வெற்றிப் படிக்கட்டில்
எம்ஜிஆரின் முதல் பாடல்
முனைவர் செ.இராஜேஸ்வரி
பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும் என்றான் மகாகவி பாரதி. இவ்வார்த்தையை மெய்ப்பிக்கும்
வகையில் தன்னுடைய பாடல்களால் இதயத்தை வசப்படுத்தியவர் எம்ஜிஆர். எளிய
சொற்கள் பயனுள்ள கருத்து இனிய இசை இம்மூன்றையும் சேர்த்து தேனிசை
பாடல்களைத் தன் படங்களில் இடம் பெறச் செய்தவர் எம்ஜிஆர். சிறு வயது
முதல் சினிமாவுக்கு வரும் வரை அவர் நாடக க் கம்பெனிகளில் நடித்து
வந்தார். அப்போது புராணப் கதாபாத்திரங்களில் பாடல்களைப் பாடுவது
வழக்கமாக இருந்ததால் எம்ஜிஆருக்கு இசை அறிவும் நுணுக்கமும்
பாடல்வரிகளின் எளிமையும் கருத்தாழமும் அதன் ஆற்றலும் பற்றி நல்ல அறிவும்
தேர்ச்சியும் இருந்தது. இசை மக்களின் இதயத்தைத் தொடும் அவர்களை
ஆட்டுவிக்கும் ஊக்குவிக்கும் என்பதை அறிந்த எம் ஜி ஆர் இசைப் பாடல்கலால்
அவ்வாறே அமைத்து தன் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார்.
எம் ஜி ஆரே ஒரு கவிதை என்று பாராட்டிய அண்ணா
உலகத் தமிழ் மாநாட்டில் கவிதை என்னும் தலைப்பில் பேசிவிட்டு எம் ஜி ஆர்
அமர்ந்த பின்பு அண்ணா பேசத் தொடங்கினார். ''அதனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதிலே அறிந்ததுதான் என்றாலும் எத்துணை அழகம்மா என்று
அறிந்தவரையும் வியக்க வைக்கும் அருங்கலையே கவிதையாகும்'' என்று
கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மேலும் 'அழகும்
உணர்ச்சியும் சேர்ந்தது தான் கவிதை என்று எம்ஜிஆர் கூறினார். நீங்கள்
கைதட்டினார்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகு தான் தெரிந்தது; அவர்
தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த
எம் ஜி ஆரே ஒரு கவிதை தானே'' என்றார் அண்ணா. மக்களின் கரகோஷம் விண்ணைப்
பிளந்தது. அண்ணா எம் ஜி ஆரை கவிதையாக கண்டு ரசித்தார்.
வெற்றிப் படிக்கட்டில் முதல் பாடல்
அழகும் உணர்ச்சியும் சேர்ந்த கவிதையாக விளங்கிய எம்ஜிஆர் தன் படத்திலும்
அழகும் உணர்ச்சியும் சேர்ந்த கவிதைகளை பாடலாசிரியர்களிடம் இருந்து
பெற்று ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். இசைப் பாடலின் ஆற்றலை நன்கு
உணர்ந்திருந்த எம்ஜிஆருக்கு 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படத்தில்
இடம்பெற்ற
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
நம் நாட்டிலே
என்ற பாடல் அரசியலுக்கு அடித்தளம் இட்டது. எம் ஜி ஆர் படத்தில்
இப்பாடலைப் பாடி நடித்ததும் அப்பாடல் மக்களிடையே பெற்ற வரவேற்பை அதன்
செல்வாக்கை எம் ஜி ஆர் நுட்பமாக உணர்ந்து கொண்டார். மக்கள் மாற்றத்தை
விரும்புகின்றனர்; மாற்றத்தைக் கொண்டுவருவார் எம்ஜிஆர் என்று நம்பினர்.
இந்த நம்பிக்கையை எம்ஜிஆர் இன்னும் வலுப்படுத்தும் வகையில் தக்க
வைக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் இது போன்ற நல்ல தத்துவப்
பாடல்களை பாடல் ஆசிரியரிடம் கேட்டு எழுதி வாங்கி இசையமைப்பாளரிடம்
அதற்கு மெட்டு போட செய்தார்.
