ஆத்திசூடி நெறிப்படுத்தும் சொல்வன்மை
முனைவர் நா.அமுதாதேவி
முகவுரை:
இலக்கியங்களும்
நீதிநூல்களும் பல பாடல்களில் வாழ்வியல் அறத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நூல்களுள் ஆத்திசூடி என்னும் இந்நூல் வாழ்வியல் விழுமியங்களை
வகைப்படுத்திக் காட்டியுள்ளது. அவ்வையாரையும் ஆத்திசூடியையும்
அறியாதவர்கள் யாரும் இலர். பள்ளிப்பருவம் முதலே நாம் ஆத்திசூடியைக்
கற்றுவருகின்றோம். பல பாக்களில் கூறமுயன்ற வாழ்வியல் அறங்களை ஓற்றை
வரியில் கதம்பப் பூக்களைத் தொடுப்பது போல வகைப்படுத்தித் தொகுத்துள்ளார்
அவ்வையார். ஆத்திசூடி நமக்கு நெறிப்படுத்தியுள்ள சொல்வன்மைத்திறனை
இக்கட்டுரையின் வாயிலாகக் காணலாம்.
ஆத்திசூடி
ஆத்திசூடி எளிமையான வரிகளால் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
எழுதப்பட்ட நீதிநூல் ஆகும். இந்நூல் 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
நூலாகும். இந்நூல் உயிர்வருக்கம், உயிர்மெய்வருக்கம், சகரவருக்கம்,
தகரவருக்கம், நகரவருக்கம், மகரவருக்கம், வகரவருக்கம் எனப் பகுத்துத்
தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 109
பாடல்களைக் கொண்டதாகும்.
தமிழ்ச்சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும்
வகையில் அன்று வழக்கில் இருந்த திண்னைப்பள்ளிக் கூடங்களில் தொடங்கி
குருகுலக்கல்வி வரை இன்று பரவலாகக் கல்விக்கூடங்களில் பின்பற்றப்படும்
மெக்காலே கல்விமுறை வரை உயிh,;மெய் எழுத்துக்களை மாணவர்களுக்குக்
கற்றுத்தர அவ்வையாரின் ஆத்திசூடியைப் பின்பற்றிவருகின்றனர். இம்முறையில்
தமிழ் எழுத்துக்களின் வரிசைமுறையினை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்
பொழுது பசுமரத்தாணி போல அவர்;கள் மனதில் இடம் பெற்றுவிடுகின்றது.
ஆத்திசூடி என்பது ஆத்திமாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும்.
ஆத்திசூடி என்பது இந்நூலின் காப்புச் செய்யுளில் உள்ள முதல் சொல் ஆகும்.
இந்த முதல் சொல்லே இந்நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது. காப்புச்
செய்யுள் என்பது நூல் ஆசிரியன் அந்நூலைத் திறம்பட எழுதி முடிப்பதற்கு
இறையருளின் துணையை வேண்டிக்கொண்டு எழுதத்துவங்கும் நடைமுறைப்பழக்கமாகும்.
'ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' (ஆத்திசூடி-
காப்புச்செய்யுள்)
ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்கி
இந்நூலை எழுதத்துவங்குகிறேன் எனக் காப்புப் பாடலில் இருந்து இந்நூலைத்
துவக்கியுள்ளார்.
சொல்வன்மை
'நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூம் அன்று' (குறள்- 641 )
என்ற குறளின் மூலம் சொற்களின் வலிமையைப்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டியுள்ளார் வள்ளுவர்.
ஒருவருடைய உள்ளக்குறிப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசும் சொற்கள்
அமைகின்றது. இத்தகைய சொற்களின் மூலம் பிறர் மனதில் உள்ள நன்மை,தீமைகளை
அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய ஆற்றலைப் பெற்ற சொற்களை நாம் எவ்வாறு
பயன்படுத்த வேண்டும், எப்படி, எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பது
போன்ற பேச்சாற்றல் திறனை மேம்படுத்தும் பண்புகளை வரையரைப்படுத்திக்
காட்டியுள்ளார். அவற்றில் சிலவற்றினை இங்கு காண்போம்.
உடையது விளம்பேல் (ஆத்திசூடி-5)
நம்மிடம் உள்ள பொருளைப் பற்றியோ, நம் கல்வியின் சிறப்பினைப் பற்றியோ
நாமே புகழ்ந்து பிறரிடம் பேசுதல் கூடாது. இவ்வாறு நம்மிடம் உள்ள
பொருளின் சிறப்பினை நாமே உயர்த்திக் கூறுவதால் பல நேரங்களில் நமக்கு
அச்செயல் கேடாக முடியும்.
