கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப் படை’:
அமைப்பும் அழகும்
பேராசிரியர் இரா.மோகன்
“இவன்
ரேகை தேயத் தேய
உழைத்தவன் என்று சொல்லுங்கள் …
இவன் பேனா
ஒவ்வொரு முறை
குனிந்த போதும்
மானுடம்
நிமிர்ந்ததென்று
மகிழ்ந்து சொல்லுங்கள்” - வைரமுத்து
பொதுநிலையில் ஆற்றுப்படை
என்பது ‘வழிப்படுத்துதல்’ என்று பொருள்படும். சிறப்பு நோக்கில்
‘தமிழாற்றுப்படை’ என்பது, இந்நூற்றாண்டுத் தமிழர்களை – குறிப்பாக, இளைய
தலைமுறையினரை – உயர்தனிச் செம்மொழியாம் தமிழிடத்து வழிப்படுத்துதல்
என்று பொருள்படும். தொல்காப்பியர் தொடங்கி அப்துல் ரகுமான் வரையிலான 23
இலக்கிய ஆளுமையாளர்களின் உயர்வு, தனித்தன்மை, செம்மை முதலான உயர்
பண்புகளை எடுத்துரைக்கும் நோக்கில் கவிஞர் வைரமுத்து படைத்துள்ள கட்டுரை
ஆக்கங்களே ‘தமிழாற்றுப்படை’ என்னும் அழகிய பெயரினைப் பூண்டுள்ளன.
இக்கட்டுரைகள் ‘வெற்றித் தமிழர் பேரவை’யின் சார்பில் தமிழகத்தின்
பல்வேறு ஊர்களில் இலக்கிய ஆர்வலர்களின் முன்னிலையில் வாசிக்கப் பெற்று,
மறுநாள் ‘தினமணி’, ‘இந்து’ (தமிழ்), ‘நக்கீரன்’ என்னும் இதழ்களில்
அச்சாக்கம் பெற்றுள்ளன. தமிழ்ப் பொழிவுகளைக் கேட்பதற்கு – அதுவும்
இலக்கிய உரைகளைச் செவி மடுப்பதற்கு – ஆயிரக்கணக்கில் அவையினரை
வரவழைத்துக் காட்டியது ‘தமிழாற்றுப்படை’ வரிசைக் கட்டுரைகளின்
தனிப்பெருஞ் சாதனை ஆகும். ஒரு நிகழத்து கலையைப் போல கட்டுரை
வடிவத்தையும் வாசித்துக் காட்ட முடியும் என மெய்ப்பித்ததில் கவிஞர்
வைரமுத்துவின் பங்களிப்பு அளப்பரியதாகும். இனி, ஒரு பறவைப் பார்வையில்
‘தமிழாற்றுப் படை’ வரிசைக் கட்டுரைகளின் அமைப்பும் அழகும் குறித்துச்
சுருங்கக் காண்போம்.
தமிழாற்றுப்படை: கால வரிசைப்படியான பட்டியல்
கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படையில் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள
இலக்கிய ஆளுமைகளின் பெயர்ப் பட்டியல் கால வரிசைப்படி வருமாறு:
1. தொல்காப்பியர் (கி.மு. 5-ஆம் நூற்றாண்டு)
2. கபிலர் (சங்க காலம்: கி.மு.500-கி.பி.200)
3. ஔவையார் (சங்க காலம்: கி.மு.500-கி.பி.200; நீதிநூல் ஔவையார் காலம்:
கி.பி.12-ஆம் நூற்றாண்டு)
4. திருவள்ளுவர் (கி.பி.100-கி.பி.500)
5. இளங்கோவடிகள் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு)
6. திருமூலர் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு)
7. அப்பர் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு)
8. ஆண்டாள் (கி.பி. 885)
9. கம்பர் (கி.பி. 9 அல்லது 12-ஆம் நூற்றாண்டு)
10. செயங்கொண்டார் (கி.பி. 11-ஆம் நூற்றாண்டு)
11. வள்ளலார் (1823-1874)
12. கால்டுவெல் (1814-1891)
13. உ.வே.சா. (1855-1942)
14. மறைமலையடிகள் (1876-1950)
15. பாரதியார் (1882-1921)
16. பாரதிதாசன் (1891-1964)
17. புதுமைப்பித்தன் (1906-1948)
18. அண்ணா (1909-1969)
19. கலைஞர் (1924-2018)
20. கண்ணதாசன் (1927-1981)
21. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)
22. ஜெயகாந்தன் (1934-2015)
23. அப்துல் ரகுமான் (1937-2017)
முதல் பார்வையிலேயே ஈர்த்து ஆட்கொண்டு விடும் தலைப்புகள்
‘முதல்
பார்வையிலேயே காதல் வயப்பட்டு விடுதல்’ (Love at the first sight) என
ஓர் அழகுத் தொடர் உலக வழக்கில் உண்டு. இத் தொடர் ஒரு வகையில்
தமிழாற்றுப் படைக்கும் பொருந்தி வரக் காண்கிறோம். கவிஞர் வைரமுத்து தமது
தமிழாற்றுப்படைக் கட்டுரைகளுக்குச் சூட்டி இருக்கும் தலைப்புக்கள்
முதற்பார்வையிலே இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களை ஈர்த்து ஆட்கொண்டு
விடுகின்றன.
குறிஞ்சித் திணையில் பாடுவதில் வல்லவரான கபிலரைப் பற்றி எழுதிய
தமிழாற்றுப்படைக் கட்டுரைக்குக் கவித்துவம் மிளிரக் ‘குறிஞ்சி ஆண்டவர்’
என வைரமுத்து தலைப்பு தந்திருப்பது அற்புதம்!
திருமந்திரத்தை ‘மெய்யாற்றுப்படை’ என்னும் புதிய பெயரால் சுட்டும்
வைரமுத்து, திருமூலர் குறித்த தமிழாற்றுப்படைக் கட்டுரைக்கு அவரது
அறிவியல் பார்வையையும் மருத்துவப் புலமையையும் புலப்படுத்தும் வண்ணம்
‘கருமூலம் கண்ட திருமூலர்’ எனத் தலைப்பு வைத்திருப்பது சிறப்பு.
‘Knowledge is power’ என பிரான்சிஸ் பேகன் கூறியதற்குப் பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ (421) என
எடுத்துரைத்தவர் நமது வான்புகழ் வள்ளுவர். அவரைப் பற்றிய கட்டுரைக்கு
வைரமுத்து ‘வள்ளுவர் முதற்றே அறிவு’ எனத் தலைப்பிட்டிருப்பது
அருமையிலும் அருமை!.
