சங்க இலக்கியம் காட்டும் தாய்வழிச்சமூகமும் பண்பாடும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


மனித சமுதாயத்தைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டது இலக்கியம் எனப்படும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானுறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானுறு, ஆகிய எட்டுத்தொகை நூல்களும், முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை,திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டு நூல்களும் சங்க இலக்கியங்களாக குறிக்கப்பெறுகின்றன. சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சங்ககாலப் பெண்களின் தலைமை சான்ற இருப்புநிலையை நம் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். தாய்வழிச்சமூகத்தில் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டதும், பெண் தெய்வ வழிபாடுகளும், அத்தெய்வங்களுக்குரிய இயல்புகளும் பெண்ணின் சிந்தனையைப் பரந்துபட்ட நோக்கமாகக் காட்டியுள்ளன. தந்தைவழித் தலைமையில் நிலவுடைமைச் சமுதாயத்தின் தோற்றம் பெற்ற காலங்களிலும், பொதுவுடைமைச் சிந்தனையோடு திகழ்ந்த பெண்களின் தன்னியல்பு தெய்வத்தை முதன்மையாக வழிபட வைத்து, அவற்றுக்கான சடங்குகளில் அவளை ஈடுபடுத்தி ஆணைச் சார்ந்து வாழும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதனை அறிய முடிகின்றது. தந்தைவழிச் சமூகத்தில் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் சமூகக்கட்டமைப்புக்கு ஏற்ப தனது இருப்பை நிலைப்படுத்தியும், நிறைவு செய்தும் வாழ்ந்த பெண்களின் அடையாளங்கள் தாய்வழிமரபின் எச்சநிலைக் கூறுகளாக அமைந்துள்ளன என்பதற்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. அத்தகைய தாய்த்தலைமைக்கான அடையாளங்களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலைமைக்கான பண்புகள்

தமிழ்ச்சமூக அமைப்பில் தாய்த்தலைமைக்கான கூறுகள் எட்டுத்தொகை நூல்களில் காணக்கிடக்கின்றன.

'சிறுவர்தாயே பேரிற் பெண்டே'
(புறம்.270:6)
'செம்முதுபெண்டின் காதலஞ் சிறாஅன்' (புறம்.276:3)
'வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்' (புறம்.277:2)
'முளரி மருங்கின் முதியோள் சிறுவன்' (புறம்.278:2)
'என்மகள் ஒருத்தியும் பிறள்மகள் ஒருவனும்' (பாலைக்கலி:8)
'ஒலிஇருங் கதுப்பின் ஆயிழை கணவன்' (புறம்.138:8)

என்று பெண்களின் அடையாளத்தில் ஆண்கள் சுட்டப்படுவதனை அறியமுடிகின்றது. இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விருந்தோம்பல் பண்புகள் குறித்த பாடல்கள் பெண்களின் விருந்தோம்பல் இயல்புக்குச் சான்று பகர்கின்றன.

'வருவிருந்து அயரும் விருப்பினள்'
(புறம்.326:12)

வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. அன்றைய நாட்களில் பெண்ணை வாழ்த்தும்போது,

'பேரிற் கிழத்தி ஆக'
(அகம்.86:19)

என்று சுற்றத்தார் வாழ்த்துவதன் மூலம் குடும்ப அமைப்பில் பெண்ணுக்கான இருப்பினை உணரவியலுகின்றது. விருந்து பேணுவதில் சிறப்பும், மகிழ்வும் கொண்டவள் என்பதைச் சங்ககால ஆடவர்களும் நன்குணர்ந்திருந்தனர் என்பதனை,

'தங்கினர் சென்மோ புலவீர்! நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி'
(புறம்.333:7-8)

என்ற பாடல் பகுதி மூலம் அறியலாகின்றது. இல்லறம் பேணுதலில் பெண் கொண்டிருந்த தலைமைப்பண்பினை,

