தந்தையை இழந்து நின்ற பெண் மக்களின் அவல நிலை
பேராசிரியர் இரா.மோகன்
சங்கச் சான்றோர்களுள் தலைசான்றவர்
கபிலர். யாரையும் விடப் பாடல் எண்ணிக்கை மிகுதியாகப் பாடியவர் என்பது
இவரது தனித்தன்மை. இவர் பாடியனவாகச் சங்க இலக்கியத்தில் 235 பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்பதால்
‘குறிஞ்சிக் கபிலர்’ என்னும் சிறப்புப் பெயர் இவருக்கு வாய்த்தது.
‘கபில பரணர்’ என்னும் தொடர் சங்க கால இரட்டையர்கள் இவர்கள் என்பதை
உணர்த்தும். ‘பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர்’ (அகநானூறு, 78) என
நக்கீரராலும், ‘செறுத்த செய்யுள் செய் செந்நா உடைய கபிலன்’ (புறநானூறு,
53) என இளங்கீரனாராலும், ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ (புறநானூறு, 126)
என நப்பசலையாராலும் உளமாரப் பாராட்டப் பெற்ற சான்றாண்மைக்கு உரியவர்
கபிலர். புரவலர் பலரைப் பாடிய பெருமையோடு, புலவர் பலரால் பாடப் பெற்ற
பெருமையும் உடையவர் கபிலர் என்பது குறிப்பிடத்தக்கது. மூதறிஞர்
வ.சுப.மாணிக்கனார் குறிப்பிடுவது போல், “இவர்தம் ஓங்குயர் சிறப்புக்குப்
பாடும் வன்மை ஒரு காரணம். பாரியின் உயிர்த் தோழமையும் ஒரு காரணம்” (தமிழ்க்
காதல், ப.306) எனலாம். பாரியோடு கொண்டிருந்த உணர்ச்சி ஒத்த நட்பும்,
பாரி மகளிரை மணம்முடிப்பதற்காக இவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சிகளும்
புலவர் இனத்திற்குத் தனிப்புகழ் சேர்ப்பனவாகும். பாரி மகளிரை மணம்
முடிப்பதற்காகக் கபிலர் பாடியனவாகப் புறநானூற்றில் மூன்று பாடல்கள்
(200-202) இடம்பெற்றுள்ளன.
புறநானூற்றின் 200-ஆம் பாடல் ‘பாரி மகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டு
சென்ற கபிலர் பாடியது’. பாரி இறந்த பிறகு கபிலர், பாரியின் மகளிர்
இருவரையும் தகுந்த அரசர்க்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். அவர்
பாரியின் மகளிரோடு விச்சிக்கோனைக் கண்டு அவனிடம், “விச்சிக்கோவே! பூவைத்
தலையில் வைத்ததைப் போல் உள்ள முல்லைக் கொடி ஒன்று படர்வதற்குக்
கொழுகொம்பு இன்றி வாடி இருந்ததைக் கண்ட பாரி, அம் முல்லைக் கொடி நாவில்
தழும்பு ஏறும்படி தன்னைப் புகழ்ந்து பாடாது என்பதை அறிந்திருந்தும், அக்
கொடி படர்வதற்கு ஒலிக்கும் மணிகள் பொருந்திய தனது நெடிய தேரைக்
கொழுகொம்பாகக் கொடுத்தான். இவர்கள் அத்தகைய பரந்த புகழும் பெருமையும்
உடைய பாரியின் மகளிர்; யான், பாடிப் பரிசில் பெறும் புலவன்; அந்தணன்.
நீயோ, பகைவரது போர் செய்யும் முறைகளை நன்கு அறிந்து வாளால் மேம்பட்டவன்.
ஆதலால், உனக்கு யான் இவர்களை மணமகளிராகத் தருகிறேன். நீ இவர்களை ஏற்றுக்
கொள்வாயாக! அடங்காத அரசர்களைச் சினத்தோடு போர் புரிந்து அடக்கும்,
குறையாத விளைவுடைய வளமான நாட்டினை உரிமையாக உடையவனே!” எனத் தமது
வேண்டுகோளை வெளிப்படுத்தினார். கபிலரின் இவ் வேண்டுகோளைத் தன்னகத்தே
கொண்ட புறப்பாடல் அடிகள் வருமாறு:
“ . . . . . . விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
இறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
நினைக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடுகிழ வோயே!” (200)
விச்சிக்கோ கபிலரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அடுத்த
முயற்சியாகக் கபிலர் பாரி மகளிரை இருங்கோவேள் இடத்து அழைத்துச் சென்றார்;
அவனிடம் தமது எண்ணத்தினை வெளிப்படுத்தினார்:
“‘இவர்கள் யார்?’ என்று கேட்பாய் ஆயின், இவர்கள் தன்னுடைய ஊர்களை
எல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைக் கொடிக்குத் தன்
தேரையும் வழங்கியதால் பெற்ற நிலைத்த புகழையும், மணிகள் ஒலிக்கும்
யானைகளையும் உடைய பறம்பு மலையின் தலைவனும் ஆகிய, உயர்ந்த பெருமை கொண்ட
பாரியின் மகளிர். யான், இவர்களின் தந்தையான பாரியின் தோழன்; ஆகவே,
இவர்கள் எனக்கு மகளிர் போன்றவர்கள். யான் ஓர் அந்தணன்; மற்றும் ஒரு
புலவன். யான் இவர்களை அழைத்து வந்தேன். பெருமை மிக்க இருங்கோவேளே!
வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும்
உடைய நாட்டுக்கு உரியவனே! யான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை
ஏற்றுக்கொள்” என வேண்டுகோள் விடுத்தார்.
“இவர்யார் என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே . . . . . . . . .
. . . . . . . . . வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே.” (201)
பாரி மகளிரை மணந்து கொள்ளுமாறு கபிலர் விடுத்த வேண்டுகோளுக்கு
இருங்கோவேளும் இசையவில்லை. அதனால் சினமும் வருத்தமும் ஒருங்கே கொண்ட
கபிலர், ‘வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று சீரிய புகழ்
பொருந்திய இரண்டு ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்து விட்டன. உன்
முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்தான். அதன்
விளைவுதான் அவ்வூர்களின் அழிவு. சிறப்பாகச் செய்யப்பட்ட தேரை உடைய
தலைவனே! நான் ‘இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சேர்ந்தவர்கள்;
வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்’ என இவர்களின் சிறப்பை எடுத்துக்கூறி,
இவர்களை மணந்து கொள்ளுமாறு உன்னை வேண்டினேன். இவ்வாறு சொல்லிய என்
தெளிவில்லாச் சொற்களைப் பொறுத்துக் கொள்வாயாக! பெருமானே! நான் உன்னை
விடுத்துச் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தி
விடைபெற்றார்.
“நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே, இயல்தேர் அண்ணல்!
‘எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
கைவண் பாரி மகளிர்’ என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர் வேலே!” (202)
“இப் பாடலில், கபிலர் ‘வெலீஇயர் நின் வேல்’ என்று கூறுவது தொல்காப்பியம்
கூறும் குறிப்பு மொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு… வாழ்த்துவது போல்
இருந்தாலும், அது ‘கெடுக உன் வேல்’ என்று எதிர்மறைப் பொருளில்
கூறப்பட்டதாகத் தோன்றுகிறது” (புறநானூறு: மூலமும் எளிய உரையும், பகுதி
2, ப.40) என இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில்
தெரிவிக்கின்றார் முனைவர் இர.பிரபாகரன்.
இம் மூன்று பாடல்களையும் படித்து முடித்ததும் நம் உள்ளத்தில் தோன்றும்
எண்ணம் இதுதான்: தந்தை பாரியோ வீரத்திலும் கொடைப் பண்பிலும் சிறந்து
விளங்கியவர்; ‘முல்லைக் கொடிக்குத் தனது தேரினை ஈந்த வள்ளல்’ எனப்
பெயரும் புகழும் பெற்றவர். அவரது பெண் மக்களோ பாடல் இயற்றும் அளவிற்கு
அறிவும் ஆற்றலும் ஒருங்கே கொண்டவர்கள். அவர்களை அழைத்துச் சென்றதோ
சங்கப் புலவருள் தலைசான்ற கபிலர் பெருமான். இவ்வளவு சிறப்புக்கள்
இருந்தாலும், விச்சிக்கோவும் இருங்கோவேளும் பாரி மகளிரை ஏற்றுக்
கொள்ளாதது ஏன் என விளங்கவில்லை. ஒருவேளை இருவரும் மூவேந்தரிடத்துக்
கொண்ட அச்சத்தால் பாரியின் மகளிர் என்பதால் இவர்களை ஏற்றுக்கொள்ள
உடன்படாமல் போய் இருக்கலாம். எவ்வாறு ஆயினும் தந்தையை இழந்து நிற்கும்
பெண் மக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் மட்டுமன்றி, இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலும் எத்தகைய மதிப்பும் மரியாதையும்
வரவேற்பும் இருந்தன என்பதையே இம் மூன்று புறநானூற்றுப் பாடல்களும்
தெள்ளிதின் உணர்த்தி நிற்கின்றன.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|