நன்நெறி காட்சிப்படுத்தும் உதவியின் இயல்புகள்
முனைவர் நா.அமுதாதேவி
முகவுரை:
இலக்கியங்கள் தனிமனிதனின்
வாழ்வியல் ஒழுக்கங்களை சீர் செய்வதற்காகப் படைக்கப்பட்டது எனலாம்.
சமுதாயத்தில் தனக்கான அடையாளம் கிடைக்க வேண்டும் எனில் தம் வாழ்வில்
சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றுதல் வேண்டும்;. சான்றோர்களின் அறிய பல
நூல் கருத்துக்களையும் அறிவுரைகளையும் பின்பற்றி நடக்கும் பொழுது நம்
வாழ்வு செழுமை பெறும். கீழ்க்கணக்குநூல்களுள் பல நூல்களும்
வாழ்வியலுக்குத் தேவையான அறத்தைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது.
வாழ்க்கைக்குத் தேவையான நல்ல வாழ்வியல் நெறிகளை உணர்த்துகின்ற நூல்
ஆதலால் இந்நூல் நன்னெறி எனப் பெயர் பெற்றது. இந்நூலின் பல இடங்களில்
எளிமையாக சான்றுகளைக் கூறி உயரிய பல அறங்களை எடுத்துரைத்துள்ளார்
ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். பல அறங்கள் நம்மை
நல்வழிப்படுத்தும் திறம் உடையவையாக இருப்பினும் அவற்றில் தக்க சமயத்தில்
நமக்கு உதவும் குணம் கொண்டவர்களையும் அவர்களின் உதவியையும் நாம் என்றும்
நினைவில் வைத்துக்கொண்டு பிறருக்கு நாமும் இது போன்ற அறங்களைச் செய்ய
வேண்டும் எனச் சிந்திப்போம். அத்தகைய உதவியின் இயல்புகள் குறித்தும்,
யாருக்கு எப்படி நாம் உதவிசெய்ய வேண்டும் என்பது குறித்தும் பிறருக்கு
உதவிசெய்வதனால் ஏற்படும் நல்ல விளைவுகள் குறித்தும் ஆய்வதாக
இக்கட்டுரையின் பொருண்மை அமைகிறது.
ஆசிரியர் குறிப்பு:
இவர் துறைமங்கலம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இவரின் தந்தை குமாரசுவாமி
தேசிகர் என்பவர் ஆவார். இவருக்கு வேலையர், கருணைப்பிரகாசர் என்ற இரு
தம்பியரும் ஞானாம்பிகை என்ற ஒரு தங்கையும் இருந்துள்ளனர். சிவப்பிரகாசர்
திருமணம் செய்து கொள்ளாமலே துறவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். தம்பியர்
இருவரும் இல்லற வாழ்வை மேற்கொண்டனர். இவர் இளமைப்பருவம் முதலே தமிழ்க்
கல்வியை ஆர்வத்துடன் பயின்று வந்தார். செய்யுள் இயற்றும் ஆற்றலும்
கைவரப்பெற்று இருந்தார்.இவர் தம் இளமைப்பருவத்தில் திருவண்ணாமலையில்
வாழ்ந்த பொழுது சோணசைலமாலை என்னும் நூலை இயற்றினார். இந்நூல் 100
செய்யுளால் இயற்றப்பட்ட பிரபந்தப் பாடலை இயற்றினார்;;. இவர் நால்வர்
நான்மணிமாலை, ஏசுமத நிராகரணம், திருக்கூவப்புராணம், பிரபுலிங்கலீலை,
திருவெங்கைஉலா போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் தமது 32 வயதில்
சிவகதி அடைந்தார். சிவப்பிரகாசர் மொம்மபுரத்தில் வசித்த பொழுது ஒருநாள்
கடற்கரை நோக்கிச் செல்கின்றனர். அங்கு மணல் பரப்பில் நன்னெறி என்னும்
இந்நூலின் 40 வெண்பாவினையும் எழுதிமுடித்துவிட்டுத் தனது வீட்டிற்கு
வந்துவிட்டார். பின்பு கருணைப்பிரகாசரை அழைத்து அப்பாடல்கள் அனைத்தையும்
ஏட்டில் எழுதிவருமாறு கூறி அனுப்பினார். மனிதனின் உடல் உறுப்புகளில் கண்
முதலியவற்றின் இயல்புகளை 9 பாக்களிலும் ஞாயிறு, திங்கள், கடல், காற்று
போன்ற இயற்கைப்பொருள்களையும் நெல், பசு முதலிய பொருள்களையும் பல
உவமைகளில் திறம்படக்கூறியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் பெண்களிடம் அறிவுரை
கூறும் நோக்கிலும் பெண்களின் பண்புகளை உயர்த்திக் கூறியும் தம்
கருத்துக்களை வெளிப்படத்தியுள்ளார்.
