தழுவிக்கொண்ட சொற்களும் நழுவிப்போன சொற்களும்

கலாநிதி பால. சிவகடாட்சம்

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலம் என்று வரலாற்றாசிரியர்கள் அறிமுகப்படுத்தும் காலப்பகுதியில் தமிழ் மக்களின் பேச்சுவழக்கில் இருந்த எத்தனையோ சொற்கள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.

அதேசமயம் இன்று தமிழர் நாள்தோறும் தவறாமல் உச்சரிக்கும் ஏராளமான சொற்கள் பிறமொழிகளில் இருந்து வந்து எம்மைத் தழுவிக்கொண்டவை என்பதையும் மறந்து விடுவதற்கில்லை.

"குசினிப் பக்கமாய் இருக்கும் அலுமாரிக்கும் ஜன்னலுக்கும் இடையில் இருக்கிற மேசையில கார்ச் சாவியும்   பத்து டொலரும் எடுத்து வைச்சிருக்கிறன். காரை எடுத்துக்கொண்டு போய் சிறீ கேற்றறிங்கில புரியாணிப் பார்ஸல் ஒன்று வாங்கிக்கொண்டு வா. ரீவீயில உன்னுடைய சீரியல் தொடங்கமுதல் வந்திடலாம்".

 

இது ஒரு அம்மா தன் மகளிடம் கூறியது. நிச்சயமாக இது இன்று தமிழ்பேசும் எல்லோருக்கும் விளங்கக்கூடியதுதான். இந்த வசனத்தில் உள்ள சொற்களில் 50 சதவீதம்தான் தமிழ்.  மீதி போர்த்துகேயம் (P), ஆங்கிலம் (E), சமஸ்கிருதம் (S), பாரசீகம் (Pr) ஆகிய மொழிகளில் இருந்துவந்து எம்மைத் தழுவிக்கொண்டவை. இந்தப் பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய தமிழ்ச் சொற்கள் இல்லை. இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவோர் இல்லை.

 

பிறமொழிச்சொற்கள்                             தமிழ்

                            

குசினி   P                                                                பக்கமாய்

அலுமாரி   P                                                           இருக்கும்

ஜன்னல்    P                                                             இடையில்

மேசை     P                                                              இருக்கிற

கார்        E                                                                 பத்து

சாவி       P                                                                 எடுத்து

டொலர்  E                                                                வைச்சிருக்கிறன்

கார்         E                                                                 எடுத்துக்கொண்டு

சிறீ          S                                                                 போய்

கேற்றரிங் E                                                           ஒன்று

புரியாணி  Pr                                                         வாங்கிக்கொண்டு

பார்ஸல்       E                                                          வா

ரீவி              E                                                              உன்னுடைய

சீரியல்      E                                                             தொடங்கமுதல்

                                                                                     வந்திடலாம்

 

பிறமொழிச்சொற்கள் தமிழ் மக்களின் பேச்சுவழக்கில் எப்போது எவ்வாறு வந்துசேர்ந்தன என்று ஆராயப் போவோமாகில் தமிழன் மேல் பிறமொழிபேசுவோர் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலேயே பெருமளவு புதிய சொற்கள் தமிழருக்கு அறிமுகமாயின என்பதைக் கண்டுகொள்ளமுடியும்.

அலுமாரி, அலவாங்கு, அலுப்புனேத்தி, ரோதை, சாவி, ஜன்னல், கதிரை, கழுசான், கமிசு, கடுதாசி, கோப்பை, குசினி, மேசை, பாண், பேனை, சப்பாத்து, தவறணை, தாச்சி, துவாய், விராந்தை, வாங்கில் இவை அனைத்துமே பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த நேரத்தில் தமிழருக்கு அறிமுகமாகிய விடயங்கள்.  இவற்றை உணர்த்தும் சொற்கள் தமிழில் இல்லாதிருந்த காரணத்தால் போர்த்துக்கல் சொற்களையே தழுவிக்கொண்டோம். இதுபோலவே கந்தோரும் கக்கூசும் டச்சுக்காரர் நம்மை ஆண்டபோது வந்து சேர்ந்துகொண்டவை. கடன்வாங்கிய சொற்களைக்கூடப் பயன்படுத்தக் கூச்சமாய் இருக்கும்போது காலப்போக்கில் அதனையும் கைவிட்டுச் சற்று நாகரிகமாகத் தோன்றும் புதிய சொற்களை நாடுகின்றோம். இதற்குச் சிறந்த ஓர் உதாரணம் கக்கூசு. கக்கூசு என்பதே கடன் வாங்கிய சொல்தான். எனினும் இன்று கக்கூசுக்குப் பதிலாக ரொய்லெற் (toilet) அல்லது வாஷ்றூம் (washroom) என்னும் பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்களைப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும்போது எவரும் கூச்சப்படுவதில்லை.

