கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய கவியரங்கம் மற்றும் இலக்கியக் கருத்தரங்கம்

புதுவை இராமன்


(தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய புரட்சியாளர் ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்புகளைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி கலாநிதி பட்டம் பெற்ற தமிழக எழுத்தாளர் கரு முத்தைய்யா அவர்கள் பங்குகொண்ட சிறப்பு நிகழ்ச்சி)

மிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் தொட்டு இன்றைய விஞ்ஞான கல்வியறிவு மேம்பட்ட காலத்திலும் கூட எண்ணற்ற கலை இலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்துமே காலத்திற்கு காலம் வித்தியாசமான அணுகுமுறையோடும், பல்வேறு சமூக சீர்திருத்தச் சிந்தனைகளுடன், யதார்த்தமும் உண்மையும் கலந்தவையாக அனைவராலும் போற்றப்படுவதே தமிழ் இலக்கிய உலகின் வரலாற்றில் தமிழ் இலக்கியவாதிகளின் சாதனைகளாகும். அந்த வகையில் ஒரு பிரபல முற்போக்கு எழுத்தாளராக எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மற்றும் ஆன்மீகப் பற்றுள்ளவராக தனது படைப்புகளை வெளியிட்டு, தனக்கென ஒரு புதிய அடையாளத்தை இலக்கிய உலகில் பதிவு செய்த ஜெயகாந்தனை அறியாத கலை இலக்கியப் பற்றாளர்களே தமிழ்கூறும் நல்லுலகில் இல்லை என்பதே எனது அபிப்பிராயமாகும். அந்த அளவிற்கு அவரது புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனைகளுடன் அவர் எழுதிய அத்தனைப் படைப்புகளும் தமிழ் சமூகத்தின் யதார்த்தங்களையும், உண்மைகளையும் பிரதிபலிப்பவையாக பல்வேறு விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் மத்தியில், ஒரு படைப்பாளியின் சிந்தனை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று ஒரு லட்சியக் கண்ணோட்டத்துடன் ஒரு வரலாறு படைத்தவராவார்;. அவரது பாத்திரப் படைப்புகளைப் பற்றி ஒரு ஆய்வு செய்து, கலாநிதி பட்டம் பெற்றுள்ள தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியாருமான கரு முத்தையா அவர்கள் கனடாவிற்கு வருகை புரிந்துள்ளதையொட்டி, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக 17.1.2010 அன்று ஸ்காபரோ சிவிக் சென்டரில் கவியரங்க கருத்தரங்கம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இலக்கிய உலகில் மிகவும் பிரசித்தப்பெற்ற எழுத்தாளர்களான கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.சி, ஜானகிராமன், சுந்தரராமசாமி, ஜெயமோகன், பிரபஞசன் மற்றும் பெண் எழுத்தாளர்களான லஷ்மி, அனுராதாரமணன் போன்றவர்களின் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்கள் அனைவரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அந்த அந்த காலத்திற்கேற்ப பொருத்தமாக வாழ்வியல் சூழலை வெளிப்படுத்தி, தமிழர்களின் சமூக வாழ்வியல் உண்மைகளைப் பிரதிபலித்து அவர்களது எழுத்தாற்றலுக்கு மகுடம் சூட்டியதோ, அதுபோன்றே ஜெயகாந்தனின் படைப்புகளும் அமைந்துள்ளதை ஆய்வு செய்து 'ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்பு' என்ற நூலை எழுதி கலாநிதி பட்டம் பெற்ற கரு முத்தய்யா அவர்கள் மிகவும் சிறப்பானதொரு இலக்கிய உரையாற்றி அனைவரையும் மகிழ்வித்தார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆங்கிலப்புத்தாண்டின் தைப்பொங்கல் முதல் நிகழ்வாக நடைபெற்ற இவ்வைபவத்திற்கு இங்குள்ள பிரபல கலை இலக்கியச் சான்றோர்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, அவரது உரையைத் தொடர்ந்து பல்வேறு வினாக்களை எழுப்பி கலந்துரையாடியது ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.. குறிப்பாக நம்மில் பலருக்கு ஜெயகாந்தனைப் பற்றி அறிந்திராத அவரது வாழ்க்கையின் பல புதிய பக்கங்களை பல்வேறு மேற்கோள்களுடன் எடுத்துரைத்தார். மேலும் அவரிடமே நேரில் சென்று தனது ஆய்வுக் கட்டுரையைப் பற்றி கலந்துரையாடி, அவரைப் பற்றிய புதிய பார்வையை வெளிப்படுத்திய அவரது உரை அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வைபவத்திற்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணைத் தலைவர் திரு சிவபாலு தலைமை வகித்து, வந்திருந்த அனைவரையும், வரவேற்று புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறி, அன்றைய பிரதான விருந்தினரான இலக்கியப்பேச்சாளர் திரு கரு முத்தiயாவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி முன்னுரை வழங்கினார்.

