ஈரோடு தமிழன்பனின் ஆற்றல்சால் மொழிபெயர்ப்பில்
''பாப்லோ நெருதாவின் கவிதைகள்''
பேராசிரியர் இரா.மோகன்
“என் கடமை
என் கவிதையோடு இயங்குவது…
மக்களிடம் இருந்து வருகிறேன் நான்
மக்களுக்காகப் பாடுகிறேன் நான்”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.104)
என மொழியும் பாப்லோ நெருதா,
எஸ்பானியக் கவிதை உலகில் சிறப்பிடம் பெறுபவர். அடிப்படையில், இயல்பில்
அவர் ஒரு போராளி: எளிய மக்களை உளமார நேசித்தவர்; மனித உறவுகளைப்
போற்றியவர்; உலகை, வாழ்வை, பெண்மையை உடன்பாட்டு நோக்கில் அணுகிப்
பாடியவர்; மார்க்சிய ஒளியில் தொடர்ந்து பயணித்தவர். அவருடைய
ஐம்பத்திரண்டு கவிதைகளை, அவரது கவிதை ஆளுமையை எடுத்துக்காட்டும்
நோக்கில் தெரிவு செய்து தமிழ்ப்படுத்தித் தந்துள்ளார் பேராசிரியர்
கவிஞர் ஈரோடு தமிழன்பன். ஆங்காங்கே தேவையான சிறுசிறு குறிப்புகளையும்
தந்திருப்பது – கவிதைகள் எழுதப்பெற்ற, தொகுத்து வெளியிடப் பெற்ற கால
வரிசையைக் கருத்தில் கொண்டு அமைத்திருப்பது – இத் தொகுப்பின்
தனிச்சிறப்பு ஆகும். பாப்லோ நெருதாவின் ‘முதல் கவிதை’யில் தொடங்கி,
‘கடைசிக் காட்சி’யில் முடித்திருப்பது சிறப்பு; திட்டமிட்டு அமைக்கப்
பெற்றதோ இல்லை தற்செயலாக அமைந்ததோ, ஓர் ஆண்டின் வாரங்களைக் குறிக்கும்
வகையில் 52 கவிதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
பாப்லோ நெருதாவின் முதல் கவிதை
பாப்லோ நெருதா தன் பதினோராவது பிறந்த நாளுக்கு இரு வாரங்களுக்கு முன்
உணர்வும் தவிப்புமாய்ப் பொங்கி வழிந்த மனநிலையில் முதல் கவிதையை எழுதித்
தன்னைப் பாசத்தோடும் பரிவோடும் வளர்த்த சிற்றன்னைக்குக் (தந்தையின்
இரண்டாவது மனைவிக்கு) காணிக்கையாக்கினார். [பாரதியும் தமது 11-ஆவது
வயதில் ‘பாரதிப் பட்டம்’ பெற்றது இங்கே நினைவுகூரத்தக்கது].
30.06.1915-இல் எழுதப்பெற்ற நெருதாவின் அந்த முதல் கவிதை வருமாறு:
“பொன்னான பகுதிகள் கொண்ட
வண்ணமிகு பூமியில் இருந்து
என் அன்பு அன்னையே!
உனக்குக் கொடுக்க
எளிய இந்த அஞ்சல் அட்டையைத்
தேர்ந்தெடுத்தேன் நான்”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.39)
“நெருதாவின் முதற்கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றியது. அந்தக்
குழந்தைப் பருவத்திலேயே (11 வயது) நெருதாவின் கனிவு, அன்புப் பெருக்கு
நம் நெஞ்சை அள்ளுகிறது. இந்த உலகு பொன்னுலகு என்பதை அந்தச் சிறுவன்
காண்கிறான். அதை அவனுடைய அன்புத் தாய்க்குப் பெருமிதத்துடன், நன்றி
உணர்வுடன் சொல்கிறான்” (முன்னுரை, பாப்லோ நெருதா கவிதைகள், ப.23) எனப்
பாப்லோ நெருதா எஸ்பானிய – இலத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின்
இயக்குநர் ஞாலன் சுப்பிரமணியன் இக் கவிதை குறித்து மொழிவது
மனங்-கொளத்தக்கது.
