பாடல்களை எழுதி வாங்கிய
வாத்தியார்
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர் தன் படத்துக்குப்
பாடல்களை எழுதி வாங்கும் போது அவற்றில் அவருக்கு உடன்பாடு இல்லாத
சொற்களையும் தொடர்களையும் நீக்கும் படி சொல்லி விடுவார். தனக்கு
உகந்தவற்றை சேர்க்கவும் கூறுவார். ஒரு முறை கண்ணதாசனிடம் சிலர்
‘வாத்தியார் வாத்தியார் என்று அவரை அழைக்கின்றார்களே, அவர் எந்தப்
பள்ளிக்கூடத்தில் வாத்தியார்?’ என்று ஏளனமாக கேட்டார்கள். அப்போது
கண்ணதாசன் ‘அவர் நான் எழுதிய பாடல்களில் கூட சிவப்பு மையால் திருத்திய
வாத்தியார்’ என்று பெருமையோடு குறிப்பிட்டார். இவ்வாறு
பாடலாசிரியர்களோடு எம் ஜி ஆருக்கு இருந்த நெருக்கமான அன்பான பிணைப்பு
பற்றிய சில நிகழ்வுகளை இக்கட்டுரையில் காண்போம்.
சிரித்து சிரித்து..
196௦களில் கண்ணதாசனுக்கு மிகப்பெரிய கிராக்கி இருந்த காரணத்தால் அவரை
அழைத்துப் பாடல் எழுத செய்வது சிரமமான காரியமாக இருந்தது. ஒரு நாள்
எம்.ஜி.ஆர். அவரை அழைத்துவரச் செய்து ‘ஒரு பாடல் வேண்டும் உடனடியாக
எழுதி தர வேண்டும்’ என்று கேட்டார்.. அப்போது கண்ணதாசன் தான் வேறு ஒரு
பட நிறுவனத்திற்கு பாடல் எழுதச் செல்ல வேண்டுமே என்று தயங்கினார்.
எம்.ஜி.ஆர். சிரித்தபடி ‘இன்று நீங்கள் பாடல் எழுதி தராவிட்டால் உங்களை
விட மாட்டேன்’ என்று சொல்லி ஒரு அறைக்குள் அழைத்துக் கொண்டு போய்
அடைத்து விட்டார். ஒரு பத்து நிமிடம் கழித்து கதவைத் தட்டிய கண்ணதாசன்
பாடல் எழுதிய தாளை எம்.ஜி.ஆரிடம் நீட்டினார் அந்தத் தாளில் “சிரித்து
சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை
படித்தாய்” ‘என்ற காதல் பாடல் எழுதப் பட்டிருந்தது. உடனே இப்பாடலை
ஒலிப்பதிவு செய்து கடற்கரைச் சாலையில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி காரில்
செல்வதாக படப்பிடிப்பை விரைந்து நடத்தி முடித்தனர். இப்பாடல் இன்றுவரை
இளைஞர்களிடம் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற பாடலாகத்
திகழ்கிறது. எளிமையான சொற்களில் இனிமையான கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாடல் இது. காதலர்களுக்கு இடையிலான உரையாடல் போல் அமைந்தாலும்
கருத்துள்ள பாடல் ஆகும்.
“இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே”
என்ற பல்லவி வாழ்க்கையின் தத்துவத்தை காதலின் மகத்துவத்தை
எடுத்துரைக்கும் எளிய பல்லவி ஆகும்.
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
என்ற வரிகள் காதலும் காமமும் இணைந்த சுவையான வரிகளாகும்.
