எம் ஜி ஆரின் தலைமைத்துவப் பண்புகள்
 
முனைவர் செ.இராஜேஸ்வரி


எம்.
ஜி.ஆருக்கு சிறு வயது முதற்கொண்டு தலைமைத்துவப் பண்புகள் இருந்ததனை அவரது வாழ்க்கை வரலாறு சுட்டுகிறது. அவர் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது மாணவர்கள் சேர்ந்து பணம் போட்டு குடி தண்ணீர் பானை வாங்கி வைத்தனர். அப்போது அந்தப் பணத்தை முறையாக செலவழிக்கவில்லை என்று தெரிந்ததும் எம் ஜி ஆர் பணம் வசூலித்த சக மாணவனிடம் கணக்குக் கேட்டார் என்று அவரது அண்ணன் எம் ஜி சக்கரபாணி 1972இல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஏழு வயதில் அவருக்கு முறைகேடுகளைத் தட்டி கேட்கும் துணிச்சல் இருந்துள்ளது. இதுவே பின்னர் திமுகவை எதிர்த்து குரல் எழுப்பும் துணிச்சலைக் கொடுத்தது. விளையும் பயிர் முளையிலே என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க அவர் தனது இளமைக் காலம் தொட்டு நியாயத்துக்கு குரல் கொடுக்கும் நல்லவராகக் இருந்து வந்துள்ளார்.

தலைவன் என்பவன் யார் ?

திரைப்படத்தில் எம் ஜி ஆர் யார் தலைவன் ஆகத் தகுதி உடையவர் என்[பதை ஒரு பாட்டின் மூலம் சொல்லியிருப்பார்.

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் – இந்த
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

என்று பாடல் அவர் எழுதியதோ பாடியதோ அல்ல என்றாலும் அவரது வாழ்க்கையை அப்பட்டமாக விவரித்த கருத்துள்ள பாடல் ஆகும்.

எம் ஜி ஆர் படங்களிலும் வாழ்க்கையிலும் அண்ணாவை தம் தலைவனாகக் கொண்டு அவரை பாராட்டியும் வாழ்த்தியும் பாடியிருந்தார். வசனங்களும் பேசியிருந்தார். எங்கும் தனது தலைமைப் பண்பு குறித்து அவர் விவரிக்கவில்லை. ஆனால் அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு நாகேஷ், தேங்காய் சீனிவாசன் போன்ற சில துணை நடிகர்களின் வசனங்களில் எம் ஜி ஆரின் தலைமைத்துவம் பற்றிய குறிப்புகள் தென்பட்டன. அவரை சிறந்த தலைவர் என்று தமிழகம் மட்டுமல் தமிழ் பேசும் நல்லுலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. எம் ஜி ஆரது தலைமைத்துவ பண்புகள் குறித்து இனி விரிவாகக் காண்போம்.

தலைவனுக்குரிய முக்கியப் பண்புகள்

ஒரு தலைவனுக்கு தேவையான முக்கியப் பண்புகள் தோய் நோக்குப் பார்வையும் செயல் திறனும் ஆகும். இன்று இதைச் செய்தால் நாளை என்ன நடக்கும் என்ற தொலைநோக்குப் பார்வை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். அவ்வாறு இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய செயலைத் திறமையோடும் நல்ல பயன் தரும் வகையிலும் [efficient and effective] செய்ய வேண்டியது தலைவனின் இன்றியமையாப் பண்பாகும்.

ஒரு தலைவன் வினைத்திட்பம் தீர்க்கதரிசனத்தோடு இருக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படும் என்றால் அவனுடைய பாதை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ஆனால் தன் மக்கள் வாழும் இடத்தையே சொர்க்கமாக மாற்றிவிடும். இதைத்தான் எம்ஜிஆர் தன்னுடைய படங்களின் மூலமாக தன்னுடைய பண்புகளின் மூலமாக செய்து காட்டினார். எம் ஜி ஆரின் படங்கள் மக்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து அவர்கள் வாழும் இடத்தை சொர்க்கமாக மாற்றின.. இதை விடுத்து ‘நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேளுங்கள், பிராயச்சித்தம் தேடுங்கள், பரிகாரம் செய்யுங்கள், நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்று இல்லாதவற்றை எல்லாம் எம் ஜி ஆர் புனைந்துரைக்கவில்லை.

ஒரு நல்ல தலைவன் என்பவன் இரண்டு கட்டங்களில் செயல்படுகின்றான்.


1.கொள்கை ரீதியான செயல்பாடு.

2. திட்டங்கள் வழியிலான செயல்பாடுகள். இன்னொரு வகையில் கூறினால் ஒன்று கொள்கை உருவாக்கம். மற்றொன்று அக்கொள்கையை நடைமுறை படுத்துதல். இந்த இரண்டிலும் எம்ஜிஆர் முழுமையான வெற்றியைப் பெற்றார்.எம் ஜி ஆர் அண்ணாவை பின்பற்றினார். அண்ணாயிசம் என்ற கொள்கையை வகுத்தார். வாழ்க்கை குறித்த அவருடைய எண்ணங்கள் தர்மம் நீதி சமாதானம் சார்ந்ததாக இருந்தன. இவற்றைத் தன்னுடைய படங்களில் தன்னுடைய கதாபாத்திர உருவாக்கம், , வசனம், பாடல்கள் மூலமாக மக்கள் அறியச் செய்தார். மக்கள் அவரது பேச்சையும் பாடல் கருத்துக்க்ளையும் அவருடைய சொந்த கருத்துக்களாகக் கொண்டு அவற்றை நம்பி வாக்களித்தனர்.

ஒரு தலைவன் தன்னுடைய மக்களை ஆட்டுமந்தை போல வைத்து இருக்கக் கூடாது. நல்ல கொள்கைகளை உருவாக்கி அதன் வழியே செயல்பட்டு தனது மக்களை ஆரோக்கியம் அறிவு, துணிச்சல் சுய சிந்தனை, தன் மானம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும். இவற்றை எம் ஜி ஆர் திறம்படச் செய்து பகுத்தறிவுப் பாதையில் புதிய தலைவனாக உருவாகினார். மக்களைச் சுய சார்புடையவராக உருவாக்கியதில் எம் ஜி ஆர் முழு வெற்றி பெற்றார். அது போல கிராமங்களும் ஊராட்சிகளும் சுய சார்புடையனவாக இருக்க வேண்டும் என்று தனது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார். எம் ஜி ஆர் பேசிய வாசனைகள் கொள்கை ஆயிற்று அவர் பேசிய வசனங்களும் பாடிய பாட்டுகளும் செயலாயிற்று. மக்கள் சேவையில் சினிமாவிலும் அரசியலிலும் அவர் அவராகவே இருந்தார். மாறி மாறி செயல்படவில்லை.

சொல் செயலாயிற்று


எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆனதும் ‘சொல் செயலாயிற்று’. The word became flesh என்று பைபிளில் ஒரு வாக்கு உண்டு. எம் ஜி ஆர் தான் சொல்லியதை அவர் வாழும் வரை இறுதி மூச்சு உள்ள வரை செயலாக்கி காட்டினார். உயிருள்ளவரின் பெயரை சூட்டக் கூடாது என்ற ஒரு கொள்கையை வரையறுத்தார். ஆனால் அவர் பிழைத்ததே ஒரு மருத்துவ அதிசயம் என்று மருத்துவர்கள் அவரிடம் சொல்லி அவர் பெயரை மருத்துவப் பல்கலைக்கலழகத்துக்குச் சூட்டுவது பொருத்தமானது என்று அவரது அனுமதி பெற்றனர். குடியரசுத் தலைவரும் அவ்விழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்தார். ஆனால் எம் ஜி ஆர் முட்ன்ஹைய நாளிரவில் உயிர் நீத்தார். அவரது கொள்கைப்படி அவர் பெயர் அவர் இறந்த பின்பே மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டப்பட்டது. இங்கும் சொல் செயலாயிற்று. அவர் தான் மக்களுக்கு லைத்த வாக்குறுதிகளை காப்பாற்றினார். சொன்னதையும் செய்தார். சொல்லாத பல் நன்மைகளையும் செய்து மகிழ்ந்தார். மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டி தன்னுடைய பொற்கால ஆட்சியை மக்களுக்கு தேவையான அனைத்தையும் அவர் செய்து கொடுத்தார்.

அடிப்படைத் தேவை நிறைவேறியது.

மனிதரின் அடிப்படை தேவைகளில் முதன்மையான உணவு எல்லோருக்கும் வயிறாரக் கிடைக்க வேண்டும் என்பதில் முதல் கவனம் செலுத்தினார். தனது ஆறேழு வயதில் மூன்று நாட்கள் பட்டினி கிடந்த அனுபவம்

‘’வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்

என்ற பாரதியின் வாக்கை நினைவூட்டியது. அவர் வாழ்க்கையின் நோக்கம் என்பது எல்லா குழந்தைக்கும் உணவு கொடுக்க வேண்டும். எந்தக் குழந்தையும் பசியால் தவறான பாதைக்குப் போய்விடக் கூடாது என்பதில் கருத்தும் கவனமுமாய் இருதார்.