'மனைவி'
(நற்.121:11)
'மனையோள்' (குறுந்.164:5)
'வளமனைக் கிழத்தி' (அகம்.166:10)
'இற்பொலி மகடூஉ' (புறம்.331:9)

என்று இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. பெண்களின் தலைமையில் சமூகம் அமைக்கப்பட்டிருந்ததும், ஆண்கள் பெண்களின் நுண்மாண் நுழைபுலத்திறனை உணர்ந்து அவர்தம் இயல்புகளுக்கு மதிப்பளித்தமையும் புலனாகின்றது. இதற்கு அடிப்படைக் காரணத்தை ஆய்கையில் பழங்கற்காலத்தில் பெண்ணின் தலையாய கடமையாகியிருப்பது வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும், பகிர்ந்தளித்தலுமே ஆகும். இதற்கான உடல் வலிமையும், மனவலிமையும் பெண்களிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனைச் சுட்டிக்காட்டும் ரோஸலிண்ட் மைல்ஸ் கருத்து வருமாறு:

பெண்களின் கடமைகளில் உணவு சேகரிப்பது கேள்விக்கிடமின்றி பட்டியலில் முதன்மையான இடத்தை வகித்தது. இந்தப் பணி அவர்களின் குலத்தை உயிர்வாழச் செய்தது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எந்தச் சமுதாயத்திலும் பெண்கள் தமது குழந்தைகளுடனோ அல்லது குழந்தைகள் இல்லாமலோ உணவுக்காகத் தமது வேட்டையாடும் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை (ராதாகிருஷ்ணன்.வி.,(மொ.ஆ.), உலக வரலாற்றில் பெண்கள், ப.8)

வேட்டைச் சமூகக் காலத்திலேயே பெண்ணிடம் தன் உயிரை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலப்போக்கு இருந்திருக்கவில்லை. மாறாக, தனது வலிமையைத் திரட்டி தன் கூட்டத்தின் பசியைப் போக்கி, ஆபத்தான விலங்குகளின் மத்தியில் கூட்டத்தாரின் உயிரைக் காத்துப் பேணவேண்டும் என்ற பரந்துபட்ட மனச்சிந்தனையே அன்றைய பெண்களின் உளவியலாக அமைந்திருக்கின்றது. இயற்கைச் சூழலை எதிர்த்துப் போராடும் போராட்ட மனஉணர்வு அன்றைய பெண்களின் வீர உணர்வை அடையாளப்படுத்துகின்றன. தாய்வழிச் சமூகத்தின் மரபுசார் கூறுகளைச் சங்ககாலத்தில் காண முடிவதோடு, அதன் எச்சநிலையைச் சங்கப்பாடலின் வழியாக அறியமுடிகிறது.

பெண்களின் நற்பண்புகள்


வேட்டைச்சமூகத்தில் விலங்குகளை வேட்டையாடுவதிலும், உயர்ந்த மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த காலங்களில் பெண்ணுக்கிருந்த மனவலிமையும், தீயவைகளை எதிர்த்துப் போராடும் துணிவும் இயல்பாகவே அவளிடம் அமைந்திருக்க வேண்டும். அடுத்து வந்த வேளாண் சமூகத்திலும், அரசுடைமைச் சமூகத்திலும் பெண் தனது வீரப்பண்பை நேரடியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லாதிருக்க வேண்டும். தந்தைவழி மரபில் வீரம் மிக்க ஆண்மக்களின் உருவாக்கத்தில் பெண்களின் இயல்பு இன்றியமையாத பங்கினைப் பெற்றுள்ளது. இத்தகைய வீரம் செறிந்த குடிப்பெண்களாகிய மறப்பண்பு குன்றாத முதுமகளை அன்றைய சமூகத்தார் 'செம்முது பெண்டு' (புறம்:276) என்று சிறப்பித்துள்ளனர். பெண்டிரின் இயல்பாகிய போர்ப்பண்பு வீரமிக்க ஆண்மக்களை உருவாக்கத்தில் நிறைந்து காணப்பட்டுள்ளது. பெண்களின் இத்தகைய வீரப்பண்புகளை புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பெண்களின் இயல்புகளைச் சமுதாயத்திற்கு எடுத்துணர்த்தும் உயரிய நோக்கம் அன்றைய ஆண்களுக்கு இருந்துள்ளது என்பதை ஆண்பாற் புலவர்களின் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இதன் மூலம் சங்ககாலச் சமுதாயம் ஆண்களால் பெண்கள் மதிக்கப்பட்ட இணையான சமுதாயம் என்பதை அறியவியலுகிறது.