நான் ஆணையிட்டால்
இந்திய திரையரங்குகளில் பெரு வரவேற்பை பெற்ற பாடலான
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்"
என்ற பாட்டு எம் ஜி ஆரின் அரசியல் வருகைக்கு வரவேற்பிதழ் வாசித்த பாடல்
ஆகும். கவிஞர் வாலி எங்க வீட்டுப் பிள்ளை படத்துக்குப் பாடல் எழுதிய
போது எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டின் பல்லவியை முற்றிலுமாக மாற்றும்படி
கூறினார். ஏனென்றால் வாலி நான் அரசனானால் என்று எழுதியிருந்தார். இந்தத்
தொடர் ஏறத்தாழ if i were a king என்ற நாடோடி மன்னன் படத்தின்
மூலப்படமான ஆங்கிலப் படத் தொடரின் தமிழாக்கமாக அமைந்திருந்தது. ஆனால்
எம்.ஜி.ஆர். மக்களாட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் ‘மன்னனானால்’
‘அரசனானால்’ என்பது பொருந்தாக் கூற்றாக இருக்கின்றது. எனவே இதனை நீக்கி
விடுங்கள் என்றார்.
தன் வழி நல்ல வழியாக இருக்கலாம்
மருதகாசி எம்.ஜி.ஆரின் பல . படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவருடைய
பாடல்கள் இலக்கிய நயம் சொட்ட சொட்ட எழுதப்பட்ட சுவையான பாடல்களாகும்.
அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு எம் ஜி ஆர் தனது படங்களில் திமுகவின்
அராஜகத்தை வெளிவேஷத்தைச் சுட்டிக்காட்டும் பாடல்களை அமைத்தார். அதற்காக
அவர் திறமையான கவிஞர்களைப் பயன்படுத்திக் கொண்டார். செந்தமிழ்க்
கவிஞர்களான நா. காமராசன், புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்றோருக்கு
எம் ஜி ஆர் அப்போது நிறைய வாய்ப்புகள் அளித்தார். நினைத்ததை முடிப்பவன்
படத்துக்கு மருதகாசி எழுதிய
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடலில்
“பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
தன் வழியே போகிறவர் போகட்டுமே”
என்று மருதகாசி எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர் அதை வாசித்துப் பார்த்து
விட்டு ‘தன் வழி என்பது நல்ல வழியாக இருந்தால் எவரொருவரும் அவ்வழியைப்
பின்பற்றி போகலாம் அல்லவா அது சரி தானே. இங்கு இந்தப் பாடலில் நாம்
சுட்ட விரும்புவது அது அல்ல. வந்த வழி மறந்து விட்டு அறிவிழந்து நன்றி
கெட்டுப்போகின்றவர்களைப் பற்றித்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே இந்த வரியை மாற்றுங்கள்’ என்று குறிப்பிட மருதகாசி வியந்து போய்
விட்டார். இவ்வளவு நுணுக்கமாக எம்ஜிஆர் ஒவ்வொரு வார்த்தையையும்
ஆராய்கின்றார் என்று நினைத்த பாடலாசிரியர் “வந்த வழி மறந்து விட்டு கண்
மூடி போகிறவர் போகட்டுமே” என்று மாற்றிக் கொடுத்தார். எம்.ஜி.ஆர் இதனை
ஒப்புக் கொண்டார். இம்மாற்றத்தை ஏற்றுக் கொண்டார். மருதகாசி மாற்றிய
‘வந்த வழி மறந்து விட்டு கண் மூடி போகிறவர்’ என்ற வரி ‘அறிவிழந்து
போகிறவர் போகட்டும்’ என்ற பொருளில் அமைந்தது.
எம்.ஜி.ஆர் இப்பாடல் காட்சியில் நடிக்கும் போது எல்லோரும் தெளிவாக
புரிந்துகொள்ளும்படி ‘கண் மூடி போகிறவர்’ என்பதற்கு சிறப்பு கவனம்
அளித்து நடித்துக் காட்டியிருப்பார். மேலும் இவ்வரி பாட்டில் இரண்டு
முறை இடம்பெறும்படி செய்திருப்பார். தான் சொல்ல விரும்பிய கருத்துக்களை
பாடலாசிரியரிடம் எடுத்துச் சொல்லி தெளிவாக எழுதி வாங்கிய பின்பு
இயக்குனரிடமும் சொல்லி அதனைப் பார்ப்பவர்கள் மனதில் பதியும்படி
காட்சிப்படுத்துவது எம்ஜிஆரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இது
எம்.ஜி.ஆரின் வெற்றி சூத்திரங்களில் ஒன்றாகும்.