முழு நிறைவு பெறுவதில் கவனம் வைத்த எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் தனது பாடலுக்கு எந்த மெட்டு போட்டாலும் சரி என்று அமைதி
அடைபவர் அல்ல. 60 அல்லது 70 மெட்டுக்கள் போட்டுக் கொண்டு வந்தாலும் கூட
அவற்றைப் பொறுமையோடு கேட்டு அவை சரியில்லை தனக்கு மன நிறைவைத் தரவில்லை
என்று உணர்ந்தால் இசையமைப்பாளரிடம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் வேறு
மெட்டுப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி விடுவார். ஒரு முறை
எம் எஸ் வி கோபித்துக்கொண்டு தன ஆர்மோனியப் பெட்டியை தனது காரில் வைத்து
எம் ஜி ஆர் வசித்த ராமாவரம் தோட்டத்துக்கே அனுப்பிவிட்டார். அவரையே
மெட்டு போடசொல்லுங்கள் என்றார். ஆனால் இதெற்கெல்லாம் சளைத்தவர் அல்ல எம்
ஜி ஆர். திரும்பவும் எம் எஸ் வியைக் கொண்டு தான் அப்படத்தை முடித்தார்.
கோபிப்பவர் யாராக இருந்தாலும் நேரில் அழைத்துப் பேசி சமாதானம்
செய்துவிடும் ராஜ வசியம் படைத்தவர் எம் ஜி ஆர் என்று திரையுலகினர்
நம்பினர்.
எம்.ஜி.ஆருக்கு பாட்டின் நிறைவான வடிவம் தான் முக்கியமே தவிர
இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் 'இவ்வளவு உழைத்திருக்கிறார்களே
அவர்களுடைய உழைப்பை நான் உதாசீனப்படுத்துகிறோம்' என்று அவர் ஒருபோதும்
நினைத்துக் கவலைப் படுவதில்லை. சுரங்கத்தைத் தோண்டி தங்கம் எடுப்பது
போல திறமையாளர்கள் இடமிருந்து மிக நல்ல பாடல்களை வரவழைத்தவர் எம்ஜிஆர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு இசை அமைத்ததில் சற்று மன வருத்தம்
ஏற்பட்ட எம் எஸ் விஸ்வநாதனுக்கு விநியோகஸ்தர்கள் அந்த படத்தை வாங்க
வந்தபோது 'உங்களின் பாராட்டு அனைத்துக்கும் சொந்தக்காரர் இதோ வருகிறார்'
என்று சொல்லி எம்எஸ் விஸ்வநாதனை அங்கு வரவழைத்துக் காட்டினார்.
வினியோகஸ்தர்கள் அவருக்குப் பெரிய மாலை அணிவித்து பாராட்டும்படி
செய்தார்.
வெற்றியைப் பகிர்ந்தளித்த எம் ஜி ஆர்
பாட்டின் வெற்றி படத்தின் வெற்றி என வெற்றிகள் குவியும் போது அதற்கு
சொந்தக்காரன் தான் மட்டும் இல்லை என்பதை உணர்ந்திருந்த எம்ஜிஆர் அந்த
வெற்றியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பாராட்டுவதில் தாராள மனம்
படைத்தவராக இருந்தார். இப்படத்திற்கு எம்ஜிஆர் 50 ஆயிரம் ரூபாய் எம்எஸ்
விஸ்வநாதனுக்கு வழங்கினார் இத்தொகை அவர் இதற்கு முன்பு எந்தப்
படத்துக்கும் பெறாத பெரும் தொகை ஆகும். எம்ஜிஆர் படத்தில் ஐந்து மடங்கு
பத்து மடங்கு வேலையும் அதிகம் இருக்கும்; அதற்கேற்ப ஊதியமும் புகழும்
கிடைக்கும். எனவே மற்ற படங்களில் வேலை பார்ப்பதை விட எம்ஜிஆர்
படங்களுக்கு பாட்டு எழுதவும் இசை அமைக்கவும் பலரும் முன்னுரிமை
கொடுத்தனர். எம்ஜி ஆர் படம் ஒன்றில் வேளை செய்துவிட்டால் அதற்குப் பிறகு
மளமளவென்று பட வாய்ப்புக்கள் அவர்களுக்கு குவியும். எனிவே எல்லோரும் எம்
ஜி ஆர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அல்லது ஒரு பாட்டிலாவது தலை
காட்ட விரும்பினர்.
ஒரு பாட்டு போட்ட ராஜபாட்டை
மலைக்கள்ளன் படத்தில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் பாடலுக்கு இருந்த
வரவேற்பை பார்த்து எம்ஜிஆர் மக்களின் அதிருப்தியை பாடலாக கொண்டுவந்து
அவர்கள் முன்பு பாடிக் காட்டும்போது அவர்கள் தாமே அந்த கதாபாத்திரமாக
மாறி அந்தப் பாட்டை பாடுவதாகக் கற்பனை செய்து மகிழ்ந்து போகின்றனர்.
