சிறார் இலக்கிய வளர்ச்சியில்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஜெ.மதிவேந்தன்
தமிழில்
சிறார் இலக்கியம் படைப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுதான்
இன்றைய நிலை. ஆயினும், இதன் தொடக்கக் காலப் படைப்பாளிகள்
குறிப்பிடத்தக்கவர்களே. அவர்களின் பங்களிப்பு என்பது இன்றைய சிறார்
இலக்கியத்திற்கு முன்னத்தி ஏர்களாக அமைகின்றன. 1950இல் அழ,
வள்ளியப்பாவால் தொடங்கப்பட்ட, “குழந்தை எழுத்தாளர் சங்கம்” பல சிறார்
படைப்பாளர்களைத் தமிழில் உருவாக்கியது. தமிழின் குழந்தைப்
படைப்பாளிகளாக, நாட்டார் பாடல்களைப் புழக்கத்தில் கொண்டுவந்த, கிராமத்து
மக்களையே சாரும். தாலாட்டுப் பாடல்கள் என்பவை, குழந்தை இலக்கிய
வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
குழந்தை இலக்கிய உலகில் ‘மூவர் முதலிகள்’ என்றழைக்கப்படும்
கா.நமச்சிவாயர், மணி. திருநாவுக்கரசு, மயிலை முத்துக்குமாரசாமி
போன்றோரைத் தொடர்ந்து, கவிமணி தேசிகவிநாயகனார், தமிழ் ஒளி, அழ.
வள்ளியப்பா, பூவண்ணன், பெ.தூரன், தணிகை உலகநாதன், வாண்டு மாமா,
ரா.பொன்ராசன், திருச்சி பரதன், குழ. கதிரேசன், முனைவர் கோ.பழனி,
மு.முருகேஷ், முனைவர் சி.முத்துகந்தன் ஆகியோர் சிறார் இலக்கிய
வளர்ச்சியில் பங்களித்து வந்தனர்/வருகின்றனர்.
சிறார் இதழ்கள்
சிறார்களை மையமிட்டு எழுதிய / எழுதும் படைப்பாளிகளால், சிறார் இதழ்களும்
வெளியிடப்பட்டன. அவை, சிறார்களின் அறிவு வளர்ச்சிக்கும் மனநல
வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்பட்டன. குறிப்பாக, படைப்பாற்றலையும்
உலகியல் நிகழ்வுகளையும் வளர்க்கும் முயற்சியில் சிறார் இதழ்கள்
பெருமளவில் கவனம் செலுத்தின. அதோடு, சமகாலச் செய்திகளையும் எளிமையாகப்
புகுத்தின.
தமிழின் முதல் சிறார் இதழாக, ‘பாலதீபீகை’ (1840) இதழினைக்
குறிப்பிடுகின்றனர். பிறகு பாலவிநோதினி - (1918), பாப்பா - (1941),
அணில் - (1946), அம்புலி மாமா - (1947), கல்கண்டு - (1948), கண்ணன்,
சித்திரக்குள்ளன், கிண்கிணி - (1949), பாலபாரதி - (1953), சிறுவர் முரசு,
கரும்பு, - (1954), கோகுலம் - (1972) போன்றவற்றோடு பின்னாட்களில் பல
பெயர்களில் இதழ்கள் வெளிவரத் தொடங்கின.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனர் தம் வாழ்நாளை, மொழி - இனம் - நாடு என்ற
மூன்றனுக்காகவே செலவழித்தார். துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட
இவர் தனித்தமிழ்ப் பற்றுக் காரணமாகவும் சங்கப் புலவர்
பெருஞ்சித்திரனாரின் வாழ்வியலோடும் இணைந்த, தம் வாழ்வியல் முறையினூடாக
அமைந்ததால் பெருஞ்சித்திரனார் என அழைத்துகொண்டார். தமிழுக்கும்
தமிழினத்துக்காகவும் போராடினார். அதன்வழி, பலமுறை சிறைச் சென்றார்.
வாழ்நாளைத் தமிழுக்காவே ஈகம் (தியாகம்) செய்தார்.