உடைமைச் சமுதாயத்தில் முதலில் ஆநிரைகளைக் காத்தல் பொருட்டும், பிறகு நிலங்கள் உடைமையாக்கப்பட்டபோது நாடு காத்தலுக்காகவும் போர்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இப்போர்ச் சமூகம் ஆண்வழி மரபிற்கு மாற்றமடைந்த காரணத்தால், பெண்களுடைய வீரப்பண்பும், போர் புரியும் துணிவும் அவள் வழியே பெறப்பட்ட ஆண்மக்களிடம் இருப்பதனை புறநானூற்று பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

சங்ககாலம் ஒரு மாறுதல் காலகட்டம். இனக்குழு வாழ்விலிருந்து நிலவுடைமைக்கு, வீரயுகச் சூழலிருந்து உடைமைச் சமுதாயத்திற்கு மாறுகின்ற காலகட்டம். அரசு உருவான காலகட்டம். தனிச்சொத்துடைமையும் ஆண்வழிச் சமுதாய அமைப்பும் உருவாக வித்திட்ட காலம் (அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், ப.168)

என்று பெ.மாதையன் கருத்துரைக்கின்றார். போர் புரிவதற்கு ஆண்மக்கள் தேவைப்பட்டாலும், களச்சாவு கண்ட ஆண்மகனுக்குப் பின், பிள்ளைகளைப் பேணுதலும் இல்லறப் பணிகளை நிர்வகிக்கும் பண்பும் பெண்ணுக்கு இயல்பாக இருந்துள்ளது. அதனால், போர்க்களத்திற்கு செல்லாதிருத்தலும், போர்க்காலங்களில் பெண்கள் கொல்லப்படாமல் காத்தலும் மரபாகியுள்ளன. இதனை,

'ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்'   
 (புறம்.9)

என்ற பாடல் உணர்த்தி நிற்கின்றது. மறக்குடிப் பெண்ணிடம் பாலருந்திய பிள்ளைக்கும் வீரப்பண்பு உள்ளது என்பதை, பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு பூண்ட பருவம் குறித்து,

'அவன் கண்ணி, தார் பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின் வயின்
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே;'     
(புறம்.77:6-10)

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. இத்தகைய வீரப்பண்பு மட்டுமல்லாது எதையும் தாங்குகின்ற பக்குவப்பட்ட மனநிலையும், தன்மானத்திற்காக உணர்ச்சிக்கு ஆட்படாத உள்ளத்தையும் கொண்டவளாகப் பெண் விளங்கியிருக்கின்றாள் என்பதை மூதின்முல்லை துறைப்பாடல்கள் விளக்குகின்றன.

'கெடுக சிந்தை; கடிக இவள் துணிவே;
மூதில் மகளிராதல் தகுமே'     
(புறம்.279:1-2)

என்ற பாடலில் முதல்நாள் போரில் தன் தந்தையையும், மறுநாள் போரில் தன் கணவனையும் இழந்த பெண், ஒருத்தி மனங்கலங்காது நாடுகாத்தலுக்காக தன் குடியின் ஒரு மகனையும் போர்க்களத்திற்கு அனுப்புகின்ற துணிவு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அதனை,

'ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!'
    (புறம்.279:10-11)

