காதல் கவிதைகள் வரிசையில் ஒரு புதுவரவு

பேராசிரியர் இரா.மோகன்


‘இவ்வுலகத் தலைமை இன்பம்’ எனக் காதலுக்குப் புகழாரம் சூட்டுவார் ‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியார். ‘காதல் அடைதல் உயிர் இயற்கை’ என்பது ‘பாவேந்தர்’ பாரதிதாசனின் மணிமொழி. ‘கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது – பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்’ என்பது ‘காவியத் தாயின் இளைய மகன்’ கண்ணதாசனின் வாக்கு. ‘காதல் என்பது தேன்கூடு, அதைக் கட்டுவது என்பது பெரும்பாடு’ என்பது திரைப்பாடல் ஆசிரியர் ஆலங்குடி சோமுவின் வைர வரி. ‘விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு’ என்பது கவிஞர் வைரமுத்துவின் காதல் கொள்கை. இங்ஙனம் ‘காதலைப் பாடாத கவிஞன் இல்லை; காதலைப் பாடாதான் கவிஞன் இல்லை’ என்னும் மேலோரின் மேற்கோளுக்கு இணங்க, காதல் உணர்வின் சீர்மையும் செவ்வியும் மென்மையும் மேன்மையும் குறித்துக் கவிஞர்கள் பலரும் பலவாறு போற்றிப் பாடியுள்ளனர். 2016-ஆம் ஆண்டில் ‘என் கவிதைக் குழந்தைகள்’ என்னும் தொகுப்பின் மூலம் கவிதை உலகில் அடியெடுத்து வைத்துள்ள பகலவனும் ‘இங்குக் காதலிக்கக் கற்பிக்கப்படும்’ என்னும் தலைப்பில் 2018-ஆம் ஆண்டில் ஒரு காதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

‘காதல் என்பது மனப்பாடம்’


“காதல் கவிதைகளைப்
படைக்கக் / கற்பிப்பதைப் போலக்

காதலிக்கவும் / கற்பிக்க முடியும்
காதல் கவிதைகளால் -”
(ப.7)

என்னும் நம்பிக்கையில் கவிஞர் பகலவன் படைத்துள்ள காதல் கவிதைகளின் தொகுப்பு ‘இங்குக் காதலிக்கக் கற்பிக்கப்படும்’ என்பது. கவிஞரின் கண்ணோட்டத்தில்,

“காதல் என்பது
மனம் சம்பந்தப்பட்ட / பாடம் என்பதால்,
அது / ஒரு மனப்பாடம்
எனலாம்”
(ப.8)

‘தினந்தினம் காதலர் தினம்’


பிப்ரவரி 14: காதலர் தினமாக உலகெங்கும் இளைய தலைமுறை-யினரால் கொண்டாடப் பெற்று வருகின்றது. பகலவனோ,

“தினந்தினம் / காதலர் தினம் தான் –
எங்களைப் போன்று
உண்மையாய்க் / காதலிப்போர்க்கு”
(ப.99)

எனப் பறைசாற்றுகிறார். கவிஞரின் கருத்தில், உண்மைக் காதல் என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே வந்து முடிந்து விடுவது அன்று; என்றென்றும் நிலைத்து நிற்பது. ‘பயிலியது கெழீஇய நட்பு’ என்னும் சங்க இலக்கியத் தொடர் இங்கே நினைவுகூரத் தக்கது.

மெல்லிய உணர்வுகளின் மீட்டல்


“மெல்லிய உணர்ச்சிகளை வீணையின் கம்பி போல மீட்டுகின்றன இவரது கவிதைகள்” [‘காதலைக் கற்பிக்கும் கவி(கள்)’, இங்குக் காதலிக்கக் கற்பிக்கப்படும், ப.6] என ராகவ். மகேஷ், பகலவனின் காதல் கவிதைகள் குறித்துக் கூறுவது மனங்கொளத்தக்கது. இக் கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த சில கவிதைகளை ஈண்டுக் காணலாம்.

கவிஞர் பகலவனின் கண்ணோட்டத்தில் ‘காதலி உலக அழகி’ அல்லவாம். பின் யார் தான் அவள் எனக் கேட்கிறீர்களா? இதோ கவிஞரின் ‘நச்’சென்ற மறுமொழி:

“‘அவள்’
உலக அழகி / அல்ல –
என் / அழகிய உலகம்”
(ப.42)

‘உலக அழகி’ என்பது அழகிய பெண் ஒருத்தியை மட்டுமே சுட்டும் அழகுத் தொடர்; ‘அழகிய உலகம்’ என்பதோ காதலின் பன்முகப் பரிமாணங்களைக் குறிக்கும் பண்புத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனாய்த் தித்திக்கிறதாம் கவிஞரின் நாக்கு. அதற்கான காரணத்தினைத் தமக்கே உரிய பாணியில் ஓர் அழகிய கவிதை வடிவில் கூறுகிறார் கவிஞர்:

“ஒவ்வொரு முறையும் / அவளது பெயரை
நான் / உச்சரிக்கும் போதெல்லாம்”
(ப.63)

‘செந்தமிழ் நாடு என்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என மொழிவார் பாரதியார். ‘ஒவ்வொரு முறையும் காதலியின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் கவிஞரின் நாக்கு தேனாய்த் தித்திக்கிறதாம்!’

