கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆகச் சிறந்த கவிதை

பேராசிரியர் இரா.மோகன்
 

ன்று பலர் புதுக்கவிதை எழுது கின்றார்;
            எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான்
முன் நிற்கும் மோனையைப் போல்முன்நிற் கின்றார்”

என ‘உவமைக் கவிஞர்’ சுரதாவால் அடையாளம் காட்டப்பெற்றவர் அப்துல் ரகுமான். மேலும் அவர், ‘தமிழகத்துக் கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான் சிந்திக்கும் முறை புதிது’ என்றும், ‘வார்த்தைகளைத் தேனாக்கும் ரகுமான்’ என்றும், ‘புதுமை தன்னை அடை காக்கும் சிந்தனைகள் வேண்டுமாயின், அப்துல் ரஹ்மான் நூலாம் இந்நூல் போதும்’ என்றும் அப்துல் ரகுமானின் ‘நேயர் விருப்பம்’ கவிதைத் தொகுப்பிற்கு ‘எடைக்கல்’ என்னும் பெயரில் எழுதிய அணிந்துரையில் உளமாரப் போற்றிப் பாடியுள்ளார். உவமைக் கவிஞரின் மதிப்பீட்டினை மெய்ப்பிக்கும் வகையில் அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘போட்டி’ என்னும் கவிதையை ஈண்டு அலசி ஆராயலாம். மானுடத்தினன் பெருமை பேசும் அக் கவிதை,

“ ஒருநாள், எனக்கும் வானத்திற்கும்
            போட்டி நடந்தது”

எனத் தொடங்குகிறது. மனிதனுக்கும் வானத்திற்கும் இடையில் ஒரு போட்டி. மனிதன் தன்னிடம் உள்ள சிறந்த ஒன்றை எடுத்து வைக்க, வானம் அதற்கு இணையாகத் தன்னிடம் உள்ளதை எடுத்து வைக்கப் போட்டி தொடர்ந்து நடைபெறுகின்றது. கவிஞரின் சொற்களில் மேலும் தொடர்கின்றது அக்கவிதை:

“நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது
 நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது
நான் வியர்வைத் துளிகளை எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது
நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது
நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது
நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது
நான் எழுத்தை எடுத்து வைத்தேன்
அது மின்னலை எடுத்து வைத்தது
நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது
நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது
நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது
நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது
நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது”

பன்னிரண்டு சுற்றுகள் வரை மனிதனுக்கும் வானத்திற்கும் இடையிலான போட்டி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இப் போட்டியில் மனிதனும் வானமும் அடுத்தடுத்து எடுத்து வைக்கும் இணைகள் முறையே வருமாறு:

கவிஞர் எடுத்து வைப்பன              வானம் அதற்கு இணையாக

                                                        எடுத்து வைப்பன

1.    புன்னகை                                                             வைகறை

2.    கண்ணீர்                                                              மழை

3.    வியர்வைத் துளிகள்                                            நட்சத்திரங்கள்

4.    கோபம்                                                                 வெயில்

5.    காதல்                                                                   நிலவு

6.    எண்ணங்கள்                                                       மேகங்கள்

7.    எழுத்து                                                                 மின்னல்

8.    பேச்சு                                                                    இடி

9.    கவிதை                                                                 வானவில்

10. உறக்கம்                                                               இருள்

11. சந்தேகங்கள்                                                        கிரகணங்கள்

12. பெருமூச்சு                                                            புயல்

இதுவரை நடந்தது சரிக்குச் சரியான போட்டிதான்! மனிதன் எடுத்து வைப்பனவற்றுக்கு இணையானவற்றை – சரிநிகர் சமானமாகக் கருதத்த தக்கனவற்றை – வானமும் உடனுக்கு உடன் எடுத்து வைக்கின்றது. சரி, இந்தப் போட்டியின் முடிவு தான் என்ன? இறுதியில் வெற்றி பெற்றது யார்? மனிதனா? வானமா? இதோ, கவிஞரின் முத்தாய்ப்பான சொற்களில் போட்டியின் முடிவு பற்றிய அறிவிப்பு:

“ இறுதியில் நான்
            புதுப்புது இலட்சியங்களை
                        நோக்கி நடக்கும்

என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது”        
       (ஆலாபனை, பக்.17-18)

இறுதிச் சுற்றில் மனிதன் புதுப்புது இலட்சியங்களை நோக்கி நடக்கும் தனது பாதங்களை எடுத்து வைக்க, வானம் அதற்கு இணையாக எதையும் எடுத்து வைக்க இயலாமல் தோற்றுப் போகின்றது!

கவிக்கோவின் பார்வையில் ‘புதுப்புது இலட்சியங்களை நோக்கி நடக்கும் பாதங்களை’ப் பெற்ற மனிதன் நனி சிறந்தவன்; மானுடத்தின் பெருமை யாவற்றினும் சாலச் சிறந்தது.

“படைப்பில் உச்சியில்
மானுட மகுடம்
அதில்
வியர்வைத் துளிகள்
கோகினூர் வைரங்கள்”  
    (கவிக்கோ கவிதைகள், ப.80)

என்னும் கவிக்கோவின் வைர வரிகள் இவ்வகையில் மனங்கொள்ளத் தக்கவை.

‘கவிக்கோவின் கவிதைகளில் மானுடப் பெருமை பேசும் மகத்தான கவிதை’ என்றும், ‘கவிக்கோவின் ஆகச் சிறந்த கவிதை’ என்றும் இக் கவிதையைத் தமது தமிழாற்றுப்படைக் கட்டுரையில் மதிப்பிடும் கவிஞர் வைரமுத்து, “பிரபஞ்சமே போட்டியிட்டாலும் மானுடமே வெல்கிறது என்னும் அப்துல் ரகுமானின் அகிலக் கவிதை இது” (தமிழாற்றுப்படை: அப்துல் ரகுமான், நக்கீரன் 2019, ஜனவரி 09-11, ப.30) எனக் குறிப்பிடுவது இங்கே நினைவு-கூரத்தக்கதாகும்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்