தனது மகளுக்கு "ஆசுப்பத்திரியில் ஒப்பெரேஷன் செய்வதற்கு முன்னர் குளறப்பம்" கொடுத்திருப்பதாக என்னுடைய தாயாரிடம் பக்கத்துவீட்டு அம்மா வந்து சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். அதிகம் படித்திராத ஒரு தமிழ்ப்பெண்மணியால் chloroform குளறப்பமாகத் தமிழாக்கப்படுவதை அப்போது நேரிலே கண்டேன்.

இப்படித்தான் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சக்கிடுத்தார்(secretary) நொத்தாரிசு (Notary), அப்புக்காத்து (advocate), சிறாப்பர் (shroff), டாக்குத்தர், (doctor) கொம்பவுண்டர் (compounder), நர்சு (nurse), ஆசுப்பத்திரி (hospital), பொலீசு (police), போன்ற ஏராளமான சொற்கள் யாழ்ப்பாணத்தமிழரின் அன்றாட பேச்சுவழக்கில் இணைந்துகொண்டன.

கராம்பு, கறுவா, குரக்கன், கொப்பறா, வத்தாளம் கிழங்கு, போஞ்சி, பணிஸ், விதானை போன்ற பல சொற்கள் சிங்களத்தில் இருந்து வந்தவை. நாங்கள் தூய தமிழ்ப்பெயர்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் பெயர்கள் பலவும் இவ்வாறு தமிழ்ச்சாயல் பெற்ற பிறமொழிச் சொற்கள்தான் என்பதைப் பின்னாளில் அறிந்துகொண்டேன்.

புதிய விடயங்கள் எமக்கு அறிமுகமாகும்போது தேவைக்கேற்ப புதிய சொற்களைத் தமிழில் உருவாக்குவது தவிர்க்கமுடியாத ஒன்று. இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தில் ஏராளமான பிறமொழிக் கலைச்சொற்கள் தமிழ்பேசும் மக்களின் பயன்பாட்டில் வந்துவிடுகின்றன. இத்தகைய சொற்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழியில் இருந்தே பெறப்படுகின்றன. இவற்றுள் ஒரு சிலவற்றைத் தமிழ் ஆர்வலர்கள் தமிழ்படுத்தித் தருகின்றனர். கணனி, மடிக்கணனி, கடவுச்சொல், இணையத்தளம் இவை எல்லாமே இவ்வாறு வந்து சேர்ந்தவைதான். பென்னுக்கும் பென்சிலுக்கும் ஐபொட்டுக்கும் ஐபோனுக்கும் தூயதமிழ்ப்பெயர்களைத் தோற்றுவிக்க எவரேனும் முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. ஈமெயில் ஈமெயிலாகத்தான் இருக்கின்றது. ஐபட் ஐபட்டாகத்தான் இருக்கின்றது.

மக்களுக்குப் பழகிப்போன சொற்களுக்குப் பதிலாகத் தூயதமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துபோது அவற்றை மக்கள் இலகுவில் ஏற்றுக்கொண்டுவிடமாட்டார்கள். கார், பஸ், பைசிக்கிள், ஐஸ்கிறீம், என்னும் ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக மகிழுந்து, பேருந்து, மிதிவண்டி, குளிர்களி என்னும் தூய தமிழ்ப்பெயர்களைத் தமிழ் ஆர்வலர்கள் முயன்று கண்டு பிடித்தாலும் அவற்றை அன்றாடப் பேச்சுவழக்கில் பயன்படுத்துவோர் இன்று எத்தனை பேர்?

