எம்.ஜி.ஆர் படப்பாடல்கள்
காட்டும் புது வாழ்வு
முனைவர் செ.இராஜேஸ்வரி
தொடக்கத்தில் திராவிட
முன்னேற்ற கட்சியில் இருந்து அதனுடைய குரலாகவும் தமிழரின் பண்பாட்டு
அம்சமாக விளங்கிய எம்ஜிஆர் தனது படங்களில் அக்கட்சியின் ஆட்சி வந்தால்
தமிழகம் சுபிட்சமாக விளங்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய படங்களில் காட்சிகளையும்
பாடல்களையும் அமைத்தார். மேலும் எம் ஜி ஆர் பண்பாட்டுச் சிறப்பு மிக்க
தமிழனின் பண்பட்ட வாழ்க்கை பழக்கவழக்கம் போன்றவற்றின் அடையாளமாக தமிழ்ப்
பாரம்பரியச் சின்னமாக இலட்சியத் தமிழரின் உருவமாக தன்னுடைய
கதாபாத்திரங்களை அமைத்து கொண்டார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
என்று பாரதிதாசன் பாடிய வரிகள் உண்மையாக இருந்த காலத்தில் வர்க்க பேதம்
சாதிபேதம் ஆகியவற்றிலிருந்து ஏழை எளிய மனிதர்களை விடுவித்து ஒளிமிக்க
நல்வாழ்வு அவர்களுக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையில் ஊட்டியவை
எம்ஜிஆரின் படங்களும் பாடல்களும் ஆகும்.
காவல் தெய்வம் எம் ஜி ஆர்
எம்ஜிஆர் படம் பார்த்த மக்களுக்கு படம் பார்க்கும் நேரத்திலும்
பார்த்துவிட்டு வந்த பிறகும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் நம்பிக்கையும்
புத்துணர்ச்சியும் ஏற்பட்டது. எம் ஜி ஆர் படங்களைப் பார்க்கும்போது
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை ஏழைகளை இறைவன் கைவிட மாட்டான் போன்ற
நம்பிக்கைகளை ஊட்டி வந்த தெய்வக் கதைகளைக் கேட்டது போன்ற ஒரு உணர்வு
ஏற்பட்டது.
தெய்வம் நமக்குத் துணையடி பாப்பா - ஒரு
தீங்கு வரமாட்டாது பாப்பா
என்ற பாரதியாரின் பாடல் வரிகளைப் படிக்காத மக்கள் மனதிலும் எம் ஜி ஆர்
நமக்கு துணை, அவர் நம்மோடு இருந்தால் ஒரு தீங்கும் வராது என்ற எண்ணத்தை
உண்டாக்கி விட்டது. அவர் ஒரு காவல் தெய்வமாக் மக்களால் கருதப்பட்டார்.
அனைத்து கடவுளரையும் வணங்கி வந்த போதும் விரக்தியும் வேதனையும் மட்டுமே
கண்டு வந்த மக்களுக்கு கண்காணாத தெய்வத்துக்கு பதிலாக எம்ஜிஆர்
அவர்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் தோன்றினார். இந்நம்பிக்கை நாடோடி மன்னன்
படத்தில் அவர் பேசிய ‘என்னை நம்பாமல் கெட்டவர் நிறைய உண்டு நம்பி
கெட்டவர் என்று வரை இல்லை
என்ற வசனத்தால் மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து அவரை நம்பிக்கை
நட்சத்திரமாக உயர்த்தி விட்டது’
இரட்சகர் எம் ஜி ஆர்
எம்ஜிஆர் படங்களைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வில் புதிய எதிர்காலம்
உண்டு; புது வாழ்வு பிறக்கும்; புதிய சமுதாயம் மலரும்; இன்று இருக்கும்
இன்னல்கள் தீரும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது. அவரது ஆட்சியில் இவை
அனைத்தும் உண்மையாயிற்று. அனைத்துக் குழந்தைகளும் சத்துணவும்
கல்வியறிவும் தொழிலறிவும் பெற்று வேலை வாய்ப்புப் பெற்றனர். இந்தியாவின்
ஆரோக்கியம் மிக்க மாநிலமாக தமிழகம் உயர்ந்தது. உயர் கல்வியில் முதலிடம்
பெற்றது. எனவே எம் ஜி ஆர் இன்று மக்கள் மனதில் தெய்வமாக
உயர்ந்துவிட்டார். அவருக்கு திருநின்றவூரில் கோயில் கட்டி கும்பாபிஷேகம்
செய்து வழிபட்டு வருகின்றனர்.
