திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 22)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
இன்றைய
தலைமுறையினர் பெரும்பாலும் சங்க இலக்கியம் என்றாலும் சரி நவீன இலக்கியம்
என்றாலும் சரி, ஆழ்ந்து கற்பதுவும் இல்லை இரசிப்பதுவும் இல்லையென்றே
துணியலாம். இதனை நன்கு உணர்ந்ததனாலேயே நம் சமகாலக் கவிஞர்களும் தற்காலப்
பாடலாசிரியர்களும் இலக்கிய நயங்களை தத்தம் பாடல்களில் மெல்லப்
புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
திரைப்பாடல்கள் செவிக்கும் மனதுக்கும் விருந்தாய் அமைவதால்
அப்பாடல்களுக்கு அடிப்படையான இலக்கியத் தொடர்களை நூல்கள் வாயிலாக
எடுத்துக் காட்டினால் இலக்கிய ஆர்வலர்கள் பயனடைவர் என்ற நோக்கில் தான்
கவிஞர்கள் பாடல்கள் புனைகின்றனர்.
ஆறு மனமே ஆறு:
ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓரறிவு முதல்
ஆறறிவு வரை இப்படிப் பட்டியலிடுகிறது.
ஒன்றறிவதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறி ப்படுத்தினரே!
தொல்: மரபியல்.
தொடு உணர்வு மட்டும் இருந்தால் அது ஓரறிவு உயிர் என்று அழைக்கப்படும்.
சுவை உணர்வும்கூட இருந்தால் அவை ஈரறிவு உயிர் எனப்படும். மணத்தை
உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் உடன் இருந்தால் அவை மூவறிவு உயிர் எனப்படும்.
அவற்றுடன் கண்களால் பார்க்கவும் முடிந்தால் அவை நான்கறிவு உயிர்
எனப்படும்; காதுகளால் கேட்கவும் முடிந்தால் அவை ஐந்தறிவு உயிராகும்;
அனைத்துப் புலன்களின் ஆற்றலுடன் அரிதாய் அமையும் மனமும் இருந்துவிட்டால்
அவை ஆறறிவு உயிர் போற்றப்படும் என்று, உயிர்க் கொள்கையை வகுத்து
வழிகாட்டியிருக்கிறார் தொல்காப்பியர்.
மனம் கொண்டவனே மனிதனாவான். அதிலும் நல்லது தீயது என்று பகுத்தறியும்
பண்பட்ட மனத்தைப் பெற்றவனே முழு மனிதனாவான். இத்தகைய பண்பட்ட மனிதனை
உருவாக்குவதில் கவிஞர்கள் தம் பாடல் வரிகளில் பண் பாடினர்.
தொல்காப்பியர் ஆறு உயிர்கள் பற்றி வகுத்த இலக்கணத்தின் அடிப்படையில்
இலக்கியம் படைத்தார் கவியரசர்; ஆறு கட்டளைகளைச் சொல்லி, மனஅமைதி பெற வழி
காட்டுகிறார். ஆண்டவன் கட்டளை படத்தில்
ஆறு மனமே ஆறு என்ற பாடல் வரிகளில் ...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி.
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்-நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்.
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.
இந்த ஆறு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும். அந்த மனமே
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் என்று அறிவுறுத்துகிறார்.
எட்டடுக்கு மாளிகை:
கவிஞர் பாதகாணிக்கை என்ற படத்தில்
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்
விட்டுவிட்டுச் சென்றானடி – இன்று
வேறுபட்டு நின்றானடி. என்றொரு பாடல் எழுதினார்.
இப்படத்தின் இயக்குநர் ஜி.என் வேலுமணி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி,
கவியரசர் ஆகியோர் ப்ரிவியு தியேட்டரில் இப் படத்தைப் பார்த்துக்
கொண்டிருந்த போது,”கவிஞரே, நாயகி சோகமாகப் பாடும்போது
எட்டடுக்கு மாளிகை என்று எழுதியுள்ளீர்களே,
இது சரியா? என்று வேலுமணி கேட்டாராம். உடனே கண்ணதாசன் ,எட்டடுக்கு
மாளிகை என்பது தலைவனின் உருவம்,அவன் இதயத்தில் என்னை ஏற்றி வைத்தான்
என்ற பொருளில் தான் எழுதியிருக்கிறேன் என்றாராம்.
சேரனுக்கு உறவு:
மக்கள் திலகத்துக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நிலவிய உறவு
விசித்திரமானது.கண்ணதாசன் கவிதைகளில், பாடல்களில் எம் ஜி .ஆருக்கு
என்றுமே ஒரு ஈர்ப்பு உண்டு. எனினும் சில சமயங்களில் பகைமை பாராட்டச்
செய்த சம்பவங்களும் உண்டு.
