சுமேரிய நாகரீகம்
(தமிழரின் வேரினைத் தெளிவுபடுத்தும் இத்தொடரினைத் தவற விடாதீர்.)

கனி விமலநாதன் B.Sc 


மெசப்பத்தேமிய நாகரீகங்கள்

மனித வரலாற்றிலே இந்தியாவின் சிந்து, எகிப்தின் நைல், மத்திய கிழக்கின் யூப்பிரத்தீஸ் (Euphrates), ரைகிறீஸ் (Tigriss) என்ற இரு நதிகள், சீனாவின் மஞ்சள் ஆறு போன்ற பெருநதிகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. இந்நதிகள் அருகிலேயே மனிதரின் நாகரீகங்கள் தோன்றி இருந்ததன என்று நம்புவதாலேயே இவை எம்மிடையே மிகவும் அறியப்பட்டவையாக இருக்கின்றன. இன்னமும் இந்தியாவின் கங்கை நதியினைப் போன்ற சில நதிகளும் வேறு சில நாடுகளில் மனித நாகரீகங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுப் பேசப்படுகின்றன. தமிழர்களின் காவிரி, தாமிரபரணி போன்ற சிறுநதிகளின் ஓரங்கள் உலக வல்லுனரரல் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. (இந்த நிலையில் கடலுள் போய்விட்ட பஃறுளி, குமரி போன்ற ஆறுகள் பொதுவாகவே பலரது கண்களிலும் தோன்றுவதில்லை.)

இவற்றில் மத்திய கிழக்கில், வடக்கில் உள்ள மலைகளில் உற்பத்தியாகித் தெற்காக, ஓடிவருகின்ற யூப்பிரத்தீசும் ரைகிறீசும் பின்னர் ஒன்றாக இணைந்து பாரசிக வளைகுடாவில் வந்து விழ்கின்றன. இவ்விரு நதிகளின் இடையே உள்ள நிலப்பகுதியை 'இரண்டு நதிகளுக்கு இடையிலான நிலப்பகுதி' என்று பொருள்படும் 'மெசப்பத்தேமியா' (Mesopotamia) என்பர். இந்த மெசப்பத்தேமியா அந்நாட்களில் மிகவும் வளமான பகுதியாக இருந்தது. இன்று பெரும்பகுதி ஈராக் ஆகவும் இதனுடன் இணைந்து இருக்கும் குவைத், துருக்கி, சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளையும் கொண்ட இடம்தான் மெசப்பத்தேமியா. ஈராக்கின் பகுதியாக இருக்கின்ற, மெசப்பத்தேமியாவின் தென்பகுதியான இடத்தில், 8000, 7000 வருடங்களின் முன்னர் வாழ்ந்த மக்கள் தங்களை நவீனப்படுத்தத் தொடங்கினர். இம்மக்களைத்தான் சுமேரியர் என்று இன்று உலகினர் அழைக்கின்றனர். இந்த சுமேரியர்கள் வாழ்ந்த, இன்றைய ஈராக்கின் பகுதியான, தென்மெசப்பத்தேமியாதான் சுமேரியா எனக் குறிப்பிடப்படுகின்றது.

சுமேரியரின் காலத்தை ஒட்டியதாக, ஆனால் அதற்குச் சற்று பின்னராக சுமேரியாவிற்குச் மேற்காகச் சற்றுத் தொலைவில் இருந்த எகிப்திலும் ஒரு நாகரீகம் வளர்ச்சி கொண்டது. இதுவும் கூட உலக நாகரீக வளர்ச்சியில் தனது செல்வாக்கைக் காட்டித்தான் இருந்தது. சுமேரிய நாகரீகமும் பண்டை எகிப்திய நாகரீகமும் ஏறக்;குறைய ஒரேகாலத்தவை எனினும் இரண்டுமே வேறுவேறானவை. இவை பற்றிய ஒப்பீடுகளைத் தேவைக்கு ஏற்பப் பின்னர் பார்ப்போம்.