நமது கொடியா மகரக் கொடியா?
கவிஞர் முத்துலிங்கம் இலக்கிய நயத்தோடு பாடல் எழுதக்கூடிய கவிஞர் ஆவார்.
இவர் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் (1978) படத்துக்கு பாடல் எழுதிய போது
“கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்”
என்ற வரிகளை எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்தேன். நமது கொடி என்பதை
தணிக்கை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார். அதனை மகரக்கொடி
என்று மாற்றிவிடுங்கள். மகரம் என்றால் மீன் என பொருள் பெறும் அல்லவா.
பாண்டியனின் கொடி மீன்கொடி தானே என்று கூறினார். அதற்கு முத்துலிங்கம்
‘அண்ணே நான் தணிக்கை அதிகாரிகளிடம் கேட்டு விட்டேன். அவர்கள் ஒத்துக்
கொண்டார்கள். எனவே நமது கொடி என்றே இருக்கட்டும்’ என்றார். எம்ஜிஆர்
மிகவும் அகமகிழ்ந்து போனார். நம்மிடம் வருவதற்கு முன்பே நம்முடைய
சந்தேகங்களை ஊகித்து உணர்ந்து அதற்குரிய தெளிவுகளோடு முத்துலிங்கம்
வந்திருக்கின்றார் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் அருகில் இருப்பவர்களிடம்
‘இப்போது தெரிகிறதா நான் ஏன் முத்துலிங்கத்தை என்னோடு வைத்திருக்கிறேன்
என்று ’ எனச் சொல்லிப் பாராட்டினார்.
விவசாயி (1967) படம் எடுக்கப்பட்டதற்கு ஒரு வரலாறு உண்டு. அப்போது ஒரு
சில மாதங்களில் பொங்கல் வர இருந்தது. எம்ஜிஆர் தன் நாடக நடிகர்கள்
மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்.
அன்று தன்னைச் சந்திக்க வரும் அனைவருக்கும் அவர் பொங்கல் பரிசாக பணம்
கொடுப்பது உண்டு. இந்த பொங்கல் செலவுக்கு அவருக்கு நிறைய பணம்
தேவைப்பட்டது. பொதுவாக மனிதர்கள் தங்களிடம் பணம் இல்லை என்றால் உடனே
செலவைக் குறைத்துக் கொள்வது வழக்கம். பண்டிகை செலவை சற்று குறைத்து
சிக்கனமாக செலவு செய்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்டவர் அல்லர்.
அவர் பலர் வந்து சேர்ந்து கொண்டாடும் பொங்கல் விழாவை நம்மிடம் பணம்
இல்லை என்று சொல்லித் தட்டிக் கழிப்பது முறையாகாது என்று நினைத்து உடனே
சாண்டோ சின்னப்பா தேவரை அழைத்து ‘ஒரே மாதத்தில் ஒரு படம் எடுக்க
வேண்டும்; எனக்கு பொங்கல் செலவுக்கு எட்டு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது’
என்றார்.
தேவர் படம் எடுக்கும்போது ஒரு நவீன பழக்கத்தை வைத்து இருந்தார் அதாவது
முதல் தவணையில் மொத்தப் பணத்தையும் ரொக்கமாக நடிகர்களிடம்
கொடுத்துவிடுவார். அதே பழக்கத்திற்கு ஏற்ப எம்ஜிஆருக்கும் பணத்தை
ரொக்கமாகக் கொடுத்துவிட்டு சத்யா ஸ்டுடியோவிலும் கோயமுத்தூர் விவசாயப்
பண்ணையிலும் வைத்து படத்தை விரைவாக எடுத்து முடித்தார். பொங்கல்
விழாவுக்கு மற்றவர்களுக்குச் செலவழிக்க வேண்டுமே என்பதற்காக எம்ஜிஆர்
உழைத்துச் சம்பாதித்தார்.