பொதுவெளியில் ‘பாவலரேறு பெருஞ்சித்திரனார்’ என்றவுடன் தனித்தமிழ்ப்
போராளி, தமிழ்த்தேசியத் தந்தை, தமிழ்ப் பற்றாளர், தமிழின உணர்வாளர்,
தமிழ்மொழிக் காப்பாளர் என வீரம் - போராட்டம் செறிந்த வாழ்வினை மட்டுமே
குறிப்பிடப்படும். அதையும் தாண்டி, குடும்பம், குழந்தைகள் சார்ந்த
அகவாழ்வு, இலக்கணப் புலமை, சிறார்கள் குறித்தச் செயற்பாடுகளிளும் கவனம்
செலுத்தினார்.
தனித்தமிழ்ப் பாவலரும் சிறார் இலக்கியமும்
சிறார் இலக்கிய வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாவலரேறு
பெருஞ்சித்திரனார். குறிப்பாக, சிறார் பாடல்கள் – சிறார் இதழ்கள் என்ற
இருவகைப்பாட்டிற்குள் கவனப்படுத்தப்பட வேண்டியவர். தம் வாழ்நாளில்
நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார்.
அதேபோன்று, தமிழ்ச்சிட்டு -(1965) என்னும் சிறுவர் கலை இலக்கிய இதழினைச்
சிறார்களின் வளர்ச்சிக்காக நடத்தினார். இனி, பாவலரேறுவின் சிறார்
பாடல்கள் குறித்த வகைப்பாடுகளையும் தமிழில் சிறார் இதழியல் துறையில்,
தமிழ்ச்சிட்டு பெறும் இடத்தையும் விரிவாகக் காணலாம்.
பாவலரேறுவின் பாடல்களை அவர்தம் காலத்திலே மூன்று பகுப்பாகப்
பகுத்துள்ளார். குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை எனத்
தனித்தனியாகவே சிறார்களைக் கவனப்படுத்தினார். குறிப்பாகத் தொடக்கப்
பள்ளி மாணவர்களை, ‘குஞ்சுகள்’ என்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை,
‘பறவைகள்’ என்றும் வளர்ந்த இளம்பருவ வயதினரை, ‘மணிமொழி மாலை’ என்றும்
குறிப்பிடுகிறார். இப்பகுப்பு முறையினைக் கருத்தில்கொண்டே பாடல்களின்
எளிமை தன்மை, கருத்துச்செறிவு, சொற்களின் பயன்பாடு போன்றவற்றைக்
கவனமாகக் கையாண்டுள்ளார். தமிழ்ச்சிட்டு இதழ், தென்மொழி இதழின் கடினத்
தன்மையான நடையிலிருந்து மாறி, எளிமை நோக்கி செயல்பட்டது.
மாணவர்களுக்குத் தேவையான கலை, அறிவியல், வாழ்வியல் கருத்துகளைத்
தாங்கிய ஒரு தனித்தமிழ் இதழாக, தமிழ்ச்சிட்டு விளங்கியது. தமிழில்,
அதுவரை வெளிவந்து கொண்டிருந்த சிறார் இதழ்களின் போக்கிலிருந்து
மாறுபட்டு வெளிவந்தது தமிழ்ச்சிட்டு இதழ்.
குஞ்சுகளுக்கு
தொடக்கக் கல்வி கற்கும் மாணவர்களுக்கான எளிய பாடல்களை இயற்றினார்.
அதன்போக்கில், இலக்கியத் தரமான சொற்களைக் கொண்டும் அறிவுரைப் புகட்டும்
நோக்கிலும் பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியச் செய்திகளைத்
தம் நடையில் தான் சார்ந்த கருத்தியலோடு இணைத்து, அதனை மாற்றுவடிவில் தர
முயற்சித்துள்ளார். அவற்றுள் திருக்குறளின் சாயலில்,
கற்க! கற்க! கற்க!
கற்பன வற்றைக் கற்றவை வழியில்
நிற்க! நிற்க! நிற்க! (கனிச்சாறு; பா.7; பக்: 8)
என்றவாறு எளிமையாகத் தந்துள்ளார். அந்தவகையில், இப்பாடல்கள் மனிதர்கள்
தம் வாழ்வில் எவ்வாறு ஒழுக்கங்களோடு இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தினார். மன் மனித வாழ்வியலில் வரையறைகளைக் கற்ற செய்திகளோடு
எவ்வாறு பொருத்தமுற நிற்க வேண்டும் என்பனவற்றையும் வலியுறுத்தும்
குறளினைத் தம் திறத்தால் அவற்றைத் தந்துள்ளார். இவற்றின் நீட்சியாக,
வீட்டு விலங்கினங்களையும் அவற்றின் ஒலிக்குறிப்புகளைக் கொண்டும் ஓசையோடு
பாடல்களைப் படைத்துள்ளார்.