ஓளவியம் பேசேல் (ஆத்திசூடி-12)
பிறருடைய உழைப்பைக் கண்டும், முன்னேற்றத்தைக் கண்டும் நாம் பொறாமை
கொண்டு தவறான கருத்துக்களைப் பிறரிடம் கூறுதல் கூடாது. அவ்வாறு பேசும்
பொழுது நம்முடைய சிறமைக்குணம் எளிதில் வெளிப்பட்டுவிடும்.
கண்டொன்று சொல்லேல் (ஆத்திசூடி-
14)
நாம் கண்களால் நிகழ்ந்த ஒரு நிகழ்வினைப் பார்த்து விட்டு அதற்கு
நேர்மாறாக, உண்மைக்குப் புறம்பாகப் பேசுதல் கூடாது. பல நேரங்களில்
உண்மைகள் மறைக்கப்படும் பொழுது எவ்விதத் தவறும் செய்யாதவர்கள்
பாதிக்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் தாம் கண்ட காட்சியினை உள்ளது
உள்ளவாறு உண்மைத்தன்மை மாறாமல் கூறவேண்டும்.
ஞயம்படவுரை (ஆத்திசூடி- 17)
சொல்லுக சொல்லில் பயன் உடைய என்றான் வள்ளுவன். கனி போல இனிமையான சொற்கள்
பேசுவதற்குப் பல இருக்கின்றது. அத்தகைய சொற்களைத் தேர்வு செய்து நாம்
பிறரிடம் பேசுதல் வேண்டும். நாம் சொல்லும் சொல்லின் பொருளைக்
கேட்கின்றவர்களுக்கு இன்பம் உண்டாகும் படிப் பேசுதல் வேண்டும்.
கடிவது மற (ஆத்திசூடி – 32)
கோபம் என்பது தன்னைச் சார்தவர்களையும் அழித்துவிடும். நம்முடைய
நண்பர்களையும் உறவினர்களையும் நம்மைவிட்டு விலகிச் செல்ல வைக்கும். எனவே
நாம் மறந்தும் கூட பிறரிடம் கோபத்தால் கடிந்து பேசுதல் கூடாது.
கேள்விமுயல் (ஆத்திசூடி -39)
பலர் பிறர் நம்மிடம் கூறவிரும்பும் செய்திகள் எதனையும் செவிமடுத்துக்
கேட்க மாட்டார்கள். இப்படிச் செய்வதனால் நம்மிடம் உரையாடிக்
கொண்டிருப்பவர்களின் ஊக்கம் குறைந்து விடும். நம்மைக் காட்டிலும்
கற்றுணர்ந்த சான்றோர்கள் நம்முடன் உரையாடும் பொழுது அவர்கள் கூறும்
நூலின் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வஞ்சகம் பேசேல் (ஆத்திசூடி -27)
பிறர் மீது தேவையற்ற நிலையில் பொறாமை கொண்டு பலர் அவதூறாகப் பல
சொற்களைக் கூறுவர். அவ்வாறு பொய் கூறும் பொழுது அவர்களின் மனம்
புண்படும்படியாக அத்தகைய சொற்கள் அமையும். எனவே பிறர் மீது வஞ்சக
எண்ணத்துடன் பல பழிச் சொற்களை ஒருபொழுதும் பேசுதல் கூடாது.
சித்திரம் பேசேல் (ஆத்திசூடி
– 45)
சில மனிதர்கள் பொய்யான செய்திகளை உண்மை போலக் கூறுவார்கள். இதனால் பல
பின் விளைவுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகின்றது. எனவே நாம்
மற்றவரிடம் பேசும் வார்த்தைகளின் தன்மையை ஆராய்ந்து பேசுதல் வேண்டும்.
ஒருபொழுதும் பொய்யான வார்த்தைகளை உண்மைபோலக் கூறுதல் கூடாது.
சுளிக்கச் சொல்லேல் ( ஆத்திசூடி - 47)
கேட்பவர்கள் கோபிக்கும் படியாகவும் நம் சொற்களை வெறுக்கும் படியாகவும்
நாம் சொற்களைக் கூறக்கூடாது. அவ்வாறு கூறும் பொழுது பிறர் மனம்
வருந்தும். எனவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்துதல் கூடாது.
சொற்சோர்வு படேல் ( ஆத்திசூடி- 52)
பிறருடன் பேசும் பொழுது குற்றம் உண்டாகும் வகையில் ஒருபொழுதும் பேசுதல்
கூடாது. நாம் பல நேரங்களில் இடம், பொருள், அறியாமல் சில சொற்களைக்
கூறிவிடுகின்றோம். அவ்வாறு பேசும் பொழுது கேட்பவர்களுக்குக் குற்றம்
ஏற்பட்டு விடுகின்றது. எனவே இத்தகைய சொற்களைப் பேசுதல் கூடாது.