ஆங்கிலமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச்சொல் ஒன்றைத் தோற்றுவிக்கும்போது ஏற்கெனவே தமிழில் உள்ள நல்லதொரு சொல்லை இழக்க நேரிடலாம். இதுகுறித்து அவதானம் தேவை. நீர்வீழ்ச்சி என்பது waterfalls என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். அருவி என்ற அருமையான தமிழ்ச்சொல் ஏற்கெனவே இருக்கும் போது நீர்வீழ்ச்சி எதற்கு. ஆனால் நயாகரா அருவி என்று யார் சொல்லப்போகின்றார்கள். கலங்கரை விளக்கம் என்னும் அருமையான தமிழ்ச்சொல்லின் பயன்பாடு குறைந்துவிட்டது. லைற்ஹவுஸ் (Lighthouse) என்பதன் தமிழாக்கமான வெளிச்சவீடுதான் இன்று பயன்பாட்டில் உள்ளது. நல்லவேளையாக rainbow என்பதை மழைவில் என்று தமிழாக்காமல் விட்டுவிட்டாரகள். வானவில் இனியும் பேசப்படும். பிரசங்கம் என்பதை முதன்முதலில் சொற்பொழிவு என்று அறிமுகப்படுத்தியபோது பலரும் ஏளனம் செய்தார்களாம். இன்று பிரசங்கம் வழக்கொழிந்து சொற்பொழிவு நிலைத்துவிட்டது. நல்ல தமிழ்ச் சொற்கள் நிலைத்துநிற்கும் என்பதற்குச் சொற்பொழிவு ஒரு நல்ல உதாரணம்.

கக்கூசு அல்லது ரொய்லெற் என்பதற்குப் பதிலாகக் கழிவறை என்று தூயதமிழில் எழுதிவைக்கின்றார்கள். இச்சொல் மிகவும் பொருத்தமாக உள்ளது. கழிவை அகற்றும் இடம் கழிப்பறை. ஆனால் வாஷ்ரூம் என்பதைக் கழிவறை என்று சொல்வது பொருத்தமாக இல்லை. கழுவுஅறை என்று சொன்னால் நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கும். இதற்குப் பதிலாகக் குளியல்அறை என்பதே பொருத்தமாய் இருக்கும்.

நெடுங்காலமாக மக்களால் பேசப்பட்டுவரும் மொழி ஒன்றில் பல்வேறு நாட்டவரின் தொடர்புகள்மூலம் பிறமொழிக்கலப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். எனினும் கலப்பு அளவுக்கு மீறிப் போகும்போதுதான்  மூலமொழி தன் தனித்துவத்தை இழக்கின்றது அல்லது புதுவடிவம் பெறுகின்றது. இன்று நாம் பேசும் தமிழ் சங்ககாலத்தமிழின் புதிய வடிவம். உரையாசிரியர்களின் உதவியினால் மட்டுமே இன்று நாம் பண்டைய தமிழ்நூல்களைப் படித்து விளங்கிக்கொள்ளமுடிகின்றது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற திராவிட மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழில் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிச்சொற்கள் பேச்சுவழக்கில் மிகவும் குறைவாகவே கலந்துவந்துள்ளன. தமிழ்நாட்டவரின் பேச்சுத் தமிழோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தமிழரின் பேச்சுவழக்கில் பிறமொழிக்கலப்பு குறைவாகவே காணப்படுவதை அவதானிக்கலாம். புவி இயல் ரீதியாக யாழ்ப்பாணம் இந்தியப் பெருநிலப்பரப்பில் இருந்து பிரிந்திருப்பதே இதற்குக் காரணம்

எழுத்திலும் பேச்சிலும் தமிழென நினைத்துப் பயன்படுத்தும் சொற்கள் பல இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்து சேர்ந்துவிட்டன.  இதனால் வடமொழிச்சொற்கள் என்பதை அறியாமலேயே இவற்றைப் பெரிதும் பயன்படுதி வருகின்றோம். இவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்று சொன்னால் தமிழ் ஆர்வலர்கள் சிலருக்குக் கோபம் வருவதுண்டு.

கி.பி. 300க்கும் 1300க்கும் இடைப்பட்ட ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகாலப்பகுதியில் ஏராளமான சமஸ்கிருதமொழிச் சொற்கள் தமிழுக்கு வந்தடைந்தன. களப்பிரர், பல்லவர், சோழர் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் மருத்துவம், சோதிடம், தத்துவம் முதலான கலைகள் பலவும் சமஸ்கிருதமொழியிலேயே கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் கிரகங்களும் சாதகமும் பஞ்சாங்கமும் சனியும் புதனும் சமஸ்கிருதம் தந்த பெயர்கள்தான். சுரமும் சன்னியும் சூரணமும் கஷாயமும் லேகியமும் மாத்திரையும் ரசகற்பூரமும் ரசசெந்தூரமும் சமஸ்கிருதக் கலைச்சொற்கள்தான். இந்த சொற்கள் வந்துசேர்ந்தவுடன் இவற்றைக் குறிக்கும் பண்டைய தமிழ்ச்சொற்கள் நழுவிப்போய்விட்டன,

