகிறார்
என்ற கருத்தில் தமிழின் தலைநகரான தமிழுக்குச் சங்கம் வைத்து வளர்த்த
மதுரையை ஆட்சி செய்த பாண்டியனைப் பற்றிய சிறப்பும் அவர் பாடல்களில்
இடம் பெற்றன. காதல் பாடலில் கூட
“பாடுவது கவியா -
இல்லை
பாரி வள்ளல் மகனா
எனத் தொடங்கும் பாடலில்
சேரனுக்கு உறவா
செந்தமிழன் நிலமா”
என்று எம்.ஜி.ஆரைக்
குறித்துப் பாடுவதாகப் பாடல் வரிகள் உள்ளன
“கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை”
என்ற வரிகள் கதைக்குப் பொருந்துவனவாக எழுதப்பட்டிருந்தன.
தமிழனாகப் பிறந்த ஒருவன் தன் தாய்க்கு ஒரு பழி நேர்ந்தால் அதை
பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதும் ஒரு தாய் தன் மகனை கடமை உணர்வோடும்
கண்ணியமானவன் ஆகவும் வளர்ப்பாள் என்ற பெருமையும் இப்பாடல் வரிகளில்
இடம் பெற்றுள்ளன. பல்லவி நேரடியாக கதையின் உட்பொருளை விளக்குவதாக
அமைந்தாலும் கதையைப் பற்றி அறியாதவர்களுக்கும் கவலைப்படாதவர்களுக்கும்
கூட இது ஒரு பொருள் பொதிந்த கருத்துள்ள வரிகளாகவே அமைந்துள்ளன.
ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் நீங்கள் அதிகமாக விரும்பி கேட்கும் பாடல் எது
அல்லது உங்கள் படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று
கேட்டபோது அவர் ‘மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா
எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறினார். அவர் முதலமைச்சர் ஆன பிறகு
எதிர்கட்சித் தலைவரின் மூத்த மகனை கேட்டபோது அவரும் இதே பதிலைத்தான்
கூறினார். ‘எனக்கு எம்.ஜி.ஆர். பாடல்கள் மிகவும் பிடிக்கும் அதிலும்
குறிப்பாக அச்சம் என்பது மடமையடா பாட்டு மிக மிக பிடிக்கும்’ என்றார்.
பள்ளிகளின் இறை வணக்கப் பாடல்
ஆனந்தஜோதி திரைப்படத்தை பி எஸ் வீரப்பா தன் சொந்த தயாரிப்பில்
உருவாக்கியபோது அப்படத்தில் கவிஞராகவும் உடற்பயிற்சி ஆசிரியராகவும்
எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். தன்னுடைய மாணவர்களைக் கொண்டு நடத்தும்
நிகழ்ச்சி ஒன்றில் தமிழின் சிறப்பை தமிழ் நாட்டின் சிறப்பை
எடுத்துரைக்கும் பாடலை பயன்படுத்தியிருப்பார்.
“ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்”
எனத் தொடங்கும் பாடல் அன்றைய காலகட்டத்தில் திண்டுக்கல்லில் ஒரு
பள்ளியிலும் மலேசியாவின் சில ஊர்களில் தமிழ் பேசும் மாணவர்கள் படித்த
பள்ளிகளிலும் காலையில் இறை வணக்கப் பாடலாக இடம் பெற்றிருந்தது.
இப்பாடலில் தமிழின் சிறப்பை கூறும் சரணமாக
“பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவமடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரிக்கரையில் களித்தவளாம்”
என்ற வரிகள் இடம்பெற்றன மேலும் தமிழினமே மூத்த இனம் முத்தமிழும்
சிறப்பிக்கும் மொழியே தங்களுடைய மொழி என்ற பெருமை பாராட்டும் விதமாக
நான்கு திசையும் ஒரு காலத்தில் தமிழரின் ஒரு குடைக்கீழ் இருந்தன என்ற
கருத்தும் சேர்ந்து வரும்படி
“உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் மொழி கொண்டோம்”
என்ற வரிகள் அடுத்த பல்லவியாக அமைந்தன.