நாத்திகப் பெரியாரைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அது சரி, யார்
‘ஆத்திகப் பெரியார்?’ ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் முத்திரை
மொழியினைத் தம் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்ட அப்பர் பெருமானே
வைரமுத்துவின் பார்வையில் ‘ஆத்திகப் பெரியார்’.
வெள்ளுடை தரித்து, ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்னும்
கொள்கையின் வடிவமாக வாழ்ந்த வள்ளலாரை அப்படியே நம் மனக்கண் முன்னே
கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது ‘வெள்ளை வெளிச்சம்’ என்ற வள்ளலாரைப்
பற்றிய வைரமுத்து வரைந்துள்ள தமிழாற்றுப்படைக் கட்டுரையின் தலைப்பு.
‘என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு’ (திரை இசைப் பாடல்கள்:
நான்காம் தொகுதி, ப.382) என ஒப்புதல் வாக்குமூலம் தந்த ‘காவியத் தாயின்
இளைய மக’னான கண்ணதாசனைப் பற்றிய கட்டுரைக்கு வைரமுத்து சூட்டியுள்ள
‘பட்டறிவுப் பாவலன்’ என்னும் தலைப்புக்கு ஈடாக வேறு ஒரு பொருத்தமான
தலைப்பு இருக்க முடியுமா என்ன?
வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை உள்ளவாறும், தாம் உணர்ந்தவாறும் தத்துவ
நோக்கிலும் நடப்பியல் பாங்கிலும் தமது சிறுகதைகளில் சித்திரித்துக்
காட்டிய புதுமைப்பித்தனைத் தமது தமிழாற்றுப்படைக் கட்டுரையின் தலைப்பில்
‘சிறுகதைச் சித்தன்’ என வைரமுத்து சுட்டி இருப்பது பல்லாற்றானும்
பொருந்துவதே ஆகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த ஆளுமைகளைப் பற்றிய வைரமுத்துவின்
சிறப்பாகக் குறப்பிடத்தக்க சித்திர மின்னல்கள் வருமாறு:
1. தொல்காப்பியர்
- ‘ஆதி அறிவன்’
2. இளங்கோவடிகள்
- ‘தமிழைத் துறக்காத துறவி’
3. ஆண்டாள்
- ‘தமிழை ஆண்டாள்’
4. கம்பன்
- ‘தமிழுக்குப் புனைபெயர்’
5. செயங்கொண்டார்
- ‘களங் கண்ட கவிஞன்’
6. கால்டுவெல்
- ‘திராவிட முகவரி’
7. உ.வே.சா.
- ‘மொழி காத்தான் சாமி’
8. மறைமலையடிகள்
- ‘மறைக்க முடியாத மலை’
9. ஜெயகாந்தன்
- ‘கலகக் கலைஞன்’
சிறப்பான தொடக்கங்கள்
தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகர்களின் நெஞ்சில்
தோற்றுவிக்கும் வண்ணம் தமது தமிழாற்றுப்படைக் கட்டுரைகளைக் தொடங்குவதில்
கவிஞர் வைரமுத்து தனிக்கவனம் செலுத்தியுள்ளார். அதில் அவர்
முழுவெற்றியும் பெற்றுள்ளார். பதச்சோறாக, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் பற்றிய கட்டுரையின் உயிர்ப்பான தொடக்கப் பகுதியை இங்கே
சுட்டிக்காட்டலாம்.
“இரண்டே ஆண்டுகள் பள்ளிப் படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு
ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம்
தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு
பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில்
சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம் தான் அவன் ஈட்டிய ஊதியம். ஆனால்
திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது.
பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப் புழுதியால் அழிக்கப் படாதது”.
‘காலே பரிதப் பினவே; கண்ணே, நோக்கி நோக்கி வாள்இழந் தனவே; அகல்இரு
விசும்பின் மீனினும், பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே’ என வெள்ளிவீதியார்
தம் குறுந்தொகைப் பாடலில் (44) ஆறு தேற்ற ஏகாரங்களைக் கையாண்டு ஒரு
மூதாட்டியின் உணர்வு நிலையைக் காட்டியிருப்பது போல், கவிஞர் வைரமுத்து
இங்கே உரைநடையில் ஐந்து தேற்ற ஏகாரங்களைத் திறம்படக் கையாண்டு
பட்டுக்கோட்டையாரின் படைப்பாளுமையினைத் தெளிவுறப் புலப்படுத்தியுள்ளார்.
இதே போல, தமிழ் மூதாட்டி அவ்வையாரைப் பற்றிய தமிழாற்றுப்படைக்
கட்டுரையினைக் கவிஞர் வைரமுத்து தொடங்கி இருக்கும் பான்மையையும் எவ்வளவு
பாராட்டினாலும் தகும். கட்டுரையின் சிறப்பான தொடக்கமே கட்டுரையில்
பேசப்பட உள்ள பெருமாட்டி நம் வணக்கத்திற்கும் வியப்பிற்கும் உரியவர்
என்பதைக் காட்டி விடுகின்றது:
“கிரேக்க இலத்தீன் ஆங்கில மொழிகளில் பாடல் புனைந்த ஒரு படைப்பாளி உலகம்
முழுக்க அறியப்பட்டிருப்பதில் ஒரு வியப்புமில்லை. ஏனென்றால் உலகத்தின்
விளிம்பு வரை சென்று விழுந்து வெளிச்சம் பரப்பிய மொழிகள் அவை. ஆனால்
ஆட்சி அதிகாரத்தால் தன் எல்லைகளை நீட்டித்திராத தமிழ் மொழியில்
எழுதப்பட்ட ஒரு பாட்டு வரி, அமெரிக்கக் கல்வி நிறுவனம் ஒன்றின்
நெற்றியில் வெற்றித் திலகமாய் விளங்குகின்றது என்பது வியப்புக்குரியது.
அமெரிக்க மிக்சிகன் நகரின் பிரிமாண்ட் அரசுப் பொது உயர்நிலைப்
பள்ளியில்தான் அந்த வரி பொறிக்கப்பட்டிருக்கின்றது. ‘What we have
learnt is like a handful of earth, what we have to learn is like the
whole world’ என்பது தான் அந்த வாசகம். ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது
உலகளவு’ என்பதுதான் அந்த முத்திரை வரியின் தமிழ் மூலம். அந்த வரியை
வரைந்த தமிழ் ஞானப் பெருமாட்டிதான் அவ்வையார்”.
“இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே நன்கு தெரிந்திருக்கும்
புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயரை அறியாதார்
அறியாதாரே” (புலமை செல்வியர், ப.58) என்னும் மூதறிஞர் ஔவை நடராசனின்
கருத்து இங்கே நினைவுகூரத் தக்கது.
