உலகத்து இயற்கையையும் ஆடவர் உளவியலையும் நுட்பமாகச் சித்திரித்துள்ள பாலைக் கலிப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்


பாலைக் கவியின் 22-ஆம் பாடல்; தோழி கூற்றாக அமைந்தது; பெருங் கடுங்கோ இயற்றியது. ‘பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக்காட்டி, ஆற்றுவித்து உடம்பட்ட வாய்பாட்டால் மறுத்தது’ என்பது இப்பாடலின் துறை. தலைவன் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல இருப்பதை அறிந்த தோழி, அவனை அணுகிக் களவொழுக்கத்தின் போது நிகழ்ந்ததை எல்லாம் அவனுக்கு நினைவு படுத்துகிறாள். அக் காலத்தில் அவன் பிரிந்த போது, தலைவி மிகுந்த இளம்பருவத்தினள் ஆதலின், தான் ஆற்றுவித்தற்கு உடன்பட்டாள் என்றும், இப்பொழுது அவள் மங்கைப் பருவத்தினள் ஆதலின், உடன்பட மாட்டாள் என்றும் கூறித் தலைவன் பிரிந்து செல்வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றாள்.

ஆடவர் உளவியலும் உலக நடைமுறையும் சிறந்து விளங்கும் வண்ணம் பெருங்கடுங்கோ படைத்துள்ள அப் பாலைக் கலிப் பாடல் வருமாறு:

“தரவு
உண் கடன், வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுங்குங்கால் முகனும் வேறுஆகுதல்,
பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே; புலனுடை மாந்திர்!
தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன்உடை யார்மொழிக்கண் தாவார்; தாம் தம்நலம்
தாதுதேர் பறவையின் அருந்துஇறல் கொடுக்குங்கால்
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள்வேட்கை?

தாழிசை
நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த
செறிமுறை பாராட்டி னாய்;மற்று,எம் பல்லின்
பறிமுறை பாராட்டி னையோ? ஐய!
நெய்இடை நீவி, மணிஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டி னாய், மற்று, எம் கூந்தல்
செய்வினை பாராட்டி னையோ? ஐய!
குளன்அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
இளமுலை பாராட்டி னாய்;மற்று, எம் மார்பின்
தளர்முலை பாராட்டி னையோ? ஐய!
எனவாங்கு,
அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச்
சுடர்காய் சுரம்போகும் நும்மை,யாம் எங்கண்
படர்கூற நின்றதும் உண்டோ? தொடர்கூரத்
துவ்வாவை வந்தக் கடை”.

“அறிவுடைய அண்ணலே! ஒருவர் பொருள் படைத்தவரிடத்தில் சென்று, பணிவான மொழிகளைப் பேசிக் கடன் வாங்கும் போது இருக்கும் முகமும், அக்கடனைத் திரும்பத் தரும் போது அவருக்கு இருக்கும் முகமும் வேறுபட்டுக் காணப்படுவது என்பது இன்று புதியது அன்று; இவ்வுலகில் பண்டைக் காலத்திலும் நிலவிய இயல்புதான் அது.

அது போல, நீர் இரந்து நின்று தலைவியின் இளமை நலத்தை மலர் தோறும் மகரந்தத்தைத் தேடிச் சென்று உண்ணும் வண்டு போலச் சுவைத்து மகிழ்ந்து, இன்று பொருளின் மேல் ஆசை கொண்டு பிரியும் போது, ‘எம் நலனைத் திரும்பத் தாரும்’ என்று கேட்டால், கொடுக்காமல் கேட்டினைத் தருகின்றீர்; உமது இச் செயலினைக் குறித்து என் போன்ற அயலார் கூறுவதற்கு என்ன உள்ளது?

அது தவிர, ஒரு சிற்பி சிலை செய்த பொழுது, அதில் அமைத்த உணர்வு இறுதி வரை அதில் புலப்படும். அது போல, நற்பண்பு உடையோர் இறுதி வரை தாம் கொடுத்த வாக்கின் உண்மையைக் காப்பாற்றுவார். நீயோ, உனது உறுதிமொழியை மறந்து, பொருள் மேல் விருப்பம் கொண்டுள்ளாய். இது பற்றி அயலாராகிய யான் கூறும் செயல் பயன்படுமோ?

ஐய, பல் விழுந்து முளைத்த இளமைப் பருவத்தில் தலைவியின் அழகினைப் பாராட்டினாய். ஆனால், நறுமணம் மிக்க முல்லை அரும்பின் வரிசையைப் போலச் செறிவாகப் பல் வரிசை அமைந்து எழில் சேர்க்கும் மங்கைப் பருவத்தில் அவளைப் பாராட்டினாயோ? இல்லையே!