நாடோடி மன்னனுக்கு அடுத்து வந்த திரைப்படம் ‘தாய் மகளுக்கு கட்டிய
தாலி’. இப் படத்தில் எம்.ஜி.ஆர்.,
கே ஏ தங்கவேலுவுடன் ஒரு ஒற்றை மாட்டு வண்டியில் பயணிக்கும்போது தமிழின்
சிறப்புகளை பாடுவதாக ஒரு பாடல் இடம்பெற்றது.
“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்”
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி என்ற பாடளில் உடுமலை நாராயண கவி தமிழ்
இலக்கியங்களை வரிசைப்படுத்தி பாடியிருப்பார்.
“பகை வென்ற திறம் பாடும் பரணி வகை
- செலும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை- வான்
புகழ் கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்
பொருள் கொண்ட தமிழ்ச் சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி”
என்ற இப்பாடல் தமிழின் இலக்கியச் சிறப்பை எடுத்துரைத்தது. நாடோடித்
மன்னனைப் பார்த்த ரசித்த நினைப்பில் இப்படத்துக்குச் சென்றவர்கள்
ஏமாந்து திரும்பியதால் இன்று இப்பாடல் அதிகமாக மக்கள் நினைவில் இடம்
பெறாமல்
பாரதிதாசன் பாடல்கள்
கலங்கரை விளக்கம் படம் வெளிவந்த போது பாரதிதாசனின் சங்கே முழங்கு பாடலை
கதையின் முக்கிய திருப்பமாக அமைந்த அந்த நடனக் காட்சியில்
இணைத்திருந்தனர். ஈப்பாடலை எம்.ஜி.ஆர். பாடி நடிக்காவிட்டாலும்
இக்காட்சி படம் பார்க்கும் அனைவருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
“சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு”
என்ற பாரதிதாசன் பாடல் வரிகளுக்கு மிக அருமையாக வீரம் செறிந்த
பாவனைகளுடன் நடனக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில்
பல பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் இப்பாட்டுக்கு தங்கள் பள்ளிக்கூட
விழாக்களில் பாட்டுக்கு நடனம் ஆடினர்.
“திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு
வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்”
என்ற பாடல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்ததோடு எம் ஜி ஆரின்
தமிழ்ப்பற்றையும் உறுதி செய்தது.
தாலாட்டுப் பாடல்களில் தமிழ்
பாரதிதாசன் தன்னுடைய பாடல் தொகுதியில் ஆண் குழந்தை தாலாட்டு பெண்
குழந்தை தாலாட்டு என்று தாலாட்டுப் பாடல்களை வகைப்படுத்தியிருப்பார்.
பாரதியாரும் கண்ணம்மா என் குழந்தை என்ற பெயரில் தாலாட்டுப் பாடல்
பாடியிருப்பார். தாலாட்டுப் பாடுவது என்பது தந்தைக்கும் தாய்க்கும்
விருப்பமான ஒன்றாகவே அன்று முதல் இன்று வரை அமைந்துள்ளது. அவ்வகையில்
எம்.ஜி.ஆர். படத்திலும் தாலாட்டு பாடல்கள் அல்லது குழந்தைப் பாடல்கள்
உண்டு. பணம் படைத்தவன் படத்தில் அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது
என்று தகவலை அறிந்ததும் அவர் மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக் கொண்டு வரும்
காட்சியில்
“எனக்கொரு மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல் என்
தலைவன் வழியிலே நடப்பான்”
என்று தன் மகனும் அண்ணாவின் வழியில் நடக்கும் தம்பியாகவே வருவான் என்று
திமுகவின் கொள்கையை வலியுறுத்திப்பாடுவதாக இப்பாடல் தொடங்கும். .
அப்பாடலில்
“இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் வழி பார்த்து சொல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்”
என்ற வரிகளில் திருக்குறளின் பெருமை எடுத்து கூறப்பட்டது.
“உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்”
என்ற வரிகள் ‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்று இந்தி
எதிர்ப்பின்போது வீர முழக்கமிட்ட மொழிப் பேராளிகளின் குரலை
எதிரொலித்தது.