தமிழின் அகர வரிசை முறைகளைப் போலவே, உயிர்மெய் எழுத்துகளை
அறிமுகப்படுத்தியும் பாடல்கள் படைத்தார். அவை, பறவையினங்களின்
ஒலிக்குறிப்பினால் விளக்கும் திறன் பாவலரேறுவிற்கே உரிய
தனித்தன்மையாகும், இப்பாடலினை ஆழ்ந்து நோக்கினால் தமிழ் எழுத்துகளை
அறிமுகப்படுத்தி, பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.
குறிப்பாக, மாணவர்களின் மனதில் ஆழப் பதிய ‘பாடல்’ எனும் வழிமுறை
எளிமையானது. அதேபோக்கில், எழுத்துகளையும் சொல்லிக்கொடுப்பதனால்
விரைவாகச் சென்று சேரும் என்று நினைத்திருப்பார் போலும். அந்தவகையில்,
கீழ்காணும் பாடல் அமைந்துள்ளது.
க, கா என்றே காகம் கரையும்!
கி,கீ என்றே கிளிகள் சொல்லும்!
கு,கூ என்றே குயில்கள் கூவும்!
கெ,கே என்றே கோழிகள் கேவும்!
கொ,கோ என்றே சேவல் கூவும்!
கை, கெளக் என்னும் வானங் கோழி!
(கனிச்சாறு; பா;46,பக்:42.)
காகம், கிளி, குயில், கோழி, வான்கோழி போன்றவற்றின் ஒலிகளோடு உயிர்மெய்
எழுத்துகளை இணைத்திருப்பது பாராட்டத்தக்கது. பாமர, ஏழை எளியவர்களும்
கிராமப்புறம் சார்ந்தவர்களும் இவற்றை எளிதில் கண்டு, ஒலிகளைக்
கேட்டிருப்பர். அதோடு, அவற்றில் பல பறவையினங்கள் அனைவருக்கும் தெரிந்ததே
என்பதாலும் இவ்வாறு பாடலினை அமைத்துள்ளார். மழலைகளுக்குக் கல்வியோடு
இணைந்த சமூக விழுமியங்களையும் தமிழ்மொழியின் சீர்மைகளையும் எளிமையான
சொற்களின் மூலம் குழந்தைகளிடம் கொண்டு சென்றுள்ளார்.
பறவைகளுக்கு
பறவைகளுக்கு என்பதில், பொதுஉலக அறிவுப் பெற்று நன்மை, தீமைகளை
அறிந்துகொள்ளும் இளம்பருவத்தினரான உயர்நிலைப் பள்ளி மாணவர்களைப் பறவைகள்
என்றுரைக்கிறார். இவர்கள் உலக வாழ்வியலோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அன்பு, அறிவு, கருணை, குமூக (சமூக) அக்கறையோடு செயல்பட வேண்டும்
என்றுரைக்கும் பாங்கிலும் மனித உயிர்கள் தவிர்த்த பிற
உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தவும் பரிவு காட்டவும் வேண்டும் என்ற
நோக்கில் தம் கருத்துகளை முன்வைத்துள்ளார். உலகம் மனிதர்களுக்கு மட்டுமே
உரியதன்று; பிற உயிரினங்களுக்கும் தான் என்ற மனத்தெளிவினை அனைவரும்
அடைய வேண்டும். இப்போக்கில் கீழ்க்காணும் பாடலினை அணுக வேண்டியுள்ளது.
உறவை காக்கும் அன்பு!
ஊரைக் காக்கும் பண்பு!
இரவில் காக்கும் நாயே!
என்னைக் காக்கும் தாயே!