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. உயிரைக் காட்டிலும் மானம் பெரிதென எண்ணும் பண்பு குறித்து,

'மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே'    
(புறம்.277:1-4)

என்ற பாடலில் உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு போரை மறத்தொழிலாக முடித்து குடியைக் காப்பதில் அன்றைய சமூக ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையாகியிருந்துள்ளது.
கட்டுப்பாடற்ற பாலுறவு நிலவிய தொல்பழங்காலத்தில் உலகளாவிய நிலையில் தாய்வழிச் சமுதாயங்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும். சுதந்திரமான பாலுறவு நிலவிய அந்தக் காலத்தில் ஒருவரின் தந்தையைச் சரியாக அடையாளம் காணமுடியாமல் வாழ்ந்தனர். இது பாலூட்டிகளின் இனப்பெருக்கத்தில் தாயை மட்டும் அடையாளம் காணக்கூடிய நிலையைக் காட்டுகிறது (தமிழர் மானிடவியல், ப.9) என்று பக்தவத்சல பாரதி எடுத்துரைக்கின்றார்.

ஆண்வழிச் சமுதாயமும் பெண்களின் நிலையும்

உடைமைச் சமுதாயமாக மாற்றம் பெறுகின்ற காலங்களில், வரையற்ற பாலுறவிலிருந்து 'ஒருவனுக்கு ஒருத்தி' எனும் நெறிப்படுத்தப்பட்ட பாலுறவுக் கொள்கை உருவாகியுள்ளது. இக்கோட்பாட்டின் அடிப்படையில் ஆணும், பெண்ணும் தனது சுதந்திரமான பாலுறவிலிருந்து விலகி ஒழுக்க நெறியைக் கண்டுணர வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாகவே, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் இந்நால் வகைப் பண்புகளும் சமூகத்தாரால் பெண்ணுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. பெண்களையும் ஒழுக்கநெறியை அடிப்படையாகக் கொள்ள வேண்டியே மூத்தப் பெண்டிரால் இளைய பெண்கள் கட்டுப்படுத்தப்படுவதை, களவுப்பாடல்களில் காண முடிகின்றது. களவுக்காதல் கொண்ட பெண்ணின் தந்தை, தமையன் ஆகிய ஆண்கள் அவளைக் கட்டுப்படுத்தியதாகக் கூற்றுகள் அமையவில்லை. மாறாக, இல்லத்தின் மூத்தப் பெண்டிரான நற்றாயும், செவிலியும் அவளைக் கட்டுப்படுத்தியுள்ளதை தலைவி, தோழியின் கூற்றுக்களின்வழி அறிய முடிகின்றது. எனவே, சமூகத்தில் பெண்களின் பாலுணர்வுக் கட்டுப்பாடு பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது.

மனிதனுடைய நடத்தைகள் அனைத்தும் பாலுணர்வில் உந்தப்படுகின்றன என்றும் உள்ளத்தின் முழுமையான ஆற்றல் லிபிடோ எனப்படும் பாலுணர்வு இயல்பூக்கம் (தொன்மவியல் கட்டுரைகள், ப.5) என்று சிக்மண்ட் பிராய்டு கூறுவதாக யாழ்.சு.சந்திரா எடுத்துக்காட்டுகின்றார்.

இத்தகைய ஒழுக்க நெறியை சமுதாயத்தின் தேவையாகவும் மானிடப் பண்பாடாகவும் ஆக்கியவர்களுள் அன்றைய பெண்கள் பெரும்பங்கு வகித்துள்ளனர் என்பதை களவுக்காலப் பாடல்களும், கூற்றுகளும் மெய்ப்பிக்கின்றன.

