திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 21)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
இரவுக்கு ஆயிரம் கண்கள்:
இயற்கையின் படைப்புகளில்
இரவு என்பது பெருமைக்குரியது. இரவினைப் பற்றி எத்தனை தான் விஞ்ஞானம்
விளக்கினாலும் பகலின் மறுபக்கம் நிழலின் வெளிப்பாடு என்பதை மறுக்க
இயலாதுதான்; இரவுகள் எல்லோருக்குமா இன்பமளிக்கிறது. இல்லையே?சிலர்
கன்னம் இடுகிறார்கள். சிலர் களவு செய்கிறார்கள். அது இருளின் பிறப்பிடம்
என்றும் இருளின் சங்கமம் என்ற உண்மை இருந்தபோதும், அது நம்மில் பலருக்கு
இன்பத்தின் எல்லையை அன்றோ கூட்டுகிறது.
பகல் நேர வெப்பம் தாங்காது உழைப்பின் களைப்பு நீங்கி இல்லாளுடன்
இணையும்போது இரு உயிர்களும் இரவின் இன்பத்தை எட்டுவதில் வியப்பேதும்
இல்லை.
சாலைகள் இரண்டும் இணைந்திருக்கும்
சந்தோஷம் இடையில் மறைந்திருக்கும்
இரவுக்கு இரவு வளர்ந்திருக்கும் –அது
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்?
என்ற வரிகளை ஆய்ந்து பார்த்தால் இரவின் பெருமை இன்னும் உயரத்தான்
செய்யும்.
இதைத்தான் கவியரசர்
அன்னை இல்லம் ,
மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்.
இரவே இரவே விடியாதே,
இன்பத்தின் கதவை அடை க்காதே?
சேவல் குரலே கூவாதே,
சேர்ந்தவர் உயிரைப் பறிக்காதே.
இரவே, நாங்கள் இணைந்திருக்கும் இந்த சுகத்தை விடியல் என்கிற போர்வையில்
பிரித்து விடாதே.சேவலே,சற்றுப் பொறு; பொழுது விடிந்துவிட்டது என்று
எப்பொழுதும்போல கூப்பாடு போட்டு எங்களைப் பிரித்து விடாதே என்று
இயற்கைச் செயல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார் கவிஞர்.
இன்பத்தின் திறவுகோல் இரவின் மடியில்தான் உள்ளது என்பதை
வலியுறுத்துகின்றார். இரவு முடிந்தால் இன்பமும் முடிந்துவிடும் என்ற
உண்மை கலந்த வரிகள் இவை.
இரவின் பெருமையைக் காலக் கல்வெட்டில் பதித்த கவிஞர், இலக்கியம் இலக்கணம்
மட்டுமின்றி சரித்திரத்திலும் சாதனை படை க்கிறார், எப்படி?
குலமகள் ராதை படத்தில் ஒரு பாடலை இப்படி
ஆரம்பிக்கிறார்.
இரவுக்கு ஆயிரம் கண்கள்,
பகலுக்கு ஒன்றே ஒன்று.
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று.
எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையை கேட்போர் மனங்கொள்ளும் வகையில் கவி
வரிகளில் காட்டும் திறன் கவின் மிக்கது.
`காதல் வியாதி பொல்லாதது:
காதலனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் தவிப்பைப் படம் பிடிக்கும் ஓர்
கவிதை இது. கார்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதியளித்த தலைவன்
இன்னும் வந்து சேரவில்லை.தன் சிந்தனை முழுதும் தலைவனே
நிரம்பியிருக்கின்ற நிலையில்,வேறு ஏதும் அவளைக் கவரவில்லை.அவன் இல்லாத
நிலையில், கூந்தலில் சூடிய மல்லிகை அவளுக்கு நெருப்பாய்க்
கொதிக்கிறதாம்.ஓங்கி ஒலிக்கும் ஆலயமணியின் ஓசை கூட அவளுக்கு
இடிமுழக்கமாய்க் கேட்கிறதாம்.
ஒருவழியாக அவன் வந்தான், இன்பம் தந்தான். இந்தக் கவினுறு காட்சியை எளிய
வரிகளில், தாழம்பூ படத்தில் நான்கு பத்திகளில் ஓர் புதிய உத்தியைக்
கையாண்டு பத்திக்கு வரிகள் நான்கென வகுத்து,வரிக்கு சீர்கள் மூன்றென
உரைத்து பாடலைப் பரிமளிக்கப் படைத்த அந்த காரை முத்துப் புலவர்
கண்ணதாசன் பெருமை சேர்த்தது கவிதை இலக்கியத்துக்கு மட்டுமல்ல,நம் இனிய
தமிழ் மொழிக்கும் தான்.