அவர்களுக்குள் இருந்த ஏக்கமும் வேதனையும் தணிந்து போகிறது. படம்
பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு எம்ஜிஆராக மாறிவிடுகின்றனர். இது
படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கின்றது. எம்ஜிஆருக்கும் மக்கள்
மனதில் பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது. இந்த நுட்பத்தை உணர்ந்து
எம்ஜிஆர் மீண்டும் மீண்டும் தன் படத்தில் தன் படம்பார்க்க வரும்
ரசிகர்களைத் தன்னைப் போல் ஒரு வீரமிக்கவனாக விளைவு சார்ந்த ஒரு
கதாநாயகனாக ஒரு ஹீரோவாக மாற்றப் பார்க்கிறார். தங்களுக்குள் ஏற்படும்
ஊக்கமும் உற்சாகமும் எம்ஜிஆர் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தங்களின்
அன்றாட பிரச்சினைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் துணை நின்றது.
எம் ஜி ஆரை போல வாழும் எம் ஜி ஆர் ரசிகர்கள்
கள ஆய்வில் சந்தித்த ஒரு எம் ஜி ஆர் ரசிகர் மிகவும் நேர்மையானவர் அநீதி
நடைபெற்றால் கொதித்து எழும் குணம் கொண்டவர். இதனால் பல ருடைய
கோபத்துக்கு ஆளானார். ஆனாலும் தனது குணத்தை இவர் மாற்றிக்கொள்ளவில்லை.
ஏனென்றால் இவர் சிறு குழந்தையாக இருக்கும் போது இவரது பாட்டி இவரை எம்
ஜி ஆரிடம் கொண்டு போய் கொடுத்தார். எம் ஜி ஆரும் முத்தம் கொடுத்து
குழந்தையைத் திருப்பி கொடுத்தார். சிறு வயது முதல் இவர் பாட்டி இவருக்கு
எம் ஜி ஆர் படங்களைக் காட்டி இவரைப் போல நீ நல்லவனாக வல்லவனாக இருக்க
வேண்டும் என்று சொல்லி வளர்த்திருக்கிறார். அதனால் இவர் ஒரு எம் ஜி
ஆராகவே வளர்ந்திருக்கிறார். இன்றும் அப்படியே இருக்கிறார். மற்றவர்களின்
கோபம் மற்றும் வெறுப்பு கண்டு வருந்துவதில்லை என்றார். இது தான் எம் ஜி
தன ரசிகர்களிடம் எதிர்பார்த்த சமுக அக்கறை மற்றும் சேவை அவர்களும்
அப்படியே வளர்ந்தனர். இன்றும் எம் ஜி ஆர் ரசிகர் மன்றங்கள் சமுக
சேவையில் முன்னணியில் இருக்கின்றன. எம் ஜி ஆர் தனது ரசிகர் மன்ற
மாநாட்டில் இக்கருத்தை வலியுறுத்தினார். ரசிகர்களும் அதனையே
பின்பற்றுகின்றனர்.
அரசியலுக்கு அடிக்கல் நாட்டிய பாடல்
'எத்தனை காலம் தான் ஏமாற்றுவோர் இந்த நாட்டிலே' என்ற பாடலில் தோன்றிய
ஈர்ப்பினால் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஒரு எம்ஜிஆராகக்
கருதி எம்ஜிஆர் படப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். அப்பாடல்களை இன்று
வரை தம்முடையதாக்கிக் கொண்டனர் 1954 முதல் 2019 வரை கடந்த 65 ஆண்டுகளாக
இப்பாட;லை எம்ஜிஆர் ரசிகர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பாடியும்
கேட்டும் மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். மற்றவர்களும் கேட்கும்போது
இப்பாடலின் கருத்தை ஏற்றுக்கொண்டு ஆமோதிக்கின்றனர்.
பட்சிராஜா பிக்சர்ஸாரின் மலைக்கள்ளன் படத்தில் வந்த எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலில்
ஊரெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வியில்லாத பேரே இல்லாமல் செய்வோம்
கணக்காக பல தொழில் பயிலுவோம்
கஞ்சிக்கில்லை என்னும் சொல்லினை மாற்றுவோம்
என்று எம்ஜிஆர் பாடியபோது இதுதான் நம்முடைய தேவை. இவை நடந்தால் நமக்கு
நல்லதொரு வாழ்வு அமையும் என்று மக்களும் எம்ஜிஆரோடு இணைந்து
சிந்தித்தனர்.