‘களங் கண்ட கவிஞன்’ என்ற தலைப்பில் செயங்கொண்டார் குறித்து வைரமுத்து
வரைந்திருக்கும் தமிழாற்றுப்படைக் கட்டுரையின் தொடக்கமும் நனி
சிறந்ததாக விளங்குகின்றது. கவித்துவம் களிநடம் புரிந்து நிற்கும் அத்
தொடக்கப் பகுதி வருமாறு:
“களம் பாடியவன்; வீர வளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம்
பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக்
குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற
அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப் பரணி பாடிய
செயங்கொண்டார்”.
இத் தொடக்கம் வைரமுத்துவின் ஆளுமையில் கோலோச்சி நிற்கும் கவிஞர் என்னும்
பரிமாணத்தினை அடையாளம் காட்டுகின்றது.
முத்தாய்ப்பான முடிவுகள்
ஒரு நல்ல கட்டுரையின் தொடக்கம் வாசகரைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுவது
போல், அதன் முடிவு முத்தாய்ப்பாக அமைந்து, வாசகரின் உள்ளத்தைத் தொடும்;
உருக்கும்; தன்வயப்படுத்தும். ‘வள்ளுவர் முதற்றே அறிவு’ என்ற
தமிழாற்றுப்படைக் கட்டுரையின் முடிப்பு இவ்வகையில் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவின் உருக்கமான சொற்களில் அப் பகுதி
வருமாறு:
“எனக்கோர் ஆசை. சாவிலும் நான் திருக்குறளைச் சார்ந்திருக்க வேண்டும்.
என் வாழ்வின் நிறைவிற்குப் பிறகு என் தாய் மண்ணில் இரண்டாம்
கருக்குழியில் நான் கிடத்தப்படும் போது என் நெஞ்சில் திருக்குறளை வைத்து
என் இரு கைகளையும் அதை அணைத்துக் கொள்ளுமாறு இணைத்து விடுங்கள். இது
என்ன மூட நம்பிக்கை என்று சில பேர் எள்ளலாம். இது 63 வயதில் நான்
எழுதிய உயில் என்றும் கொள்ளலாம்”.
திருவாசகத்திற்கு மட்டுமன்று. கவிஞர் வைரமுத்துவின் இவ்-வாசகத்திற்கும்
உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் எனலாம்.
‘தமிழாற்றுப் படை’ வரிசையில் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும்
ஆளுமையான அவ்வையாரைக் குறித்து வைரமுத்து படைத்திருக்கும் கட்டுரை
சிறப்பானது. குறிப்பாக, அதன் முடிப்பு கலிப்பாவின் தாழிசைக்கு
நிகராகவும் கீர்த்தனையின் சரணத்திற்கு இணையாகவும் சிறந்து
விளங்குகின்றது; நீண்ட நெடிய தமிழ் இலக்கியப் பரப்பில் அவ்வையார்
குறித்து வழங்கி வரும் கதைகளுக்கும் செவிவழிச் செய்திகளுக்கும்
வினாக்களுக்கும் விவாதங்களுக்கும் எல்லாம் நல்லதோர் அமைதியை நல்குவதாகத்
திகழ்கின்றது. சிந்தனைக்கு விருந்தாகும் அம்முடிப்புப் பகுதி வருமாறு:
“காலந்தோறும் தமிழர்களுக்கு அவ்வைக் காதல் தீருவதில்லை. கள்ளுண்ட அவ்வை,
நெல்லிக் கனி அவ்வை, சுட்ட பழம், சுடாத பழம் கேட்ட அவ்வை, சிவபெருமான்
குடும்பத்துச் சிக்கலைச் சீர்செய்யப் போந்த அவ்வை, கூழுக்குப் பாடிய
அவ்வை, கபிலரோடும் வள்ளுவரோடும் உடன்பிறந்த அவ்வை, தன்னை ஏளனம்
செய்தோர்க்கு எறும்பும் தன் கையால் எண்சாண் என்று எதிர்வினையாற்றிய
அவ்வை இப்படி எத்தனையோ அவ்வைமார்களைத் தமிழர்கள் தங்கள் வாழ்வோடு
வரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வையின் பெயரில் இயங்கும்
இலக்கியங்கள் எல்லாம் தமிழரின் வாழ்வறத்தோடு இணைந்து கலந்து இயங்கியும்
இயக்கியும் வருகின்றன. இதில் எந்தப் பாடல் எந்த அவ்வை பாடியதென்று
தமிழர்கள் கவலையுறத் தேவையில்லை. சுவையும் பயனுமிருப்பின் அது
எம்மரத்துக் கனியாயிருப்பின் எமக்கென்ன? மணமும் தேனும் சுரப்பின் அது
எக்கொடியின் மலராயிருப்பின் எமக்கென்ன? அவ்வை சொன்னதெல்லாம்
நல்லதென்றாலும் நன்று; நல்லது சொன்னவளெல்லாம் அவ்வை என்றாலும் நன்று”.
நிறைவாக, ‘அவ்வை சொன்னது எல்லாம் நல்லது; நல்லது சொன்னவள் எல்லாம் அவ்வை’
என்னும் வைரமுத்துவின் வாசகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒப்பான ஒரு
திருவாசகம் ஆகும்.
தெ.பொ.மீ.யும் மு.வ.வும் வ.சுப.மா.வும் ஒன்றிணைந்த கூட்டுக்கனி
தமிழ் ஆய்வுலகில் முடியுடை மூவேந்தர்களைப் போல் கோலோச்சிய சிறப்புக்கு
உரிய பெருந்தகையோர் மூவர். ஒருவர், பேராசிரியர்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்; இவரது ஆய்வுப் போக்கில் ஆழம் மேலோங்கி
நிற்கும். இன்னொருவர், பேராசிரியர் மு.வரதராசனார்; இவரது ஆய்வுப்
போக்கின் தனித்தன்மை தெளிவு. மூன்றாமவர், பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார்;
ஆய்வுப் பொருளைப் புதுமைக் கண் கொண்டு அணுகுவது இவரது சிறப்பியல்பு.
கோட்பாட்டு நோக்கில் ஆராய்ந்து சிலப்பதிகாரத்தினைக் ‘குடிமக்கள்
காப்பியம்’ என முதன்முதலில் சொன்னவர் தெ.பொ.மீ. ‘கானல் வரி’ பற்றி
மட்டுமே நுண்ணாய்வு மேற்கொண்டு இவர் எழுதிய நூல் சிலப்பதிகார ஆய்வில்
தடம் பதித்தது. சிலப்பதிகாரத்தின் பாவிகம் மூன்று; அது போல், கலைஞர்,
அறவோர், தமிழர் என்னும் மூன்று இயல்களில் சிலப்பதிகாரத்தின் நெஞ்சை
அள்ளும் பான்மையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த நூல் மு.வ.வின் ‘இளங்கோவடிகள்’.
