மூதுரை காட்டும் உவமை நயம்.
முனைவர் நா.அமுதாதேவி
முன்னுரை:
வாழ்வியலைச் சொல்லக்கூடிய நூல்கள் பல இருப்பினும் அவற்றில் அவ்வையாhரின்
நூல்களுக்கு என்றும் சமுதாயத்தில் தனித்த இடம் உண்டு. அவ்வையார்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் கருத்தினைச் சென்று சேர்க்கும்
வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மூதுரை என்னும் இந்நூல்
கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்களை உள்ளடக்கியது ஆகும். விநாயகர்
வணக்கத்துடன் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. புழமையான அறக்கருத்துக்களைத்
தன்னிடம் கொண்டிருப்பதால் இந்நூல் மூதுரை என்றழைக்கப்படுகிறது.
இந்நூலுக்கு வாக்குண்டாம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடவுள்
வணக்கப்பாடல் வாக்குண்டாம் எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றுள்ளது.
மூதுரை என்ற இந்நூல் சுட்டிக்காட்டியுள்ள உவமைநயத்தினை ஆய்வதாக
இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.
உவமையின் சிறப்பு
செய்யுளுக்கும் பாக்களுக்கும் அழகு சேர்ப்பது கவிஞர்கள் கையாளும் சொல்
திறனனாகும். தாம் சொல்;ல விரும்பும் கருத்துக்களுக்கு அழகு சேர்ப்பது
உவமையின் சிறப்பாகும். இத்தகைய உவமையைப் பல புலவர்களும் சிறப்பாகக்
கையாண்டுள்ளனர். தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளின் இயல்பினை
விளக்குவதாக அமைவது உவமையின் சிறப்பாகும். அவ்வகையில் இந்நூலின் பல
பாடல் கருத்துக்களை விளக்குவதற்காக அவ்வையார் எளிய பல உவமைகளை சான்றாகக்
காட்டி விளக்கியுள்ளார்.
சுட்டாலும் சங்கு வெண்மை தரும்
'அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்' (மூதுரை -பா-4)
நற்பண்பு இல்லாதவர்களிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நம்மிடம்
நண்பர்களாகப் பழக மாட்டார்கள். தம்முடைய நிலையில் இருந்து தாழ்ந்தாலும்
நற்பண்பு உடையவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்களாகவே பழகுவர். இவர்களின்
நட்பு எதனை ஒத்தது என்றால் பால் எவ்வளவு காய்ச்சினாலும் தன் சுவையில்
இருந்து குன்றாதது போலவும் சங்கு தீயில் இட்டாலும் மேலும் மேலும்
வெண்மையாக மாறுவதனைப் போல சான்றோர்கள் தம் உயரிய பண்பு நிலையில் இருந்து
ஒருபொழுதும் மாறமாட்டார்கள் என்பதனை எடுத்துரைக்க எளிய இரண்டு பொருள்களை
உவமையாகக் கூறியுள்ளார்.
காலம்கைகூடுதல்:
மரத்தில் இலைகளும் கிளைகளும் அடர்ந்து செழிப்புற்று வளர்ந்த போதும் அது
உரிய பருவத்தினை அடைந்த போது மட்டுமே பயன் தரக் கூடிய இயல்பினை உடையது.
அது போல நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ள பல வகையில் முயன்ற போதும்
அதற்கான காலம் கைகூடி வரும் வரையில் காத்திருந்து நாம் பயன் பெற
வேண்டும். ஒருபொழுதும் நம் முயற்சியைக் கைவிடுதல் கூடாது என்பதனையும்
காத்திருத்தலின் அவசியத்தையும் நமக்கு உரைத்துள்ளார்.
'அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா' (பா-5)
குணமும் குலமும்:
நீரின் அளவினைப் பொறுத்து அல்லிப்பூ வளருவதனைப் போல நாம் கற்ற நூல்களின்
அளவினைப் பொருத்தே நமக்கு அறிவு வளரும். முற்பிறவியில் நாம் செய்த பாவ
புண்ணியச் செயல்களின் அடிப்படையில் நாம் இப்பொழுது பயனை அனுபவித்துக்
கொண்டு இருக்கின்றோம். அது போல தாம் கற்ற கல்வி அறிவானது நம்முடைய நூல்
அறிவினைப் பொறுத்து அமையும். எனவே படிக்க வேண்டிய கால கட்டத்தில்
முறையான கல்வி அறிவினைப் பெற்றுப் படித்துப் பயன்பெற வேண்டும். அதனை
விளக்க அவ்வையார் எளிமையான சான்றினைப் பயன்படுத்தியுள்ளார்.
'நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு- மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்' (பா-7)
என்ற இப்பாடலடிகளின் வாயிலாக எளிய உமையைக் கையாண்டமையைக் காணமுடிகின்றது.
ஊருவுகண்டு எள்ளாமை
'மடல் பெரிது தழை: மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா- கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்' (பா-12)
தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் நறுமணம் தருவது இல்லை. ஆனால்
அம்மடலைக் காட்டிலும் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. கடலின்
நீர் எதற்கும் பயன்படுவது இல்லை. ஆனால் அதன் அருகில் தோண்டப்படும்
சிறிய ஊற்று நீரானது குடிப்பதற்கு ஏற்ற நல்ல சுவையான நீரைத்தருகிறது.
அது போல ஒருவருடைய உருவத்தைக் கண்டு அவருடைய குணத்தினை நாம் முடிவு
செய்வது தவறாகும் என்பதனை இச்சான்றின் வாயிலாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்லாதவன் செயல்
'காண மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து- தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி' ( பா-14)
காட்டில் மயில் நடனமாடுவதனைப் பார்த்த வான்கோழி தன்னையும் அது போன்ற
அழகுடைய மயிலாக எண்ணிக் கொண்டு தன்னுடைய அழகற்ற சிறகினை விரித்து
ஆடுவதனைப் போன்றது கல்லாதவர்களின் செயல். முறையான கல்வி அறிவினைப்
பெறாதவன் தன்னுடைய நடை, உடை பழக்கவழக்கத்தினை கற்றவர்களைப் போலக் தன்னை
எண்ணிக் கொண்டு செயல்படும் எண்ணம் உடையவர்களை வான்கோழியாக சித்தரித்துக்
காட்டியுள்ளார். முறையாகக் கல்விகற்காதவனுடைய சொல்லும் செயலும் பயனற்றது
என்பதனை எளிய சான்றின்வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பயனற்ற உதவி
'வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல்
பாங்கு அழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்' (பா-15)
புலிக்கு நோயை குணப்படுத்திய மருத்துவனை புலி உடல் நலமானதும் தன்னுடைய
உணவாகக் எடுத்துக்கொள்ளும். அது தன்னைக் காப்பாற்றியவன் என்று எண்ணாது.
நம்முடைய பலனை அறியாத அற்பர்களுக்கு வலிந்து நாம் உதவி செய்யும் பொழுது
அது எவ்விதப் பயனையும் நமக்கு வழங்காது. மாறாக அது பல நேரங்களில் நமக்கே
ஆபத்தினைத் தருவதாக அமைந்துவிடுகிறது. கல்லின் மீது பானையை உடைத்தால்
பயன்னில்லாமல் அழிந்துவிடுவது போல பயனற்றவர்களுக்கு நாம் செய்த
உதவியானது தீமையாய் மாறிவிடுகிறது.