தன்னுடைய உழைப்பில் கிடைத்த ஊதியத்தை மற்றவர்களுக்காகச் செலவழித்தவர்
எம்ஜிஆர். அவர் தன் வசதிக்கு போக மிச்சம் மீதியை செலவழிக்கவில்லை.
பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கடுமையாக உழைத்தார்.
இதுதான் மற்றவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க
ஒரு வித்தியாசம் ஆகும். விவசாயி படத்துக்கு பாட்டு எழுதுவது கண்ணதாசன்
வாலி தவிர விவசாயத்தில் நன்கு அனுபவம் உடைய வேறு கவிஞர்கள்
தேவைப்பட்டனர். எனவே எம்.ஜி.ஆர் மருதகாசியை அழைத்து பாடல்களை அவரைக்
கொண்டு எழுதும்படி செய்தார். அவ்வாறு கிடைத்த பாடல் தான் மருதகாசி
எழுதிய
“நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாத
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்” என்று வரும் பாடல்.
இப்பாடல் விதை பற்றிய சுவையான பாடல் ஆகும். எத்தனை இடங்களில் நாம் விதை
விதைக்க வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு சொல்லும் பாடல் ஆகும்.
மருதகாசி எழுதிய மற்றொரு பாடல் விவசாயி என்ற பாடல் ஆகும்.
“விவசாயி . . . . விவசாயி . . . .
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி . . . . விவசாயி . . .”
இப்பாடலில்
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது
பஞ்சம் இல்லையென்னும் அன்னக்கொடி
என்ற வரிகள் இந்நாட்டில் விவசாயி தான் கொடி கட்டி பறக்கிறான் என்பதை
சொல்லாமல் சொல்லிய சுவையான பாடல் ஆகும். மேலும்
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்”
என்றுவரிகள் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ்கிறது. என்ற
தன்னம்பிக்கையையும் மக்கள் மனதில் விதைத்தது. .
எம் ஜி ஆர் மருதகாசியைக் கொண்டு எழுதி வாங்கிய இப்பாடல்கள் இன்றும்
விவசாயியின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன. விதை விதைத்தல் என்பதில்
எத்தனை வகையான விதைகளை நாம் விதைக்க இந்த சமூகத்திற்குக் கடமைப்பட்டு
இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பாடலாக “நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும்
விதை விதைக்கணும்” என்ற பாடல் அமைந்துவிட்டது. கல்வி, உழைப்பு, ஒழுக்கம்
இவை அனைத்துமே நாம் மனித மனங்களில் விதைக்க வேண்டிய விதைகளாகும் என்பதை
இப்பாடல் நமக்கு தெரிவிப்பது சுவையானதும் கருத்தாழம் மிக்கதும் ஆகும்.
முதல்வர் நாற்காலியின் கால்கள்
எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பிறகு ஒரு பேட்டியின் போது ‘என்னுடைய
முதலமைச்சர் நாற்காலியில் நான்கு கால்களில் ஒன்று கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் ஆகும்’ என்று குறிப்பிட்டார். இவ்வாறு
தன்னுடைய அரசியல் வெற்றிக்கு காரணமாக அமைந்தவை தன்னுடைய திரைப்பட
பாடல்கள் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். அதற்காக உழைத்தும்
இருந்தார். அவற்றைப் பாடலாசிரியர்களிடம் கேட்டு எழுதிப் பெற்றார்.
1957இல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ஒரு தனிப் பாடலை
பொதுவுடைமை இதழ் ஒன்றில் இருந்து பார்த்துவிட்டு அதை தன்னுடைய நாடோடி
மன்னன் திரைப்படத்திற்கு ஏற்றவாறு சற்று மாற்றி அமைத்து தரும்படி கேட்டு
வாங்கினார். அந்தப் பாடல்தான் இன்று வரை அவருடைய அரசியல் அரிச்சுவடியின்
இரண்டாவது அத்தியாயமாக விளங்கும்.