(கனிச்சாறு; பா.67; பக்:62)
மனிதர்களை விடவும் விலங்கினங்கள் பற்றுடையவை. இதனைப் பல நேரங்களில்
மெய்பித்துக் காட்டுபவை வீட்டு விலங்காகவும் பாதுகாப்பு விலங்காகவும்
விளங்குகின்ற நாய் தான். அதனை, தன்னை ஈன்றெடுத்த தாய்க்கு நிகர வைத்து
பார்க்கும் மனநிலை என்பது பெருஞ்சித்திரனாரின் அளவிறந்த அன்புக்கும்
பற்றுக்கும் சான்றாக அமைகிறது.
உலக வாழ்வு என்பது ஒன்றினைச் சார்ந்து மற்றொன்று இயங்குவது என்பது
இயல்பான ஒன்றாக உள்ளது. ஒன்றின் இறப்பு அல்லது இழப்பு மற்றொன்றின்
பிறப்பாகவும் பெறுதலாகவும் அமைகிறது. வாழ்க்கை வட்டச் சுழற்சியினை
எடுத்துரைக்கும் பாடல்,
புழுவைக் கொல்ல
பூச்சி!
பூச்சியைக் கொல்ல
பாச்சை!
பாச்சையைக் கொல்ல
பல்லி!
பல்லியைக் கொல்ல
தேரை!
தேரையைக் கொல்ல
பாம்பு!
பாம்பைக் கொல்ல
கீரி!
கீரியைக் கொல்ல நரி!
நரியைக் கொல்ல
ஓநாய்!
ஓநாயைக் கொல்ல கரடி!
கரடியைக் கொல்ல
புலி!
புலியைக் கொல்ல
யானை!
யானையைக் கொல்ல
அரிமா!
அரியைக் கொல்ல
மாந்தன்!
மாந்தனைக் கொல்லும் எல்லாம்!
(கனிச்சாறு; பா;74,பக்:66.)
எனப் படைத்துள்ளார். மனித இனம் அனைத்து விலங்குகளையும் உண்ணும்
மிருகமாக அமைந்துள்ளது. புழு தொடங்கி, அரிமா (சிங்கம்) வரை
அனைத்தினையும் அழிக்கும் வல்லமை கொண்டவையாக இருக்கிறது. இச்சுழற்சியின்
இறுதியில், மனிதனைக் கொல்லும் இறுதி ஆயுதமாக விலங்கினங்களே உள்ளதை
மிகவும் கவனமாகப் பெருஞ்சித்திரனார் சுட்டுகிறார். இயற்கையை அழித்து,
ஆடம்பர வாழ்க்கைக்கு வழிகோலும் இச்சூழலில் மரங்களும் விலங்கினங்களும்
பாதுகாக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனினும் விலங்கினங்களுக்கு மனிதரால்
தான் பெரும் அச்சுறுத்தல்கள் உண்டாகின்றன.
மனித இனம் இணக்கமாக வாழும் சூழலிலும் சில புரையோடிய மரபுகளைப்
பின்பற்றுவதால், சமூக இணக்கமின்மை ஏற்படுகிறது. அது சாதியாக, மதமாக
அமைந்து பெரும் கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைப் பல இடங்களில்
வலியுறுத்தும் பாவலரேறு,
தொல்லை தரும்இழி சாதிப் புகைச்சல் (கனிச்சாறு;
பா.82; பக்:74)
என்றும்
தமிழரெனச் சொல்லுங்கள்! ; தவிர்த்திடுங்கள் சாதி!
(கனிச்சாறு; பா.133; பக்:132)
எனப் பல இடங்களில் சாதியின் கொடுமைகளையும் அவற்றினைத் தவிர்த்து
‘தமிழர்’ என்ற இனஅடையாளத்தில் ஒன்றுபட வேண்டுகிறார். தமிழ்ச் சமூகம்
சாதிகளால் பலவாறு பிரிந்து காணப்படுகிறது. மேல், கீழ் என்ற வருணப்
பாகுபாடு இதனை வரையறுத்த விதிகளால் இயக்கிக் கொண்டிருக்கிறது.
இம்மடமைத்தனம் ஒழிய வேண்டும். சாதிப் புகைச்சலினால் தொல்தமிழ் மக்களைப்
பிரித்தாளும் சூழ்ச்சியினைத் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். இந்த இழிநிலை
ஒழிந்து அனைவரும் பொதுமை நிலையை எட்ட வேண்டும். இதனையே
பெருஞ்சித்திரனாரும் விரும்புகிறார்.