தமிழகத்தில் காமராஜர் காலந்தொட்டு அண்ணா காலத்திலும் கலைஞரது ஆட்சியிலும் பசி ஒரு தீராப் பிணியாகவே இருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு காமராஜர் காலத்தில் மக்கள் அரசி கிடைக்காமல் அவதிப்பட்டதும் அண்ணா ரூபாய்க்கு படியரிசி திட்டம் அறிவித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆயிற்று. கலைஞர் ஆட்சியிலும் மழை பெய்யாமல் பஞ்சம் வந்ததால் அரிசி விலை உயர்ந்துகொண்டே போனது. ஆனால் எம் ஜி ஆர் ஆட்சியின் போது அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்து ஏழை எளிய மக்களுக்குத் தினமும் அரிசிச் சோறு கிடைக்கச் செய்தார். அரசி உற்பத்தியைப் பெருக்க ஆவான் செய்தார். பல விவசாயத் திட்டங்களை அறிமுகம் செய்தார். சத்துணவு திட்டம் மூலமாக அனைத்து மலைவாழ் குழந்தைகளுக்கும் அரிசிச் சோறு பரிமாறினார். அரிசிப் பஞ்சத்தால் ஆரோக்கியப் பஞ்சமும் ஏற்பட்டது நோய் தாக்குதல் எளிதாயிற்று.

தனி நபர் ஆரோக்கியம்


ஆரோக்கியத்தைத் தனது உயிராக மதிக்கும் எம் ஜி ஆருக்கு தன்னைப் போன்ற ஓர் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்குவது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு எம்ஜிஆர் தன்னுடைய ஆட்சியில் சத்துணவு வழங்கி இளைய தலைமுறையை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்கினார். அவர் காலத்தில் வருடத்தில் 365 நாட்களும் சுமார் 65 இலட்சம் பேர் சத்துணவு சாப்பிட்டு பலன் பெற்றனர். எண்பத்தெட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டன. இரண்டு இலட்சம் பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். இந்தியத் தேசிய அளவில் தனிநபர் ஆரோக்கியம் என்பதில் தமிழகத்தில் முதலிடம் பிடித்தது. இந்த உணவு அளிப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. பெண்களும் தனிநபர் சுதந்திரத்துடன், பொருளாதார சுதந்திரத்துடன்,

நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத நெறிகளும்

கொண்டு வாழத் தொடங்கினர். பொருளாதாரத்திலும் அரசியலிலும் சுய முடிவுகளை எடுக்கும் திறமையை, துணிச்சலை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழகத்துப் பெண்கள் பெற்றிருந்தனர்.

அன்பு, கருணை, இரக்கம்


ஒரு சிறந்த தலைவன் மக்களிடம் எப்போதும் அன்பும், கருணையும், பாசமும் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த அன்பு என்னும் வேரிலிருந்து தான் பயனளிக்கும் திட்டங்களான கனிகள் உருவாகும். எம்ஜிஆர் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் கடைசி நாட்களிலும் கூட பொது மக்களை சந்திக்க முன்னுரிமை கொடுத்தாரே அல்லாது பணக்காரர்களுக்கு அவர் முன்னுரிமை கொடுத்ததிலை பணக்காரர்கள் அவரை சந்திக்கக் காத்துக் கிடந்தனர். ஆனால் வெளியே தன்னைப் பார்க்க வந்திருக்கும் ஏழை எளியோரை எம்ஜிஆர் முதலில் வந்து பார்த்து அந்த இடத்திலேயே அவர்களுடைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

ஒருமுறை ஒரு இளம் விதவை தன் கணவன் இறந்த பிறகு கிடைத்த அவருடைய வேலையை வைத்துக்கொண்டு இன்னொரு நபரைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்று பலரும் அலுவலகத்தில் முயற்சி செய்தனர். மறுமணம் செய்துகொண்ட அந்த இளம் பெண் தனது கணவருடன் எம்ஜிஆரை சந்திக்க வந்து தன்னுடைய மனுவை அளித்தார். எம்ஜிஆர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ‘விதவை மறுமணம் என்பது நம் அரசின் முக்கியக் கொள்கையாகும். எனவே மறுமணம் செய்துகொண்ட இந்த இளம்பெண்ணைப் பாராட்டுகிறேன்;, வாழ்த்துகிறேன். இப்பெண்ணுக்கு இவ்வேலையில் 2 increment அளிக்கும்படி பரிந்துரைக்கிறேன்’ என்று கோப்பில் எழுதிக் கையெழுத்திட்டார். வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று வந்த பெண்ணுக்கு இரட்டிப்பு increment கிடைத்து அடுத்த பதவி உயர்வுக்கும் எம்ஜிஆர் வழிவகுத்துக் கொடுத்தார்.

எம் ஜி ஆர் கோப்பில் தன கைப்பட எழுதி, கையெழுத்திட்ட போது அங்கிருந்த அதிகாரிகளிடம் ‘அந்த வேலை இருப்பதால்தான் அந்தப் பெண்ணையே இன்னொரு இளைஞன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்த வேலையும் இல்லை என்றால் அந்தப் பெண்ணை வைத்து அவன் வாழ்வானா என்பது சந்தேகம்தான். எனவே அந்தப் பெண்ணின் வாழ்க்கை அந்த வேலையில்தான் இருக்கின்றது. வேலை போய்விட்டால் பெண்ணுக்கு மதிப்பு போய்விடும்’ என்று அவர் விளக்கம் சொல்லி அவர்களுக்கு புரிய வைத்தார். பெற்ற தகப்பனைப் போல கூடப்பிறந்த சகோதரன் போல தன் குடும்பத்து பெண் இளம் வயதில் விதவையாகிவிட்ட நேரத்தில் அவளுக்கு வாழ ஏதேனும் நல்ல வழி செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இரக்கத்தோடு அந்தப் பெண்ணை வாழ வைத்தவர் எம் ஜி ஆர். anpu கருணை இரக்கம் என்ற முன்று அரும்பன்புகளும் நிறைந்தவர் எம் ஜி ஆர் என்பதற்கு இச்சம்பவம் மிக சரியான எடுத்துக்காட்டாகும். .

மார்ட்டின் லூதர் கிங் சொன்னது போல you only need your heart full of grace a soul is generated by love என்பது எம் ஜி ஆருக்கு முற்றிலும் பொருந்தியது. இப்பண்புகளே அவரை மக்கள் தலைவனாக உயர்த்தியது. ஒரு தலைவனுக்கு தேவை தன்னுடைய மக்களின்பால் அன்பும் அருளும் ஆகும். அன்பு என்பது தனக்குத் தெரிந்தவர்களிடம் ஒரு மனிதன் காட்டும் பாசம்; அருள் என்பது தனக்குத் தெரியாத யாரோ ஒருவரிடமும் காட்டும் பாசம் ஆகும். இவ்விரண்டும் எம் ஜி ஆரிடம் தாராளமாக் இருந்தது.

வெற்றி


வெற்றியால் மட்டுமே ஒரு தலைவன் இனம் காணப்படுகிறான். வெற்றி கிடைக்காதவரை ஒரு தலைவனின் கொள்கைகள் என்ன தான் சிறப்பாக இருந்தாலும் அவனை தலைவன் என இவ்வுலகம் முத்திரை குத்துவதில்லை. வெற்றி என்பது எல்லோருடைய இலக்காக இருப்பினும் எம்ஜிஆருக்கு மட்டும் அது அன்றாடம் செடியில் பூத்த மலர் போல அவர் கைக்கு கிட்டியது.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்


என்று தேடி வந்த மாப்பிள்ளை (1970) படத்தில் தன் தாயாரைப் பார்த்து பாடுவார். ஆனால் அந்த பாட்டு மறைமுகமாக தனக்கு வெற்றியைத் தேடித்தந்த பெருமை தன் ரசிகர்களைச் சேரும் என்று சொல்வதாகவே அமைந்திருந்தது. ஆயிரத்தில் ஒருவன் (1965) படத்தில் ‘வெற்றி தேவதை உன் வீட்டு வேலைக்காரி ஆயிற்றே’ என்று ஒரு வசனத்தை வில்லன் நம்பியார் எம்ஜிஆரைப் பார்த்து சொல்வார். தேவர் தன் படங்களில் முதல் காட்சியில் எம்ஜிஆர் வெற்றி வெற்றி என்று சொல்லிக்கொண்டு வருவது போல பேச வைத்து படப்பிடிப்பைத் தொடங்குவார். வெற்றி என்ற வசனமே முதல் காட்சியாக எடுக்கப்படும். திரையுலகிலும் அரசியலிலும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவை மக்களும் அவரும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த பரஸ்பர அன்பும் நல்லெண்ணமும் ஆகும். எம் ஜி ஆர் எதைச் செய்தாலும் அது மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்று நினைத்து அதிகாரிகளுடன் கலந்து விவாதித்து செய்தாரே தவிர தன்னுடைய குடும்பத்தினருக்கோ தன்னுடைய நண்பர்களுக்கு கட்சிக்காரர்களுக்கும் இது நன்மையைத் தரக்கூடிய திட்டம் என்று முடிவு செய்து எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை. இந்தப் பின்புலத்துடன் அவரது வெற்றிக்கான வழி முறைகளாக நாம் சிலவற்றை காண்கிறோம் .