கல்வி கிடைப்பதில் இருந்த சிக்கல்
வெள்ளைக்காரர்களின் வரவுக்குப் பின்னர் கல்வி ஒன்றே அறியாமை என்னும்
இருளை அகற்றும் என்பதை மக்கள் உணர்ந்தனர். காரணம் கல்வி என்பது அப்போது
பார்ப்பனருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. சில உ.வே. சாமிநாதையர் போன்ற
பார்ப்பனர்கள் அபிராமணருக்கு ஜபிராமணர் அல்லாதவர்ஸ கல்வி கற்பிப்பது
இல்லை என்ற முடிவுடன் இருந்தனர். எனவே பிராமணரல்லாதவருக்கு கல்வி என்பது
எட்டாக்கனியாக இருந்தது. எம்ஜிஆர் தன் பாடலில்
ஊரெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி இல்லாத பேரே இல்லாமல் செய்வோம்
என்று பாடியதும் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்ற நிலை ஏற்படும்போது
பிராமணருக்கு சமமான நிலையை மற்றவர்களும் அடைந்துவிட்டோம் என்ற பெருமித
உணர்வைப் பெற்றனர்.
கல்வி கிடைத்துவிட்டால் மனதின் இருள் ஒழிந்துவிடும்; சமூகத்தில் கவுரவம்
உயரும்; மற்றவர்கள் மதிப்பார்கள்; வேலை கிடைக்கும்; நல்ல அந்தஸ்து
உள்ளவர்களாக கௌரவமாக சமுகத்தில் வாழ முடியும். இவை அனைத்திற்கும்
கல்வியே பிரதானம் என்பதால் கல்விக்காக மக்கள் ஏங்கிக் கிடந்த காலம் அது.
கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும்
கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் மேலும் சில சலுகைகளை அங்கு அனுபவித்தனர்.
மதம் மாற்றி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவும் கிறிஸ்தவப்
பள்ளிக்கூடங்களுக்கு சிலர் தம் பிள்ளைகளை அனுப்ப மறுத்தனர். இதனால் பணம்
கொடுத்து படிக்க வைக்க முடியும் என்று வசதி படைத்தவர்கள் கூட தங்கள்
பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்தனர். எம்ஜிஆர்
இந்த நிலையை மாற்றுவேன் என்று பாடியதும் மக்கள் அகமகிழ்ந்து எம்ஜிஆரின்
பின்பு மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல மயங்கிக் கிடந்தனர். மலைக்கள்ளன்
பாடல் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எம்ஜிஆர் எளிய மனிதர்களின் மன வேதனையை
எதிர்பார்ப்பை புலப்படுத்தும் பாடல்களை தன் படத்தில் தொடர்ந்து வைக்கத்
தொடங்கினார்.
இன்னும் பல..
மகாதேவியில் 'தாயத்து தாயத்து'இ மதுரை வீரனில் 'ஏச்சு பிழைக்கும்
பிழைப்பே சரிதானா எண்ணிப் பாருங்க', தாய்க்கு பின் தாரத்தில் 'மனுசனை
மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே', நாடோடி மன்னனில் 'காடு
வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்', மன்னாதி
மன்னனில் 'அச்சம் என்பது மடமையடா', ஆசை முகத்தில் 'எத்தனை பெரிய
மனிதருக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு, எங்க வீட்டு பிள்ளையில் ' நான்
ஆணையிட்டால்' வேட்டைக்காரனில் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்', ளி
விளக்கில் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க'இ அரச கட்டளையில்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, புதிய பூமியில் 'நான்
உங்கள் வீட்டுப் பிள்ளை அடிமைப்பெண்ணில் 'உன்னை பார்த்து இந்த உலகம்
சிரிக்கிறது ', நம் நாட்டில் 'வாங்கய்யா வாத்தியாரைய்யா '
நாளை நமதே'யில் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், நேற்று இன்று
நாளையில் 'தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேத்து', உழைக்கும்
கரங்களில் 'நாளை உலகை ஆல வேண்டும் உழைக்கும் கரங்களே', மீனவ நன்பனில் 'நேருக்கு
நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்இ மற்றும் மதுரையை மீட்ட
சுந்தர பாண்டியனில் 'வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட' போன்ற பல
பாடல்கள் எம் ஜி ஆர் ஆட்சிக்கு வருவதற்கு சிவப்பு கம்பளம் விரித்தன.
படத்துக்கு ஒரு பாடல் என எம் ஜி ஆர் தனது ஆதரவு பாடல்களை அமைத்தார். அவை
ரசிகர்களிடம் ஆற்றல் மிகு பணியை செவ்வனே செய்து முடித்தன. அவை காலத்தால்
அழியாத பாடல்களாக இன்றும் நிலைத்து நிற்கின்றன.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|