எம் ஜி ஆர் இறந்த நாளில் இருந்து பிறந்த நாள் வரை [டிசம்பர் 24 முதல்
ஜனவரி 17 வரை] விரதம் இருந்து இருமுடி கட்டி பாத யாத்திரை
மேற்கொள்கின்றனர். எம் ஜி ஆர் சாமிக்கு நேர்ந்து கொண்டு கடன் தொல்லையில்
இருந்து விடுபட்டதாகவும் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை பிறந்ததாகவும்
எம் ஜி ஆர் பக்தர்களிடையே இந்த கோயிலைப் பற்றிய நம்பிக்கை பரவி வருகிறது.
கோயிலில்உற்சவர் திரு உலா போன்றவையும் வாரந்தோறும் நடைபெறுகிறது.
ஊர்மக்கள் திரு உலா வரும் உற்சவருக்கு தமது வீட்டு வாசலில் தேங்காய்
பழம் வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.
புதிய வானம் புதிய பூமி
புதிய வானம் புதிய பூமி என்பது கிறித்தவத் திருமறையில் உள்ள ஒரு
கருத்தாக்கம் ஆகும். இந்த உலகத்தின் இறுதி நாள் அதாவது நியாயத் தீர்ப்பு
நாளன்று நல்லவர்களையும் கெட்டவர்களையும் தனித்தனியாக நிறுத்தி
நல்லவர்களை மோட்சத்திற்கும் கெட்டவர்களை நரகத்துக்கும் அனுப்பிய பிறகு
தூக்கம் மரணம் எல்லாம் ஓய்ந்து புதிய வானம் புதிய பூமி உண்டாகும் என்று
திருமறையில் ஏசாயா, 2 பேதுரு, வெளிப்படுத்தல் விசேஷம் போன்ற
அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புதிய பூமி இரட்சிக்கப்பட்ட
மனிதர்கள் வாழும் பூமியாக இருக்கும். 2.பேதுரு 3. 13 இல் ‘அவருடைய
வாக்குத் தத்தத்தின் படியே நீதி வாசமாய் இருக்கும்; புதிய வானமும்
புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்’
என்ற வசனம் நியாயத் தீர்ப்புக்குப் பின்பு உலகில் இரட்சிக்கப்பட்டவர்கள்
மட்டுமே வாழ்கின்ற புதிய பூமி உண்டாகும் எனத் தெரிவிக்கிறது.
இக்கருத்தாக்கம் பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டில் உள்ள
வெளிப்படுத்துதல் எனப்படும் கடைசி அதிகாரம் வரை இணைக்கின்ற ஒரு
ஊடிழையாக இருக்கிறது.
புதிய பூமி என்பது புதிய வாழ்க்கை
எம் ஜி ஆர் இக்கருத்தை இன்னொரு வகையில் தனது படங்கள் மற்றும் பாடல்கள்
மூலமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்களுக்கு புது வாழ்வு பிறக்கும்;
ஜாதி மத பேதங்கலால் உண்டான இன்னல்களும் துயரங்களும் மறையும்’ பகுத்தறிவு
பகலவன் உதிப்பான்; அறிவு சார்ந்த நல்லுலகம் தோன்றும்; நீதியும்
நேர்மையும் நல்லாட்சி புரியும் என்று ஒரு புதிய பூமியின் வருகையை அவரது
பாடல்களும் படங்களும் தீர்க்கதரிசனமாக உரைத்தன. அவர் நடித்த புதிய பூமி
என்ற திரைப்படத்தில் மூடநம்பிக்கையின்பால் சிக்கிச் சுழன்று
கொண்டிருந்த கிராமத்து மக்களை விடுவித்து நல்ல மருத்துவ வசதி அளித்து
அவர்களை ஆரோக்கியம் உள்ளவர்களாக, உடல்நலம் மற்றும் மனநலம்
சிறந்தவர்களாக உருவாக்கும் டாக்டர் கதிரவன் என்ற கதாபாத்திரத்தை எம் ஜி
ஆர் ஏற்று இருந்தார். கதிரவன் அந்த கிராமத்தில் படர்ந்திருந்த அறியாமை
என்ற இருளை அகற்றினார். கதிரவனின் வரவால் அந்த கிராமம் புதிய பூமியாக
மாறியது. இது நன்னம்பிக்கை ஊட்டிய படமாகும்.
தென்காசி இடைத் தேர்தல் நடந்தபோது அங்கு வேட்பாளராக இருந்த கதிரவனின்
பெயரை அவருடைய வெற்றிக்காக எம்ஜிஆர் தன்னுடைய பெயராக இப்படத்தில்
சூட்டிக்கொண்டார். படமும் வெற்றி பெற்றது தேர்தலில் கதிரவனும் வெற்றி
பெற்றார்.