1. இலட்சியம்,
2. முன்னேற்றம்
3. உரிய காலத்தில் செய்த நன்மை
4. ஏழைகளிடம் கருணை
5. மற்றவர்களையும் தன்னோடு சேர்த்து இணைத்து நோக்குதல்
6. தர்மம் நீதி சமாதானம் ஆகிய பெரிய தகவுகளோடு [values] மக்களையும் வாழ்க்கையையும் இணைத்தல்
7. தனிமனித நெறிமுறை
8. எடுப்பதை விட கொடுப்பது அதிகம்
9. அதீத படைப்பாற்றல்
10. புதுமை நாட்டம்.
இனி இவ்வொன்றும் எம் ஜி ஆர் வாழ்வில் செயல்பட்ட விதத்தை காண்போம்.

1. இலட்சியம்

தலைவன் என்பவன் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் தான் விரும்பிய இலக்குக்கு தனது மக்களை இட்டுச் செல்கிறான். அந்த இலக்கை அடைவதே அவன் இலட்சியம் ஆகும். தலைவனின் இலட்சியம் தனி மனிதர் வாழ்வில் நிம்மதியும் சமுதாயத்தில் மகிழச்சியும் காட்டுவதாக அமைய வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டிருந்த எம்ஜிஆர் ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இருவரும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் குழந்தை நிம்மதியாக இருக்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சியில் தான் பெற்றோரின் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்துணவை வழங்கிய எம்ஜிஆர் அதன்மூலம் பெற்றோர்களுக்கு நிம்மதியை அளித்தார். மிதிவண்டியில் இருவர் போக அனுமதி அளித்ததும் கணவன் மனைவி சேர்ந்து போக வாய்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அரசு பணி செய்யும் கணவன் மனைவியருக்கு மனைவி இருக்கும் ஊருக்கு கணவனுக்கு பனி மாற்றம் அளிக்க உத்தரவிட்டார். இருவரும் அருகருகே உள்ள ஊர்களில் பணி செய்ய வாய்ப்பளித்தார். குடும்பமே சமுதாயத்தின் மிகச் சிறிய அழகு என்பதால் ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக இருந்தால் சமுதாயம் சிறப்பு நிலையை அடையும் என்பதால் மாற்றத்தை சிறிய அழகில் இருந்து கொண்டுவந்தார். தனி மனித ஆரோக்கியம் மகிழ்ச்சி என்பது எம் ஜி ஆரின் முதற்கட்ட இலட்சியமாக இருந்தது.

2.முன்னேற்றம்


தலைவன் என்பவன் தானும் முன்னேற வேண்டும் தன மக்களையும் முன்னேற்றப் படிகளில் அழைத்து செல்ல வேண்டும். இவ்விரண்டையும் அழகாகச் செய்தவர் எம் ஜி ஆர்.

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர இருந்த இடத்தில் கிடை நீர் போல இருந்துவிடக் கூடாது. இது எம்ஜிஆர் வாழ்வில் சிறப்பாக நடந்ததனால் அவர் தலைவராக உயர முடிந்தது. ஆரம்பத்தில் நாடகத்தில் சிறுவனாக சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம் ஜி ஆர் பதினேழு பதினெட்டு வயது ஆனதும் நாடகத்தை விட்டு வெளியேறி அப்போது பரபரப்பாக இருந்து வந்த திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 1936 முதல் 1947 வரை சுமார் பதினோரு ஆண்டுகள் அவர் திரையுலகில் பி யு சின்னப்பா, எம்கே தியாகராஜ பாகவதர் போன்ற நடிகர்களோடு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.. பின்னர் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

எம் ஜி ஆர் கதாநாயகன் ஆனதும் தன்னுடைய லட்சியம் வெற்றி பெற்றதாக அவர் அமைதி அடையவில்லை. தான் திரையுலகில் மேலும் மேலும் முன்னேற வேண்டும்; ஓர் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் பத்தாண்டுகள் செயல்பட்டார். திரையுல்கைக் கூர்ந்து கவனித்து வந்தார். வெற்றி காரணிகளைக் கண்டறிந்தார். அவற்றை நடைமுறைப்படுத்த விரும்பினார். 1957இல் தான் நடிக்க விரும்பியவாறு நடிப்பதற்கு மற்ற தயாரிப்பாளர்களின் இயக்குனர்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்து அவர் தன்னுடைய சொந்தப் படத்தை தயாரிக்க தொடங்கினார். சொந்தப்படமான நாடோடி மன்னன் (1958) வெளிவது இமாலய வெற்றி பெற்றது. அப்படம் அளித்த வெற்றி அவரை திரை உலகின் உச்சத்தில் கொண்டு போய் வைத்தது. அந்தப் படமே அவருடைய அரசியல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. அவருடைய சொல்வாக்கும் செல்வாக்கும் உயர்ந்தது. இப்போது அவர் வாக்கு வேத வாக்காயிற்று. மறுத்துப் பேச எவரும் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. அவர் பேச்சை கேட்காத தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சந்தித்த தோல்வியும் நஷ்டமும் மற்றவர்களுக்கு ஓர் பாடம் ஆயிற்று. அவருடைய முன்னேற்றத்துக்கு யாராலும் தடை போட முடியவில்லை. இதுவே அவருடைய அரசியல் வாழ்விலும் தொடர்ந்தது.சாணக்யன் இராஜ தந்திரி என்று பாராட்டப்பட்ட கருணாநிதியால் கூட எம் ஜி ஆரை அரசியல் களத்தில் வீழ்த்த இயலவில்லை.

அண்ணாவின் நட்பால் எம் ஜி ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய நபரானார். அண்ணாவிடம் பத்தாயிரம் ரூபாய் தேர்தல் நிதி கொடுக்க வந்த எம் ஜி ஆரிடம் ‘நீ மக்களிடம் வந்து உன் முகத்தை காட்டு ராமச்சந்திரா அது எனக்கு இலட்சம் ஓட்டுகளைப் பெற்று தரும்’ என்று அண்ணா கேட்டுக்கொண்டார். அதன் பிறகு எம் ஜி ஆர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அழைக்கப்பட்டார்.. 1962இலும் 1967இலும் திமுகவுக்கு கிடைத்த வெற்றியில் எம் ஜி ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அண்ணா முதலமைச்சர் ஆனதும் அமைச்சரவைப் பட்டியலை எம்ஜிஆரிடம் காட்டி ஒப்புதல் பெறும் அளவுக்கு எம்ஜிஆரின் தகுதி உயர்ந்திருந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதியை எம்ஜிஆர்தான் முதலமைச்சர் ஆக்கினார். கருணாநிதியின் போக்கு சரியில்லை என தெரிந்ததும் அவரை எதிர்த்து நின்றார். திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டதும் தனிக்கட்சி தொடங்கி தன்னுடைய அரசியல் பாதையில் தொடர்ந்து வெற்றி பெற்று தன் இறுதி மூச்சு உள்ளவரை அவர் மக்களின் மகோன்னத தலைவராகவே இருந்து மறைந்தார். ஆக முன்னேற்றம் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து படிப்படியாக முன்னேறி அடுத்தடுத்த கட்டத்தை அடைந்து இந்தியாவின் உயர்த்த விருதான பாரத ரத்னாவைப் பெறும் அளவுக்கு வாழ்வில் உன்னத நிலையை அடைந்தார்.

முதலமைச்சரானதும் அரசில் நிதி இல்லாத காரணத்தால் தனியாரைப் பள்ளி கல்லூரிகளை தொடங்கும்படி ஊக்குவித்து அவற்றில் கால் பகுதி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக் கிடைக்கும்படி செய்தார். அவ்வாறு பள்ளிக் கல்வி முடித்தவர்களை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற விரும்பினார். அவர்கள் வெறும் குமாஸ்தாக்களாக இருந்துவிடக் கூடாது தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அவர்கள் தொழிற்கல்வி பெறுவதற்கு ஐ டி ஐ, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கச் செய்தார்.

2. காலத்தில் செய்யும் நன்மை


தலைவன் தன்னை தேடி வந்து உதவி கேட்டால் மட்டும் செய்வேன் என்ற அகந்தையுடன் இருக்க கூடாது. தானே தேடி போய் உதவ வேண்டும். சென்னையில் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஒரிசா போன்ற மற்ற மாநிலங்களில் சிங்கப்பூர், , இலங்கை போன்ற நாடுகளில் தீ விபத்து, பூகம்பம், வெள்ளச் சேதம், போர் அபாயம் ஏற்பட்ட போதும் வேறு உதவிகள் தேவைப்பட்ட போதும் எம் ஜி ஆரின் உதவியே முதல் உதவியாக சென்று சேரும். . அரசின் உதவிக் கரம் நீளும் முன்பே எம் ஜி ஆரின் உதவிகள் உரியவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். தனி நபருக்குத் தேவை என்றாலும் நாடுகளுக்கு தேவை என்றாலும் எம் ஜி ஆர் உடனடியாக உதவுவார். இவ்வாறு உதவுவதும் பிறர் துயரை தனது துயரமாக உணர்வதும் தலைமைத்துவப் பண்புகளில் சிறந்த பண்பாகும்.