எந்தச் சிலம்பு சிலப்பதிகாரத்திற்கு அந்தப் பெயர் அமைவதற்குக் காரணம்
எனப் புதிய நோக்கில் அலசி ஆராய்ந்து, கோப்பெருந்-தேவியின் தொலைந்து போன
சிலம்பே சிலப்பதிகாரப் பெயருக்குக் காரணம் என்பதைத் தக்க சான்றுகள்
காட்டி நிறுவியவர் வ.சுப.மா. தெ.பொ.மீ.யின் ஆழமும், மு.வ.வின் தெளிவும்,
வ.சுப.மாவின் புதுமையும் ஒன்றிணைந்த கூட்டுக் களியாக வைரமுத்துவின்
தமிழாற்றுப்படைக் கட்டுரைகள் விளங்குகின்றன. தக்க சான்றுகள் வழி நின்று
நாம் இக் கருத்தினை நிறுவலாம்.
ஆழமும் தெளிவும் புதுமையும் துலங்கும் வகையில் தமிழாற்றுப்படைக்
கட்டுரைகளில் கவிஞர் வரைமுத்து எழுதிச் சென்றிருக்கும் இடங்கள் பலவாகும்.
அவற்றுள் சிறப்பாக் குறிப்பிடத்தக்க மூன்றினை ஈண்டுக் காணலாம்.
-
1. கணவனைப் பிரிந்து
கடுந்துயர் எய்தி கண்ணகி கோலங் குலைந்து காலங்கழித்த வேளையில்
அவளின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி என்பாள் அவள் வாட்டம் தீர ஒரு
வழி சொல்கிறாள்; சோம குண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைகளில்
மூழ்கிக் காமனை வழிபட்டால் கணவனனோடு சேரலாம் என்கிறாள். அப்படி
வழிபடுவது பெருமை தராது என்னும் பொருளில் ‘பீடன்று’ என்கிறாள்
கண்ணகியாள். இந்தப் ‘பீடன்று’ என்னும் திருமொழிக்கு உரை
வரைந்துள்ளோர் எல்லாம் ‘தெய்வந் தொழாமல் கணவனைத் தொழுதெழும் மரபிலே
வந்தவள் மறுத்தலில் வியப்பில்லை’ என்னும் பொருளிலேயே எழுதியுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து இது குறித்து இன்னும் ஒரு படி மேலாகச் சென்று
ஆழமாகச் சிந்திக்கின்றார். அவரது கருத்து வருமாறு:
“‘கண்ணகி தெய்வமே தொழாதவள்’ என்னும் குறிப்பொன்றும் காவியத்தில்
இல்லை. ஆனால் இவ்விடத்தில் காமனைத் தொழவே அவள் மறுக்கிறாள். தனக்கு
உரிமையுள்ள கணவனை அடைவதற்குக் கடவுளே ஆயினும் இன்னோர் ஆணின் துணை
எதற்கு என்று கண்ணகி கருதியிருக்கலாம்.
மற்றுமொன்று: காமன் என்பவன் சிவபெருமானால் தண்டிக்கப்பட்ட ஒரு
குற்றவாளி. குற்றமேதும் புரியாத தான் ஒரு குற்றவாளியை வணங்குவதா
என்றும் அவள் தவிர்த்திருக்கலாம். அவள் அன்று ஒரு குற்றவாளியை
வணங்கியிருந்தால் நிரபராதிக்கு நீதி கேட்கச் சென்றிருக்கவியலாது
இந்த நுட்பமான பண்பாட்டுக் குறிப்புதான் ‘பீடன்று’ என்ற சொல்லடைவில்
தொனிப் பொருளாய் நிற்கிறது என்றும் கருதலாம்”.
இக் கருத்து சிலப்பதிகார உரையாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
எவரும் இதுவரை சொல்லாதது; புதுவது.
-
2. நாகரிகம்
(Civilization) வேறு; பண்பாடு (Culture) வேறு. இரண்டிற்கும் இடையே
அடிப்படையான வேறுபாடு ஒன்று உண்டு. நாகரிகம் என்பது மாறிக் கொண்டே
இருப்பது; பண்பாடு என்பது என்றும் மாறாதது. இதனைத் திருக்குறள் வழி
நின்று தெளிவுபடுத்தியுள்ளார் வரைமுத்து. அறிவுக்கு விருந்தாகும்
அவரது விளக்கம் வருமாறு:
“ நட்புக்கு உவமை காட்ட வந்த நம் பெருமான்,
‘உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’
என்று எழுதி இருக்கிறார்.
இதில் ‘உடுக்கை’ என்ற சொல் தான் நுட்பமானது. வேட்டி – சேலை – துண்டு
– துணி – துகில் – சட்டை – போர்வை – கச்சு – கௌபீனம் என்று எந்த
ஆடையைச் சொல்லியிருந்தாலும் அந்த ஆடை காலப் போக்கில் மாறி
வழக்கிழந்திருக்கும். ‘உடை’ என்ற நாகரிகம் மாறிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் ‘உடுத்தல்’ என்ற பண்பாடு மாறாது. எனவே மாறும் நாகரிகத்தை உவமை
சொல்லாமல் மாறாத பண்பாட்டை உவமை சொன்னதன் மூலம் காலம் தன் சொற்களைத்
தொட முடியாத உயரத்தில் தூக்கி வைத்து விடுகிறான் குறள் தந்த கோமான்”.
இங்கே ‘உடை’ என்பது நாகரிகம், ‘உடுத்தல்’ என்பது பண்பாடு என
இரண்டிற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டினை வைரமுத்து
தெளிவுபடுத்தி இருப்பது நனி நன்று.