அன்று சுமேரியர் தங்களை நவீனப்படுத்தத் தொடங்கிய செயற்பாடுதான் மனிதகுலத்தில் இன்றும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கின்றது. சுமேரியர்களின் வழியினைப் பின்பற்றி, வடமெசப்பத்தேமியப் பகுதிகளில் இருந்தவர்களும் தங்களை மெல்ல மெல்ல வளப்படுத்தி மெருகேற்றிக் கொள்ளத் தொடங்கினர். அப்படியாகத் தங்களை வளப்படுத்திக் கொண்ட அக்காடியர் (Akkads) என்கிற இன மக்கள் கி.மு. 2300களில் சுமேரியரின் பகுதிகளை பிடித்துக் கொண்டனர். அப்போது முளைத்ததுதான் அக்காடியன் (Akkadian) நாகரீகம். இந்த அக்காடியரின் பேரரசனான சார்கன் (Sargon) என்பவனைத்தான் உலகின் முதலாவது பேரரசன் என்று தற்போதய வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் மீண்டும் சுமேரியர் வலுப்பெற்றுத் தங்களின் இடங்களை மீட்டுக் கொண்டனர்.

சிலகாலத்தின் பின்னர் வடமெசப்பத்தேமியாவின் பாபிலோனியா என்ற இடத்தில் வாழ்ந்த மக்களான பாபிலோனியர் (Babylon) எழுச்சியுறுகின்றனர். இவர்களும் மெசப்பத்தேமியாவையும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளையும் தம்வசமாக்கிக் கொள்கின்றனர். அக்காலத்தில் எழுந்ததே பாபிலோனிய நாகரீகம். பாபிலோனியரும் உலக நாகரீகத்திற் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். பாபிலோனியரின் பின்னராக அசீரியர் (Assyrian) மெசப்பத்தேமியப் பகுதிகளிற் செல்வாக்குப் பெறுகின்றனர். இவர்களும் தங்கள் பங்கிற்குப் புதுப்புது வாழ்வியல் உத்திகளைப் புகுத்திக் கொள்கிறனர். பொதுவாகச் சுமேரிய, அக்காடிய, அசீரிய நாகரீகங்கள் எல்லாவற்றையும் சேர்த்து மெசப்பத்தேமிய நாகரீகங்கள் என்பர்.

அக்காடியர், பாபிலோனியர், அசீரியர் போன்றோர் காலத்தின் பின்னர் (அல்லது அவர்களின் காலங்களில்) அவ்விடத்தைச் சுற்றியிருந்த கானானியர், எபிரேயர் (இஸ்ரேலியர் என்கிற யூதர்), மேவியர் போன்ற பல்லின மக்களும் நாகரீக எழுச்சி பெறுகின்றனர். இந்நாகரீகங்கள் எல்லாமுமே சுமேரியரின் அடிப்படைச் சாயம் பெற்றவையே. இந்நாட்களில் இவர்களையும் வரலாற்றாசிரியர் ஏதோவொரு வகையில் உலக வரலாற்றில் முதன்மைப்படுத்துகின்றனர். இவர்களில் எபிரேயரதும் அசீரியரதும் ஊற்றுக்கள் கூட சுமேரியத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று, பைபிளின் வழியாக நம்பப்படுகின்றது.

இவ்வேளையில் இன்னொரு சுவையான விடத்தையும் நாம் கவனிக்கலாம். சுமேரியரின் உச்சக் காலத்திலே மெசப்பத்தேமியாவின் தென்கிழக்காக, சுமேரியாவை ஒட்டிய வண்ணம் இருந்த இன்னோர் இடத்தினை 'இலம்' (Elam) என்று ஆய்வாளர் கூறுகின்றனர். இவர்களும் எங்கிருந்து வந்தனர் என்பது ஆய்வாளருக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் இவர்கள் சுமேரியருடன் 'கொடுக்கல் வாங்கல்' தொடர்புகள் வைத்திருந்தனர். அது சரி, இந்த இலம் என்பது எங்கேயே கேட்ட பெயராக உள்ளதே என்கிறீர்களா! ஆம், இதே ஆச்சரியத்தைத்தான் நானும் முதன்முதலில் இந்த இழம் என்பதை அறிந்தபோது அடைந்தேன். ஈழம் என்பதைத்தான் 'ழ'கர உச்சரிப்புச் சிக்கலால் இலம் என்று ஆய்வாளர் தங்களின் மெழிபெயர்ப்பில் கூறத் தொடங்கினரோ! இவ்விடத்தில் வாழ்ந்தவர்களை 'இலமைற்'றுகள் ( Elamites) என்று ஆய்வாளர் அழைக்கின்ற போதிலும் நான் 'ஈழவர்' என்றே அவர்களைக் கூறிக் கொள்கிறேன், சரிதானே!