பெண்ணின் பாலுணர்வு நடத்தைகள் கட்டுப்படுத்தப்பட்டால் சமூகம் உயர்வடையும் என்ற சிந்தனையின் அடிப்படையில் பெண்கள் தமக்குத் தாமே இப்பண்புகளை சுயக்கட்டுப்பாடுகளாக விதித்துக் கொண்டுள்ளனர் என்பதும் புலனாகின்றது. எனவே, தந்தை வழித் தலைமையில் சமூகம் மாற்றமடைவதை காலத்தின் தேவையாகவும், தன் மூலமாக பிறக்கும் பிள்ளைப்பேறு நெறிப்படுத்தப்பட்ட பிறப்பாக அமைய உடைமைகள் காக்கப்பட வேண்டி, தந்தை அடையாளப்படுத்தப்படுதல் இன்றியமையாததாக உணரப்பட்டமையாலும் பெண்கள் இம்மாற்றத்தை ஏற்றுச் செயல்பட்டுள்ளனர்.

சுமங்களியான் பெண் தெய்வங்கள்


மணமான பெண் தெய்வங்கள் அன்பும், அருளும் கொண்டவர்களாக கணவனுக்கு எதிரான நிலைகளில் பொறுமையிழந்து ஆவேசங் கொண்டதாக சங்க இலக்கியப்பாடல்களில் சுட்டப்படவில்லை. அன்றைய மக்கள் தாம் உற்ற துன்பத்தை உணர்ந்து, அதனை நீக்கும் ஆற்றல்மிக்க தெய்வங்களாக முருகவேளையும் வள்ளியையும் வணங்கியுள்ளனர். தனது வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை இத்தெய்வங்களின் மீது ஏற்றிக் கூறி, மனித உணர்வுகளை வடிவப்படுத்தியுள்ளனர். முருகனும் வள்ளியும் குறித்து,

'குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளிதமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று'
(பரி.9:67-69)

என்ற அடிகளில் குறிஞ்சி நிலப் பெண்களாகிய கொடிச்சியர்களின் வீரம், பெருமிதம் போன்ற பண்புகள், அந்நிலத்தின் பெண் தெய்வமாகிய வள்ளிக்கும் ஏற்றிக் கூறியிருப்பதும், அக்கொடிச்சியரின் வீரமானது, வள்ளியின் வெற்றிக்குக் குறியீடாக்கப்பட்டிருப்பதனை அறியவிலுகின்றது.
குறிஞ்சிவாழ் மக்களின் இயற்கை விளைபொருளான வள்ளி குறிஞ்சி வாழ் மக்களின் பெண் தெய்வமானது (தமிழ்ச் செவ்வியல் படைப்புகள், ப.187) என்று பெ.மாதையன் தெரிவித்துள்ளார். இவ்வாறே வள்ளி எனும் பெண் தெய்வம் தோற்றுவிக்கப்பட்டதனை உணர முடிகின்றது.
ஆக்கல், அழித்தல், காத்தலாகிய முத்தொழில் புரியும் சிவபெருமானுக்கு அழித்தல் தொழில் புரிய உமையம்மை உடன்படமாட்டாள் என்பதும், அவள் அருளே வடிவானவள் என்பதும் அன்றைய மக்களின் நம்பிக்கையாயிருந்தது. இதனை,

'கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத்தார் சுவற்புரற,
தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?'
(கலி.1:11-13)

என்று கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலில் உமையம்மையின் சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மைப்பண்போடு கூடிய தெய்வமாகவும், பொறுமையும், அன்பும், அருளும் கொண்டவளாக பெண்கள் திகழ வேண்டும் என்று எடுத்துரைக்கப்படுவதனை அறிய முடிகின்றது.