நீலமணி ஒளி வீசியது போல் திகழும் தலைவியின் கூந்தலில் எண்ணெய் தடவி, ஐந்து வகையினதாக அணி செய்யப் பெற்ற அழகினை முன்பு பாராட்டினாய். இப்பொழுது நீ அக் கூந்தலை அணி செய்து அழகு பாராட்டினாயோ? இல்லையே?

குளத்திற்கு அழகு சேர்க்கும் தாமரையின் இளம்மொட்டினைப் போல் விளங்கும் தலைவியின் இளமையான மார்பகத்தினை முன்பு பாராட்டினாய். இப்போது சிறிது தளர்ந்து தோன்றும் அதனைப் பாராட்டினாயோ? இல்லையே!

தங்கத் தகடு போன்ற தலைவியது மேனியின் தேமல் மறையும் படியாகப் பிரிந்து, வெயில் சுட்டெரிக்கும் பாலை வழியில் செல்ல இருக்கிறாய். எங்கள் தீவினை விளையும் காலம் இது. ஆதலின், உன்னுடன் தலைவிக்கு உள்ள பிணைப்பு வலிமை பெற வழி இல்லை. இந்நிலையில், அவளது வருத்தத்தைக் கூறி, உன்னைப் பிரிந்து செல்லாமல் தடுக்க முடியுமா? முடியாது. இருந்தும் யாம் கூறுவதால் என்ன பயன்?” என்பது தோழி தலைவனிடம் தெரிவிக்கும் மறுப்புரை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே ‘கடன் பட்டார் நெஞ்சத்தின்’ இயல்பினைத் தம் பாடலின் தொடக்கத்தில் உள்ளது உள்ளபடி சித்திரித்துக் காட்டியுள்ளார் பெருங்கடுங்கோ. இன்றும் நிலைமை அவ்வாறே தான் இருக்கக் காண்கிறோம். ‘உண்கடன்’ என்பதால் கடன் வாங்கி உண்ண வேண்டிய அவல நிலை அன்று நிலவியமை தெளிவாகின்றது. கடன் கேட்கும் போது எவ்வளவு தயவாக, நயந்து, கெஞ்சிக் கேட்கிறார்கள்! கை நீட்டி வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டால் வாங்கியவர்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது? அல்லது எவ்வளவு வருத்தம் உண்டாகிறது? இதில் என்ன வியப்பு என்றால், ‘பண்டும் இவ்வுலகத்து இயற்கை’ என்கிறார் பெருங்கடுங்கோ. ‘முகத்தை மாற வைத்துக் கொண்டு’ என்பது பேச்சு வழக்கு. இதைத் தான் பெருங்கடுங்கோ ‘முகம் வேறு ஆகுதல்’ எனக் குறிப்பிடுகின்றார். இங்ஙனம் மாறாத மனிதப் பண்புகளைக் காட்டுவதால் தான் சங்கப் பாடல்கள் இன்றளவும் படிப்பவர் நெஞ்சங்களை ஈர்த்து வருகின்றன.

இப் பாடலின் பிறிதொரு சிறப்புக் கூறு: கிட்டும் வரை ஒரு பொருளை விடாமல் முனைப்புடன் முயல்வதும், அப் பொருள் கிடைத்து அதனை அனுபவித்து முடிந்ததுமே அதனை விட்டு விலகி ‘பாராமுகமாய்’ இருப்பதும் ஆடவர்களின் பொதுவான மன இயல்புகள். ‘கிட்டாதாயின் வெட்டென மறவாமல்’ ஒருதலைக் காதல் கொண்டு அலைந்து திரிவதும் அல்லாடுவதும் ஆடவரின் இயல்புகளே.

களவுக் காலத்தில் இளமை அழகு ததும்பி நிற்கும் தலைவியின் பற்களையும், கூந்தலையும், மார்பையும் பலபடப் பாராட்டிய தலைவன், கற்புக் காலத்தில் அவற்றைச் செய்யவில்லை. களவுக் காலத்தில் தலைவியிடம் சென்று, இரந்து நின்ற தலைவனின் முகக் குறிப்பு வேறு; கற்புக் காலத்தில் பொருள் வேட்கை மிக்க மனநிலையில் அவன் காட்டுகின்ற முகக் குறிப்பு வேறு. இரு வேறான இவ்வுளவியல் பான்மைகளைப் பெருங்கடுங்கோ தம் பாலைக் கலிப் பாடலில் மிக நுட்பமாகக் காட்டி இருப்பது போற்றத் தக்கது.
 

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்