சோ எழுதிய ஒரு கட்டுரையில் அவரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த சட்டாம்பிள்ளை என்ற நடிகர் வீட்டில் உலை வைத்து விட்டு அரிசி வாங்கிக் கொண்டு வரலாம் என்று போவதாக இருந்தால் அது எம்ஜிஆர் வீட்டுக்கு தான் போக வேண்டும் அங்கு போனால் தான் நம்பிக்கையோடு நமக்கு பணம் கிடைக்கும் என்ற என்று சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். எம்ஜிஆர் பற்றி சரோஜாதேவி அளித்த பேட்டி ஒன்றில் ‘கடவுளிடம் கேட்டால் கூட அது ஒரு வாரம் பத்து நாள் கழித்து கொடுக்கும். ஆனால் எம்ஜிஆரிடம் போய் கேட்டால் உடனடியாக கிடைக்கும்’ என்றார். எம்ஜிஆரிடம் போய் வெறுங்கையோடு திரும்பியாவர் எவருமில்லை. எதிரியாக இருந்தாலும் கூட அவர் கண்ணில் படும்படி நின்று விட்டால் என்ன ஏது என்று கேட்காமலேயே உதவி செய்து விடுவார். பலருக்கும் அவசர காலத்தில் உரிய உதவிகளை செய்திருக்கிறார். திரையுலகில் சுமார் 10 பேருக்கு அவர்களின் வீடு ஏலத்தில் போன சமயத்தில் பணம் கொடுத்து உதவி வீட்டை மீட்டு தந்திருக்கிறார்.. என் எஸ் கிருஷ்ணனின் சொந்த வீடு ஒன்று அவர் மனைவி மதுரத்தின் சொந்த ஊராணன் திருச்சியில் இருந்தது. அதன் பெயர் கிருஷ்ண விலாசம். அந்த வீடு ஏலத்திற்கு வந்தபோது அதை ஏலத்தில் எடுத்து என் எஸ் கிருஷ்ணன் கையில் திருப்பிக் கொடுத்தார். எம் ஜி ஆரிடம் போய் கேட்டுத் தான் உதவி பெற வேண்டும் என்ற நிலை இல்லை. அவர் காதுக்கு அபயக் குரல் கேட்டாலே போதும் அவர் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி குரல் கேட்ட திசையில் தேடி வந்து உதவி செய்வார்.. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எம் ஜி ஆர் ஒஉர் முறை காரில் வந்து கொண்டிருந்த போது. தெருவில் யாரோ உட்கார்ந்து ஓவென்று அழுது சத்தம் கேட்டதும் காரை நிறுத்தச் சொன்னார். அங்கு போய் என்னவென்று பார்த்து விட்டு வா என்று தன் உதவியாளரை அனுப்பி வைத்தார். அவர் போய்ப் பார்த்து விவரம் கேட்டுக்கொண்டு வந்து எம் ஜி ஆரிடம் ‘குதிரை வண்டிக்காரன் தன் குதிரை செத்ததால் அழுகிறான்’ அவன் குடும்பமும் செத்துப் போன குதிரையைச் சுற்றி உடகார்ந்து கொண்டு அழுதுகொண்டிருக்கிறது’ என்றார். அலுத்து கொண்டிருந்த குதிரை வண்டிக்காரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் புது குதிரை வாங்க பணம் கொடுத்து குதிரை வண்டியில் பூட்டி அதை பழக்கம் வரை அவனுடைய வீட்டுச் செலவுக்கும் பணம் கொடுத்து குதிரையை வண்டியில் பூட்டி தன்னிடம் கொண்டு வந்து காண்பித்து விட்டு செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்.

தெய்வத்தின் தெய்வம்


வலியப் போய் உதவி செய்யும் நற்குணம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் மக்கள் அவரிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அவரைத் தெய்வமாக போற்றினர். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் காணு என்ற ஜப்பானிய மருத்துவர் பெயரால் காணு நகர் என்று ஒரு பகுதிக்கு பெயர் சூட்டினர். அதைப் பற்றி விசாரித்தபோது அவர் எங்கள் ‘தெய்வத்தின் தெய்வம்’ என்று நன்றியோடு குறிப்பிட்டனர்.

3. ஏழைகளிடம் கருணை


தலைவனின் சிறப்பு பண்புகளில் ஒன்று ஏழை, எளியோர், நலிந்தோர், பெண்கள், குழந்தைகள், முதியவர் மற்றும் ஒடுக்கப்பட்டோரிடம் அன்பும் கருணையும் கொண்டிருப்பது ஆகும். அவர்களின் துன்பத்தைத் தீர்க்க வந்த இரட்சகர் என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்; அவர்களின் துன்பத்தை குறைக்க வேண்டும். அவர்களை தமது சுய நலத்துக்குப் பயன்படுத்தி ஏமாற்றக் கூடாது. அவர்களை நேசிக்க வேண்டும் உண்மையான அன்பும் பரிவும் கருணையும் கொண்டிருக்கவேண்டும்.

காரில் போகும்போது தன் காருக்கு பின்னால் ஓடி வரும் மக்களைப் பார்த்து இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லி அழுததும் உண்டு. அவர் ஏராளமான திட்டங்களை ஏழை மக்களுக்காகக் கொண்டு வந்தார். நகரத்தில் குடிசைபகுதி மாற்று வாரியத்தை முடுக்கிவிட்டு தெருவோரத்தில் குடியிருந்தவர்களுக்கு முப்பது இலட்சம் வீடுகள் தமிழக அரசு கட்டித் தர ஏற்பாடுகள் செய்தார். கிராமங்களில் பத்து லட்சம் பேருக்கு வீட்டுமனை இலவசமாக அளித்தார். விவசாயிகளுக்கும், நகரங்களிலும் கிராமங்களிலும் சில மாதங்கள் வேலை இருக்காது. அப்போது அவர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்தார். முறை சாரா வேலைகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்தார். விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள், நெசவாளிகளுக்கு கூட்டுறவு நூற்பாலைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். கிராமப் பெண்களின் சமையளறைச் சிரமங்களைக் குறைக்கவும் கிராமங்கள் தன்னிறைவு நிலை பெறவும் சாண எரி வாயு திட்டம் அறிமுகம் ஆனது. இந்தியாவிலேயே இத்திட்டம் சிறப்பாக செயல்பட்ட பெருமையை தமிழ்நாடு பெற்றது 1987இல் முதலிடம் பெற்ற தமிழகம் அதற்கு முன்பு தொடர்ந்து இரண்டு முறை இரண்டாவது இடத்தைப் பெற்று வந்தது.

எம் ஜி ஆர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் கூட்டுறவு வங்கி அமைத்து கூட்டுறவே நாட்டுயர்வு என்ற கொள்கையின் படி செயல் திட்டங்களை தீட்டினார். கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் பெற்று தங்களது தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளவும் அரசு அளிக்கவும் பயிற்சிகளைப் பற்று தொழிலை விரிவாக்கவும் வருமானத்தைப் பெருக்கவும் எம்ஜிஆர் திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார்.
இவ்வாறு ஏழைகளின் பால் அன்பும் கருணையும் உள்ளவராக இருந்ததனால் முதியோர்களுக்கும் ஒருவேளை உணவு இலவசமாக அளித்து அவர்களின் கைச்செலவுக்கு முதியோர் ஓய்வுதியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகை கொடுத்து வந்தார். பெரியவர்களின் கைகளில் இருக்கும் இத் தொகை அவர்களின் பேரப்பிள்ளைகளுக்கு ஏதேனும் விருப்பப்பட்ட பொருளை வாங்கிக் கொடுக்கவும், பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகக் காலத்தை செலவிடவும் உதவும் என்பதால் அவர்களுக்கும் பொருளாதார சுதந்திரம் தேவை என்ற நோக்கில் அந்த முதியவர்களின் தலைமகனாக இருந்து எம்ஜிஆர் அவர்களுக்கு வேண்டியதை செய்து வந்தார்.

4. தன்னையும் மக்களோடு இணைத்துக் கொள்ளுதல் :


தலைவன் என்பவன் தலைமை பொறுப்பு ஏற்றிருந்தாலும் அவன் தன மக்களுக்கு ஒரு தொண்டனே ஆவான். தலைவன் அவர்களை வழிநடத்திச் சென்றாலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டவனே என்பதை அவன் எப்போதும் மறந்துவிடக் கூடாது. தலைவனின் உயர் பண்புகளை அவர் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் படகோட்டியில் அழகாகத் தெளிவாகக் விளக்கியிருப்பார். திருவள்ளுவரும் தலைவனின் பண்புகளை எடுத்துரைக்கும் போது ‘காட்சிக்கு எளியனாய்’ என்ற தன்மையை முதலில் குறிப்பிடுறார். எம் ஜி ஆரும் மக்கள் வந்து தன்னைப் பார்ப்பதற்கு கெடுபிடிகள் இல்லாதவராக இருந்தார். அவரை அதிகாலையிலும் பார்க்கலாம் தோட்டத்திலும் பார்க்கலாம்; கோட்டையில் பார்க்கலாம்; கட்சி அலுவலகத்திலும் பார்க்கலாம். வழியிலும் பார்க்கலாம். காரை மறித்து பார்த்தவர்கள் உண்டு. அவரும் வழியில் காரை நிறுத்தி மக்களை சந்தித்தது உண்டு,. வீட்டுக்கு போகும் பொது ஒரு நாள் திடிரென ரேஷன் கடையில் கூட வந்து உட்கார்ந்திருந்தார்.