காலம் வரும்வரை காத்திருத்தல்
'அடக்கம் உடையார் அறிவிலார் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா- மடைத் தலையில்
ஒடமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு' (பா-16)
நீர் பாயும் இடத்தில் சிறிய மீன்கள் பலவும் அங்கும் இங்குமாகச் சென்று
கொண்டிருந்த போதிலும் கொக்கானது தனக்கான பெரிய மீன் இரையாக வரும்
வரையில் காத்திருப்பது போல சான்றோர்கள் தனக்கான வாய்ப்புகள் வரும்வரை
காத்துக் கொண்டிருப்பர். சான்றோர்கள் அமைதியாக இருக்கின்றார்கள்
என்பதனால் அவர்களைத் தவறாக நாம் எண்ணிக் கொண்டு ஏளனம் செய்தல் கூடாது.
துன்பம் பகிர்தல்
'அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல
உற்றுழித் தீர்வார் உறவு அல்லார் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு' (பா.17)
குளத்தில் நீர் வற்றியதும் பறவைகள் விலகிச் செல்வது போல நமக்குத்
துன்பம் வந்த போது நம்மைப்பாதுகாத்து ஆறுதல் கூறாமல் விட்டுவிலகிச்
செல்கின்றவர்கள் உறவினர்கள் அல்லர். குளத்தில் நீர் இல்லாத போதும்
அக்குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற கொடிகளைக் காணமுடியும். அது
போல நமக்குத் துன்பம் வந்த போது நம்முடைய துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு
ஆறுதல் கூறுகின்றவர்களே உண்மையான உறவுகள்.
சிறந்தபண்பு
'சீரியர் கெட்டாலும் சீரியரே: சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? சுpரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் என்
ஆகும்
மண்ணின் குடம் உடைந்தால்?' (பா-18)
தங்கத்தால் செய்த பானை உடைந்து சிதறினால் சிதறிய அனைத்தும் தங்கமாகவே
தோன்றும். ஆனால் மண்பானை உடைந்து போனால் உடைந்த அனைத்தும் மண்ணாகவே
காட்சி தரும். அது போல நாம் சார்ந்திருக்கின்றவர்களின் குணம் தங்கம்
போன்றதா என்பதும் மண் போன்றதா என்பதும் ஆய்ந்து பார்த்தல் வேண்டும்.
உடன்பிறந்தவர் இயல்பு:
'உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி- உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு' (பா-20)
ஒருவனுக்கு வரும் வியாதியானது அவனுடனே பிறந்து அவனைNயு கொல்லும் ஆற்றல்
பெற்றது. அது போல நம்முடன் பிறந்த அனைவரும் நம் உறவு என்று நினைக்க
முடியாது. பல நேரங்களில் அவர்களால் நமக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது.
பெரிய மலையில் இருக்கும் மூலிகைகளால் நம் நோய் குணமாவது போல எங்கோ
இருந்து நமக்கு அறிமுகமாகும் சிலரால் நமக்கு நன்மை நடைபெறும் என்பதனை
எளிய சான்றின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார்.
சான்றோரின் இயல்பு
'கல் பிளவோடு ஓப்பர் கயவர்:கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பர் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்' (பா.23)
சிந்தனைகளாலும் தன்னுடைய செயல்களாலும் தாழ்ந்த எண்ணம் உடையவர்கள்
பிறரிடம் சிறுவேறுபாடு வந்தாலே கல்லைப்போல பிரிந்து விடுவார்கள்.
சான்றோர்கள் எவ்வளவு கோபம் கொண்டு பிரிந்து சென்றாலும் பிரிந்த தங்கம்
போல மீண்டும் சேர்ந்து விடுவர். சான்றோர்களின் கோபம் நீரில் அம்பு
எய்தது போல நிலைப்புத்தன்மை அற்றது. எனவே சான்றோர்கள் கோபம் கொண்டாலும்
அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு நாம் பயன் பெறுதல் வேண்டும் என்பதனை
எளிய சான்றுகாட்டி விளக்கியுள்ளார்.
கற்றவரைவிரும்புதல்
'நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்' (பா.24)
குளத்தில் தாமரைப் பூத்திருக்கும் பொழுது அன்னப்பறவை சேர்ந்து வாழும்.