-
3. ஒல்காப் பெரும்புகழ்த்
தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு தொன்மை மட்டும் அன்று,
தொடர்ச்சியும் ஆகும். ‘ஆதி அறிவன்’ எனத் தொல்காப்பியருக்குப்
புகழாரம் சூட்டும் வைரமுத்து, “காலப் பெருவெளியில் அரசர்களின்
எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்து போயின. ஆனால் தொல்காப்பியன்
இயற்றிய (எழுத்து, சொல், பொருள் என்னும்) மூன்று அதிகாரங்களும்
இன்று வரை ஒரு மொழியின் ஆட்சியைச் செலுத்தி வருகின்றன. இந்தக்
கட்டுரை எழுதப்படும் 2018-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு 68
அகவையாகிறது. இந்த 68 ஆண்டுகளில் இந்திய அரசமைப்புச் சட்டம் 101
முறை திருத்தப்பட்டிருக்கிறது ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்
இயற்றப்பட்ட தொல்காப்பியரின் தமிழ் மொழிச் சட்டம் இன்று வரை ஒரு
திருத்தத்திற்கும் ஆளாகாமல் உயிர்ப்போடு இயங்கி வருகிறது. சட்டம்
வகுத்த தொல்காப்பியருக்கும் அது பெருமை; கட்டிக் காத்த
தமிழர்களுக்கும் அது பெருமை” எனப் புதிய கண்ணோட்டத்தில்
தொல்காப்பியரின் தனிப்-பெருமையைப் பறைசாற்றுவது நோக்கத்தக்கது.
உயர்த்திப் பிடித்துள்ள இரு கருத்தியல்கள்
கவிஞர் வைரமுத்து தமது தமிழாற்றுப்படைக் கட்டுரைகளின் வாயிலாக
உயர்த்திப் பிடித்துள்ள இன்றியமையாத கருத்தியல்கள் இரண்டு. ஒன்று,
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றல். மற்றொன்று, ஆளுமை வளர்ச்சி
(Personality Development) நோக்கில் தமிழ்க் கவிஞர்களின் வாழ்க்கையை
அலசி ஆராய்தல். இவ் வகையில் தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில் சிறந்து
விளங்கும் உயிர்ப்பான இடங்களைக் காண்போம்.
‘தமிழ்ச் சமுதாயம் சட்டங்களால் ஆளப்படுவது சிறிது; விழுமியங்களால்
ஆளப்படுவதே பெரிது’ என்பது வைரமுத்துவின் அழுத்தமான கருத்து. இதற்கு
அரணாக அவர் எடுத்துக்காட்டும் ஓர் இடம்: காதல் கடிதத்திலும் ஒரு பண்பாடு
காத்திருக்கிறார் இளங்கோவடிகள். கோவலனைப் பிரிந்து உயிர் வாடிப் போன
மாதவிக் கொடியாள் அவனுக்கு இரு கடிதங்கள் எழுதுகிறாள். முதல் மடலை
வசந்தமாலையிடம் தந்தனுப்புகிறாள். கோவலன் அம்மடலை வாங்க மறுத்து அதனைத்
திருப்பியனுப்புகிறான். இரண்டாம் மடலைக் கோசிகமாணி என்ற மறையோன் வசம்
தந்தனுப்புகிறாள். இங்ஙனம் ஒன்றை மறுத்தமைக்கும் ஒன்றைப் பெற்றமைக்கும்
உள்ள வேறுபாட்டில் இளங்கோவடிகள் ஓர் உளவியல் ஆசானாய் உயர்ந்து நிற்பதைக்
கவிஞர் வைரமுத்து நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
“முதல் கடிதம் காமம் பேசுகிறது… இரண்டாம் கடிதம் கடமை பேசுகிறது…
இரண்டாம் மடலை வாசித்து நெக்குருகிய கோவலன் கோசிகமாணியிடமே அதனைத்
திருப்பிக் கொடுத்து, ‘இம் மடலை எம் பெற்றோரிடம் காட்டுக’ என்று பேணி
விடுக்கிறான். எத்துணை பெரிய பண்பாட்டுக் குறிப்பு இது, ஓர் ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையில் இயங்கும் காதல் கடிதம் கூட பெற்றோர்கள் வாசிக்கும்
பண்பாட்டு மொழியில் படைக்கப்படுதல் வேண்டும் என்ற செழுமிய விழுமியம்
செதுக்கித் தருகிறார் சேரமுனி”.
வைரமுத்துவின் பார்வையில் வேறு எந்த இலக்கியத்திலும் காணவியலாத
தனிச்சிறப்பு ஒன்று பரணியின் தலைப்புக்கு உண்டு. அது வருமாறு:
“வென்றவன் பெயரில் விளங்காமல் தோற்றவன் பெயரில் துலங்குவது தான்
பரணியின் தனிச்சிறப்பு. அதனால்தான் வென்றெடுக்கப்பட்ட நாட்டையே
கலிங்கத்துப் பரணி தன் தலையில் தூக்கி வைத்துத் தலைப்பாக்கியிருக்கிறது.
இது தோற்றவரையும் பெருமைப்படுத்தும் தமிழனின் தூய பண்பாடாகும்”. இங்ஙனம்
ஒல்லும் வகையில் எல்லாம் தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில் தமிழ்ப்
பண்பாட்டின் தனிப்பெருந்தகைமைக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் வைரமுத்து.
அடுத்து, தமிழ்க் கவிஞர்களிடம் மேலோங்கிக் காணப்பெற்ற ஆளுமைப் பண்புகளை
தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில் அடையாளம் காட்டுவதில் வைரமுத்து
முனைப்புடன் இயங்கியுள்ளார். அப்பர் பெருமானைப் பற்றிய அவரது கட்டுரை
இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. வைரமுத்துவின் கருத்தியலில் அப்பர்
பெருமான் ஓர் இறைப்பாடகர் மட்டும் அல்லர்; சமண எதிர்ப்பாளர் மட்டும்
அல்லர். இவற்றை எல்லாம் தாண்டி அவர் ஒரு பெரும் போராளி; பேராளுமை;
பேராண்மை. வைரமுத்துவின் மணிவார்த்தைகளில் முத்தாய்ப்பாகக் கூறுவது
என்றால், “ஓர் இனத்தின் மனித வளத்தை எல்லாக் காலங்களிலும் செழுமை
செய்யும் ஆளுமைகள் எல்லா மொழிகளிலும் பிறப்பதில்லை; சிலரே பிறப்பர்.
அப்படி ஓர் ஆளுமை அப்பர்”. இங்ஙனம் தமிழ்க் கவிஞர்களின் ஆளுமைத்
திறத்தினைத் துலக்கிக் காட்டி இருக்கும் இடங்கள் தமிழாற்றுப்படைக்
கட்டுரைகளில் நிரம்ப உள்ளன.