தெய்வம் இகழேல் ( ஆத்திசூடி- 60)
நமக்கு நடக்கின்ற நன்மைக்கும் தீமைக்கும் நம்முடைய செயல்கள் மூல
காரணியாக இருப்பினும் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டு இருப்பவன் கடவுள்
ஆவான். எனவே நமக்கு தீயவை நடக்கும் பொழுது அதனை ஏற்றுக் கொண்டு இறைவனைப்
புகழும் நாம் தீமை நடக்கும் பொழுது இறைவனைத் தூற்றுக்கூடாது என்பதனைச்
சுட்டியுள்ளார்.
பழிப்பன பகரேல் ( ஆத்திசூடி-76)
பெரியோர்களால் பழிக்கப்படும் சொற்களான பொய், கடும் சொல், பயனில்லாத சொல்
போன்ற சொற்களைச் சான்றோரிடம் பயன்படுத்தல் கூடாது. பெரியோர்களை இகழும்
வகையிலும் நாம் பேசுதல் கூடாது. பெரியோர்களால் இகழப்படும் வகையிலும் நம்
சொற்கள் அமைந்துவிடல் கூடாது.
பிழைபடச் சொல்லேல் ( ஆத்திசூடி- 78)
பிறருக்குக் குற்றம் உண்டாகும் வகையில் நம்முடைய சொற்களைப் பிறரிடம்
பேசுதல் கூடாது. நாம் பேசும் சொற்களால் நமக்கு கேடும் பின்பு விளையலாம்
எனவே பேசும் சொற்களின் தன்மையை அறிந்து கொண்டு எவ்விதப் பிழையும்
இல்லாமல் பேசுதல் வேண்டும்.
மிகைபடச் சொல்லேல் ( ஆத்திசூடி- 89)
நாம் யாரிடம் பேசுகின்றோம் என்பதனைத் தீர்மானித்துக் கொண்டு பின்பு
சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். நம்மைக் காட்டிலும் இளையோர் என்று
எண்ணிக் கொண்டு அவர்களை இகழ்ந்து பேசக்கூடாது. நம்மைக்காட்டிலும் வயதில்
மூத்த சான்றோர்களிடம் உரையாடும் பொழுது வார்த்தைகளில் தெளிவும் கவனமும்
நமக்குத் தேவைப்படுகிறது. இடம் புரியாமல் சான்றோர்களின் அருமைப்
பண்புகளை உணராமல் மிகைபடப் பேசும் பொழுது அதற்கான விளைவுகளை நாம் ஒரு
நாள் அனுபவிக்க நேரிடும். எனவே அவர்களின் சொற்கள் மிகுந்து விடாமல்
கவனமாகக் கையாளுதல் வேண்டும்.
மேன் மக்கள் சொற்கேள் ( ஆத்திசூடி – 94)
நம்மைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்தாலும் மூத்த சான்றோர்கள் நம்மிடம்
அவர்களின் அனுபவ அறிவினைப் பகிர்ந்து கொள்ளும் போதும், தாம் கற்ற நூல்
கருத்துக்களைத் தெரிவிக்கும் பொழுதும் நாம் நன்கு உணர்ந்து கேட்டுப்
பயன்பெறல் வேண்டும். சான்றோர்கள் என்றும் நம் நலனில் அக்கறை
கொண்டவர்களாக விளங்குவர் எனவே அவர்களின் பேச்சைக் கேட்டு நம் வாழ்வினைச்
செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மொழிவதற மொழி ( ஆத்திசூடி -96 )
நாம் ஒரு தகவலை அல்லது செய்தியினைப் பிறருக்குத் தெரியப்படுத்தும்
பொழுது நாம் கூறும் தகவலில் நமக்கு எவ்வித ஐயமும் ஏற்படக்கூடாது. நாம்
கூறவிருக்கின்ற செய்திகளில் நமக்கு முதலில் தெளிவு வேண்டும். அப்பொழுது
தான் அந்த தகவலை எவ்விதச் சிக்கலும் இன்றிப் பிறர் நன்கு உணரும்
படியாகக் கூறுவோம். எனவே அவையிலோ அல்லது ஆன்றோர்களிடமோ அல்லது
நண்பர்களிடமோ ஒரு தகவலைக் கூறும் பொழுது கேட்பவர்களுக்கும்
கூறுகின்றவர்களுக்கும் எவ்வித ஐயமும் ஏற்படதாவாறு கூறுதல் வேண்டும்.