மணமாகாத பெண் தெய்வங்கள்


பழந்தமிழ்ச் சமுதாயத்தில் தெய்வங்களுக்கான வடிவங்களும், பண்பு நலன்களும் அறியப்படாத நிலையில், தம்மை வழிநடத்திப் பாதுகாக்கும் தெய்வமாக 'அணங்கு' எனும் பெண் தெய்வம் மக்களால் வழிபடப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் துணைக்கடவுளாகிய ஆண் கடவுள் பற்றிய குறிப்புகள் பாடல்களில் தரப்படவில்லை. மாறாக, அச்சுறுத்தும் பெண் தெய்வமாகவே சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன. தொடக்கநிலையில் இயற்கையின் சீற்றங்களே மனிதனை தெய்வ வழிபாட்டு நிலைக்குத் தூண்டப்பட்டன. அத்தகைய கட்டுக்கடங்காத சீற்றத்தைப் பெண்ணாக வடிவப்படுத்தி 'அணங்கு' எனும் அச்சுறுத்தும் தெய்வமாக்கி இருக்க வேண்டும்.

கற்புடைய பத்தினிப் பெண்கள் திருமணமாகா நிலையில் பேராற்றல் கொண்டவர்கள், அவர்கள் சீற்றமடைந்தால் கட்டுக்கடங்கா ஆற்றலை வெளிப்படுத்துபவர்கள்; அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். பழந்தமிழர் வாழ்வில் இவர்களின் ஆற்றல் 'அணங்கு' என்ற வகையிலும் வெளிப்பட்டது (தமிழர் மானிடவியல், ப.237) எனப் பக்தவத்சல பாரதி பகர்கின்றார். இயற்கை படைப்புகளுள் பெண் தெய்வமாக உறைந்திருக்கின்றாள் என அன்றைய மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை,

'தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ'
(நற்.155:5-6)

என்ற பாடல் வரிகளில் கடலில் பெண் தெய்வம் உறைந்துள்ளதாக அன்றைய மக்களின் நம்பிக்கை புலனாகின்றது.

ஆண்களின் போர்க்கள வெற்றிக்குக் காரணமாகப் பெண் தெய்வத்தையே கருதியுள்ளனர். தொல்காப்பியத்தில் பெண் தெய்வமாகிய கொற்றவையை,

'மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே'
(தொல்.புறத்.62)

என்ற நூற்பாச் சுட்டிக்காட்டுகின்றது. அக்கொற்றவைத் தெய்வம்,

'ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை – மீளி
அரண்முருங்க ஆகோள் கருதி னடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்'  
 (புறப்பொருள்.வெட்சிப்படலம்:19)

என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல பேய்கள் மிகுந்த படையினையுடைய, வெற்றித்திருவாகிய இறைவி எனச் சிறப்பிக்கப்படுகின்றமையை அறியவியலுகிறது. இவற்றால் மணமாகாத பெண் தெய்வங்கள் மூலம் எதிர்மறையான உணர்வுகள் பெண்களுக்கு மட்டும் இருப்பதாகவும், தனித்து வாழும் பெண்களின் நிறைவடையாத மனநிலையைக் காட்டுவதாக அன்றைய மக்கள் கருதியிருக்க வேண்டும்.

இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட காலத்தில் தமிழ்ச்சமூகத்தில் தாய்வழித்தலைமை நிலவியிருந்ததனைப் பாடல்கள் அடையாளம் காட்டுகின்றன. அடுத்து வந்த காலகட்டங்களில் தெய்வங்களுள் பாலினப் பாகுபாடு ஏற்படுத்தி, இயல்புகளைச் சமூக நடைமுறைகளுக்கு ஏற்றபடியாகப் புகுத்தியிருப்பதனைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன. இதன் வழி ஆண் தெய்வங்களின் துணைக்கரங்களாகப் பெண் தெய்வங்கள் விளங்கியதால் ஆண் ஆதிக்கம் உருப்பெற்றதன் தோற்றநிலை தெளிவாக அறியலாகிறது. தாய்வழிச் சமுதாயம் தந்தைவழித் தலைமை பெற்றதற்குத் தெய்வ வழிபாடு அடிப்படையாக இருப்பதனை முருகன்-வள்ளி, சிவன்-உமையம்மை, திருமால்-திருமகள், அணங்கு, கொற்றவை போன்ற கடவுளர்களின் பாடல்கள் சான்று பகர்கின்றன.