இந் நூற்றாண்டுத் தமிழர்களுக்கான பாடங்களை எடுத்துக்காட்டல்
தமிழின் முதல் காப்பியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தைப் படைத்த
இளங்கோவடிகளைக் குறித்த கட்டுரை ஆயினும் சரி, இருபதாம் நூற்றாண்டுத்
தமிழ்க் கவிதையின் தலைமகனான பாரதியைப் பற்றிய கட்டுரை ஆயினும் சரி,
அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் வாக்கும் இந் நூற்றாண்டுத் தமிழர்க்கு –
குறிப்பாக, இளைய தலைமுறையினருக்கு – உணர்த்தும் பாடம் அல்லது செய்தி
ஒன்று இருக்கும். அது யாது எனக் கண்டுணர்ந்து எழுதிச் செல்வது கவிஞர்
வைரமுத்துவின் படைப்புத் திறத்தில் சிறந்து விளங்கும் ஒரு தனித்தன்மை
ஆகும். இதற்குக் கட்டியம் கூறும் வகையில் ‘தமிழைத் துறக்காத துறவி’
என்னும் தலைப்பில் இளங்கோவடிகளைக் குறித்து எழுதிய கட்டுரையின் முடிவில்
வைரமுத்து வலியுறுத்தும் செய்தியை இங்கே சுட்டிக் காட்டலாம்:
“இந் நூற்றாண்டுத் தமிழர்க்கும் இதில் ஒரு பாடமுளது. இந்நாள்
தமிழர்களும் உயர்ந்தோர் – தாழ்ந்தோர் என்ற வருணாசிரமம் கடந்து, மதங்கள்
– கட்சிகள் என்ற மாச்சரியம் மடிந்து, முதலியார் – கவுண்டர் – நாடார் –
தேவர் – பிள்ளை – நாயக்கர் என்ற சாதி பேதம் அழிந்து தமிழர் என்ற ஒற்றை
அடையாளத்தை உயர்த்திப் பிடித்தால் உலக மயமாதல் என்ற பெரும்போரிலும் நாமே
வெல்வோம்; வெல்ல வேண்டும்.
ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும்; மாமழை போற்றுதும்.
தமிழ் போற்றுதும்; தமிழர் போற்றுதும்; தமிழகம் போற்றுதும்”.
‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு’ என்னும்
பாரதியாரின் வைர வரிகள் இங்கே ஒப்புநோக்கத் தக்கன.
‘ஆத்திகப் பெரியார்’ என்ற தலைப்பில் அமைந்த தமிழாற்றுப்படைக்
கட்டுரையில் ‘சமய வெளியின் ஒரு பேராளுமை’ என்றும், ‘சைவப் பரப்பின் ஒரு
பேராண்மை’ என்றும், ‘தமிழ்ப் பரப்பின் முதல் பெரும் போராளி’ என்றும்
அப்பர் பெருமானை அடையாளம் காட்டும் வைரமுத்து, “வாழுந் தலைமுறை
வரித்துக் கொள்வதற்கு அப்பர் பெருவாழ்வில் ஒன்றுண்டு. காலம் உன் மீது
சம்மட்டி (கொண்டு) அடிக்கும் போதெல்லாம் துரும்பாய் இருந்தால் தொலைந்து
போவாய்; இரும்பாய் இருந்தால் ஆயுதமாவாய்!” என மொழிவது இன்றைய இளைய
தலைமுறையினர் கருத்தில் கொள்ளத்தக்க செய்தி ஆகும். மேலும், கட்டுரையின்
நிறைவுப் பகுதியிலும் கவிஞர் இச் செய்தியினை வேறு சொற்களில்
எடுத்துரைத்துள்ளார்:
“இந்த நூற்றாண்டு இளைஞருக்கும் எந்திர நூற்றாண்டு மனிதருக்கும் அப்பரின்
பழுத்த வாழ்விலிருந்து வெடித்து வரும் சேதி, மாறாத போர்க் குணமும்
பற்றற்ற பற்றுறுதியும் தான். பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட
என் முப்பாட்டன் என் குருதி அணுக்களில் எழுதியனுப்புவதும் இதுதான்”.
‘யுகத்துக்கு ஒருவன்’ என்னும் தலைப்பில் பாரதியைக் குறித்து எழுதிய
தமிழாற்றுப்படைக் கட்டுரையிலும் பாரதியின் வாழ்வில் இருந்து தமிழர்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத வாழ்வியல் பாடத்தினை அழுத்தம்
திருத்தமாக எடுத்துக்காட்டியுள்ளார் வைரமுத்து:
“அவன் (பாரதி) கவிதைகள் மட்டுமல்ல, அவன் வாழ்வின் இறுதியும்
தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக் காப்பும்
முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்”.
இக் கருத்துக்கு அரண் சேர்க்கும் விதத்தில், ஒரு சாமியாரோடு தம் வீடு
தேடி வந்த பாரதியின் சில மணி நேரங்களை அக் கட்டுரையின் முடிவில்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் வார்த்தைகளிலேயே பதிவு செய்துள்ளார்
வைரமுத்து:
“மூவரும் (பாரதி – சாமியார் – வ.உ.சி.) மத்தியானச் சாப்பாடு
சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம்.
மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு
வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக் கொண்டேன். ஒரு
அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு
ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம்
அதிகமாயிற்று. ‘அது என்ன மாமா?’ எனக் கேட்டேன். ‘அதுவா? மோட்ச
லோகத்துக்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்’ என்றார் மாமா. எனக்கு
விளங்கிவிட்டது. அந்த நாள் பாரதியை வ.உ.சி. கடைசியாய்க் கண்ட நாள்”.
எளிய வடிவில் – அழகிய முறையில் – அரிய கருத்துப் புலப்பாடு
‘அருமையில் எளிய அழகே போற்றி’ என இறைவனைப் போற்றிப் பரவுவார்
மாணிக்கவாசகர். இக் கூற்றினை நாம் கருத்துப் புலப்பாட்டு நெறிக்கும்
பொருத்திப் பார்க்கலாம். ஓர் அரிய கருத்து எளிய வடிவில் – அழகிய
முறையில் – வெளிப்படுத்தப்படும் போதுதான் அது எல்லோரையும் சென்று சேரும்;
எல்லோருடைய உள்ளத்திலும் இடம் பிடிக்கும். இதனை நன்கு உணர்ந்த கவிஞர்
வைரமுத்து தமது தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில் ஆங்காங்கே அறிஞர்களின்
சிறந்த மேற்கோள்களையும், உணர்ச்சி மிகு வாழ்க்கை நிகழ்ச்சிக்
குறிப்புக்களையும், சுவையான அனுபவங்களையும் கையாண்டு தம்
கருத்துக்களுக்கு வண்ணமும் வனப்பும், வலிமையும் வளமும் சேர்த்துள்ளார்.