இறுதி நாள்களில் மனைவி மாட்டில்தி பற்றி
நெருதா எழுதிய இரு கவிதைகள்
‘ஒவ்வொரு நாளும் மாட்டில்தி’, ‘கடைசிக் காட்சி’ என இத் தொகுப்பில்
இடம்பெற்றிருக்கும் இறுதி இரு கவிதைகளும் மருத்துவமனையில் பாப்லோ நெருதா
இருந்த இறுதி நாள்களில் தம் மனைவி மாட்டில்தி பற்றி எழுதியவை.
“ஆக இப்படித்தான் –
ஒவ்வொரு காலைப் பொழுதிலும்
வாழ்வை எனக்கு வழங்குகிறாய்” (பாப்லோ நெருதா
கவிதைகள், ப.179)
என முதல் கவிதையையும்,
“ நீ வாழ்ந்த போது
நான் வாழ்ந்தது அழகு மிக்கது
இவ்வுலகம் நம்பகமானது
இரவில் நான் உறங்கும் போது
உன் சிறு கைகளுக்குள்
இது மிகப் பெரியது”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.181)
என இரண்டாவது கவிதையையும் நெருதா முடித்திருக்கும் பாங்கு படிப்பவர்
உள்ளத்தை நெக்குருகச் செய்வதாகும். வாழ்வில் எந்த நிலையிலும் நெருதா
நம்பிக்கையுடனேயே வாழ்ந்தார் என்பதையும், மனைவி மாட்டில்தி மீது உயிரையே
வைத்திருந்தார் என்பதையும் இவ்விரு கதைகளும் பறைசாற்றி நிற்கின்றன.
பாப்லோ நெருதாவின் சிற்றன்னையைப் பற்றிய நெகிழ்வான கவிதையுடன் தொடங்கும்
இத் தொகுப்பு, அவரது மனைவி மாட்டில்தி பற்றிய உருக்கமான கவிதையுடன்
நிறைவு பெற்றிருப்பது முத்தாய்ப்பு.
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காட்டும் கவிதை
“விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள்
மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள்
அளவுகோல்-களுக்குள் அடைபடாதிருந்தால் நான்ம் பொறுப்பாளியல்ல; நான்
பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல. உங்கள்
அளவு-கோல்களைத் தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்
கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்” (p.vii)
எனக் ‘காஞ்சனை’ சிறுகதைத் தொகுப்பிற்கு ‘எச்சரிக்கை’ என்னும் தலைப்பில்
எழுதிய முன்னுரையில் குறிப்பிடுவார் மணிக்கொடி எழுத்தாளர்
புதுமைப்பித்தன். ‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும், ஆழ்ந்திருக்கும்
கவியுளம் காண்கிலார்’ என நெஞ்சு பொறுக்காமல் நிலை கெட்ட திறனாய்வாளர்களை
நினைந்து வேதனையோடு பாடுவார் கவியரசர் பாரதியார். இவ்விரு
படைப்பாளிகளின் கருத்துக்களையும் நினைவுபடுத்தும் விதத்தில் பாப்லோ
நெருதா ‘திறனாய்வுக்கு ஒரு பாடல்’ என்னும் தலைப்பில் நீண்ட கவிதை
ஒன்றினைப் படைத்துள்ளார். அவரது கவிதையைத் திறனாய்வு செய்ய வந்த ஒருவர்
ஊமை விமர்சகராம்; இன்னொருவர் பிதற்று வாயராம்; அதன் பிறகு வந்த மிகப்
பலருள் சிலர் ஒன்றையும் பார்க்க முடியாதவர்களாம்; சிலர் ஒன்று விடாமல்
பார்க்க-வல்லவர்களாம். இன்னும் சிலர் அகராதிகளோடும் மர்மமான
ஆயுதங்களோடும் வணங்கத் தக்க மேற்கோள்களோடும் கவிஞரின் இரக்கத்திற்கு
உரிய கவிதையை அதை விரும்புகிற பாமரனிடம் இருந்து பிரித்துக் கொண்டு
போகும் வேலையைத் தொடங்கினார்களாம். அவர்களின் நடவடிக்கைகள் கவிதையின்
உயிர் எழுத்துக்களை அழித்து, ஏறத்தாழ அதைக் கொன்றேவிட்டனவாம்.