காதலியின் நலம் பாராட்டலில் மிளிரும் தனித்தன்மை


காதலியின் நலம் பாராட்டுவதிலும் கவிஞர் பகலவனின் தனித்தன்மை சுடர் விட்டு நிற்கக் காண்கிறோம். நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு இதோ:

“அவள் இதழ்கள்
சிவப்பிதழ்கள் / மட்டுமல்ல
சிறப்பிதழ்களும் தான்”
(ப.89)

‘சிவப்பிதழ்கள்’, ‘சிறப்பிதழ்கள்’ – அருமையான சொல் விளையாட்டு; வீச்சு!

சிற்பம், சித்திரம் என்னும் அழகுக் கலைகளை ரசிப்பது போல, நேசிப்பது போல – ஒரு நல்ல காவியத்தை வாசிப்பது போல – ஆழ்ந்திருக்கும் அதன் கலை நயத்தினைச் சுவாசிப்பது போல – தனது காதலியையும் நெஞ்சார ரசிக்கிறாராம், நேசிக்கிறாராம், ஒருமை உணர்வுடன் வாசிக்கிறாராம், சுவாசிக்கிறாராம் கவிஞர்:

“என்னால்
ரசிக்கப்படும் சிற்பம் / நேசிக்கப்படும் சித்திரம்
வாசிக்கப்படும் காவியம் / சுவாசிக்கப்படும் கலைநயம் -
அவள்”
(ப.24)

என்னும் கவிஞரின் கூற்று இவ் வகையில் கருதத் தக்கதாகும்.

இதுவரை ‘தாய்மொழி வழிக்கல்வி’ கற்று வந்த கவிஞர், காதலி(யி)ன் வயப்பட்ட கணத்தில் இருந்து, ‘விழிமொழி வழிக்காதல்’ (ப.55) கற்று வருகின்றாராம்!

காதலுக்குத் தனி மரியாதை


‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மொழி. கவிஞர் பழநிபாரதியும் ‘மனதில் நின்ற காதலியே, மனைவியாக வரும் போது, சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரவாகும்’ எனப் பாடியுள்ளார். பகலவனோ கடவுள், காதல், வரம் என்னும் மூன்று சொற்களையும் ஒன்றிணைத்து நல்லதொரு கவிதை படைத்துள்ளார்:

“கடவுள் / எனக்குக் கொடுத்த / வரம் –
அவள்
அவள் / எனக்குக் கொடுத்த / வரம் -
காதல்”
(ப.51)

கவிஞர் இங்கே காதலிக்கும் காதலுக்கும் தந்திருக்கும் ஏற்றம் அவரது படைப்புத் திறத்தின் மணி மகுடம் ஆகும்.

வித்தியாசமான உவமையின் ஆட்சி


‘நம் நாட்டில் அரசியலில் மட்டும் தான் அரசியல் இல்லை’ என்பது அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஒரு பெருந்தகையோரின் புகழ் பெற்ற மேற்கோள். இதனை நினைவுபடுத்தும் வகையில் உவமை வடிவில் பகலவன் படைத்துள்ள ஒரு சுவையான காதல் கவிதை இது:

“என்னில் அவளும் / அவளில் நானும்
இருக்கிறோம் –
அரசியலில் விளையாட்டும் / விளையாட்டில் அரசியலும்
இருப்பது போல்”
(ப.67)

புதிய பார்வையில் காதலின் செவ்வி


‘தூணிலும் இருப்பான், துருப்பிலும் இருப்பான் இறைவன்’, ‘அரியும் சிவனும் ஒன்று’ என இறைவனைக் குறித்துக் காலங்காலமாக மக்கள் நாவில் பயின்று வரும் பழமொழிகளை,

“அவள் வீட்டிலும் இருப்பாள் / என் இருதயத்திலும் இருப்பாள்
என்னவள்”
(ப.18)

என்றும்,

“அவளும் / நானும் / ஒன்று”
(ப.100)

என்றும் தம் உள்ளங் கவர் காதலியைக் குறிக்கக் கவிஞர் பகலவன் புதுவதாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது சிறப்பு.

‘மலரினும் மெல்லிது காமம் (காதல்); சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்’ என்பது வள்ளுவம். இவ் வாய்மொழிக்கு இணங்க, காதலின் செவ்வி தலைப்பட்டுள்ள ஒரு சிலருள் கவிஞர் பகலவனும் அடக்கம் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்