உடலுறுப்புகளின் சண்டை (கை, கால், கண், வாய், மூக்கு, மூளை.) என்ற
தலைப்பில் அமைந்துள்ள பாடல் ஒன்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி
பாடத்திட்டத்தில் (சமச்சீர் பாடத்திட்டம்) இடம்பெற்றுள்ளது. இது
உடலுறுப்புகள் ஒன்றை ஒன்று சண்டையிட்டுக் கொள்வதாகவும் இறுதியில்
அனைத்தும் ஒன்றுபட்டு இயங்குவதாகவும் பாடலின் கருத்தானது அமைந்துள்ளது.
இப்போக்கு மனித உடலுறுப்புகளுக்கு மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம்
அமையவும் அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து சாதி, மத வேறுபாடற்று
செயல்பட வேண்டும் என்ற சமூக அரசியல் புரிதலோடு அணுக வேண்டியுள்ளது.
பெருஞ்சித்திரனாரும் அவ்வாறே அணுகியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மாணவர்களும் தமக்கு மட்டும் என்று எண்ணாது பிறருக்கும் கொடுத்து உதவ
வேண்டும் என்ற மனப்பான்மையைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில்
பெருஞ்சித்திரனார் இதுபோன்ற பாடல்களைப் படைத்துள்ளார்.
தமிழ் யாப்பு மரபில் சிந்து, கண்ணி, கும்மி போன்ற இசைப்பாடல்களின்
வடிவிலும் பாடல்களை மாணவர்களுக்காகப் படைத்துள்ளார். தமிழ்மொழியின்
பெருமையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கிறார். அதோடு ஆங்கில
மொழியறிவும் தேவை என்பதினைச் சுட்டிக்காட்டுகிறார். அப்பாங்கில் அமைந்த
பாடல்,
தாழ்குழலீர் கும்மி கொட்டுங்கடி - இது
தனித்தமிழே எனக் கொட்டுங்கடி!
(பா.91; பக்:85)
துள்ளுவாய்! ஆடுவாய்; தூய்தமிழ் பாடுவாய்….
(பா.121; பக்:122)
ஆங்கிலம் நம்மின் அடிமையை மீட்டது!
தீங்குசெய் ‘சாதி’யின் இழிவைத் தீய்த்தது! (பா.93; பக்:89)
தமிழ் மாணவர்களிடையே தனித்தமிழ் மொழிப்பற்றினை ஊட்டும் நோக்கிலும்
மொழியின் சிறப்புகளை எடுத்தியம்பும் பாங்கிலும் தனித்தமிழ், தூய்தமிழ்
என விளித்துப் பாடுகிறார்.சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு
ஆங்கிலத்தைக் கற்ற வேண்டும் என்று தீர்க்கமாக உரைக்கிறார் பாவலரேறு.
மாணவர்களின் ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதன்
தொடக்கமாக என்னென்ன செயல்களைச் செய்யலாம் என்று முன்மொழிகையில்,
ஓய்வாக இருக்கையில் தம்பி - நீ
ஓவியம் வரைந்து பழகு!
தூய்மையோ டமைதி சேரும்! - நன்கு
தோன்றிடும் உள்ள அழகு!
……………………………..
பாக்களும் இயற்றிப் பழகு!
……………………………..
கதைகளும் எழுதிப் பழகு!
……………………………
அறிவியல் ஆய்வு செய்வாய்!
………………………………
மருத்துவ நூல்கள் கற்பாய்!
(கனிச்சாறு; பா.99; பக்:98)
எனப் பாடலில் விவரிக்கிறார். ஓவியம், பாடல், கதை, அறிவியல் ஆய்வு,
மருத்துவ நூல் கற்றல் போன்றவற்றைப் பொதுக்கல்வியோடு இணைந்து
கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். ஒவ்வொரு செயல்பாடும் மனதினையும்
உடலினையும் எவ்வாறு பக்குவப்படுத்தும் என்பதினையும் விளக்குகிறார்.
இன்று நவீன உலகில் மாணவர்கள் கைபேசி, மடிக்கணினி, இணையம் போன்றவற்றில்
பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகின்றனர். இதனை முன்னமே கணித்துத்தான்
பாவலரேறு மேற்கண்ட செயல்களினைச் செய்து ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக
மற்றிக்கொள்ள முற்படுங்கள் என்று வழிகாட்டியுள்ளார். (இப்பாடலும் தமிழக
அரசின் சமச்சீர் பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.)