பங்குனி மாதத்தில் ஓர் இரவு,
பால் போல் காய்ந்தது வெண்ணிலவு,
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு,
தனியே தவித்தது பெண்ணழகு.
காதல் தலைவன் வரவில்லையாம்;
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்;
தூது விட்டாளாம் பதிலில்லையாம்;-அவள்
துடித்தாளாம்; எண்ணித் தவித்தாளாம்.
மல்லிகை மலரை நெருப்பென்றாள்;
மணியோசை தனை இடிஎன்றாள்;
மெல்லிய பனியை மழையென்றாள்;
மேனியை வெறும் கூடென்றாள்.
காலடி ஓசை கேட்டு விட்டாள்;
கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்;
நாலடி நடந்தாள் முன்னாலே –அங்கு
நடந்தது என்னவோ பின்னாலே!
இல்லற தீபம்:
இல்லறம் நல்லறமாக கவிஞர் எத்தனையோ பாடல்களைத் தந்திருக்கிறார். ஆரம்ப
கால மனித குலத்தில் திருமண வழக்கமே இல்லாதிருந்திருக்கிறது.மனிதன்
என்றைக்கு பொய் சொல்லத் தொடங்கினானோ,பிறரை ஏமாற்ற ஆரம்பித்தானோ அன்றே
திருமணத்துக்கும் தேவை ஏற்பட்டுவிட்டது என்கிறார் தொல்காப்பியர்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப `(தொல்-களவியல்)
தனக்கென வாழ்ந்த வாழ்வை மாற்றி, தனக்கும் பிறருக்குமான வாழ்வே இல்லற
வாழ்வு என்பர் அறிஞர் பெருமக்கள்.
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன என்ற முதுமொழியை நாமறிவோம்; அதனால் தானோ
கவியரசர் ஒவ்வொரு திருமணத்திலும் தேவனும் தேவியும் வந்து வாழ்த்து
இசைக்கிறார்கள் என்கிறாரோ?
பூவும் பொட்டும் படத்தில் ,
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்;
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்;
வேறு எப்பொழுதெல்லாம் அவர்கள் ஆசி வழங்குகிறார்கள் என்று
பட்டியலிடுகிறார்.
கோலமிட்ட மணவறையில்
குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில்
தாலி கட்டும் வேளையிலும்,
ஊரார்கள் வாழ்த்துரைக்க
ஊர்வலத்தில் வரும்பொழுதும்,
தேவன் வந்து பாடுகின்றான்;
தேவி நடமாடுகின்றாள்.
மூன்று முடிச்சு:
திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையே என்பதை அவரது
அர்த்தமுள்ள இந்து மதம் தொகுப்பைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும்.
பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டும்பொழுது ஏன் மூன்று முடிச்சு இடப்படுகிறது
என்பதை கஸ்தூரி விஜயம் படப் பாடலொன்றில் விளக்குகிறார்.
பெண்கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு
கணவனுக்கு உரிமை என்னும் இரண்டு முடிச்சு
மூன்று,கடவுளுக்குப் பயந்தவள் எனக் காட்டும் முடிச்சு.
இல்லற மாண்பை அதன் புனிதத்தை,மேலும் விளக்குகிறார்.
பாலைப்போல தாய்மை தன்னை வளர்த்துக் கொள்கிறாள்-அவள்
பழத்தைப் போல இனிமை தன்னைப் பகிர்ந்து கொள்கிறார்.
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு –அது
கோலம்போட்டுக் காட்டுவது குடும்ப விளக்கு.
இல்லறம் இப்படியெல்லாம் அமைந்துவிட்டால் பின் மணமுறிவுகள் தான் ஏற்படுமா?
விட்டுக்கொடுத்து வாழும் இல்லறவாழ்வே இனிமை தரும் என்பதை மேற்கண்ட
வரிகளில் பாலையும் பழத்தையும் எடுத்துக் காட்டாகக் காட்டி மனித குலம்
தழைக்கத் தன் பாடல் வரிகளால் வழிகாட்டுகிறார்.
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|