பதில் உதவியை எதிர்பாராமல் உதவுக
'என்று முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பார் தீதற்றோர் - துன்றும் சுவை
பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயத்து.' (நன்னெறி – பா.1)
என்ற இப்பாடலடிகளின் வாயிலாகச் சான்றோர்கள் தம்மிடம் அன்பு செலுத்தாத
மனிதர்களிடமும் பரிவாகச் சென்று உதவுவர். நம் கையானது நாவிற்குச்
சுவையான உணவுகளை எவ்விதப் பலனும் எதிர்பார்க்காமல் தந்து உதவுவது போல
சான்றோர்கள் தம்மிடம் அன்பு மொழிகளைப் பேசாத நபர்களிடமும் பரிவுடன்
சென்று அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வர். இது சான்றோர்களின்
தலைசிறந்த பண்பாகும். இது போல நாமும் பிறருக்கு எவ்விதமான பலனையும்
எதிர்பாராமல் உதவி செய்தல் வேண்டும்.
இனியநெறியறிந்து உதவுக:
பசுவின் கன்று வாயிலாக நாம் பாலைக் கறந்து பயன்படுத்திக் கொள்வது போல
நம்மிடம் பகைமை உணர்வு கொண்டவர்களிடமும் நமக்கு உதவாத நபர்களிடமும் ஒரு
பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் எனில் அவர்களுக்கு உறவினர்களாக
இருக்கும் மனிதர்களின் வாயிலாக அப்பொருளைக் கொடுத்தும் உதவுதல் வேண்டும்.
'தங்கட்கு உதவிலார் கைத் தாமொன்று கொள்ளினவாம்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க – தங்கநெடும்
குன்றினால் செய்தனைய பொங்கையாய்! ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து' (நன்னெறி- 3)
என்ற இப்பாடலடிகளின் மூலம் உதவியை எந்நிலையிலும் நாம் பிறருக்குச்
செய்திடல் வேண்டும் என்பதனை வழியுறுத்தியுள்ளார்.
செல்வம் பயன்படுத்துவோர்க்கே உரியது
'பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயன்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு' (நன்னெறி-4 )
சில மனிதர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் யாருக்கும் பொருளைக் கொடுத்து
உதவ முன்வரமாட்டார்கள். கடல் நீரை மேகம் முகர்ந்து கொண்டு மழையாகப்
பெய்து உதவுவது போல பிறருக்குப் பொருளைக் கொடுக்க மனம் இல்லாத
உலோபிகளிடம் இருந்து பொருளைப் பெற்றுக் கொண்டு நாம் பிறருக்கு உதவுதல்
வேண்டும். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களிடம் இருந்து பொருளைப்
பெற்றுக் கொண்டு பொருள் இல்லாதவனுக்குப் பொருளைக் கொடுத்து உதவுதல்
வேண்டும். அவ்வகையில் நம்மிடம் கிடைத்த செல்வம் கூட அப்பொழுது பயன்
கருதி தம் செல்வமாகவே கருதி உதவிடல் வேண்டும்; என்பதனை
வழியுறுத்தியுள்ளார்.