வீட்டில் சமையல் அறை, பூசை அறை, கழிவறை, கிடங்கு அறை என்றிருப்பது போல,
ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் நூலக அறை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
நூலகம், அவற்றின் பயன்களை விரிவாகவும் விளக்கமாகவும் தமது பாடலில்
பெருஞ்சித்திரனார் படைத்துள்ளார்.
நூலகம் இல்லாதது பாழகம் ஆகும்!
நல்லறிவு அன்பு அங்கு சாகும்;
உடல் வேகும்! ; ஒளி போகும்!; இருள் ஆகும்!
(கனிச்சாறு; பா.101;
பக்:100)
‘நூலகம் இல்லாதது பாழகம்’ என்ற கடுமையான சொற்களின் ஊடாக, நூலகத்தின்
இன்றியமையாமை குறிப்பிடுகிறார். நல்லறிவு பெற நூலகம் துணை நிற்கும்
என்ற கருத்தினையும் முன்வைக்கிறார்.
மணிமொழி மாலை
தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி தாண்டிய கல்லூரி மாணவர்களின்
வாழ்வியல் செயல்பாட்டினையும் சிந்தனைப் போக்கினையும் மதிப்பீடு
செய்கின்றார். அந்தவகையில் கல்வி, வாழ்வு, உறவுகள், சமூகம் குறித்த
கருத்துகளை மணிமொழி மாலை என்ற பகுதியில் பெருஞ்சித்திரனார்
விளக்குகிறார். கல்வி கற்ற ஒருவனது செயல்பாட்டினைக் குறித்துக்
கருத்துரைக்கையில்,
உற்ற கல்வியும் ஓர்ந்த கேள்வியும்,
பெற்றோ னாயினும் பெரியோ னாயினும்,
ஒழுங்கிலா தொருவனை விலங்கே என்க! (கனிச்சாறு;
பா.146; பக்:149)
அதிக பட்டங்களைப் பெற்று, கல்வி கற்றவன் என்கிற மிதப்பில் அலைகிறவனின்
ஒழுங்கினமானச் செயல்பாடுகளால், அவனை ‘விலங்கு’ நிலைக்கு ஒப்பானவன்
என்றுரைக்கிறார். இங்கு கல்வியால் மட்டுமே ஒருவர் மதிக்கப்பெறுவதில்லை.
ஒழுக்கமான செயல்பாடுகளாலும் சமூக அக்கறை கொண்டு இயங்கும் ஒருவரே
மதிக்கப்பெறுகிறார். மனித வாழ்வில் குறிப்பாக, இளம்பருவத்தினர் தமது
சுயஒழுக்கச் செயல்பாட்டோடு இயங்க வேண்டும். தமக்கான வரையறைகளைத் தாமே
கட்டமைத்துக்கொண்டு கல்வி, செல்வ வளங்களைப் பெற்றுத் திகழ வேண்டும்
என்கிறார்.
கதிருக்கு முன்னெழு!
கடமைகள் வரிசை செய்!
நூலொடு தொடர்பு கொள்!
நோதவிர் பயிற்சி செய்!
மயக்கிலா உண்டி கொள்!
மாண்பொடு பள்ளி செல்! (கனிச்சாறு;
பா.164; பக்:159)
மேற்கண்டவாறு சுயஒழுக்கத்தோடு இயங்க மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
நல்ல நண்பர்களையும் பெற்றால் ஒழிய, வாழ்வு சிறக்கும். அவ்வாறு
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள தகுதிப்பாடுகள் என்பவை குறித்துப்
பதிவு செய்துள்ளார். மணிமொழி மாலை என்னும் பகுப்பில் மாணவப் பருவத்தின்
இறுதிநிலையினரான சமூக / இல்லற வாழ்வில் கடமையாற்றக்கூடியவர்களின்
நிலைப்பாட்டோடு பெருஞ்சித்திரனார் தொலைநோக்குச் சிந்தனையில் தம்
கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
இதழியல் செயல்பாடு
தமிழ்ச்சிட்டுவின் நோக்கம் - நிலைப்பாடு, தோற்றம் என்று நோக்குகையில்
தென்மொழி இதழின் கடின நடை, புலமைத்துவ செயற்பாடுகள்
தமிழாசிரியர்களுக்கும் தனித்தமிழ்ப் பற்றாளார்களுக்கு உவப்பளிப்பதாக
இருந்தது. ஆனால், பள்ளி – கல்லூரி செல்லும் மாணவர்களின் திறனுக்கு
மீறிய கருத்தியல், மொழிநடையோடு செயல்பட்டது. இதனைப் போக்கும் பொருட்டு,
பெருஞ்சித்திரனார் சிறார்களுக்கான கலை, இலக்கிய, அறிவியல் இதழாகத்
தமிழ்ச்சிட்டு என்னும் பெயரில் தனித்தமிழ் இதழ் ஒன்றினை உருவாக்கினார்.