வேட்டைக்காரன் படத்தில் தன் மனைவிக்கு காசநோய் வந்ததால் மனைவியிடம்
பிள்ளையை நெருங்கவிடாமல் தானே வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலையில்
இருக்கும் தந்தையின் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்து இருந்தார்.
அப்போது தன் மகன் ராஜாவுக்கு இரவில் பால் கொடுத்து தூங்க வைப்பதற்காகப்
பாடுகின்ற பாடல் காட்சி ஒன்று அப்படத்தில் இடம்பெற்றது.
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில் உன்னை எடுத்துக்கொண்டு வந்தேன்
என்று தொடங்கும் பாடலில்
முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் இருப்பாய்
என்ற பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் தமிழின் சிறப்பும்
தமிழ்ப் பொது மறையின் சிறப்பும் சுவையும் எடுத்துக்காட்டப்பட்டன.
எம்ஜிஆருக்காக பாடல் எழுதும்போதே அவரது விருப்பத்திற்கேற்ப கவிஞர்கள்
தாய், தமிழ், தாய் நாடு போன்ற கருத்துக்களை ஏதாவது இடத்தில் சிறப்பாக
வைத்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் .
பாரதி, பாரதிதாசன் பாடல்கள்
திராவிட முன்னேற்ற கழகம் தன்னுடைய கட்சியில் பலர் கவிஞர்களாகவும்
பேச்சாளர்களாகவும் இருந்தாலும் கூட பாரதிதாசன் தனிப்பெருமை பெற்றவராக
இருந்தார். பாரதிதாசனை திமுகவின் கவிஞர் என்று முத்திரை குத்தி
இருந்தனர். எனவே எம்ஜிஆரும் தன்னுடைய படங்களில் பாரதிதாசன் எழுதிய
சித்திரை சோலைகளே, சங்கே முழங்கு, புதியதோர் உலகம் செய்வோம் போன்ற
பாடல்களை இடம்பெறச் செய்தார்.
பாரதியாரின் பாடல்களும் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்றன அதிக அளவில்
இடம் பெறவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் காட்சிகளில் எம்.ஜி.ஆர்.
பாரதியாரையும் இணைத்துக் கொண்டிருந்தார். படத்தில் எம்.ஜி.ஆர் உடைய
வீடு ஒவ்வொரு திமுக உறுப்பினர் அல்லது அண்ணா திமுக உறுப்பினர்
வீட்டுக்கு முன் மாதிரியாகக் காட்டப்பட்டிருந்தது. திரைப்படத்தில்
அவருடைய வீட்டின் சுவர்களில் அண்ணா, திருவள்ளுவர், பாரதியார் ஆகியோரின்
படங்கள் மாட்டப்பட்டிருக்கும். சில படங்களில் இயேசு கிறிஸ்து மற்றும்
புத்தர் சிலையும் காணப்படும். ஆனால் எந்த படத்திலும் பாரதிதாசனின் படம்
இருந்ததாகத் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். நடித்த அந்தமான் கைதி [1952] என்ற வெற்றிப் படத்தில்
பாரதியாரின் பாடலான
‘காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்
என்ற பாடல் காதல் காட்சியில் இடம்பெற்றது. எம் எஸ் திரவுபதியுடன்
இணைந்து எம்.ஜி.ஆர். இக்காட்சியில் நடித்திருந்தார். அவர் திமுகவில்
உறுப்பினரான பிறகு அங்கு பிராமண எதிர்ப்பு இருந்ததனால் பாரதியார்
பாடல்கள் எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெறவில்லை. எம்.ஜி.ஆர். அண்ணா
திமுக ஆரம்பித்த பின்னர்
1977
ல் வெளிவந்த மீனவ நண்பன் படத்தில்
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்