பணத்தோட்டம் படத்தில் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதினார்.படப்பிடிப்பு
முழுமையாகாத நிலையில் ஒரே ஒரு காதல் காட்சி படமாக்க வேண்டிய சூழ்நிலை.
அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். குறித்து கண்ணதாசனின் பேச்சு மக்கள்
திலகத்தின் வெறுப்புக்கு ஆளானது. இனி கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு
நடிப்பதில்லை என்று முடிவெடுக்கிறார்.
இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று எல்லோரும் அவரை
வற்புறுத்தியும் பிடிவாதமாக மறுத்துவிடுகிறார். பின்னர்,தென்னகம்
பத்திரிகை சார்பில் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த சீனிவாசமூர்த்தி
என்பவரின் ஆலோசனையின் பேரில் இப்பாடலுக்கு நடிக்க இசைந்தாராம். அப்படி
என்ன ஆலோசனை சொல்லியிருப்பார்?
அண்ணே! உங்க வரலாற்றைக் கவிஞர் ஒரு வரியிலேயே
சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்-க்கு ஒன்றும் புரியவில்லை; காதல்
பாடலில் எப்படி என் வரலாற்றைச் சொல்லியிருக்க முடியும் என்று திகைத்தார்.
பேசுவது கிளியா
பெண்ணரசி மொழியா ?
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா ?
இந்த வார்த்தைகளில் மலையாள நாடு தந்த மக்கள் திலகத்தைத் தமிழ்நாட்டில்
மக்கள் நிலவுபோல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கவிஞர்
எழுதியிருக்கிறார் என்ற உண்மையைச் சொன்னபிறகே கண்ணதாசன் மீதிருந்த கோபம்
தணிந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்.
கண்ணதாசன் தமிழை மக்கள் திலகம் மெச்சிப் புகழ்ந்து ஒப்புக்கொண்ட பாடல்
இது!
தமிழ் ஓடை:
சாகாவரம் பெற்ற பாடல்கள்
நோகாமல் பெற்றெடுப்பான் நொடிகளில்.
வண்ணம் பூசி தூது போயின மேகங்கள்.
எண்ணம் உருகி சூல் கொண்டன தேகங்கள..
கவிதைச் சுவை ஆல மரமாகிவிட
விதைகள் விழுதுகளாகி ஊஞ்சலாடின.
மெல்ல கோலமிட்டான் சுவையாக
வெல்ல யாருமில்லை எழுந்தான் வீரனாக.
வெள்ளமாக ப் பெருகும் தமிழ் ஓடை
கள்ளமற்ற கண்ணதாசனின் வீரநடை.
அருவியெனப் பொங்கி வரும் கவிதைகளையும் பாடல்களையும், இரசிகப்
பெருமக்களின் எண்ண ஓடைகளில் இதமாக ஓடவிட்டவரல்லவா அவர்? மேற்காணும்
அவரைப் பற்றிய புகழ்மொழிகளை விடுத்தவர் யாரென அறியமுடியவில்லை எனினும்,
சாகாவரம் பெற்ற பாடல்களின் சொந்தக்காரன் அல்லவா அவர்?
பாலும் பழமும் படத்தில்,
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.
இல்லறம் நல்லறமாக வேண்டுமாயின் கணவன் எண்ணுவதை மனைவி உணரவேண்டும்,
மனைவியின் முகக்குறிப்பிலேயே நாயகன் அவளின் உள்ளக்கிடக்கையை உணரவேண்டும்.
இதனை சங்க இலக்கியம்,
ஒன்றன் கூறாடை உடுப்பினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்று போற்றுகிறது.
தனக்கென வாழாது,கணவனுக்கும் பிள்ளகளுக்குமாகவே வாழும் பெண் தெய்வங்களைக்
கொண்டாடும் பாடலிது.
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்.
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்.
பாலும் பழமும் படத்தின் காட்சிக்கும் கருத்துக்கும் ஏற்ற பாடல்.
கண்ணிழந்த நாயகனைத் தேற்றும் வண்ணம் இன்று முதல் என் கண் வழியே இந்த
உலகத்தைப் பார்! நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் என்று கூறும்
நாயகியின் மனோபாவத்தை, இருமனமும் இணைந்து எப்படி வாழ வேண்டும் என்று
வேத மந்திரங்களின் சாரமாய் இந்த பாடலைத் தந்தார்.
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|