அது, தென்மொழியின் இளகிய வடிவாகவும் சிற்சில இடங்களில் மாறுபட்ட
தனித்தன்மைகளோடும் வெளிவந்தது. 1965ஆம் ஆண்டு முதல் இதழ் வெளிவரலானது.
இதழில், கலை, அறிவியல், இலக்கியம், பொதுஅறிவு, விளையாட்டு, நாட்டார்
கூறுகள் போன்றவை தனித்தமிழ்ச் சிந்தனையோடு வெளிவந்தது. இதழின் தோற்றம்,
பெயர்க்காரணம் குறித்துப் பெருஞ்சித்திரனார் கூறுகையில்,
சிட்டுக்குருவி
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நன்கு தெரிந்த பறவை. அதன்
சுறுசுறுப்பும் உழைப்பும் முயற்சியும் சிறுவர்களுக்குக் கட்டாயம்
வேண்டுவன. தமிழ் மாணவர்களும் அச்சிட்டுக்குருவியைப் போல்
சுறுசுறுப்பாகவும் உழைப்பும் முயற்சியும் உடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்று எண்ணி இடப்பெற்றதே அதன் பெயர். (நேருரை: தென்மொழி
இதழ்; சுவடி – 24, ஓலை - 1)
என்கிறார். இதன்போக்கிலே தான், தமிழ்நாட்டுச் சிறுவர்களுக்கான கலை,
அறிவியல் இதழுக்குத் தமிழ்ச்சிட்டு என்று பெயரிட்டதாக விளக்கமளிக்கிறார்.
இதழின் நோக்கத்தினை விளக்கும் விதத்தில் முகப்புப் பாடல் ஒன்று அமைகிறது.
அது,
இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு!
இன்றைய சிறுவர் நாளைய உலகம்!
நன்று செய்வதே நமக்குநல் வாழ்க்கை!
என்றும் அழியாது இருப்பதே புகழே!
(தமிழ்ச்சிட்டு - முகப்புப் பாடல்)
சிறுவர்களுக்குத் தனித்தமிழ் உணர்வும் நற்பண்பும் நல்லொழுக்கமும் பெற்று,
திகழ வேண்டியே தமிழ்ச்சிட்டு பாடுபட்டது. ‘இன்றைய சிறுவர் நாளைய உலகம்’
என்ற கோட்பாடே தமிழ்ச்சிட்டுவின் கருத்தியல் களத்திற்கு அடித்தளமாக
அமைந்தது. சிறுவர்களே நாளைய இளைஞர்கள், இளைஞர்களே இந்நாட்டின்
குடிமக்களாக நற்செயல்பாட்டில் ஈடுபட்டு மொழி, இனம், நாட்டினைக் காக்கப்
பாடுபடுவர் என்பதை உணர்ந்திருத்தார். அதன்விளைவாகவே, சமூக அக்கறையுள்ள
நற்குடிமக்களாக விளங்க வேண்டிட அடித்தளம் அமைந்தது தமிழ்ச்சிட்டு இதழ்
எனலாம்.
தமிழ்ச்சிட்டு இதழின் வடிவம் - உள்ளடக்கம்
தமிழ்ச்சிட்டு இதழ் 1/8 டெம்மி அளவில் 16 பக்க அளவில் வெளிவந்தது. குரல்
(ஆண்டு), இசை (மாதம்) என்ற பகுப்புடன் “தமிழ்ச்சிட்டு” என்னும் பெயருடன்
அடைப்புக்குள் (தனித்தமிழ் சிறுவர் கலை இதழ்) என்றவாறு வெளிவந்தது.