எம்ஜிஆர் எப்போதும் மக்களோடு மக்களாகப் [inclusive] பழகி வந்தார். இன்றைய அரசியல்வாதிகள் போல அவர் தன்னை விட்டு மக்களை பிரித்துவிடவில்லை. அவர் கூட்டங்களுக்குப் போகும் போது அவரைப் பார்க்க வரும் மக்கள் அவரது கையைப் பிடித்துக் கொள்வார்கள். அவருக்கு முத்தம் கொடுப்பார்கள். அப்போது அதிகாரிகள் அவருடைய பாதுகாப்பை எண்ணி அவர்களை அப்புறப்படுத்த நினைக்கும்போது எம்ஜிஆர் அதிகாரிகளைக் கண்டித்து மக்களின் தீவிர அன்பை ஏற்றுக்கொள்வார். ‘அவர்களுக்கு தெரிந்த வகையில் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள் அவர்களை ஒன்றும் சொல்லாதீர்கள் ‘ என்று தன் பாதுகாப்பு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வார்.

ஒருமுறை ஒரு பெரிய குறவர் கூட்டம் ராமாவரத்தில் வந்து எம்ஜிஆரை பார்த்தது. அப்படி பார்த்தவர்கள் அவரோடு ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்ற போது எம்ஜிஆர் அவர்களோடு நின்று போஸ் கொடுத்தார். அப்போது ஒரு குறவர் எம்ஜிஆரின் கன்னத்தில் திடீரென்று முத்தம் கொடுத்தார். எல்லோரும் திகைத்து விட்டனர். எம்ஜிஆருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. என்னப்பா இப்படி செய்து விட்டாய் என்று சிரித்துக்கொண்டே கைக்குட்டையால் தன்னுடைய கன்னத்தில் இருந்த அவருடைய வெற்றிலை எச்சிலைத் துடைத்தார். அதற்கு அந்த குறவர் ‘ஐயா நான் உங்கள் கன்னத்தில் முத்தம் கொடுப்பேன் என்று சவால் விட்டு வந்தேன். என் சவாலில் நான் ஜெயித்து விட்டேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம். ‘இதுபோல் வேறு ஏதாவது நடிகை பெயரை சொல்லி சவால் வைத்து விடாதே; வம்பாகப் போய்விடும்’ என்று சொல்லி சிரித்தார்.

எம் ஜி ஆர் பிரச்சாரத்துக்குப் போகும்போதும் படபிடிப்பில் இருக்கும் போதும் பல இடங்களில் எம்ஜிஆரை வந்து கட்டிப் பிடிப்பதும் அவர் கைகளை, கன்னத்தை கிள்ளுவதும் அவரை தொட்டுக் கொள்ளவா என்று கேட்டு அவரை தொட்டுப் பார்ப்பதும், அவர்கள் கைகளில் முத்தம் கொடுப்பதும் இறுகக் கட்டி அணைப்பதும் சர்வ சாதாரணமாக நடந்தன. எம்ஜிஆர் அவர்களைத் தன்னுடைய சொந்த சகோதரர்களாக நினைப்பாரே தவிர அவர்களின் கை, உடம்பு, எச்சில் போன்றவை தன் மீது பட்டு விட்டது என்று அருவருப்படைய மாட்டார். வயதான பெண்கள் வியர்வை நாற்றத்துடன் வந்து அவரை கட்டிப்பிடித்து புத்திமதி சொல்வதுண்டு. வாழ்த்துவதுண்டு. சிலர் அலுத்து தங்களின் பரிதாப நிலைமையை விவரிப்பதுண்டு. தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் அவர்கள் தான் என்ற உண்மையை உணர்ந்தவராக அவர்கள் சொல்வதை எம் ஜி ஆர் பொறுமையுடன் கேட்டுக் கொள்வார் சகித்துக்கொள்வார். அருவருப்படைய மாட்டார்.

எம் ஜி ஆர் வெளியூர் படப்பிடிப்பின் போதும் அல்லது படப்பிடிப்பு நிலையத்திலும் மதிய உணவு சாப்பிடுவதாக இருந்தால் அனைவரோடும் சேர்ந்து உட்கார்ந்து தனக்கு பரிமாறப்பட்ட உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு சாப்பிடத் தொடங்குவார். அவ்வாறு சாப்பிடும் போது மற்றவர்களின் இலையைக் கவனித்து யார் எந்த பதார்த்தத்தை விரும்பி சாப்பிடுகிறார் என்பதைக் கவனித்து அவருக்கு அந்த பதார்த்தத்தை திரும்பத் திரும்ப பரிமாறும்படி கூறுவார். விரைவாக சாப்பிட்டு முடிக்கும் எம்ஜிஆர் மற்றவர்களிடம் சென்று அவர்களிடம் சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரித்து அவர்களுக்குப் பிரியமானதை பரிமாறச் சொல்வார்.
ஒரு முறை ஒரு போலிஸ் அதிகாரிக்குக் காலையில் ராமாவரம் தோட்டத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. அவர் என்னவோ எதோ என்று பயந்துகொண்டே சென்றார். அங்கு சென்றதும் எம் ஜி ஆரின் உதவியாளர் ‘நீங்கள் டியுட்டியில் இருந்த அன்று காலையில் இடியாப்பம் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னது தலைவர் காதில் விழுந்திருக்கிறது. ‘இன்று நம் வீட்டில் இடியாப்பம் செய்திருக்கிறார்கள் அவரை வரச் சொல்லி சாப்பிடச் சொல்’ என்று என்னிடம் கூறினார். அதனால் உங்களை வரச் சொன்னேன் போய் சாப்பிட்டுங்கள்’ என்றார். அந்த போலிஸ் அதிகாரி மனம் நெகிழ்ந்துவிட்டார். தான் அன்று இத்யாப்பம் சாப்பிட்ட மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனத்தில் வைத்து மறக்காமல் இன்று அழைத்து சாப்பிட வைக்கிறாரே என்று மகிழ்ந்து நெகிழ்ந்து போனார். சின்ன சின்ன விஷயங்களில் கூட எம் ஜி ஆர் கனிவுள்ளவராகவே அவரை சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்திருக்கிறார்.

அவருடைய சத்யா ஸ்டூடியோவில் அவர் ஒரு பங்குதாரராக நடந்துகொண்டாரே தவிர என்று முதலாளியாக இருக்கவில்லை. மதுரையை மீட்ட சுத்தர பாண்டியன் படப்பிடிப்பின் பொது அவர் கையில் லேசாக தீ பட்டுவிட்டது. உடனே அவர் மருந்து கேட்டார் அங்கு மருந்து எதுவும் இல்லை. பணியாளர்களுக்கு காயம் பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். பதில் இல்லை. உடனே அங்கு முதலுதவி பெட்டி வைக்கச் செய்தார் அனைத்துப் பணியாளருக்கும் மருத்துவக் காப்பிடு எடுக்க ஏற்பாடுகள் செய்தார். அவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு அளித்தார். தன்னைப் போல பிறரை நேசித்த தயாளன் அவர்.

இவ்வளவு பணம் சம்பாதித்து எல்லாவற்றையும் கொடுத்து மகிழ்ந்தால் நாளைக்கு உங்கள் தேவைக்கு என்ன செய்வீர்கள் என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ‘பணம் நிரந்தரமானதல்ல . இந்த ஸ்டுடியோ முன்பு ஜுபிடர் ஸ்டுடியோவாக இருந்த போது அந்த முதலாளி சோமு முன்பு நிற்க நாங்கள் பயப்படுவோம் இன்று இதில் நான் பங்குதாரராக இருக்கிறேன். பணமும் புகழும் நிலையில்லாதது’. என்றார். அந்த ஸ்டுடியோவில் தந்து வசதிக்கேற்றபடி பங்குகளைத் தான் வைத்துக்கொண்டு அங்கு வேலை பார்த்த மடர்வர்களையும் அதில் பங்குதாரர்கள் ஆக்கியிருந்தார். எனவே அங்கு பணியாற்றிய அனைவரும் அதன் பங்குதாரர்கள் என்பதால் அனைவருமே அந்த ஸ்டூடியோவின் முதலாளிகள்தான். தொழிலாளி படத்தில் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு கூட்டுறவு பஸ் சர்விஸ் நடத்தியது வெறும் நடிப்பு அல்ல; அவர் சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் அவரது வாழ்வில் நடந்த நிஜம் .