உடைமைச் சமுதாயத்தில் வாரிசுரிமை அடிப்படையில் சொத்துக்களைப் பெறவும், அரசு அமைக்கவும் சமூகம் தாய்வழித் தலைமையை விடுத்துத் தந்தைவழி மரபுரிமையை, தந்தையர்களை அடையாளங்காணும் பொருட்டு அமைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இத்தகைய ஆண்வழிச் சமூத்திலும் பெண் தன் இயல்புகள் குன்றாமல் தன் கடமைகளை ஆற்றியிருப்பதிலிருந்து உணரமுடிகின்றது.

தாய்வழிச் சமுதாயத்தில் பெண்ணின் தலைமைப்பண்பு மக்களைக் காக்கின்றதாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதனைப் பெண்தெய்வ வழிபாட்டின் மூலம் அறியமுடிகின்றது. தொடக்க காலங்களில் பெண் தலைமையில் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கையும், மதிப்பும் புலனாகின்றது. எனவே, சங்ககாலத்திற்கு முற்பட்டு வாழ்ந்த மக்களிடம் இருந்த தாய்வழிச் சமூகத்தின் மரபுசார்ந்த இயல்புகள் சங்க நாட்களில் பெண் தெய்வ வழிபாட்டுக்கு மூலங்களாக்கப்பட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் பொதுவழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டு தனக்கான தன்குடும்பநலன் வழிபாடாக மாற்றம் பெற்றிருப்பதன் மூலம் பெண்ணின் இருப்புநிலை சமநிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறியதனை உணரமுடிகின்றது.

அகவாழ்க்கையில் மட்டுமல்லாது புறவாழ்க்கையிலும் கல்விப்புலமை, தன் கடமையறிந்து செயலாற்றும் தன்மை, இடித்துரைக்கும் பாங்கு போன்ற பண்புகளை ஒளவை முதலான பெண்பாற் புலவர்களின் வாயிலாக அறிய முடிகின்றது. நாடாளும் மன்னனாக இருப்பினும் அவனை நெறிப்படுத்தும் திறன் பெண்ணுக்கு இருந்துள்ளது. மண்ணைக் காக்க ஆண்மகனைப் பெற்றுத் தருவதனைத் தன் கடமையாகக் கொண்டிருப்பினும், தந்தை, நாடாளும் மன்னன், கொல்லன், ஆண்மகன் ஆகியோரின் கடமைகளையும் துணிவுடன் எடுத்துரைப்பதன் மூலம் தாய்வழி மரபின் மறப்பண்பு வெளிப்படுகின்றது. எனவே, சங்ககாலம் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பினும் அவற்றில் பெண்டிரின் பங்களிப்புத் தலைமை சான்றதாகவே அமைந்திருப்பதனைச் சங்கப்பாடல்கள் மெய்ப்பிக்கின்றன. காலந்தோறும் பெண்களிடம் இத்தகைய தலைமைப்பண்புகள் தாய்வழிச்சமூகத்தின் மரபணுக்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதனை மறுக்கவியலாது.

துணைநூற்பட்டியல்:

 

  • இலக்குமி ரதன் பாரதி சோ., நமது சமூகம், பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, 1979.
     

  • கைலாசபதி.க., பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1999.
     

  • சந்திரா சு.யாழ்., தொன்மவியல் கட்டுரைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை, 2009 (முதல் பதிப்பு).
     

  • சேதுப்பிள்ளை ரா.பி., தமிழ் இன்பம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2010 (முதற்பதிப்பு).
     

  • மாதையன் பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்கஅகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009 (முதல்பதிப்பு).
     

  • மாதையன் பெ., தமிழ்ச்செவ்வியல் படைப்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011 (இரண்டாம் அச்சு).
     

  • ரோஸலிண்ட் மைல்ஸ்., ராதாகிருஷ்ணன் வி., (மொ.பெ.), உலக வரலாற்றில் பெண்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,
     

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்