“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும்தானே மிச்சம்” என்ற பாடல்.
இதனுடைய இறுதி வரிகளான
“நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்”
என்ற வரிகள் திரைப்படத்துக்காக சேர்க்கப் பட்டவை ஆகும்.
இந்த வரிகள் தாம் மக்கள் மனதில் அன்றே எம் ஜி ஆர் நம் தலைவர் ஆக
வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தன எனலாம். இதே வரிகள் தாம்
இன்றுவரை அவரை ஒரு அரசியல் தீர்க்கதரிசியாக உணரச் செய்கின்றது. அவர்
போடுவதாக சொன்ன சட்டங்களையும் தீட்டுவதாக சொன்ன திட்டங்களையும் அவர்
முதலமைச்சரான பிறகு நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கான முன்னோடி வாசகமாக
அமைந்தவை இந்த மூன்று வரிகள் தான்.
திமுகவின் சிறப்பு பற்றிய பாடல்
1969 இல் அண்ணா மறைந்த பிறகு கலைஞரை எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்
ஆக்கினார். அப்போது எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியன் தான் அடுத்த
முதலமைச்சர் என்று கருதிக் கொண்டிருந்த வேளையில் எம்.ஜி.ஆர்
எம்எல்ஏக்களை சத்யா ஸ்டுடியோவிற்கு அழைத்து ‘இன்றைக்கு இருக்கும்
இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸார் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால்
நமக்கு வெறும் கல்வி அறிவு படைத்தவர் மட்டும் இருந்தால் போதாது; சில
சூட்சுமங்களும் நுண்ணறிவும் உடைய ஒரு தலைவர் நமக்குத் தேவை.
அப்படிப்பட்டவர் முதல்வராக இருந்தால் மட்டுமே கட்சியையும் ஆட்சியையும்
சிறப்பாக கொண்டு செலுத்த முடியும்’ என்று எடுத்துரைத்து சட்டமன்ற
உறுப்பினர்களின் சம்மதத்தை பெற்றார். கலைஞரை முதலமைச்சராக
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற
உறுப்பினர்களும் காங்கிரசை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் அதற்கு
ஏட்டுப் படிப்பு மட்டும் போதாது சூழ்ச்சியும் தந்திரங்களும்
தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்டனர்.
1969 முதல் முதலமைச்சரான கருணாநிதி சில ஆண்டுகளில் தான் சுயநலம்
மிக்கவர் என்பதை மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் புரிய வைத்து
விட்டார். அவருடைய ஆட்சியில் ஊழல் மலிந்தது. எம்.ஜி.ஆர் அவரை எதிர்க்கத்
துணியும் இத் தருணத்தில் அவருடைய அனுதாபத்தைப் பெறுவதற்காக கருணாநிதி
அவரிடம் தான் மிகவும் கடன்பட்டு இருப்பதாகவும் தன் வீடு கடனில் மூழ்கப்
போவதாகவும் சொல்லி அவரும் அவருடைய மைத்துனர் முரசொலி மாறனும் எம்ஜிஆர்
தங்களுக்கு ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் அந்தப் படத்தை
வெளியிட்டு அதன் லாபத்தைக் கொண்டு ஜப்தி செய்யப்போகும் வீட்டை மீட்டு
விடுவோம் என்று நீலிக்கண்ணீர் வடித்தனர். இரக்க குணம் படைத்த எம்.ஜி.ஆர்
இவையெல்லாம் உண்மை என்று எண்ணி தானும் இலவசமாக நடித்துக் கொடுத்ததோடு
ஜெயலலிதாவையும் பணம் வாங்க வேண்டாம் நீயும் இலவசமாக நடித்துக் கொடு
என்றார். ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டார். இருவரும் இலவசமாக நடித்துக்
கொடுத்த கலைஞரின் எங்கள் தங்கம். என்ற படம் வெளிவந்தது. படத்தின் வெற்றி
விழாவின்போது கருணாநிதி என் போன்ற பலரை வாழ வைத்த எம்.ஜி.ஆர் என்று ஒரு
கவிதையில் பாராட்டினார்.