பிரபல இலக்கியச் சான்றோர்களான திருவாளர்கள் இந்து கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு சின்னையா சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினருக்கு பொன்னாடை மற்றும் சந்தனமihலை அணிவித்தும், சைவதுரந்தரர் கலாநிதி கவிஞர் கந்தவனம் அவர்கள் மலர்மாலை அணிவித்தும் கௌரவித்தார்கள். அன்றைய நிகழ்வானது கவியரங்கம் மற்றும் இலக்கிய உரை என அமைந்திருந்ததால், முதலில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயளர் திருமதி ராஜ்மீரா ராசய்யா, கவிஞர் இராஜ முகுந்தன் மற்றும் கீதவாணி வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளர் கணபதி ரவிந்திரன் ஆகியோரின் கவிதைகளும் வாசிக்கப்பட்டன.
பிரதான நிகழ்வான திரு கரு முத்தய்யா அவர்கள் தான் ஆய்வு செய்து எழுதிய ஜெயகாந்தனின் பாத்திரப்படைப்புகள் பற்றிய இலக்கிய உரை பின்வருமாறு அமைந்திருந்தது.

முதலில் தன்னைப் பற்றிய ஒரு அறிமுக முன்னுரை வழங்கி, தனது இளம் வயது முதற்கொண்டே பத்திரிகைகள், சிறுகதைகள், நாவல்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்து வந்துள்ளதோடு, குறிப்பாக திரு ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள் மீது ஒரு தனிஈடுபாடுகொண்டவராக அவரது அனைத்து இலக்கியப் படைப்புகளையும் படித்ததின் காரணமே அவரைப் பற்றிய ஒரு ஆய்வுநூலை எழுதி வெளியிட வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்படுத்தியதாகக் கூறி
400 பக்கங்களைக் கொண்ட இந்நூலானது ஜெயகாந்தனின் ஒரு Microstudy  என்று குறிப்பிட்டு, அவர் எழுதிய பல்வேறு சிறுகதைகளில் குறிப்பாக ஒரு நடிகை நாடகம், பார்க்கிறாள், ஒரு மனிதன், ஒரு வீடு ஒரு உலகம், யாருக்காக அழுதான், அக்னி பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், பிரம்மோபதேசம் மற்றும் சுயதரிசனம் போன்ற அவரது படைப்புகளில் உள்ள பாத்திரங்களைப் பற்றியும், அந்த அந்த கதைகளைச் சித்தரித்துள்ள அவரது மனப்போக்கையும், அவைகள் வெளிவந்த பின்னர் அதற்கு கிடைத்த வரவேற்பு, எதிர்ப்புகள், கண்டன விமர்சனங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவானதொரு விளக்கம் தந்தார். மேலும் அவர் எழுதத் தொடங்கிய காலத்தில்; தீவிர கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை உடையவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பின்னர் பொது உடமை சிந்தனையிலிருந்து மரபு சிந்தனையாளராக மாறியவராகத் திகழ்ந்தவர். பொது உடமைக் கொள்கைகளை தான் எதிர்;பவர் அல்ல என்பதையும் Anti communist  ஆக மாறமாட்டேன் என்று கூறியவராவார்.