ஜகத்தினை அழித்திடுவோம் என்று
தமிழ் கவி பாரதி சொல்லிய சொல்லை
நடைமுறை ஆக்கிடுவோம்
என்ற வரிகள் பாரதியாரின் பாடல் வரிகளைத் தாங்கியபடி வந்தன. பாரதியார்
படத்தை வைத்து ஊர்மக்கள் பாரதி விழா கொண்டாடுவதாக ஒரு காட்சி
அமைக்கப்பட்டு அங்கு வந்து எம்.ஜி.ஆர். ஈவரிகளைப் பாடுவதாக இக்காட்சி
எடுக்கப்பட்டது. மைசூரில் படப்பிடிப்பு நடந்ததால் அங்கு பாரதியார் படம்
கிடைக்கவில்லை. உடனே எம்.ஜி.ஆர். ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவிடம்
சொல்லி ஒரு பாரதியார் படத்தை வரையச் செய்து, படத்துக்கு மாலை சூட்டி
ஒரு சிறிய பந்தலில் வைத்து, அந்தப் பந்தலை அலங்கரித்து அங்கு அந்த
கிராமத்து மக்கள் வந்து நின்று பாரதியாரின் விழாவை கொண்டாடுவதாக காட்சி
அமைக்கப்பட்டது. இவ்வாறு பாரதியாருக்கு விழா கொண்டாடுவதாக ஏற்பாடுகள்
செய்து அங்கு வந்து நின்று தான் பாடலைப் பாடுவதாக படம்பிடித்து
இக்காட்சியில் பாரதியாருக்குச் சிறப்புச் செய்தார்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு பாரதியார் நூற்றாண்டு விழாவை அரசு
விழாவாக எடுத்து சிறப்பாக நடத்தினார். அப்போது பல்கலைக்கழகங்கள்
மூலமாக பாரதியாரின் படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. பாரதியாருக்கு டில்லி பாராளுமன்றத்தில் சிலை
அமைக்கப்பட்டது. இவ்வாறாக பாரதியாரின் மீது கொண்டிருந்த பற்றை தன்னுடைய
படத்திலும் ஆட்சியிலும் அவர் வெளிப்படுத்தினார்.
நிறைவு:
எம்.ஜி.ஆர். தனது கட்சியின் கொள்கைகளை தனது தனிப்பட்ட விருப்பங்களைத்
தனது திரைப்படப் பாடல்களில் பதிய வைக்க விரும்பி அவற்றைப்
பாடலாசிரியர்களிடம் கேட்டு எழுதி வாங்கி ரசிகர்கள் ரசிக்கும் வகையில்
தன்னுடைய படங்களில் அப்பாடல்களுக்கான காட்சிகளை அமைத்தார். தமிழ்
நாட்டின் பெருமையையும் திராவிட நாட்டின் பெருமையையும் நான்கு மொழி
மக்களும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய
கருத்துக்களையும் தன்னுடைய பாடல்களில் அமைத்தார். இதனால் உலகின் மூத்த
மொழி, வாழும் ஒரே செவ்வியல் மொழி தமிழ் நாம் அதனை பேசும் சிறப்புடையோர்
என்ற பெருமித உணர்வு உலகெங்கும் வாழும் மக்களுக்கு உண்டாகியுள்ளது.
இவ்வாறு வளர்ந்து வரும் தமிழின் சிறப்பால் இன்றும் இப்பாடல்கள்
உலெகெங்கும் வாழும் தமிழ் மக்களால் ரசிக்கப்படுகின்றன. நின்று
நிலைத்துள்ளன. பொது விழாக்களிலும் தமிழர் விழாக்களிலும் கட்சி
விழாக்களிலும் இசைக்கப்படுகின்றன. உலக நாடுகளில் தமிழர் வாழும்
பகுதிகளில் இலண்டன், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
என் ஜி ஆர் உலகப் பேரவை அமைத்து மக்கள் எம்.ஜி.ஆரை உலகத் தமிழினத்
தலைவராக போற்ற இப்பாடல்கள் உதவுகின்றன. உலகத் தமிழர்கள் அனைவரும்
ஒருமித்த மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். என்ற பெருமையை
அவர் அடைவதற்கு தமிழ் மொழியின் சிறப்பு குறித்து அவர் படங்களில் அவர்
அமைத்த பாடல்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|