நன்னம்பிக்கையால் உயர்ந்த தன்னம்பிக்கை
எம்ஜிஆர் தனது ரசிகர்களுக்கு தனது படங்களின் மூலமாகக் காட்டிய புதிய
பூமி துக்கமும் மரணமும் இல்லாத புதிய பூமி என்று கிறிஸ்தவ வேதத்தில்
சொல்லியிருப்பது போல துக்கம் இல்லாத ஒரு புதிய பூமியாகத் தோன்றியது.
புதிய வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எம்ஜிஆரால்
வழங்கப்பட்டது இதனால் எம்ஜிஆரை ஏழைமக்கள் மக்கள் தங்களின் நம்பிக்கை
நட்சத்திரமாக மனதில் பதித்துக் கொண்டனர். இருள் நீங்கி விடிவுகாலம்
பிறக்கும் என்ற எண்ணம் தோன்றியதால் அவர்கள் பட்ட இன்னல்கள் அப்போது
பெரிதாகத் தோன்றவில்லை. எனவே எம்ஜிஆர் படம் பார்த்தவர்களுக்கு தற்கொலை
எண்ணம் என்பதே வரவில்லை. எதிர்காலம் உண்டு என்ற நன்னம்பிக்கை ஆழமாக
பதிந்ததால் தன்னம்பிக்கை உயர்ந்தது. இந்த நல்லெண்ணத்தை உறுதி செய்யும்
வகையில் அவர் நடித்த படங்களில் அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திலும் அவர்
வசனங்களையும் பாடல்களையும் வைத்து மக்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிக்
கொண்டே வந்தார். எம் ஜி ஆர் தனது ரசிகர்களை அன்று முதல் இன்று வரை எந்த
நிலையிலும் மனத்தளர்ச்சி அடைய விடவில்லை. அதனால் தான் 1947இல் அவர்
இராஜகுமாரியில் கதாநாயகனாகத் தோன்றிய காலம் முதல் இன்று 2௦19 வரை 72
ஆண்டுகளாகத் தமிழகத்தின் திரையரங்குகளில் எல்லா நாட்களும் எம் ஜி ஆரின்
படங்கள் நல்ல இலாபத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றன. எம் ஜி ஆர் படம் ஓடாத
பெரிய ஊரே இல்லை நாளும் இல்லை என்ற நிலை இன்று வரை உள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.
1958ல் நாடோடி மன்னன் என்ற சொந்தப்படம் எடுத்து வெளியிட்ட எம்ஜிஆர்
அந்தப் படத்தில்
காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையும் காலும்தானே மிச்சம்
என்ற ஒரு ஏழையின் கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலளிக்கும்போது
‘நாளை போடப்போறேன் சட்டம் மிக
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
என்றார். இந்த வரிகள் அன்றைக்குக் கேட்கும் போது ஒரு கதாபாத்திரத்தின்
பாடல் வரிகளாக தோன்றினாலும் இருபது வருடங்களில் மக்களின் ஆதரவால்
அவர்களின் நம்பிக்கையால் அவை உண்மையாகி அவரை முதலமைச்சராக்கும் நிலைக்கு
ஏற்பட்டது.
திரைப்படப் படங்களின் கதாபாத்திரத்தாலும் பாடல்களாலும் மக்களின்
ஏகோபித்த நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற எம் ஜி ஆர் 1977 இல் அவருடைய
கட்சி ஆட்சிக்கு வந்ததில் மக்களின் எதிர்பார்ப்பு உண்மையாயிற்று. 1977
முதல் 1987 வரை அவரது இறுதி மூச்சு வரை மக்கள் அவரை முதல்வராக வைத்து
இருந்தனர். நாடோடி மன்னனில் அவர் சொன்ன நாளை போடப்போறேன் சட்டம் என்று
எம் ஜி ஆர் பாடிய பாடல் வரி மக்களிடம் சென்று சேர்ந்தபோது அவர்கள் அந்த
நாளை ஆவலோடு எதிர் பார்த்தார்கள். அவர்களுடைய நல்லெண்ணமும்
நம்பிக்கையும் சேர்ந்து அந்த பாடல் வரியை உண்மையாக்குவதற்கு சுமார்
இருபது ஆண்டுகள் ஆயிற்று, 1977 இல் அவர் முதலமைச்சராகி பத்து ஆண்டுகள்
அவர் ஆயுள் பரியந்தம் முதல்வராகவே இருந்தார்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|