எங்கள் தங்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் எம்.ஜி.ஆர்.
வாலியை அழைத்து திமுகவைப் பற்றி அண்ணாவைப் பற்றி ஒரு பாடல் எழுத
வேண்டும். அதில் கருணாநிதியின் பங்களிப்பு, இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் அவர் கலந்து கொண்டது குறித்து, பற்றி ஒரு பல்லவி தனியாக
வேண்டும் என்று கேட்டார். அவருடைய கருத்தின்படி எழுதப்பட்ட பாடல் தான்
“நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்ற பாடல்
இதில்
“சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால்
தோல்வி இல்லையடா” என்று அண்ணாவை பாராட்டும் பல்லவியும்,
“ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பிலே தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலே தான்
கொடுப்பதை கொடுத்தால் தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா”
என்ற பல்லவி கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றியும்
இடம் பெற்றது. இந்த பாடல் எம்ஜிஆரின் சிறப்புகள், அண்ணாவின் சிறப்பு,
கருணாநிதியின் சிறப்பு ஆகிய மூவரின் சிறப்புகளையும் எடுத்துரைக்கும்
பாடலாகும்.
இவ்வாறு தனக்கு வேண்டிய கருத்துக்களை எடுத்துச் சொல்லி இந்த
கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு பாடல்களை எழுதித் தாருங்கள் என்று
கேட்டு பயன்படுத்திக்கொள்வது மரபு.
திமுகவின் ஊழல் பற்றிய பாடல்
கருணாநிதி திமுகவை விட்டு எம்.ஜி.ஆர். வெளியேற்றிய பிறகு எம்.ஜி.ஆர்
அண்ணா திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது கருணாநிதியின்
சுயநலத்தையும் ஊழலில் காட்டும் தனது குடும்பப் பாசத்தையும்
வெளிப்படுத்தும் வகையில் அவருடைய ஊழலை ஊரறியச் செய்வதற்காக நேற்று இன்று
நாளை படத்தில் ஒரு பாடல் இடம்பெற வேண்டும் என விரும்பினார்.. கவிஞர்
வாலியை அழைத்து திமுக ஆட்சியில் நடந்த ‘மஸ்டர் ரோல்’ ஊழல்,
மாநகராட்சியில் விளக்கு போடுவதில் ஊழல், தன்னுடைய சொந்தக்
குடும்பத்தாருக்கு அதிக அளவில் சொத்து சேர்த்தது போன்ற விஷயங்களை
எடுத்துச் சொல்லி இவை இடம்பெறும்படி ஒரு பாடல் எழுதிக் கொண்டு வாருங்கள்
என்றார். மேலும் தன்னுடைய கட்சி அண்ணாவின் உண்மையான திமுக கட்சி என்பதை
உணர்த்தும் வகையில் அண்ணாவின் சிறப்பு அண்ணாவின் வழி வந்தவர் நாங்கள்
என்பதை வலியுறுத்தும் வரிகளும் அதில் இடம் பெற வேண்டும் என்றார். எம்
ஜி ஆர் கருத்திற்கிணங்க வாலி எழுதிய பாடல்தான் நேற்று இன்று நாளை
(1974) படத்தில் இடம்பெற்ற
“தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை”
என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். இப்பாடலில்
“வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்”
என்ற வரிகளும்
“மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்”
என்ற வரிகளும் எம் ஜி ஆர் கேட்டுக்கொண்டபடி எழுதப்பட்ட வரிகள் ஆகும்.
‘தன் மக்கள் நலம்’ என்பது கருணாநிதி தன்னுடைய பிள்ளைகளின் நலத்தை
மட்டுமே தன்னுடைய மனதில் கொள்ளுவார். ஊர் மக்களின் நலத்தை பற்றி அவர்
கவலை கொள்ள மாட்டார் என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தது..