தமிழ் வருடங்கள் அறுபதுக்கும் வடமொழிப்பெயர்கள் வைத்து இருக்கின்றார்களே என்று உள்ளம் குமுறுவோர் இருக்கின்றார்கள். pangkuniyum சித்திரையும் வைகாசியும் ஆனியும் ஆடியும் ஆவணியும் புரட்டாசியும் ஐப்பசியும் கார்த்திகையும் மார்கழியும் தமிழ்ப்படுத்தபட்ட சமஸ்கிருதச் சொற்கள் என்பது பலரும் உணராத ஒருவிடயம். முழுநிலவு (பௌர்ணமி) நாளன்று நிலவுக்கு அண்மித்துக் காணப்படும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்துக்குக் கொடுக்கப்பட்டது.

சங்க இலக்கியங்களில் நாள்மீன்கள் என்று அறியப்படும் நட்சத்திரங்கள் இருபத்தேழுக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ளன. வடமொழிப்பெயர்கள் வந்துசேர்ந்தவுடன் பழந்தமிழ்ப் பெயர்கள் வழக்கற்றுப்போயின.

வடமொழிப்பெயர்களான சைத்ர சித்திரையாகவும் விஷாகம் வைகாசியாகவும் அனுஷம் ஆனியாகவும் ஆஷாடம் ஆடியாகவும் ஷ்ராவணம் ஆவணியாகவும் பத்ரபாதம் புரட்டாசியாகவும அஷ்வினி ஐப்பசியாகவும் கார்த்திகா கார்த்திகையாகவும் மிருகஷீரிடம் மார்கழியாகவும் மகம் மாசியாகவும் பல்குணம் பங்குனியாகவும் தமிழ்படுத்தப்பட்டு மாதங்களின் பெயர்களாக நிலைபெற்றுவிட்டன.

தமிழ்படுத்தும்போது சிலர் தமிழைப் படுத்திவிடுகின்றார்கள். ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று தமிழ்படுத்துவது கூடாது. சுவாமி விபுலானந்தர் ஷேக்ஸ்பியரைச் செகசிற்பியர் என்றார். அதற்கு ஒரு விளக்கமும் தந்தார். இலக்கிய உலகின் சிற்பி அவர் என்பதால் அவருக்கு இப்பெயரைச் சூட்டினேன் என்றார். ஒருவரின் பெயரையோ ஊரின் பெயரையோ மொழிமாற்றம் செய்தால் எழுதும் கடிதம் அவருக்கு ஒழுங்காகப் போய்ச்சேராது. ஜனவரியைத் தை என்றும் ஆகஸ்டை ஆவணி என்றும் மொழிபெயர்ப்பது தியதியைத் தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

எவ்வாறு சமஸ்கிருதம் என்னும் வடமொழிக்குரிய சொற்கள் கலை இலக்கியங்கள் வாயிலாகவும் சமயசம்பந்தமான சடங்குகள் வாயிலாகவும் அளவுக்கதிகமாகத் தமிழுக்கு வந்து சேர்ந்தனவோ அவ்வாறே இன்று தொலைத் தொடர்புத் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகவும் தொடர்பாடல் ஊடகங்கள் மூலமாகவும் ஆங்கிலச்சொற்கள் தமிழ்மக்களின் பேச்சுவழக்கில் அளவுக்கு அதிகமாக வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன.

பேச்சுவழக்கில் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசும் புதிய மணிப்பிரவாள நடை உருவாகிக்கொண்டு வருகின்றது. போன் பண்ணுங்கோ, டிறைவ் பண்ணுங்கோ, குக் பண்ணுங்கோ, ரேஸ்ற் பண்ணுங்கோ, ஒப்பிண் பண்ணூங்கோ, குளோஸ் பண்ணுங்கோ, ஸ்மைல் பண்ணுங்கோ, வாக் பண்ணுங்கோ என்று பண்ணுதல் என்னும் ஒரே ஒரு தமிழ்ச்சொல்லுடன் ஆங்கிலசொற்கள் அர்த்தநாரீஸ்வரர் போல் இணைந்து பயணித்து வருவதைப் பார்க்கின்றோம். இப்படி ஏராளமான இங்கிலீசுத்தமிழ்ச் சொற்களை “ஈசி”யாக மேக் பண்ணி எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

இவற்றையெல்லாம் நோக்குமிடத்து

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே.

 

என்று நன்னூல் ஆசிரியர் அன்று சொல்லி வைத்ததை ஒரு பெருமூச்சுடன் நாமும் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.


 கலாநிதி பால. சிவகடாட்சம்


                               

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்