எது கவிதை இலக்கியம்

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


தீ சுடும் என்றால் வசனம். தீ இனிது என்றால் கவிதை. இது ஏன். வார்த்தை வெறும் விடயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப்போல் உணர்வினிடம் பேசுமானால் கவிதை பிறந்துவிடும். 'தீ சுடும்' என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை அறிவுக்குத் தெரியப்படுத்தகிறது. 'தீ இனிது' என்று சொல்லும் பொழுது அறிவு அதை மறுக்கும். உணர்ச்சி அதை ஒப்புக்கொள்கிறது.

'அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடைவந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண்திங்கள்'
இந்த வார்த்தைகள் கம்பரின் உணர்ச்சியின் வெளியீடு. கடலில் முழுமதி எழும்போது உணர்வு வயப்பட்ட மனிதன் கம்பர் பாடியதைக் கடுகளவும் மறுக்கமாட்டான். பொற்கலசம் என்ன நீர்மூழ்கிக் கப்பலா வேண்டும் பொழுது மேலே எழுந்துவர என்று அறிவு கேட்கக்கூடும்.

'செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே'
என்ற பாரதியின் பாடலில் தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவது கவிதை உலகில்தான் நடக்கும்.

கவிதைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம், எதனுடன் அது உறவாடுகிறது – அறிவுடனா உணர்ச்சியுடனா என்பதைப் பொறுத்தே இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு வசனமாய்விடும். கவிதையாக அருந்தால் வசனமாக இருக்க முடியாது. வசனமாக இருந்தால் கவிதையாக இருக்க முடியாது.

யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு. அதற்குக் கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்பது நடைமட்டுமல்ல. கருத்தும் இருக்கவேண்டும்.

அசையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. அது கருத்து மாத்திரமும் அல்ல. கருத்தாழமோ உணர்ச்சியோ இயற்கையின் தரிசனமோ இல்லாத ஓலைப்பந்தல் கட்டும் தந்திரத்தைப் பிற்காலத்துத் தமிழ்க் கவிகள் கற்றுவிட்டார்கள். அதன் விளைவாக ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவிவிட்டது.

பாரதியாருடைய கவிதையிலே தெளிவு, எளிமை இரண்டுக்கும் மேலாக ஒரு வேகம் இருந்தது. உள்ளத்தில் உள்ள உண்மை ஒளி வாக்கினிலும் வந்ததனால் ஏற்பட்டதொரு வேகம் அது.

இலக்கியத்துறைகள் எல்லாமே சமுதாயம் தனிமனிதன் என்கின்ற இருண்டு பிரிவிலும் குறைகளையும் நிறைகளையும் சொல்லியும் சொல்லாமலும் அறிவுறுத்துகின்றன என்பது தப்பமுடியாத நியதி.

ஐரோப்பிய புதுக்கவிதையிலே இன்றைய வாழ்க்கைச்சிக்கலை பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒருவார்த்தைச் சிக்கலும் இன்றைய புதுமைகளையெல்லாம் தொட்டு நடக்கும் ஓரு நேர்நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும் எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக பண்டைக்கால ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஓரு திறனும் காணக் கிடக்கின்றன.


வசனமும் கவிதையும் வௌ;வெறு வகையைச் சார்ந்தவை என்பது ஒண்மைதான். வுசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. நமது அறிவுக்கு உணவாகப் புதிய விடயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. நேரிடையாக உள்ளத்தைத் தொட்டு புதிய அனுபவத்தை எழுப்ப முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர் . கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர்கொள்ளச் செய்கிறது.

வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப்போலவே கவிதைக்கும் சங்கீதத்துக்கும் வித்தியாசம் உண்டு. பாரதி தன் கவிதைகள் பலவற்றில் சங்கீதத்துக்கு உரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள படைப்புகள் கவித்தரம் குறைந்துதான் காண்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். இன்று அவரது அத்தகைய படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப்பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று கருதும் ஒரு ஏற்பு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது.

புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத்தான் இருக்கும் என்று கருதுவதற்கில்லை. வசன கவிதைகள் எல்லாம் புதுக்கவிதைகள் என்று சொல்லிவிடவும் முடியாது. புதுக்கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். வுசன கவிதையையும் புதுக்கவிதையையும் வித்தியாசப் படத்திக் கொள்வதுதான் முறையானதாகும். புதுக்கவிதை சத்தான தாக்கான முயற்சி. அதன் எதிர்காலம் பழங்கவிதையின் இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர்கள் கையாளும் வழிவகைகளைப் பொறுத்த இரக்கிறது.

கவிதைகள் பொருள்விளங்காத சொற்கள் பலவற்றால் பிணைத்துக்கட்டப்பட்ட கரடுமுரடான கதம்ப மாலைகளாக உள்ளன.

தமிழில் புதுக்கவிதை எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. ஆனால் அதன் தரம் பெருகியிருக்கிறதா என்பது சந்தேகம்.

மிகைபடக் கூறல் கூறியது கூறல், மயங்கவைத்தல் ஆகிய சீக்குகள் புதுக் கவிஞர்களிடமும் மலிந்து காணப்படகின்றன.




                         
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்