-
இராமாயண காலத்தில் போரின்
போது இலட்சுமணன் போர்க்களத்தில் நாகஸ்திரத்தால் கட்டுண்டு மயங்கிக்
கிடந்தான். அப்பொழுது அனுமன் இலட்சுமணனை உயிர்ப்பிக்கச் செஞ்சி
வந்து சஞ்சீவி மூலிகையை எடுத்துவந்ததாக இப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.
அக்காலத்தில் சஞ்சீவி மலை என்று பெயர்
பெற்று நாளடைவில் சஞ்சீவி என்னும் சொல் சிதைந்து செஞ்சி என்றாயிற்று
எனவும் குறிப்பிடுகின்றனர்.
-
மற்றும் சிலர் அனுமன்
இலட்சுமணனை உயிர்ப்பிக்கச் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற பொழுது
அம்மலையில் இருந்து சிதறிய ஓரு பகுதியே அக்காலத்தில் சஞ்சீவிமலை
என்று பெயர் பெற்றுப் பின்பு செஞ்சி என்றாயிற்று எனவும் இரு
வேறுபட்ட தகவல்களைக் காரணப்பெயராகக் கூறுகின்றனர்.
-
செஞ்சிக்கோட்டையின் காவல்
தெய்வமாக விளங்கும் சஞ்சீவிராயன்
பெயராலும் இவ்வூர் செஞ்சி என்றழைக்கப்பட்டது என்கின்றனர்.
-
செஞ்சிக்கோட்டையில் உள்ள
ஏழு கன்னித் தெய்வங்களுள் மூத்த கன்னியம்மனான
செஞ்சியம்மன் பெயராலேயே செஞ்சி என
இவ்வூர் அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
-
சிரஞ்சி(சிரஞ்சிவி)
என்னும் சொல்தான் பிற்காலத்தில் செஞ்சியாயிற்று. இம்மலையில் இன்றும்
பல மூலிகைச்செடிகள் உள்ளன. அவற்றுள் தலைசிறந்த விஷமுறிவு மூலிகையாக
விளங்கும் சிறியாநங்கை என்னும் மூலிகைச் செடி இன்றும் இம்மலையில்
உள்ளது. இதன் அடிப்படையில் நோக்கும் பொழுது செஞ்சி என்ற பெயர்
சஞ்சீவி என்னும் சொல்லின் அடிப்படையில் பிறந்திருக்கலாம் என்பதனை
உணரமுடிகின்றது.
-
தொல்லியல் ஆய்வாளரான ஆர்.
மணி அவர்கள் 'செஞ்சியில் கோன்வம்சத்து ஆட்சி கி;.பி.1190 முதல்
1330 வரை நடைபெற்றதாகக் கூறுவர். இப்பகுதியில் ஜஞ்ஜயக்கோன் என்பவரே
முதலில் ஆட்சி செய்தார் எனவும் அவர் பெயராலேயே ஜெஞ்சி என்று அழைத்து
வந்த இவ்வூர் பின்பு செஞ்சி என்றாயிற்று என்கிறார்'
-
செஞ்சிக்குக் கிழக்கே
உள்ள ஆனாங்கூரில் கி.பி. 871 -907 ஆம் ஆண்டில் கிடைத்த முதலாம்
ஆதித்த சோழனின் கல்வெட்டில் இவ்வூர் சிங்கபுரநாடு என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சிங்கபுர நாடு என ஒரு நாடு முன்பு
இருந்ததனை அறியலாம். அதன் அடியொற்றியே இவ்வூர் செஞ்சி எனப் பெயர்
பெற்றது எனக் கல்வெட்டு ஆய்வாளர்களான முனைவர் கலைக்கோவன் அவர்களும்
அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடனகாசிநாதன் ஆகியோர் உறுதி
செய்துள்ளனர்.
-
ஆனால் வரலாற்றுச்
சான்றுகளின் அடிப்படையில் நோக்கும் பொழுது கோன் வம்சத்து
முதல்மன்னன் ஆனந்தக்கோன் பெயராலே
இப்பெயர் பெற்று இருக்கலாம் எனக் கூறலாம்.