நேற்று இன்று நாளை படம் வெளிவந்த போது திமுக கட்சியில் ஸ்டாலினுக்கு
முன்னுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் கருணாநிதியின் பிள்ளைகள் பெயரில்
நிறைய சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தது உறுதியானது. காலப்போக்கில்
கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் அழகிரியும், ஸ்டாலினும், அவருடைய
மைத்துனர் முரசொலி மாறனும் அவரது மகன் தயாநிதி மாறனும் ஸ்டாலினுக்குப்
பிறகு கருணாநிதியின் பேரன் உதயநிதியும் இப்போது அரசியலுக்குள்
வந்திருப்பது எம் ஜி ஆர் பாடலின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளது.
திமுகவின் இன்றைய அரசியல் எம்ஜிஆர் கருணாநிதி குறித்து ‘தன் மக்கள் நலம்
ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’ என்று பாடிய வரிகளை மெய்யாக்கிவிட்டது.
இவ்வகையில் எம் ஜி ஆர் தன பாடல்களின் முலமாக பல் தீர்க்கதரிசன
கருத்துக்களை சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கருணாநிதியைப் பற்றி
அன்றைக்கே சரியாக கணித்து இருந்தார் என்பதை இந்தப் பாடல் வரிகள் நமக்கு
என்றென்றும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் அவரது
பாடலின் கருத்துக்களை மதிக்கின்றனர்.
எம்.ஜி.ஆரின் புகழ் இன்றும் நின்று நிலைத்திருப்பதற்கு காரணம் அவரது
தெளிவான சிந்தனையும் தீர்க்க தரிசனமும் கடுமையான உழைப்பும்
பாடலாசிரியர்களிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்து அவற்றை கேட்டு
எழுதி வாங்கிஎதில் உறுதியாக இருந்ததும் ஆகும். பாடல் ஆசிரியர்களிடம்
தன்னுடைய கருத்துக்களை அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கு ஏற்ப கேட்டு
வாங்கி தன்னுடைய படங்களில் பயன்படுத்தினார். இதனால் அவருடைய பாடல்கள்
காலத்துக்கேற்ற கருத்துக்களை எடுத்துரைக்கும் பாடல்களாக மக்கள் மனதில்
ஆழமாக இடம்பெற வேண்டிய கருத்துக்களை அவ்வப்போது எடுத்துரைக்கும்
பாடல்களாக இருந்தன.
எம் ஜி ஆர் படப்பாடல்களின் தொடர்பியல் திறன் ஆற்றல் மிக்கது.
காலத்துக்கேற்ற கருத்து சொல்லப்பட்டதால் அவர் பாடல்களை வெறும்
பாடல்களாக பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கொள்ள இயலாது. பொழுதுபோக்கு
அம்சங்களோடு கேட்பவர் மனதில் பதிய வேண்டிய கருத்துகளையும் சேர்த்து
கொடுப்பதில் எம் ஜி ஆர் திறமை மிக்கவராக இருந்தார். தன்னுடைய முழு
கவனத்தை பாடலின் வெற்றிக்கு செலுத்தி வந்தார். இதனால்தான் அவருடைய
பாடல்கள் அவருக்கு அரசியலில் ராஜபாட்டையை அமைத்துக் கொடுத்தன, இன்றும்
அழியாப் புகழோடு இப்பாடல்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எந்த ஆரசியல்
கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவருடைய பாடல்கள் அரசியலுக்குப் பொருத்தமாக
இருக்கின்றன. அன்றைக்கு அவருடைய அரசியல் பயணம் சிறப்பாக அமைய அவருடைய
திரைப்படப் பாடல்கள் பெரிதும் வழிவகுத்தன. காலத்தால் அழியாத கருத்து
பெட்டகங்களாக இருப்பதனால் மட்டுமே எம்ஜிஆர் மறைந்து சுமார் 40 ஆண்டுகள்
ஆன பிறகும் அவருடைய பாடல்கள் திருக்குறளைப் போல சிலப்பதிகாரத்தை போல
மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளன.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|