காட்டாக, ‘கருமூலம் கண்ட திருமூலர்’ கட்டுரையில் ‘மரணத்தைப் புரிந்து
கொள்வதில் தொடங்குகிறது மனித இனத்தின் நாகரிக முதிர்ச்சி… மரணம்
என்பதைப் பூரணம் என்று புரிந்து கொள்கிறவன் பெரும்பேற்றாளன்’ என்ற
மெய்யியல் கருத்தினைத் தெளிவுபடுத்த முற்படும் வைரமுத்து, “எப்பதோ
பயின்ற ஒன்று இப்போது நினைவாடுகிறது. வாழ்க்கை மரணத்தைப் பார்த்துக்
கேட்டதாம்: ‘என்னை ஏன் நேசிக்கிறார்கள், உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?’
மரணம் சொன்னதாம்: ‘ஏனெனில் நீ ஓர் அழகான பொய்; நான் கடினமான உண்மை’.
உண்மையை எதிர்கொள்வதும் கடைசியில் ஏற்றுக்கொள்வதுமே வாழ்வின் உள்மையம்”
என வாழ்வில் எப்போதோ தாம் பயின்ற ஓர் அற்புதமான மேற்கோளினை
எடுத்துக்காட்டி இருப்பது மனங்கொளத்தக்கது.
‘கலகக் கலைஞன்’ என்னும் தலைப்பில் ஜெயகாந்தனைக் குறித்து எழுதிய
தமிழாற்றுப்படைக் கட்டுரையில், யாரிடமும் – எதற்காகவும் – சமரசம் செய்து
கொள்ளதாத அவரது ஆளுமைப் பண்பினைப் புலப்படுத்துவதற்கு வைரமுத்து
சுட்க்காட்டியுள்ள அரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு இது:
“அவரது (ஜெயகாந்தனின்) ‘யாருக்காக அழுதான்?’ கதை உரிமையைத் தயாரிப்பாளர்
ஜி.என்.வேலுமணிதான் முதலில் பெற்றிருந்தார். சிவாஜி – சாவித்திரி –
ரங்காராவ் – பாலையா போன்ற புகழ் மிக்க நட்சத்திரங்கள் நடிக்க,
கலை(த்திறன்) மிக்க இயக்குநர் ஸ்ரீதர் இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது.
திரைக்கதையில் உச்சக் காட்சியை உணர்ச்சிகரமாக மாற்றி இருப்பதாக
ஜெயகாந்தனுக்குச் சொன்னார் ஸ்ரீதர். ‘ஒரு வாழைத் தோப்பின் நடுவே மரச்
சிலுவையின் முன்னே தொழுது விழுந்து உயிர் விடுகிறான் திருட்டு முழி
ஜோசப் என்று மாற்றி இருக்கிறேன்’ என்றார் இயக்குநர். தன்
உணர்ச்சிகளையெல்லாம் உள்ளே புதைத்துக் கொண்டு ‘சிறு யோசனை’ என்றார்
ஜெயகாந்தன். ‘சொல்லுங்கள்’ என்றார் ஸ்ரீதர். ‘படத்தின் தலைப்பையும்
யாருக்காகச் செத்தான்? என்று மாற்றி விடுங்களேன்’. அவ்வளவுதான் ஸ்ரீதர்
இயக்குவதாக இருந்த படம் செத்துவிட்டது”.
ஜெயகாந்தன் ‘கலகக் கலைஞர்’ என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் உண்மை
நிகழ்வு இது!
வைரமுத்துவின் மொழி ஆளுமை
வைரமுத்து அடிப்படையில் ஒரு கவிஞர்; மரபுக் கவிதை, புதுக்கவிதை, திரை
இசைப் பாடல் என்னும் முப்பெரும் வடிவங்களிலும் முத்திரை பதித்தவர். எனவே,
அவரது உரைநடையிலும் கவிதைக் கூறுகள் காணப்படுவது என்பது இயல்பினும்
இயல்பே. “ஊளைச் சதையற்ற உரைநடையைச் செதுக்குவதற்குக் கவிதை கொடுத்த
பயிற்சி பயன்படுகிறது” (விகடன் தடம்: ஆகஸ்ட் 2017, ப.17) எனத் தமது
நேர்காணல் ஒன்றில் வைரமுத்து ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பது இங்கே
நினைவுகூரத் தக்கது.
வைரமுத்துவின் மொழி ஆளுமையில் உவமை அணி பெறும் இடம் தலையாயது;
தனித்தன்மை வாய்ந்தது. அவரது உவமைகள் நுண்ணாய்வுக்கு உரியன. “ஏடு
தேடுதல் என்பது சீதையை ராமன் தேடியதிலும் துயரமானது”: ‘தமிழ்ப்
பெருங்கிழவ’ரான உ.வே.சா. பற்றிய தமிழாற்றுப்படைக் கட்டுரையில் கவிஞர்
வைரமுத்து கையாண்டிருக்கும் அற்புதமான உவமை இது. இதனினும் மேலாக ஏடு
தேடும் ஒருவர் எதிர்கொள்ள நேரும் துயரத்தைச் சொல்லில் வடித்து விட
முடியாது. இதே போல, 261 அடிகள் கொண்ட குறிஞ்சிப் பாட்டில் 64 மற்றும்
65-ஆம் அடிகளில் தொடுக்கப்பட்ட பூக்கள் விடுபட்டிருப்பதற்காக உ.வே.சா.
உற்ற துயரினைச் சித்திரிக்கும் போதும், “பூவிழந்த கைம்பெண்ணைப் போலப்
புலம்புகிறார் உ.வே.சா.” என ஓர் உணர்ச்சி மிகு உவமையினைக்
கையாண்டுள்ளார் கவிப்பேரரசு.
1930 முதல் 1945 வரை தமிழ் இலக்கியச் சூழலில் பட்டொளி வீசிப் பறந்த
மணிக்கொடி இயக்கத்தால் புதுக்கவிதை வடிவம் எதிர்ப்பு – ஏளனம் என்ற
நிலைகளைத் தாண்டி, ஏற்பு என்ற நிலையை அடைந்தது என்பதை விளக்கும்
இடத்தில் வைரமுத்து கையாண்டுள்ள பொருத்தமான உவமை இது: “வானம்பாடி
இயக்கம் தலையெடுத்த பிறகுதான் புதுக்கவிதை தமிழர் வீடுகளில் உப்பைப்
போல் புழங்குபொருளானது”.
“தலைமகனாய்ப் பிறந்தவனைச் சின்னச்சாமி என்று பெயரிட்டு அழைப்பதொக்கும்
கம்பனின் யுத்த காண்டத்துக்கே வழிகாட்டிய இந்தப் பேரிலக்கியத்தைச் (கலிங்கத்துப்
பரணியை) சிற்றிலக்கியம் என்று செப்புவது” என்பது போன்ற இயல்பான,
பொருத்தமான புதிய, வித்தியாசமான உவமைகள் தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில்
மண்டிக் கிடக்கின்றன.