இந்த ஈழவர், கடல்கோள்களின் தாக்கங்களால் சுமேரியரின் பின்னராக இன்றுள்ள ஈழத்தில் இருந்து வந்து சுமேரியருக்கு அருகாகக் குடியேறியவர்களாக இருக்கலாம் என்று நம்பக் கூடியதாக உள்ளது. இருபகுதியினரின் நாகரீகச் சாயல்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தது என்றும் கூறுவர். ஈழவர்களும் சுமேரியயரும் மிக நெருக்கமாக இருந்தார்கள் என்று குறிப்புகள் காட்டுகின்றன. இருபகுதியினரும் ஒருவருக்கொருவர் செல்வாக்குக் காட்டியும் செல்வாக்குப் பெற்றும் இருந்திருக்கின்றனர். சுமேரியர் அளவிற்கு ஈழவர் பற்றிய ஆய்வுகள் இன்னமும் நடக்கவில்லை. ஆதனால் ஈழவர் பற்றிய விபரங்கள் அதிக அளவில் உலகினருக்குக் கிடைக்கவில்லை. தொடரும் காலங்களில் இலம் (ஈழம்), ஈழவர் பற்றிய இரகசியங்கள் வெளிவரலாம் என நம்புவோம்.




 

 

 

 

 

 

 

 



(அருகில் உள்ள படத்தில் சுமேரியா, இலம் இருந்த இடங்களைக் காணலாம்.)