அது போல கற்றவர்களை கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில்
பிணத்தைக் காக்கைகள் சேர்வது போல கல்வி அறிவில்லாத மூடர்களை மூடர்களே
சேர்ந்து வாழ்வர். இனம் இனத்தைச் சாரும் என்பது பழமொழி அதுபோல
கற்றவர்களை கற்றவர்களும் கல்லாதவர்களை கல்லாதவர்களும் சேர்ந்து வாழ்வர்
என்பதனை எளிய உயிரினங்களை சான்றுகாட்டி விளக்கியுள்ளார்.
பாம்பும் நஞ்சும்
'நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடைக்கும் நீர்ப்பாம்பு- நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்' (பா-25)
நாகப்பாம்பானது தன்னிடம் விஷம் உள்ளதனை அறிந்து மறைந்து வாழும்.
விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ எவ்விதப்பயமும் இன்றி வெளியில் திரிந்து
கொண்டு இருக்கும். அதைப்போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்கள் அதை மறைத்து
வாழ்ந்து கொண்டிருப்பர். துன் மனதில் குற்றம் இல்லாதவர்கள் எவ்வித
பயமும் இன்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர் என்பதனை எளிய உவமை
வாயிலாகச் சுட்டியுள்ளார்.
அரசன் இயல்பு
'சந்தனம் தன் குறடு தான் தோய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?' (பா.28)
சந்தனம் தேய்ந்து மெலிந்திருந்தாலும் நறுமணம் குறைவது இல்லை. அதைப்
போலவே தாராள குணம் கொண்ட அரசர்களும் தம்மிடம் பொருள் இல்லாத காலத்தும்
பொருள் கொடுத்து பிறருக்கு உதவுவர். எத்தகைய நிலையிலும் அவர்களின்
மனம்மாறுவது இல்லை. சந்தனம் தன் குணத்தில் மாறாமல் இருப்பது போல
மன்னர்களும் தம் வள்ளல் தன்மையில் மாறாது இருப்பர். இந்நிலையை அவ்வையார்
எளிய சான்றுகாட்டி விளக்கியுள்ளார்.
பண்புடையவர் செயல்
'சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்' (பா-30)
தன்னை வெட்டித் தனக்குத் துன்பம் தருகின்றவர்களுக்கும் மரம் நிழல்
தருவது போல அறிவுடைய சான்றோர்கள் தம் உயிருக்;குக் கேடு விளைவிக்கும்
தீயவராக இருப்பினும் இயன்ற வரை அவர்களுக்கும் உதவி செய்து அவர்களைப்
பாதுகாக்க முன்வருவர் என்பதனை எளிய சான்றுகாட்டி விளக்கியுள்ளார்.
நிறைவுரை:
இலக்கியங்கள் வாழ்வியலை சுவைபடக் கூற பெரும் துணையாக அமைவது உவமையாகும்.
புலவர்கள் தன் கற்பனையால் கண்டவற்றைப் பதிவு செய்வதற்கும் தான் கண்ணால்
கண்டு உணர்ந்து தன்னைப் பாதித்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கும் பெரும்
வேறுபாடு உண்டு. கவிஞன் தான் கண்ட அதே மன உணர்வை வாசகனுக்கும் தர
முயற்சி செய்கிறான். எழுத்தாளனும் வாசகனும் ஒரே புள்ளியில் சந்திக்கும்
பொழுது வாசகன் அதே உணர்வினைப் பெறும் பொழுது எழுத்தாளன் வெற்றி
பெற்றுவிடுகிறான். அவ்வகையில் அவ்வையார் தான் கண்ட எளிய பொருள்களையும்
காட்சிகளையும் உவமையாக எடுத்துக்காட்டி வாழ்வின் அறத்தை எளிமையாக
எடுத்துக்காட்டியுள்ளார்.
முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|