சுவையான சொல் விளையாட்டும் தமிழாற்றுப்படைக் கட்டுரைகளில் மூன்றாம்
பிறையினைப் போல் முகம் காட்டி நிற்கின்றது. இதோ, உள்ளங்கவர் உதாரணம்
ஒன்று:
“தொல்காப்பியத்தின் காலம் குறித்துக் கருத்து வேறுபாடு இருப்பினும் அது
தமிழுக்கு நல்ல காலம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு
நிலவ வாய்ப்பில்லை”.
‘திரையாண்ட கலைஞர்’ என்னும் தலைப்பில் கலைஞரைக் குறித்து வைரமுத்து
எழுதியுள்ள தமிழாற்றுப்படைக் கட்டுரையில் அவரது தனி முத்திரை
அழுத்தமாகப் பதிந்திருக்கக் காண்கிறோம். வைரமுத்துவின் மதிப்பீட்டில்
வெள்ளித் திரைக்கு அண்ணா எழுதியது அழகுத் தமிழ்; கலைஞர் எழுதியதோ ஆவேசத்
தமிழ். இவ் வகையில் குறிப்பிடத்தக்க ஓர் எடுத்துக்காட்டு:
“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன், கோவில் கூடாது என்பதற்காக அல்ல;
கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக; ‘பூசாரியைத்
தாக்கினேன், அவன் பக்தன் எற்பதற்காக அல்ல; பக்தி பகல் வேஷமாகி விட்டதைக்
கண்டிப்பதற்காக’ என்ற தீப்பிடித்த வார்த்தைகளும்,
‘அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே?’ என்ற
அமில வாக்கியமும், ‘இட்லி சுட்டு விற்பது
தானே தமிழ்நாட்டிலே தாலி அறுந்தவர்களுக்கெல்லாம் தாசில் உத்தியோகம்’
என்ற கண்ணீர் கொப்பளிக்கும் சொல்லாடல்களும்
நீதிமொழிகள் பேசப்பட்ட தமிழ்நாட்டில் வீதிமொழிகளாய்ப்
பேசப்பட்டன”.
‘தீப்பிடித்த வார்த்தைகள்’, ‘அமில வாக்கியம்’, ‘கண்ணீர் கொப்பளிக்கும்
சொல்லாடல்கள்’ என வைரமுத்து இங்கே கையாண்டுள்ள மூன்று தொடர்கள் போதும்,
கலைஞரின் ஆவேசத் தமிழின் வீரியத்தையும் வீச்சையும் வேகத்தையும் அடையாளம்
காட்ட. இன்னும் துல்லியமாகக் கூறுவது என்றால், வைரமுத்துவின் பார்வையில்
திரைத் துறையில் கலைஞரின் தனிப்பெருஞ் சாதனை என்பது ‘தமிழர் இருந்த
பள்ளத்துக்குத் தமிழைத் தாழ்த்தாமல், தமிழ் இருந்த உயரத்திற்குத் தமிழரை
உயர்த்தியது தான்’.
ஒரு முறை படித்தாலே கல்வெட்டுப் போல் பதிந்து விடும் மணிமொழிகள்
ஒரு முறை கருத்தூன்றி, பொருள் உணர்ந்து படித்தாலே படிப்பவர் உள்ளத்தில்
கல்வெட்டுப் போலப் பதிய வல்ல மணிமொழிகள் வைரமுத்துவின் தமிழாற்றுப்படைக்
கட்டுரைகளில் கண்ணில் கண்ட இடமெல்லாம் தட்டுப் படுகின்றன. அவற்றுள்
சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில இதோ:
-
திருக்குறள் வாசிப்போடு
நின்றுவிடக் கூடாது; வாழ்வியலாக வேண்டும்”.
-
“தரணி உள்ள வரை பரணி
வாழும்”.
-
“பட்டுத் தெறிக்கும்
மொழியாலன்று ஓர் எழுத்தாளன் நிலைபெறுவது. பட்டுப் பட்டுத் தெளிந்த
பட்டறிவால் நிலைகொள்கிறான்”.
-
“ஒரு கருத்தையோ ஒரு
நூற்பொருளையோ அது பிறந்த காலத்தின் வேரடி மண்ணோடு தான் விளங்கிக்
கொள்ள வேண்டும்”.
-
“ஒரு நல்லிலக்கியம்
வாழ்வுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். மனத்திட்பம் – வினைத்திட்பம்
இரண்டுக்கும் உற்சாக ஊசி போட வேண்டும்”.
-
“இலட்சியவாதிகளின்
வாழ்க்கை ஒருநாள் பந்தயமல்ல – வெற்றி தோல்விகளை மாலைக்குள்
அறிவதற்கு. அது யுகங்களின் மீது எட்டு வைத்து நடக்கும் பயணம்”.
-
“பக்கத்தில் இருக்கும்
வெளிச்சத்தில் தான் படிக்க முடியும் என்பது போல் அருகிருக்கும்
ஆளுமைகளே இன்னோர் ஆளுமையை உருவாக்குகிறார்கள்”.
-
“தமிழ் ஆட்சி பெறவும்
தமிழர் மீட்சி பெறவுமே அவர் (மறைமலையடிகள்) எழுத்தும் பேச்சும்
மூச்சுள்ள வரை இயங்கின என்று உணரமுடிகிறது”.
தமிழாற்றுப்படை பற்றிய மதிப்பீடு
ஒற்றை வரியில் சங்கத் தமிழின்
துணை கொண்டு மதிப்பிடுவது என்றால், வைரமுத்துவின் தமிழாற்றுப்படைக்
கட்டுரைகள் ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன், திங்கங் வலித்த (தேர்க்)
கால் அனையவை’ எனலாம். சிலப்பதிகாரத்தில் மாதவி எழுதிய இரண்டாவது மடலை
வாசித்து நெக்குருகிய கோவலன் அதனைத் தனது பெற்றோர்க்குத் திருப்பி
அனுப்பியது போல் நாமும் கவிஞர் வைரமுத்து, ‘ஒன்றிரண்டு அல்ல; ஒரு நூறு
சொல்லலாம் அய்யரின் பெருமைகளை’ என்றும், ‘எவ்வளவு சொன்னாலும் தகும்
அந்தத் தமிழ்ப் பெருங்கிழவனுக்கு’ என்றும் உ.வே.சா. குறித்து
எழுதியுள்ள திருவாசகங்களை அவரது தமிழாற்றுப்படைக் கட்டுரைகளுக்குக்
காணிக்கையாக்கி மகிழலாம்; நெஞ்சம் நெகிழலாம்.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|