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலில் வரும் கதாநாயகியை சிலப்பதிகாரத்தில் உள்ள மாதவியின் மறுபதிப்பாக அவள் படைக்கப்ட்டிருக்கிறாள் என்று அப்பாத்திரங்களின் தன்மையை வெளிமனம் மற்றும் ஆழ்மனத்தோடு ஒப்பிட்டுள்ளதை வெகுவாகப் பாராட்டினார். சமுதாய மரபுகள் மாறவேண்டும் என்ற கருத்துக்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய ஒவ்வொரு கதையும், நாவலும் அன்றைய வாழ்க்கையின் யதார்த்தங்களை பிரதிபலிக்கச் செய்தவர் என்பதை மற்ற படைப்புகளுடன் ஒப்பிட்டு விமர்ச்சித்தார். அக்னி பிரவேசம் என்ற நாவல் தான் அவரின் சிந்தனைகளுக்கு உரமூட்டியது எனவும், அதன் கதாநாயகி சந்தர்ப்பச் சூழ்நிலையால் தனது கற்பை பறிகொடுத்துவிட்டு, தனது வீடு திரும்பி, தன் அன்னையிடம் தனக்கு ஏற்பட்ட அவலத்தைப் புலம்பி கதறி அழுதபோது, அவரது அன்னை 'உனக்கு நேர்ந்தது ஒரு விபத்து. அதனை மறந்து தலை மூழுகி விடு – உனக்கு ஏற்பட்ட இப்பிரச்னை பொசுக்கப்பட்டுவிட்டது' என்று கதை முடிவடைகிறதையும், அக்கதைக்கு ஏற்பட்ட பலதரப்பட்ட விமர்சனங்களால், மீண்டும் அதனையே இரு கதைகளாகப் படைத்து, ஒன்றில் கதாநாயகியே தன் கற்பைப் பறித்தவனை கண்டுபிடித்து கைபிடிக்க முயல்வதாகவும், அடுத்த கதையில் வெங்கு மாமா என்ற பாத்திரத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள அனைவரின் மனதில் நல்லது கெட்டது நிலவியிருப்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார் என திருக்குறளுக்கு ஒப்பிட்டு விமர்சித்தார். அவரது கதைகள் பல திரைப்படங்களாய் தயாரிக்கப்பட்டு அவரின் படைப்புகளுக்கு பெரும் வரவேற்பையும், புகழையும் தந்தன என்பதோடு. மரபுச் சிந்தனைகளைக் கொண்;டவராகவும், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராய் ஆதிசங்கரரைப் பற்றி ஒரு நூலைப் படைத்துள்ளதையும் குறிப்பிட்டார்;. ஒரு காலத்தில் எழுதுவதையே நிறுத்தியிருந்த அவரின் கொள்கையே ஒரு எழுத்தாளன் என்பவன் கட்டாயத்திற்காக நிர்பந்தப்படுத்தி எழுதக்கூடாது, சமுதாயத்தின் தேவை யாவை என்பதைக் கருதி அதைத்தான் எழுதுவேன் என்ற நிலைப்பாடுடையவராக விளங்கி வருகிறார். ஒரு எழுத்தாளரை தாயாக எண்ணி, அந்த சமுதாயத்தில் வாழ்பவர்களை அதன் குழந்தைகளாகக் கருதும் மனப்பக்குவம் எழுத்தாளர்களிடம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டவர். இந்திய அரசின் இலக்கியத்துறைக்கான உயர் விருதான சாகித்ய அகாடமி விருதும், ஞானபீட விருதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்து கெளிரவித்தது ஆகியவை அவரின் முற்போக்குச் சிந்தனைகளுககும்; படைப்பாற்றலுக்கும் கிடைத்த அங்கீகாரமும் பெருமையாகும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தபின், பர்ர்வையாளர்களின் கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் இடம் பெற்றது.

கலாநிதிசுப்ரமண்யம்,மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு பொ.கனகசபாபதி, .இந்து கலாச்சார மன்றத் தலைவர் சின்னய்யா சிவநேசன், கவிஞர் இராஜமுகுந்தன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிருபர் என்ற வகையில் நானும் திரு ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்புகளைப் பற்றிய கருத்துக்களை முன் வைத்து சில வினாக்களை எழுப்பி அதற்கான பதிலை அவர் கூறிச் சிறப்பித்தார். குறிப்பாக தமிழகத்தில் வெளிவரும் ஆனந்த விகடன் வார இதழ் தான் அவருடைய கலை இலக்கியப் படைப்புகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததையும், ஜெயகாந்தன் போன்ற பிற புகழ்பெற்ற எழுத்தாளர்;களின் படைப்புக்களைப் பற்றிய கருத்தரங்கம், ஆய்வரங்கம் ஆகியவற்றை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் தொடர்ந்து ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

இறுதியாக கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயளர் திருமதி ராஜ்மீரா ராசய்யா நன்றியுரையுடன் அன்றைய இலக்கிய விழா இனிதே நிறைவேறியது.



pudhuvairaman@gmail.com