அன்பின் உதவுக
நிலவானது வளர்வதும் தேய்வதுமாகத் தன் இயல்பினை மாற்றிக் கொள்வது போல
சான்றோர்கள் தம்மிடம் பொருள் மிகுதியாக உள்ள போதும் குறைவாக இருக்கின்ற
போதும் தன்னிடம் உள்ள பொருளின் தன்மைக்கு ஏற்ப பிறருக்குப் பொருளைக்
கொடுப்பர். எந்நிலையிலும் தம்முடைய ஈகைத்திறனை மட்டும் கைவிடமாட்டார்கள்.
நிலவு எந்நிலையிலும் தம் ஓளியைப் பிறருக்குக் கொடுத்து உதவுவது போல
சான்றோர்களும் தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுவர்.
இக்கருத்தினைப்
'பெருக்க மொடும் சுரக்கம் பெற்;ற பொருட் கேற்ப
விருப்ப மொடு கொடுப்பர் மேலோர் -
---------------------------- மதியின்
கலையளவு நின்ற கதிர்' (நன்னெறி - 13) என்ற
இப்பாடலடிகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலோரின் இயல்பு
அறிவொழுக்கங்களில் உயர்ந்த சான்றோர்கள் தம்மை மதியாதவர்களையும் தம்மைக்
காட்டிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடமும் தாமே தேடிச் சென்று பொருள்
உதவியை வழங்குவர். இது சான்றோர்களின் உயரிய பண்பாகும். கடல் நீரானது
கடலுக்கு மட்டும் பயன்படுவது இல்லை அதனை அடுத்துள்ள உப்பங்கழிகளுக்கும்
பயன்தருவது போல சான்றோர்கள் தம்மை அவமதிக்கும் பண்பினையுடையவர்களுக்கும்
உதவி தேவைப்படும் பொழுது தாமே தேடிச் சென்று பொருள் கொடுத்து உதவுவர்.
இதனை
'தம்மையும் தங்கடலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினுஞ் செல்வ ரிடர் தீர்ப்பரல்கு
கழியினும் செல்லாதே கடல்' (நன்னெறி - 16)
இவ்வரிகளில் வெளிக்காட்டியுள்ளார். பிறருக்கு வரும் துன்பத்தினை தமக்கு
வரும் துன்பமாகக் கருதி பிறருக்கு உதவ முன்வருவர் சான்றோர். இதனை
'பெரியவர் தந் நோய் போற் பிறர்நோய் கண்டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க.' (நன்னெறி -20 )
என்ற இவ்வரிகள் உணர்த்தி நிற்கிறது.
வறுமையிலும் உதவி
தம் தந்தை தாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவி தான்
ஏழ்மைநிலையை அடைந்தபொழுதும் அவர் மகன் இந்நிலையைக் கருத்தில் கொள்ளாது
தானும் பிறருக்கு உதவி செய்ய முன்வருவான். பிறருக்கு உதவி செய்ய
வேண்டும் என்ற மனநிலையை ஒரு பொழுதும் கைவிடமாட்டார்கள். வாழைமரமானது
நல்ல நிலையில் இருக்கும் பொழுது தன் காய், கனி, இழை,பூ என அனைத்தையும்
கொடுத்து மனிதனை வாழ்விக்கும். தான் இறந்த பின்பும் கூட தண்டு,
கிழங்கு,என்று பயன் உடைய பொருளைக் கொடுத்து மனிதனை வாழ்வித்துக் கொண்டு
இருக்கும். இவ்வாழை மரம் போல உதவும் குணம் கொண்டவர்களுடைய குடும்பத்தில்
உள்ள நபர்களும் தம் வாழ்வினைப் பிறருக்கு உதவி செய்து பொருள் படும்
படியாக வாழ்வர் என்பது திண்ணம். இக்கருத்தினை
'எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ – பைந்தொடீ!