எம் ஜி ஆர் தன்னுடன் வரும் ஆட்களுக்கு தக்க பாதுகாப்பு அளிப்பதை தனது பொறுப்பாகக் ஏற்றுக்கொள்ளும் உன்னத தலைவர். நாடகம் சினிமா அரசியல் என அனைத்து துறையிலும் அவர் நலிந்தோருக்கும் பெண்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். ஜி சகுந்தலா பேட்டியில் நாடகம் நடித்து முடித்து வரும் பொது அவர் நாடக நடிகைகளை பாதுகாப்பாக அழைத்து வரும் விதம் குறித்து விவரித்திருப்பார். மதுரை வீரன் திரைப்பட விழா மதுரையில் நடந்த சமயத்தில் அங்கு காரில் வந்த எம் ஜி ஆர் தன்னை சுற்றி குழுமிய ரசிகர்களைப் பார்த்து பெண்கள் போக வழி விடுங்கள் என்றார். உடன அவர்கள் நடிகைகள மேடை செல்லும் வரை விலகி நின்றனர். பின்பு எம் ஜி ஆரை தொட்டு கொஞ்சி மகிழ்ந்தனர். அரசியல் பொது கூட்டம் ஒன்றல் பேசிய எம் ஜி ஆர் தான் பேசி முடித்ததும் ஆண்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் நீங்கள் இருங்கள் பெண்கள் கிளம்பட்டும் என்றார். பெண்கள் கிளம்பி சென்றதும் ஆண்கள் போகலாம் என்றார். என்ன காரணம் என்று கேட்டதற்கு கூட்டம் அதிகம் இருப்பதால் ஒரே சமயம் இரு சாராரும் கிளம்பினால் கூட்டத்தில் பெண்கள் சிக்கி சிரமப்படுவர் என்பதால் அவர்களை முதலில் போகச் சொன்னேன் என்றார். இவ்வாறு அனைத்து சூழ்நிலையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் முன் நின்றவர் எம் ஜி ஆர். பெண்களைப் பாதுகாக்க வேண்டும் இந்த பொறுப்புணர்ச்சி அவருக்குரிய தலைமைப்பன்புகளில் ஒன்று. மக்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டிருந்ததால் மட்டுமே அவர் சிறந்த தலைவராக பெருமை பெற முடிந்தது.

5. உலகப் பொதுத் தகவுகளைப் பின்பற்றுதல்


ஒரு தலைவன் என்பவன் சிறிய வட்டத்துக்குள் தனது சிந்தனைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. பரந்துபட்ட பார்வையும் உலகளாவிய சிந்தனையும் தலைவனுக்கு தேவை. அவரது படங்கள் love and war என்ற உலகளாவிய பாடு பொருள் தத்துவங்களை மையப்படுத்தியதாக இருந்தன. எனவே அவருடைய படங்களை இன்றும் தலைமுறை கடந்த பிறகும் கூட மக்கள் திரையரங்குகளுக்கு சென்று ரசிக்கின்றனர். வேறு எவர் படமும் திரையரங்குக்கு வராத நிலையில் எம் ஜி ஆர் படங்கள் மட்டுமே கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாக திரையரங்குகளில் வெற்றி நடை போடுகின்றன.

தலைவன் என்பவன் என்றும் நினைக்கப்படுபவனாக இருக்க வேண்டுமே தவிர அவன் காலத்தோடு அந்தத் தலைமுறையோடு மறந்துவிடக் கூடாது. இன்றும் வாழ்கிறார் எம் ஜி ஆர் என்ற சிறப்புக்குரியவர் தமிழகத்தில் எம் ஜி ஆர் ஒருவரே.

எம்ஜிஆர் தனது தனிப்பட்ட வாழ்வில் தர்மம், நீதி, சமாதானம் போன்ற உலகப் பொதுத் தகவுகளைக் [universal values] கடைப்பிடித்தார். இவற்றைத் தன்னோடு இருக்கும் மற்றவர்களும் கடைப்பிடிக்கும்படி செய்தார்.

தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்
என்று கதாபாத்திரத்திற்காக மட்டும் பாடவில்லை.
நீதியின் தீபங்களை ஏந்திய கைகளின்
லட்சிய பயணம் இது இதில்
த்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கும் இதயம் இது
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணுவோம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் வாழ்வோம்

என்று எம் ஜி ஆர் படத்தில் பாடிய அவரிகள் அவர் வாழ்க்கையில் தர்மம் நீதி அமைதி ஆகியவற்றை அவர் தீவிரமாக பின்பற்றினார். யாருக்கும் இல்லை என்று கொடுக்காமல் கொடுக்கும் கொடை வள்ளல். நீதி கிடைக்காதவர்கள் எம்ஜிஆரிடம் போய் முறையிட்டபோது அவர் அவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தார். நடிகை இலட்சுமி ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக இருந்துகொண்டு தன்னைப்பற்றி அவதூறான விஷயங்களை ஒரு பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது என்று எம் ஜி ஆரிடம் முறையிட்ட போது எம் ஜி ஆர் அந்தப் பத்திரிகையாசிரியரை அழைத்து கண்டித்து அனுப்பினார்.

சாவித்திரி ஒரு நாள் எம் ஜி ஆரின் மாம்பலம் அலுவலகத்துக்கு வந்து ‘அண்ணே நான் ரொம்பக் கஷ்டப்படுறேன்’ என்று சொன்னபோது ‘உடம்பைப் பார்த்துக்கம்மா’ என்று அறிவுரை கூறினார். உடனே உதவியாளரிடம் சொல்லி ஒரு குட்டி சாக்கில் ஒரு லட்ச ரூபாய் போட்டு கட்டி எடுத்து வரச் சொல்லி காரில் வைத்து சாவித்திரியை அனுப்பி வைத்தார். ஒரு இலட்சம் என்பது அன்றைய தேதியில் ஒரு படத்தில் நடித்திருந்தால் அவர் வாங்கியிருக்கும் சம்பளம் ஆகும். பெரிய நடிகை என்பதாலும் நன்கு வாழ்ந்தவர் என்பதாலும் அவருக்கு ஒரு படத்துக்கான சம்பளத்தை கொடுத்து கௌரவப்படுத்தினார். வாழ்க்கையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்கள் அவரிடம் போய் நின்றபோது அவர் அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்; கடனை அடைத்தார்.

7.தனிநபர் நெறிமுறை:


ஒரு தலைவன் தனி வாழ்வில் பின்பற்றும் நெறிமுறைகளைப் பார்த்து மற்றவர்களும் அதனைப் பின்பற்றுவர். எனவே தலைவனுக்குத் தனி மனிதக் கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம் , ‘நான் தலைவன் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்; நீ தொண்டன் எதுவும் செய்யக் கூடாது’ என்று சொல்லக்கூடாது. . ஒரு தலைவன் அப்படி நினைத்தால் அவன் வழிகாட்டக் கூ’டிய தலைவனே அல்லன்; அவனைப் பின்பற்றி மற்றவர்கள் வர மாட்டார்கள். தலைவன் பல தலைமுறைகளால் நினைவு கூரப்படுபவன் என்பதால் அவன் தலைமுறைகள கடந்த காலத்தால் நின்று நிலைக்கும் நெறிமுறைகளோடு வாழ்ந்து வர வேண்டும். அவ்வாறு வாழ்ந்து தனது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

எம் ஜி ஆரை இன்று முன்று தலைமுறையாக மக்கள் அன்புத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர் காட்டிய அன்பும் இரக்கமும் அவர் பின்பற்றி வந்த நல் ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் என உறுதியாகக கூறலாம்..

எம்ஜிஆர் ஒரு தனி மனிதர் என்ற முறையில் பல நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார் தன் வாழ்க்கையில் பின்பற்றி வந்தார் அவர் எப்போதும் தன் சுய நினைவுடன் சிந்தித்து வந்தார். போதை பொருட்களை அவர் பயன்படுத்தியது கிடையாது. இதனால் அவருடைய சிந்தனையிலும் செயலிலும் குழப்பம் ஏற்படவில்லை. நல்ல அறிஞர் பெருமக்களை தன்னுடன் வைத்திருந்தார். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவற்றை ஆராய்ந்து சுயமாக முடிவெடுத்தார். பிறரைப் பற்றி புறம் பேசுபவர்களையும் கேலி செய்பவர்களையும் குரங்கு முண்டக்கண்ணன் என்று பட்டப் பெயர் வைத்து பேசுவோர்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டதில்லை. பெரியவர்களை மரியாதை இல்லாமல் அவன் இவன் என்று பேசும் நபர் தனக்கு எவ்வளவு வேண்டியவராக இருந்தாலும் அவரை உடனே கண்டித்தும் தண்டித்தும் விடுவார். இதனால் எம் ஜி ஆரிடம் போய் புறம் பேசுதல் கோள் மூட்டுதல் போன்ற வேலைகளை எவரும் செய்வது கிடையாது.

எம் ஜி ஆரைச் சுற்றி எப்போதும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் நல்ல சூழ்நிலையும் நிலவுமாறு அக்கறை எடுத்துக் கொண்டார். உடம்பால் அழியின் உயிரால் அழிவார் என்ற சித்தர் வாக்குப்படி தன் உடம்பை தன் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதில் சிரத்தையாக இருந்தார். காலையில் தினமும் உடற்பயிற்சி செய்தல், நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுதல், ஒழுக்கமாகவும் உற்சாகத்தோடும் இருத்தல். தன்னுடன் இருப்போரும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் அவர்களுக்கு நல்ல பல கருத்துக்களை சொல்லி நல்வழி காட்டி அவர்களை தம்மோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வருதல் என இவர் தானும் கட்டுக்கோப்பாக வாழ்ந்து தன்னுடன் இருப்பவர்களையும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருந்தார்.