இந்-நிலையில் கவிஞர் குறுக்கிட்டு,
“இப்பொழுது
பெருமக்களே! கதையில் குறுக்கிடுவதற்காக
என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என்றால்
நான் சொல்வேன்
என்றென்றும் எளிய மக்களோடு வாழ்வதற்காகப்
புறப்பட்டுப் போகிறேன்”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.71)
என்று சொல்லிவிட்டு என்றென்றும் எளிய மக்களுடன் வாழ்வதற்காகப்
புறப்பட்டுப் போகிறார்.
பாப்லோ நெருதாவின் பார்வையில் முதியவர்களும் குழந்தைகளும்
“கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும்,
இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு
எப்பொழுதும் நிலைத்திருக்கும் படி அருள் செய்க” (பாரதியார் கவிதைகள்,
ப.285) என்பது பாரதியார் தேவர்களிடம் வேண்டும் பிரார்த்தனை ஆகும்.
வினா வடிவில் அமைந்த பாப்லோ நெருதாவின் குறுங்கவிதை ஒன்று இவ் வகையில்
ஒப்புநோக்கத் தக்கது:
“எனக்குள் இருந்த குழந்தை
எங்கே?
இருக்கிறதா? போய்விட்டதா?”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.159)
நமக்குள் இருந்த குழந்தை போய் விடுவதால் தான் வாழ்வில் இத்தனைத்
தொல்லைகளையும் துயர்களையும் நாம் அனுபவிக்க நேருகின்றது! என்றும்
குழந்தை மனத்தோடு இருந்து விட்டால் கவலை நம்மை ஒருபோதும் அணுகாது.
‘வயதுக்கு ஒரு பாடல்’ என்னும் தலைப்பில் அமைந்த பாப்லோ நெருதாவின்
பிறிதொரு கவிதை இப்படித் தொடங்குகின்றது.
“வயதை நான் நம்புவதில்லை
எல்லா முதியவர்களும்
கண்களில் ஒரு குழந்தையோடு
இருக்கின்றனர்.
குழந்தைகள்
அந்ந நாள் ஞானிகளின் கண்களோடு
கவனிக்கின்றனர் நம்மை”
(பாப்லோ நெருதாவின் கவிதைகள், ப.72)
முதியவர்களின் கண்களில் குழந்தைகளும், குழந்தைகளின் கண்களில் ஞானிகளும்
இருப்பதாக நெருதா குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
பாப்லோ நெருதாவின் கவிதை ஆளுமை
“எதைக் கண்டறிய வந்தேனோ
அதை அறிந்து கொள்ளாமல்
இந்தப்
பூமிக்கோளத்தை விட்டுப்
போக மாட்டேன் நான்
இன்னும்
அதிகத் தொலைவு நான் கடக்க வேண்டும்”
(பாப்லோ நெருதா கவிதைகள், ப.66)
என்னும் உறுதிப்பாட்டோடும் உயரிய குறிக்கோளுடனும் தமது மூச்சுத் தொடரின்
முற்றுப்புள்ளி வரை இயங்கிய பாப்லோ நெருதாவின் கவிதை ஆளுமையைத் தெளிவுற
அறிந்து, தெளிவு பெற ஈரோடு தமிழன்பன் தமது மொழிபெயர்ப்பில்
புலப்படுத்தியுள்ளார் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|