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்று முதவுங் கனி.' (நன்னெறி -17 )
என்ற நன்னெறியின் பாடல் வரிகள் சுட்டியுரைக்கிறது.
கைம்மாறு கருதாது உதவுக
நமக்குப்புதியதாகப் பல் முளைக்கும் பொழுது அப்பல்லினால் நாவிற்கு
எவ்விதப் பலனும் விளையப்போவது இல்லை. பற்கள் கடினமான சுவையான
உணவுப்பொருள்களைக் கடித்து மென்று தின்று சுவைத்துத் தானே பயன்பெறுவது
போல கற்றறிந்த சான்றோர்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல்
தம்முடைய உடலை வருத்திக் கொண்டு தம்மால் பிறருக்குச் செய்ய முயன்ற
உதவிகளைச் செய்வர். இக்கருத்தினை
'கைம்மாறு கவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வார் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியான தாம் மென்று' (நன்னெறி -27 )
என்ற வரிகள் சுட்டியுரைக்கிறது.
வெறுப்பிலும் உதவுவர்
பேரறிவுடைய சான்றோர்கள் பிறர் மீது கோபம் உள்ள காலத்திலும் அதனை மனதில்
கொள்ளாது பிறருக்கு உதவுவர். ஆனால் கயவர்கள் மனம் மகிழ்ந்திருக்கும்
பொழுதும் கூட பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவமாட்டார்கள். வாழையானது
காயாக இருப்பினும் நன்கு பழுத்த பழமாக இருப்பினும் பிறருக்குப்
பயன்படும். ஆனால் எட்டிக்காயானது நன்கு பழுத்திருந்தாலும் பிறருக்குப்
பயன்படாதது போல பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் அற்ற
மனிதனுடைய செல்வம் பயன்னற்றதாகும்.
'முனிவினும் நல்குவர் மூதறிஞருள்ளக்
கனியினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்
தாயினும் ஆமோ அறை' (நன்னெறி - 28)
என்ற பாடலடிகள் இதனை உணர்த்தி நிற்கிறது.
இடுக்கண் அஞ்சாது உதவுக
நிலவினுள் காட்சிதரும் மான் உருவம் இப்புவியில் உலவும் புலியைக் கண்டு
ஒருபொழுதும் அஞ்சாது. அது போல நம் மனம் இறைவனிடத்தில் நாட்டம் கொண்டு
இறைவனைச் சரணடையும் பொழுது நாம் யாருக்கும் அஞ்சாமல் பிறருக்கு
உதவிசெய்து வாழலாம்.
'ஊடற்கு வருமிடர் நெடுஞ் சோங்குபரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக – நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதி மான்.' (நன்னெறி - 29)
என்ற இப்பாடலடிகளின் மூலம் இதனை அறியலாம்.
காலம் அறிந்து உதவுக
காலத்தினால் செய்த நன்றி சிறியதாக இருப்பினும் அது உலகத்துள் உள்ள
பொருள்கள் யாவற்றிலும் தலைசிறந்த மாண்பினைத்தரக் கூடியது என்கிறார்
வள்ளுவர். எமன் நம்மை அனுகி நம் இறுதிக் காலத்தைக் குறித்து நம்மை
அழைத்துச் செல்தற்கு முன்பாக நாம் பல நல் அறங்களைச் செய்திடல் வேண்டும்.
வெள்ளம் வருவதற்கு முன்பாக ஆற்றில் கரையைக் கட்டிப் பாதுகாப்புச்
செய்வது போல எமன் நம்மை அனுகுவதற்கு முன்பு நாம் அறம் செய்து நம்மைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதனை சிவப்பிரகாசர்,
'கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே – வெள்ளம் முன்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என் செய்வார் பேசு' (நன்னெறி -30 )
பிறர்துயரம் தாங்குக
உடம்பிலே தடியைக் கொண்டு அடிக்கும் பொழுது நம் கைகள் அதனைத் தானாகவே
தடுக்கின்றது. அதுபோல அறிவினை உடைய சான்றோர்கள் பிறருக்குத் துன்பம்
வருகின்ற பொழுது அத்துன்பத்தினைத் தனக்கு வரும் துன்பமாகக் கருதி அதனைத்
தடுக்க முன்வருவர். இதனைப்
'பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்!