எம் ஜி ஆர் வீட்டிலும் ஜானகி அம்மையார் மற்றும் அவரது அண்ணன் குழந்தைகள் பானு, சுதா, கீதா ஆகியோர் சிலமபம், மிதி வண்டி விடுதல், நீச்சல், டென்னிஸ், என காலையில் அனைத்து உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை நாட்களில் எம் ஜி ஆர் அவர்களுக்கு வாய்ப்பாட்டு, வீணை, வயலின் மிருதங்கம் போன்றவற்றில் பயிற்சி தர ஏற்பாடுகள் செய்திருந்தார். ஒரு வினாடி கூட பிள்ளைகள சோம்பி இருக்காமல் சுறுசுறுப்புடன் எதையாவது படித்துக்கொண்டே இருக்கும்படி பார்த்துக்கொண்டார். தனது வீட்டில் இருப்போரை தன்னைப் போலவே அறிவும் ஆரோக்கியமும் கொண்டவராக வைத்திருந்தார். மாலையில் குழந்தைகள் நாளிதழ்களை வாசித்து அவர்களின் டியுஷன் ஆசிரியர் தரும் வினாடி வினா போட்டியைச் சிறப்பாக செய்ய வேண்டும் .

வாழு, வாழ விடு என்ற கொள்கையைப் பின்பற்றிய எம்ஜிஆர் இன்னார் இனியார் என்றில்லாமல் எல்லோருடனும் அன்புடன் பழகி வந்தார். அவர் யாருக்கும் கெடுதல் நினைத்தது கிடையாது. தன்னுடைய அரசியல் எதிரியாக விளங்கிய கருணாநிதியின் குடும்பத்தாருடன் அவர் நல்ல இணக்கமான உறவு கொண்டிருந்தார். இன்றைக்கும் ஸ்டாலின் கனிமொழி அழகிரி போன்றோர் எம் ஜி ஆர் மீது தனி மதிப்பு வைத்திருப்பதை அவர்களின் பெட்டிகலின் வாயிலாக அறியலாம். எம் ஜி ஆர் ஒரு போதும் கருணாநிதியை பெயர் சொல்லிப் பேசியது கிடையாது; தன கட்சியினரும் பெயர் சொல்லக் கூடாது; அது மரியாதை கிடையாது கலைஞர் என்றே மேடையிலும் சட்டமன்றத்திலும் அவரைக் குறிப்பிட வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்.

எம் ஜி ஆருக்கு சினிமாவில் போட்டியாளராக விளங்கிய சிவாஜி கணேசனின் குடும்பத்தாரும் எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். சிவாஜியின் பிள்ளைகள் எம்ஜிஆரை பெரியப்பா என்றே அழைத்தார்கள். இன்று வரை அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். சிவாஜி கணேசன் தன் வீட்டில் தன் தாயாருக்கு சிலை எடுத்த போதும், தஞ்சாவூரில் திரையரங்கம் கட்டிய போதும் எம்ஜிஆரை அழைத்து தான் அவற்றைத் திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எம்ஜிஆர் கொள்கை ரீதியாக முரண்பட்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் அனைவர் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு பகை, வன்மம் பழி வாங்குதல், துரோகம் என்ற எண்ணங்கள் ஏற்படவே இல்லை. அதற்கான சூழ்நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. அவர் மனதில் இருந்த அன்பு, , இரக்கம், கருணை ஆகிய நற்குணங்கள் அவர் முகத்திலும் பிரதிபலித்தது. அவர் முகத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் என்ற வர்ணனைக்கு நிகரான தேஜஸ் காணப்பட்டது. அவர் மனதில் இருள் இல்லாமல் ஒளி இருந்தது. அவரது அக ஒளி முக ஒளியாக பிரகாசித்தது. அவருடைய சிரிப்பும் அகமும் முகமும் மலர்ந்த சிரிப்பாக விளங்கியது. அவரது முக ஒளியும் வசீகரமும் மலர்ச்சியான சிரிப்பும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கருத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கின.. அவரது உள்ளமும் அழகு மனமும் அழகு முகமூம் அழகு. ‘அழகுக்கு எம் ஜி ஆர்’ என சத்யராஜ் பேசிய வசனம் உண்மை ஆயிற்று. அவர் மனம் அழகாக இருந்தது தான் என்று மக்கள் நம்பினர்.

8)  சமுகத்தில் எடுத்ததை விட கொடுத்தது அதிகம்


தலைவன் என்பவன் கொடுத்து பழக வேண்டுமே தவிர தன் மக்களிடம் இருந்து தனக்காக எதையும் எடுத்து பழகக் கூடாது. அவன் மக்களை வாழ வைக்கும் தெய்வமாக இருக்க வேண்டும். மக்களிடம் இருந்து பறித்து தின்னும் அசுரனாக ஒட்டுண்ணியாக மாறிவிடக் கூடாது. தலைவனுக்குரிய சிறப்பு பண்பு’களைப் பெற்றிருந்த எம் ஜி ஆர் தான் இச்சமூகத்தில் இருந்து எடுத்ததைக் காட்டிலும் அதிகமாகத் திருப்பிக் கொடுத்தார். தான் சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு போனார். தன கடைசி நாட்களில் தன தோட்டத்திலும் அலுவலகத்திலும் வேலை செய்பவர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்கிறார்கள் அவர்களின் குடும்ப நிலைமை என்ன என்று விசாரித்து அவர்கள் அனைவருக்கும் பணம் வேலை வீடு என அவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுத்தார்.

எம்ஜிஆரிடம் ஒரு முறை ஒரு நிருபர் இப்படி வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்று நீங்கள் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாமா என்று கேட்டார். அப்போது ‘எம்ஜிஆர் நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நாடகக் கம்பெனியில் ஏழு வயதில் நடிக்க வந்தேன். நான் இந்தக் கலைத்துறைக்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. எனவே இங்கிருந்து சம்பாதித்த எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை. என்னுடைய ஆரோக்கியத்திற்கும் நிம்மதிக்கும் தேவையானது போக மீதி அனைத்தையும் நான் எண்ணை வாழ வைத்த இந்த மக்களுக்கே தர விரும்புகிறேன். ஏனென்றால் என் செல்வம் முழுக்க என்னுடைய ரசிகர்களிடம் இந்த மக்களிடமிருந்து நான் பெற்றவைதான்’ என்றார். இவ்வாறு நினைக்கவும் சொல்லவும் எம்ஜிஆருக்கு பெருந்தன்மையான குணம் இருந்தது.

எம்ஜிஆர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஆடம்பரமான வாழ்க்கையை வெறுத்தார். வசதியாக வாழ வேண்டும் ஆனால் ஆடம்பரமாக வாழ வேண்டிய அவசியமில்லை என்று ஒருமுறை அவர் ஏவிஎம் சரவணனுக்கு அறிவுரை கூறினார். . அவர் வீட்டில் தரைக்கு பளிங்கோ கிரானைட்டோ கடைசிவரை அவர் பதிக்கவில்லை. லிப்ட் வைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து வந்த பிறகு அவர் வீட்டில் அவர் படிக்கட்டு ஏறக் கூடாது என்பதற்காக லிஃப்ட் வைத்தனர். அவர் மினரல் வாட்டர் அல்லது மெட்ரோ வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக் குடித்தது கிடையாது. அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து தான் அவருக்கு குடிநீர் வந்தது.

எம் ஜி ஆர் தினமும் அவர் தன்னுடைய நீச்சல் குளத்தில் நீந்தி நல்ல உடற்பயிற்சி செய்து வந்தார். அங்கிருந்த நிலத்தில் பயிர் பச்சைகளை பயிரிட்டு விவசாய வேலைகளையும் பொழுதுபோக்காகச் செய்துவந்தார். அங்கு விளைந்த காய்கறி, அங்கு வளர்க்கப்பட்ட கோழி, காடை போன்றவை அங்கு கிடைத்த கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட சாண எரிவாயு அடுப்புகளை முலம் சமைக்கப்பட்டு அங்கு வந்தவர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிமாறப்பட்டது.