இதழின் முகப்பு அட்டையில் சிறுவர்களுக்கு அறிவுரை கூறும்வகையில்
எளிமையான பாடல்கள் இடம்பெற்று சிறப்பித்தன. இதழின் உள்ளடக்கப்
பொருண்மைகளை விளக்கும் விதமாகப் பாவலரேறுவினால் பாடப்பெற்றுள்ள பாடல்
பின்வருமாறு,
தாத்தா பாருங்கள் தமிழ்ச்சிட்டு!
தமிழ்மொழிக் கிதுவொரு மலர்த்தட்டு!
பார்த்தால் பக்கம் பதினாறு!
படித்தால் முழுவதும் தேனாறு!
சிறுகதை, பாட்டுகள், பலவுண்டு!
சிறுவர்க் கினித்திடும் கற்கண்டு!
குறுநடைக் குழந்தையும் பாடிடலாம்!
கூனற் கிழவியும் ஆடிடலாம்!
கட்டுரை, துணுக்குகள் மணம் கொழிக்கும்!
கருத்தால் நடையால் மனம் செழிக்கும்!
தெட்டுரை தீதுரை இருக்காது!
தெளிவுரை உண்டு; (உ)ளம் வெறுக்காது!
அறிவியல் வாழ்வியல் செய்தி தரும்!
அவற்றைப் படித்தால் அறிவு வரும்!
நெறிதரும் வாழ்க்கை வழிகாட்டும்!
நீங்கா இன்பம் எழில் கூட்டும்!
(பா.132; பக்:131)
தமிழ்ச்சிட்டு இதழில் கதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், பாடல், துணுக்கு,
உரை எனப் பலவற்றை முதன்மைப்படுத்தி இதழ் வெளிவந்தது. இதழின் அட்டைப்
படத்தில் புகழ்ப்பெற்ற தலைவர்களின் படங்கள் இடம்பெற்றன. அதேபோன்று,
அறிவியல் செய்திகள், மொழிபெயர்ப்புகள், கணிதவியல் சார்ந்த செய்திகள்
அதிகளவில் இடம்பெற்றன.
இதழின் விலை – உறுப்பினர்கள்
தமிழ்ச்சிட்டு இதழின் விலை தொடக்கத்தில் தனியிதழின் விலை 15 காசுகள்
தொடங்கி, 1.50 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று, ஆண்டுக்கட்டணம்
2.00 ரூபாய் தொடங்கி, 18 ரூபாய் வரை இருந்திருக்கிறது. இதில்
அரையாண்டுக் கட்டணங்கள் இருமுறை வெளியிடப்பட்டுள்ளது. அது ரூபாய் 6, 9
என இருந்துள்ளது. இந்த விலை மாற்றம் 1965 தொடங்கி, 1994 வரை
காலமாற்றத்திற்கேற்ப மாறிவந்துள்ளது. இவ்விதழ் மொத்தமாக, 215 இதழ்கள்
வெளிவந்தது. பெருஞ்சித்திரனார் மறைவுக்குப் பின் அவரது இளைய மகன்
பொழிலனை ஆசிரியராகக் கொண்டு, இரண்டாண்டுகள் வெளிவந்து தன்னுடைய ஆயுளை
முடித்துக்கொண்டது. குரல், இசை என முழங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்சிட்டு
தமிழ் இதழியல் வரலாற்றிலும் சிறார் இதழியல் வரலாற்றிலும் மிக முக்கிய
இடம் பெறுகிறது.
பாவலரேறுவின் வாழ்க்கை, வரவைக் காட்டிலும் செலவுகளே அதிகம் என்பதையும்
தனக்கானது என எதையும் சேர்க்காமல், தமிழினத்துக்காகப் பாடுபட்ட ஒப்பற்ற
தலைவராகப் பாவலரேறு விளங்குகிறார். இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே,
மேற்கண்ட பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இறுதிவரை தமிழினத்துக்கும்
தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டிற்குமே பாவலரேறு பெருஞ்சித்திரனார்
சிந்தித்து உழைத்து வந்தார். தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் மறுக்க
முடியாத ஆளுமையாகப் பாவலரேறு பொருஞ்சித்திரனார் விளங்குகிறார்.
ஜெ.மதிவேந்தன்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை - 600 005.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|