மேய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேற்
கைசென்று தாக்குங் கடிது' (நன்னெறி -31 )
என்ற வரியின் மூலம் சான்றோர்களின் நற்பண்புகளை வகைப்படுது;திக்
காட்டியுள்ளார்.
மெய்யுணர்ந்து உதவுக
வலிமையான உயர்ந்த கதவு தாழ் இல்லை எனில் அதன் உறுதித் தன்மையை
இழந்துவிடும். வலிமையான கதவு இருக்கின்ற போதும் அதற்குத் தக்க
பாதுகாப்பாக இருப்பது அதன் தாழ்பாள்கள் ஆகும். நூல் பொருளையும்
அறக்கருத்துக்களையும் விதிநூல்களையும் கண்டு பகுத்தறியாத பண்பினை
உடையவர்கள் எவ்வளவு தானங்கள் செய்தாலும் அது உறுதியற்ற தன்மையை
உடைத்தாகக் கருதப்படும். அறங்களை உணராதவர்கள் உரிய வழியில் பிறருக்குத்
தருமங்களைச் செய்ய மாட்டார்கள். சான்றோரின் இச்செயலைப்
'பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்!
காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழொன் றிலதாயிற் றான்' (நன்னெறி -32 )
என்ற பாடலடிகளின் வாயிலாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தக்கார்கே உதவி செய்க
நமக்குப் பயன் தரக் கூடிய நெல் பயிறுக்கு மட்டுமே நீரை ஊற்றி வளர்த்து
வருவர். பயன் அற்ற களைப்பயிறான புல்லுக்கு நீரை ஊற்றுதால் நமக்கு
எவ்வகையிலும் பயன் தராது. அதுபோல சான்றோர்கள் யாருக்குப் பொருள்
கொடுத்து உதவ வேண்டுமோ அந்த மனிதர்களின் உண்மையான தேவையை அறிந்து பொருள்
கொடுத்து உதவுவர். தேவையற்றவர்களுக்கும் நன்றி கெட்டவர்களுக்கும்
சான்றோர்கள் ஒரு பொழுதும் பொருள் கொடுத்து உதவிடமாட்டார்கள்.
'தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்க்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கிறைப்பதே நீரன்றிக் காட்டு முளி
புல்லுக் கிறைப்பரோ போய்' (நன்னெறி - 36 )
என்ற பாடல் வரிகளின் வாயிலாகச் சான்றோர்களின் தலைசிறந்த பண்களை அறிந்து
கொள்ள முடிகின்றது.
நிறைவுரை:
தக்கோர்க்கு தக்க நேரத்தில் செய்வது உதவியாக அமைகின்றது. நமக்கு முன்பு
வாழ்ந்த சான்றோர்கள் தம் வாழ்வினைப் பொருள் உடையதாகவும் பிறருக்குப்
பயன்படும் வகையிலும் வாழ்ந்து வந்தனர் எனலாம். தம் வாழ்வினை அறவழியில்
அமைத்துக் கொண்டதன் காரணமாகப் பல அறங்களைக் கடைபிடித்தும்
வாழ்ந்துள்ளனர். பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாகக் கருதும்
பொழுது நம் உதவ முன்வருகின்றோம் என்பதனைப் பல பாடல்களில் எளிய
சான்றுகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். வாழ்வின் அனைத்தும்
நிலையில்லாத தன்மையை உடையது என்பதனை உணர்ந்து நம்மிடம் இருக்கும்
செல்வத்தின் தன்மையைக் கொண்டு உதவிடல் வேண்டும்.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|