ராமாவரம் தோட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை முறை பின்பற்றப்பட்டது. எம்ஜிஆரைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகே அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். எனவே அவர் தன்னிடம் இருந்த அசையும் சொத்து, அசையாச் சொத்து என அனைத்தையும் மக்களுக்கே எழுதி வைத்தார். தான் எந்த ரசிகரின் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் டிக்கெட் பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் பெற்று பணக்காரராக வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ அந்தப் பணத்தையும் அவர் தன் ரசிகர்களுக்காகவும் தன்னைத் தேடி வந்த மக்களுக்காகவும் செலவிட்டார். அனைவரும் அவர் வீட்டில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். தன் வீட்டுக்கு வந்தவர்கள் பசியோடு திரும்பக் கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் அவர் அனைவரையும் சாப்பிட வைத்தார். அதற்கு ஏற்ப தன் வீட்டில் ஒருங்கிணைந்த பண்ணை முறையை பின்பற்றினார். அங்கேயே மீன்கள் வளர்க்கப்பட்டன. ஆடு கோழிகள் வளர்க்கப்பட்ட, கீரை காய்கறிகள் வளர்க்கப்பட்டன. அடுப்புக்கு வேண்டிய சாண எரிவாயு தயாரானது. இவை தவிர பணியாளர்கள் அதிகமானோர் அங்கு இரவும் பகலும் எந்நேரமும் சமையல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தனது உயிலில் சத்யா ஸ்டூடியோவில் இருந்து வரும் வருமானம் கட்சிக்கும் கட்சி ஆபீஸ் செலவுக்கும் கொடுத்திருந்தார். தனக்கு வந்த பரிசுப் பொருட்களை எல்லாம் ஆற்காடு முதலி தெருவில் உள்ள வீட்டில் தனக்கு நினைவகம் அமைத்து அங்கு வைக்க வேண்டும் என்று உயிலில் எழுதியிருந்தார். அதன்படி இப்போதும் அங்கு அவருடைய நினைவில்லம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தான் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு பின்னால் உள்ள இடத்தில் காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு ஓர் இல்லம் அமைத்து அங்கேயே அவர்கள் தங்கி படிக்க உண்டுறைவிடப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று உயில் எழுதி இருந்தார். அதுவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எம் ஜி ஆர் தன் வீட்டில் வளர்ந்து வந்த தனது வளர்ப்பு மகன் அப்பு மற்றும் பெண் குழந்தைகளை அந்த வீட்டிற்கு உரிமை உடையவர்களாக்கி தன் வளர்ப்பு மகனின் மனைவி நிம்மி என்ற நிர்மலா தன் வளர்ப்பு மகள் ராதா, ஜானகி அம்மாவின் அண்ணன் பிள்ளைகள் ஜானு, சுதா, கீதா ஆகிய 3 பேர் என ஐந்து பெண்களுக்கும் அவர்கள் வளர்ந்த வீட்டில் உரிமை அளித்திருந்தார். யாருக்கும் விற்கவோ உள் வாடகைக்கு விடவோ அனுமதி கிடையாது. அவர்கள் அந்த வீட்டை சுவாதீனமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயில் எழுதி வைத்திருந்தார். ஆக தன் கட்சிக்கும் , வாய் பேச காது கேளாதோர் பள்ளிக்கும் நினைவில்லத்துக்கும் பராமரிப்புச் செலவுக்கு தேவையான சொத்துக்களை அவர் பிரித்துக் கொடுத்து விட்டு மறைந்தார். அரசியலில் இறங்கிய அவர் கட்சி தொடங்கி கட்சியையும் ஆட்சியையும் வைத்தும் தன்னுடைய முதலமைச்சர் பதவியை வைத்தும் அவர் எதையும் தனக்காக சம்பாதிக்கவில்லை. சம்பாதித்து ஒதுக்கி வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு பதுக்கிக் கொடுக்கவும் இல்லை. தான் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் வந்தவர்களுக்கு இருந்ததை எடுத்துக் கொடுத்தார். தான் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்களை தன் கட்சிக்கும் மக்களுக்கும் எழுதி வைத்தார். எனவே இவர் மக்களிடமிருந்து எடுத்ததை விட அதிகமாக அவர்களுக்கு திருப்பி செய்திருக்கிறார்.

9.புதுமை மற்றும் படைப்பாற்றல்

ஒரு நல்ல தலைவன் பழமை விரும்பியாக மட்டுமே இருந்து விட முடியாது . அவன

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகை யினானே

என்ற நன்னூலின் கருத்துக்கு ஏற்ப, பழமையை நீக்கியும் புதுமைக்கு வழி விட்டும் மக்களை வழி நடத்த வேண்டும் எம் ஜி ஆர் எப்போதும் தனது வாழ்வில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்து வந்தார். தேவையான பழைய விஷயங்களை மக்களிடம் தனது படங்கள் மற்றும் அரசியல் மேடைகள் வாயிலாகப் புகுத்தினார். , தேவையான புதிய விஷ்யங்களையும் அவற்றுடன் சேர்த்துக் கொண்டார். பழமையும் புதுமையும் இணைந்த படைப்பாற்றல் எம் ஜி ஆருக்கு பெரிய வெற்றியை இரு துறைகளிலும் அளித்தது.

எம்ஜிஆரின் திரையுலக வெற்றிக்கு முக்கிய காரணம் அவரிடம் இருந்த அதீத படைப்பாற்றல் எனலாம். ஒவ்வொரு படத்திலும் அவர் பாட்டு காட்சிகளை புதுமையாக வைக்க வேண்டும். வசனங்களில் புதுமை இருக்க வேண்டும் காட்சியமைப்புகளில் ஆடல் பாடல் காட்சிகளில் உடை வடிவமைப்பதில் தலையலங்காரம் வடிவமைப்பதில் கோட் சூட் பெல்ட் காலணி போன்றவற்றில் புதிய புதிய டிசைன்களை பயன்படுத்தினார். அவருடைய ஒரு புகைப்படத்தை பார்த்த உடனேயே அவரது ரசிகர்கள் இந்த தலைமுடி அலங்காரம் இருந்தால் இது இன்ன படம் என்று சொல்லி விடுவார்கள். இந்த உடை போட்டிருந்தால் அது இன்ன படம் என்று சொல்லி விடுவார்கள். இந்த பெல்ட் இந்த படத்தில்தான் அவர் அணிவார் என்று சொல்லிவிடுவார்கள். அவர் தான் பயன்படுத்திய பொருட்களை ரசிகர்கள் கண்களை கவரும் வகையில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருந்தார். அவருடைய உடை தலை அலங்காரம் கிரீடம் தொப்பி போன்றவை கூட அவருடைய ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருப்பதால் அவற்றையும் அவர்கள் மறக்கவில்லை.

பாடல் காட்சிகளில் வரும் நடனங்கள் மிகுந்த கற்பனைத் திறனுடன் புதுமையாக படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக குடியிருந்த கோயில் படத்தில் ஒரு பாங்க்ரா நடனம் ஒரு மாடுபிடி நடனம், ஒரு கனவுக் காட்சி என ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதமாக எடுக்கப்பட்டிருக்கும். கனவுக் காட்சியில் வரும் பாடல்களில் ஆடை அலங்காரங்கள் சற்று வித்தியாசமாக அன்றாட நடைமுறையில் இல்லாதபடி கனவில் மட்டும் சஞ்சரிக்கக்கூடிய அவர்களின் கற்பனையில் வரும் உடைகளாகத் தைக்கப்படும். , சில படங்களில் மன்னர் காலத்து உடைகளாக சில படங்களில் வெளிநாட்டவர் உடுத்தும் உடைகளாக புதிய முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
எம் ஜி ஆர் படங்களில் இசையமைப்பாளர்களைக் கொண்டு மெட்டுக்கள் போடப்பட்டு பாட்டுகள் எழுதப்பட்டு இசை அமைப்பும் புதிதாக அமைந்திருக்கும். காவல்காரன் படத்தில் வரும் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாட்டையும் அடிமைப்பெண் படத்தில் வரும் ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ பாட்டையும் இங்கு நாம் நினைவு கூரலாம்.

எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த போது ஆட்சியில் சில புதுமைகளைப் புகுத்தினார். முறைசாரா தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் நெசவாளர் விவசாயி போன்றோருக்கும் சங்கங்கள் அமைத்து கொடுத்து அவர்களின் தொழில் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தார். அனைத்து குழந்தைகளுக்கும் உணவு அனைத்து மாணவர்களுக்கும் மேல்நிலைக் கல்வி என குழந்தைகளையும் மனபலம் உடல் பலம் மூளை பலம் ஆகியன சிறப்பாக அமையும்படி எம் ஜி ஆர் கவனித்துக் கொண்டார். எம் ஜி ஆர் நாட்டிற்கு பாதுகாவலாக இருக்கும் காவல் துறையின் மீது தனிக்கவனம் செலுத்தினார். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் கொடுத்தார். அவர்கள் நீண்ட காலம் காத்திருக்காமல் குறுகிய காலத்திலேயே பதவி உயர்வு கிடைக்க வழி செய்தார்.

சிறந்த தலைவ்ருக்கு உரிய அனைத்து பண்புகளையும் பெற்றவராக எம் ஜி ஆர் விளங்கினார். அவரிடம் சிறு வயது முதல் தலைமைத்துவப் பண்புகள் மேலோங்கி இருந்தன. எம் ஜி ஆருக்கு மக்கள் மீதிருந்த அன்பும் பொறுப்புணர்ச்சியும் அவருக்கு தலைமைப்பொறுப்பை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தன.

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ நீ நீ

என பாட்டு வரிகளுக்குப் பொருத்தமாக அவர் தமிழர் வரலாற்றில் வெற்றித் திருமகனாக விளங்கிய தலைவர் ஆனார். இங்கு மட்டும் அல்லாது தமிழ் பேசும் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர்களின் உள்ளம் கவர்ந்த உத்தமத் தலைவராகப் போற்றப்படுகிறார். இன்றைக்கு எம் ஜி ஆர் உலகப் பேரவை அவரை உலக தமிழ் மக்களின் தலைவராக உயரத்தியுள்ளது. . உலக நாடுகள் பலவற்றிலும் எம் ஜி ஆர் உலகப் பேரவை தொடங்கப்பட்டு அவரை உலகத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழினத் தலைவர்களில் சிறந்தவராகவும் பாராட்டி மகிழ்கிறது. இதனால் எம் ஜி ஆர் தான் வாழ்ந்த நாட்களில் பெற்ற புகழ் இன்று பன்மடங்காகி விட்டது.


                                                                                                         

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்