மெசப்பத்தேமிய நாகரீகங்களும் அவர்களை ஒட்டிய நாகரீகங்களும் காலத்திற்குக் காலம் வளர்ந்திருப்பினும் அவற்றிக்கெல்லாம் 'முதல்' எனவிருந்த சுமேரிய நாகரீகம் பற்றியே நாங்கள் பார்க்கப் போகின்றோம். இருப்பினும் இந்நாகரீகங்கள் எல்லாம் சுமேரிய நாகரீகத்தில் இருந்தே கிளைத்தன என்று வலிமையாக நம்பப்படுவதினால் சுமேரியர் பற்றிய இப்பார்வையின் கோணங்கள் மற்ற நாகரீகங்கள் பக்கமும் விழத்தான் செய்யும்.
இந்நாட்களின் மனிதகுலத்தின் எல்லா வளர்ச்சிகளுக்குமான அடிப்படையான 'முதல்'கள் எல்லாவற்றிக்குமே சொந்தக்காரர் இந்தச் சுமேரியர்தான் என்கின்றனர் ஆய்வாளர். இவர்கள்தான் மொழிகளுக்கான எழுத்து முறையை முதன்முதலிற் கொண்டு வந்தவர். இவர்கள்தான் மனிதகுதை;திற்கு நேரம் பற்றிய சிந்தனையை முதலிற் தந்தவர். ஒரு நாளின் பகலையும் இரவையும்; சமமான இரண்டு பன்னிரண்டு மணித்தியாலங்களாகப் பிரித்து ஒரு நாளுக்கு 24 மணித்தியாலங்களைக் கொடுத்தவர்களும் இவர்களே. அத்துடன் ஒரு மணித்தியாலத்தை 60 நிமிடங்களாவும் ஒரு நிமிடத்தை 60 செக்கன்களாகவும் கூறிட்டு, நேரக்கணக்கினை உலகிற்குத் தந்தவரும் இவர்கள்தான். 'கலண்டர்' என்கின்ற நாட்காட்டிகளை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியர்களும் இவர்கள்தான்.
இன்று உலக மக்களைக்; கட்டி வைத்திருக்கும் அரசியல், விஞ்ஞானம், கணிதம், படிப்பிற்கான பாடசாலை அமைப்புகள், அறிவியலாய்வுச் சங்கங்கள், குடிசன நிர்வாக அமைப்பு, ஊர்-நகர நிர்வாக அமைப்புகள், பாதுகாப்பு அமைப்பு, இராணுவம், நீதி முறைச் சட்டங்கள், வரிகள், வரி செலுத்தும் முறைகள், மதங்கள், கோயில் ஒழுங்குகள், கதைகள், புராணங்கள், இலக்கியங்கள், கவிதைகள் புனைதல், கட்டிடக்கலை நுணுக்கங்கள், நீர்ப்பாசன உத்திகள், வானியல், இவற்றுடன் உலக மக்கள் மனங்களிற் பதிந்துள்ள கடல்கோள் சித்தாந்தச் சிந்தனை, இன்னமும் இன்னமும், இன்னமும்.... என எல்லாமுமே இவர்கள் ஆரம்பித்து வைத்தவைதான்.
இப்படியாக எல்லாவற்றையுமோ ஆரம்பித்து வைத்தவர்களைப் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் யாருமே அறிந்து கொள்ளவில்லை. iபிளிற் கூட இவர்கள் பற்றிய தெளிவுகள் இல்லை. ஆனால் இந்நாட்களில் தொல்பொருள் ஆய்வுகளும், பண்டை மக்களின் இலக்கியங்களின் வெளிப்புகளும் இணைந்து உலக மக்கள் அனைவருக்குமே இவற்றினை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. இன்றுள்ள உயர்தொழில் நுட்பத்தின் உதவியால் 'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?' என்பது போல் இவற்றிற்கான ஆதாரங்களை, மேலை நாட்டவர் யாருமே இன்று அதிகம் கேட்பதில்லை. கூகிள் போன்ற இணைய வலைத்தளங்களில் தாங்களே தேடித்தேடி தெளிவு பெறுகின்றனர்.
சுமேரியர்கள்தான் எல்லா 'முதல்'களையும் கொண்டுள்ளார்கள் என்பதைக் கூறுகையில் எப்படி இது அவர்களுக்கு வாய்ப்பாக வந்தது என்ற கேள்வியும் எழுகின்றதல்லவா. இந்தக் கேள்வியின் பதிலிற்கான தேடுதல்களையும் ஆய்வாளர் செய்துதான் பார்த்தனர். ஆனால் விரிவுபடுத்தப்படாததும், எதிர்பார்புகளுடனுமான அவர்களின் தேடுதல்களில் சரியான விடைகள் எவையுமே கிட்டவில்லை. சிலர் தத்தமக்குப் பொருத்தமான விடைகளைக் கூறுகின்ற போதிலும் சுமேரியர்கள் தாமாகவே அந்த உயர்ந்த நிலையினை எட்டினார்கள் என்ற முடிவுக்கே கிட்டத்தட்ட வேறு வழியின்றிப் பலர் வந்தனர்,
தமிழில் சுமேரியர் பற்றியோ அல்லது அவர்கள் வழியில் வந்த மெசப்பத்தேமிய நாகரீகங்கள் பற்றியோ அதிக விபரங்கள் இல்லாததால் எங்களிற் பலருக்கு மெசப்பத்தேமிய நாகரீகங்கள் பற்றிய பல விடயங்கள் இன்னமும் வந்து சேரவிi;லை. அதனால், மெசப்பத்தேமியப் பகுதியை ஒட்டியிருந்து பிற்காலத்தில் நாகரீக உயர்ச்சி பெற்றிருந்த பாரசீகரும் கிரேக்கரும் உரோமரும்தான் எல்லாவற்றிற்குமே அடிப்படை என்ற, ஐரோப்பியர்களினால் முன்னர் விதைக்கப்பட்ட பழைய எண்ணம்தான் இன்னமும் எங்களிற் பலரிடம் உள்ளது. ஆனால் சுமேரியருக்கும் தமிழருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்திருக்கின்றன. அவை பற்றிய வெளிச்சத்தையும் நாங்கள் மெதுமெதுவாகப் பெறப்போகின்றோம்.
அடுத்த தடவையில் யார் இந்தச் சுமேரியர் என்பதைப் பார்ப்போம்.

 



அன்புடன்,
கனி.

விபரத் தெளிவுகளுக்கு, நெறிப்படுத்தல்களுக்கு அல்லது கருத்துப் பகிர்தல்களுக்கு www.tamilauthors.com    உடன் அல்லது என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எனது தொடர்புக்கு: 416 261 1348 அல்லது 647 782 2827.
e-mail: leptons@hotmail.ca


                             
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்