வல்லமை பேசேல் ( ஆத்திசூடி -98)
நம்மிடம் உள்ள ஆற்றல்கள் குறித்தும் திறமை குறித்தும் நாமே பிறரிடம்
பேசுதல் கூடாது. அவ்வாறு நம் புகழை நாமே பேசிக்கொள்வது தற்புகழ்ச்சி
என்ற நிலையில் அமைந்து விடும். அது நம் நற்பெயருக்குக் களங்கம்
விளைவித்து விடும். எனவே நம் புகழை நாமே பேசுதல் கூடாது என அவ்வை
சுட்டியுரைத்துள்ளார்.
வாது முற்கூறேல் ( ஆத்திசூடி – 99)
சான்றோர்களிடம் பேசும் பொழுது நாம் கூறிய கருத்தே சரியானது என்று
வாதிடுதல் கூடாது. ஆன்றோர்களாக இருப்பினும் மற்ற மனிதர்களாக இருப்பினும்
பிறர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துப் பேசுதல் வேண்டும். சான்றோர்கள்
தாம் பெற்ற அனுபவ அறிவின் காரணமாகத் தம் கூற்றினை நம்மிடம் முன்வைப்பர்.
எனவே அவர்களிடம் பொறுமையாகப் பேசுதல் வேண்டும். வாதிடும் நோக்கில் நாம்
கூறிய கருத்தே சரியென்று பேசுதல் கூடாது.
வெட்டெனப் பேசேல் ( ஆத்திசூடி – 104)
யாருடன் பேசினாலும் நிதானத்துடன் பேசுதல் வேண்டும். கத்தி ஒரு பொருளை
இரு வேறு துண்டுகளாக வெட்டிப் பேசுவது போல கடினமான சொற்களைப்
பயன்படுத்திப் பேசுதல் கூடாது. அவ்வாறு பேசும் பொழுது பல நேரங்களில்
சொற்களின் வலிமையை அறியாமல் நாம் பேசிவிடக் கூடும். எனவே வெட்டுக் கத்தி
போல நாம் பிறரிடம் பேசுதல் கூடாது எனப் பேச்சின் திறனை
செழுமைப்படுத்திக் காட்டியுள்ளார் அவ்வையார்.
ஒரஞ்சொல்லேல் ( ஆத்திசூடி – 108)
எந்த வழக்கிலும் யாராக இருப்பினும் இருதரப்பின் வாதங்களையும்
உண்மைகளையும் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒருசாரர் பக்கம் சார்ந்து
கொண்டு நாம் பேசுதல் கூடாது. யாரிடம் குறைகள் உள்ளதோ, தவறுகள்
இருக்கின்றனவோ அவை மாற்றத்திற்கு உரியவையாகக் கொண்டு தவறினைச்
சுட்டிக்காட்டித் திருத்த முயல வேண்டும். அதை விடுத்து
வேண்டியவர்களுக்காக ஒருபக்கம் சார்ந்து ஒருபொழுதும் பேசுதல் கூடாது.
நிறைவுரை:
நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகள் பலவற்றினைப் பல
வருக்கங்களில் அவ்வை வகைப்படுத்திக் காட்டியுள்ளார். எளிய சொற்களின்
மூலம் அறிய பல கருத்துக்களை நம்மிடம் பதிவு செய்துள்ள பாங்கு
போற்றுதலுக்குரியதாகும். இன்றும் பல நூறு ஆண்டுகள் கடந்த பின்பும்
மொழியை எளிமையாக நினைவில் கொள்ள கையாளப்படும் உத்தியில் இவ்வருக்க
முறையினையும் ஒன்றாகக் கூறலாம்.
பேச்சு ஒருவருக்கு உயர்வினையும் தாழ்வினையும் தரக்கூடியது. எனவே நாம்
பிறரிடம் எப்படிப் பேசுவது, எத்தகைய சொற்களால் பேசுவது என்பதனைச்
சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிறார். யாகாவாராயினும் நாகாத்தல் நலம் பல
விளைவிக்கும் என்பதனை நயம்படப் பல வரிகளில் எடுத்துரைத்துள்ளார்.
உயர்ந்த ஒழுக்கங்களை மனிதனின் மனதில் விதைத்து அவன் ஆளுமைத் தன்மையை
மேம்படுத்த பல உக்திகளை விளக்கிச் சென்றுள்ள விதம்
போற்றுதலுக்குரியதாகும். ஆத்திசூடி என்னும் இந்நூல் குழந்தைகள்
படிப்பதற்கு உருவானது என்று ஒதுக்கிவிடாமல் பெரியோர்களும் ஆழ்ந்து
படிக்கும் பொழுது மனம் அமைதிபெறுகிறது. நம்முள் ஒரு தன்னம்பிக்கை விதையை
விதைக்க முடிகின்றது. எனவே எளிய இந்நூல் கருத்தினைப் படித்து நலம் பல
பெற்று நம்மை தகவமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|