-
செஞ்சியின் ஆதிப்பெயர்
செங்கிரி அதாவது
சிவப்புமலை ஆகும். செங்கிரி என்பதே
செஞ்சியாய் திரிந்துவிட்டது என்கிறார் விட்டல்ராவ் அவர்கள்(தமிழகக்
கோட்டைகள் - ப143)
-
செஞ்சிக்கு அருகில் உள்ள
கல்வெட்டுச் சான்றுகளின் வாயிலாக சிங்கபுரநாடு எனப் பெயர் பெற்ற
இவ்வூர் பின்பு செஞ்சிநாடு எனப்பெயர் பெற்றதாகக் கல்வெட்டு
ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
-
கி.பி.14 ஆம் நூற்றாண்டில்
கிருஷ்ணபுரம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. செஞ்சியை ஆண்ட
கிருஷ்ணப்ப நாயக்க மன்னின் பெயரைக் கொண்டே
கிருஷ்ணபுரம் என இவ்வூர் அழைக்கப்பட்டுயிருக்கலாம் என்ற
கருத்தும் நிலவி வருகிறது.
-
செஞ்சியின் மற்றொரு
பண்டைய பெயர் கிருஷ்ணபுரம் என்பதாகும். இதன் காரணத்தை நோக்கும்
பொழுது செஞ்சியை ஆண்ட குறும்பர்களின் குலதெய்வம் கிருஷ்ணபகவான்
ஆகையால் கிருஷ்ணபுரம் என இவ்வூர் பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார்
விட்டல்ராவ் அவர்கள்.
-
குறும்பர்கள் செஞ்சியைக்
குறும்பபூமி என்றழைத்து வந்துள்ளனர்.
-
செஞ்சிக்கோட்டையைக்
கி.பி.1660 இல் கைப்பற்றிய பிஜப்பூர்
சுல்தானின் நவாப்புகள் 1677 வரை ஆட்சி செய்தனர். இவர்கள்
காலத்தில் செஞ்சியை பாதுஷாபாத்
என்றழைத்துவந்துள்ளனர்.
-
கி.பி.1677 இல் செஞ்சியைக்
கைப்பற்றிய சத்திரபதி சிவாஜியின் மராட்டியத்
தலைவர்கள் இவ்வூரைச் சிந்தரி
என்றும் சிண்டி எனவும் அழைத்துள்ளனர்.
-
கி.பி.1698 இல் செஞ்சியைக்
கைப்பற்றிய முகலாயர்கள் செஞ்சியை
நஸ்ரத்கத்தா என அழைத்துள்ளனர்.
செஞ்சியை நவாப்ஜில்பிகர்கான் நஸ்ரத்ஜங் என்ற படைத்தலைவன் பெயரால்
அழைத்துள்ளனர்.
-
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் செஞ்சியை
ஜிஞ்ஜி என்றும்
ஜிஞ்சே எனவும் அழைத்துள்ளனர்.(தமிழக
ஊர்களின் பெயர்க்காரணமும் சிறப்பும் -ப.20)
-
மலை
உச்சியைக் குறிக்கும் சிருங்கி
என்ற சொல் மருவி செஞ்சி எனப் பெயர்பெற்றதாகவும்
கூறுவர்.(இந்திய சரித்திரக்களஞ்சியம் -ப.76)
-
மதில் உள்ள நகர்கள்
பெரும்பாலும் கோட்டை,புரி,
புரிசை,எயில்,கடகம் என்னும் சொற்களுள் ஓன்றைப் பெயராகவோ
பெயர் இருதியில் பெற்றிருக்கும் என்ற ஞா. தேவநேயனின் கருத்தும்
சிந்திப்பதற்குரியதாகும்.
-
மதில்கள் பல உள்ள
செஞ்சிக்கு செஞ்கிக்கோட்டை என இதன் அடிப்படையில் பெயர்
வழங்கியிருக்கலாம்.
-
செஞ்சியின் சிறப்பைக்
கண்டு வியப்புற்ற ஐரோப்பிய அறிஞர்கள் இந்நகரைக்
கீழ்நாட்டு டிராய் எனப்
புகழ்ந்துள்ளனர்.